புதன், 4 ஜூலை, 2018

வாழ்வின் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்?


ஐயா குழ.செயசீலனார் இறப்பின் இறுதி ஊர்வலத்தில் இருந்தபோது எண்பதுகளின் இடைக்காலத்தில்  ஐயாவிடமும் என்னிடமும் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிலர் அவரின் பிரிவுச் செய்தியைக் கேள்விப்பட்டு இறுதி மரியாதை செலுத்த ஓடோடி வந்திருந்தனர். அவர்களில் பலரை நான் பார்த்து முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஐயாவின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய கண்களோடு என்னிடம் தங்களது ஆழ்ந்த துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஐயாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சூழலில் சில மாணவர்கள் மிகுந்த மரியாதை காரணமாக வணக்கம் கூறி காலை தொட்டு வணங்க முற்படுவதை அறிந்து தவிர்க்க முயன்றேன். சில மாணவர்கள் உருவத்தால் நிரம்ப மாறியிருந்தாலும் அன்றிருந்த அன்பு கிஞ்சிற்றும் மாறாமல் நடந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. “ஐயா, நீங்களும் ஐயாவும் எங்களுக்கு சொன்னது எல்லாம் என்றுமே நினைவில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அதைதான் எங்கள் பிள்ளைகளுக்கு இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்” கண்ணீர் மல்க இன்று நான்கு பிள்ளைகளுக்குத் தாயான அந்த மாணவி என் இரு கைகளையும் பிணைத்தபடியே சொன்னார். “நம்ம ஐயா நேர்த்தியாகவும் எடுப்பாகவும் உடை உடுத்தி தோன்றும் அழகு கண்ணில் தெரிகிறது. ஐயா, அவ்வளவு திருத்தமாக அழகாகப் பேசிய தமிழ் இன்னும் நெஞ்சில் இனிக்கிறது. அவரை இடையில் வந்து கண்டு பேசலாம் என்று காலத்தைத் தள்ளிப்போட்டு இந்தச் சூழலில் காண்பதுதான் மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது” மற்றொரு மாணவர் என் உள்ளங்கையை இறுகப்பிடித்தபடியே உருகினார். “எப்போதும் காலத்தை நாம் தள்ளிப்போடவே கூடாது. எப்போது நேரம் வாய்க்குமோ நமது அன்புக்குரியவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்பதை நானும் சில இழப்புகளுக்குப் பிறகு உணர்ந்திருக்கின்றேன். அதனால்தான் நான் இப்போதெல்லாம் யாரை சந்திக்க வேண்டுமென நினைக்கின்றேனோ அவரைக் காலத்தை தள்ளிப் போடாமல் சென்று கண்டு வருவதைக் கடமையாகக் கொண்டிருக்கின்றேன். ஐயாவை இருவாரங்களுக்கு முன் சந்தித்து நெடுநேரம் உரையாடியது கொஞ்சம் ஆறுதல் தருகின்றது” அந்த மாணவர்களை சிறிது ஆற்றுப்படுத்தினேன். “ஐயா, நீங்கள் எங்களை பள்ளி பக்கத்தில் இருக்கும் ஆற்றங்கரைக்கும் காடுகளுக்கும் மெதுவோட்டம் செல்வதற்காக அழைத்துச் செல்வீர்களே அந்த இன்பத்தை ஆயுளுக்கும் மறக்க முடியாது” பிரிவின் துயரை மாற்றும் நோக்கில் அந்த நிகழ்ச்சியை இன்னொரு மாணவர் உணர்ச்சியோடு பகிர்ந்தார். அவர்கள் என் பழைய நினைவுகள் எல்லாம் தூசு தட்டியது மீண்டும் என்னைப் புதுப்பித்தது.  நான் ஏட்டில் உள்ள அறிவைவிட அனுபவங்களின் வழி கண்டடைந்ததைதான் அன்று முதல் இன்றுவரை வகுப்பில் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய கணினி வளர்ச்சி பயன்பாடு பற்றி எல்லாம் கற்றல் கற்பித்தல் தேவைக்கும் பயன்படுத்துவேனேயன்றி வேறெதுவும் பெரிதாகத் தெரியாது. தொழிற்நுட்பம் கோட்பாடு என எல்லாக் குழப்பங்களையும் துறந்து என்னுள்ளே முகிழ்க்கும் உள்ளுணர்வின் வழியில் வெளிப்படுபவனவற்றையே மூலதனமாக உள்ளன்போடு இன்று கல்லூரி நிலையிலும் மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளவே விரும்புகின்றேன். என்னுள்ளேயிருந்து பீறிட்டுக் கிளம்பும் உணர்வு கலந்த சொற்கள் இன்னும் வாழ்வின் வெளியில் பதிவு செய்யப்படாத எத்தனையோ கொண்டாட்டங்களையும் அழகியலையும் துயரங்களையும் பகிரவே விரும்புகின்றது. இன்னும் இன்னும் கற்க வேண்டிய விசயங்களும் தொடர்ந்து ஓட வேண்டிய தூரங்களும் நீண்டுகொண்டே செல்வதை உள்ளூர உணர்கின்றேன். இந்த வாழ்வின் தேடலில் உடன்பாடும் முரண்பாடும் மோதிக்கொண்டாலும் நான் ஓடுவதை நிறுத்திக் கொண்டதே இல்லை. இன்று ஏழாம் அறிவு வெளியிலிருந்து கொட்டுவதையும் கையேந்தி மாணவனாக கற்று வருகின்றேன். உலகியலில் என்றும்  மாணவனாக  என்னை உருமாற்றிக் கொண்டபின் கற்கும் ஆர்வம் ஆழ்கிணற்று ஊற்றைப்போல் ஊறுகிறதேயன்றி சலிப்புத் தட்டியதே இல்லை. மறைந்த ஐயா குழ.செயசீலனாரும் ஆசிரியனானவர் தேடலை வாழ்வின் இறுதிவரை தொடர்பவராக இருக்க வேண்டும் என்றே வலியுறுத்துவார். அசுர தேடல் உள்ளவன் நிச்சயம்  தேடியதைக் கண்டைவான் என்று எனக்கு முன்னே சொன்னதைதான் நான் என் மாணவர்களுக்குச் சொல்கின்றேன். மனித வாழ்வின் முடிவற்ற தேடலில் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்?

இறப்பும் மெய்யே...


பிறப்பு எப்படி மெய்யோ அதுபோலவே அதற்கு எதிரான இறப்பும் மெய்யே. இந்த அழியாத மெய்களுக்கிடையிலான வாழ்வில் உண்மைதான் அடைய முடியாத செல்வமாக இருக்கிறது. உண்மைதான் நமது அகத்தையும் புறத்தையும் விமர்சித்து செல்கிறது. ஒவ்வொரு இழப்பின் துயரைக் கடக்கும்போதும் முடிந்தவரை இனி அரிதாரம் பூசாத ஒப்பனை இல்லாத வாழ்க்கையை இன்னும் இன்னும் வைராக்கியத்தோடு வாழ்ந்து செல்ல வேண்டுமென எனக்குள் வலிமை கூடுகிறது. என் நேசத்திற்குரிய மனிதர்கள் ஒவ்வொருவராக இந்த வாழ்வு வெளியிலிருந்து விடைபெற்று செல்லும்போது இறப்பின் வலிமையும் உறுதியும் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் என்னிடம் எஞ்சி இருக்கும் காலத்தை முழுமையாக மிகத் துல்லியமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற தீவிரம் கூடி நிற்கிறது. எதிரே தென்படும் ஒவ்வொரு மனிதரையும் சந்திக்கும்போதும் வாழ்வின் இறுதிநாளில் நிமிடத்தில் நின்று அவருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு என்னுள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். முடிந்தவரை எதிர்படும் அன்பருடன் உண்மையாகப் பேசிப் பழகி விடைபெறுவோம். மீண்டும் அந்த அன்பரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் இயற்கைக்கு இரு கரம் கூப்பி நன்றி சொல்வோம். காலத்தையும் இறப்பையும் ஒன்றாக்கி தத்துவம் செய்தவர்கள் நம் முன்னோர்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் மனிதரும் காலமும் ஒன்றுதானே.அதனால்தான் ஒருவர் இறந்துவிட்டால் இயற்கைக்கே திரும்பிவிட்டார் என்பதை இயற்கை எய்தினார் என்றும் காலத்தோடு கலந்து கரைந்து போனதை காலமாகிவிட்டார் என்றும் மறைந்து போனதை மறைந்துவிட்டார் என்றும் இன்னும் சமய நோக்கில் சிவனிடமிருந்து வந்தவர் சிவனடிக்கே சென்று சேர்ந்திட்டார் என்றும் பலவாறு இறப்பைக் குறிக்கிறோம். உடலில் முன்னம் தங்கி இருந்த சத்து நிறைந்த உறுபொருள் நீங்கிப் போனதை செத்து விட்டார் என்று திரித்தும் மூச்சை விட்டுட்டார்’, கட்டையைப் போட்டுட்டார்’. உயிரை நீர்த்தார் என்றும் பலவாறு இறப்பைப் பலவகைச் சொலவடைகளால் சிலாகித்து மகிழ்ந்தார் முன்னோர்கள். அன்று தோட்டப்புறங்களில்கூட ஒவ்வொரு இறப்பிலும் துக்கத்தின் அடர்த்தியும் பிரிந்தவர்க்காக செய்யும் பிரார்த்தனைச் சடங்குகளும் நீளமாக இருக்கும். இன்று அவையெல்லாம் சுருங்கி முடிந்தவரை உற்றார் உறவினர் நண்பர் எல்லாம் ஒருநாளில் கூடி பிரியும் நாளாக இறப்பு மாறிவிட்டது. இன்று இறப்பையும் இறுதி ஊர்வலத்தையும் மெய்நிகர் தடயமாக பதிவு செய்து முகநூலில் பதிவிடும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம்?. இதுகூட ஒரு புது வகை மனித நேயமோ? மனிதரின் நெஞ்சக்கூடு முழுவதும் சிந்தனைகளாலும் அதில் ஊறிய நினைவுகளாலும் காலம்தானே நீக்கமற நிறைந்து வழிகிறது. இந்த நினைவுகளைக் கைமாற்றிவிடுவதன் மூலம்தான் ஒருவர் வாழ்ந்ததற்கான எழுச்சியும் வீழ்ச்சியும் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து நிற்கும் நினைவுகளை ஏதாவது ஒருவகையில் கைமாற்றுவது என்பது காலத்தைக் கைமாற்றுவது என்றுதானே பொருள்படும்.? யாருக்கு இந்த வாழ்வில் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது வாழும் இந்த நிமிடம்வரை தேவரகசியம்தானே?. எப்போது எந்த நிமிடம் யாருக்கு இறப்போலை வருமென்று யார்தான் அறிவாரோ?. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சுதானே?

புதன், 27 ஜூன், 2018

இங்கு அமரர் சிறப்புக் கண்டார்


உலகில் பிறக்கும் எல்லார்க்கும் வாழ்க்கையுண்டு; ஆனால் எல்லார்க்கும் வரலாறு இருப்பதில்லை. வரலாற்றுப் பேரேட்டில் தம் பெயரை பொறித்துக் கொள்ளுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களை காலம் மறந்ததில்லை. நினைவுகள் இனிமை நிறைந்த பூஞ்சோலையாய் சில நேரம் துன்பம் மிகுந்த நெருஞ்சி முட்களாய் சிலபோது மனிதனைப் பிணித்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு நினைவுகளோடுதான் சுமந்தலைகிறான். இந்த மண்ணில் அலைந்து திரியும் ஒவ்வொரு மனிதனினும் மூளைக்குள்ளும் நினைவுகள் என்றும் தீர்வதேயில்லை. காலமும் நொடிக்கு நொடி மரித்துவிட்டாலும்கூட நினைவுகள் அதை வெவ்வேறு வகையில் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் நெஞ்சக்கூட்டுக்குள்ளும் நினைவுகள் புகுந்து தனக்கான காலத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. சிலசமயம் மறதி என்ற பேரில் சற்று ஓய்வும் விபத்து என்ற நிலையில் சற்று விடுபடுதலும் மரணம் என்ற பெயரில் நிரந்தரமாகவும் நினைவுகள் மனிதருக்கு இல்லாமல் போகலாம். ஆனால் என் வாழ்வின் இறுதி நொடிவரை ஐயாவின் நினைவிருக்கும் என்பது மட்டும் உறுதி.  ஐயா குழ. செயசீலனாரைச் சந்தித்த நாள்தொட்டு எழும் நினைவுகள் ஒவ்வொன்றும் காணொலிக் காட்சிபோல் நினைவில் நிழலாடி உதிர்ந்து கொண்டே இருந்தன. தமிழ் வாழப் பணியாற்று தமிழல்லவோ நம் உயிர்க்காற்று என்ற கொள்கை நெறியோடு தம் ஊனையும் உயிரையும் தமிழ்ப்பணியில் கரைத்தவர் ஐயா. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களே ஐயா குழ.செயசீலனார் தமிழ்ப்பால் கொண்ட காதலைக் கண்டு வியந்து அவரின் பெயரைத் தனித்தமிழில் வெற்றிநெறியன் என அழைத்ததாக அன்புப்பொங்க குறிப்பிட்டது இப்போது என் காதோரம் ஒலிக்கிறது. ஐயா குழ.செயசீலனார் அவர்கள் தமது தனிவாழ்விலும் சமூக வாழ்விலும் தமிழையே உயிர் மூச்சாக்கி தளராத கொள்கைப் பிடிப்போடு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும் இடைவிடாமல் குறுக்கிட்ட போதும் கிஞ்சிற்றும் மனம் தளராமல்  தமிழைத் தன்னுள்ளும் புறமும் தவமாக்கி தழைக்கப் பாடுபட்டுவந்த பெருந்தகையாளர். தமது ஒவ்வொரு செயலிலும் யார் கைவிட்டாலும் என் தாய்தமிழச்சிஒருபோதும் கைவிடமாட்டாள் என்று தமிழ்மொழியின்பால் கொண்ட நிகரற்ற அன்பையும் நம்பிக்கையியும் எப்போதும் உறுதியோடு அவர் கூறும்போது கேட்கும் நமக்கே மெய்சிலிர்த்துவிடும். உலகத்தைப் பற்றிய உயரிய பரந்துபட்ட பார்வையையும் வானளாவிய விழுமியச் சிந்தனைகளையும் என்னில் கருக்கொள்ள முழுமுதற் காரணமாக விளங்குபவர் இவரே. என்னைப் போன்ற பலரின் அறிவின்மீது படிந்திருக்கும் புழுதியை அன்போடு தூசுதட்டி சாணை தீட்டிய பெருமைக்குரியவர். பலரின் இதயங்களில் வெளிச்சத்தைப் பூசி இருளைத் துரத்தியவர். இந்த நெடிய வாழ்வுப் பாதையில்  நீர்ச்சுனைகள்போல பலரும் இளைப்பாறும் ஆலமரமாய் விளங்கியவர். கைத்தேர்ந்த ஆசிரியராக திறந்த உற்சாகமான உள்ளன்போடு மாணவர்களுக்கு கட்டற்ற  முழுநம்பிக்கையுடன் இந்த உலகை அணுக்கமாகக் காட்டியவர். இவ்வுலகின் மகிழ்ச்சி, துள்ளல், துடிப்பு போன்ற ஒளியையும் துன்பம், வன்மம், தோல்வி போன்ற இருண்ட பகுதிகளையும் பக்குவமாய் காட்டியவர். உழைப்பைக் கொடுப்பதில் எவ்வகையிலும் கணக்கு வைக்காத உத்தமர். அவர் கருணையோடு சொல்லித்தந்த பாடத்தைத்தான் மூலதனமாகக் கொண்டு இதுவரை பலர் ஆசிரியராக வாழ்கின்றனர்.  அறியாமை இருட்டில் இருப்பவர்க்கு அறிவுச் சுடரை ஏற்றி வைப்பதில் இவர்க்கு நிகர் வேறு எவரையும் நான் இதுவரை கண்டதில்லை. அவரின் பேச்சிலும் எழுத்திலும் புதிது புதிதான சொல் நேர்த்தி, கற்பனைகள் உருண்டோடும், அடுக்கடுக்காக அழகழகாகப் பூக்கும் சொற்களாக அவர் திருவாய் மலரும் வார்த்தைகள் கேட்போரை தமிழ்ப்பால் பிணைக்கும், சிலபோது பொங்குக் கடலாகப் புறப்படும் சொற்கள் செந்தமிழின் செழுமையைப் பறைச்சாற்றும். நாம் தமிழர், அதிலும் ஆசிரியர், நாம் திருத்தமாகவும் அழகாகவும் இனிமையுடன் முன்மாதிரியாகவும் பேசாவிடில் வேறு யார்தான் பேசுவது?’ என்று சொல்வதோடு நின்றிடாமல் பணியிடத்திலும் நட்பு வட்டாரத்திலும் எங்கும் கூடுமானவரை செந்தமிழையே பயன்படுத்துவார். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குமுன் அவரோடு பணி செய்த காலம் தொடங்கி ஐயாவின் எத்தனையோ தனித்தச் சிறப்புகளை உள்வாங்கி என் வாழ்விலும் கடைப்பிடித்து ஏற்றம் கண்டிருக்கின்றேன். எந்தச் சூழலிலும் பேச்சிலும் எழுத்திலும் தமிழின் தூய்மையை நாம் பேண வேண்டும் என்பதில் ஐயாவின் உறுதிபாட்டை இயன்றளவு கற்றல் கற்பித்தலுக்கு வெளியேயும் வாழ்வியல் அறமாகப் பின்பற்றி வருகின்றேன். பணிக்காலத்தில் எப்போதும் வெளிர்நிறத்தில் அவர் மேற்சட்டையும் கறுப்பு நிற காற்சட்டையும் நேர்த்தியாக அணிவதை முன்மாதிரியாகப் பின்பற்றி இதுவரை நானும் ஆசிரியர் தொழிலுக்கேற்ற வண்ணமாக உடை அணிந்து வந்திருக்கின்றேன். அவரையே வழித்தடமாகக் கொண்டு இன்றுவரை இயன்றவரை இந்த ஆசிரியமெனும் இறைவழிபாட்டில் பயணித்து வருகின்றேன். தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் - இங்கு அமரர் சிறப்புக் கண்டார்எனும் பாரதியின் திருவாக்கை வாழ்வியல் இலக்கணமாகக் கொண்டு இதுவரை வாழ்ந்து காட்டிய பெருந்தகையை இழந்தது தமிழுலகுக்கு மட்டுமல்ல ஆசிரியர் உலகுக்கும் பேரிழப்புதானே?

என்றும் அணையாத தமிழ்த் தீபம்
நேற்று இரவு பதினொரு சரியாக பத்து ஐம்பது மணியளவில் இடியைப் போன்ற அந்த இறப்புச் செய்தி என் இதயத்தைப் பிளந்தது. என் வாழ்வுக்கு மிக நெருக்கமான மாமனிதர் ஐயா குழ.செயசீலனாரின் காலத்தோடு கலந்திட்டார் என்ற  பிரிவுச் செய்தி என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ், உயிர்ப்பது தமிழ், கொண்டது தமிழ், கொடுப்பது தமிழ், விண்டது தமிழ், விளங்குவது தமிழ் என்று தமிழே என்பாகவும் தசையாகவும் உலவிய ஐயா குழ.செயசீலனார் மறைந்த செய்தியை மனது ஏற்க மறுத்தது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் செயலற்று அவரின் நினைவுகளில் அமிழ்ந்து போனேன். இதுவரை அவரோடு வாழ்ந்த காலத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து நெஞ்சில் உதறும்போது சிதறும் நினைவுகள் கண்களைக் குளமாக்கின. ஒவ்வொருமுறை சந்திப்பின்போதும் தந்தையும் களிகூர ஆரத்தழுவிக்கொள்ளும்போது அவரிடத்தில் தாயின் அன்பையும் அறவுரைகளைச் சொல்லும்போது உடன் பிறந்த சகோதரராய் பாசத்தையும் மெய்யாக உணர்ந்துள்ளேன். நினைந்து நினைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அவரோடு பழகிய காலங்கள் எல்லாம் என் முன்னே நிழலாடின. தொலைவில் காணும் போதே ஒரு புன்னகை பூத்த முகம். நெடிய உருவம்; நாவலர் நடை அருகில் கண்டால் கலகலவெனக் குழந்தைச் சிரிப்பு. தகதகவென ஒளி உமிழும் பாரதியின் பார்வை. தமிழ்த் தென்றலை நினைவுகூரும் மொழி. பாவாணரின் தனித்தமிழ்; அண்ணாவின் ஆற்றொழுக்கான நடை; கலைஞரின் ஊற்றுப் பெருக்கெடுக்கும் சொல்வளம்; செந்தமிழ்ச் செல்வரின் சந்தத் தமிழ் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த இன்பத் தமிழாக என்றென்றும் விளங்கியவர் ஐயா குழ.செயசீலனார். இனிமை தவழ் தமிழுணர்வால் இயங்கிவரும் தூயர்; ஈதலரம் புரப்பதிலே எழில்சொரியும் அன்பர்; கனிமைமிகும் உள்ளமதால் இனிமை தரும் நல்லர்; கற்றோரைப் பேணுவதில், கவின்மையுறும் நெஞ்சர்; சீலம் நிறைந்த செம்மல்; செயல் திறனில் வல்லவர்; பொறுப்பை உணர்ந்தவர்; நம்பிக்கைக்கு உரியவர்; செயற்கரிய செயலையும், வியத்தகு முறையில் நிறைவுறச் செய்து இசை பெற வாழ்ந்த பெருந்தகை. தமிழ் மொழியின்பால் தணியாத காதல் கொண்டவர். இயல்பாகவே ஒருவர் தாய்மொழி மீதும், சொந்தப் பண்பாட்டின் மீதும் இருக்கக்கூடிய பற்றையும் பாசத்தையும்விட இவரிடம் கூடுதலாகவே நான் கண்டதுண்டு. தம் மூச்சுப் பேச்சு உணர்வெல்லாம் தமிழாகவே சிந்தித்தவர். தமிழுக்கு எங்கெல்லாம் ஏற்றம் செய்யுமோ அதையெல்லாம் ஒரு கடுகளவும் விடாமல் செய்தவர். தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். தமிழன் மட்டும் தன்னை உணர்ந்துவிட்டால் தம் மொழியின் தொன்மையை அறிந்துவிட்டால் அவன் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற உயர்வெண்ணம் கொண்டவர். தமிழன் மட்டும் தம் வரலாற்றையும் இலக்கியப் பெருமையையும் இலக்கணச் சிறப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் புரிந்துகொண்டால் அவனை வெல்வதற்கு உலகில் வேறு யாராலும் முடியாது என்று நம்பிக்கை ஊட்டுவார். உலகத்துக்கே மொழியாலும் நாகரிகத்தாலும் பண்பாட்டுச் செழுமையாலும் வளம் சேர்த்த தமிழினம் இன்று இப்படி நலிவுற்றுக் கிடக்கிறதே என்று கவலை கொள்வார். மிகப் பெரிய நாகரிகமும் சிந்தனையும் கொண்ட தமிழினம் அறியாமையால் இப்படி சுருண்டு கிடக்கிறதே என்று சிலவேளைகளில் என்னிடம் உள்ளூர வருத்தம் கொள்வார். எது எப்படியாயினும் தமிழால் முடியும் என்ற நம்பிக்கையை அவர் என்றும் கைவிட்டதே இல்லை. தமது எல்லாச் செயல்களிலும் தமிழையே தம் உற்றத் துணையாக அழைத்துக் கொள்வார். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்களவு தமிழை எல்லாத் தளங்களிலும் உயிர்ப்புடன் ஒளிர்வதை உறுதி செய்து கொள்வார். தமிழ் எல்லா இடங்களிலும் நீக்கமற வாழ்வதற்கு தம்மால் இயன்ற அனைத்து பணிகளையும் காலமும் பயனும் கருதாது செய்வதில் வல்லவர். பாரதியையும் தேவநேயப் பாவாணரையும் உளமார நேசித்து அவர்களைப் போல ஆக்கப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரோடு பணிபுரிந்த பலரைப்போல நானும் அவரின் தமிழுணர்வையும் சிந்தனையையும் கண்டு மெய்சிலிர்த்துள்ளேன். தனித்தமிழை நாளும் உச்சரிப்பதிலும் பிறருக்குப் பரவலாக்கம் செய்வதிலும் நிகரில்லா அவரின் முனைப்பும் உழைப்பும் ஈடிணையற்றது. பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய அருந்தமிழ்ப் புலவர்’, ஆசிரிய மணி’, தனித்தமிழ் மழவர் தமிழ்த்திரு குழ.செயசீலனார் மலேசியக் கல்வி உலகில் மிகவும் பண்டட்ட நல்லாசிரியராக ஒளிவீசித் திகழ்ந்தவர். அன்னார் கருணையில் ஊறிய இதயமும், அறிவில் வானச் செறிவும், அன்பில் மழையின் பயனும், அணைப்பில் தாயின் இனிமையும், நெறியில் தந்தையின் உறுதியும், என்றும் இனிய மொழியும், இதம் தரு செயலும், கனிவு நிறை நெஞ்சமும், கவினுறு தோற்றப் பொலிவும் கொண்டு வைரம்போல் ஒளி வீசித் திகழ்ந்தவர். நூலறிவும் நுண்ணறிவும் நிரம்ப பெற்ற இவர் அருந்தமிழிலும் ஆங்கிலத்திலும் கடல்மடை திறந்தாற் போன்ற பேச்சாலும் எழுத்தாலும் வல்லவர்; தமிழ்த் தொண்டில் தன்னிகர் அற்றவர். ஆசிரியம் என்பது தொழிலன்று, அஃது ஓர் இறைவழிபாடு என்று நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய அருங்குண ஆசிரியர்; தனித்தமிழ் வாணர். வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும் இறப்பு என்கிற தவிர்க்க முடியாத ஒன்றிற்குச் சமாதானம் சொல்லத் தெரியாமல் தவிக்கின்றான். ஆனாலும் உயிரின் இயல்பறிந்து காலம் அவனை மெல்ல ஆற்றுப்படுத்தும் மருந்து தந்து ஊக்கப்படுத்தி அடுத்த நகர்வுக்குத் தயார்ப்படுத்திவிடுகிறது. ஐயாவின் பிரிவால் துயருறும் எங்களை ஆற்றுப்படுத்துவதற்கு காலத்திடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. குழ.செயசீலனார் என்கிற தமிழ்த் தீபம் அணையவில்லை மரணத்தால் அணைக்கவும் இயலாது. தமிழை நேசிக்கும் நெஞ்சங்களில் அன்னார் ஏற்றி வைத்த ஒளிவிளக்கு தித்திக்கும் இலக்கணமாக இலக்கியமாக தனித்தமிழாக என்றும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கும். காலமே உன் நெஞ்சில் கருணையே இல்லையா?
புதன், 30 மே, 2018

புத்தனாக விரும்புகின்றேன்


“உங்களுக்குப் புத்தரை ரொம்ப பிடிக்கும் என்று தெரியும். வகுப்பில் பாடங்களினூடே நிறைய புத்தர் தத்துவங்களை பூடகமாகச் சொல்லியிருக்கீங்க. அதனால் எனக்கும் புத்தர்மீது ஒருவித அன்பு உண்டானது. உங்களுக்கு எதனால அவரைப் பிடிக்குமென தெரிஞ்க்கிலாமா?” புலனத்தில் புத்தர் படத்தோடு பொன்மொழியும் குறிப்பிட்டு அந்த முன்னாள் ஆசிரியர் கேட்டும் நான் பதிலெதுவும் அளிக்கவில்லை. இரவில் ஈப்போவிலிருந்து நான் புறப்பட்டு வரும்வேளை அந்த மாணவர் கைப்பேசியில் அழைத்து விளக்கம் கேட்டார். “சிலவற்றுக்கு காரணம் இருக்கும் இன்னும் சிவற்றுக்கு இருக்காது. மனிதன் எப்படி தோன்றினான்னு சொல்ல முடியும் ஏன் தோன்றினான்னு சொல்ல முடியுமா? அதுபோலத்தான் இதுவும்” நடிகர் சிவகார்த்திகேயன் பாணியில் கேள்வியைத் திருப்பிப்போட்டதும் அவர் மறுமுனையில் புன்சிரிப்பொலியோடு மெளனமாகிவிட்டார். “புத்தரின் இந்த மெளனப் புன்னகைதான் ஒருவேளை என்னைக் கவர்ந்திருக்குமோ?” கிண்டலாய் சொல்லி உரையாடலைச் சுருக்கமாக முடித்தேன். தொல்காப்பியன், திருவள்ளுவன், தாயுமானவர், வள்ளலார், பாரதி மீது ஏற்பட்ட தணியாத பாசமும் நேசமும்  தமிழால் அறிவால் உணர்வால் வந்தது. சிறுவயது முதல் என் இளநெஞ்சில் புத்தன்மீது பூத்த காதலுக்கு என்னிடம் தனிக்காரணமும் தெரியவில்லை ஏனென்றும் புரியவைல்லை. அந்த உந்துதலில்தான் புத்தன் பிறந்த லும்பினி’, ஞானம் பெற்ற போகையா’, ஞானத்தைச் சீடர்களுக்குப் பகிர்ந்த சரணாத்’, அவர் காலடிப்பட்ட குளித்த நர்மதா நதி என்று எல்லாம் ஒரு மதமற்ற யாத்திரீகனாய் எதுவும் சாராத மானுட சகபயணியாய் பெருந்தேடல் மனோபாவத்தோடு ஒரு காலத்தில் அலைந்து திரிந்திருக்கின்றேன். நம்நாடு உட்பட தாய்லாந்து, மியன்மார், கம்பூச்சியா, இந்தோனேசியா, நேபாளம், வட இந்தியா என புத்தனைக் கொண்டாடும் எல்லா பெளத்த மடாலயங்களுக்கும் கோயில்களுக்கும் சென்று புத்தனைக் காணாமல் திரும்பியிருக்கிறேன். செந்நிறம் அணிந்த சில புத்த சன்யாசிகளிடம் புத்தனின் சிந்தனைக் குறித்துப் பேசி அவர்களின் சடங்குப்பூர்வமான புரிதலால் மனம் மிகத் துவண்டிருக்கின்றேன். பெளத்தத்தைப் பின்பற்றும் நாடுகள் அன்புக்கெதிராக வன்மத்தையும் உயிர்க் கொலைகளையும் கிஞ்சிற்றும் கருணையின்றி செய்தபோதே புத்தனை நினைத்து இதயத்தில் இரத்தம் உறைந்து போனேன். அன்பும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதற்கு வித்திட்ட புத்தனின் சிந்தனையைச் சீழ்வடியச் செய்திருக்கும் புத்தப் பிக்குகளின் போக்கினைப் புறந்தள்ள தொடங்கினேன். உண்மையைக் கண்டடைய சொன்ன புத்தனுக்குப் பல்லாயிர உருவங்களை பொன்னாலும் பளிங்காலும் சமைத்திட்ட மதவாதிகளிடமிருந்து மிகத் தூரம் செல்லத் தொடங்கினேன். தேடொணா தேவனைத் தேடி என்னுள்ளே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று திருநாவுக்காரசர் கொண்டாடியதைப்போல பல்லாண்டுகள் வெளியில் எல்லாம் புத்தனைத் தேடித்தேடி இறுதியில் புத்தியில் உறைகின்ற புத்தனைப் புரிந்து கொண்டேன். அன்று தொடங்கி உள்ளம் வெள்ளைத் தாமரையாய் விரிய விரிய சொற்கள் இதழ்களாய் மெல்ல மெல்ல உதிர்ந்து வருகின்றன. முன்பு எந்த வினைக்கும் எதிர்வினையாற்றும் வேகம் மெல்ல மெல்ல குறைந்து வடிந்து வருவது தெரிகின்றது. எதுவும் நம்மால் விளையக் கூடியதே என்ற இறுமாப்பு எல்லாம் அதன்படி சரியாகத்தான் நடக்கிறதே என நம்பத் தொடங்குகிறது. தேடலில் இருந்த ஓட்டமும் ஆர்ப்பரிப்பும் சும்மாயிரு தேடுவதும் அடைவதும் எல்லாம் சுமையேயென போதுமென்று அடங்கி அமைதியாகி தலை வணங்குகிறது. இந்த எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் நானும் நான் காண்கின்ற அனைத்தும் சுவடில்லாமல் மறையப் போகிறது. நாளும் ஓடியாடி சேர்த்த கல்வி, உறவு, பொருள், புகழ் என எல்லாமே கையிலிருந்து மட்டுமல்ல நினைவிலிருந்தும் முற்றாக அழியப் போகிறது. நேற்று விசாக தினத்தில் புலனத்தில் வந்து விழுந்த பலநூறு புத்தரின் வாசகங்களில் என்றுமே என் கையில் எஞ்சியிருப்பதும் நான் மெய்யாக நம்புவதும் இந்தக் கணத்தில் வாழ் எனும் நிகழ்காலத் துளி மட்டும்தான். இங்கு நாம் எப்போதும் வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருப்பதில் காலம் கழிக்கிறோமேயொழிய வாழ்வதில்லை என்பது புத்தன் சொல்லும் சுடும் மெய்தானே?

ஞாயிறு, 27 மே, 2018

நன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்?


ஒவ்வொரு முறையும் பயிற்சி ஆசிரியர்கள் கல்லூரியெனும் வேடந்தாங்கலை விட்டுச் செல்லும் போதெல்லாம் ஏதேதோ ஆழமாக மனமுவந்து சொல்லத் தோன்றும் ஆனாலும் அவர்களின் முகங்களைக் கண்டதும் வார்த்தைகள் வற்றிப்போகும். சிலர் பிரியும் முன்பு சொல்லிச் செல்வர்; சிலர் மென்சோகத்தால்  சொல்ல வார்த்தையின்றி பிரிந்து செல்வர்; இன்னுஞ் சிலர் சத்தமில்லாமல்  சொல்லாமலே பிரிந்து செல்வர். விடைபெறும் காவியச் சிற்பங்கள் எனும் இந்த வகுப்பில் பலதரப்பட்ட சிறப்பியல்புகளும் திறமைகளும் அடங்கிய பயிற்சி ஆசிரியர்கள் நிறைந்திருப்பதை ஆரம்ப நாள் முதலே உணர்ந்துள்ளேன். பாடத்தைத் தாண்டி நாடகம், கவிதை, சிறுகதை, பேச்சுப் போட்டி, நடனம், குறும்படம், பயிலரங்கம், புத்தாக்கம், போன்றவற்றில் துடிப்பாகவும் புதுமையாகவும் ஒன்றிணைந்து செய்யும் வல்லமை கொண்ட பல்திறலாற்றல் மிக்க வகுப்பு இது. இந்தக் காவியச் சிற்பங்கள் கல்விக் கழக அனைத்து நடவடிக்கைகளிலும் மட்டுமன்றி தேசிய நிலையிலும் மிளிர்ந்த மிகச் செயல்திறமும் அறிவாற்றலும் படைப்பாற்றலும் மொழியாற்றலும் கொண்டது என்பதை இங்கு பயின்ற காலத்தில் பல போட்டிகளில் கலந்து நிருபித்துள்ளனர். மனத்தால் மலர்ந்திருக்கும் காவியச் சிற்பங்களின் அறிவாற்றலை இன்னும் பல்லாயிரம் முறை சாணை தீட்டியிருந்தால் இன்னும் இடைவிடாமல் உள்ளுணர்வை தொட்டிருந்தால் வானம் தொடும் தூரத்திற்கும் அவர்களால் சிறகு விரிக்க முடியும் என்பது என் நம்பிக்கை ஆனாலும் அதற்கான வாய்ப்பும் காலமும் எனக்கு போதிய அளவு வாய்க்கவில்லை என்பதைத் தவிர வேறெந்த குறையுமில்லை. தங்கத்தை உருக்கி எடுத்து அடித்து இழைத்து நகை செய்ய பொற்கொல்லன் தயாராக இருந்தாலும் தங்கமும் புடம் போடுவதற்கும் உருமாற்றிக் கொள்வதற்கும் ஒத்துழைப்பது அவசியமல்லவா?. கடந்த வாரம் நால்வர் நினைவுப் பரிசு தந்து சென்றனர். நேற்றும் விடைபெறும் நோக்கில் அறுவர் வந்து விரிவுரைஞர்களைக் கண்டு சென்றனர். என்னை நோக்கி வந்த அவர்களுக்கு வாழ்க என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர வேறொன்றும் கொடுப்பதற்கு என்னிடம் பெரிதாக எதுவும் இல்லை. நான் கற்றல் கற்பித்தலினூடே வகுப்பில் சொன்னதும் முகநூல் வழியாக எழுத்தில் சொன்னதும் போதுமெனவும் அதுவே நிறைவாகவும் நிறையவும் உள்ளதாய் நினைக்கின்றேன். நாளுக்கு நாள் பேசுவதற்குரிய சொற்கள் என்னிடம் குறைந்து வருவதாகே இப்போதெல்லாம் உணர்கின்றேன். ஆனாலும் கல்லூரியின் இறுதி நாளில் பிரியவிருக்கும் அவர்களிடம் ஒருசில வார்த்தைகள் உளமார பரிமாறினேன். “வாழ்க்கை மிகமிக அழகானது மட்டுமல்ல கொண்டாடக்கூடியது. நம் எதிர்பார்ப்புக்கு முரணாக சிலவேளை அமைந்தாலும் அது பொருள் நிறைந்தது. வெறும் மனத்தால் வாழ்ந்து தீர்த்து முடிப்பதற்கு மட்டுமல்ல இளமை. அறிவைக் கூர்மைப்பட அழகுற செய்து வாழ்வில் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களை வேரறுத்து வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய அவசியமும் இளமைக்கு தேவையாகிறது. அதற்கும் மேலாக உள்ளுணர்வை உணர்ந்து இந்தப் பிரபஞ்ச வெளியோடு ஒன்றிணைந்து வாழும் பேரின்ப வாழ்வை இப்போதே சிந்திக்க வேண்டுவதும் அவசியமாகிறது. இந்த அற்புதமான ஆசிரியப் பணியில் ஒவ்வொரு மாணவனிடத்தும் மேற்சொன்ன மூன்றையும் விதைக்கப்போகும் உங்களை வாழ்த்துகிறேன்” என்று இரத்தினச் சுருக்கமாக விடை கொடுத்து அனுப்பினேன். இன்று புதிதாய்ப் பிறந்தேன் பாரதி சொல்வதுபோல ஒவ்வொரு நாளும் விடியலும் இருளும் புதிதே. ஒவ்வொரு நாளும் மலர்கள் மலர்வதும் உதிர்வதும் புதிதே. ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் கூடுவதும் குறைவதும் புதிதே. அதேபோன்று இந்த வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் சந்திப்பும் பிரிவும் புதிதே. இந்த இணைப்புகளுக்குள் நிகழும் உணர்வுப் பீறிடல்களும் வழிந்தொழுகும் உணர்ச்சி வடிகால்களும் என்றும் புதிதே. அந்தப் புதிதில் பெறுவதில் மகிழ்ச்சியையும் இழப்பதில் துன்பத்தையும் பெரும்பாலும் சராசரி மனிதனால் சமனாகப் பார்க்கவோ உணரவோ இயலாது. இன்பத்தில் சிலிர்த்துப் போகிற மனம் சோகத்தின் கனம் தாளமுடியாமல் கண்ணீரில் கரைந்துவிடுகிறது. இனி இவர்கள் காலடி எடுத்து வைக்கவிருக்கும் இந்த ஆசிரியமெனும் வாழ்க்கைப் பயணத்தில் எழுதப்போகும் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ கழிவுகளை  யார் வந்து கொட்டினாலும் அதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு மழைத்தூறலில் மணக்கும் தாய்மண்ணைப் போன்று எதையும் புறக்கணிக்காமல் நான் பணிசெய்து கொண்டுதானிருக்கிறேன். எத்தனையோ எண்ண விதைகளை இந்த ஆசிரியக் காட்டில் நான் தொலைத்தப் பின்னும் இன்னுமின்னும் பூக்கத்தான் செய்கிறேன். ஆசிரியத்தோடு ஒன்றித்து வாழும் உந்துதல் உள்ளவரை யாரும் எதையும் இழப்பதில்லை. இந்த சூட்சுமத்தை உள்ளுணர்வில் பதித்துக் கொண்டால்  ஆசிரியம் என்றுமே வளர்முகம்தான். இதுவரை கற்ற கல்விக்கும் நாளை வாழப்போகும் வாழ்க்கைக்கும் என்றென்றும் நன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்?

புதன், 23 மே, 2018

ஆன்மிகவிழிப்புதானே மெய்யான சிவராத்திரி?


நாம் எதற்காகப் பிறந்தோம்? நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? என்ற கேள்விகள் அகத்தாய்வுச் செய்யும் மனிதனை வழிநெடுக குடைந்துகொண்டிருக்கும். கடவுளை அடைவது அல்லது சொர்க்கத்துக்குப் போவது என்ற பலதரப்பட்ட பதில்கள் மதவாதிகளிடம் மண்டிக்கிடக்கும். பிறந்துவிட்டால் ஒருநாள் இறப்பது உறுதிதானே என்று பிதற்றும் பதில்களும் உண்டு. பிறந்துவிட்டதுனாலே இந்த வாழ்க்கையில் இறப்பது குறிக்கோளாக இருக்க முடியாது. அதுதான் குறிக்கோள் என்றால் நாம் எதற்கு பிறக்க வேண்டும்?. இந்த மெய்க்குள் மறைந்திருக்கும் மெய்யான ஒன்றை உணர விழிப்புணர்வு கொள்வதுதானே மனித உயிர் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க முடியும். நம்முள் ஒளிந்திருக்கிற கடவுளைத் தேடி எங்கும் கடவுளாக நீக்கமற நிறைந்திருக்கிற நிலைக்கு நாம் உயரவேண்டும் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் மகாசிவராத்திரி போன்ற  திருநாட்களை ஏற்பாடு செய்து வைத்தார்கள். வாழ்நாளில் பெரும்பாலும் இரைதேடலுக்கே செலவிட்டு வீணே கழிந்து தன்னையறியாமல் ஒரு மனிதன் இந்தப் பிறவியை முடித்துவிடக்கூடாது என்பதற்கான கருணையாகத்தான் இந்த நாட்களை நான் சிந்தித்துப் பார்க்கின்றேன். இறைதேடலோ, இறைதாகமோ, இறைப்பசியோ எதுவாகவோ இருக்கட்டும் இந்தப் பிரபஞ்சத்தோடு நான் வேறு நீ வேறு எனாதிருந்து ஒன்றிகலக்க இது போன்ற தவமுயற்சியும் பயிற்சியும் உள்முகமாகப் புதுவெளிச்சம் பாய்ச்சும். விடிய விடிய விழித்திருக்கும் பழக்கம் எனக்கு இல்லையென்றாலும் வழக்கம்போலவே வீட்டிலேயே மனைவியும் பிள்ளைகளும் பொழுது விடியும்வரை குதூகலத்தோடு மகாசிவராத்திரியைக் கொண்டாட முற்பட்டனர். பெரும்பாலும் நானும் பிள்ளைகளும் நள்ளிரவுக்குப்பின் தூங்கிப்போய்விடுவோம். மனைவி மட்டுமே விழித்திருந்து மகாசிவராத்திரியை வைராக்கியத்தோடு நிறைவேற்றுவாள். இம்முறை இரவு ஒருமணிவரை அவர்களோடு இணைந்துகொண்டேன். சிவபுராணம் தொடங்கி சில தேவாரத் திருவாசகப் பாடல்கள் பாடினோம். வள்ளலாரின் திருவருட்பாவிலிருந்து தேடி எடுத்த சில பாடல்களைப் பாடி அதைப் பற்றி கலந்து உரையாடினோம். நினைத்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே- நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து ஒவ்வொரு வரியையும் பாடப்பாட ஊனும் உயிரும் இனித்தது. கண்டதெல்லாம் அநித்தியமே, கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே, நீர் களித்ததெல்லாம் வீணே, உண்டதெல்லாம் மலமே, உட்கொண்டதெல்லாம் குறையே, உலகியலீர் இதுவரை உண்மை அறிந்திலரே அந்தப் பாடலில் தொடர்ந்த இந்த வரிகள் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகளும் தொடர்ந்த சிந்தனைகளும் மின்னி மின்னி மறைந்தன. கற்றதெல்லாம் பொய் என்ற தொடர் என்னுள் குடைந்து கொண்டிருந்தது. மற்றொரு பாடலில் குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக்கிக் கொள்ளல் உனக்கியல்பே என்று வள்ளலாரே கையேந்தி அந்தப் பேரறிவை இறைஞ்சும்போது நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது. என்னால் ஆவதொன்றும் உனக்கில்லையெனினும் எந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்தருளே எப்படி இவ்வாறெல்லாம் அவரால் பரம்பொருளோடு பேசமுடிந்திருக்கிறது என்பதை எண்ணி வியந்தேன். ஒவ்வொரு பாடலில் தேன்சிந்தும் தமிழ்ச்சுவை, ஊனுயிர் உருக்கும் ஆன்மிக திருச்சுவை. சிவராத்திரியில் மட்டுமல்ல இனிமேல் முடிந்தால் வாரம் ஒரு முறையாவது வள்ளலார், தாயுமானவர், சிவவாக்கியர் யாத்த தெய்வீகப் பாடல்களைக் குடும்பத்தோடு கலந்து பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வெறுமனே புறக்கண்களால் விழித்திருப்பதா மகாசிவராத்திரி ? ஆன்மிகவிழிப்புதானே மெய்யான சிவராத்திரி?