நானறிந்தவரை தமிழ்மொழி
வளர்ச்சிக்காக தங்கள் வாழ்நாளை முற்றும் முழுதாக அர்ப்பணித்துச் சென்றவர்களுக்குத்
தமிழர்கள் நன்றி பாராட்டுதலும் அவர்களின் தொண்டினைப் போற்றுதலும் மிகக் குறைவே.
வாழும் காலத்தில் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் உச்சபச்ச பாராட்டும் புகழும்
தப்பித்தவறி மொழிக்காகப் பாடாற்றிய அறிஞனுக்குக் கிடைப்பது மிகக் குறைவே. அந்த
வகையில் இந்த மலைநாட்டில் நான் நெருக்கமாகப் பார்த்துப் பழகிய தமிழறிஞர்கள்
சிலரில் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் என்றுமே தமது எண்ணத்திலும் எழுத்திலும் ஒட்டுமொத்த
வாழ்விலும் தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர். அமுதத் தமிழைத் தம்
உயிருக்கு நேராகக் கருதியவர். அவரின் பேச்சும் மூச்சும் மட்டுமல்ல இருதயமும்
குருதியும் தமிழாகவே துடித்தது. தமிழின் தொன்மத்தையும் வளத்தையும் தமிழரின்
பண்பாட்டுச் செழுமையையும் பறைசாற்றும் தொல்காப்பியத்தை முழுதும் சாறுபிழிந்து
அந்தத் தமிழமுதத்தை நாமும் மாந்தியுண்பதற்கு வழியமைத்துக் கொடுத்தது ஐயாவின் மிக
உன்னத அரும்பணி. ‘நல்ல தமிழ் இலக்கணம்’, ‘புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்’ போன்ற
நூல்கள் தொல்காப்பியத்தின் அற்புதப் பிழிவு. இன்று உலக அரங்கில் பிற இனங்களைக்
காட்டிலும் தலைநிமிர்ந்து நடக்க முடியுமென்றால் தமிழருக்கு இருக்கும் ஒரே
வாய்ப்பும் கருவியும் தமிழைத் தவிர வேறெதுவுமில்லை என்று உறுதியாக நம்பினார்.
அதற்காக தொல்காப்பியத்தை அகழ்ந்தாய்ந்து ஒவ்வொரு தமிழரும் ஓதியுணரும் வகையில்
நாடுதழுவிய நிலையில் பையிலரங்குகளும் இலக்கணப் பட்டறைகளும் விளக்கங்களும் சளைக்காமல்
வழங்கினார். அவரின் இந்த அரிய பெரிய முயற்சியை ஏற்றுப் போற்றும் வகையில் இந்த
மலைநாட்டிலே முதன்முறையாக நானும் நண்பர்களும் விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி
முன்னாள் மாணவர் மன்றம் வாயிலாக ‘தொல்காப்பியரோடு ஒரு மென்மாலைப் பொழுது’ என்ற
தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தோம். அந்தச் சொற்பொழிவுகளை நடத்தும்போது ஐயா
முழுக்க தொல்காப்பியராகவே மாறி மிகமிக எளிய முறையில் நமக்கு ஒவ்வொரு சூத்திரத்தின்
நுட்பத்தையும் தெளிவுடன் விளக்கி புரிய வைப்பார். பல்கலைக்கழகங்களில்கூட நடைபெறாத
இதுபோன்ற உயரிய தொல்காப்பியக் கலந்தாய்வை ஐயாவின்வழி நேரிடையாகப் பெற்றோம் என்ற
மனநிறைவு இன்று சற்றே ஆறுதளிக்கிறது. எங்களைப் பின்பற்றி பலரும் அவரை தமிழுக்காக
பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சியே. இந்த நாட்டைப் பொறுத்தவரை மாணவர் முதல்
பல்கலைக்கழகப் பேராசிரியர் வரைக்கும் இலக்கணத்திலும் இலக்கியத்திலும் ஏற்படும்
ஐயங்களுக்கு சரியான மருந்து தரும் முதன்மை பேராசான் ஐயாதான். எந்த நேரத்திலும்
எதைக் கேட்டாலும் உடனுக்குடன் அதற்கான நுட்பத்தையும் விளக்கத்தையும் தரும்
நடமாடும் பல்கலைக்கழகம் ஐயா. அவர் தொல்காப்பிய அமுதத்தை துளித்துளியாக வானொலியில்
‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியில் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகள் பெருமுயற்சியோடு
‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ எனும் நூல்வடிவில் கொண்டு வந்துள்ளோம். இந்த
நூலின்வழி ஐயாவின் படைப்பை ஆவணப்படுத்துவதோடு அவரின் கண்டடைவை உலகுக்கு உணர்த்தும்
கடப்பாடு நமக்குள்ளது. மேலும் தமது குடும்ப நலனை என்றுமே முன்வைக்காத ஐயாவின்
குடும்பத்தார்க்கு பொருளுதவி செய்யும் நோக்கிலே இந்த நூலை வெளியீடு செய்கிறோம்.
துளிரும் 16.9.2015 (புதன்கிழமை-
பொதுவிடுமுறை) பாரதி இலக்கிய நெஞ்சங்களும் லுனாஸ் தியான ஆசிரமும் இணைந்து தியான
ஆசிரம மண்டபத்தில் மாலை மணி 4.00 முதல் 6.30க்குள் நூல் வெளியீடு செய்யவுள்ளோம். இதுகாறும் பல
நன்னெஞ்சங்கள் சிறப்பான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வருவது பேருவகை அளிக்கிறது.
தமிழால் பிழைப்பு நடத்தும் நம்மைப் போன்றவர்கள் அவர்க்கும் குடும்பத்தார்க்கும் மிகுந்த
நன்றி கடன்பட்டுள்ளோம். காலமெல்லாம் தமிழுக்குப் பாடாற்றியவரின் குடும்பத்திற்கு
உதவி செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில், ரிம.30.00 கொடுத்து இந்நூலைப் பெற்று
ஆதரவு நல்குமாறு இந்த நிலைத்தகவலை படிக்கும் தமிழ்த் தொப்புள்கொடி உறவுகளே உங்களை
நோக்கி அன்போடும் உரிமையோடும் விழைகின்றேன். தமிழர்கள் என்றுமே நன்றி மறவாதவர்கள்தானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக