திங்கள், 15 ஜூலை, 2019

நீள்கிற கேள்விகளோடு?????


குழந்தைகள் மலர்கள், அவர்களைக் கசக்கிவிடாதீர்கள். குழந்தைகள் ஓவியங்கள், அவர்களைக் கலைத்து விடாதீர்கள். குழந்தைகள் கவிதைகள், அவர்களை வாசிக்கப் பழகிக்கொள்ளுங்கள். குழந்தைகள் கண்ணாடிகள், அவர்களை உடைத்துவிடாதீர்கள். குழந்தைகள் கற்க வேண்டிய புத்தகங்கள், அவர்களைக் கிழித்துவிடாதீர்கள் எங்கோ படித்த வரிகள் ஆசிரியர் கொண்டாட்ட மகிழ்ச்சியில் என்னுள் மீண்டும் உயிர்த்தெழுந்தது. கற்றலும் கற்பித்தலும் அன்பு சார்ந்தது என ஆழமாக நம்புபவன் நான். ஒவ்வொரு மாணாக்கன் மனதுக்குள்ளேயும் பயணம் செய்து அவனவன் தெய்வ குணத்தை அவனவனே கண்டறியச் செய்யும் மாபெரும் வித்தையைக் கற்றுக் கொடுப்பவர்தான் ஆசிரியர். முன்பெல்லாம் ஒருநாள் மாணாக்கர் பள்ளிக்கு வரவில்லையென்றாலே வீட்டுக்குத் தேடிச் சென்று காரணத்தைக் கண்டறிந்து வரும் ஆசிரியர்கள் அதிகம் இருந்தனர். இன்று அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கற்றல் கற்பித்தல் நடந்தால் சரி என்று இயந்திரகதியாக அரங்கேறுகிறது. மாணவர் ஆசிரியர்க்கான உறவில் இடைவெளி அதிகரிப்பது கற்றலுக்குப் பெருந்தடை. தாயின் அரவணைப்பைப் பிரிந்து பள்ளிக்குப் போகிற புதிதில் குழந்தைகள் கதறிக் கதறி அழுவதைப் பார்த்திருப்போம். பின்னர் பள்ளிக்கூடச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிப்போய் ஆசிரியரோடு இணைந்துவிடுகிறது. தம் தாயிடம் பேசுவதைப்போல நம்பிக்கையோடு ஆசிரியரிடமும் பழகுகிறது. இப்போது அந்தக் குழந்தைக்கு இரு தாய்மார்கள் கிடைத்திருக்கிறார்கள். மெய்யாக இன்றைய பள்ளிக்கூடங்கள் இப்படி இயங்குகின்றனவா?   இதுவரை பள்ளிக்கூடத்தையும் ஆசிரியர்களையும் புனித பிம்பம் தந்து பொது புத்தியில் பார்த்த நமக்கு சில கயவர்களை காண்பது மனதுக்குச் சங்கடமாகத்தான் இருக்கும். இன்றைய இயந்திரத்தனமான கல்வி முறையில் மனமிழந்த ஆசிரிய எந்திரங்கள் கட்டவிழ்க்கும் வன்முறைகள் மறைப்பதற்கில்லை. அப்பழுக்கில்லாத மாணாக்கரிடம் கேட்டால் முதலில் தங்கள் தேவையெல்லாம் வன்முறைகள் இல்லாத பள்ளிக்கூடங்களும் வெஞ்சினம் இல்லாத ஆசிரியர்களும்தான் என்பர். சுடர்விட்டு எரிய வேண்டிய மாணாக்கர் அறிவு ஒளியை பிரம்புகளால் அணைத்துவிடும் ஆசிரியர்களை மெல்ல இந்தக் கல்வி முறையிலிருந்து களையெடுப்போம். தொடக்கப்பள்ளிகளிலோ இடைநிலைப்பளிகளிலோ ஏன் உயர் கல்விக் கூடங்களிலோ ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட அவமானப்படுத்தப்பட்ட கேலி செய்யப்பட்ட மாணவர்களிடம் மனம்விட்டு நீங்கள் பேசியதுண்டா?. அவர்கள் ஆசிரியர் மீது கட்டவிழ்க்கும் குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் மனத்தை உலுக்கிப் போட்டுவிடும். படிப்பிலும் தோல்வியுற்றவர்களாகி பிரச்சனைக்குரிய மாணவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டு, நண்பர்களாலும் கேலி செய்யப்பட்டு, பள்ளிச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அவர்களை ஒரு நாளாவது அழைத்து அன்புடன் பேசியதுண்டா?. தவற்றை அன்புடன் உணர்த்தாமல் தண்டிக்க மட்டுமே தெரிந்த ஆசிரியர்களின்மீது கொண்ட வெஞ்சினத்தால் கழிப்பறைகளில் தாறுமாறாகக் கிறுக்கல்கள் செய்யும் மாணவர்களின் மனநிலையை அறிந்ததுண்டா? தீர விசாரிக்காமல் சட்டென்று மனம் நாணும்படி கடிச்சொற்களால் அர்ச்சிக்கும் ஆசிரியர்களைப் பற்றிய அவர்களின் எண்ணத்தை கேட்டறிந்ததுண்டா? இன்னும் இன்னும் நீள்கிற கேள்விகளோடு நிற்கிற அவர்களுக்கு நிறைவளிக்கும்  வகையில் சொல்ல பதில்கள் என்னிடமில்லை?

கருத்துகள் இல்லை: