திங்கள், 15 ஜூலை, 2019

அறிவை வென்றுவா


 சென்றுவா மகனே சென்றுவா, அறிவை வென்றுவா மகனே வென்றுவா,..அறிவுலகம் உன்னை அழைக்கின்றது இந்த மகாகவி காளிதாஸ் படப்பாடல்தான் இதயத்தில் ஒலிக்குந்தோறும் என் மனத்திரையில் தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் நிழலுருவே சித்திரமாகத் தோன்றி மறையும். இன்று மின்வெளியில் பலவாறாகத் தம் சுயத்தையும் படோடபத்தையும் பிதற்றித் திரியும் இளையர்களுக்கு மத்தியில் கடந்த தலைமுறை எப்படியெல்லாம் அறிவைத் தேடியிருக்கிறது என்பதற்கு தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் வாழ்வும் அவரின் குருவான தமிழ்க் கொண்டல் மகாவித்வான் தெ.பொ.மீனாட்சிசுந்தரத்தின் வாழ்வும் சிறந்ததொரு எடுத்துக்காட்டு. சீண்டுவாரற்று பரண்களிலும் கோயில்களிலும் கரையான்களுக்கு இரையாகிக்கொண்டிருந்த  இலக்கியச் சுவடிகளையெல்லாம் ஊரூராகக் கால் கடுக்க நடந்து அலைந்து தேடித் தேடி உடல் களைத்தாலும் கிஞ்சிற்றும் மனம் சோராமல் தம்வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணி செய்தவரை நாம் மறப்பது அறம்தானா?. ஓலைச்சுவடியில் சிதிலமடைந்திருந்த படைப்புகளையெல்லாம் பொன்னாகப் பொறுக்கி எடுத்து தம் சொத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டு அச்சுக்கூடத்தில் உயிர்பித்தவரை நாம் மறந்துவிட்டால் நம்மைவிட நன்றிகெட்டவர் யாருளர்?. தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் எனது சரித்திரம் ஒவ்வொரு தமிழரும் படித்து பின்பற்ர வேண்டிய காவியம் என்பேன். கண்கள் பழுதுபட்டபோதும் குவியாடியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு எழுத்தாகப் படித்துப் படித்து ஆயுள் அழித்த அந்தத் தியாகத்திற்கு ஈடாக வேறில்லை .அது ஒரு புறமிருக்க தமிழ்த்தாத்தாவின் குருவான தமிழ்க் கொண்டல் மகாவித்வான் தெ.பொ.மீயின் தமிழ்ப்பணி நெஞ்சை உருக்குகிறது. இளமையில் வறுமை வாட்டியெடுத்தாலும் தமிழ் கற்கும் வாட்டம் சிறிதும் அவரிடமில்லை. தாம் கற்க வேண்டிய இலக்கணச் சுவடியொன்று ஒரு பரதேசியிடம் இருப்பதை அறிந்து அவரிடம் பலமுறை கெஞ்சி கேட்டும் கிடைக்காமல் தவிக்கிறார். பணம் இருந்தால் மட்டுமே அந்தச் சுவடியைத் தருவதாக தீர்க்கமாகக் கூறும் அந்தப் பரதேசியிடம் நாளும் மன்றாடி கல்லும் கனிந்துருகும்படி  கெஞ்சக் கெஞ்ச பரதேசியின் மனம் இரங்குகிறது. “சரி, பணம் இல்லையென்றால் பரவாயில்லை; நான் சொல்கின்ற வேலை செய்ய முடியுமா?” என்று அதிகாரத் தொனியோடு பரதேசியின் குரல் ஒலிக்கிறது. “தங்கள் உத்தரவு” என்று நெடுநாள் சுவடியைக் காணும் ஆவலுடன் காத்திருந்த தமிழ்க் கொண்டல் சொல்ல “நாளையிலிருந்து எனக்குப் பதிலாக இந்தப் பிச்சைப் பாத்திரத்தை வீடு வீடாக தூக்கி வர வேண்டும். அன்னக்காவடி பாத்திரத்தில் பிச்சையெடுத்து வந்து கொடுத்தால்தான் இந்தச் சுவடியைத் தருவேன்” என்று பரதேசி எதிரொலிக்க “அப்படியே ஆகட்டும்” என்று பிச்சையெடுத்து அந்தச் சுவடியை மீட்டார் தமிழ்க் கொண்டல் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கே நன்று என்ற நறுந்தொகையின் பாடலுக்கு உண்மையாகப் பொருள்படும்படி வாழ்ந்தவர் தெ.பொ.மீ. நெஞ்சை சிறு வயதிலிருந்தே நூல்கள்தான் அறிவை வழங்கும் தோழன்; ஆசான்; வழிகாட்டி என்றெல்லாம் ஆசிரியர்கள் பெரியவர்கள் சொல்கேட்டு வளர்ந்த தலைமுறை நாங்கள். தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக நம் முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைத்தாலே நெஞ்சம் உருகும். அவர்கள் பெருமுயற்சியோடு திரட்டித் தந்த பனுவல்களை இன்றைய தலைமுறை படித்து சமூகத்துக்கு அதன் கருத்துகளைப் பரப்ப வேண்டும். எவ்வளவுதான் இணையவெளியில் படித்துப் படித்து மகிழ்ந்தாலும் நூல்களை கையில் குழந்தைபோல் எந்தி சுமந்து நெஞ்சில் அணைத்தவாறு பூரிப்பதிலுள்ள சுகானுபவம் சொல்லுக்குள் சிக்காது. இன்றைய தாய்மொழி நாளிலாவது தமிழர்களான நாம் நல்ல தமிழ் நூல்களைத் தேடிப் பிடித்து படிக்கும் பழக்கத்தை வேள்வியாகக் கொள்வோமா?

கருத்துகள் இல்லை: