ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

மின்னியல் விளையாட்டுகள் மூலம் சுயக் கற்றலை மேம்படுத்துதல்


1.       அறிமுகம்
ஒவ்வொரு குழந்தையும் தனியாகவோ கூட்டாகவோ சுயமாக விளையாட்டுகளை உருவாக்கும் திறன் கொண்டவர்களாகவே பிறக்கிறார்கள். உண்மையிலேயே இந்தச் சுயமான விளையாட்டுகள்தான் நமது நாட்டின் தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப அவர்களை உடல், மனம், அறிவு, ஆன்மிக நிலைகளில் முழுமைப் பெற்ற மாந்தராக பின்னாளில் உருவாக பெருந்துணை புரியும். குழந்தைகளின் நுண்ணுணர்வை மதித்து அவர்களுக்கேற்ற மின்னியல் விளையாட்டுகளின் மூலம் தேவையான சுதந்திரம் அளித்து, ஒவ்வொரு மாணவரின் சுயக்கற்றலைத் தூண்டினாலே கல்வி உலகம் மிகச் சிறந்து விளங்கும் என்பதை முன்மொழிகிறது இந்த ஆய்வுக் கட்டுரை.

நம் சமூக அமைப்பில் விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்காகவும் வெறுமனே நேரத்தைக் கழிக்கின்ற செயலாகவும் தவறாக பொருள் கொள்ளப்படுகிறது. விளையாட்டு என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு அர்த்தமற்ற செயல் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. அதற்கு மாறாக கற்றலால் களைத்துப்போன குழந்தைகளுக்கு விளையாட்டானது மனத்தாலும் அறிவாலும் இளைப்பாறுவதற்கு ஏற்ற நிழலாக உதவும் ஒன்றாகவும் திகழ்கிறது. வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் மன மலர்ச்சிக்கும் அறிவு திறப்புக்கும் ஆன்மிக விழிப்புக்கும் இன்றைய நவீன மின்னியல் விளையாட்டு மிக இன்றியமையாததாகும்.
                                         
2.       கல்வி உலகில் மின்னியல் விளையாட்டுகள்
உளவியல் அடிப்படையில் ஆராய்ந்து நோக்கினால், குழந்தைகளின் மன வளர்ச்சிக்கும்  தேவையானதை விளையாட்டு மட்டுமே பெரிய அளவில் செய்து கொடுக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தன் வயதுக்கேற்ற மனத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் தேவையான விளையாட்டைத் தானே உருவாக்கிக்கொள்ளும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நுண்ணறிவுடன் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூரிப்புடன் பலநூறு தடவை திரும்பத் திரும்ப சளைக்காமல் விளையாடுவது, அதனுடைய தொடர்ந்த வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிகிறது. சிறுவர்களின் அறிவுக்கும் மனவளர்ச்சிக்கும் சிறந்த விளைபயன் நல்கும் ஏற்புடைய மின்னியல் விளையாட்டுகள் மனத்தைக் கவரும் வகையில் அமைந்ததாகவும் மனமகிழ்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை செயல்பாட்டைத் தூண்டுவதாகவும் இருப்பதை உறுதி செய்வது அவசியம் (Rubin,Fein & Vandanberg, 2009)
இன்றைய கல்வி உலகில் மின்னியல் விளையாட்டுகளின் வரவு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் பயன் நல்குவதாக அமைந்துள்ளது. மின்னியல் விளையாட்டுகள் மூலம் ஆசிரியரின் கற்பித்தலில் எளிமை, ஈர்ப்பு, வளமை போன்ற புதுமைகள் நிகழ்ந்துள்ளன. மாணாக்கர் கற்றலில் மனமகிழ்வு, இனிமை, நுணுக்கம் விரிவடைந்துள்ளது கண்கூடு. காலச்சுழச்சிற்கேற்ப மின்னியல் விளையாட்டுகள் கற்றல் கற்பித்தலுக்கு துணைநல்கும் பொருட்டு பல்வகை மென்பொருள்களாக விற்பனைச் சந்தையிலும்  வலைத்தளங்களில் நாள்தோறும் பெருகி வருகின்றன.

இன்றைய கற்றல்கற்பித்தல் விளைபயன் மிக்க தாக்கங்களையும் ஆக்ககரமான உருமாற்றங்களையும் மின்னியல் விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ளதை ஆய்வுகள் வழி கண்டறியலாம். இன்றைய மின்னியல் விளையாட்டுகள் சிறுவர்களை பல மணி நேரம் கணினி முன் அமர்ந்து ஆர்வத்தோடு கற்கும் ஆற்றலைத் தூண்டும் வல்லமையைக் கொண்டிருக்கின்றன (Ardyanto et al.,2008). இந்த மின்னியல் விளையாட்டுகள் கற்றலில் சிறுவர்களின் சிந்தனைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் பன்மடங்கு ஆர்வத்தையும் தூண்டும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது (Sobel & Maletsky., 2005)

3. கல்வியில் மின்னியல் விளையாட்டுக் கோட்பாடுகள்

இன்றைய நவீன கற்றல்கற்பித்தல் சூழலில் எந்தவொரு பாடப்பொருளறிவும் மாணாக்கரின் பட்டறிவுக்கு நேரடி தொடர்புடையதாக இருப்பது இன்றியமையாததாகிறது. நெடுநாள் அச்சு ஊடகங்களின் வாயிலாகவே ஆசிரியர் நடத்திய கற்றல்கற்பித்தல் மாணாக்கர் பெரும்பாலோர்க்கு பெரும் மனச்சோர்வையும் சலிப்பையுமே தந்துள்ளது. ஆக கற்றலில் புத்துணர்வையும் சுயத்தேடலையும் ஏற்படுத்தும் விதத்தில் மின்னியல் விளையாட்டுகள் பெரும் பங்காற்றுகின்றன. மாணாக்கர் தாமாகவே சுயமாகக் கற்பதற்கும் புதியனவற்றைக் கண்டறிவதற்கும் தொடர்ந்து அகப்புற நிலைகளில் தம்மை விரிவாக்கம் செய்து கொள்வதற்கும் மின்னியல் விளையாட்டுகள் உறுதுணை புரிகின்றன. மின்னியல் விளையாட்டானது ஏரணமாகவும் விளையாட்டு விதிகளையும் வரையறைகளையும் சுய மதிப்பீடு செய்யும் முறைகளையும் கொண்டிருக்கும். மேலும் மாணாக்கர் சுயமாக தம்மைத் தாமே மதிப்பீட்டு மேம்படுத்திக் கொள்வதற்கு இம்மின்னியல் விளையாட்டுகள் வழிவகுக்கும்.

4. மின்னியல் விளையாட்டுகளின் வழிக் கற்றல்கற்பித்தல்
சுயக்கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியரானவர் கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் மின்னியல் விளையாட்டுகளை அமைவதை ஆசிரியர் முதலில் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து மாணாக்கர் அகவைக்கும் அறிவுநிலைக்கும் மனவளர்ச்சிக்கும் உகந்ததாக அமையும் மின்னியல் விளையாட்டை உறுதிபடுத்துதல் அவசியம். மேலும் அவ்விளையாட்டுகள் போட்டியுணர்வை கொண்டதாக அமைதலும் வேண்டும். மின்னியல் விளையாட்டுகளின் உள்ளடக்கம் மாணாக்கர் நிலைக்கேற்பவும் கற்றல் நெறிகளுக்கேற்பவும் தெரிந்ததலிருந்து தெரியாததை நோக்கியதாக இருப்பதை ஆசிரியர் வகைப்படுத்துதல் வேண்டும். மாணாக்கர் தங்கள் விருப்பத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் குறிப்பிட்ட காலவரையறையின்றி எந்நேரத்திலும் மின்னியல் விளையாட்டுகளில் ஈடுபடலாம். ஆனால் பள்ளிச் சூழலில் காலையில் வகுப்பைத் தொடங்குவதற்கு முன்னரும் ஓய்வுவேளையின்போதும் பள்ளி முடிந்த பின்னரும் மாணாக்கர் ஈடுபடுவதை ஆசிரியர் திட்டமிட்டு ஊக்கலாம். ஆசிரியர் மாணாக்கர் இடையிலான கற்றல்கற்பித்தல் தடைகளை முறியடிப்பதோடு சுயத் தேடலுக்கான சாத்தியங்களை அதிகரிக்கின்றது.

 


மாணக்கரின் சுயக்கற்றலை மேம்படுத்தவும் மிகுந்த நெகிழ்ச்சித் தன்மையோடு செயல்படுத்தவும் மின்னியல் விளையாட்டுகள் பெரிதும் துணைபுரியும்(Smaldino, Rusesell,Heinich&Molenda ;2005). மின்னியல் விளையாட்டுகளை மேற்கொள்ளும்போது மாணாக்கர் சரி அல்லது தவறு அடிப்படையில் தெரிவு செய்யும்போது இரண்டு மாறிகளுக்கிடையிலான பயன்பாட்டை முறையாக அறிந்து செயல்படுவர். சரியான விடையைத் தெரிவு செய்த மாணாக்கர் தொடர்ந்து சவாலான விளையாட்டை மேலும் தொடர்வர். தவறான விடையைத் தெரிவு செய்பவர் குறையைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுவதோடு சரியான விடையைப் பற்றிய புதிய அறிவையும் பெறுவர்.

மூளையானது புதிய அறிவை உள்வாங்கி, நிர்வகித்து, வகைப்படுத்தி, சேமித்து தேவையான போதில் வெளியிடுவதே கற்றலில் இடம்பெறுகிறது. ஒவ்வொரு மாணாக்கரின் முன்னறிவையும் பட்டறிவையும் கருத்தில் கொண்டு பாடங்களுக்குரிய மின்னியல் விளையாட்டின் அறிவும் உள்ளடக்கமும் முறைப்படுத்தப்படுவது அவசியமாகும். மாணாக்கர் ஏற்கெனவே தங்களிடமுள்ள முன்னறிவின் அடிப்படையிலே புதிய அறிவைப் பெறுவர். மின்னியல் விளையாட்டுகள் மூலம் மாணவர்கள் தங்கள் முன்னறிவு சார்ந்தும் உணர்வு சார்ந்தும் புதிய பல சிக்கல்கள் களையும் அல்லது முற்றாகத் தீர்க்கும் வழியைக் கண்டறிவர் (Steffe & Kieren ;1994)

5. கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற மின்னியல் விளையாட்டுகள்
·            சவால் விளையாட்டுகள்
சவால் விளையாட்டானது மிக விரைவில் விளையாடப்பட வேண்டியதொன்றாகும். வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் மாணாக்கர் சிக்கல் களைவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
·            புதிர் விளையாட்டுகள்
புதிர் விளையாட்டுகள் மாணாக்கரின் சிந்தனைத் திறப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு வாழ்வியல் நிலைகளோடு தொடர்புப்படுத்தும் தன்மையையும் கொண்டதாக அமைந்திருக்கும்.
·            நிர்வகிப்பு விளையாட்டுகள்
சுய உருவாக்க திறத்தின் அடிப்படையில் இவ்வகை விளையாட்டுகள் அமைந்திருக்கும். குறைந்த மூலங்களைக் கொண்டு நகரம், கட்டடம் போன்றவற்றை உருவாக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.
·            தேடுதல் விளையாட்டுகள்
கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பெற்ற தேடுதல் விளையாட்டுகளில் மாணாக்கர் வரையறுக்கப்பட்ட விதிகளைக் கட்டாயம் கடைப்பிடித்து விளையாடுவதோடு கற்பனைத் திறத்தை விரிவுபடுத்துவதாக அமைந்திருக்கும்
·            போல செய்யும் விளையாட்டுகள்
விளையாட்டாளரே முதன்மை கதைமாந்தராகி புதிய ஆற்றலும் திறனும் பெற்று எதிரிகளை அழித்து வெற்றி நாட்டுவதாக அமையும். இவ்வகை விளையாட்டுகளின் வழி சிக்கல் தீர்த்தலும், அனுமானித்தலும், தடையைச் சாதூரியமாக எதிர்க்கொள்ளும் முடிவெடுக்கும் திறமும் கிடைக்கப்பெறும்.

மேற்குறிப்பிட்ட மின்னியல் விளையாட்டுகள் பலவகை வடிவங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. நவீன மின்னியல் விளையாட்டுகள்  மாணாக்கரின் மொழியாளுமைக்கும் பயன்பாட்டிற்கும் உகந்ததாகவே திகழ்கின்றது. பெரும்பாலும் எழுத்துக்களாலான பகுதிகளும் படங்களுடன் கூடிய வரிபடக் கருவிகளால் அமைந்தவையும் செவிப்புலனுக்கேற்ற ஒலி வகைகளும் கட்புலனுக்கேற்ற ஒளியிலான அசைவு படங்களும் இவற்றுள் அடங்கும்.

6. மின்னியல் விளையாட்டுகளின் கூறுகள்
·            வரையறுக்கப்பட்ட இலக்கு
·            விதிமுறைகளும் சவால்களும்
·            போட்டியுணர்வும் கற்பனை விரிவும்
·            பாராட்டும் மனநிறைவும்

மின்னியல் விளையாட்டுகள் மூலம் ஆண் பெண் இருபாலரிடையேயும் தன்னம்பிக்கையை அதிகரித்து கற்றல் விளைபயனானது பன்மடங்கு பெருகுகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன (Matthew;2007). மேலும் மின்னியல் விளையாட்டுகள் மாணாக்கரின் அறிவில் நேர்மறைச் சிந்தனைகளை விதைப்பதோடு மதிப்பீட்டு அடைவுநிலையைக் கூட்டுகிறது என கண்டறியப்பட்டுள்ளது (Neil, Diane & Carol; 2007). மின்னியல் விளையாட்டுகளால் கட்டுப்படுத்தப்பட்ட மாறி வகுப்புக்கும் கட்டுப்படுத்தப்படாத மாறி வகுப்புக்கும் இடையிலான முடிவுகள் மிகுந்த வேறுபாட்டைக் காட்டுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட வகுப்பின் அடைவுநிலை கற்றல் செயல்பாடுகளில் பன்மடங்கு உயர்வைக் காட்டுகிறது (Emram Yunus;2010).

7. தொகுப்புரை
இந்நவீன மின்னியல் விளையாட்டுகள் வழி ஆசிரியரை மையப்படுத்திய பழமையான கற்பித்தல் முறை மெல்ல மறைந்து மாணாக்கரின் சுயக்கற்றல் மேலோங்க வழி செய்கிறது. எந்த வற்புறுத்தலின்றியும் குறுக்கீடு இன்றியும் மாணாக்கர் தாமே விரும்பிக் கற்கும் மகிழ்ச்சியான கற்றல் சூழலும் ஏற்படுகிறது. மாணாக்கர் முழுக் கவனத்தோடும் கற்றலில் தன்னம்பிக்கையோடும் ஈடுபட வழிவகுக்கிறது.
இம்மின்னியல் விளையாட்டுகள் மாணாக்கர் தேவையறிந்து உதவவும் தொடர்ந்து அவர்கள் சுயமாகச் செயல்படவும் ஆசிரியருக்குத் துணை புரிகிறது. கற்றலில் ஆசிரியரிடமிருந்து ஒருவழிப்பாதையாக பெறும் அறிவாக இல்லாமல் பல்வழிப்பாதையாக மின்னியல் விளையாட்டுகள் விளங்குகிறன.(Rahimi Md Saad et al;2007).
மூளையில் புதிய உயிரணு இணைப்புகள் உருவாவதற்கு இந்த மின்னியல் விளையாட்டுகள் பெரிதும் உதவுகின்றன. தாங்களாகவே விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் பெரியவர்களும் கலந்துகொண்டால் அவர்களுக்கு நம்முடன் இருக்கும் இணைப்பும் உறவும் மேலும் ஆழமாகும். இவ்வாறு தன்னிச்சையாக விளையாடும் மின்னியல் விளையாட்டுகளின் மூலம் புதிய அறிவையும் அனுபவத்தையும் பெற வாய்ப்புண்டு. ஒரு மாணாக்கர் ஆரோக்கியமாக வளருவதற்கு ஏற்ற மின்னியல் விளையாட்டுச் சூழலை உருவாக்கிக் கொடுத்தாலே அவர்களின்  நுண்ணறிவு மிகச் சிறப்பாக இயங்கத் தொடங்கிவிடும்.


துணை நூல்கள்:
மீனாட்சி சுந்தரம், அ. கல்விப் புதுமைகள் மற்றும் மேலாண்மை, காவ்யமாலா பப்ளிசர்ஸ், சின்னாளப்பட்டி, 2010

நக்கீரன், பி.ஆர். தமிழ் இணையப் பல்கலைக்கழக மென்பொருள்கள் ஒரு கண்ணோட்டம், தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை, 2010

Matthew Johnson, The Effective Integration of Digital Games and Learning Content, New Literacy Learning, 2007

Neil, Diane & Carol, Educational Game: Answering The Call, United Publications, London, 2007




சனி, 29 ஆகஸ்ட், 2015

‘வானகமே இளவெயிலே மரச்செறிவே...நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ’ என்ற பாரதியின் குரல் என்னுள் ஓராயிரம் முறை ஓங்கி ஒலிக்கிறது. மனிதனுக்கு மட்டுமல்ல பிறந்த எல்லா உயிர்களுக்கும் என்றுமே தாய்மடியாய் விளங்குவது  வனம்தான். தொல்காப்பியர் பகரும் பல்லுயிரும் சரண் புகுந்து வாழ்வைத் தொடங்கியது இந்த வனமென்னும் வீட்டில்தான். அடர்ந்த மரங்கள் வனத்தின் காவலர்கள்; செடிகொடி புல்பூண்டுகள் வனத்தின் மானங்காக்கும் மேலாடை; பறவைகளின் சிறகடிப்பு வனத்தின் விடுதலை; வண்டுகளின் ரீங்காரம் வனத்தின் உயிர்ப்பு; விலங்குகளின் துள்ளல் வனத்தின் வசீகரம்; பச்சை இலைகள் வனத்தின் முகம்; உயர்ந்த மலைகள் வனத்தின் முகவரி; கல்லும் மண்ணும் வனத்தின் திருமேனி; சங்கீத இலயத்தோடு வீழும் அருவி வனத்தின் இதயத்துடிப்பு; ஓடும் நதி வனத்தின் வெண்குருதி...மனிதன் செய்யும் கொடுமை எல்லாம் பொறுத்துக் கொண்டு கருணைமிக்க கடவுளாக இன்னும் இந்த வனம்தானே காத்து வருகிறது. இந்த உயிர்ச்சங்கிலியில் எந்தக் கண்ணியும் அறுந்துவிடக் கூடாதென இந்த வனம்தானே நம்மைக் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. வனம் இருந்தால்தான் முகில்கள் கர்ப்பம் தரிக்க முடியும். வனம் செழிப்பாக இருந்தால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும் உயிர்க்குலம் முழுதும் இன்புற்று வாழ முடியும். பிணமாவதற்கு முன்னால் மனிதா இனியாவது வனத்தை வணங்குவாயா? 
நானறிந்தவரை தமிழ்மொழி வளர்ச்சிக்காக தங்கள் வாழ்நாளை முற்றும் முழுதாக அர்ப்பணித்துச் சென்றவர்களுக்குத் தமிழர்கள் நன்றி பாராட்டுதலும் அவர்களின் தொண்டினைப் போற்றுதலும் மிகக் குறைவே. வாழும் காலத்தில் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் உச்சபச்ச பாராட்டும் புகழும் தப்பித்தவறி மொழிக்காகப் பாடாற்றிய அறிஞனுக்குக் கிடைப்பது மிகக் குறைவே. அந்த வகையில் இந்த மலைநாட்டில் நான் நெருக்கமாகப் பார்த்துப் பழகிய தமிழறிஞர்கள் சிலரில் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் என்றுமே தமது எண்ணத்திலும் எழுத்திலும் ஒட்டுமொத்த வாழ்விலும் தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர். அமுதத் தமிழைத் தம் உயிருக்கு நேராகக் கருதியவர். அவரின் பேச்சும் மூச்சும் மட்டுமல்ல இருதயமும் குருதியும் தமிழாகவே துடித்தது. தமிழின் தொன்மத்தையும் வளத்தையும் தமிழரின் பண்பாட்டுச் செழுமையையும் பறைசாற்றும் தொல்காப்பியத்தை முழுதும் சாறுபிழிந்து அந்தத் தமிழமுதத்தை நாமும் மாந்தியுண்பதற்கு வழியமைத்துக் கொடுத்தது ஐயாவின் மிக உன்னத அரும்பணி. ‘நல்ல தமிழ் இலக்கணம்’, ‘புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்’ போன்ற நூல்கள் தொல்காப்பியத்தின் அற்புதப் பிழிவு. இன்று உலக அரங்கில் பிற இனங்களைக் காட்டிலும் தலைநிமிர்ந்து நடக்க முடியுமென்றால் தமிழருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பும் கருவியும் தமிழைத் தவிர வேறெதுவுமில்லை என்று உறுதியாக நம்பினார். அதற்காக தொல்காப்பியத்தை அகழ்ந்தாய்ந்து ஒவ்வொரு தமிழரும் ஓதியுணரும் வகையில் நாடுதழுவிய நிலையில் பையிலரங்குகளும் இலக்கணப் பட்டறைகளும் விளக்கங்களும் சளைக்காமல் வழங்கினார். அவரின் இந்த அரிய பெரிய முயற்சியை ஏற்றுப் போற்றும் வகையில் இந்த மலைநாட்டிலே முதன்முறையாக நானும் நண்பர்களும் விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் மன்றம் வாயிலாக ‘தொல்காப்பியரோடு ஒரு மென்மாலைப் பொழுது’ என்ற தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தோம். அந்தச் சொற்பொழிவுகளை நடத்தும்போது ஐயா முழுக்க தொல்காப்பியராகவே மாறி மிகமிக எளிய முறையில் நமக்கு ஒவ்வொரு சூத்திரத்தின் நுட்பத்தையும் தெளிவுடன் விளக்கி புரிய வைப்பார். பல்கலைக்கழகங்களில்கூட நடைபெறாத இதுபோன்ற உயரிய தொல்காப்பியக் கலந்தாய்வை ஐயாவின்வழி நேரிடையாகப் பெற்றோம் என்ற மனநிறைவு இன்று சற்றே ஆறுதளிக்கிறது. எங்களைப் பின்பற்றி பலரும் அவரை தமிழுக்காக பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சியே. இந்த நாட்டைப் பொறுத்தவரை மாணவர் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரைக்கும் இலக்கணத்திலும் இலக்கியத்திலும் ஏற்படும் ஐயங்களுக்கு சரியான மருந்து தரும் முதன்மை பேராசான் ஐயாதான். எந்த நேரத்திலும் எதைக் கேட்டாலும் உடனுக்குடன் அதற்கான நுட்பத்தையும் விளக்கத்தையும் தரும் நடமாடும் பல்கலைக்கழகம் ஐயா. அவர் தொல்காப்பிய அமுதத்தை துளித்துளியாக வானொலியில் ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியில் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகள் பெருமுயற்சியோடு ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ எனும் நூல்வடிவில் கொண்டு வந்துள்ளோம். இந்த நூலின்வழி ஐயாவின் படைப்பை ஆவணப்படுத்துவதோடு அவரின் கண்டடைவை உலகுக்கு உணர்த்தும் கடப்பாடு நமக்குள்ளது. மேலும் தமது குடும்ப நலனை என்றுமே முன்வைக்காத ஐயாவின் குடும்பத்தார்க்கு பொருளுதவி செய்யும் நோக்கிலே இந்த நூலை வெளியீடு செய்கிறோம். துளிரும் 16.9.2015 (புதன்கிழமை- பொதுவிடுமுறை) பாரதி இலக்கிய நெஞ்சங்களும் லுனாஸ் தியான ஆசிரமும் இணைந்து தியான ஆசிரம மண்டபத்தில் மாலை மணி 4.00 முதல் 6.30க்குள் நூல் வெளியீடு செய்யவுள்ளோம். இதுகாறும் பல நன்னெஞ்சங்கள் சிறப்பான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வருவது பேருவகை அளிக்கிறது. தமிழால் பிழைப்பு நடத்தும் நம்மைப் போன்றவர்கள் அவர்க்கும் குடும்பத்தார்க்கும் மிகுந்த நன்றி கடன்பட்டுள்ளோம். காலமெல்லாம் தமிழுக்குப் பாடாற்றியவரின் குடும்பத்திற்கு உதவி செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில், ரிம.30.00 கொடுத்து இந்நூலைப் பெற்று ஆதரவு நல்குமாறு இந்த நிலைத்தகவலை படிக்கும் தமிழ்த் தொப்புள்கொடி உறவுகளே உங்களை நோக்கி அன்போடும் உரிமையோடும் விழைகின்றேன். தமிழர்கள் என்றுமே நன்றி மறவாதவர்கள்தானே?


ஞாயிறு, 31 மார்ச், 2013

ஆன்ம இளைப்பாற்றும் ஆறாம் விரல்

தவத்திரு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ‘குறையொன்றுமில்லை’ என்கிற மூன்றாவது இலக்கியப் படையல் புதிய புறப்பாட்டோடு மீண்டும் உள்ளவீதியில் மேளதாளத்தோடு உலா வரத் தொடங்கிவிட்டது. பெளர்ணமி நிலவின் பரிணமிப்பில் தித்திக்கும் திருவுள்ளத்தோடு இந்நூல் ஏடுகளை அன்பொழுக புரட்டும்போது இதயத் தாமரை முகையவிழும் மெல்லோசை கேட்கிறது. சிதைந்தும் சிதையாமலும் வேரோடி விட்டிருக்கும் மானிட வாழ்வியல் உள்ளோட்டங்களை உயிரோட்டங்களாக கூர்மையான பார்வையோடும் நேர்மையோடும் எளிய மனிதர்களின் மனசாட்சியாகப் பதிவு செய்திருக்கும் தவத்திருவின் திருவடிக்கு முதற்கண் நன்றி மலர்கள் சொரிகின்றேன். ஆன்மிகத் தேனமுதை தமிழ் ஞானப்பால் கலந்து அறிவு தீஞ்சுவைப் பிழிந்து அன்பு மணம் கமழ வாழ்வியல் சுவைக்கூட்டி தரும் தவத்திருவின் சொற்பொழிவு நாளும் நெஞ்ச முழுவதும் புதியதொரு வைகறை வெளிச்சம் பாய்ச்சுகிறது. தெளிந்த ஞானத்தை இளந்தென்றல் தழுவிச்செல்லும் இனிய பேச்சாலும் எழுத்தாலும் இசைத்துப் புல்லாங்குழலாய் நெஞ்சில் புதுராகம் மீட்டுகிறார். இயல்பான நீரோடை போன்ற அவரின் பேச்சில் இடையசைத்து வரும் தென்றலாய் மண்மணமும் வசந்தத்தின் பூங்கொத்தாய் புன்னகையும் இதயத்தை என்றும் வருடிக் கொடுக்கும். சுவாமி தம்மையே ஆழத் தோண்டி சேர்த்த ஞானத் தெறிப்பின் திவலைகளில் ஆன்ம எல்லைகள் பளிச்சிடுகின்றன. சுவாமியின் சொற்பொழிவின் சொல் வார்ப்புகள் நெஞ்சை ஆட்சி செய்யும் வல்லமைக் கொண்டவை. அவரின் எழுத்தோ எண்ணற்ற கருத்துக் கருவூலங்களில் தத்துவத் தேரோட்டமாய் ராஜபவனி வருபவை. என் இதயத்தில் சுவாமி அவர்கள் அமைதியின் மோனத்தில் ரமணராக, அன்பின் நெகிழ்வில் ராமகிருஷ்ணராக, ஆழ்ந்த சிந்தனையில் ஓஷோவாக, வீறு கொள்வதில் விவேகானந்தராக, இயல்பான ரசனையில் பாரதியாக தெரிகிறார். நான் வனாந்திரக் கனவுகளில் தனிப்பறவையாய் சிறகு விரித்தபோதெல்லாம் அவரின் ஆன்மிக ஆலமரக்கிளைகளில் ஆர்வத்தோடு வந்தமர்வேன். கடலைத் தீராத் தாகத்தோடு தேடும் ஒரு மழைத்துளியின் பசியோடு வரும் எனக்கு மதங்களைக் கடந்து நிற்கும் உண்மைகளால் நெகிழ வைக்கிறார். மரபுகளை மதித்தாலும் மூடப்பழமையின் முனை முறித்து உண்மைகளை நெஞ்சில் நங்கூரமாய் பாய்ச்சும்போது நம் உயிரிலும் பூ மலரும். இன்றைய தலைமுறையால் தீண்டப்படாத பெருஞ்செல்வமாக நமது முன்னோர் விட்டுச் சென்ற புராதன ஆன்மிகக் கருத்துகளால் அமுதம் கடைந்து என் போன்றோரை அதிர வைக்கிறார். சுவாமி அவர்களின் இதயத்தில் அடிநாதமாக ஊறும் மானுட நேசம் கனிந்த ஞானமாக எழுத்து நதியெங்கும் கரைந்தோடுகிறது. உலக வாழ்வில் மானுட உறவைப்போல் மிக இனிமையானதும் அதேவேளையில் மிகச் சிக்கலானதும் வேறெதுவுமில்லை. உறவுகளின் உரசல்களாலும் முரண்பாடுகளாலும் மனமுடைந்தவர்கள் நடந்த பாதையை தாம் தரிசித்த உண்மைகளோடு அரிதாரம் பூசாமல் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இடைவிடாத ஆன்ம விழிப்போடு சுவாமி அவர்கள் கீதையில் திருவாய் மலரும் போதெல்லாம் அயர்வில்லாத காதலனாய் கண்ணனில் நான் கரைந்ததுண்டு. உயர்ந்த வாழ்வியல் விழுமியங்களிலிருந்து நழுவி இன்று வெறும் சடங்காய் நிறம் மாறிப்போன சமயத்தின் சாறுபிழிந்து மதம் கடந்த ஆன்மிக விருந்து படைக்கிறார். செவ்வியல் இலக்கியச் சுவையோடும் உபநிடதங்கள் உரைக்கும் உண்மைகளோடும் வரலாற்றுச் சான்றுகளோடும் தாம் சந்தித்த மனிதர்களின் வலிகளையும் வேதனைகளையும் எழுத்துத் தூரிகையால் ஓவியமாக்கி நம்மோடு உரையாட வைக்கிறார். சின்னஞ் சிறிய நிலையற்ற நீர்க்குமிழ் போன்ற வாழ்க்கைதான் என்றாலும் இதைப் பிணைப்பதற்கா மனிதனிடத்து இத்தனை கண்ணிகள்?. நாம் எப்போதும் வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோமேயொழிய பெரும்பாலும் வாழாமலே மறைந்து விடுகிறோம். குளிர் காய்வதற்கு சுள்ளி பொறுக்கச் சென்றதிலே காலம் கரைத்துவிட்டோம் என்ற எச்சரிக்கை உணர்வு ஊட்டுகிறார்.இருட்டில் உழன்று அதையே ஏற்றுக் கொண்டவர்க்கும், என்றேனும் ஒளி வாராதா என்று காத்துக் கிடப்பவர்க்கும், ஒளியை நோக்கித் துணிவோடு நடப்பவர்க்கும் இந்நூல் அற்புத ஞான ஒளிப்பாதை அமைக்கும். தவத்தின் வலிவோடு எழுந்த ‘குறையொன்றுமில்லை’ எனும் இந்த திருவெழுத்து மானுட வாழ்வின் விளக்கத்திற்கு என்றும் வழிகாட்டும் கைவிளக்கு. அறிவார்ந்த கருத்துக் கருவூலமாய் திகழும் சுவாமியின் எழுத்து ஆன்மஞான விளக்காக என்றும் ஒளிவீசும். வாழ்வின் துயரம் நிறைந்த பகுதிகளை அந்தரங்கத்தில் அழுகிப்போன அவலங்களை அங்கதம் கலந்த இலக்கிய இனிமையோடு நேரடிச் சொற்களால் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். பலரில் வாழ்வு நிறைவின்மையால் தொலைந்து போனவை இலக்குகள் மட்டுமன்றி இருப்புகளும்தான் என்பதை சுவாமி அவர்களின் வாழ்வுசார் நுண்ணிய அவதனிப்புகள் பிரமிப்பூட்டுகின்றன. இந்நூல் மானுடம் மீதான நம்பிக்கையைத் துளிர்த்து வாழ்வில் எதிர்ப்படும் அச்சத்தை அறுத்து தனியொருவரின் சுயத்தை மேன்மையுறச் செய்யும் வித்துக்களை வீரியமாகக் கொண்டுள்ளதை நெடுகக் காணலாம்.வாழ்க்கை எனும் சொல்லுக்குள் ‘வா’,’வாழ்’,’கை’,’வாக்கை’,வாகை’ என ஐந்து சொற்கள் ஒளிந்திருக்கின்றன. முதலில் வாழ்க்கை ‘வா’ என்று அழைக்கிறது; ‘வாழ்’ என்று சொல்கிறது. ‘கை’யை நம்பி உழை என்கிறது; ‘வாக்கை’ காக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது; இறுதியில் அடைவது ‘வாகை’ என்று உறுதி செய்கிறது. இத்தனை சொற்களைச் சூல்கொண்ட வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது. கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடு பறக்கின்றன. இனிமையும் மகிழ்ச்சியும் இதயத்தில் நிலைப்பெற்றால் என்றும் வாழ்க்கை தேன்கூடுதான். மனநிறைவோடும் மகிழ்வோடும் புன்னகையோடும் உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக நம்மீது பூக்கள் சொரியும் என்பதை உயிர்க்காற்றின் ஒலித்தடத்தில் உள்ளக் கணுக்கள் நெகிழ சுவாமி ஓங்கி உரைப்பது உள்ளுணர்வால் உணர முடிகிறது. இதிலுள்ள எழுத்துகள் தோழமையுணர்வோடு கதைபோல் வாழ்க்கை அனுபவங்களை நம்மிடம் நேரடியாகச் சொல்பவை. நாம் இழந்த அறத்தை நோக்கி சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் சுவாமியின் படைப்புகளைக் கூர்ந்து நோக்கும்போது புரிகிறது. ஓயாத கடல் அலை போல வீசி வீசி என்னைப் போன்ற கரையில் நிற்கும் மனிதனை உருக்கி வார்த்ததும் சுவாமியின் ஆகிருதிகள்தான். நம்மை அறியாமலே நம்முள் இருக்கின்ற அனுபவப் பிழிவுகளை மெல்லிய உணர்வுகளோடு தொட்டுத் துழாவுகின்றார். அந்தத் தொடுதலில் உறவின் இறுக்கங்கள் கட்டுடைப்பட்டு புதுவெளிச்சம் பூக்கின்றன. இந்தச் சமுதாய வீதியில் கைவீசி நடக்கும் ஒவ்வொரு மனிதனின் அடிமனத்திலும் சிலசுவடுகள் அழியாத ஓவியங்களாய் ஆழமாய்ப் பதிந்து கிடக்கின்றன. சிதிலமடைந்த வாழ்வு தடத்தையும் அன்பின் கசிவையும் வாஞ்சையோடு ஏற்று அடர்த்தியான கூறுமொழியாலும் கவித்துவமான குறியீட்டுப் படிமங்களாலும் ஒளியூட்டுகின்றார். வாழ்வின் உயிர்ப்பை உயிர்ப்பின் இருப்பை இருப்பின் தேடலை பாலிலே நெய்யைத் தரிசிப்பது போன்ற அகத்தாய்வுப் பார்வையால் ஆன்ம இளைப்பாறலுக்கு ஆறாம் விரலால் ஞான விளக்கேற்றுகிறார். நித்தம் புதுமலராய் நம்மைச் சுற்றியுள்ள இயற்கை அனைத்தும் மலரும்போது மனிதன் மட்டும் மலராமல் இருப்பது முறைதானோ?. கோயில் கருவறைக்குள் கொண்டு செல்லப்படும் நீர் தீர்த்தமாக, நீறு திருநீறாக, மலர் பிரசாதமாக திருமாறி வரும்போது மனிதன் மட்டும் மாறாமல் வருவது தருமம்தானோ?. இந்த உலகத்தில் யாருடைய சுவாசக் காற்றை யார் களவாட முடியும்? யாருடைய பூமியை யார் திருடிவிட முடியும்? யாருடைய ஆகாயத்தை யார் பறித்துவிட முடியும்? யார் புகழை யார் மறைக்க முடியும்?. நமக்கென்று உள்ளதை எவரும் மறைத்துவிடவோ பறித்துவிடவோ முடியாது என்பதை உணர வைக்கின்றார் நம் உழைப்புக்கும் முயற்சிக்கும் தகுதியானது யார் தடுத்தாலும் நம்மை நாடி வந்தே தீரும் என்பது இயற்கை நியதி. எத்தனைப் பேர் வேண்டுமானாலும் வெல்லமுடியும்... யாரும் யாரையும் தோற்கடிக்காமலேயே...என்ற இயற்கை நியதி சிந்தனையில் மிளிருகிறது. இருளும் ஒளியும் நாளும் வரையும் வாழ்க்கை வண்ணங்களில் கரைந்த பாரதி மண்ணில் இன்பம்...விண்ணில் இன்பம்... எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா..? என்ற ஆனந்த நர்த்தனம் சுவாமியின் எழுத்தில் எத்திக்கும் எதிரொலிக்கிறது. வாழ்க்கை என்பது தண்டலையல்ல அது நமக்குக் கிடைத்தத் தெய்வீகப் பரிசு. இயற்கை நம் மூலமாக சுவாசிக்க, காதலிக்க, கீதமிசைக்க, நடனமாட நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதுவரை வாழ்ந்த செயற்கை வாழ்வைத் துறந்துவிட்டு ஆன்மிகப் பொலிவோடு புத்தம் புதுமலராய் தினம் மலர அறிவு விளக்கு ஏற்றுகிறார் வாழ்க்கையெனும் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் அற்புதமான காவியம். வழிநெடுக ஏற்படும் மான அவமானங்களும் புகழ்ச்சி இகழ்ச்சிகளும் நமக்காக உலகம் நடத்தும் பாடமென்ற அறிவால் ஏற்றுக் கொண்டால் துன்பமில்லை எந்நாளும் இன்பமேயென உற்சாகம் ஊட்டுகிறார் நம்மைத் தவிர வேறுயாரும் நமக்கு மனநிறைவைத் தரமுடியாது. நம்மிலே நாம் மலர்ந்தாலன்றி வேறெதுவும் நம்மை மலர்விக்க முடியாது. உள்ளங்கையில் குழையல் சோறாய் போன வாழ்வையும் ஏற்றுக் கொள்ளும் மனமாற்றத்தை அன்போடு முன்மொழிகிறார். நம் கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கை விரல்களை நம்மோடு சேர்த்து கொள்ளத்தான் என்று குறை களைய வழிகோலுகிறார். வாழ்க்கை ஒரு சக்திமிக்க வரமென்பதைக் கொண்டாடத் தெரியவேண்டும். ஒருநாள் முழுதும் வாழ முடியவில்லை என்றாலும் ஒரு சில நிமிடங்களையாவது உளப்பூர்வமாக வாழ பழக வேண்டும். வாழ்க்கையைக் கவனிக்கவே நேரமில்லாமல் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு ஒருநாள் திடீரென்று விடைபெறுவது சாதனையல்ல மாபெரும் வேதனை என்று எச்சரிக்கின்றார். வாழ்க்கையின் முழுமையான நோக்கமே குறையொன்றுமில்லா மனத்தோடு நிறைவாக வாழ்வதுதான். இந்த வாழ்க்கையை ஒரு வழிபாட்டுணர்வுடன் மதித்து, முழுமையான ஈடுபாட்டுடன் அணுகும் ஞான விதைகளை வாசிப்போர் நெஞ்சவயல் முழுதும் பாவுகிறார். வாசித்த பொழுதுகள் மட்டுமே வாழ்ந்து பொழுதுகளாய்க் கருதும் என்னை ‘இருத்தல்’ என்ற நிலையில் இருந்து ‘வாழ்தல்’ என்ற நிலைக்கு இந்நூல் உயர்த்துகின்றது. இந்நூலில் இழையோடும் வாழ்வின் சூட்சுமங்கள் அனைத்தும் சிந்தையில் சிதையாய்ப் பற்றி அறிவில் கொழுந்தாய் எழுந்து ஞானத்தில் உள்ளொளி பரப்பும். பரந்த வானத்தின் ஒரு பகுதியைத்தான் பார்க்க முடியும்; விரிந்த கடலின் ஒரு அளவைத்தான் காண முடியும்.ஒளிவீசும் வைரத்தின் ஒரு கோணத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன். இனி நான் காணாததை தேர்ந்த சுவைஞனாக நீங்கள் கண்டின்புற வேண்டுகின்றேன். கருத்தோடு சுவைப்பவர்க்கு இந்நூல் நுனியிலிருந்து அடியை நோக்கி உண்ணப்படும் கரும்பாய் இனிக்கும் என்பது உறுதி. ‘அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயனே’ என சான்றோர் மொழிக்கொப்ப ஒப்பற்ற உயர்நூல் வரிசையில் சுவாமி அவர்களின் ‘குறையொன்றுமில்லை’ என்றும் வாசிக்கும் உள்ளங்கள் அனைத்திலும் அன்பும் அருளும் நிலைபெற்றொளிர இதயப்பூர்வமாக வாழ்த்தி வணங்குகின்றேன். இந்நூல் மண்ணையும் மனிதனையும் இறைமையையும் வாழ்க்கையெனும் இருப்புக்குள் கரு கொண்டிருப்பதால் இனி என்றும் ‘குறையொன்றுமில்லை’. அன்பெனும் உறவுகோல் நட்டு, அறிவெனும் உணர்வுக் கயிற்றால் கடைந்து, ஞானமெனும் வெண்ணையை ‘குறையொன்றுமில்லை’யில் கிஞ்சிற்றும் குறைவில்லாமல் நாம் அனைவரும் திருவமுதுண்ண ஞானவேள்வியில் உழவாரப் பணி செய்த சுவாமி அவர்களின் திருத்தாள் போற்றி விடைபெறுகிறேன். அன்புடன், ப.தமிழ்மாறன்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ரெ.கார்த்திகேசுவின் 'விமர்சனமுகம் 2' நூல் – ஓர் அலசல் நாள் : 7.9.2012 நேரம் : மாலை 5.30 - 8.00 வரை இடம் : லுனாஸ் தியான ஆசிரமம் இலக்கிய நெஞ்சங்களே, வணக்கம். ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரோசாவா, “ஒருவரின் படைப்பைக் காட்டிலும் அவனை அதிகமாகச் சொல்லக்கூடியது எதுவுமில்லை” சொன்ன வரிகளிலிருந்து இந்த விமர்சனமுகம் 2 நூலையும் படைப்பாளரின் ஆளுமையையும் காண்போம். எந்தவொரு உன்னத படைப்பாயினும் அடன் வாயில்களினூடே அதைப் படைத்தவரின் மனலயத்தோடு இயைந்து பயணிக்க வேண்டுமெனில் வெறும் வார்த்தை தொடர்புகளோ, இலக்கணப் புலமையோ மட்டும் போதாது. படைப்பாளரின் அத்தனை உணர்வனுபவங்களையும் எட்டும் முயற்சியை இந்த அலசலில் தொட்டிருக்கின்றேன். இலக்கியங்கள் நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய உதவுகிறது. தூய இலக்கியவாதிகள் ஒரு பொழுதும் உன்னதத்தை அடைந்துவிட்டதாக நினைக்கமாட்டார்கள். மேலும் பலவாறு மேண்மையை மேம்படுத்த போராடுகிறார்கள். வாசகர்களான நமக்கு இஃது ஒரு பெருங்கொடை. வாசகர்களின் தீவிர வாசிப்பே படைப்பாளர்களின் படைப்பூக்கத்தின் புதிய கதவுகளைத் திறக்கிறது; புதிய எல்லைகளை கண்டடையச் செய்கிறது. இனிமேலாவது வாசிப்பை வாழ்வில் ஒரு முக்கியப் பகுதியாக சமுதாயமே வளர்த்தெடுக்க முனைய வேண்டும். இலக்கியவாதியின் வாழ்வும் ஒரு விதையின் வாழ்வும் ஒன்றுதான். பூமிக்குள் விதைக்கப்பட்ட விதையானது இரு வெவ்வேறு திசைகளில் தன் வாழ்க்கை பயணத்தைத் துவங்குகிறது. கீழ் திசை பயணமானது தன்னை நிலை நாட்டிக்கொள்ள, இருண்ட சூழலில் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்து அசையாத ஆணிவேராய் தன் இருத்தலை ஊன்ற வேண்டியுள்ளது. மேல் திசை பயணமானது வெளிச்சமும் மகிழ்ச்சியும் தந்து தன்னை பிறருக்காக அர்ப்பணிக்குமிடம். உயிர்குலம் முழுவதற்கும் காயாக கனியாக நிழலாக ஏன் அழிந்தப்பின் காகிதமாக கதவாக இன்னும் பலவாறாக பயன்தருகிறது. ஓர் இலக்கியவாதியும் அவ்வாறே தம்மை இந்த வாழ்விலே கரைக்கின்றார். பேராசியர் ரெ.கார்த்திகேசுவின் விமர்சனம் 2 நூலிலுள்ள கட்டுரைகள், விமர்சனங்ள், முன்னுரைகள், மனிதர்கள், கடிதங்கள், நேர்காணல், கேள்வி பதில் அனைத்தும் வறட்டு தத்துவங்களாலும் புள்ளிவிவரங்களாலும் நிறைந்தவை அல்ல. அவை புதிய பார்வையும் கூர்மையாய் உணர்த்தும் நேர்த்தியும் வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக பகிரும் தோழமையும் அழகிய கதைபோல் வாசகரிடம் பேசும் இயல்பும் கொண்டவை. மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும் என்ற கட்டுரையில் பல்லினம் சார்ந்த வாழ்வியல் பகிர்தல்களை மிக சுவைப்படக் காட்டுகிறார். இந்த நாட்டிலே முற்றிலும் தமிழர்களாலேயே வழி நடத்தப்படும் சிங்க நடனக் குழு, தமிழர் கலையான பரதத்தைப் பயின்று அடையார் இலட்சுமணனிடம் பயின்று இன்று உலகளாவிய நிலையில் பரத குருவாக விளங்கும் ரம்லி இப்ராஹிம், சந்திரபானு ஆகியோர் பிறப்பால் மலாய்க்காரர்களே எனும் சுவைத் தகவல்கள் நிறைய உள்ளன. உழைப்பை மூலதனமாக்கி இந்த நாட்டை உயர்த்திய சீனர்கள் பற்றி அருமையான பார்வையை மலேசியாவில் சீனர்கள் குடியேறிச் சமுதாயமா? என்று அம்னோ உறுப்பினரின் சீண்டலுக்கு தக்க பதிலுரைக்கிறார். தொடர்ந்து கால இட வழுப்போல பினாங்கில் இந்தியர்களின் வாழ்விடமாக அமைந்த ‘ஜாதிக்காய்’ கிராமத்தின் பல தகவல்களை முன்வைக்கிறார். ‘டேவிட் பிரவ்ன்’ என்ற தமிழர்க்கு ஈந்த கொடையை ஒரு ஜனநாயக அரசால் நீதிமன்றங்களில் துணையுடன் ராட்சத இயந்திரங்களின் கீழ் நசுக்கப்பட்டதை உணர்த்துகிறார். ‘பழங்கலத்தில் பழங்கள்’ என்ற பத்து கட்டுரைகளில் பினாங்கு தீவின் வளர்ச்சிக்கு தமிழர் ஆற்றிய அளப்பரிய பங்கினை தெள்ளிதின் காட்டுகிறது. மதுரை சின்ன மருதுத்தேவரின் மகன் துரைசாமித் தேவரின் மகன் 130 குற்றவாளிகளோடு இந்த நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது; அச்சுத்தொழிலை வி.நடேசம்பிள்ளை போன்றோர் வளர்த்தது; தாயம்மாள் அம்மாளின் செல்வச் சிறப்பும் ‘டோபி’ ராணியின் புகழும் காணப்படுகிறது. தொடர்ந்து ‘நாற்காலிக்காரர் கம்பம்’ வீரையன் தோட்டம், கருப்பன் தோட்டம், என காலம் மென்றுவிட்ட பற்பல தோட்டங்களை இன்றைய இளையோருக்கு அடையாளம் காட்டுகிறார். பினாங்கு தைப்பூசத்தைப் பற்றி 1871 இல் முன்ஷி அப்துல்லாவின் குறிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. ‘ஏலமுச்சந்தி’ பற்றியும் பினாங்கு சாலையில் 138 ஆம் எண் கடையிலிருந்து தொடங்கப்படும் தைப்பூச மரபும் வியப்பூட்டுகிறது. தொடர்ந்து தென்காசித் தமிழ் முஸ்லிம்களால் தொடங்கப்பட்ட அஞ்சுமான் தமிழ்ப்பள்ளி(1932), ஐக்கிய முஸ்லிம் தமிழ்ப்பள்ளி(1934), தென்காசி முஸ்லிம் தமிழ்ப்பள்ளி (1950) போன்ற குறிப்புகள் இழப்பை உணர்த்துகின்றன. கோ.சாவுக்கு முன்னோடியாக பல்கலையில் தேர்ச்சிப் பெற்ற சுவாமி இராமதாசரின் வழிகாட்டலும் சேவையும் மனதை வருடுகிறது. சமூக சீர்திருத்தத்தோடு ஆன்மிக வழியும் காட்டி ‘செந்தமிழ்க் கலாநிலையம்’ வழி தமிழ்ப் பயிர் செழிக்கச் செய்த அவரை இன்றைய தலைமுறை மறந்திருப்பது பெருங்குற்றமாகப் படுகிறது. தொடர்ந்து விமர்சனம் எனும் தலைப்பின் கீழ் இரா.முருகனின் ‘’மூன்று விரல்”, சை.பீர்முகமதுவின் ‘திசைகள் நோக்கிய பயணங்கள்”, கழனியூரனின் ‘நாட்டார் கதைகளும்”, அ.ரெங்கசாமியின் “லாங்காட் நதிக்கரை”, சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்”, இளங்செல்வனின் நாவல்களும் என்று இன்னும் பிறவற்றை ஆய்ந்து தமது இலக்கியப் பகிர்வை திறம்பட நயம்பட சாதுர்யமாக விமர்சிக்கிறார். இலக்கியம் தொடர்பான அறிவுச் செறிவும் தகவல் அடர்த்தியும் கொண்டு முதிர்ச்சியோடு ஆய்ந்த அளித்திருப்பது வாசிப்பவரை நிச்சயம் இலக்கியம்பால் ஈர்க்கும். ரெ.கார்த்திகேசு சுவாமியின் ‘வாழ்வே தவம்’, ஜெயந்தி சங்கரின் ‘நாலே கால் டாலர்’, சாரதா கண்ணனின் கதைகள், சங்கர நாராயணனின் ’நீர்வலை’, தேவராஜுலுவின் ‘நீரூற்றைத் தேடி’ என்ற நூல்களுக்கும் பெ.ராஜேந்திரனின்’ கரையை நோக்கி அலைகள்’ எனும் பயணக் கட்டுரை தொடர்பாக தாம் வழங்கிய முன்னுரைகளில் மிக நுணுக்கமாகவும் உண்மையாகவும் தமது பார்வையை வெளிப்படுத்துவது பகிர்தலாகவும் புதியவர்களுக்கு தூண்டுதலாகவும் விளங்கும் என்பது வெள்ளிடைமலை. மனிதர்கள் என்ற தலைப்பில் தம் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பாலா எனும் பேராளுமையின் அன்பு வலையில் தாமும் இந்தச் சமுதாயமும் பின்னிப் பிணைந்திருப்பதை நன்றியோடு சொல்வது மனத்தை நெருடுகிறது. ‘அவரது திருமேனி தகனத்துக்கு இயந்திரத்தில் உட்சென்ற வேளையில் என் வாழ்வில் ஒரு பகுதி எரிந்துபோனாதாய் உணர்ந்தேன்’ என ரெ.கார்த்திகேசு குறிப்பிடும் உணர்வானது நம்முள்ளும் பற்றிப் பரவுகிறது. தொடர்ந்து துன்.வீ.தி.சம்பந்தனாரால் திட்டப்பட்டதும் பின்னர் தமது திருமணத்திற்கு அவர் துணைவியரோடு வந்து வாழ்த்தப்பெற்றதையும் நினைவுகூர்கிறார். நமது நாட்டின் சிறுகதை வளர்ச்சிக்கு இறக்கும்வரை அரும்பணியாற்றிய சி.வேலுசாமி பற்றி சொல்லும் அனுபவ பகிர்வு தித்திப்பானது. கடிதம் எனும் தலைப்பில் தமிழ் நாளிதழ்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகளுக்கு ஏற்புடைய முறையில் ஒத்திசைவும், அரவணைப்பும், உணர்த்தலும், தெளிவுறுத்தலும் அநீதியானது என்றபோதில் போர்வாளும் தூக்கும் சான்றாண்மை புலப்படுகிறது. ஒட்டுமொத்த மலேசிய எழுத்தாளர்களின் குரலாக இவர் குரலொலிக்கிறது. ‘தமிழ் சாகும்’ என்ற அடிப்படையில்லாத வதந்தி செய்திகள், இணையம் வழி எழுத்தாளர்கள் தமது படைப்புகளை வெளியிட வேண்டுமெனும் உந்துதல், புத்திலக்கிய பரிசோதனை முயற்சிகளை ஊக்குதல் என மலர்ந்து மலேசிய மண்ணின் மணம் வீசும் படைப்புகள் வரை விரிந்து செல்கிறது. ‘தமிழ் எழுத்தாளர்களா? அப்படியென்றால் என்ன?’ எனும் ஆங்கில நாளிதழில் வெளியான உதய சங்கரின் பார்வைக்கு இவர் காட்டும் சான்றுகள் மிக துல்லியமானது. மேலும், ‘தமிழில் வெளிவரும் கதைகள் பெரும்பாலும் காதல் கதைகளாகவும் தற்கொலையில் முடிவதாகவும் படைப்பாளர்கள்புதிய உத்திகளோடும் திடுக்கிடும் முடிவுகளோடும் முடிவைத் தர தெரியவில்லை’ என்று கருத்துரைத்த டாக்டர் கிருஷ்ணன் மணியம் அவர்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ் வாசகர் அனைவருக்கும் தெளிவான முறையில் சான்று காட்டியிருப்பது சிறப்பு. இந்நூலின் இறுதியில் நேர்காணல் எனும் தலைப்பில் மின்மடலாடக் குழு, நாவல் வெளியீடு, கலைமகள் இதழ் ஆகியவற்றில் வாசகரின் கேள்விகளுக்கு தமது பார்வையில் பதிலுரைத்திருப்பது சிறப்பாக அமைந்துள்லது. பொதுவாக இலக்கிய நெஞ்சங்களுக்கு விமர்சனம் 2 எனும் இந்த நூல் நுனியிலிருந்து அடியை நோக்கி உண்ணப்படும் கரும்பாய் இனிக்கும் என்பது உறுதி. இந்நூல் இலக்கிய இனிமை மட்டுமல்ல தகவல்களும் கருத்துகளும் செறிந்த முத்தாரம்.

திங்கள், 16 ஜூலை, 2012

சங்க தமிழில் 99 வகையான மலர்கள்

சங்க காலத்தில் 99 வகையான மலர்களை அக்கால மகளிர் தொடுத்தும், அணிந்தும் மகிழ்ந்ததாகக் கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அம்மலர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 1. அடும்பு 2. அதிரல் 3. அவரை - நெடுங்கொடி அவரை 4. அனிச்சம் 5. ஆத்தி - அமர் ஆத்தி 6. ஆம்பல் 7. ஆரம் (சந்தன மர இலை) 8. ஆவிரை - விரிமலர் ஆவிரை 9. இருள்நாறி - நள்ளிருள் நாறி 10. இலவம் 11. ஈங்கை 12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ் 13. எருவை 14. எறுழம் - எரிபுரை எறுழம் 15. கண்ணி - குறு நறுங் கண்ணி 16. கரந்தை மலர் 17. கருவிளை - மணிப்பூங் கருவிளை 18. காஞ்சி 19. காந்தள் - ஒண்செங் காந்தள் 20. காயா - பல்லிணர்க் காயா 21. காழ்வை 22. குடசம் - வான் பூங் குடசம் 23. குரலி - சிறு செங்குரலி 24. குரவம் - பல்லிணர்க் குரவம் 25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி 26. குருகிலை (குருகு இலை) 27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம் 28. குவளை (மலர்) - தண்கயக் குவளை 29. குளவி (மலர்) 30. குறிஞ்சி 31. கூவிரம் 32. கூவிளம் 33. கைதை 34. கொகுடி - நறுந்தண் கொகுடி 35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை 36. கோங்கம் - விரிபூங் கோங்கம் 37. கோடல் 38. சண்பகம் - பெருந்தண் சண்பகம் 39. சிந்து (மலர்) 40. சுள்ளி மலர் 41. சூரல் 42. செங்கோடு (மலர்) 43. செம்மல் 44. செருந்தி 45. செருவிளை 46. சேடல் 47. ஞாழல் 48. தணக்கம் (மரம்) 49. தளவம் 50. தாமரை - முள் தாள் தாமரை 51. தாழை மலர் 52. திலகம் (மலர்) 53. தில்லை (மலர்) 54. தும்பை 55. துழாஅய் 56. தோன்றி (மலர்) 57. நந்தி (மலர்) 58. நரந்தம் 59. நறவம் 60. நாகம் (புன்னாக மலர்) 61. நாகம் (மலர்) 62. நெய்தல் (நீள் நறு நெய்தல்) 63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்) 64. பகன்றை 65. பசும்பிடி 66. பயினி 67. பலாசம் 68. பாங்கர் (மலர்) 69. பாதிரி - தேங்கமழ் பாதிரி 70. பாரம் (மலர்) 71. பாலை (மலர்) 72. பிடவம் 73. பிண்டி 74. பித்திகம் 75. பீரம் 76. புன்னை - கடியிரும் புன்னை 77. பூளை - குரீஇப் பூளை 78. போங்கம் 79. மணிச்சிகை 80. மராஅம் 81. மருதம் 82. மா - தேமா 83. மாரோடம் 84. முல்லை - கல் இவர் முல்லை 85. முல்லை 86. மௌவல் 87. வகுளம் 88. வஞ்சி 89. வடவனம் 90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை 91. வள்ளி 92. வாகை 93. வாரம் 94. வாழை 95. வானி மலர் 96. வெட்சி 97. வேங்கை 98. வேரல் 99. வேரி மலர்

தமிழில் மனித நேயம்

தமிழர் வாழ்வு இலக்கியத்துவமிக்க வாழ்வாகும். உழவால் உணவாக்கி, உடை நெய்து, உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர். உடலுக்கு திண்மை பெற, உரமூட்ட உணவும், ஒழுக்கமுடன் திகழ உடையும், உணர்வுகள் செம்மையுற நூல்கள் புனைந்து பரிமாறியுள்ளனர். தமிழரின் நூல் திறம் தனிச் சிறப்பு வாய்ந்தது. நூலில் கையாளும் தமிழ்ச் சொல்லை தொல்காப்பியர் அளவிடுகையில் உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே -என்கிறார். சொல்லில் மட்டுமல்ல. வாழ்வியல் சமூக பண்பாட்டிலும் ஓர் வரையறை ஒழுங்கை பின்பற்றி வருபவர்கள் தமிழர்கள். இன்றைய ஆலய வழிபாட்டின் தொடக்க காலத்தில் காட்சி, கால்கோள் நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்தல் என்ற நெறியை வழிபாட்டில் கொண்டவர் தமிழர். இதை முறையே காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் -என்ற தொல்காப்பியம் கூறும் புறத்திணை இயலில் அறியலாம். காதலும் வீரமும் தமிழர் பண்பாட்டின் அடிப்படை உயிரையும் உடமையையும் காக்கும் வீரமறவர்களைப் போற்றுவதும் சமூகம் என்ற சேர்ந்து வாழும் பண்பாட்டின் அடையாளம். இதனை தமிழர் தம் வாழ்வியல் கோட்பாடாகவே இன்றும் கைக்கொள்கின்றனர். உயிர்காத்த, ஊரைக்காத்த வீரனுக்கு அவன் நினைவு போற்ற நடுகல் வைப்பது தமிழ் மரபு. அதற்குரிய கல்லை போர் நிகழ்ந்த இடம், உயிர் துறந்த இடம் போன்ற இடங்களில் தேடி எடுப்பது காட்சி என்பதாகும். தாம் கண்டு காட்சிப்படுத்திய நடுகல்லைக் கொணர திரளாகச் சென்று எடுத்து வருவது கால்கோள். கால்கோள் கல் கொணர்ந்தும் ஊர் நீரால் உவப்புடன் கழுவி சுத்தப்படுத்துவது நீர்ப்படை என்பது. நீர்ப்படையால் ஊரார் உதவியுடன் சுத்தம் செய்து ஊரின் மையத்தே அல்லது வீரருக்கு உகந்த இடத்தில், ஊர் எல்லையில் நடுவதே நடுகல். நடப்பட்ட நடு கல்லுக்கு சிறப்பு செய்யும் வகையில் அந்நடுவில் வீரரின் உருவாகவே பாவிப்பதால் விரும்பிய உணவை படைத்து படையிலிடுவது பெரும்படை. பெரும்படை எனும் உணவுப்படையலிட்டு ஊர்க்கூடி வழிபடுவது. வாழ்த்தல். இந்த முறையில் தான் தமிழர் வாழ்வில் வீரத்தைப் போற்றினர். நடுகல் வாழ்த்து வீரத்தை உயர்த்திக் கூறும் இலக்கியமாக விளைந்தன.ஈகை, வீரம், காதல் இவைகளை பறைசாற்றும் எண்ணற்ற நூல்கள் தமிழர் படைத்தனர்.இந்நூல்கள் தமிழரின் உணர்வு நிலையின் செழுமையைப் பறை சாற்றுவன எனலாம். தமிழ் போற்றிய மனித நேயம் மனித நேயம் தொடர்பாக பிறமொழிகளில் எண்ணற்ற இலக்கியங்கள் உள்ளது. ஆனால் தமிழே மனித நேயத்தை தன்னுள் கொண்டுள்ள சிறப்பு மொழியாகும். பிறமொழிகளில் மனித நேயத்தை மனிதனை உயர்திணையாக நோக்கும் சொல்லில்லை. விலங்கைச் சுட்டினாலும் மனிதனைச் சுட்டினாலும் ஒரே விதமாகத் தான் வெளிப்படும். ஆனால் தமிழில் மனிதரை மக்களைச் சுட்டும் போது உயர்திணையாகத்தான் சுட்ட வேண்டும். மனிதர் அல்லாத ஏனையவற்றை அஃறிணையாக சுட்ட வேண்டும் என்ற இலக்கணம் உள்ளது. இதனடிப்படையில் தான் புலவர்கள் அவர்கள் வாழ்ந்த, கண்ட, கேட்டவைகளை இலக்கியமாகப் பதிவு செய்துள்ள பலவற்றில் திணை நிலங்களும், அங்கு வாழ்ந்த மக்கள், இயற்கை, உணவு, இசை, உணர்வுகளை பதிவு செய்துள்ளனர். திணை நிலங்களான பாலை, முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்பன பாடுபொருள்களுக்கான தளமாக உள்ளன. இதனை நாற்கவிராய நம்பியகப் பொருள் விளக்கவுரையின் இறுதியில் உள்ள கீழ்க்காணும் பாடலால் சுட்டிக் காட்டுகிறார் உ.வே.சா. போக்கெல்லாம் பாலை புணர் - தனறுங்குறிஞ்சி ஆக்கஞ் சேரூட லணிமருதம் - நோக்கொன்றி இல்லிருக்கை முல்லை யிரங்க னறுநெய்தல் சொல்லிருக்கு மைம்பாற் றொகை - எனத் தெளிவுடன் உரைக்கிறது. தமிழும், தமிழர் தம் வாழ்வும் அவர்கள் வாழ்ந்த நிலத்தோடு தொடர்பு கொண்டது. அது மட்டுமல்ல, வாழ்க்கை அங்குள்ள இயற்கைச் சூழல்களுடன் ஒன்று கலந்தது. தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள், உணவும் அவ்வாறே. இயற்கையோடு இணைந்த உடலியக்கத்தைப் பெறும் வகையில் உணவுப் பழக்க வழக்கம் உள்ளவர் தமிழர். அது மட்டுமல்ல வளமான வாழ்க்கைக்கும் சொந்தக்காரர்கள் தமிழர்களே. புறநானூற்றில் "நீர் நாண நெய்பிழிந்து" என வரும் இந்தப்பாடல், இன்றைக்கு தர்மபுரி எனவும் பண்டைய இலக்கியத்தில் தகடூர் எனவும் வழங்கிய நாட்களில் அப்பகுதியை அரசாண்ட அரசன் போருக்கு செல்லும் முன்பு வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து பெருஞ்சோறு உண்ணவும். அப்போது சோற்று உருண்டையில் நீரே வெட்கமுறும் அளவுக்கு நெய்யை நீராக ஊற்றி பகிர்ந்துண்டதாகப் பாடல் தெரிவிக்கிறது. நீர் நாணும் அளவுக்கு சோற்றில் நெய் பிழிந்து உண்ணும் அளவிற்கு கால்நடைச் செல்வம், பால்படு பொருட்கள், காய், கனி, கிழங்கு, கீரைகளை தன் உணவில் கையாண்டுள்ளனர். அந்தளவிற்கு இயற்கை அறிவும், வேளாண் அறிவும், செல்வச் செழுமையும் நிரம்பியோர் தமிழர்கள். ஆறாம் திணை தமிழர்களின் இலக்கியங்கள் ஐந்திணைகள் நிலப்பகுதியைக் கொண்டு படைக்கப்பட்டவை. பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற அனைத்து நிலப்பகுதிகளிலும் இயற்கையின் இயக்கம் சுழற்சியாக பருவ நிலைகளை மாறி மாறி நிகழ்த்தும். பாலை நிலத்தில் பனியும், மழையும், தென்றலும் குறிப்பிட்ட பருவத்தில் இயற்கை தம் செயல்பாட்டை நிகழ்த்தும். அதைப்போலவே முல்லை, மருதம், குறிஞ்சி நெய்தலில் பனி, மழை, வசந்தம் என்ற பருவ காலம் குறிப்பிட்ட திங்கள்களில் வந்து இயற்கை நிகழ்வை நிகழ்த்தும். ஆனால் மேற்கு மலைத் தொடர்களில் நிலவும் பனியும், மேகங்களின் உலாவலும் பிற நிலங்களில் நிலையாய்க் காண இயலாது. குறிஞ்சி நிலத்தில் கோடை, வறட்சி நிலவினாலும் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக பனி பிற இடத்தில் பொழியும். ஆனால் வாழ்க்கைச் சூழல் மொத்தமும் பனிப் பொழிவிற்குள்ளேயே அமைந்த நிலை பண்டைக்கால தமிழர்க்கில்லை. ஆனால் இன்று பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர்ந்து தமிழர்கள் தம் பண்பாட்டுச் சூழல் மாறாமல் உலகின் பனி நிலங்கள் அமைந்த பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்றனர். பல்வேறு இடங்களில் தமிழர்கள் வாழ்ந்தாலும் மொழியாலும், இனத்தாலும் ஒன்றுபடும் பல்வேறு அமைப்புகளை தங்களுக்குள் உருவாக்கி தமது உணர்வுகளை ஐந்திணைகளுக்கு அடுத்ததாக ஆறாம் திணை எனும் புதிய நிலத் திணை இலக்கியங்களை தற்கால தமிழ் இலக்கிய புது மரபாகத் தமிழ் மொழிக்கு தந்துள்ளனர். தமிழர்கள் வாழ்விடம் தேடி புலம் பெயர்ந்தது ஒரு சோகமெனினும் தம் பண்பாட்டு மரபுகளை கைவிடாமல், திணைப் புலம் தோறும் முன்னோர் ஆக்கிவைத்த இலக்கியச் செல்வம் போன்றே இன்று இந்த புதிய இலக்கியங்களில் அவர்தம் வழியில் படைப்புகள் வெளி வருகின்றன. தாய் மண்ணை விட்டுப் பிரிந்த அவர்களின் உணர்வின் வெளிப்பாடான அவலச்சுவை இலக்கியங்கள் ஊடாக பனித் திணை தமிழர்களுக்குள் புதிய கோட்பாடாக இன்று நாம் அறிவது என்னவெனில் ஆறாம் திணை வாழ்த் தமிழர்கள் உழைப்பது, உழைப்பால் வரும் பொருளை சேமிப்பது எனும் குறிக்கோள்கள் அவர்களிடம் உருவாகியுள்ளன. அத்துடன் மொழியின் அடிப்படைக் கூறுகளான இலக்கணச் செழுமையும் சில நாட்டுத் தமிழர்களிடம் வளமாகவே உள்ளது. அறிவியல் நுட்பங்களில் தமிழர்கள் பெருமளவில் கோலோச்சுகின்றனர். இதனால் அறிவியல் கருவிப் பயன்பாட்டில் பிற மொழி இனத்தவரை விட அயல்நாட்டுத் தமிழர்கள் மேலோங்கியுள்ளனர். இந்தப் பயன்பாட்டுப் பெருக்கத்தால் உலக மொழியில் ஊடக நுட்பக் கருவி மற்றும் மெல்லியம் தயாரிப்போர் தமிழ் மொழியிலும் அத்தகையவற்றை உருவாக்க முனைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.