திங்கள், 15 ஜூலை, 2019

கவிதைக் காதல்


ஒரு ரோஜா மலரின் அழகு அதன் பாகங்களின் மொத்தக் கூட்டல் மட்டும்தானா?. மண், நீர், காற்று, சூரிய வெளிச்சம் ஆகியவற்றின் இரசாயனக் கலவையால் ரோஜா மலர் செடியில் உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் அழகு என்பது அந்தக் கலவையிலா உள்ளது? எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தாலும் ரோஜாவின் அழகை உண்டாக்க முடியாதே. அதுபோலத்தான் இதயத்தில் நிலைபெற்ற கவிதைகளும் என்றும் வாடாத ரோஜா மலரைப் போன்றதுதான். உயிருள்ள கவிதை என்பது வெறும் சொற்களால் தொடுக்கப்பட்டதல்ல அதற்கும் மேலான மெய்ப்பொருள் நிறைந்தது. நெடுநாள் திறக்கப்படாத என் பழைய புத்தகக் கட்டுகளைப் பிரித்துப் பார்த்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். பழுப்பேறிய அந்தப் பழைய புத்தகத்தில் நான் என்றோ சின்னக் கையெழுத்தில் எழுதிய வைத்திருந்த கல்யாண்ஜியின் அலைச்சல் கவிதை வரிகள் கண்ணில் மின்னியது. இக்கரைக்கும் அக்கரைக்கும் பரிசல் ஓட்டிப் பரிசல் ஓட்டி எக்கரை என் கரை என்று மறக்கும் இடையோடும் நதிமெல்லச் சிரிக்கும் மீண்டும் மீண்டும் இந்த வரிகளைப் பலமுறை சிலாகித்து வாசித்ததில் அப்படியொரு சொல்லொணா சுகம் மனதுக்குள் ஊற்றெடுத்தது. மனவெளியெங்கும் பூமழை பொழிவதுபோல ஒரு சின்னக் குழந்தையின் குதூகலத்தில் மனம் துள்ளிக் குதித்தது. இப்போது ஒரு தரிசனத்தால் ஈர்க்கப்பட்டதுபோல இந்தக் கவிதையால் முழுதும் வசீகரிக்கப்பட்டேன். அன்றைய புரிதலில் வேறாகத் தெரிந்த கவிதை இன்றைய வாழ்வனுபவத்துக்கு முற்றிலும் நெருக்கமாகி வேறொரு பொருள் உரைத்தது. இந்தக் கவிதையை ஆராதிக்கும் தருணத்தில் எக்கரை என் கரை என்ற இரண்டு சொற்களுக்களுக்கான இடைவெளியில் நின்ற மெளனத்தில் கரைந்தும் என்னை மறந்தும் போனேன். அந்த இரு சொற்களுக்கிடையேயுள்ள மெளனம் எவ்வளவு ஆழமானது அழகானது. இடையில் நதிமெல்லச் சிரித்தது வாழ்வின் மாறுபட்ட பிணைப்பை ஆழத்தை அடையாளங்காட்டிச் சென்றது. நீர்க்குமிழியொன்று காற்றில் கொஞ்ச நேரம் பறந்தலைந்து திரிந்து உடைவதுபோல நிலையில்லாமை அந்த வரி உணர்த்துவதாகவே ஒரு பிம்பம் என்னுள்ளே தோன்றி மறைந்தது. மனம் சொற்களைக் கடந்து எதனெதனோடோ தொடர்புப்படுத்தி நீண்ட அகத்தாய்வும் செய்யத் தொடங்கிவிட்டிருந்தது. அதிலிருந்து விடுபட்டு திரும்புவதற்கே எனக்கு நெடுநேரமாகிவிட்டது. ஒரு சொல்லுக்குள் பயணம் செய்வதை கவிதை எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கிறது. கவிதையின்  தனிச்சிறப்பே அதை வாஞ்சையோடு தொடுபவரின் இதயத்தில் சிம்மாசனம் போட்டமர்ந்து மானசீகமாக உரையாடுவதுதான். சில சமயம் கவிதையின் ஒருசில சொற்கள் மனதோடு உரையாட தொடங்கிவிடும். சில கவிதைகள் வாசித்து முடித்துவிட்டப் பிறகு என்றோ ஒரு தருணத்தில் சட்டென்று உயிர்தெழுந்ததுபோல நம்மோடு உரையாடத் தொடங்கிவிடும். சில கவிதைகள் ஊதுவத்தியின் மணம் அறைமுழுதும் நிரம்பி இருப்பதுபோல என்றும் மனம் முழுவதும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஊதுவத்தி எரிந்து அடங்கினாலும் அதன் வாசனை அடங்காததுபோல படித்த அந்தக் கவிதையின் வாசனை பலகாலம் சென்ற பின்னும் மனத்தை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். எனக்குக் கவிதையைக் கொண்டாடுவதே உணர்வுமிக்க ஆன்மிக அனுபவம்தான். தமிழ் கவிதையெனும் பூக்காட்டில் அடர்ந்து செழித்திருக்கிறது. கவிதையைக் காதலிப்பதும் நந்தவனத்தில் தினம் தும்பியாய் மலர்களோடு பேசுவதும் ஒன்றுதானே?

கருத்துகள் இல்லை: