செவ்வாய், 19 மே, 2009

காலமே! கருணையே இல்லையா?


காலமே! உனது நெஞ்சில்
கருணையே இல்லையா?
எங்கள் ஓலமே நாதமாக
உன்வன்செவி வீழும்போலும்!
பாலையில் பயணம்போகும்
பாதையேன் தந்தாய்? நாங்கள்
ஆலைவாய் கரும்பாய்மாறி
அழுவதைக் காண்கின்றாயோ!
உணவில்லை பகிர்ந்துண்ண
உறவில்லை உடமையேதுமில்லை
உயிர்விலை என்னவிலை இனியில்லை
உணர்விலை உலகுக்கோ மனமில்லை
உனக்கோ எதுயெல்லை
ஏதும் தெரியவில்லை
கொடியோர் தினம்கொழுத்தே
உவப்பதும் நியாயந்தானா?
தமிழினத்தைத் துண்டாடி
துயராட வைப்பதும் சரிதானா?
புதுவெள்ளம் பெருக்கு
நாங்கள் மீண்டு துள்ளியெழ
புதுவிளக்கேற்று! புதியதோர்
தமிழ் உலகைக்காண
இல்லையேல் இனியும்
கெஞ்சாமல் எஞ்சிய
உயிரோடு உன்னையும்
வேரறுத்து நானும் வீழ்வேன்!
(‘விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய்ய நினைத்தாய்...’ என பாரதி தமிழரின் நிலைக்கு வருந்தி அழுதது என்னுள் அழியாத பதிவாக உள்ளது. இன்று இலங்கை கொடூர அரக்கனால் நடக்கும் தமிழினப் படுகொலையை எண்ணி என் இதய வலியில் கசிந்த வார்த்தைகள்)

ஞாயிறு, 17 மே, 2009

இதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்

இதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்
இலக்கியங்களுக்கும் எனக்குமுள்ள உறவும் தொடர்பும் தொப்புள்கொடியில் தொடங்கியதல்ல. ஊழ்வினைப் பயனோ எனக்கு வாய்த்த வரமோ நானறியாமலே என்னுள் நிலைப்பெற்ற பேறு. இந்த இன்ப உறவை புனித பந்தத்தை என் உயிராகவே கருதுகிறேன்.
என் இதயத்துள் புதைந்திருந்த இலக்கிய உணர்வினை தொட்டெழுப்பியதில் பெரும் பங்கு என்னோடு வாழ்ந்த மண்ணையும் மனிதர்களையும் சாரும். அந்தத் தோட்டத்து மக்களை வாசிக்கும்போது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகம் விரிந்து செல்வதை என்னால் உணரமுடிந்தது.
‘என்னை எழுத வைத்தது வான்’ என்று பாரதிதாசன் கூறியதுபோல என் கற்பனை முகடுகளில் தடம் பதித்து தமிழ்க்காவியம் பாட வைத்து எண்ண ஏர் கொண்டு எழுத்தாய் காகித வயலை உழ வைத்து கவிப்புறாவின் காந்தர்வச் சிறகுகளை சொல் வானமெல்லாம் சிறகடித்து இதயமெல்லாம் இரண்டறக் கலந்தினிக்கும் என் தாய்மண்ணே உன்னில் மீண்டும் தலைசாய்கிறேன்.
எத்தனையோ பூபாளப் பொழுதுகளில் புல்லாங்குழல் நாதம் தேன்மழையாய் செவிமடல்களில் பாய்ந்தாலும் உன் தாயன்புக்காக மீண்டும் நான் சேயாய் தவிக்கிறேன். என் சிந்தனை பறவை சிறகடிக்கிற தேவவேளை இது.
இளமை பூரிப்போடு நிமிர்ந்து நிற்கும் மூங்கில் காடுகளைப் பார்த்துப் பரவசப்படுகிற பால்மணம் மாறாத பருவ மனத்தோடு என் பழைய பசுமை நாட்களில் உலா வருகின்றேன். என் நினைவுகளின் பின்வீச்சு சலனமற்ற கால வெள்ளத்தின் வெளிச்ச விளிம்பைத் தொட்டுப் பார்க்கிறது
மேனியில் புழுதிப் படிந்தாலும் மனதிலே மாசு படியாத அந்த இறந்த காலங்களை இதயத்தில் இனிக்கும் இளைய காலங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பள்ளி முடிந்து பட்டம் விட்டு மனது மகிழ்ச்சியில் துள்ளித் திரிந்த பருவம் இன்பப் பருவமது.
ரப்பர் பாலை தேடியெடுத்து காகிதங்களில் தென்னங் குச்சிகளை வளைத்து வைத்து பட்டம் செய்வதிலேயே நாட்கள் நகரும். செய்த பட்டத்திற்கு நீண்ட குட்டை வால்களை அலங்கரிப்பது தனியின்பத்தைத் தரும். ஒரு நாள் பட்டம்விடும் உற்சாகத்தில் தன்னையே மறந்த நண்பன் காலில் கண்ணாடித் துண்டை மிதித்துத் துடித்தக் காட்சி இன்றும் என் நினைவுகளில் மின்னலிடுகிறது.
என் புண்ணிய பூமியில் அறிவியல் வெளிச்சம் புகாத அந்த அந்தக நாட்கலில் தொலைக்காட்சி, வானொலி கருவிகள் எல்லாம் காண்பது அரிது. தோட்டத்தில் யாரோ இருவர் வீட்டில்தான் வானொலியைக் கண்டதாக ஞாபகம். நாளடைவில் பல வீடுகளிலும் வானொலி மெல்ல நுழையத் தொடங்கியது.
நான் முதன் முதலாக தொலைக்காட்சியைப் பார்த்தது தோட்டக் கிராணி வீட்டில்தான். தொலைக்காட்சி பார்க்க வேண்டும் எனும் உந்துதலில் கிராணி வீட்டிற்குப் பறப்பட்ட நானும் என் நண்பர்களும் எப்படியெல்லாம் அவரின் பிள்ளைகளின் கட்டளைகளுக்கு மனம் வாடாமல் சேவை செய்தோம் என நினைத்தால் இப்போது வேதனையாக உள்ளது.
அந்த மேல்தட்டு பிள்ளைகளின் ஏவலுக்கிணங்க பூச்செடிகளுக்கு நீரூற்றுவதிலிருந்து உடம்பு பிடிப்பதுவரை செய்ததை நினைத்துப் பார்த்தால் சின்ன மனத்தின் ஆசைகள் எப்படியெல்லாம் எங்களை அடிமைப்படுத்தியுள்ளது என்று தெரிகிறது. பூச்செடிகளுக்கு நீரூற்றினால்தான் கறுப்பு வெள்ளை ‘கெளபாய்’, ’கார்டூன்’ படங்களை ஐந்தடியில் நின்று பார்க்க அனுமதிக்கப்படுவோம் இல்லையேல் விரட்டியடிக்கப்படுவோம்.
தோட்டத்து இலையுதிர் காலங்களை என்னால் கொஞ்சமும் மறக்கவியலாது. கோடைக்கனல் கொப்பளிக்கும் வெப்பப் பொழுதுகளில் மேலாடைகளை களைந்து நிர்வாணமாய் காட்சியளிக்கும் ரப்பர் காடெல்லாம் வெளிச்சம் விழுதுவிட்டிருக்கும்.
உதிர்ந்து விழும் இலை சருகுகளில் நடக்கும்போது ஏற்படும் சரசர ஓசை இன்னும் காதில் ஒலிக்கிறது. இலையுதிர் காலத்தில் புகை மூட்டத்தையோ நெருப்பொளியையோ ரப்பர் காட்டில் கண்ணுற்றால் உடனே தோட்டத்தில் இரும்பு மணி அடிக்கப்படும்.
இதற்காகவே காத்திருக்கும் நானும் என் தோழர்களும் தோட்டத்து ‘டிரக்டரில்’ முண்டியடித்துக் கொண்டு ஏறுவோம். தளிர்களையும் கோணிப் பைகளையும் கொண்டு ஓடியோடி தீப்பரவாமல் அணைப்போம்.எங்கள் ரப்பர் மரங்களை தீயிலிருந்து காப்பாற்றியதற்காக கிராணியார் பத்து அல்லது இருபது காசுகளை எண்ணித் தருவார்.
உன்னதமான இசையின் உயிர் அடங்குகிறபோது மெல்லிழையோடும் நாதத்தைப் போல் என் மன ஆழத்தின் மெளனமான மூலையில் எங்கோ அந்த நினைவு புலம்பிக் கொண்டே இருக்கிறது. தமிழ் வாசத்தோடு இடைநிலைப் பள்ளிக்கு இடம் பெயர்ந்த அந்த இறுக்கமான நாட்கள்; மாலை பள்ளியாதலால் மனதிற்குள் கவலை வீட்டிலுள்ளவர்க்கோ பூமழை.
விடுமுறை நாட்கள்போல் இனிமேல் காலையில் ரப்பர் காட்டுக்குள் காலையில் வசித்துவிட்டு மாலையில் இடைநிலைப் பள்ளியில் வாசிக்க வேண்டியதால் மனம் கனமாகிப் போனது. பால்மரக் காட்டிலே பாடுபட்டு நேரமில்லாமல் பள்ளிக்குப் பசியோடு நானும் என் நண்பர்களும் ஓடிய நாட்கள் பல.
குளித்தப் பின்னரும் உடலில் பட்ட ரப்பர் பால் சரியாக நீங்கப்பெறாமல் பல நாட்கள் பள்ளிச் சென்றிருக்கிறேன். ஒரு நாள் சீன ஆசிரியரொருவர் சுட்டிக் காட்டி கிண்டல் செய்தது என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
அப்போது வறுமை அரக்கனின் வாய்க்குள் நொறுங்கிக்கொண்டிருந்த பொல்லாத வேளையென்றாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கல்வியை நோக்கி என் இதயம் பயணம் போனது இன்னும் என்னுள் பிரமிப்பூட்டுகிறது.
இளைய நாட்களில் தெளிவற்ற நீரோடைகளில் கூழாங்கற்கள் ஏற்படுத்துகிற சலனத்தைப்போல என் எண்ண விரிசல்களில் திரைப்படங்கள் சில உறுத்துதல்களை உண்டாக்கிவிட்டிருந்தன. இன்று திரைப்படங்களைக் காண்பதற்கு ஆர்வமில்லாத நான் அன்று தமிழ்த் திரைகளை நேசித்ததாகவே தெரிகிறது.
எனது பால்ய நினைவுகளிலிருந்து இன்னும் உதிர்ந்து போகாமல் அந்த நாள் இன்றும் என்னுள் பிரகாசிக்கிறது. எனது பக்கத்து தோட்டத்தில் (புக்கிட் சிலாரோங் - கெடா) மாதத்திற்கொரு முறை இரவில் திரைப்படம் காட்டப்படும். இதைக் காண்பதற்கென்றே நானும் நண்பர்களும் மிதி வண்டியில் புறப்படுவோம்.
அங்கு பார்த்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘தங்கப்பதக்கம்’ போன்ற பல திரைப்படங்கள் நினைவில் இன்றும் சிரிக்கிறது. நள்ளிரவு படம் முடிந்து பயத்தோடு வீடு திரும்புகையில் நண்பனின் மிதிவண்டியின் சங்கிலி அறுந்து விழ உதவிக்கு வேறு துணையின்றி விரைந்து தள்ளி புறப்படும்போது கீழேவிழுந்து உண்டான காயத்தின் வடு கதை சொல்கிறது.
என் உயிர்க்காற்று கலந்துலவும் இந்தப் புண்ணிய பூமியில் நான் உலவிய அந்த பிஞ்சு நாட்கள் என்னுள்ளே அழியாத கோலங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சிதைந்தும் சிதையாமலும் நெஞ்சத்தில் நின்றாடும் அந்த இளைய நாட்களை ஏக்கத்தோடு இன்றும் நேசிக்கின்றேன்.

என்ன வளமில்லை தமிழ் மொழியில்

என்ன வளமில்லை தமிழ் மொழியில்
தமிழைப் படிக்கின்றபோது ஏற்படுகின்ற இன்பமிருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்லிட முடியாது. அதிலும் அதன் இலக்கணச் சிறப்பிலும் இலக்கிய வளத்திலும் காலூன்றி கற்க விழைந்திட்டால் நம்மை பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும்.
தமிழின்பக் கடலில் முத்தெடுக்கத் தொடங்கிவிட்டால் அதுவே நம்மை பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் என்னவோ சங்கக்கால பெயர் குறிப்பிடாத புலவனொருவன் ‘ இருந்தமிழே உன்னால் இருந்தேன் – இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்றார் போலும்.
விந்தைமொழிச் செந்தமிழ்ப்போல் உலகில் வேறுமொழி இல்லையென எல்லீசர், ஜி.யு.போப்பையர், வீரமாமுனிவர் போன்ற மேனாட்டு அறிஞர் பகன்றதை எண்ணிப்பாருங்கள். ஆங்கிலத்தில் சிந்தைக்கவர் பெண்களுக்கெனப் பருவமெனும் சொல்லொன்றே ‘உமன்’ என்பதாகும்.
நந்தமிழில்தான் ‘பேதை’,’பெதும்பை’,’மங்கை’,’மடந்தை’,’அரிவை’,’பேரிளம் பெண்’ என்று சொற்கள் பல்கிப் பெருகியுள்ளன. பூக்களின் பருவத்தை தமிழரைவிட அழகுறச் சொன்னவர் யார்? ‘அரும்பு’,’மொட்டு’,’முகை’,’மலர்’,’அலர்’,’வீ’,செம்மல்’ அமுதாக ஏழுநிலை அடுக்கி வைத்தானே.
தருக்களிலே இலையுண்டே அதற்கும் தமிழில் பருவங்கள் உள்ளன. ‘கொழுந்து’ இளமைப் பருவத்தை ‘தளிர்’ என்போம். இலை,’பழுப்பு’,’சருகு’ என்ற சொற்களெல்லாம் தமிழிலுண்டு. ஆல், அரசு,,அத்தி, பலா, மா, வாழைக்கோ அழகு ‘இலைகள்’ என்போம்.
அகத்தி போலிருக்கும் செடி பிறப்பைக் ‘கீரை’ என்போம். பூமியிலே படரும் வகை தாவரத்தை ‘பூண்டு’ என்றும் அருகு, கோரை போன்ற சப்பாத்திச் செடியைத் ‘தாழை’ என்றும் கரும்பு நாணலை ‘தோகை’ என்றும் உடலோங்கி நிற்கின்ற பனைதென்னைக்கோ ‘ஓலை’ என்று பெயரிட்டோம்.
மேற்கண்ட சொற்சிறப்பெல்லாம் பிறமொழிக்குள் வலைபோட்டுத் தேடினாலும் கிடைப்பதில்லை. கடலைப்போல் பரந்திருக்கும் தமிழில்தான் களஞ்சியம்போல் கணக்கிலா சொற்களுண்டு.
நீல வண்ணக் கடல்நீரை இரைத்துக் கொண்டிருந்தபோதும் கடுகளவும் குறையாமல் இருப்பதைப்போல் கடன் கொடுத்தும் பிறமொழிகள் கவர்ந்து சென்றும் கட்டுடலம் குலையாமல் கன்னிமாறா உடலழகைப் பெற்றதெங்கள் தமிழே என்ற உண்மையினை மறுத்திடுவோன் மடையனாவான்.
ஆங்கிலத்தை உலகமொழி என்கிறோமே அதுகூட கடனாளி நம் தமிழுக்கு, மாங்காயை நாம் தந்தோம், ’மெங்கோ’ என்றான். ‘சாண்டல் ஊட்’ என்கிறான் நாம் கொடுத்த சந்தனத்தின் மணம் நுகர்ந்து.
அரிசியை ‘ரைஸ்’, இஞ்சியை ‘ஜிஞ்சர்’, அணைக்கட்டை ‘அணைகட்’ என்று ஆங்கிலமாக்கியவன் வெள்ளையன். தனித்தினிக்கும் தாய்ப்பாலில் சர்க்கரையும் நீரும் தேவையில்லை என்பதுபோல தனித்தியங்கும் வல்லமை தமிழுக்குண்டு.
தமிழ் தன்காலில் தான்நிற்கும் பிறரைத் தாங்கும். அணித்தமிழில் பிறமொழியைக் கலந்துவிட்டால் அழகாக வளருமென்போர் அறிவிலிகள். தனித்திருகும் அரிசியிலே கல்கலந்தால் தின்பவரின் பல்லுடையுமே தவிர சுவைத்திடாது.
ஓரெழுத்து ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்தென எத்தனையோ சொற்கள் அடக்கமாகி பொருள் கொண்டிருக்கும். மூன்று இலக்கத்திற்குமேல் சொற்களிருக்க தமிழ் பிறமொழிகளிடம் கடன் வாங்கத் தேவையில்லை.
நீர் மிதக்கும் கப்பலுக்கு நங்கூரம்போல் மரங்களுக்கு வேரிருந்து காப்பதுபோல் மக்கள் வாழ்வில் வேர்ப்பிடிப்பாய் இருப்பததன் மொழியே. இட்லர் போர்வெறியன் தானெனினும் அவனுங்கூட ஒன்றைச் சொன்னானே ‘ஓரினத்தைச் சீரழிக்க வேண்டுமென்றால் மொழியைச் சிதைத்துவிடு; இனம் தானாக அழிந்தேபோகுமென்றானே’.
விரல்களெல்லாம் பறித்தாலும் உடலிருக்கும்; விலா எலும்பை முறித்தாலும் உயிரிருக்கும் ஆனால் குரல்வளையை நெறித்தபின்னே உயிரா மிஞ்சும் அதுபோல குலமொழியை அழித்துவிட்டால் இனமேயில்லை
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
மொழியென்றால் மனிதனுக்கு உயிரின்மூச்சு; மூச்சுதனை இயக்குகின்ற உயிர்ப்புக்காற்று. மொழிதான் குமுகாயத்தை முறியாமல் காக்கும் அச்சாணி. பேசும் மொழியொன்றே இலக்கியங்கள் பிறப்பதற்கு மூலமாகும்; வம்சப் பூ மலர்வதற்கே அதுவே இரத்தநாளம்.
மொழிப்பற்றும் இனப்பற்றும் இருப்பவனே முழுமனிதன். செழிப்புற்று வளர்ந்துயர்ந்து ஓங்கிநிற்கும் ஜாப்பனியர் பிரான்சு நாட்டார் கொண்டிருக்கும் மொழியுணர்ச்சி நாம் பெற்றாலே விடிவுண்டு. நாகரிக வளர்ச்சிக்கும் நம் இனத்தின் நல்ல மறுமலர்ச்சிக்கும் புதுவெள்ளம்போல் வேகமாக அறிவெழுச்சிப் பெறுவதற்கும் மொழியே வேண்டும்.
தமிழின் வளமறிந்து இருபத்தோராம் நூற்றாண்டின் தேவையறிந்து அறிவியல் தொழில்நுட்ப சொற்களைப் பெருக்கி கணினி போன்ற நவின கருவிகளிலும் தமிழை உலாவரச் செய்வது தமிழனின் கடமையாகும்.
தமிழைக் குறைகூறி வாளாவிருப்பதைவிட்டு இனியாகிலும் தமிழன் தமிழின் நிலையுயர்த்த நினைப்பானா?

சனி, 16 மே, 2009

காதல் செய்வீர் உலகத்தீரே

“காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!”

பாரதியின் காதல் பரிந்துரை, மனிதக் காதலையும் தாண்டி தெய்விகம் சிந்தும் திருவார்த்தை .
‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்று உள்ளமுருகிய உத்தமக் காதலன் பாரதி

‘காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்...’ என்று சூளுரைத்தவனும் அவனே. மதம், இனம், மொழி, தேசம் என்ற எல்லா எல்லைகளயும் கடந்தவன் பாரதி.

காதலெனும் மோகனச் சொல்லில் விவரிக்க முடியாத தேவமயக்கம் என்றும் காந்தமாய் மனித இனத்தை கவர்ந்திழுக்கிறது.

காதல் ஒன்றுதான் இந்தப் பூமியை இன்றும் ஈரப்பசையோடு வைத்துள்ளது. காதல் இல்லையென்றால் பூமி வெறும் சுடுகாடு.

எல்லையில்லாத அன்பு மனிதனிடத்தோ இயற்கையிடத்தோ இறையிடத்தோ இல்லை அங்கெங்கெனாதபடி எவ்விடத்தும் நீக்கமற நிறைந்துள்ள பேராற்றல்தான் காதல்.

சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்

இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.

கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.

வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.

இன்றைய இரவு நாளை விடிந்து விடும்; துன்பங்கள் துயரங்கள் மடிந்து விடும். நடக்கிறவரை நட பாலைவனப் பயணத்திலும் ஒருநாள் பசுஞ்சோலை தென்படும் என்ற நம்பிக்கையோடு நட.

முள்செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?. கல்லிலும் கால் நடக்காது; முள்ளிலும் வதைபடாது ஒரு காலும் முன்னேற்றத்தை முத்தமிட முடியாது தோழா.

உயர்வின் உச்சியிலே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோமேயொழிய அந்த நிலைக்குயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்தத் தொடர் முயற்சிகளையும் எண்ணிப்பார்ப்பதில்லை.

தந்தையின் திருவாக்கைக் காப்பதற்கு பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல துணியாவிட்டால் இன்று இராமன் நாமமில்லை
தோளிலே சிலுவை சுமந்து கல்வாரிக்கு நடக்காவிட்டால் இயேசு பிரானுமில்லை; கபிலவஸ்துவைவிட்டு வெளியேறாவிட்டால் போதிமர புத்தனுமில்லை.

கல்லடி, சொல்லிடி, கொலை மிரட்டல் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும் நம்பிக்கையோடும் சமாளித்தப் பின்னரே நபிகள் இஸ்லாத்தை உலகுக்குப் பரப்பினார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியையே தழுவிய ஆப்ரகாம் லிங்கன் பின்னாளில் அதிபராக எழவில்லையா?

எத்துணை தோல்விகளையும் வெற்றியாக உருமாற்றிய எடிசனை உலகம் கொண்டாடவில்லையா? உடல் பழுதுபட்டாலும் உயர் எழுத்துக்களால் எலன் கெல்லர் பிரகாசிக்கவில்லையா?
இன்றும் நம்மோடு வாழும் சிலர் புயலையும் கடந்து வெள்ளி நிலவாய் பிரகாசிக்க நாம் மட்டும் இயலாமைகளையே வாழும் இலக்கணமாய் வைத்துக்கொண்டு வாழ்வது தகுமா?

நமது சொந்தச் சிறைகளிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். காட்டு யானையைப் பழக்குவதற்காக முதலில் அதன் காலை சங்கிலியால் பிணித்துத் தூணில் கட்டுவார்கள்.

காலப்போக்கில் எதிலும் கட்டப்படாத சிறிய சங்கிலி மட்டுமே அதன் காலில் தொங்க அந்த யானை நினைவால் வாழ்நாள் முழுவதும் சிறைப்பட்டிருக்கும்.
நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மாபெரும் உண்மை. நம்பிக்கையோடு நாள்களை நடத்திக் கொண்டிருப்பவர் வெள்ளி நட்சத்திரமாகிறார். நம்பிக்கை நலிந்து போனவர் தம்முள் நரகத்தை உருவாக்கி தம்மையே பலியிட்டுக் கொள்கிறார்.

எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன; நாளை விடியல் இல்லையென்று யார் கூறினாலும் நாம் ஏற்கப் போவதில்லை.
மனிதர்கள் வெறும் காற்றைச் சுவாசிப்பதால் வாழவில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறார்கள். பிழைக்கவே மாட்டேன் என நினைக்கும் நோயாளிக்கு எத்தகைய மருந்து கொடுத்தும் பயனென்ன?

தூந்திர வெளிகளில் துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்களை வாழவைப்பதே என்றேனும் ஒரு பொழுது சூரியக் கதிர் எட்டிப் பார்க்குமென்ற நம்பிக்கைதான்.
எப்போதும் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும். நிதமும் எதிர்காலம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கையைச் சுமந்து நடைபயில வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையின் மீது சலிப்போ வெறுப்போ இருக்காது.

பாதைகள் பசுமையானவை; பயணங்கள் இனிமையானவை என்று நிதமும் எண்ண வேண்டும். துன்பங்கள் எதிர்பட்டாலும் அதைக் கண்டு துவண்டுவிடாமல் மேலே மேலே முன்னேற வேண்டும்.
துன்பம் தொடாத மனிதன் யாரேனும் உண்டா? துன்பத்தைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு பயணம் செய்தால் இன்பம் தானாக நம்மை வாழ்த்தும்.

சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும். அதுபோல நம்மை வருத்தும் துயரம் யாவும் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது. வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கிலே எதிர்படும் சவால்களை நம்பிக்கையோடு போராடி வெல்ல வேண்டும்.

‘சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்’ என்ற கவிஞர் வைரமுத்து கூற்றுக்கிணங்க முன்னேற்றத்தைத் தரிசிக்க முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்தெறிந்து போராடுகிறவனே மனிதன்.
நமது முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. பசுமையான நிலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைக்காமல் போனதில்லை. நம்பிக்கை நம்மை மனிதர்களாக்கின்ற மகாமந்திரம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. அதை எப்போதும் நெஞ்சிலே வைத்து வளர்த்தாக வேண்டும்.
‘காலம் இருண்டிருந்தாலும் இதயத்தையே தீபமாகப் பிடித்துக்கொண்டு தீர்க்க தரிசனத்தோடு முன்னேறுவோம், உழைப்புச் செங்கோலை உயர்த்திப் பிடிப்போம், நம் காலடிச் சுவடுகளால் எதிர்காலங்கள் பிரகாசிகட்டும்’ என்ற சூரிய காந்தன் வரிகளை துவழும் போதெல்லாம் நினைவு கொள்வோம்.

மாணவர்களே! இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்

மாண்புமிக்க மாணாக்கரே,
நாளையொரு புதிய விடியலுக்கு வித்திடப்போகிற நம்பிக்கை நட்சத்திரங்களே, உங்கள் இதயத்தோடு ஒரு சில வார்த்தைகள். ஒரு தாயின் அன்போடும் தந்தையின் எதிர்பார்ப்போடும் உங்கள் பள்ளி வாழ்க்கை ஏடுகளைப் புரட்டுகின்றேன்.
பள்ளிப் பாடங்களே பெருஞ்சுமையாகிவிட்ட இன்றைய சூழலில் பெற்றோரின் கனவுகளையும் சுமந்து கொண்டு நடைபோடும் உங்களைப் பார்க்கும்போது எனக்கும் வருத்தம் மேலிடுகிறது.
இந்த மனச்சுமையைச் சுகமாக மாற்றும் வல்லமையை நீங்கள் வளர்த்துக் கொள்வது தவிர மீள்வதற்கு வேறுவழியில்லை.
அன்பு பெற்றோர் எப்படியெல்லாம் அரும்பாடுபட்டு உங்களைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று கொஞ்சம் ஆழ்மனத்தில் நிறுத்தி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?.
உங்களின் ஒளிமயமான எதிர்காலமே முக்கியமென தங்கள் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது அல்லும் பகலும் உழைக்கிறார்களே அந்தத் தியாக உள்ளங்களின் நம்பிக்கைகளை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வெயில் மழை பாராமல் அத்தனை துன்பங்களையும் தனதாக ஏற்றுக்கொண்டு உங்களின் நலனே தன் சுகமென்று நம்பிக்கையில் கழிக்கும் அவர்களின் உள்மன ஆவலையாவது அறிந்துள்ளீர்களா?
படிக்கின்ற வயதினிலே கற்பனை தேரோடத்தில் சினிமா நாயகன் நாயகிப்போல் உங்களையே நீங்கள் வரித்துக்கொண்டு காதல் வலையில் வீழ்ந்து காமலீலையில் அழுகிப் போவதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது.
தொன்றுத்தொட்டு நம் முன்னோர் சேர்த்து வைத்த பண்பாட்டுச் செழுமைகளைச் சிந்தையிலே நிறுத்தாமல் பள்ளிச் சந்தையிலே சீரழிக்கும் உங்களைப் போன்ற மாணவர்களின் எண்ணிக்கை சிறிதில்லை.
காடுமேடு கழனி திருத்தி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பெற்றக் குழந்தைகள் புவியோங்கப் பாடுபடும் பெற்ற மனங்களின் மனக்கோட்டைகளைச் சிதறடிக்கும் மாணவர் கூட்டத்திற்கு இப்போதும் குறைவில்லை.
கல்வியென்றாலே கசக்கும் கற்றவர் சொல் என்றாலே முகத்தைத் திருப்பும் முன்னோர் நெறிமறந்து உருமாறி இலக்கின்றி காற்றடித்தால் அலைக்கழிக்கும் இலவம் பஞ்சாய்ப்போன உங்களைப் போன்ற மாணவர் இந்நாளில் ஆன நெடுங்கதைகள் பலவுண்டு.
புனித புத்தகங்களைச் சுமக்கும் பையிலே சினிமா செறிவட்டுகளை சுமந்து சென்று சகாக்களோடு சினிமா ஆய்வரங்கம் செய்யும் மாணக்கரை நிறையவே சந்திக்கின்றேன்.
கணிதம் அறிவியல் என்றாலே புறமுதுகு காட்டி ஓடியதன் விளைவாக இன்று அறிவியல் பிரிவில் பயிலும் இந்திய மாணவர் எண்ணிக்கை அருகிவருவது கண்கூடு.
சீன, மலாய் மாணவர்களைவிட நாம் அறிவில் குறைந்தவர்களென்று தம்மையே தாழ்த்திக்கொண்டு படிப்பில் போட்டியின்றி மெளன நாடகம் நடத்துகின்ற மாணவர் நிறையவே உள்ளனர்.
இந்திய மாணவர்கள் என்றாலே பிரச்சனைகளின் பிரதிநிதிகளென்று இடைநிலைப்பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் முகஞ்சுளிக்கிறார்கள். மிகுதியான கட்டொழுங்குப் பிரச்சனைகளும் குறைவான தேர்ச்சி விகிதமும் அந்த முகச்சுளிப்பிற்கு மூலமாகிறது.
நம் மாணவர்கள் ஏவல் செய்யும் கூலிகளாகவே தகுதியானவர்கள்; கல்வியில் அக்கறையற்றவர்கள்; நல்லொழுக்கத்திலிருந்து நழுவிவிட்டவர்களென தப்பெண்ணம் பரவலாக உலாவருகிறது.
நாடு தழுவிய நிலையில் பல்லின ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது வெளிப்பட்ட குற்றச்சாட்டுகள்தான் மேலே நான் குறிப்பிட்டவை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
ஒரு சிலர் விதிவிலக்காகலாம் ஆனால் பெரும்பாலான நம்மின மாணவர் இன்னும் இருட்டில் உலவுகிறார்கள் என்றெண்ணத் தோன்றுகிறது. அன்பு மாணவர்களே, போனது போகட்டும் இனியாவது இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்.
காலக் கணக்கிலே கணநேரமும் ஓயாமல் கல்வியெனும் கற்கண்டை கருத்தாய் பயின்றிடுங்கள். கல்வி விளக்கு உங்கள் உள்ளங்களில் எரிகின்ற வரைக்கும் நம் சமுதாயம் சிறக்கும்.
வறுமைப் புயலிடையே ஒவ்வொரு கணமும் வேதனையால் வெந்திடும் உங்கள் பெற்றோர் அகம் மகிழவுக் காண இன்றே இலக்கைத் தீர்மானித்துவிடு; சீர்கெட்ட செயல்களின் வேரையழித்து கல்வி வேள்வியில் இதயத்தை நிறுத்திடு.
நன்செய் நிலத்தினில் களையிருந்தால் நீக்குவன் உழவன்; அதுபோல உங்கள் நலத்திலே நாசமென்றால் நீக்குவது என் கடமையன்றோ?.
கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்க் கும்மிருட்டில் திரிகின்ற நம் மாணவ இனத்தைக் கைகொடுத்து நல்வழிக்காட்டும் பெரும்பொறுப்பு சமுதாய முழுமைக்குமுண்டு.