ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

மின்னியல் விளையாட்டுகள் மூலம் சுயக் கற்றலை மேம்படுத்துதல்


1.       அறிமுகம்
ஒவ்வொரு குழந்தையும் தனியாகவோ கூட்டாகவோ சுயமாக விளையாட்டுகளை உருவாக்கும் திறன் கொண்டவர்களாகவே பிறக்கிறார்கள். உண்மையிலேயே இந்தச் சுயமான விளையாட்டுகள்தான் நமது நாட்டின் தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப அவர்களை உடல், மனம், அறிவு, ஆன்மிக நிலைகளில் முழுமைப் பெற்ற மாந்தராக பின்னாளில் உருவாக பெருந்துணை புரியும். குழந்தைகளின் நுண்ணுணர்வை மதித்து அவர்களுக்கேற்ற மின்னியல் விளையாட்டுகளின் மூலம் தேவையான சுதந்திரம் அளித்து, ஒவ்வொரு மாணவரின் சுயக்கற்றலைத் தூண்டினாலே கல்வி உலகம் மிகச் சிறந்து விளங்கும் என்பதை முன்மொழிகிறது இந்த ஆய்வுக் கட்டுரை.

நம் சமூக அமைப்பில் விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்காகவும் வெறுமனே நேரத்தைக் கழிக்கின்ற செயலாகவும் தவறாக பொருள் கொள்ளப்படுகிறது. விளையாட்டு என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு அர்த்தமற்ற செயல் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. அதற்கு மாறாக கற்றலால் களைத்துப்போன குழந்தைகளுக்கு விளையாட்டானது மனத்தாலும் அறிவாலும் இளைப்பாறுவதற்கு ஏற்ற நிழலாக உதவும் ஒன்றாகவும் திகழ்கிறது. வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் மன மலர்ச்சிக்கும் அறிவு திறப்புக்கும் ஆன்மிக விழிப்புக்கும் இன்றைய நவீன மின்னியல் விளையாட்டு மிக இன்றியமையாததாகும்.
                                         
2.       கல்வி உலகில் மின்னியல் விளையாட்டுகள்
உளவியல் அடிப்படையில் ஆராய்ந்து நோக்கினால், குழந்தைகளின் மன வளர்ச்சிக்கும்  தேவையானதை விளையாட்டு மட்டுமே பெரிய அளவில் செய்து கொடுக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தன் வயதுக்கேற்ற மனத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் தேவையான விளையாட்டைத் தானே உருவாக்கிக்கொள்ளும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நுண்ணறிவுடன் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூரிப்புடன் பலநூறு தடவை திரும்பத் திரும்ப சளைக்காமல் விளையாடுவது, அதனுடைய தொடர்ந்த வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிகிறது. சிறுவர்களின் அறிவுக்கும் மனவளர்ச்சிக்கும் சிறந்த விளைபயன் நல்கும் ஏற்புடைய மின்னியல் விளையாட்டுகள் மனத்தைக் கவரும் வகையில் அமைந்ததாகவும் மனமகிழ்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை செயல்பாட்டைத் தூண்டுவதாகவும் இருப்பதை உறுதி செய்வது அவசியம் (Rubin,Fein & Vandanberg, 2009)
இன்றைய கல்வி உலகில் மின்னியல் விளையாட்டுகளின் வரவு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் பயன் நல்குவதாக அமைந்துள்ளது. மின்னியல் விளையாட்டுகள் மூலம் ஆசிரியரின் கற்பித்தலில் எளிமை, ஈர்ப்பு, வளமை போன்ற புதுமைகள் நிகழ்ந்துள்ளன. மாணாக்கர் கற்றலில் மனமகிழ்வு, இனிமை, நுணுக்கம் விரிவடைந்துள்ளது கண்கூடு. காலச்சுழச்சிற்கேற்ப மின்னியல் விளையாட்டுகள் கற்றல் கற்பித்தலுக்கு துணைநல்கும் பொருட்டு பல்வகை மென்பொருள்களாக விற்பனைச் சந்தையிலும்  வலைத்தளங்களில் நாள்தோறும் பெருகி வருகின்றன.

இன்றைய கற்றல்கற்பித்தல் விளைபயன் மிக்க தாக்கங்களையும் ஆக்ககரமான உருமாற்றங்களையும் மின்னியல் விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ளதை ஆய்வுகள் வழி கண்டறியலாம். இன்றைய மின்னியல் விளையாட்டுகள் சிறுவர்களை பல மணி நேரம் கணினி முன் அமர்ந்து ஆர்வத்தோடு கற்கும் ஆற்றலைத் தூண்டும் வல்லமையைக் கொண்டிருக்கின்றன (Ardyanto et al.,2008). இந்த மின்னியல் விளையாட்டுகள் கற்றலில் சிறுவர்களின் சிந்தனைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் பன்மடங்கு ஆர்வத்தையும் தூண்டும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது (Sobel & Maletsky., 2005)

3. கல்வியில் மின்னியல் விளையாட்டுக் கோட்பாடுகள்

இன்றைய நவீன கற்றல்கற்பித்தல் சூழலில் எந்தவொரு பாடப்பொருளறிவும் மாணாக்கரின் பட்டறிவுக்கு நேரடி தொடர்புடையதாக இருப்பது இன்றியமையாததாகிறது. நெடுநாள் அச்சு ஊடகங்களின் வாயிலாகவே ஆசிரியர் நடத்திய கற்றல்கற்பித்தல் மாணாக்கர் பெரும்பாலோர்க்கு பெரும் மனச்சோர்வையும் சலிப்பையுமே தந்துள்ளது. ஆக கற்றலில் புத்துணர்வையும் சுயத்தேடலையும் ஏற்படுத்தும் விதத்தில் மின்னியல் விளையாட்டுகள் பெரும் பங்காற்றுகின்றன. மாணாக்கர் தாமாகவே சுயமாகக் கற்பதற்கும் புதியனவற்றைக் கண்டறிவதற்கும் தொடர்ந்து அகப்புற நிலைகளில் தம்மை விரிவாக்கம் செய்து கொள்வதற்கும் மின்னியல் விளையாட்டுகள் உறுதுணை புரிகின்றன. மின்னியல் விளையாட்டானது ஏரணமாகவும் விளையாட்டு விதிகளையும் வரையறைகளையும் சுய மதிப்பீடு செய்யும் முறைகளையும் கொண்டிருக்கும். மேலும் மாணாக்கர் சுயமாக தம்மைத் தாமே மதிப்பீட்டு மேம்படுத்திக் கொள்வதற்கு இம்மின்னியல் விளையாட்டுகள் வழிவகுக்கும்.

4. மின்னியல் விளையாட்டுகளின் வழிக் கற்றல்கற்பித்தல்
சுயக்கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியரானவர் கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் மின்னியல் விளையாட்டுகளை அமைவதை ஆசிரியர் முதலில் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து மாணாக்கர் அகவைக்கும் அறிவுநிலைக்கும் மனவளர்ச்சிக்கும் உகந்ததாக அமையும் மின்னியல் விளையாட்டை உறுதிபடுத்துதல் அவசியம். மேலும் அவ்விளையாட்டுகள் போட்டியுணர்வை கொண்டதாக அமைதலும் வேண்டும். மின்னியல் விளையாட்டுகளின் உள்ளடக்கம் மாணாக்கர் நிலைக்கேற்பவும் கற்றல் நெறிகளுக்கேற்பவும் தெரிந்ததலிருந்து தெரியாததை நோக்கியதாக இருப்பதை ஆசிரியர் வகைப்படுத்துதல் வேண்டும். மாணாக்கர் தங்கள் விருப்பத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் குறிப்பிட்ட காலவரையறையின்றி எந்நேரத்திலும் மின்னியல் விளையாட்டுகளில் ஈடுபடலாம். ஆனால் பள்ளிச் சூழலில் காலையில் வகுப்பைத் தொடங்குவதற்கு முன்னரும் ஓய்வுவேளையின்போதும் பள்ளி முடிந்த பின்னரும் மாணாக்கர் ஈடுபடுவதை ஆசிரியர் திட்டமிட்டு ஊக்கலாம். ஆசிரியர் மாணாக்கர் இடையிலான கற்றல்கற்பித்தல் தடைகளை முறியடிப்பதோடு சுயத் தேடலுக்கான சாத்தியங்களை அதிகரிக்கின்றது.

 


மாணக்கரின் சுயக்கற்றலை மேம்படுத்தவும் மிகுந்த நெகிழ்ச்சித் தன்மையோடு செயல்படுத்தவும் மின்னியல் விளையாட்டுகள் பெரிதும் துணைபுரியும்(Smaldino, Rusesell,Heinich&Molenda ;2005). மின்னியல் விளையாட்டுகளை மேற்கொள்ளும்போது மாணாக்கர் சரி அல்லது தவறு அடிப்படையில் தெரிவு செய்யும்போது இரண்டு மாறிகளுக்கிடையிலான பயன்பாட்டை முறையாக அறிந்து செயல்படுவர். சரியான விடையைத் தெரிவு செய்த மாணாக்கர் தொடர்ந்து சவாலான விளையாட்டை மேலும் தொடர்வர். தவறான விடையைத் தெரிவு செய்பவர் குறையைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுவதோடு சரியான விடையைப் பற்றிய புதிய அறிவையும் பெறுவர்.

மூளையானது புதிய அறிவை உள்வாங்கி, நிர்வகித்து, வகைப்படுத்தி, சேமித்து தேவையான போதில் வெளியிடுவதே கற்றலில் இடம்பெறுகிறது. ஒவ்வொரு மாணாக்கரின் முன்னறிவையும் பட்டறிவையும் கருத்தில் கொண்டு பாடங்களுக்குரிய மின்னியல் விளையாட்டின் அறிவும் உள்ளடக்கமும் முறைப்படுத்தப்படுவது அவசியமாகும். மாணாக்கர் ஏற்கெனவே தங்களிடமுள்ள முன்னறிவின் அடிப்படையிலே புதிய அறிவைப் பெறுவர். மின்னியல் விளையாட்டுகள் மூலம் மாணவர்கள் தங்கள் முன்னறிவு சார்ந்தும் உணர்வு சார்ந்தும் புதிய பல சிக்கல்கள் களையும் அல்லது முற்றாகத் தீர்க்கும் வழியைக் கண்டறிவர் (Steffe & Kieren ;1994)

5. கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற மின்னியல் விளையாட்டுகள்
·            சவால் விளையாட்டுகள்
சவால் விளையாட்டானது மிக விரைவில் விளையாடப்பட வேண்டியதொன்றாகும். வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் மாணாக்கர் சிக்கல் களைவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
·            புதிர் விளையாட்டுகள்
புதிர் விளையாட்டுகள் மாணாக்கரின் சிந்தனைத் திறப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு வாழ்வியல் நிலைகளோடு தொடர்புப்படுத்தும் தன்மையையும் கொண்டதாக அமைந்திருக்கும்.
·            நிர்வகிப்பு விளையாட்டுகள்
சுய உருவாக்க திறத்தின் அடிப்படையில் இவ்வகை விளையாட்டுகள் அமைந்திருக்கும். குறைந்த மூலங்களைக் கொண்டு நகரம், கட்டடம் போன்றவற்றை உருவாக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.
·            தேடுதல் விளையாட்டுகள்
கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பெற்ற தேடுதல் விளையாட்டுகளில் மாணாக்கர் வரையறுக்கப்பட்ட விதிகளைக் கட்டாயம் கடைப்பிடித்து விளையாடுவதோடு கற்பனைத் திறத்தை விரிவுபடுத்துவதாக அமைந்திருக்கும்
·            போல செய்யும் விளையாட்டுகள்
விளையாட்டாளரே முதன்மை கதைமாந்தராகி புதிய ஆற்றலும் திறனும் பெற்று எதிரிகளை அழித்து வெற்றி நாட்டுவதாக அமையும். இவ்வகை விளையாட்டுகளின் வழி சிக்கல் தீர்த்தலும், அனுமானித்தலும், தடையைச் சாதூரியமாக எதிர்க்கொள்ளும் முடிவெடுக்கும் திறமும் கிடைக்கப்பெறும்.

மேற்குறிப்பிட்ட மின்னியல் விளையாட்டுகள் பலவகை வடிவங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. நவீன மின்னியல் விளையாட்டுகள்  மாணாக்கரின் மொழியாளுமைக்கும் பயன்பாட்டிற்கும் உகந்ததாகவே திகழ்கின்றது. பெரும்பாலும் எழுத்துக்களாலான பகுதிகளும் படங்களுடன் கூடிய வரிபடக் கருவிகளால் அமைந்தவையும் செவிப்புலனுக்கேற்ற ஒலி வகைகளும் கட்புலனுக்கேற்ற ஒளியிலான அசைவு படங்களும் இவற்றுள் அடங்கும்.

6. மின்னியல் விளையாட்டுகளின் கூறுகள்
·            வரையறுக்கப்பட்ட இலக்கு
·            விதிமுறைகளும் சவால்களும்
·            போட்டியுணர்வும் கற்பனை விரிவும்
·            பாராட்டும் மனநிறைவும்

மின்னியல் விளையாட்டுகள் மூலம் ஆண் பெண் இருபாலரிடையேயும் தன்னம்பிக்கையை அதிகரித்து கற்றல் விளைபயனானது பன்மடங்கு பெருகுகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன (Matthew;2007). மேலும் மின்னியல் விளையாட்டுகள் மாணாக்கரின் அறிவில் நேர்மறைச் சிந்தனைகளை விதைப்பதோடு மதிப்பீட்டு அடைவுநிலையைக் கூட்டுகிறது என கண்டறியப்பட்டுள்ளது (Neil, Diane & Carol; 2007). மின்னியல் விளையாட்டுகளால் கட்டுப்படுத்தப்பட்ட மாறி வகுப்புக்கும் கட்டுப்படுத்தப்படாத மாறி வகுப்புக்கும் இடையிலான முடிவுகள் மிகுந்த வேறுபாட்டைக் காட்டுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட வகுப்பின் அடைவுநிலை கற்றல் செயல்பாடுகளில் பன்மடங்கு உயர்வைக் காட்டுகிறது (Emram Yunus;2010).

7. தொகுப்புரை
இந்நவீன மின்னியல் விளையாட்டுகள் வழி ஆசிரியரை மையப்படுத்திய பழமையான கற்பித்தல் முறை மெல்ல மறைந்து மாணாக்கரின் சுயக்கற்றல் மேலோங்க வழி செய்கிறது. எந்த வற்புறுத்தலின்றியும் குறுக்கீடு இன்றியும் மாணாக்கர் தாமே விரும்பிக் கற்கும் மகிழ்ச்சியான கற்றல் சூழலும் ஏற்படுகிறது. மாணாக்கர் முழுக் கவனத்தோடும் கற்றலில் தன்னம்பிக்கையோடும் ஈடுபட வழிவகுக்கிறது.
இம்மின்னியல் விளையாட்டுகள் மாணாக்கர் தேவையறிந்து உதவவும் தொடர்ந்து அவர்கள் சுயமாகச் செயல்படவும் ஆசிரியருக்குத் துணை புரிகிறது. கற்றலில் ஆசிரியரிடமிருந்து ஒருவழிப்பாதையாக பெறும் அறிவாக இல்லாமல் பல்வழிப்பாதையாக மின்னியல் விளையாட்டுகள் விளங்குகிறன.(Rahimi Md Saad et al;2007).
மூளையில் புதிய உயிரணு இணைப்புகள் உருவாவதற்கு இந்த மின்னியல் விளையாட்டுகள் பெரிதும் உதவுகின்றன. தாங்களாகவே விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் பெரியவர்களும் கலந்துகொண்டால் அவர்களுக்கு நம்முடன் இருக்கும் இணைப்பும் உறவும் மேலும் ஆழமாகும். இவ்வாறு தன்னிச்சையாக விளையாடும் மின்னியல் விளையாட்டுகளின் மூலம் புதிய அறிவையும் அனுபவத்தையும் பெற வாய்ப்புண்டு. ஒரு மாணாக்கர் ஆரோக்கியமாக வளருவதற்கு ஏற்ற மின்னியல் விளையாட்டுச் சூழலை உருவாக்கிக் கொடுத்தாலே அவர்களின்  நுண்ணறிவு மிகச் சிறப்பாக இயங்கத் தொடங்கிவிடும்.


துணை நூல்கள்:
மீனாட்சி சுந்தரம், அ. கல்விப் புதுமைகள் மற்றும் மேலாண்மை, காவ்யமாலா பப்ளிசர்ஸ், சின்னாளப்பட்டி, 2010

நக்கீரன், பி.ஆர். தமிழ் இணையப் பல்கலைக்கழக மென்பொருள்கள் ஒரு கண்ணோட்டம், தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை, 2010

Matthew Johnson, The Effective Integration of Digital Games and Learning Content, New Literacy Learning, 2007

Neil, Diane & Carol, Educational Game: Answering The Call, United Publications, London, 2007




கருத்துகள் இல்லை: