திங்கள், 15 ஜூலை, 2019

நெடுங்காவியம்தானே ஆசிரியர்?


என்னைப் பொறுத்தவரைக்கும் வாசிக்கக் கற்றுத் தரும் ஆசிரியர்களைவிட வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள உதவும் ஆசிரியர்களேதான் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கின்றது?. நாங்கள் மாணாக்கராய் இருந்த காலத்தில் எந்த வசதியும் இல்லாத எங்கள் ஆசிரியர்கள் பாடவேளையினூடே நாட்டிலும் வெளியிலும் நடக்கும் நிறைய விசயங்களைச் சுட்டிக்காட்டி சிந்தனையில் தெளிவு ஏற்படுத்துவார்கள். எழுத்தும் ஒலியும் மனத்தில் ஆழப் பதியும் வகையில் பன்முறை ஒலிக்கச் செய்து எங்கள் இதய நாற்றங்காலில் தமிழ் எழுத்துக்களை நட்டு வைத்த ஆசிரியர் திரு.சின்னையா அவர்களையும் திரு.சின்னக்கண்ணு அவர்களையும் நன்றியோடு கைகூப்புகின்றோம். தமிழ் எழுத்துகளை வடிவத்தோடும் கலை உணர்வோடும் எழுத வேண்டுமென்பதற்காக மெனக்கெடும் ஆசிரியர் திரு.கதிரவனின் கண்டிப்பும் கோபமும் இப்போது புரிகிறது. தொலைக்காட்சியோ வானொலியோ தோட்ட மக்களிடம் இல்லாத அந்த அறுபதுகளின் இறுதியில் ஆசிரியர்கள்தான் உலக நடப்புகளை எங்களுக்குப் பந்தி வைப்பார்கள்.  பாட நூலைத் தவிர வெறெதுவும் வாசிக்காத எங்களுக்குப் பொது அறிவை வளர்ப்பதற்காக ஆசிரியர் திரு.கிருஷ்ணன் அவர்கள் தாம் பழைய  நாளிதழ்கள் திரட்டிக் கொண்டு வந்து வாசிக்க ஊக்குவிப்பார்கள். ஆப்ரகாம் லிங்கன் என்ற சப்பாத்து தைக்கும் ஏழையின் மகன் எப்படி நெடுந்தூரம் நடந்து சென்று ஒரு பண்ணையில் வேலை செய்து அதற்குக் கூலியாக நூல் இரவல் பெற்று தெருவிளக்கின் ஒளியில் படித்து அறிவை வளர்த்துக்கொண்டு பின்பு உயர்ந்து அமெரிக்காவின் பதினாறவது அதிபரானர் என்ற கதையை ஆசிரியர் திரு. மு. இராஜகோபால் அவர்கள் வேப்பமர நிழலில் வாசிப்பு வகுப்பை நடத்தும்போது சொன்னது இன்னும் என்னுள்ளே சுருதி மாறாமல் ஒலிக்கின்றது. காற்பந்து, பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில்  எங்களைக் கலந்துகொள்ள செய்வதற்காகத் தம் சொந்த பணத்தில் வண்டி பிடித்து அழைத்துச் செல்லும் ஆசிரியர் திரு.சின்னப்பன் அவர்களின் ஊக்கம் மறக்கவியலாது.  மனிதன் சந்திர மண்டலத்துக்குச் சென்ற சம்பவத்தை தந்த வாரம் காலை சபையின்போது ஆசிரியர் திரு.மணியம் சிலாகித்து கூறியது இன்றும் நினைவில் இனிக்கிறது ஒவ்வொரு வகுப்பிலும் வாசிப்பு மூலைகளை உருவாக்கி அப்போதைய அம்புலிமாமா, திருமகள், போன்ற இதழ்களை வைத்து வாசிக்கச் செய்த ஆசிரியர் திரு. க.இராஜகோபால் அவர்களை மறக்கத்தான் முடியுமா?. மாலையில் குழு நடவடிக்கையையும் நிறைய அறிவுப் புதிர் போட்டிகளையும் நடத்தும் ஆசிரியர் திரு.பரசுராமன் அவர்கள் தனித்தொரு அடையாளம். ஆங்கில மொழிப் போட்டிகளையும் வாசிப்பு நடவடிக்கைகளையும் இவர்களோடு இணைந்து செயற்படுத்தும் ஆசிரியர் திரு.சின் அவர்களும் இன்றுவரை நினைவில் நிற்கிறார்கள். தமிழ்ப்பள்ளியில் இவர்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும்தான் எங்கள் வாழ்க்கை வழிநெடுகிலும் துணை வந்திருப்பதை நன்றியோடு சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கின்றோம். இத்தனைக்கும் அவர்களில் ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்து பலகாலம் காத்துக் கிடந்தவர்களே. பின்னாளில் நான் ஆசிரியராகப் பணியாற்றியபோது அவர்களின் சம்பளம் வெறும் தொண்ணூற்று ஆறு வெள்ளி என்பதை அறிந்து அதிர்ந்தேன். அந்தச் சொற்ப பணத்திலும் தேவைப்படும் மாணவர்களுக்கு புத்தகம், பென்சில், உணவு என்று கொடுக்கும் அவர்களின் தியாக மனம் போற்றுதற்குரியது. இடைநிலைப்பள்ளியிலும் மனத்தை மலரச் செய்த மக்கத்தான ஆசிரியர்கள் அமைந்தது மற்றொரு கதை. இடைநிலைப் பள்ளிக்குச் சென்ற பின்னரும் தோட்டத்துப் பின்னணியில் வசிக்கும் சூழல் சரியாக இல்லாததை உணர்ந்த ஆசிரியர் திரு.மணியம் அவர்கள் தாம் புதிதாக கட்டிய வீட்டுக்குக் குடிபுகாமல் எங்களுக்கு இலவயமாக அங்கு மூன்றாண்டுகள் தங்கிப் படிக்க நம்பிக்கையோடு அனுமதியும் முழுச் சுதந்திரம் கொடுத்தது எவ்வளவுப் பெரிய தியாகம்?.  நான்  எடுத்துக்காட்டிய இவை வரலாற்றுச் சான்றுகள் மட்டுமல்ல ஆசிரியர்கள் ஏற்றிவைத்த ஏணிப்படிகள். என்றுமே நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் அடக்க முடியாத நெடுங்காவியம்தானே ஆசிரியர்?

கருத்துகள் இல்லை: