வானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.
ஞாயிறு, 31 மார்ச், 2013
ஆன்ம இளைப்பாற்றும் ஆறாம் விரல்
தவத்திரு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ‘குறையொன்றுமில்லை’ என்கிற மூன்றாவது இலக்கியப் படையல் புதிய புறப்பாட்டோடு மீண்டும் உள்ளவீதியில் மேளதாளத்தோடு உலா வரத் தொடங்கிவிட்டது. பெளர்ணமி நிலவின் பரிணமிப்பில் தித்திக்கும் திருவுள்ளத்தோடு இந்நூல் ஏடுகளை அன்பொழுக புரட்டும்போது இதயத் தாமரை முகையவிழும் மெல்லோசை கேட்கிறது.
சிதைந்தும் சிதையாமலும் வேரோடி விட்டிருக்கும் மானிட வாழ்வியல் உள்ளோட்டங்களை உயிரோட்டங்களாக கூர்மையான பார்வையோடும் நேர்மையோடும் எளிய மனிதர்களின் மனசாட்சியாகப் பதிவு செய்திருக்கும் தவத்திருவின் திருவடிக்கு முதற்கண் நன்றி மலர்கள் சொரிகின்றேன்.
ஆன்மிகத் தேனமுதை தமிழ் ஞானப்பால் கலந்து அறிவு தீஞ்சுவைப் பிழிந்து அன்பு மணம் கமழ வாழ்வியல் சுவைக்கூட்டி தரும் தவத்திருவின் சொற்பொழிவு நாளும் நெஞ்ச முழுவதும் புதியதொரு வைகறை வெளிச்சம் பாய்ச்சுகிறது. தெளிந்த ஞானத்தை இளந்தென்றல் தழுவிச்செல்லும் இனிய பேச்சாலும் எழுத்தாலும் இசைத்துப் புல்லாங்குழலாய் நெஞ்சில் புதுராகம் மீட்டுகிறார்.
இயல்பான நீரோடை போன்ற அவரின் பேச்சில் இடையசைத்து வரும் தென்றலாய் மண்மணமும் வசந்தத்தின் பூங்கொத்தாய் புன்னகையும் இதயத்தை என்றும் வருடிக் கொடுக்கும். சுவாமி தம்மையே ஆழத் தோண்டி சேர்த்த ஞானத் தெறிப்பின் திவலைகளில் ஆன்ம எல்லைகள் பளிச்சிடுகின்றன.
சுவாமியின் சொற்பொழிவின் சொல் வார்ப்புகள் நெஞ்சை ஆட்சி செய்யும் வல்லமைக் கொண்டவை. அவரின் எழுத்தோ எண்ணற்ற கருத்துக் கருவூலங்களில் தத்துவத் தேரோட்டமாய் ராஜபவனி வருபவை. என் இதயத்தில் சுவாமி அவர்கள் அமைதியின் மோனத்தில் ரமணராக, அன்பின் நெகிழ்வில் ராமகிருஷ்ணராக, ஆழ்ந்த சிந்தனையில் ஓஷோவாக, வீறு கொள்வதில் விவேகானந்தராக, இயல்பான ரசனையில் பாரதியாக தெரிகிறார்.
நான் வனாந்திரக் கனவுகளில் தனிப்பறவையாய் சிறகு விரித்தபோதெல்லாம் அவரின் ஆன்மிக ஆலமரக்கிளைகளில் ஆர்வத்தோடு வந்தமர்வேன். கடலைத் தீராத் தாகத்தோடு தேடும் ஒரு மழைத்துளியின் பசியோடு வரும் எனக்கு மதங்களைக் கடந்து நிற்கும் உண்மைகளால் நெகிழ வைக்கிறார். மரபுகளை மதித்தாலும் மூடப்பழமையின் முனை முறித்து உண்மைகளை நெஞ்சில் நங்கூரமாய் பாய்ச்சும்போது நம் உயிரிலும் பூ மலரும்.
இன்றைய தலைமுறையால் தீண்டப்படாத பெருஞ்செல்வமாக நமது முன்னோர் விட்டுச் சென்ற புராதன ஆன்மிகக் கருத்துகளால் அமுதம் கடைந்து என் போன்றோரை அதிர வைக்கிறார். சுவாமி அவர்களின் இதயத்தில் அடிநாதமாக ஊறும் மானுட நேசம் கனிந்த ஞானமாக எழுத்து நதியெங்கும் கரைந்தோடுகிறது.
உலக வாழ்வில் மானுட உறவைப்போல் மிக இனிமையானதும் அதேவேளையில் மிகச் சிக்கலானதும் வேறெதுவுமில்லை. உறவுகளின் உரசல்களாலும் முரண்பாடுகளாலும் மனமுடைந்தவர்கள் நடந்த பாதையை தாம் தரிசித்த உண்மைகளோடு அரிதாரம் பூசாமல் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.
இடைவிடாத ஆன்ம விழிப்போடு சுவாமி அவர்கள் கீதையில் திருவாய் மலரும் போதெல்லாம் அயர்வில்லாத காதலனாய் கண்ணனில் நான் கரைந்ததுண்டு. உயர்ந்த வாழ்வியல் விழுமியங்களிலிருந்து நழுவி இன்று வெறும் சடங்காய் நிறம் மாறிப்போன சமயத்தின் சாறுபிழிந்து மதம் கடந்த ஆன்மிக விருந்து படைக்கிறார்.
செவ்வியல் இலக்கியச் சுவையோடும் உபநிடதங்கள் உரைக்கும் உண்மைகளோடும் வரலாற்றுச் சான்றுகளோடும் தாம் சந்தித்த மனிதர்களின் வலிகளையும் வேதனைகளையும் எழுத்துத் தூரிகையால் ஓவியமாக்கி நம்மோடு உரையாட வைக்கிறார்.
சின்னஞ் சிறிய நிலையற்ற நீர்க்குமிழ் போன்ற வாழ்க்கைதான் என்றாலும் இதைப் பிணைப்பதற்கா மனிதனிடத்து இத்தனை கண்ணிகள்?.
நாம் எப்போதும் வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோமேயொழிய பெரும்பாலும் வாழாமலே மறைந்து விடுகிறோம். குளிர் காய்வதற்கு சுள்ளி பொறுக்கச் சென்றதிலே காலம் கரைத்துவிட்டோம் என்ற எச்சரிக்கை உணர்வு ஊட்டுகிறார்.இருட்டில் உழன்று அதையே ஏற்றுக் கொண்டவர்க்கும், என்றேனும் ஒளி வாராதா என்று காத்துக் கிடப்பவர்க்கும், ஒளியை நோக்கித் துணிவோடு நடப்பவர்க்கும் இந்நூல் அற்புத ஞான ஒளிப்பாதை அமைக்கும்.
தவத்தின் வலிவோடு எழுந்த ‘குறையொன்றுமில்லை’ எனும் இந்த திருவெழுத்து மானுட வாழ்வின் விளக்கத்திற்கு என்றும் வழிகாட்டும் கைவிளக்கு. அறிவார்ந்த கருத்துக் கருவூலமாய் திகழும் சுவாமியின் எழுத்து ஆன்மஞான விளக்காக என்றும் ஒளிவீசும்.
வாழ்வின் துயரம் நிறைந்த பகுதிகளை அந்தரங்கத்தில் அழுகிப்போன அவலங்களை அங்கதம் கலந்த இலக்கிய இனிமையோடு நேரடிச் சொற்களால் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். பலரில் வாழ்வு நிறைவின்மையால் தொலைந்து போனவை இலக்குகள் மட்டுமன்றி இருப்புகளும்தான் என்பதை சுவாமி அவர்களின் வாழ்வுசார் நுண்ணிய அவதனிப்புகள் பிரமிப்பூட்டுகின்றன.
இந்நூல் மானுடம் மீதான நம்பிக்கையைத் துளிர்த்து வாழ்வில் எதிர்ப்படும் அச்சத்தை அறுத்து தனியொருவரின் சுயத்தை மேன்மையுறச் செய்யும் வித்துக்களை வீரியமாகக் கொண்டுள்ளதை நெடுகக் காணலாம்.வாழ்க்கை எனும் சொல்லுக்குள் ‘வா’,’வாழ்’,’கை’,’வாக்கை’,வாகை’ என ஐந்து சொற்கள் ஒளிந்திருக்கின்றன. முதலில் வாழ்க்கை ‘வா’ என்று அழைக்கிறது; ‘வாழ்’ என்று சொல்கிறது. ‘கை’யை நம்பி உழை என்கிறது; ‘வாக்கை’ காக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது; இறுதியில் அடைவது ‘வாகை’ என்று உறுதி செய்கிறது.
இத்தனை சொற்களைச் சூல்கொண்ட வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது. கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடு பறக்கின்றன. இனிமையும் மகிழ்ச்சியும் இதயத்தில் நிலைப்பெற்றால் என்றும் வாழ்க்கை தேன்கூடுதான்.
மனநிறைவோடும் மகிழ்வோடும் புன்னகையோடும் உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக நம்மீது பூக்கள் சொரியும் என்பதை உயிர்க்காற்றின் ஒலித்தடத்தில் உள்ளக் கணுக்கள் நெகிழ சுவாமி ஓங்கி உரைப்பது உள்ளுணர்வால் உணர முடிகிறது.
இதிலுள்ள எழுத்துகள் தோழமையுணர்வோடு கதைபோல் வாழ்க்கை அனுபவங்களை நம்மிடம் நேரடியாகச் சொல்பவை. நாம் இழந்த அறத்தை நோக்கி சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் சுவாமியின் படைப்புகளைக் கூர்ந்து நோக்கும்போது புரிகிறது.
ஓயாத கடல் அலை போல வீசி வீசி என்னைப் போன்ற கரையில் நிற்கும் மனிதனை உருக்கி வார்த்ததும் சுவாமியின் ஆகிருதிகள்தான். நம்மை அறியாமலே நம்முள் இருக்கின்ற அனுபவப் பிழிவுகளை மெல்லிய உணர்வுகளோடு தொட்டுத் துழாவுகின்றார். அந்தத் தொடுதலில் உறவின் இறுக்கங்கள் கட்டுடைப்பட்டு புதுவெளிச்சம் பூக்கின்றன.
இந்தச் சமுதாய வீதியில் கைவீசி நடக்கும் ஒவ்வொரு மனிதனின் அடிமனத்திலும் சிலசுவடுகள் அழியாத ஓவியங்களாய் ஆழமாய்ப் பதிந்து கிடக்கின்றன. சிதிலமடைந்த வாழ்வு தடத்தையும் அன்பின் கசிவையும் வாஞ்சையோடு ஏற்று அடர்த்தியான கூறுமொழியாலும் கவித்துவமான குறியீட்டுப் படிமங்களாலும் ஒளியூட்டுகின்றார்.
வாழ்வின் உயிர்ப்பை உயிர்ப்பின் இருப்பை இருப்பின் தேடலை பாலிலே நெய்யைத் தரிசிப்பது போன்ற அகத்தாய்வுப் பார்வையால் ஆன்ம இளைப்பாறலுக்கு ஆறாம் விரலால் ஞான விளக்கேற்றுகிறார்.
நித்தம் புதுமலராய் நம்மைச் சுற்றியுள்ள இயற்கை அனைத்தும் மலரும்போது மனிதன் மட்டும் மலராமல் இருப்பது முறைதானோ?. கோயில் கருவறைக்குள் கொண்டு செல்லப்படும் நீர் தீர்த்தமாக, நீறு திருநீறாக, மலர் பிரசாதமாக திருமாறி வரும்போது மனிதன் மட்டும் மாறாமல் வருவது தருமம்தானோ?.
இந்த உலகத்தில் யாருடைய சுவாசக் காற்றை யார் களவாட முடியும்? யாருடைய பூமியை யார் திருடிவிட முடியும்? யாருடைய ஆகாயத்தை யார் பறித்துவிட முடியும்? யார் புகழை யார் மறைக்க முடியும்?. நமக்கென்று உள்ளதை எவரும் மறைத்துவிடவோ பறித்துவிடவோ முடியாது என்பதை உணர வைக்கின்றார்
நம் உழைப்புக்கும் முயற்சிக்கும் தகுதியானது யார் தடுத்தாலும் நம்மை நாடி வந்தே தீரும் என்பது இயற்கை நியதி. எத்தனைப் பேர் வேண்டுமானாலும் வெல்லமுடியும்... யாரும் யாரையும் தோற்கடிக்காமலேயே...என்ற இயற்கை நியதி சிந்தனையில் மிளிருகிறது.
இருளும் ஒளியும் நாளும் வரையும் வாழ்க்கை வண்ணங்களில் கரைந்த பாரதி மண்ணில் இன்பம்...விண்ணில் இன்பம்... எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா..? என்ற ஆனந்த நர்த்தனம் சுவாமியின் எழுத்தில் எத்திக்கும் எதிரொலிக்கிறது.
வாழ்க்கை என்பது தண்டலையல்ல அது நமக்குக் கிடைத்தத் தெய்வீகப் பரிசு. இயற்கை நம் மூலமாக சுவாசிக்க, காதலிக்க, கீதமிசைக்க, நடனமாட நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதுவரை வாழ்ந்த செயற்கை வாழ்வைத் துறந்துவிட்டு ஆன்மிகப் பொலிவோடு புத்தம் புதுமலராய் தினம் மலர அறிவு விளக்கு ஏற்றுகிறார்
வாழ்க்கையெனும் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் அற்புதமான காவியம். வழிநெடுக ஏற்படும் மான அவமானங்களும் புகழ்ச்சி இகழ்ச்சிகளும் நமக்காக உலகம் நடத்தும் பாடமென்ற அறிவால் ஏற்றுக் கொண்டால் துன்பமில்லை எந்நாளும் இன்பமேயென உற்சாகம் ஊட்டுகிறார்
நம்மைத் தவிர வேறுயாரும் நமக்கு மனநிறைவைத் தரமுடியாது. நம்மிலே நாம் மலர்ந்தாலன்றி வேறெதுவும் நம்மை மலர்விக்க முடியாது. உள்ளங்கையில் குழையல் சோறாய் போன வாழ்வையும் ஏற்றுக் கொள்ளும் மனமாற்றத்தை அன்போடு முன்மொழிகிறார். நம் கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கை விரல்களை நம்மோடு சேர்த்து கொள்ளத்தான் என்று குறை களைய வழிகோலுகிறார்.
வாழ்க்கை ஒரு சக்திமிக்க வரமென்பதைக் கொண்டாடத் தெரியவேண்டும். ஒருநாள் முழுதும் வாழ முடியவில்லை என்றாலும் ஒரு சில நிமிடங்களையாவது உளப்பூர்வமாக வாழ பழக வேண்டும். வாழ்க்கையைக் கவனிக்கவே நேரமில்லாமல் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு ஒருநாள் திடீரென்று விடைபெறுவது சாதனையல்ல மாபெரும் வேதனை என்று எச்சரிக்கின்றார்.
வாழ்க்கையின் முழுமையான நோக்கமே குறையொன்றுமில்லா மனத்தோடு நிறைவாக வாழ்வதுதான். இந்த வாழ்க்கையை ஒரு வழிபாட்டுணர்வுடன் மதித்து, முழுமையான ஈடுபாட்டுடன் அணுகும் ஞான விதைகளை வாசிப்போர் நெஞ்சவயல் முழுதும் பாவுகிறார்.
வாசித்த பொழுதுகள் மட்டுமே வாழ்ந்து பொழுதுகளாய்க் கருதும் என்னை ‘இருத்தல்’ என்ற நிலையில் இருந்து ‘வாழ்தல்’ என்ற நிலைக்கு இந்நூல் உயர்த்துகின்றது. இந்நூலில் இழையோடும் வாழ்வின் சூட்சுமங்கள் அனைத்தும் சிந்தையில் சிதையாய்ப் பற்றி அறிவில் கொழுந்தாய் எழுந்து ஞானத்தில் உள்ளொளி பரப்பும்.
பரந்த வானத்தின் ஒரு பகுதியைத்தான் பார்க்க முடியும்; விரிந்த கடலின் ஒரு அளவைத்தான் காண முடியும்.ஒளிவீசும் வைரத்தின் ஒரு கோணத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன். இனி நான் காணாததை தேர்ந்த சுவைஞனாக நீங்கள் கண்டின்புற வேண்டுகின்றேன். கருத்தோடு சுவைப்பவர்க்கு இந்நூல் நுனியிலிருந்து அடியை நோக்கி உண்ணப்படும் கரும்பாய் இனிக்கும் என்பது உறுதி.
‘அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயனே’ என சான்றோர் மொழிக்கொப்ப ஒப்பற்ற உயர்நூல் வரிசையில் சுவாமி அவர்களின் ‘குறையொன்றுமில்லை’ என்றும் வாசிக்கும் உள்ளங்கள் அனைத்திலும் அன்பும் அருளும் நிலைபெற்றொளிர இதயப்பூர்வமாக வாழ்த்தி வணங்குகின்றேன். இந்நூல் மண்ணையும் மனிதனையும் இறைமையையும் வாழ்க்கையெனும் இருப்புக்குள் கரு கொண்டிருப்பதால் இனி என்றும் ‘குறையொன்றுமில்லை’.
அன்பெனும் உறவுகோல் நட்டு, அறிவெனும் உணர்வுக் கயிற்றால் கடைந்து, ஞானமெனும் வெண்ணையை ‘குறையொன்றுமில்லை’யில் கிஞ்சிற்றும் குறைவில்லாமல் நாம் அனைவரும் திருவமுதுண்ண ஞானவேள்வியில் உழவாரப் பணி செய்த சுவாமி அவர்களின் திருத்தாள் போற்றி விடைபெறுகிறேன்.
அன்புடன்,
ப.தமிழ்மாறன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக