சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் நான்கைந்து
நாட்களாகவே வழியத் தொடங்கிவிட்டன
‘அன்னையர் நாள்’ கொண்டாட்டம். ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது
உயர்வில்லையே’ என்று ஜேசுதாஸ் ஒருபுறம் உயிருருக, ‘நானாக நானில்லை தாயே, நல்வாழ்வு
தந்தாயே நீயே’ என்று எஸ்.பி.பாலா மறுபுறம் கனிந்திட,
எதிர்புறம் ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவை வாங்க முடியுமா?’ ஹரிஹரன் குதூகலிக்க, ‘உயிரும் நீயே, உணர்வும் நீயே, உறவும்
நீயே, தாயே’ உன்னிக்கிருஷ்ணன்் ஊனுருக, எல்லோருக்குமாகச் சேர்த்து மொத்தத்ததில் ‘அம்மான்னா சும்மா இல்லடா..., அவ இல்லேன்னா யாரும் இல்லடா..’ இளையராஜா உணர்வோடு உள்லமெல்லாம் கரைய நாடெங்கும் இதைக் கேட்டவர் நெஞ்சமெல்லாம் தம் அம்மாக்களின் மீது கொண்ட அன்புச் சுடராகி விடிந்தது அன்னையார் நாள். இரண்டு தமிழ் வானொலி ஒலிப்பரப்பிலும் மாறிமாறி தாயை மிக உயரே தூக்கி வைத்து உச்சிமோந்து மறுநாளே சுவடில்லாமல் மறந்துவிட்டு அவரவரவர் வேலையைப் பார்க்கச் சென்றிடும் வகையறா மனிதர்தாமே நாம். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ ‘சொர்க்கம் தாயின் காலடிக்கும் கீழே’ என்ற நல்லுபதேசங்களும் அம்மாவைக் கட்டியணைத்து முத்தமிட்டு அணிச்சல் ஊட்டும் ஒளிப்படங்களும் முகநூல், புலனம் போன்றவற்றில் தலைகாட்டி அம்மாவின் மீதுள்ள அன்பை ஒரேநாளில் கடுமழை வெள்ளமென கொட்டித் தீர்த்துச் செல்லும். இது மேற்கத்திய முறைமை என்றாலும் இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தாயை மறக்காமல் இருக்க ஏதோ இதையாவது செய்கிறார்களே என்ற ஆறுதல் தவிர வேறொன்றும் பெரிதாகச் சொல்லத் தோன்றவில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிமயமும் தாயை மறவாமல் இதயக் கோயிலில் வைத்து வணங்கிப் போற்றும் மரபுதான் நம்முடையது. உண்மையில் தாய் என்பவள் யார்?. பத்து திங்கள் நம்மை சுமந்து தன்னுயிர் ஈந்து பெற்றவள் என்ற பெருமை மட்டுமா அவளுடையது. முற்றும் துறந்த துறவிகளும் துறக்க முடியாத உறவு தாயல்லவா?. ‘முந்தி தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்து’ கொல்லியிடும்போதும் மனம் வெதும்பிய பட்டினத்தார் தாயைத் துறக்க முடியாத துறவிதானே. உறவுகளில் ஒப்பற்ற இமயம் தாய்தான். நாம் இந்த உலகைக் காண வழியமைத்துத் தந்தவள் தாய்தானே. நமக்கு உடல் கொடுத்து பிற உறவையும் கொடுத்து உணர்வையும் ஊட்டியவள் தாய்தானே. தம் உதிரத்தைப் பாலாக்கி நம்மைச் சீராட்டி ஆளாக்கியவள் மட்டுமல்ல நாம் உறவாட தாய்மொழியும் தந்தவளாயிற்றே. தனது துன்பம் பொறுத்து கண்ணை இமை காப்பதுபோல நம் நலம் ஒன்றையே அல்லும் பகலும் சிந்தித்தவளாள் தாய் மட்டும்தானே. தான் அடையாத அத்தனை உயரங்களையும் தாம் தவமிருந்து பெற்ற பிள்ளை அடைய வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் தியானிக்கும் தெய்வம்தானே தாய். எத்தனையோ வேதனையையும் சோதனையையும் தனதாக்கிக் கொண்டு நமக்காக சந்தனமாய்த் தேய்ந்து என்றும் மணந்து கொண்டிருப்பது தாயாக மட்டும்தான் இருக்க முடியும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாய்தான் பிள்ளைக்காக வழிநெடுக கல்லிலும் முள்ளிலும் நடந்து தம் பிள்ளை பூப்பாதையில் நடந்து செல்வதற்கு காரணமாகிறாள். எந்த உயிரும் தவிர்க்க முடியாத புனித உறவு தாய். தாயை மதித்து அவள் சொல் தட்டாமல் வாழத்தான் தமிழில் அகரத்தை அறிமுகப்படுத்தும்போது ‘அம்மா’ என்ற சொல்லைக் கொண்டே தொடங்குகின்றோம். அம்மாவில் தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் தலையெழுத்து நல்லதாகவே இருக்கும் நம்பிக்கையில்தானோ?.அந்தப் புனித உறவையும் மறந்து போகும் பிள்ளைகளை என்னவென்று சொல்வது? எதிரும் புதிருமான இருவகைத் தாய்களைச் நான் சந்தித்திருக்கின்றேன். ஒரு தாய் பதினெட்டாண்டுகளுக்கு மேலாக எனக்கு நன்கு பழக்கமானவர். கோயில் நிகழ்ச்சிகளில் சிறுசிறு உதவிகள் செய்யும் அந்த அம்மாவைச் சந்திக்கும்போதெல்லாம் தாம் பெற்றெடுத்த மூன்று ஆண்பிள்ளைகளும் அவரை தனியே விட்டுச் சென்று இதுவரை திரும்பி வந்து பார்க்காத துயரம் அவர் முகத்தில் பளிச்சென்று தெரியும். மற்றொரு தாய் தாம் பெற்றெடுத்தப் பிள்ளை ஊனமுற்றது என உணர்ந்தும் கருணையில்லாமல் ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் வேறொரு புதிய ஆணோடு உடன்போக்கு சென்றவர். அந்தத் தாயை அலைந்து தேடி “பிள்ளை வேண்டுமா? அல்லது புதிய அவர் வேண்டுமா?” என்று காப்பகம் நடத்தும் மருத்துவ நண்பரும் நானும் கேட்டபோது சட்டென்று புதிய அவர்தான் வேண்டுமென கொஞ்சமும் தாய்க்குரிய கருணையில்லாமல் அவர் சொன்ன வார்த்தை கேட்டு அதிர்ந்தோம். இரண்டு நிலையிலும் இதயம் கனக்கிறது. தாய் வாழ்த்துக்குரியவர் மட்டுமல்ல என்றும் நம் வணக்கத்துக்குரியவர். தாய்மையுள்ளம் கொண்ட பெண்கள் அனைவர்க்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள். அன்பெனும் தெய்வம்தானோ உயிர்பெற்று நம்முன் அன்னையாக நிற்கிறது
?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக