“நேற்று
முகநூலில் கவிதையைப் பற்றி அழகாகச் சிலாகித்திருந்தீர்கள் ஆனால் அதற்குக் காரணமான
கவிஞனைப் பற்றி கண்டுகொள்ளவில்லையே. இது நியாயமா?” இலக்கிய
ஈடுபாடுடைய அந்த இளைஞன் எதேச்சையான சந்திப்பில் சட்டென்று கேட்டுவிட்டான். “உலகம்
மிகவும் அழகாக இருக்கிறது என்றால் அது உருவான மூலத்தையும் சேர்த்துதானே நாம்
பொருள் கொள்ள வேண்டும். கவிதையைக் காதலிக்கின்றேன் என்றால் கவிஞனிலும் கரைகின்றேன்
என்றல்லவா அர்த்தம்?. எந்த ஒரு மொழியிலும் இலக்கணத்தை
முற்றிலும் அறிந்திருந்தாலும் அல்லது அம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் தெரிந்திருந்தாலும் எந்த ஒரு அறிஞனாலும் புலவனாலும் கவிஞன் ஆகவே முடியாது. சொற்களை அடுக்கியதும் கவிதை உருவாகிவிடாது. கம்பனோ காளிதாசனோ ஷெல்லியோ கீட்ஸோ கவிஞனுக்கு முதலில் வருவது கவிதைதான் பின்புதான் சொற்கள் வருகின்றன.” என்று சுருக்கமாகச் சொல்லி விடைபெற்றேன். வீட்டுக்கு வரும் வழியில் கவிஞனைப் பற்றிய நீண்டதொரு சிந்தனை நினைவில் தொடர்ந்து பற்றிக் கொண்டே பின் வந்தது. கவிஞன் இந்த உலகை மொழிவழியாகவே பார்த்து அறிகிறான்; உணர்ந்து புரிந்து கொள்கிறான். இந்த வாழ்வை கவிதைகளின் வழியாகவே திறந்து சுவைக்கின்றான்; உய்த்துணர்ந்ததை உணர்வாக மொழிகின்றான். கவிஞன்தான் அன்பையும் அழகையும் மனித குலத்திற்கு ஆராதிக்கக் கற்றுத் தருகின்றான்; போராடவும் போரிடவும் நம்மை உந்தியும் தள்ளுகின்றான். நம் புலனை இறுக மூடியிருக்கும் அறியாமையின் திரைச்சீலையைத் திறக்கவும் செய்கின்றான்; அறிவில் தீக்குச்சி கிழித்து போட்டு நம்மைக் கொந்தளிக்கவும் செய்கின்றான். எனக்கு என்றுமே ஆதர்ச குரு பாரதிதான். அவன் எழுத்தே எனக்கு வேதம். அவன் வார்த்தை எனக்கு வானவில். அவன் கவிதை எனக்கு வாக்கு. எனக்குள் என்றுமே அவன்தான் யாதுமாகி நிற்பவன். இதுவரை என் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும் பாரதி வெளிச்சத்தில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். பாரதிதான் என் உச்சம் என்றாலும் பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, வாலி, மேத்தா, விக்ரமாதித்தன், தேவதேவன், தேவதச்சன், வைரமுத்து, அறிவுமதி வரை என எல்லாக் கவிஞர்களின் கவிதைகள் மீதும் எனக்குக் காதலுண்டு. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் இடைவெளியில்லாமல் வாழ்ந்த பாரதிபோல எல்லாக் கவிஞர்களையும் அப்பழுக்கற்ற வெள்ளை மனிதர்களாக இருக்க வேண்டுமென்ற என் எதிர்ப்பார்ப்பைதான் தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் மனத்தூய்மை மிக்க நம் நாட்டுக் கவிஞரான சீனி நைனாவின் பழக்கம் எனக்கு மனநிறைவு தந்தது. பாரதிக்கு அடுத்து கவிக்கோ அப்துல் ரகுமானில் நிறைய கரைந்திருக்கின்றேன். அவரின் கவிதை நூல்கள் ஒன்றுவிடாமல் பலமுறை நீந்தித் திளைத்திருக்கின்றேன். இன்றுவரை முடிந்தளவு நான் தேர்ந்தெடுத்த எல்லாக் கவிஞர்களின் கவிதைகளையும் தொடர்ந்து விடாமல் வாசித்துக் கொண்டுதானிருக்கின்றேன். ஒரு சுவைஞனாகக் கவிதை படிப்பதும் பகிர்வதும்தான் என்னால் தொடர்ந்து செய்யமுடிகிறது. இது நிரந்தரமற்ற வாழ்க்கை என்பது தெரிந்தும் அசாத்தியமான கனவுகளுடன் வாழ்வதுதானே மனித வாழ்க்கை.? அந்தக் கமனியக் கனவுகள் காண்பதற்கு நமக்குள் நம்பிக்கை விளக்கேற்ற காலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக