திங்கள், 15 ஜூலை, 2019

கல்லைச் சிற்பமாக்கும் உளிகள்தானே ஆசிரியர்கள்!!!


எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதைப்போல என் எல்லாப் பெருமைகளும் என் ஆசிரியருக்கே என்று டாக்டர் அப்துல் கலாம் அன்று சொன்னது ஒவ்வொரு ஆசிரியர் தினத்திலும் என் நினைவில் வந்து போகிறது.குடியரசுத் தலைவர் பணிக்காலம் முடிந்ததும் ஆசிரியர் பணியைத் தேடிப் போனது மட்டுமல்ல ஒரு மதிப்புமிகு ஆசிரியராகவே இறுதி மூச்சையும் விட்ட பேராசிரியர் டாக்டர் அப்துல் கலாம். நல்ல குழந்தைகளை உருவாக்குகிற பொறுப்பு ஒருதலையாக பெற்றோரை சார்ந்தது மட்டுமல்ல இந்த ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உண்டு என்று ஆழமாக நம்புபவன் நான். அதிலும் நல்ல குடிமகனை உருவாக்கும் மாபெரும் பொறுப்பில் இந்தக் கல்விக்கூடங்களுக்கும் அதில் பாரதி வார்த்தையில் சொன்னால் விழியெதிர்படும் தெய்வங்களாக கருதப்படும் ஆசிரியப் பெருமக்களுக்கு அளப்பரிய பங்குண்டு. அன்பு தொடுதலால் அறிவு விளக்கால் வழிகாட்டிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஆசிரியப் பெருமக்களுக்கு என் ஆசிரியர் நாள் வாழ்த்துகள். ஆசிரியரின் அன்பான பார்வையும் தொடுதலும் மாணவரின் எத்தனையோ மறைந்த பக்கங்களைத் திறக்கும். ஆசிரியரின் அறிவு முதலில் அன்பின் பாதையைத் திறக்க வேண்டும். அன்பும் அறிவும் இணையும்போதுதான் உலகம் அருள்மயமாகும். அன்பும் அறிவும் பிரிந்தால் உலகம் இருள்மயமாகிவிடும். என்றென்றும் உலகம் அருள்மயமாக அன்பின் பாதையில் அறிவின் தடத்தில் பயணம் செய்ய வேண்டும். இதற்கு அமெரிக்காவின் பதினாறாம் குடியரசுத் தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் தம் மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்தான் நல்லதொரு எடுத்துக்காட்டு. “என் மகனுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுங்கள். வெற்றி தோல்விகளை அவன் புரிந்து ஒள்ள வேண்டும். தேர்வில் தவறான முறையில் தேர்ச்சியடைவதைவிட தோல்வி அடைவது மேலானது என்பதை அவனுக்குக் கற்று கொடுங்கள். சாலையில் சாதரணமாகக் கைக்கிற நூறு டாலரைவிட, உழைத்துப் பெறுகிற ஒரு டாலர் மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். எல்லாவற்றையும்விட, நேர்மைதான் புனிதமானது என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும்” இப்படி முடிகிறது அவரின் கடிதம். குடியரசுத் தலைவர் என்ற அதிகாரத் தோரணையில்லாமல் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி காத்திருக்கும் சராசரி தந்தையின் எதிர்ப்பார்ப்புதான் இன்றும் பலருக்கு.  எனக்குத் தெரிந்த நல்லாசிரியர் பலர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு, தம்தம் கல்விப் பணியை முடித்தவர்களில்லை. பல மாணவர்களின் வாழ்க்கைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு, பலரின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியவர்கள். வறுமையும் ஏழ்மையும் வாழ்க்கை உயர்வுக்குத் தடையல்ல. கருத்தூன்றி கல்வி கற்றால் நீயும் சிகரம் தொடலாம் என்று மாணவர்களின் ஆழ்மனத்தில் அழுத்தமாகப் பதித்த எத்தனையோ ஆசிரியப் பெருமக்கள் இருந்திருக்கிறார்கள்; இன்னும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் பணி ஓய்வுப்பெற்று இன்று ஊரும் உலகும் அறியா வண்ணம் இலைமறைகாயாக அமைதியாக வாழ்ந்துகொண்டிருப்பதை நான் கண்டுவருகின்றேன். இன்னும் நமக்கு மத்தியிலும் இதுபோன்ற தன்னலமற்ற நல்லாசிரியர்கள் துடிப்போடு பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறை அவர்களைத் தேடிப்பிடித்து நன்றியை நினைவுகூரத்தான் வேண்டும். தம்மிடம் பயிலும் எல்லா மாணாக்கரையும் பேதமின்றி சொந்த பிள்ளைகளாக எண்ணி உரிமையோடு குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டி கண்டித்து நல்வழிப்படுத்தி கல்வியிலும் பண்பிலும் உயர்த்தும் நல்லாசிரியர்களை நாடும் சமூகமும் என்றுமே மதிக்கிறது. ஆசிரியப் பணியை ஆத்மார்த்தமாக மதிக்கும் ஆசிரியர் என்றுமே மாணாக்கர் மனங்களில் கூடுகட்டிக்கொண்டுதானே வாழ்கிறார்?. வாழ்க்கைக்கு ஒளிகூட்டும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறை வாழ்த்துகள். ஆசிரியர்களே! உங்கள் முன்னே மாணவர்கள் கற்பாறைகளாக இறுகிக்கிடக்கிறார்கள். அவர்கள் உடைந்து விடாதபடி அழகாக உங்கள் அறிவெனும் உளியால் மெல்ல செதுக்குங்கள். காலத்தால் உங்கள் முன்னே உலகம் வியக்கும் அழகிய மாணவச் சிற்பங்கள் உருவாகட்டும். எந்தக் கல்லாக இருந்தாலும் உளிகள் மட்டும் சரியாகச் செயல்பட்டால் எதையும் சிற்பமாக்கிவிட முடியும்தானே?

கருத்துகள் இல்லை: