செவ்வாய், 15 நவம்பர், 2016

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளில் வெளிப்படும் அங்கதம்

தமிழ்மாறன் பலராம்
ஆசிரியர் கல்விக் கழகம்,
சுல்தான் அப்துல் அலிம் வளாகம்,
08000 சுங்கை பட்டாணி, கடாரம்


1.      முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக்கால தமிழிலக்கிய வரலாற்றில் விடிவெள்ளியாய் என்றும் சுடர்விடுபவர் பாவேந்தர் பாரதிதாசன். வேலாயுதத்தாலும் சூலாயுதத்தாலும் சாதிக்க முடியாத சாதனைகளைத் தம் கவிதைகளாலும் ஏற்றமிகு பேச்சுகளாலும் சாதித்தவர் பாவேந்தர். அவருடைய ஆழ்ந்த சிந்தனையில் தமிழ் உணர்வும் தமிழ் இன மீட்சியும் தமிழ்நாடு உயர்ச்சியுமே நீக்கமற நிறைந்திருந்தது.

பாவேந்தரின் கவிதையாற்றலும், கற்பனை ஊற்றும், கருத்துக் குவியலும், கற்கண்டுச் சொல்வளமும் பரவலாகக் கவிதைகளில் வெளிப்படுவதை அறிந்திருந்தாலும் மிகநுட்பமாக துள்ளுநடையில் அங்கத உத்தியால் அவர் உணர்த்துவது எளிதில் நம் நெஞ்சையள்ளும். கவிதைகள் சுவையாக அமையக் கவிஞர்கள் உவமை, உருவகம், முரண், குறியீடு, படிமம், அங்கதம் எனப் பல உத்திகளைக் கையாளுவார்கள். எல்லா உத்திகளையும் சிறப்புடன் ஆளும் பாவேந்தர் கேலி, கிண்டல், குத்தல், எள்ளல் என்னும் அங்கதச் சுவையோடு எழுதிய கவிதைகளை இவ்வாய்வில் காணாலாம்.

பாவேந்தர் கவிதைகளின் பாடுபொருள் பெரிதல்ல; எழுதிய கவிதைகள்தான் பெரிது. எடுத்துக் கொண்ட பொருள் பெரிதல்ல; எழுதிய முறைதான் பெரிது. எதைப் பற்றி எழுதினார் என்பதைவிட எப்படி எழுதினார் என்பதையே இவ்வாய்வு குவியமாக கொள்கிறது. அங்கதச் சுவைபட சமுதாயக் குறைபாடுகளை, மனித இயல்புகளைப் பாடுவது பாவேந்தருக்கு கைவந்த கலையாக இருப்பதை அறிய முடிகிறது. இயல்பாக பாவேந்தர் அங்கததில் சிறந்திருப்பது அவருடைய சொல்லாற்றலால் விஞ்சி நிற்கிறது.

2.         அங்கதம் – விளக்கம்
அங்கதம் இரு வகைப்படும் என்பதை தமிழின் மூத்த நூலான தொல்காப்பியம் கூறுகிறது. அங்கதமானது ‘வெளிப்படையாகக் கூறுதல்’, ‘கரந்த மொழியில் கூறுதல்’ என்பதை தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது.
“அங்கதம்தானே அரில்தபத் தெரியின்
செம்பொருள், கரந்தது எனைரு வகைத்தே”
ஒரு சமூகத்தில் காணப்படும் குறைபாடுகளை நேரிடையாக நெஞ்சில் உறுத்தும் நோக்கில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் கூறுதலே அங்கதமாகும். இச்சாரத்தின் அடிப்படையில் ‘நகைச்சுவை தோன்றக் கூறுதல் இன்புறத் தக்கதாகும்’ என்று பண்டிதமணி மு.கதிரேசனார் அங்கதத்திற்கு தரும் விளக்கமும் கவனிக்கத்தக்கது. “அங்கதம் என்பது கத்தியைப்போல வெட்டு ஒன்று துண்டு இரண்டு என இருக்க வேண்டுமேயன்றி மாறாக ரம்பத்தைப்போல இழுத்துக்கொண்டு இருக்கக்கூடாது” என்று ஆங்கில அகராதி குறிக்கிறது.

பாவேந்தர், சமுதாய வீதிகளில் மலிந்து கிடக்கும் குறைபாடுகளைச் செப்பனிடுவதற்கு அங்கதத்தை நல்லதொரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார். சத்தான மொழியில் உணர்ச்சித் துடிப்போடு அறிவார்ந்த மெல்லிய நகைச்சுவை உணர்வுத் தெறிக்கும் வகையில் பாவேந்தர் அங்கதக் கவிதைகளைப் படைத்துள்ளார். தம் கருத்துக்கு வலிவூட்ட தெளிவாக, எளிமையாக, இனிமையாக விளங்கும் என்பதாலேயே அங்கதத்தைப் போர்வாளாகக் கையாண்டார் பாவேந்தர்.

3.     தமிழ்ச் சமுதாயத்தில் அங்கதம்
பொதுவாக சமுதாயத்திற்குத் தேவையான சமுதாயத்தை வளர வைக்கக்கூடிய, விழிப்புணர்ச்சி ஏற்படுத்தக்கூடிய கொள்கையையே மூச்சாகக் கொண்டு பாவேந்தர் கவிதைகள் இயற்றியுள்ளார். தமிழ்ச் சமுதாயம் முன்னேறவும், சமதர்மம் தழைக்கவும், சாதி மதங்கள் அழியவும் தீவிரமாகக் கவிதைகளால் கனல் மூட்டியவர் என்பது அனைவருக்கும் வெள்ளிடைமலை. பாவேந்தர் அங்கதமாக சுட்டியவற்றைக் கூர்ந்து நோக்குவோம்.

3.1 கடவுள் கொள்கையில் அங்கதம்
பாவேந்தர் இறை மறுப்புக் கொள்கையை தம் இறுதி நாள்வரை உறுதியாகக் கடைப்பிடித்து வந்தார் என்பதை அறியலாம். தமது குருவான பாரதியாரே
                        “ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
டாமெனல் கேளீரோ”
என்று அங்கதச் சுவையோடு பாடியிருப்பதை வழிகாட்டியாய்க் கொண்டு இலக்கிய நயன் கருதியும் சமுதாயப் பயன் கருதியும் நுட்பமாகக் கையாண்டார். ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் நடக்கும் வாதத்தில் என்றும் நடுநின்ற நாயகமாக விளங்கும் கடவுளை ‘கடவுள் மறைந்தார்’ எனும் தலைப்பில் அங்கத உத்தியால் படம் பிடித்துக் காட்டுகிறார்.
                        “இல்லை என்பார்கள் சிலர் உண்டென்று சிலர் சொல்வார்
                        எனக்கில்லை கடவுள் கவலை…..
                        கனமான கடவுளே உனைச்செய்த சிற்பி எவன்?
                        காட்டுவீர் என்றவுடனே கடவுளைக் காண்கிலேன்”
மேற்கண்ட கவிதையில் பாவேந்தர் அங்கத உணர்ச்சியோடு தமது இறைமறுப்புக் கொள்கையை சொல்வது நங்கூரச் சான்றாகும். மேலும் அவர் ‘கடவுளுக்கு வால் உண்டு’ என்னும் கவிதையில்
                        “மாநிலம் பொசுங்குமுன் கடவுளுக்குத் தொங்கும்
                        வாலையடி யோட அறுத்தல்”
எண்ணெயில் இடப்பட்ட கடுகுபோல வெடித்தாலும் அங்கத உத்தியில் பலரும் நம்பும் கடவுளால்தான் நாடு மோசமானது என்று கிண்டலடிப்பது புலனாகிறது.

3.2    உழைப்பாளர் வர்க்கம் - அங்கதம்
பாவேந்தர் வாழ்ந்த காலத்தில் சமுதாய அவலங்களை அங்கதச் சுவையோடு சித்தரிப்பதில் அவருக்குத் தனி ஈடுபாடு இருந்தது. பாவேந்தர், உழைக்கும் தொழிலாளி வர்க்கம் உயர வேண்டுமென்பதில் தீரா ஆர்வம் கொண்டிருந்தார்.
“காண்பதெலாம் தொழிலாளி செய்தான் அவன்
காணத் தகுந்தது வறுமையாம் – அவன்
பூணத் தகுந்தது பொறுமையாம்”
ஏழ்மையை ஒழித்து சமத்துவ சமுதாயம் மலர புரட்சிக் குரல் கொடுத்தார். தொழிலாளிகளின் உழைப்பை அட்டைபோல் உறிஞ்சும் ஆதிக்க மனப்பான்மைக் கொண்ட முதலாளி வர்க்கத்தினருக்கு பாவேந்தர் கவிதைகளையே சாட்டையடிகளாக விளாசுகிறார்.

ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட அடிமைப்பட்டு அல்லலுற்ற உலக உழைப்பாளிகளின் உற்றத் தோழனாக உருமாறி தம் பாட்டுப் பனுவல்களால் நடை ஓவியங்களாய்த் தீட்டியுள்ளார்.
“வலியோர்சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா
மகராசர்கள் உலகாளுதல் நிலையாமெனும் நினைவா?”
என்று அங்கதத்தோடு கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடாமல் உழைப்பவர் துணிவோடு எதிர்க்க போர்வாளையும் தருகிறார்.
“சிற்சிலர் வாழ்ந்திட பற்பலர் உழைத்துத்
தீர்க எனும் லோகமே – அது
அற்றொழிந்தாலும் நன்றாகுமே”
எனக் கொந்தளிக்கிறார். ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற அவரின் குருநாதர் பாரதியின் அதே குருதி கொப்பளிக்கும் அறச் சீற்றம் பாவேந்தருக்குள்ளும் கனன்றது தெரிகிறது.
                        “மாடாய் உழைப்பார்க்கு வீடில்லை சோறில்லை
நாடோறும் அங்கம் வளையம் - ஆண்டை
மனைவிபோட மட்டும் தங்க வளையல்”
வெயில், மழை, புயல், பனி என எக்காலத்தும் உழைப்பையே உரமாக தந்து உடலாலும் உயிராலும் தேய்ந்தழியும் உழைப்பாளிகளின் உடல் கேள்விக்குறியாய் வளைந்துவிட்டது. ஊசி குத்த நிலமுமின்றி கொத்தடிமைபட்ட உழைப்பாளிகளின் வியர்வைத் துளிகளை நாளும் திருடி பொன்னால் வளையல் போட்டு மினுக்கும் முதலாளிமார்களின் மனைவிகளையும் எள்ளி நகையாடுகிறார்.


3.3 முதலாளித்துவம் - அங்கதம்
உழைப்பாளியின் சுகபோக வாழ்வை உண்டு கொழுத்து வாழும் இந்த உழைப்புத் திருட்டுக் கும்பலை நோக்கி,
“உங்களின் சொத்தை ஒப்படைப்பீரே – எங்கள்
உடலின் இரத்தம் கொதிப்பேறு முன்பே”
என்று புலிப்பாய்ச்சலால் கவிதைக் குரலால் ஓங்கி உலகமறிய ஒலிக்கிறார். முதலாளித்துவம் இந்த எச்சரிக்கையைப் புறக்கணித்தால்
“ஓடப்பரா யிருக்கும் ஏழையப்பர்
 உதையப்ப ராகிவிட்டால் ஓர் நொடிக்குள்
 ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
 ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ’
என அநீதிக்கு எதிராக உலகப்பனுக்கு மட்டுமல்ல உலக உழைப்பாளிகள் அனைவருக்கும் அங்கதத்தோடு போர்வாள் சுழற்றவும் கற்றுத் தருகிறார். உடலுழைப்பில்லாத செல்வர் உலகை ஆண்டுலாவலும் உழைக்கும் வர்க்கம் என்றென்றும் இருளிலே அமிழ்ந்து அறியாமையிலும் அடிமைத்தனத்திலும் அடக்கி வைப்பது மானுடத்திற்கு எதிரான பெரும் சூழ்ச்சிதான் என்று கனல் தெரிக்க குமுறுகிறார்.


3.4 சாதியம் - அங்கதம்

சாதி என்னும் நோய் அன்று முதல் இன்றுவரை மக்களை அலைக்கழித்து வருகிறது. தமிழ்ச் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பாவேந்தர் தம் வாழ்நாள் முழுதும் தமது கவிதைகளால் சாதிக் கொடுமையை எதிர்த்துக் கவிதைகளால் குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார். தமது நகைச்சுவை ததும்பும் அங்கதக் கவிதைகளால், இன்றைய அழுகி வரும் சமுதாயத்தின் புற்றுநோயான சாதியத்தை அங்கதத்தால் குத்திக் கிழிக்கிறார்.
                        “இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி
                         இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”
சாதிகள் மனிதன் அடிமைப்படுத்த தமக்குத்தானே கற்பித்துக் கொண்டவை. சாதியை வெறுத்து பலர் இதுகாறும் பாடினாலும் அதன் கொடுமை இன்றுவரை சமுதாயத்தில் அடங்கியபாடில்லை. சாதி என்ற சொல்லே தமிழ்ச் சொல்லன்று என்பது பாரதிதாசன் கருத்து.
                        “சாதிமதம் தமிழ் இல்லை – அந்தச்
                         சாதி மதத்தைத் தமிழ் கொள்வதில்லை”
என்று வருண பேதத்தை ஏற்படுத்தும் சாதியை வாழ்நாள் முழுதும் எதிர்த்தார். தமிழர்கள் அறிவுபூர்வமாக சிந்திக்கத் தவறியதால்தான் இந்த ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன என்பதை மனம் மிக நொந்து சொல்கிறார் பாவேந்தர்.


3.5 பெண் – அங்கதம்
காலங்காலமாகப் பெண் பலவீனமானவள் என்று ஆண்களால் அடக்கி வைக்கப்பட்டிருப்பதை தகர்க்க முயன்றவர் பாவேந்தர். ‘துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்து தொண்டு செய்வாய்’ என்று பெண்ணுலகைத் தூண்டினார். அக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் பெண் கல்வியின் இன்றியமையாமையைக் ‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்; அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை! கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி; அங்கே நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்?’ என்று முழங்குகிறார். பெண்கல்வியின் அவசியத்தை அங்கதமாகக் கூறுகிறார்.
                        “கற்பது பெண்களுக்கு ஆபரணம் – கெம்புக்
                         கல்வைத்த நகை தீராத ரணம்”
நகைமீது பெண்கள் பற்றுக் கொள்வதைவிட அறிவைத் தெளிவாக்கும் கல்வியைப் பெண்கள் பற்றத் தூண்டுகிறார்.

தொடர்ந்து பாவேந்தர் குழந்தை மணம், பொருந்தா மணம், கைம்மைக் கொடுமைகள் என்று பெண்ணுக்கு நேர்ந்த அத்துணை இன்னல்களையும் அங்கதத்தோடு கவிதைகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.
                        “கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே – இங்கு
                         வேரிற் பழுத்த பலா”
கணவன் இறந்தபின் கைம்மை என்னும் பெயரில் பெண்ணின் தலையில் ஒரு துன்பச் சுமையை ஏற்றி வைக்கும் சமூகத்தின் கொடுமை மாறவேண்டும் என்று விழைகின்றார்.

  1. முடிவுரை
அழுத்தமும் ஆழமும் வாய்ந்த கருத்துப் புலப்பாட்டிற்காக பாவேந்தர் கையாண்ட அங்கத உத்தி செப்பமாக விளங்குகிறது. தமிழ்ச் சமுதாயம் எப்படி இருக்கிறது, அது எப்படி இருக்க வேண்டும் என்ற இரண்டிற்குமிடையே உள்ள இடைவெளியைக் குறித்துச் சிந்திக்கும் வகையில் பாரதிசானின் கவிதைகளில் அங்கதச் சுவை கூர்மையாகவும் கேலியாகவும் எள்ளலாகவும் மேன்மையாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் அங்கத உத்தியைக் கையாண்டுள்ளதைப் பரவலாகக் காண முடிகிறது.

மேற்கோள் துணைநூல்கள்
நச்சினார்க்கினியன், (1998). பாரதிதாசன் ஒரு திறனாய்வு, சென்னை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
வேலுசாமி, (2004). பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு. சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்
அமுதவல்லி, (2002). பாவேந்தர் பாநலம், சென்னை: பூங்கொடி பதிப்பகம்
நிர்மலா மோகன், (2013). ஆய்வுக் களஞ்சியம் – III, சென்னை : வானதி பதிப்பகம்

முரசு நெடுமான், முனைவர். (2008). பாரதிதாசன் கண்ட தமிழ், கோலாலம்பூர்: தமிழர் திருநாள் 2008 ;  விழா மலர்

பாரதிதாசன் சிந்தனைகள்:-
பாரதியார் காட்டிய பாதையிலா?
தந்தை பெரியார் சொன்ன நெறியிலா?


தமிழ்மாறன் பலராம்
ஆசிரியர் கல்விக் கழகம்,
சுல்தான் அப்துல் அலிம் வளாகம்,
08000 சுங்கை பட்டாணி, கடாரம்



1.0 முன்னுரை
மகாகவி பாரதியார் தமிழினத்துக்கு விட்டுப்போன மகத்தான மூன்று சொத்துக்களானவை குயில்பாட்டு’, கண்ணன் பாட்டு’, பாரதிதாசன் என்பார் எழுத்தாளர் கல்கி. தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் இன்றியமையாதத் திருப்புமுனையாகவும் தமிழரை அடிமைப்படுத்தும் ஆரியத்தை வேரறுக்கும் போர்வாளாகவும் சமூகக் கொடுமைகளை பொசுக்கும் புரட்சித் தீயாகவும் தமிழையும் தமிழனையும் மீட்டெடுக்க ஆயுள் முழுவதும் போராடியவர் பாவேந்தர் பாரதிதாசன் என்பது உலகறிந்த உண்மை.

தம் உயிர்மூச்சின் இறுதி நிமிடம்வரை பாவேந்தரின் உள்ளம் தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு என்றே சிந்தித்தது. துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் தடைகளைக் கண்டு அஞ்சாமலும் நெஞ்சையள்ளும் இலக்கியப் படைப்புகளை எழுதிக் குவித்தவர் பாவேந்தர். கொல்லும் ஆயுதங்களால் சாதிக்க முடியாத எத்தனையோ சாதனைகளைத் தம் ஏற்றமிகு கவித்திறத்தால் சாதித்து சரித்திரம் படைக்கச் செய்தவர் பாவேந்தர். அவருடைய  வாழ்வின் நோக்கையும் பயனையும் தெள்ளிதின் ஆய்ந்து அவர் சென்றது பாரதி காட்டிய வழியிலா? தந்தை பெரியார் சொன்ன நெறியிலா? என்பதை பகுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

2.0 காலப்பெருவெளியில் இருபெருங்கவிகள்
காலத்தின் படைப்பே கவிஞர் எனும் கருத்தையொட்டி முதலில் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள தொடர்பை ஆராய்வோம். பாரதியும் அவரைவிட ஒன்பது வயது இளையவரான பாரதிதாசனும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் பிறந்தோராவர். பாரதி இப்புவியில் வாழ்ந்த காலம் வெறும் முப்பதொன்பது ஆண்டுகள் மட்டுமே (11.12.1882 - 11.9.1921). இருபதாம் நூற்றாண்டின் முன்காலப் பகுதியிலே நம்மைவிட்டு மறைந்தவர் பாரதி. தாம் மனத்தால் சிலாகிக்கும் குருவான பாரதியின் பிரிவை
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா!
             காடு கமழும் கற்பூரச் சொற்கோ!...
             திறம் பாட வந்த மறவன்; புதிய
                        அறம் பாட வந்த அறிஞன்... (இளங்கோ,1998,பக்கம் 12)

வைரவரிகளலால் வாழ்த்திட்ட பாரதிதாசனோ இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதிவரை எழுபத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் (29.4.1891 - 21.4.1964). சுருங்கக்கூறின் பாரதியைவிட பாரதிதாசன் இம்மண்ணில் ஏறத்தாழ இருமடங்கு காலம் நீடித்து வாழ்ந்தவர்.

நாட்டுப்புறப் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்ட பாரதி பின்னாளில் நாட்டு விடுதலை போராட்டத்தில் தம்மை கரைத்துக் கொண்டார். அந்த உந்துதலால் போராட்ட வீரரான திலகரைத் தெய்வமாகப் போற்றியதோடு பின்னர் மகாத்மா காந்தியையும் மதித்ததன் விளைவாக பாரதி பெரும் தேசியக் கவிஞராய் ஒளிரலானார். பாரதியாரின் பாடல்கள் ஸ்தேசகீதங்கள் என்ற பெயரில் 1908ல் அவராலேயே வெளியிடப்பட்டது.

பாரதியார் புதுவையில் வாழ்ந்த (1908 – 1918) பத்தாண்டு காலம் மட்டும்தான் பாரதிதாசன் இவரோடு பழக வாய்ப்பிருந்திருக்க வேண்டும். அதாவது பாரதிதாசன் தமது 17ஆம்  அகவை முதல் 27 ஆம் அகவை வரையில்தான் பாரதியோடு பழகியுள்ளார் (அமுதவல்லி,2002, பக்கம் 23). பாரதியாரோடு பழகத் தொடங்கிய அச்சந்திப்பின் பெரும்பயனே பாரதிக்கு ஒரு பாரதிதாசன் கிடைத்தார்; தமிழை மீட்டெடுக்கும்  ஒரு பாவேந்தன் உதயமானார்.
பாரதி பாடென்று சொன்னவுடன் பாடிய மறவன்,
             பாரதி தீரனென்று பாரதி புகழ்ந்த புலவன்
மேற்கண்டவாறு கலைஞர் கருணாநிதி தம் நெஞ்சில் பதித்த பாரதிதாசனை நெஞ்சம் நிறைய கொண்டாடுகின்றார். (சு.சுனந்தாதேவி,1989, பக்கம் 87)

3.0 தமிழுக்குக் கிடைத்தப் பெரும்பேறு
வரலாற்றில் இவ்விருவரும் சந்தித்ததே தமிழர்க்குக் கிடைத்த பெரும்பேறு என்பேன். பாரதியைச் சந்தித்ததால் கனக சுப்புரத்தினமாக இருந்தவர் பாரதிக்கு தாசனாக மாறினார்.
            யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
 இனிதாவது எங்கும் காணோம்
தமிழ்மொழியின் ஈடு இணையற்ற இனிமையை உலகுக்கு உரக்கச் சொன்னவர்களுள் முன்னவராக பாரதி நின்றால்                                
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
                         தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
என்று தமிழை உயிரில் வைத்துப் தம் பிறவிக்குத் தாயாகப் போற்றி வாழ்ந்து காட்டியப் பின்னவர் பாரதிதாசன். ஆனாலும் பாரதியாரை விரும்புபவர் பலருள் உள்ளூர பாரதிதாசனை விரும்புவதில்லை அதேபோல பாரதிதாசனைப் போற்றுபவர் பலருள் பாரதியாரை முன்னிறுத்திக் காட்டுவதில்லை எனும் போக்கு பெரும்பாலோரிடம் நிலவுவதை இன்றுவரை  உணரமுடிகின்றது. (சு.சுனந்தாதேவி,1989, பக்கம் 102) விதிவிலக்காக இவ்விருவரையும் ஒன்றுபோல கொண்டாடிய அண்ணா, மு.வ.போன்ற ஒருசில அறிஞர்களை இங்கு நினைவுகூர்ந்தாலும் அந்தக் குறுகியப் பார்வை இன்றுவரை நீறுபூத்த நெருப்பாய் உள்ளதை மறுக்கவியலாது. (சு.சுனந்தாதேவி,1989, பக்கம் 105) அதற்குக் காரணம் இவ்விருவருக்குமிடையே காணப்பட்ட சிந்தனைப் போக்காகும்.

3.1 தேசியமும் திராவிடமும்
நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் இனப்பற்றிலும் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையில் மிகுந்த வேறுபாடு இருந்தது. பாரதியாரிலிருந்து தொடங்கிய சிந்தனைப் பாங்கு காலம் செல்லச் செல்ல பாரதிதாசனுக்கு வேறொரு பார்வையையும் போக்கையும் அன்றைய தேவைக்கேற்ப மாற்றியமைத்திருப்பதை நாம் ஒப்புக் கொள்ளதான் வேண்டும். பாரதியிடமிருந்த இந்தியா என்ற ஒட்டுமொத்த தேசிய உணர்வு பிற்காலத்தில் இனமீட்பின் எதிரொலியாக பாரதிதாசனிடம் திராவிடச் சிந்தனையாக உருவெடுத்தது. பாரதி நாடறிந்த தேசியக் கவிஞர் ஆனால் பாரதிதாசனோ தமிழினத்தைக் காக்கும் திராவிடக் கவிஞர் ஆனார் (இனியன்,2009, பக்கம்37). இந்நிலைதான் அவ்விரு பெருங்கவிஞர்களை ஏற்றுப் போற்றுவோரின் வேறுபாட்டிற்கு முக்கியக் காரணம் எனலாம். பாரதி பாரதத்தையே முழுமையாகப் பார்த்தவராதலால் இந்திய ஒருமைப்பாட்டு மறுமலர்ச்சி தேசியத் தமிழ்க் கவிஞராய் உருவெடுத்தார். பாரதிதாசனோ தமிழகமே பெரிதாகக் கண்டதால் முதல் திராவிடப் பிரிவினை மறுமலர்ச்சி கவிஞராய் எழுந்தார்.

சாதிகள் இல்லையடி பாப்பா- குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் என்ற பாரதியையே அவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் திராவிடச் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட சிலர் அவரைப் புறந்தள்ளினர். பாரதியார் பார்ப்பனக் குலத்தைச் சார்ந்தவர் என்பதாலும் திராவிட இன வீழ்ச்சிக்கு அக்குலமே காரணமென்ற திராவிட எண்ணத்தாலும் ஒருவித ஒவ்வாமையை உள்ளூர பாரதிதாசன் விரும்பிகள் ஒருசிலர் வெளிப்படுத்தினர்(சு.சுப்பிரமணியன்,1990,பக்கம் 61).  பாரதி ஆங்கில ஆட்சியின் பிடியில் சிக்குண்டிருந்த இந்தியாவை பரவலாகப் பார்த்தார். பின்னாளில் பாரதிதாசனுக்கு திராவிட ஏற்பும் நாத்திகச் சிந்தனையும் ஏற்பட்டதற்கு அவர் வாழ்ந்த பிரஞ்சு ஆட்சிக்குட்பட்ட புதுவையும்கூட ஒரு காரணமாக இருக்கலாம் எனஎண்ண இடமுண்டு. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்றையும் மூச்சாகக் கொண்ட பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட புதுவையில் பிறந்து அங்கேயே வாழ்ந்ததால் பார்ப்பனர் அல்லாதாரான பாரதிதாசன் வகுப்பு வாதப் போக்குகளை இயல்பிலேயே எதிர்த்து போராடுவதற்கு அந்நிலை வித்திட்டிருக்கலாம். (அமுதவல்லி, 2002, பக்கம் 54).

3.2 மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும்
பாரதியாரும் பாரதிதாசனும் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் நிறைந்தவர்கள் என்றாலும் நுணுகி நோக்குங்கால் சில வேற்றுமைகள் புலப்படும். பாரதி தாய்மொழியான தமிழிடம் தனி விருப்பம் கொண்டவர் என்றாலும் வடமொழியும் பிறமொழி ஏற்பும்  அவரின் இயல்புக்கும் வாழ்க்கைக்கும் பொருந்தியதாக அமைந்தது. பாரதிதாசனுக்கோ வடமொழிச் சார்பு பிறப்பிலேயே ஏற்பட வழியில்லாமல் போயிற்று. பாரதிதாசன் தாய்மொழியாகிய தமிழிடமும் அதன் வயிற்றுப் பிறந்த திராவிட மொழிகளிடமும் மட்டுமே தனியன்பு கொண்டவர்(சு.சுப்பிரமணியன்,1990,பக்கம் 64).  தொல்காப்பியரைத் தொட்ட மரபுவழி வந்ததால் வடமொழியை நஞ்சாகக் கருதினார். தமிழ் இலக்கணத்தை அகத்தியன் சமைத்தான் என்பதையே மிகுந்த கிண்டலுடன் அகத்தியன் விட்ட புதுகரடி தலைப்பில் அமைந்த கவிதை நல்லதொரு சான்றாகும். (கோமுகி சுப்பிரமணியம்,2002,பக்கம் 61)

தமிழ் நாட்டின்மீது தாளாத அன்பு இருந்தாலும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கைக் கொண்டவர் பாரதி.பாரதிதாசனோ தமிழ்நாட்டின்மீதும் திராவிட நாட்டிடமும் பற்றுக்கொண்ட பச்சைத் தமிழராக வாழ்ந்தவர். மேலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரியத்திற்கு எதிரான திராவிடப் போராட்டத்தை விதைத்த மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகள், சுப்பிரமணிய முதலியார், இராமலிங்க அடிகள் போன்றோர் பாரதிதாசன் திராவிடச் சிங்கமாக முழங்குவதற்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ காரணமாக விளங்கினர்.  

ஒன்றுபட்ட பாரதம் பாரதிக்கு உயிரென்றால் துண்டுபட்ட இந்தியாவின் ஒன்றுபட்ட திராவிடம்தான் பாரதிதாசனுக்குப் பெருங்கனவு. சில காலம் மட்டுமே தமிழாசிரியராய் இருந்த பாரதி தமிழின் தொன்மையிலும் இனிமையிலும் சிறப்பிலும் தோய்ந்து போனார். பல்லாண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி தமிழ் பாற்கடலைக் கடைந்தெடுத்த பாரதிதாசனோ தமிழே வாழ்வாக தம்முயிர் மூச்சாக ஆழ்ந்து போனார். பாரதிக்குத் தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் போன்றது. பாரதிதாசனுக்குத் திராவிடமும் பகுத்தறிவும் இரு கண்கள் ஆனது.
                        
3.3  நம்பிக்கைகள்
சாதிச் சழக்குகளற்ற மதவெறியற்ற சமூக அமைப்பை உருவாக்க முனைவதில் இவர்களிருவரும் தீவிரமாக இலக்கியப் படைப்புகளை உருவாக்கினர்.
ஆயிரம் உண்டிங்கு சாதி – எனில்
  அந்நியர் வந்து புகலென்ன நீதி (சேதுபதி,2001, பக்கம் 37)
என்பது பாரதியின் நம்பிக்கை. ஆனாலும் பாரதியார் எல்லாத் தேசியவாதிகளைப் போலவே அயலவர் ஆட்சி அகன்றால் சாதிப் பிரிவினைகளும் மதப்பிணக்குகளும் முற்றாக ஒழியும் எனத் திடமாக நம்பினார்.
சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும்
 நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்
 மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சி செய்தே
                         ஓடச் செய்தால்...... (சு.சுனந்தாதேவி,1989, பக்கம் 91)
பாரதிதாசனோ திராவிடச் சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் இந்தக் கொடிய வேற்றுமைகள் ஒழியாதவரை அயலவராட்சி ஒழியாது என உறுதியாக எண்ணினார். பாரதி தெய்வ சக்தியைப் பெரிதும் பாடியவர். முதல் சந்திப்பில் பாரதி பாரதிதாசனைப் பாடச் சொல்லும்போது சக்தியைப் பாடினாலும் பின்னர் அவர்தான் தம் ஆயுள் முழுவதும் மனிதசக்தியை மட்டுமே பாடினார். (இளங்கோ,1998,பக்கம் 61)

3.4 சமூகச் சீர்திருத்தம்
பாரதிக்கும் அவர் சீடரான பாரதிதாசனுக்கும் சிந்தனையிலும் அதை வெளிப்படுத்தும் போக்கிலும் பல வேறுபாடுகள் இருந்தாலும் நம் சமூகம் சீர்திருத்தம் பெறவேண்டியதில் அதீத ஒற்றுமை இருப்பது இங்கு வலியுறுத்தப்பட வேண்டியது அவசியம். குடிப்பிறப்பாலும் காலச் சூழலாலும் சமய வாழ்வை வெறுக்காமலே சமூகச் சீர்திருத்த வாழ்வைப் போற்றியவர் பாரதி. பாரதியாரைப் பொறுத்தவரை உயர்ந்த சமய வாழ்வு சீர்திருத்த நெறிக்கு முரணாகாது என்று நம்பினார்.அவர் சமூகத்தை நினைத்து                       
நெஞ்சு பொறுக்கு தில்லையே – இந்த
                         நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
                         அஞ்சி யஞ்சிசாவார் – இவர்
            அஞ்சாத பொருளில்லை அவனியிலே... (சேதுபதி,2001, பக்கம் 33)
இப்படி உருகுவது ஊருக்கே தெரிந்த உண்மைதான். தொடர்ந்து தம் பிறப்புக்குக் காரணமாக விளங்கிய பார்ப்பன குலத்தின் குணக்கேடுகளையும் விட்டு வைக்காமல் உலகளாவிய மாந்த நேயத்தோடு மனம் துணிந்து                    
பேராசைக் காரனடா பார்ப்பான்.....
                         பிள்ளைக்குப் பூணுலாம் என்பான் – நம்மை
பிச்சுப்பணக் கொடெனத் தின்பான்;’ (சேதுபதி,2001, பக்கம் 54)
தடாலடியாக வெடிப்பதோடு நின்றிடாமல் அதற்குத் தாம் கண்ட தீர்வையும் நயத்தோடு தருவதில் பாரதிக்கு நிகர் பாரதிதான்.
                     ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
                        அலையும் அறிவிலிகாள் பல்
                        லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
                        டாமெனல் கேளீரோ?’ (சேதுபதி,2001, பக்கம் 45)
பாரதியின் சமூகச் சீர்திருத்தக் கொந்தளிப்பை உற்றாயும்போது அதற்குச் சாலப் பொருந்தும் பண்பினர்தாம் பாரதிதாசன். ஆனாலும் பாரதிதாசன் சமய வாழ்வை வெறுத்தே சமூகச் சீர்திருத்தத்தை வலியுறுத்தினார். சமய நம்பிக்கை சீர்திருத்த வாழ்வுக்குப் பெரும் முட்டுக்கட்டை என்றே முழங்கினார்.பாரதி மறைவுக்குப் பிறகு நாற்பதாண்டு காலம் வாழ்ந்த பாரதிதாசன் தம் மனத்தால் ஆராதிக்கும் குருவான பாரதி விட்டுச் சென்ற வீரிய விதைகளைத் தமிழ் நிலத்தில் விதைத்தார். நயன் கருதியும் பயன் கருதியும் திராவிட இயக்க ஏர் உழுத தமிழ் நிலத்தில் வற்றாத கவிதை நீர் பாய்ச்சி பெரும் கருத்து விளைச்சலை அறுவடை செய்தவர் பாரதிதாசன்.
                        கொலைவாளினை எடடா – மிகு
                         கொடியோர் செயல் அறவே! (கோமுகி சுப்பிரமணியம்,2002,பக்கம் 72)
சமூகத்தைச் சீர்படுத்த அலையென பொங்கியெழுந்து சீறிப் பாய்ந்த புரட்சி வெடிப்பு அது.
                        தமிழ் எங்கள் உயிர் என்பதாலே – வெல்லுந்
                        தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே!(கோமுகி சுப்பிரமணியம்,2002,பக்கம் 43)அமிழ்தான தமிழ் நமக்கு உயிராய் இருப்பதால் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் எல்லா இழிதகைமையையும் ஈனச்செயல்களையும் மிதித்துத் துவட்டும் மனவுரத்தை ஊட்டுகின்றார். பாரதி சமய நம்பிக்கையை நாட்டும் சமூகச் சீர்திருத்தவாதியாக பரிணமிக்க பாரதிதாசனோ சமய நம்பிக்கையற்ற சீர்திருத்தத்தை மட்டுமே வலியுறுத்துகிறார். (இளங்கோ,1998,பக்கம் 114)

4.0 திராவிட பாசமும் நேசமும்
            திராவிட உணர்வு உந்துதலால் பாரதிதாசனுக்குப் பின்னாளில் அறிஞர் அண்ணாவின் நட்பும் தந்தை பெரியாரின் தோழமையும் துணைநின்றதால் பார்ப்பன எதிர்ப்பும் கடுமையும் நிறைந்தாக அவரின் கவிதைகளில் கொப்பளித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. மதம் என்ற போர்வையில் விளைந்த புராணங்கள் மக்களிடம் அறிவுக்கு ஒவ்வாத செயல்களையும் ஒழுக்கத்திற்குக் கேடான வாழ்வியல் முறைகளையும் பேசுவதாக திராவிடச் சிந்தனைகள் வீறுகொண்டபோது பாரதிதாசனும் உடன் எழுந்து புராணப் பொய்மூட்டைகளை அழிக்க அரிமாவாய் பிடரி சிலிர்த்தார். புராணத்தின் கட்டுக்கதைகள் மனித வளச்சிக்கு முட்டுக்கட்டைகளாக இருப்பதால் அவற்றை அறிவு வாளால் வீழ்த்த கவிதை ஏடெடுத்தார் பாரதிதாசன். (நிர்மலா மோகன், 2013,பக்கம் 27)

பலருடைய வெறுப்புக்கும் எதிர்ப்புக்கு ஆளானாலும் தாம் கொண்ட கொள்கையில் கொஞ்சமும் பிறழாமல் நின்ற வெண்தாடி வேந்தரான பெரியாரின் செயல்களில் தம்மைக் கரைத்துக் கொண்டார் பாரதிதாசன். ஆரியர் வருகைக்குப் பின்னரே தமிழ்நாட்டில் சாதி எனும் நோய் தோன்றியது என்பது பாரதிதாசனின் ஆழ்மனப் பதிவு. தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அதை உடைத்தெடுக்க பல கவிதைகள் இயற்றியதை வரலாறு அறியும்.
சாதிமதம் தமிழ் இல்லை – அந்தச்
                        சாதி மதத்தைத் தமிழ் கொள்வதில்லை (சு.சுனந்தாதேவி,1989, பக்கம் 106)
ஆரிய மாயை உருவாக்கிய வருணத்தின் அடிப்படையில் தீராத நோயான சாதியைச் சங்க தமிழர்கள் அறிந்தாரில்லை என்பது பாவேந்தரின் திண்மையான நம்பிக்கை. சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஒளவை (இனியன்,2009, பக்கம் 67). முதலாக சாதிகள் இல்லையடி பாப்பா என்ற தம் குருவான பாரதிவரை சாதியை வெறுத்துப் பாடியிருப்பினும் அதன் கொடுமை தீராதது கண்டு
                        இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி
                         இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே (இளங்கோ,1998,பக்கம் 75)
இதயம் வெடிக்கிறார் பாரதிதாசன். சமுதாயத்தைச் சாக்கடையாக்கும் சாதிகளால் ஏற்படுகின்ற பூசல்கள், சண்டைகள், கொள்ளைகள், கலவரங்கள் எல்லாம் களையப்பட பெரியாரின் சுயமரியாதை தத்துவத்தைத் தீவிரமாகப் பேணுகிறார். பெரியார் கொள்கைகளினால் கவரப்பட்டு அறியாமையால் ஆரிய மோகத்தால் தமிழரிடையே வேர்விட்ட சாதிகள் அழிய மரணமே ஏற்படினும் அதுவரை எதிர்த்துப் போராடத் துணிந்தார். திருக்குறளைத் தன்னகத்தே கொண்ட தமிழ்மொழியை எங்கும் எதிலும் நிலைத்திருக்கும் பொதுமொழியாக்க வேண்டும் எனும் திராவிடக் கொள்கையைத் தம் கவிதைகளால் முன்னிறுத்தினார். (நிர்மலா மோகன், 2013,பக்கம் 27)

            ஆரியர்களுக்குப் பிறகுதான் திராவிட நாட்டில் பல்வேறு கடவுளர்களும், சாதிகளும், சடங்குகளும் உள்நுழைந்து சமுதாயத்தைச் சீரழித்தது என்ற அண்ணாவின் ஆரிய மாயை நூலுக்குப் பாரதிதாசன் முழுமனத்துடன் உடன்பட்டு அதன் வேரறுக்கும் செயலாக கவிதை வாளெடுக்கிறார். தமிழனுக்கு உயிரினும் மேலானது மானம் என்பதைப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தோடு தமிழர்களின் நெஞ்சங்களில் கவிதைத் தீப்பொறிகளால் சுட்டு உணர்த்தினார். சாதி சமய எல்லைகளைக் கடந்து, ஆண்டான் அடிமை என்ற நிலையும் அகன்று, தன் வீடு தன் சுற்றம் என்னும் தன்னலமும் நீங்கி எல்லாரும் எல்லாமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வதையே கனவு கண்டார் பாரதிதாசன்.(அமுதவல்லி, 2002, பக்கம் 87).
            பெண்கள் உரிமைக்கும் வாழ்வுக்கும் போராடிய தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பாட்டிலும் பேச்சிலும் பட்டித் தொட்டி எங்கும் கொண்டு சென்றார். உழைப்பாளிகளிடம் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு உப்பரிகையில் வாழும் வியர்வையின் மதிப்புத் தெரியாத மேல்வர்க்கத்தை நோக்கிச் சொற்சிலம்பம் ஆடினார். எல்லார்க்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டுமானால் ஏற்றத்தாழ்வற்ற சாதிமதங்களற்ற சமதர்ம சமுதாயம் உருவாக்க வேண்டுமென்பதே பாரதிதாசனின் பண்வந்து காதிற் பாயப் பருகுநாள் எந்த நாளோ எனும் பெருங்கனவு.

5.0 முடிவுரை
            சாதிச்சழக்குகளின் இடுப்பொடித்து சாத்திரச் சடங்குகளைத் துடைத்தொழித்து மூடப் பழக்கங்களை முற்றிலும் மூக்கொடித்து பெண்ணடிமைக்குத் தீவைத்து சுயமரியாதை சிந்தனையை எங்கும் சுடர்விடச் செய்தவர்; உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக் குரலுக்கு மதிப்பளித்து வாழ்த்தியவர்; கைம்பெண்டிருக்காகக் கண்ணீர்விட்டு பெண் விடுதலைக்காகப் பெருங்குரலெடுத்து விண்ணதிரக் கவிதைகளால் முழக்கமிட்டவர். தமிழ்க் கல்வியில் தமிழ்நாடு தமிழ் மக்களும் சிறந்தொளிர வாழ்நாளெல்லாம் அரும்பாடுபட்டவர். தமிழே உடலாய் உயிராய் உணர்வாய் எண்ணி தம் வாழ்நாளெல்லாம் சந்தனமாய் மணந்தவர். பாரதியை மானசீகக் குருவாக பாரதிதாசன் ஏற்றுக்கொண்டவர் என்றாலும் அவரின் வாழ்நாளில் பெரும்பகுதி திராவிடச் சிந்தனைகளைச் செயல்படுத்துவதிலே மும்முரமாய் இருந்தது. (முரசு நெடுமாறன்,2008,பக்கம் 72)

பாரதிதாசன், தம் குருவான பாரதி காட்டிய பாதையில் தம் பயணத்தைத் தொடங்கினாலும் காலச் சூழலுக்கிணங்கவும் அப்போதைய சமுதாயத் தேவைக்கேற்பவும் தந்தை பெரியார் சொன்ன நெறி பொருந்தும் என்பதாலேயே  தம்மைத் திராவிடத்தின்பால் முழுமையாக இணைத்துக் கொண்டார் என்பதே இவ்வாய்வின் முடிபாகும். அந்தப் புரட்சிக் கவிஞர் மறைந்து போனாலும் தமிழரிடையே அவர் ஏற்றி வைத்த குடும்ப விளக்கு இன்னும் சுடர் விட்டுக் கொண்டுதானிருக்கிறது. அந்தப் புதுவைக் குயில் பறந்து சென்றுவிட்டாலும் அதன் அழகின் சிரிப்பு இன்றும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. பாரதிதாசன் என்பது தனிமனிதரின் பெயரல்ல நம் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தமிழின் மேன்மையையும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் எழுச்சியையும் அறிவொளியையும் கூட்டிய குன்றிலிட்ட இலட்சியத் தீபம்.






மேற்கோள் துணைநூல்கள் :-

அமுதவல்லி, (2002). பாவேந்தர் பாநலம், சென்னை: பூங்கொடி பதிப்பகம்

கோமுகி சுப்பிரமணியம், (2002). பாரதிதாசன் தேன்தமிழ் கவிதைகள். சென்னை: நர்மதா

நிர்மலா மோகன், (2013). ஆய்வுக் களஞ்சியம் III, சென்னை : வானதி பதிப்பகம்

இனியன், (2009). பாவேந்தம். சென்னை : இளங்கணி பதிப்பகம்

இளங்கோ, (1998), பாரதிதாசன் பார்வையில் பாரதி. சென்னை : அன்னம்

முரசு நெடுமாறன், (2008). பாரதிதாசன் கண்ட தமிழ், கோலாலம்பூர்: தமிழர் திருநாள் 2008 ; விழா மலர்

சு.சுப்பிரமணியன், (1990). பாவேந்தர் நோக்கில், புதுச்சேரி: நன்மொழிப் பதிப்பகம்

சு.சுனந்தாதேவி, (1989). கலைஞர் கவிதைகள் ஓர் ஆய்வு, சென்னை : கவிக்குயில் பதிப்பகம்

சேதுபதி,(2001). மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள், சென்னை : செண்பகா பதிப்பகம்