ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ரெ.கார்த்திகேசுவின் 'விமர்சனமுகம் 2' நூல் – ஓர் அலசல் நாள் : 7.9.2012 நேரம் : மாலை 5.30 - 8.00 வரை இடம் : லுனாஸ் தியான ஆசிரமம் இலக்கிய நெஞ்சங்களே, வணக்கம். ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரோசாவா, “ஒருவரின் படைப்பைக் காட்டிலும் அவனை அதிகமாகச் சொல்லக்கூடியது எதுவுமில்லை” சொன்ன வரிகளிலிருந்து இந்த விமர்சனமுகம் 2 நூலையும் படைப்பாளரின் ஆளுமையையும் காண்போம். எந்தவொரு உன்னத படைப்பாயினும் அடன் வாயில்களினூடே அதைப் படைத்தவரின் மனலயத்தோடு இயைந்து பயணிக்க வேண்டுமெனில் வெறும் வார்த்தை தொடர்புகளோ, இலக்கணப் புலமையோ மட்டும் போதாது. படைப்பாளரின் அத்தனை உணர்வனுபவங்களையும் எட்டும் முயற்சியை இந்த அலசலில் தொட்டிருக்கின்றேன். இலக்கியங்கள் நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய உதவுகிறது. தூய இலக்கியவாதிகள் ஒரு பொழுதும் உன்னதத்தை அடைந்துவிட்டதாக நினைக்கமாட்டார்கள். மேலும் பலவாறு மேண்மையை மேம்படுத்த போராடுகிறார்கள். வாசகர்களான நமக்கு இஃது ஒரு பெருங்கொடை. வாசகர்களின் தீவிர வாசிப்பே படைப்பாளர்களின் படைப்பூக்கத்தின் புதிய கதவுகளைத் திறக்கிறது; புதிய எல்லைகளை கண்டடையச் செய்கிறது. இனிமேலாவது வாசிப்பை வாழ்வில் ஒரு முக்கியப் பகுதியாக சமுதாயமே வளர்த்தெடுக்க முனைய வேண்டும். இலக்கியவாதியின் வாழ்வும் ஒரு விதையின் வாழ்வும் ஒன்றுதான். பூமிக்குள் விதைக்கப்பட்ட விதையானது இரு வெவ்வேறு திசைகளில் தன் வாழ்க்கை பயணத்தைத் துவங்குகிறது. கீழ் திசை பயணமானது தன்னை நிலை நாட்டிக்கொள்ள, இருண்ட சூழலில் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்து அசையாத ஆணிவேராய் தன் இருத்தலை ஊன்ற வேண்டியுள்ளது. மேல் திசை பயணமானது வெளிச்சமும் மகிழ்ச்சியும் தந்து தன்னை பிறருக்காக அர்ப்பணிக்குமிடம். உயிர்குலம் முழுவதற்கும் காயாக கனியாக நிழலாக ஏன் அழிந்தப்பின் காகிதமாக கதவாக இன்னும் பலவாறாக பயன்தருகிறது. ஓர் இலக்கியவாதியும் அவ்வாறே தம்மை இந்த வாழ்விலே கரைக்கின்றார். பேராசியர் ரெ.கார்த்திகேசுவின் விமர்சனம் 2 நூலிலுள்ள கட்டுரைகள், விமர்சனங்ள், முன்னுரைகள், மனிதர்கள், கடிதங்கள், நேர்காணல், கேள்வி பதில் அனைத்தும் வறட்டு தத்துவங்களாலும் புள்ளிவிவரங்களாலும் நிறைந்தவை அல்ல. அவை புதிய பார்வையும் கூர்மையாய் உணர்த்தும் நேர்த்தியும் வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக பகிரும் தோழமையும் அழகிய கதைபோல் வாசகரிடம் பேசும் இயல்பும் கொண்டவை. மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும் என்ற கட்டுரையில் பல்லினம் சார்ந்த வாழ்வியல் பகிர்தல்களை மிக சுவைப்படக் காட்டுகிறார். இந்த நாட்டிலே முற்றிலும் தமிழர்களாலேயே வழி நடத்தப்படும் சிங்க நடனக் குழு, தமிழர் கலையான பரதத்தைப் பயின்று அடையார் இலட்சுமணனிடம் பயின்று இன்று உலகளாவிய நிலையில் பரத குருவாக விளங்கும் ரம்லி இப்ராஹிம், சந்திரபானு ஆகியோர் பிறப்பால் மலாய்க்காரர்களே எனும் சுவைத் தகவல்கள் நிறைய உள்ளன. உழைப்பை மூலதனமாக்கி இந்த நாட்டை உயர்த்திய சீனர்கள் பற்றி அருமையான பார்வையை மலேசியாவில் சீனர்கள் குடியேறிச் சமுதாயமா? என்று அம்னோ உறுப்பினரின் சீண்டலுக்கு தக்க பதிலுரைக்கிறார். தொடர்ந்து கால இட வழுப்போல பினாங்கில் இந்தியர்களின் வாழ்விடமாக அமைந்த ‘ஜாதிக்காய்’ கிராமத்தின் பல தகவல்களை முன்வைக்கிறார். ‘டேவிட் பிரவ்ன்’ என்ற தமிழர்க்கு ஈந்த கொடையை ஒரு ஜனநாயக அரசால் நீதிமன்றங்களில் துணையுடன் ராட்சத இயந்திரங்களின் கீழ் நசுக்கப்பட்டதை உணர்த்துகிறார். ‘பழங்கலத்தில் பழங்கள்’ என்ற பத்து கட்டுரைகளில் பினாங்கு தீவின் வளர்ச்சிக்கு தமிழர் ஆற்றிய அளப்பரிய பங்கினை தெள்ளிதின் காட்டுகிறது. மதுரை சின்ன மருதுத்தேவரின் மகன் துரைசாமித் தேவரின் மகன் 130 குற்றவாளிகளோடு இந்த நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது; அச்சுத்தொழிலை வி.நடேசம்பிள்ளை போன்றோர் வளர்த்தது; தாயம்மாள் அம்மாளின் செல்வச் சிறப்பும் ‘டோபி’ ராணியின் புகழும் காணப்படுகிறது. தொடர்ந்து ‘நாற்காலிக்காரர் கம்பம்’ வீரையன் தோட்டம், கருப்பன் தோட்டம், என காலம் மென்றுவிட்ட பற்பல தோட்டங்களை இன்றைய இளையோருக்கு அடையாளம் காட்டுகிறார். பினாங்கு தைப்பூசத்தைப் பற்றி 1871 இல் முன்ஷி அப்துல்லாவின் குறிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. ‘ஏலமுச்சந்தி’ பற்றியும் பினாங்கு சாலையில் 138 ஆம் எண் கடையிலிருந்து தொடங்கப்படும் தைப்பூச மரபும் வியப்பூட்டுகிறது. தொடர்ந்து தென்காசித் தமிழ் முஸ்லிம்களால் தொடங்கப்பட்ட அஞ்சுமான் தமிழ்ப்பள்ளி(1932), ஐக்கிய முஸ்லிம் தமிழ்ப்பள்ளி(1934), தென்காசி முஸ்லிம் தமிழ்ப்பள்ளி (1950) போன்ற குறிப்புகள் இழப்பை உணர்த்துகின்றன. கோ.சாவுக்கு முன்னோடியாக பல்கலையில் தேர்ச்சிப் பெற்ற சுவாமி இராமதாசரின் வழிகாட்டலும் சேவையும் மனதை வருடுகிறது. சமூக சீர்திருத்தத்தோடு ஆன்மிக வழியும் காட்டி ‘செந்தமிழ்க் கலாநிலையம்’ வழி தமிழ்ப் பயிர் செழிக்கச் செய்த அவரை இன்றைய தலைமுறை மறந்திருப்பது பெருங்குற்றமாகப் படுகிறது. தொடர்ந்து விமர்சனம் எனும் தலைப்பின் கீழ் இரா.முருகனின் ‘’மூன்று விரல்”, சை.பீர்முகமதுவின் ‘திசைகள் நோக்கிய பயணங்கள்”, கழனியூரனின் ‘நாட்டார் கதைகளும்”, அ.ரெங்கசாமியின் “லாங்காட் நதிக்கரை”, சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்”, இளங்செல்வனின் நாவல்களும் என்று இன்னும் பிறவற்றை ஆய்ந்து தமது இலக்கியப் பகிர்வை திறம்பட நயம்பட சாதுர்யமாக விமர்சிக்கிறார். இலக்கியம் தொடர்பான அறிவுச் செறிவும் தகவல் அடர்த்தியும் கொண்டு முதிர்ச்சியோடு ஆய்ந்த அளித்திருப்பது வாசிப்பவரை நிச்சயம் இலக்கியம்பால் ஈர்க்கும். ரெ.கார்த்திகேசு சுவாமியின் ‘வாழ்வே தவம்’, ஜெயந்தி சங்கரின் ‘நாலே கால் டாலர்’, சாரதா கண்ணனின் கதைகள், சங்கர நாராயணனின் ’நீர்வலை’, தேவராஜுலுவின் ‘நீரூற்றைத் தேடி’ என்ற நூல்களுக்கும் பெ.ராஜேந்திரனின்’ கரையை நோக்கி அலைகள்’ எனும் பயணக் கட்டுரை தொடர்பாக தாம் வழங்கிய முன்னுரைகளில் மிக நுணுக்கமாகவும் உண்மையாகவும் தமது பார்வையை வெளிப்படுத்துவது பகிர்தலாகவும் புதியவர்களுக்கு தூண்டுதலாகவும் விளங்கும் என்பது வெள்ளிடைமலை. மனிதர்கள் என்ற தலைப்பில் தம் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பாலா எனும் பேராளுமையின் அன்பு வலையில் தாமும் இந்தச் சமுதாயமும் பின்னிப் பிணைந்திருப்பதை நன்றியோடு சொல்வது மனத்தை நெருடுகிறது. ‘அவரது திருமேனி தகனத்துக்கு இயந்திரத்தில் உட்சென்ற வேளையில் என் வாழ்வில் ஒரு பகுதி எரிந்துபோனாதாய் உணர்ந்தேன்’ என ரெ.கார்த்திகேசு குறிப்பிடும் உணர்வானது நம்முள்ளும் பற்றிப் பரவுகிறது. தொடர்ந்து துன்.வீ.தி.சம்பந்தனாரால் திட்டப்பட்டதும் பின்னர் தமது திருமணத்திற்கு அவர் துணைவியரோடு வந்து வாழ்த்தப்பெற்றதையும் நினைவுகூர்கிறார். நமது நாட்டின் சிறுகதை வளர்ச்சிக்கு இறக்கும்வரை அரும்பணியாற்றிய சி.வேலுசாமி பற்றி சொல்லும் அனுபவ பகிர்வு தித்திப்பானது. கடிதம் எனும் தலைப்பில் தமிழ் நாளிதழ்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகளுக்கு ஏற்புடைய முறையில் ஒத்திசைவும், அரவணைப்பும், உணர்த்தலும், தெளிவுறுத்தலும் அநீதியானது என்றபோதில் போர்வாளும் தூக்கும் சான்றாண்மை புலப்படுகிறது. ஒட்டுமொத்த மலேசிய எழுத்தாளர்களின் குரலாக இவர் குரலொலிக்கிறது. ‘தமிழ் சாகும்’ என்ற அடிப்படையில்லாத வதந்தி செய்திகள், இணையம் வழி எழுத்தாளர்கள் தமது படைப்புகளை வெளியிட வேண்டுமெனும் உந்துதல், புத்திலக்கிய பரிசோதனை முயற்சிகளை ஊக்குதல் என மலர்ந்து மலேசிய மண்ணின் மணம் வீசும் படைப்புகள் வரை விரிந்து செல்கிறது. ‘தமிழ் எழுத்தாளர்களா? அப்படியென்றால் என்ன?’ எனும் ஆங்கில நாளிதழில் வெளியான உதய சங்கரின் பார்வைக்கு இவர் காட்டும் சான்றுகள் மிக துல்லியமானது. மேலும், ‘தமிழில் வெளிவரும் கதைகள் பெரும்பாலும் காதல் கதைகளாகவும் தற்கொலையில் முடிவதாகவும் படைப்பாளர்கள்புதிய உத்திகளோடும் திடுக்கிடும் முடிவுகளோடும் முடிவைத் தர தெரியவில்லை’ என்று கருத்துரைத்த டாக்டர் கிருஷ்ணன் மணியம் அவர்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ் வாசகர் அனைவருக்கும் தெளிவான முறையில் சான்று காட்டியிருப்பது சிறப்பு. இந்நூலின் இறுதியில் நேர்காணல் எனும் தலைப்பில் மின்மடலாடக் குழு, நாவல் வெளியீடு, கலைமகள் இதழ் ஆகியவற்றில் வாசகரின் கேள்விகளுக்கு தமது பார்வையில் பதிலுரைத்திருப்பது சிறப்பாக அமைந்துள்லது. பொதுவாக இலக்கிய நெஞ்சங்களுக்கு விமர்சனம் 2 எனும் இந்த நூல் நுனியிலிருந்து அடியை நோக்கி உண்ணப்படும் கரும்பாய் இனிக்கும் என்பது உறுதி. இந்நூல் இலக்கிய இனிமை மட்டுமல்ல தகவல்களும் கருத்துகளும் செறிந்த முத்தாரம்.

திங்கள், 16 ஜூலை, 2012

சங்க தமிழில் 99 வகையான மலர்கள்

சங்க காலத்தில் 99 வகையான மலர்களை அக்கால மகளிர் தொடுத்தும், அணிந்தும் மகிழ்ந்ததாகக் கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அம்மலர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 1. அடும்பு 2. அதிரல் 3. அவரை - நெடுங்கொடி அவரை 4. அனிச்சம் 5. ஆத்தி - அமர் ஆத்தி 6. ஆம்பல் 7. ஆரம் (சந்தன மர இலை) 8. ஆவிரை - விரிமலர் ஆவிரை 9. இருள்நாறி - நள்ளிருள் நாறி 10. இலவம் 11. ஈங்கை 12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ் 13. எருவை 14. எறுழம் - எரிபுரை எறுழம் 15. கண்ணி - குறு நறுங் கண்ணி 16. கரந்தை மலர் 17. கருவிளை - மணிப்பூங் கருவிளை 18. காஞ்சி 19. காந்தள் - ஒண்செங் காந்தள் 20. காயா - பல்லிணர்க் காயா 21. காழ்வை 22. குடசம் - வான் பூங் குடசம் 23. குரலி - சிறு செங்குரலி 24. குரவம் - பல்லிணர்க் குரவம் 25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி 26. குருகிலை (குருகு இலை) 27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம் 28. குவளை (மலர்) - தண்கயக் குவளை 29. குளவி (மலர்) 30. குறிஞ்சி 31. கூவிரம் 32. கூவிளம் 33. கைதை 34. கொகுடி - நறுந்தண் கொகுடி 35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை 36. கோங்கம் - விரிபூங் கோங்கம் 37. கோடல் 38. சண்பகம் - பெருந்தண் சண்பகம் 39. சிந்து (மலர்) 40. சுள்ளி மலர் 41. சூரல் 42. செங்கோடு (மலர்) 43. செம்மல் 44. செருந்தி 45. செருவிளை 46. சேடல் 47. ஞாழல் 48. தணக்கம் (மரம்) 49. தளவம் 50. தாமரை - முள் தாள் தாமரை 51. தாழை மலர் 52. திலகம் (மலர்) 53. தில்லை (மலர்) 54. தும்பை 55. துழாஅய் 56. தோன்றி (மலர்) 57. நந்தி (மலர்) 58. நரந்தம் 59. நறவம் 60. நாகம் (புன்னாக மலர்) 61. நாகம் (மலர்) 62. நெய்தல் (நீள் நறு நெய்தல்) 63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்) 64. பகன்றை 65. பசும்பிடி 66. பயினி 67. பலாசம் 68. பாங்கர் (மலர்) 69. பாதிரி - தேங்கமழ் பாதிரி 70. பாரம் (மலர்) 71. பாலை (மலர்) 72. பிடவம் 73. பிண்டி 74. பித்திகம் 75. பீரம் 76. புன்னை - கடியிரும் புன்னை 77. பூளை - குரீஇப் பூளை 78. போங்கம் 79. மணிச்சிகை 80. மராஅம் 81. மருதம் 82. மா - தேமா 83. மாரோடம் 84. முல்லை - கல் இவர் முல்லை 85. முல்லை 86. மௌவல் 87. வகுளம் 88. வஞ்சி 89. வடவனம் 90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை 91. வள்ளி 92. வாகை 93. வாரம் 94. வாழை 95. வானி மலர் 96. வெட்சி 97. வேங்கை 98. வேரல் 99. வேரி மலர்

தமிழில் மனித நேயம்

தமிழர் வாழ்வு இலக்கியத்துவமிக்க வாழ்வாகும். உழவால் உணவாக்கி, உடை நெய்து, உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர். உடலுக்கு திண்மை பெற, உரமூட்ட உணவும், ஒழுக்கமுடன் திகழ உடையும், உணர்வுகள் செம்மையுற நூல்கள் புனைந்து பரிமாறியுள்ளனர். தமிழரின் நூல் திறம் தனிச் சிறப்பு வாய்ந்தது. நூலில் கையாளும் தமிழ்ச் சொல்லை தொல்காப்பியர் அளவிடுகையில் உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே -என்கிறார். சொல்லில் மட்டுமல்ல. வாழ்வியல் சமூக பண்பாட்டிலும் ஓர் வரையறை ஒழுங்கை பின்பற்றி வருபவர்கள் தமிழர்கள். இன்றைய ஆலய வழிபாட்டின் தொடக்க காலத்தில் காட்சி, கால்கோள் நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்தல் என்ற நெறியை வழிபாட்டில் கொண்டவர் தமிழர். இதை முறையே காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் -என்ற தொல்காப்பியம் கூறும் புறத்திணை இயலில் அறியலாம். காதலும் வீரமும் தமிழர் பண்பாட்டின் அடிப்படை உயிரையும் உடமையையும் காக்கும் வீரமறவர்களைப் போற்றுவதும் சமூகம் என்ற சேர்ந்து வாழும் பண்பாட்டின் அடையாளம். இதனை தமிழர் தம் வாழ்வியல் கோட்பாடாகவே இன்றும் கைக்கொள்கின்றனர். உயிர்காத்த, ஊரைக்காத்த வீரனுக்கு அவன் நினைவு போற்ற நடுகல் வைப்பது தமிழ் மரபு. அதற்குரிய கல்லை போர் நிகழ்ந்த இடம், உயிர் துறந்த இடம் போன்ற இடங்களில் தேடி எடுப்பது காட்சி என்பதாகும். தாம் கண்டு காட்சிப்படுத்திய நடுகல்லைக் கொணர திரளாகச் சென்று எடுத்து வருவது கால்கோள். கால்கோள் கல் கொணர்ந்தும் ஊர் நீரால் உவப்புடன் கழுவி சுத்தப்படுத்துவது நீர்ப்படை என்பது. நீர்ப்படையால் ஊரார் உதவியுடன் சுத்தம் செய்து ஊரின் மையத்தே அல்லது வீரருக்கு உகந்த இடத்தில், ஊர் எல்லையில் நடுவதே நடுகல். நடப்பட்ட நடு கல்லுக்கு சிறப்பு செய்யும் வகையில் அந்நடுவில் வீரரின் உருவாகவே பாவிப்பதால் விரும்பிய உணவை படைத்து படையிலிடுவது பெரும்படை. பெரும்படை எனும் உணவுப்படையலிட்டு ஊர்க்கூடி வழிபடுவது. வாழ்த்தல். இந்த முறையில் தான் தமிழர் வாழ்வில் வீரத்தைப் போற்றினர். நடுகல் வாழ்த்து வீரத்தை உயர்த்திக் கூறும் இலக்கியமாக விளைந்தன.ஈகை, வீரம், காதல் இவைகளை பறைசாற்றும் எண்ணற்ற நூல்கள் தமிழர் படைத்தனர்.இந்நூல்கள் தமிழரின் உணர்வு நிலையின் செழுமையைப் பறை சாற்றுவன எனலாம். தமிழ் போற்றிய மனித நேயம் மனித நேயம் தொடர்பாக பிறமொழிகளில் எண்ணற்ற இலக்கியங்கள் உள்ளது. ஆனால் தமிழே மனித நேயத்தை தன்னுள் கொண்டுள்ள சிறப்பு மொழியாகும். பிறமொழிகளில் மனித நேயத்தை மனிதனை உயர்திணையாக நோக்கும் சொல்லில்லை. விலங்கைச் சுட்டினாலும் மனிதனைச் சுட்டினாலும் ஒரே விதமாகத் தான் வெளிப்படும். ஆனால் தமிழில் மனிதரை மக்களைச் சுட்டும் போது உயர்திணையாகத்தான் சுட்ட வேண்டும். மனிதர் அல்லாத ஏனையவற்றை அஃறிணையாக சுட்ட வேண்டும் என்ற இலக்கணம் உள்ளது. இதனடிப்படையில் தான் புலவர்கள் அவர்கள் வாழ்ந்த, கண்ட, கேட்டவைகளை இலக்கியமாகப் பதிவு செய்துள்ள பலவற்றில் திணை நிலங்களும், அங்கு வாழ்ந்த மக்கள், இயற்கை, உணவு, இசை, உணர்வுகளை பதிவு செய்துள்ளனர். திணை நிலங்களான பாலை, முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்பன பாடுபொருள்களுக்கான தளமாக உள்ளன. இதனை நாற்கவிராய நம்பியகப் பொருள் விளக்கவுரையின் இறுதியில் உள்ள கீழ்க்காணும் பாடலால் சுட்டிக் காட்டுகிறார் உ.வே.சா. போக்கெல்லாம் பாலை புணர் - தனறுங்குறிஞ்சி ஆக்கஞ் சேரூட லணிமருதம் - நோக்கொன்றி இல்லிருக்கை முல்லை யிரங்க னறுநெய்தல் சொல்லிருக்கு மைம்பாற் றொகை - எனத் தெளிவுடன் உரைக்கிறது. தமிழும், தமிழர் தம் வாழ்வும் அவர்கள் வாழ்ந்த நிலத்தோடு தொடர்பு கொண்டது. அது மட்டுமல்ல, வாழ்க்கை அங்குள்ள இயற்கைச் சூழல்களுடன் ஒன்று கலந்தது. தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள், உணவும் அவ்வாறே. இயற்கையோடு இணைந்த உடலியக்கத்தைப் பெறும் வகையில் உணவுப் பழக்க வழக்கம் உள்ளவர் தமிழர். அது மட்டுமல்ல வளமான வாழ்க்கைக்கும் சொந்தக்காரர்கள் தமிழர்களே. புறநானூற்றில் "நீர் நாண நெய்பிழிந்து" என வரும் இந்தப்பாடல், இன்றைக்கு தர்மபுரி எனவும் பண்டைய இலக்கியத்தில் தகடூர் எனவும் வழங்கிய நாட்களில் அப்பகுதியை அரசாண்ட அரசன் போருக்கு செல்லும் முன்பு வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து பெருஞ்சோறு உண்ணவும். அப்போது சோற்று உருண்டையில் நீரே வெட்கமுறும் அளவுக்கு நெய்யை நீராக ஊற்றி பகிர்ந்துண்டதாகப் பாடல் தெரிவிக்கிறது. நீர் நாணும் அளவுக்கு சோற்றில் நெய் பிழிந்து உண்ணும் அளவிற்கு கால்நடைச் செல்வம், பால்படு பொருட்கள், காய், கனி, கிழங்கு, கீரைகளை தன் உணவில் கையாண்டுள்ளனர். அந்தளவிற்கு இயற்கை அறிவும், வேளாண் அறிவும், செல்வச் செழுமையும் நிரம்பியோர் தமிழர்கள். ஆறாம் திணை தமிழர்களின் இலக்கியங்கள் ஐந்திணைகள் நிலப்பகுதியைக் கொண்டு படைக்கப்பட்டவை. பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற அனைத்து நிலப்பகுதிகளிலும் இயற்கையின் இயக்கம் சுழற்சியாக பருவ நிலைகளை மாறி மாறி நிகழ்த்தும். பாலை நிலத்தில் பனியும், மழையும், தென்றலும் குறிப்பிட்ட பருவத்தில் இயற்கை தம் செயல்பாட்டை நிகழ்த்தும். அதைப்போலவே முல்லை, மருதம், குறிஞ்சி நெய்தலில் பனி, மழை, வசந்தம் என்ற பருவ காலம் குறிப்பிட்ட திங்கள்களில் வந்து இயற்கை நிகழ்வை நிகழ்த்தும். ஆனால் மேற்கு மலைத் தொடர்களில் நிலவும் பனியும், மேகங்களின் உலாவலும் பிற நிலங்களில் நிலையாய்க் காண இயலாது. குறிஞ்சி நிலத்தில் கோடை, வறட்சி நிலவினாலும் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக பனி பிற இடத்தில் பொழியும். ஆனால் வாழ்க்கைச் சூழல் மொத்தமும் பனிப் பொழிவிற்குள்ளேயே அமைந்த நிலை பண்டைக்கால தமிழர்க்கில்லை. ஆனால் இன்று பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர்ந்து தமிழர்கள் தம் பண்பாட்டுச் சூழல் மாறாமல் உலகின் பனி நிலங்கள் அமைந்த பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்றனர். பல்வேறு இடங்களில் தமிழர்கள் வாழ்ந்தாலும் மொழியாலும், இனத்தாலும் ஒன்றுபடும் பல்வேறு அமைப்புகளை தங்களுக்குள் உருவாக்கி தமது உணர்வுகளை ஐந்திணைகளுக்கு அடுத்ததாக ஆறாம் திணை எனும் புதிய நிலத் திணை இலக்கியங்களை தற்கால தமிழ் இலக்கிய புது மரபாகத் தமிழ் மொழிக்கு தந்துள்ளனர். தமிழர்கள் வாழ்விடம் தேடி புலம் பெயர்ந்தது ஒரு சோகமெனினும் தம் பண்பாட்டு மரபுகளை கைவிடாமல், திணைப் புலம் தோறும் முன்னோர் ஆக்கிவைத்த இலக்கியச் செல்வம் போன்றே இன்று இந்த புதிய இலக்கியங்களில் அவர்தம் வழியில் படைப்புகள் வெளி வருகின்றன. தாய் மண்ணை விட்டுப் பிரிந்த அவர்களின் உணர்வின் வெளிப்பாடான அவலச்சுவை இலக்கியங்கள் ஊடாக பனித் திணை தமிழர்களுக்குள் புதிய கோட்பாடாக இன்று நாம் அறிவது என்னவெனில் ஆறாம் திணை வாழ்த் தமிழர்கள் உழைப்பது, உழைப்பால் வரும் பொருளை சேமிப்பது எனும் குறிக்கோள்கள் அவர்களிடம் உருவாகியுள்ளன. அத்துடன் மொழியின் அடிப்படைக் கூறுகளான இலக்கணச் செழுமையும் சில நாட்டுத் தமிழர்களிடம் வளமாகவே உள்ளது. அறிவியல் நுட்பங்களில் தமிழர்கள் பெருமளவில் கோலோச்சுகின்றனர். இதனால் அறிவியல் கருவிப் பயன்பாட்டில் பிற மொழி இனத்தவரை விட அயல்நாட்டுத் தமிழர்கள் மேலோங்கியுள்ளனர். இந்தப் பயன்பாட்டுப் பெருக்கத்தால் உலக மொழியில் ஊடக நுட்பக் கருவி மற்றும் மெல்லியம் தயாரிப்போர் தமிழ் மொழியிலும் அத்தகையவற்றை உருவாக்க முனைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் இயற்கை மொழியா?

உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர். மொழிகள் எண்ணிக்கை உலக அளவிலும் நம் நாட்டளவிலும் கூடுதலாக இருக்க ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கொண்டது இந்த உலகம் என்பதே. மேற்காணும் ஆராயிரத்து எழுநூற்று அறுபது மொழிகளுக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் உண்டு. அம்மூலமொழிக்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்களின், பல பண்பாடுகளின், பல திணை நிலங்களின் சங்கமம். திராவிட மொழிகளுக்கென்று குடும்பம் உண்டு. ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளின் மூல மொழிகளுடைய எண்ணிக்கையை ஆய்ந்தால் சில நூறு மொழிகள் பட்டியலிடப்படலாம். அது போன்ற பட்டியலில் இரு பிரிவுகள் காணப்படும். 1.இயற்கை மொழி மனித இனத் தொடக்கத்தின் ஊடாகவே இணைந்து வளரும் மொழி இயற்கை மொழி. 2.செயற்கை மொழி ஒரு இனக் கூட்டத்தாரிடம் இருந்து பிரிந்து புதியதொரு இனக் கூட்டமாக பல்கிப் பெருகும் சமூகம் இயற்கை மொழிக் கூறுகளின் அடிப்படையுடன் புதிதாகக் குடியேறிய சூழலுக்கு ஏற்றவாறு புதிய ஒலிக்குறிகளை தங்கள் மூதாதையர்களின் மூல மொழியுடன் கலந்து பேசும் போது பிறப்பவை செயற்கை மொழி. இவ்வாறு தான் இன்று நூற்றுக்கணக்கான (மூல மொழிகளிலிருந்து) இயற்கை மொழிகளிலிருந்து கிளைத்து செயற்கை மொழித் தகுதியுடன் இருப்பவை பல்லாயிரம் மொழிகளாகும். திராவிட இயற்கை மொழிக் குடும்பமும் அவற்றில் ஒன்று. உலகின் தொன்மையான மொழிக் குடும்பம் என்ற பெருமையும் இவற்றிற்கு உண்டு. திராவிட மொழிக் குடும்பத்தில் தாயாக இருப்பது தமிழ் மொழி. திராவிட மொழிக் குடும்பத்திலுள்ள மொழிகளின் எண்ணிக்கை 22. இதில் இலக்கியத் திறனுள்ள மொழிகள் இலக்கியத்திறன் இல்லா மொழிகள் என இருபிரிவுகள் உள்ளன. பாகிஸ்தானிலுள்ள பலூசிஸ்தான் தொடங்கி மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி திராவிட இன மக்கள், தென்னிந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம், கேரள எல்லைகள் மற்றும் மலைகளின் மீது வாழும் பழங்குடி இன திராவிடர்கள். தெற்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜீ தீவு, தென்னாப்பிரிக்கா, இலங்கை (ஈழம்) எனப் பல்வேறு பகுதிகளில் திராவிட இன மொழிக் குடும்ப மக்கள் வாழ்கின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்பவை இலக்கியத் திறன் பெற்றவை. இலக்கியத் திறன் இன்றி பேச்சு வழக்கில் பயன்பாட்டிலுள்ள திராவிடக் கிளை மொழிகள் கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி, முதலான மொழிகள் பலவும் வட மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் பேசப்படுகிறது. தமிழகம், கன்னட நாடு, தெலுங்கு நாடு மற்றும் மலையாள நாடுகளில் உள்ள அடர்ந்த காடுகளிலும், மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியிலும் வாழ்ந்து வரும் பழங்குடி திராவிடர்கள் தோட, கோத், படக, கேடகு, துளு முதலான தமிழின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர். இவற்றில் துளு மொழிக்கு தற்போது வரிவடிவமும் இலக்கியங்கள் படைப்பாக்கமும் தொடங்கியுள்ளது. இவ்வாறு திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழியான தமிழ் தோன்றி நின்று நிலைபெற்று செழிந்திருப்பதால் செம்மொழி எனும் தகுதி வழங்கியுள்ளனர். ஏற்கெனவே சீனம், ஹீப்ரு, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை இத் தகுதியைப் பெற்றுள்ளன. இந்தியாவில் செம்மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. இந்த வரிசையில் தற்போது தமிழும் இணைந்துள்ளது. உலகில் உள்ள பல கண்டங்களில் ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செம்மொழிகள் இருக்கும் பெருமை இந்தியாவை மட்டுமே சாரும். அந்த வகையில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் தங்கள் தொன்மையால் உலக மொழிகளுக்கு முன்னோடியாய் விளங்குகின்ற்ன. ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது. தகுதிகள் செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை : 1. தொன்மை 2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்மைப் பண்பு 6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு 7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை 8. இலக்கிய வளம் 9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தனித்தன்மை 11. மொழிக் கோட்பாடு 1. தொன்மை செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு. 2. தனித் தன்மை பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும். 3. பொதுமைப் பண்பு உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். 4. நடு நிலைமை தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது. 5. தாய்மைத் தன்மை தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது. 6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது. 7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன. வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது. காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது. 8. இலக்கிய வளம் தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும். சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன. தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது. இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது. தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது. 9. உயர் சிந்தனை இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது. 10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை. ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன். "நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி வட திசைக்கு ஏகு வீராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கி நனைசுவர்க் கூறைகளை குரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலே தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும் ஏழையாளனைக் கண்டனும் எனுமே" என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான். தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள். ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது. 11. மொழிக்கோட்பாடு உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு. மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர். ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன. எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது. அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும். இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.

தமி்ழால் முடியும்

தமிழ் சங்க காலத்திற்கு முன்பும் பின்பும் சுவடிகளில் படைப்புகள் பலவற்றுக்கு உரையாசிரியர்கள் உரைகண்டனர். அப்போதும் அதற்குப் பின்னர் காகித அச்சு தொழில் நுட்பத்திற்கு மாறிடும் போதும் அதன் வரி வடிவங்கள் சிற்சில மாற்றம் கண்டன. இவ்வாறு மாற்றம் கண்டிடினும், அதன் வளமை மாறவில்லை. இது தமிழின் சிறப்பாகும். அதே போல் அச்சுருக்களிலும் காலத்துக்கேற்ப மாறுதல்கள் வந்த போதும் அந்த மாற்றங்களுக்கும் தமிழ் உட்பட்டது. அச்சுக்கலையின் வேகமான பல்வேறு மாற்றங்களுக்கும் தமிழ் உட்பட்டது. இதேபோல் கணித்தொழில் நுட்பம் தொடங்கிய போதும் அதில் ஏற்பட்டு வரும் பல மாற்றங்களிலும் தமிழ் தன் தனித்தன்மையை இழக்காமல் அத்துணை மாற்றங்களையும் எதிர்கொண்டு காலங்கள் தோறும் நிகழ்ந்த மாற்றங்களை உள்வாங்கி தனித்தன்மையுடன் மிளிர்கிறது. ஆங்கிலம் மற்றும் பிரென்ச் மொழிகளில் புதிய தொழில் நுட்ப அறிவியல் துறைகள் உருவான போது புதிய புதிய சொற்கள் உருவாயின. உலக மொழிகள் பலவும் ஆங்கிலம் பிரென்ச் சொல் வடிவங்களை அப்படியே ஏற்றது. ஏனெனில் அவைகளுக்கு புதிய சொல்லாக்கம் செய்திடும் வண்ணம் மொழி வளம் குறைவு. ஆனால் தமிழ் வேர்ச்சொல் அடிப்படையிலும் வினைகளின் அடிப்படையிலும் புதிதாக உருவான சொல்லுக்கு நிகரான சொற்களை உருவாக்கும் திண்மை பெற்றதால் தன் தனித்தன்மையை நிலை பெற வைத்துள்ளது. காட்டாக ஜப்பானியர்கள் தொலைக்காட்சி தொழில் நுட்பத்தில் மேற்குலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகின்றனர். எனினும் ஆங்கில சொல்லான டெலிவிஷன் என்ற சொல்லுக்கு மாற்றாக அக்கருவியை ஜப்பான் மொழியில் வழங்க இயல்வில்லை. எனவே அவர்களும் டெலிவிஷன் என்றே வழங்குகின்றனர். ஆனால் டெலிவிஷன் எனும் கருவி புரியும் வினையை தமிழில் உட்கிடத்தி அதனை தொலைக்காட்சி என வழங்குகிறோம். இதுவே மொழிச் சிறப்பு. தமிழில் வழங்கப்பட்டு வரும் சொற்களாயினும் புதிய சொல் ஆக்கம் எதுவாயினும் இயற்கை - ஆக்கம் - செயற்கை என உருவாக்கிட தொல்காப்பியத்தின் சொல் அதிகாரம் தெளிவைத் தருகிறது. இது தமிழுக்கே உரித்தானதாகும். எனவே தான் இன்று வளர்ந்து வரும் எத்தகைய புதிய துறையாக இருப்பினும் அதற்கான சொல்லாக்கம் தமிழால் செய்ய இயலும். மனித அறிவின் எல்லையற்ற வளர்ச்சிக்கு ஈடாக தமிழும் இணையற்றதாக உள்ளது.

தமிழில் அறிவியலும் ஆன்மிகமும்

தமிழ் மொழியின் தொன்மை அளவிடற்கரியது. இந்த மொழியில் இருந்துதான் உலக மொழிகள் தோன்றின. பழைமையான பிராமி எழுத்துக்களாலும், வட்டெழுத்து சங்கிலி எழுத்துக்களாகவும் எழுதி வரப்பட்டது. இப்போது தமிழ் விஞ்ஞான பூர்வமாகவும் உச்சரிப்பு ரீதியாகவும் வாய்மொழி உத்தரவு...களை (VOICE COMMAND) கணினிகள் புரிந்து கொள்ளும் விதமாகவும் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தமிழ் என்பது நம் சித்தர்களின் சர நூல் சாத்திர ரீதியாகவும் தமிழ் எழுத்துக்கள் இத்தனைதான் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயிர் எழுத்துப் பன்னிரண்டும் வலது நாசியில் ஓடக் கொண்டிருக்கும் சூரியகலையைக் குறிக்கும். அதாவது அந்த சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதை 12 உயிரெழுத்துக்களாக்கி இருக்கிறார்கள்.நெடில் ஏழும் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைக் குறிப்பன. இதைக் குறிக்கவே திருக்குறளில் ஏழு சீர்களை வைத்துள்ளார். மேலும் 133 அதிகாரங்களையும் வைத்துள்ளார். அதாவது 1+3+3=7. குறில் எழுத்து ஐந்தும் ஐந்து ஐம்பூதங்களையும், பொறிகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள், புலன் ஐந்தைக் குறிக்கும். நெடில் ஏழு எழுத்துக்களும், குறில் ஐந்து எழுத்துக்களும் வைத்ததன் மற்றொரு காரணம் மனிதன் நெடிய ஆயுள், நெடிய புகழ், நெடிய ஞானம் பெற வேண்டும் என்பதற்காகவே. இவ்வாறு குறிலை குறைவாகவும் நெடிலை அதிகமாகவும் வைத்தார்கள். மெய்யெழுத்துக்கள் 18 வைத்ததன் காரணம் இடது நாசியில் ஓடும் சந்திர கலை 16 அங்குலம் ஓடுகிறது.அத்துடன் மனம், உயிர் இரண்டும் சேர்ந்து 18 மெய்யெழுத்துக்களாக வைத்துள்ளார்கள். ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையான 24 நிமிடத்திற்கு 360 மூச்சு (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ), ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே 216 உயிர் மெய் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஆயுள் 120 வருடம்.மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே! மேலும் தனிநிலை என்பதான ஆயுத எழுத்தை முக்கண் முதல்வனான பரமசிவனுக்கு இணையாக வைத்தார்கள். தமிழ் என்ற சொல்லே ஒரு வல்லெழுத்து(த), மெல்லெழுத்து(மி), ஒரு இடையின எழுத்து(ழ்) எனக்கோர்த்து உருவாக்கப்பட்டது. இப்படி தமிழ் மொழி எழுத்துக்கள் பல காரணங்களை வைத்து எழுத்தாக்கம் செய்துள்ளார்கள். கிளவியாக்கம் என்பது சொல்லாக்கம் என்பதுவே! இந்த சொல்லாக்கப்படுவதற்கு பல விதிமுறைகளோடு இயற்கையோடு இயைந்த மொழி நம் தமிழ்மொழி! சித்தர்கள் தந்த தமிழ் அண்ட, பிண்ட விளக்கங்களை தன்னகத்தே கொண்ட கட்டற்ற அறிவியல் களஞ்சியம்.