திங்கள், 15 ஜூலை, 2019

இ..ளை..ய..ரா..ஜா.. எனும் இசையருவி


ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே தான் மலர்வதை உணரச் செய்யும் மாமருந்து இலக்கியமும் இசையும்தான். தன்னுள்ளே தன்னைக் கரைந்திடச் செய்யும் இசைவாணர்கள் என்றும் என் வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். நாற்பதாண்டுகளுக்கு மேலாக காலை கண்விழிப்பு முதல் இரவு கண்மூடி துயில்வது வரை உலகத் தமிழர் நெஞ்சங்களை காற்றில் கரைந்துருகும் இசையால் தினம் வருடும் பெயர்  இளையராஜா மட்டும்தான். இந்தப் பண்ணைபுரத்து கிராமத்து மண்ணில் தோன்றிய ராசைய்யாவின் இசையின் மகுடியில்தான் ஒட்டுமொத்த தமிழ்கூறு நல்லுகமும் நாளும் நகர்கிறது. இந்தக் காற்று மண்டலமெங்கும் இளையராஜாவின் இசைத் தீண்டலால் தேனாய் ஒலிக்கிறது. இசையின் இலக்கணத்திற்கு வேண்டுமானால் ஏழு ஸ்வரங்கள் இருக்கலாம் அவரைக் கொண்டாடும் உள்ளங்களுக்கு இ..ளை..ய..ரா..ஜா.. எனும் வெறும் ஐந்து ஸ்வரங்கள் மட்டும்தான். இன்பமோ துன்பமோ, காதலோ கவிதையோ, துள்ளலோ துவலலோ, துடிப்போ தகிப்போ, புன்னகையோ கண்ணீரோ இந்த வாழ்வில் வழிந்தோடும் இன்னும் என்னென்ன சொல்லொண்ணா மனித உணர்ச்சிகளோ அதையெல்லாம் இந்த இராகதேவன் இசையில் கரைத்து கரையேறும் பலரை நான் இந்த வாழ்க்கை வழியெங்கும் நிறையவே கண்டு வருகின்றேன். இளையராஜாவின் எண்ணற்ற இசை பேரின்பத்தில் இதயம் கரைந்து போவது மட்டுமல்ல மொழியால் உருக்கொள்ளவே முடியாத பற்பல காட்சிகள் பரந்து விரிந்து காற்றிலேறி முடிவின்றி மேற்சென்று முடிவற்ற எல்லை நோக்கி போய்க்கொண்டேயிருக்கும். என் வாழ்க்கையில் இளமை அரும்பும் பருவமான அந்த எழுபதுகளின் இடையில் இளையராஜாவின் வருகை புதியதொரு வசந்தத்தைக் கிளர்ந்தெழச் செய்தது. என் பக்கத்து வீட்டுப் பெட்டி போன்ற பெரிய வடிவிலான வானொலியிலிருந்து வழிகிறது அன்னக்கிளி படப்பாடல். அப்போது எனக்கு மீசை சிறிய கரிகோடாய் அரும்பத் தொடங்கிய பதினைந்து வயது. என் காதுகளில் அன்னக்கிளி உன்னைத் தேடுதே.. இனிய தாலாட்டாய் வந்து விழுகிறது. பின்னர் வந்த பதினாறு வயதினிலே செந்தூரப்பூவே , கவிக்குயில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் மனத்தில் பச்சைக் குத்திச் சென்றன. தொடர்ந்து வெளிவந்த உதிரிப் பூக்கள்’, முள்ளும் மலரும் போன்ற பலநூறு படப் பாடல்களும் இந்த இசை ராஜாதி ராஜனை ரசிக்கும் மனோபாவத்திலிருந்து மனத்தில் வைத்துக் கொண்டாடும் நிலைக்குத் தானகாவே உயர்த்திச் சென்றன.  இளையராஜா இசையை இரவெல்லாம் இதயம் முழுக்க சுவாசித்து சுவாசித்து நீடித்த இனிய பொழுதுகள் பல. இசையால் மணக்கும் இந்த மனிதனை மிக அதிசயமாகவே பார்க்கத் தொடங்கிய பருவம் அது. இன்று இளையராஜாமீது சிற்சில விமர்சனங்கள் வந்தாலும் அவரின் இசையால் கொண்ட அந்த வியப்பும் மலைப்பும் இன்னும் என்னுள் கிஞ்சிற்றும் குறைந்தபாடில்லை. ஏகலைவனைப் போலவே நானும் இந்த இராகதேவனுக்குத் தெரியாமலே ஒரு ரசிகனாக, காதலனாக, மாணவனாக, நண்பனாக நாற்பதாண்டுகளுக்கு மேலாக அவரின் இசையை நெஞ்சில் பிடித்துக்கொண்டே பயணித்திருக்கின்றேன். அவரின் இசையில் இதயம் தோய்ந்த பல்லாயிரம் ரசிகர்கள் பலரும் தங்கள் ஒவ்வொரு பருவத்தையும் என்னைப் போலவே கடந்து வந்திருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். எந்தவொரு சூழலிலும் அன்று முதல் இன்றுவரை இளையராஜாவின் இசைதான் என் பின்னணியில் அரூபமாக நின்று ஒலிக்கும். இப்போது எழுபத்தைந்தைத் தொட்டிருக்கும் நமது இளையராஜா நூற்றாண்டையும் தாண்டி இசையால் என்றென்றும் இந்த உலகை ஆலாபனை செய்ய நெஞ்சார வாழ்த்துவோம். இறைவனைப் போலவே மிக உயர்ந்த உன்னத கலைஞர்களும் சொற்களுக்குள் சிறைவைக்க முடியாதவர்கள். அதுபோல எந்த உன்னதச் சொற்களையும் உயர்ந்த எதுவோடும் குழைத்துச் சொல்லி நம் இசை ராஜாங்கத்தின் இசைஞானியைத் தொட்டுவிட முடியாது. அவரின் இசையெனும் அமுதத்தேன் பருகியதில் ஏற்பட்ட கிறக்கத்தில் என் சிற்றறிவுக்கு எட்டிய ஆனந்தத்தில் கொஞ்சம் எட்ட முயன்று தோற்றுப் போகின்றேன். எத்தனையோ இரவுகள் என் மூத்த மகளை தோளில் சாய்த்துக்கொண்டு கண்ணே! நவமணியே! உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ?’ இளையராஜாவோடு ஓராயிரமுறைக்கு மேல் ஊனுயிருருகியிருப்பேன். அந்த இறைவனைப்போல அனைத்தும் கடந்து நிற்பதுதானே இசை?

கருத்துகள் இல்லை: