வானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.
திங்கள், 16 ஜூலை, 2012
தமிழில் மனித நேயம்
தமிழர் வாழ்வு இலக்கியத்துவமிக்க வாழ்வாகும். உழவால் உணவாக்கி, உடை நெய்து, உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர். உடலுக்கு திண்மை பெற, உரமூட்ட உணவும், ஒழுக்கமுடன் திகழ உடையும், உணர்வுகள் செம்மையுற நூல்கள் புனைந்து பரிமாறியுள்ளனர்.
தமிழரின் நூல் திறம் தனிச் சிறப்பு வாய்ந்தது. நூலில் கையாளும் தமிழ்ச் சொல்லை தொல்காப்பியர் அளவிடுகையில்
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே
-என்கிறார்.
சொல்லில் மட்டுமல்ல. வாழ்வியல் சமூக பண்பாட்டிலும் ஓர் வரையறை ஒழுங்கை பின்பற்றி வருபவர்கள் தமிழர்கள்.
இன்றைய ஆலய வழிபாட்டின் தொடக்க காலத்தில் காட்சி, கால்கோள் நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்தல் என்ற நெறியை வழிபாட்டில் கொண்டவர் தமிழர். இதை முறையே
காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்
-என்ற தொல்காப்பியம் கூறும் புறத்திணை இயலில் அறியலாம்.
காதலும் வீரமும் தமிழர் பண்பாட்டின் அடிப்படை உயிரையும் உடமையையும் காக்கும் வீரமறவர்களைப் போற்றுவதும் சமூகம் என்ற சேர்ந்து வாழும் பண்பாட்டின் அடையாளம். இதனை தமிழர் தம் வாழ்வியல் கோட்பாடாகவே இன்றும் கைக்கொள்கின்றனர்.
உயிர்காத்த, ஊரைக்காத்த வீரனுக்கு அவன் நினைவு போற்ற நடுகல் வைப்பது தமிழ் மரபு. அதற்குரிய கல்லை போர் நிகழ்ந்த இடம், உயிர் துறந்த இடம் போன்ற இடங்களில் தேடி எடுப்பது காட்சி என்பதாகும்.
தாம் கண்டு காட்சிப்படுத்திய நடுகல்லைக் கொணர திரளாகச் சென்று எடுத்து வருவது கால்கோள்.
கால்கோள் கல் கொணர்ந்தும் ஊர் நீரால் உவப்புடன் கழுவி சுத்தப்படுத்துவது நீர்ப்படை என்பது.
நீர்ப்படையால் ஊரார் உதவியுடன் சுத்தம் செய்து ஊரின் மையத்தே அல்லது வீரருக்கு உகந்த இடத்தில், ஊர் எல்லையில் நடுவதே நடுகல்.
நடப்பட்ட நடு கல்லுக்கு சிறப்பு செய்யும் வகையில் அந்நடுவில் வீரரின் உருவாகவே பாவிப்பதால் விரும்பிய உணவை படைத்து படையிலிடுவது பெரும்படை.
பெரும்படை எனும் உணவுப்படையலிட்டு ஊர்க்கூடி வழிபடுவது. வாழ்த்தல்.
இந்த முறையில் தான் தமிழர் வாழ்வில் வீரத்தைப் போற்றினர்.
நடுகல் வாழ்த்து வீரத்தை உயர்த்திக் கூறும் இலக்கியமாக விளைந்தன.ஈகை, வீரம், காதல் இவைகளை பறைசாற்றும் எண்ணற்ற நூல்கள் தமிழர் படைத்தனர்.இந்நூல்கள் தமிழரின் உணர்வு நிலையின் செழுமையைப் பறை சாற்றுவன எனலாம்.
தமிழ் போற்றிய மனித நேயம்
மனித நேயம் தொடர்பாக பிறமொழிகளில் எண்ணற்ற இலக்கியங்கள் உள்ளது. ஆனால் தமிழே மனித நேயத்தை தன்னுள் கொண்டுள்ள சிறப்பு மொழியாகும். பிறமொழிகளில் மனித நேயத்தை மனிதனை உயர்திணையாக நோக்கும் சொல்லில்லை. விலங்கைச் சுட்டினாலும் மனிதனைச் சுட்டினாலும் ஒரே விதமாகத் தான் வெளிப்படும். ஆனால் தமிழில் மனிதரை மக்களைச் சுட்டும் போது உயர்திணையாகத்தான் சுட்ட வேண்டும். மனிதர் அல்லாத ஏனையவற்றை அஃறிணையாக சுட்ட வேண்டும் என்ற இலக்கணம் உள்ளது.
இதனடிப்படையில் தான் புலவர்கள் அவர்கள் வாழ்ந்த, கண்ட, கேட்டவைகளை இலக்கியமாகப் பதிவு செய்துள்ள பலவற்றில் திணை நிலங்களும், அங்கு வாழ்ந்த மக்கள், இயற்கை, உணவு, இசை, உணர்வுகளை பதிவு செய்துள்ளனர்.
திணை நிலங்களான பாலை, முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்பன பாடுபொருள்களுக்கான தளமாக உள்ளன. இதனை நாற்கவிராய நம்பியகப் பொருள் விளக்கவுரையின் இறுதியில் உள்ள கீழ்க்காணும் பாடலால் சுட்டிக் காட்டுகிறார் உ.வே.சா.
போக்கெல்லாம் பாலை புணர் - தனறுங்குறிஞ்சி
ஆக்கஞ் சேரூட லணிமருதம் - நோக்கொன்றி
இல்லிருக்கை முல்லை யிரங்க னறுநெய்தல்
சொல்லிருக்கு மைம்பாற் றொகை
- எனத் தெளிவுடன் உரைக்கிறது.
தமிழும், தமிழர் தம் வாழ்வும் அவர்கள் வாழ்ந்த நிலத்தோடு தொடர்பு கொண்டது. அது மட்டுமல்ல, வாழ்க்கை அங்குள்ள இயற்கைச் சூழல்களுடன் ஒன்று கலந்தது. தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள், உணவும் அவ்வாறே. இயற்கையோடு இணைந்த உடலியக்கத்தைப் பெறும் வகையில் உணவுப் பழக்க வழக்கம் உள்ளவர் தமிழர்.
அது மட்டுமல்ல வளமான வாழ்க்கைக்கும் சொந்தக்காரர்கள் தமிழர்களே. புறநானூற்றில் "நீர் நாண நெய்பிழிந்து" என வரும் இந்தப்பாடல், இன்றைக்கு தர்மபுரி எனவும் பண்டைய இலக்கியத்தில் தகடூர் எனவும் வழங்கிய நாட்களில் அப்பகுதியை அரசாண்ட அரசன் போருக்கு செல்லும் முன்பு வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து பெருஞ்சோறு உண்ணவும். அப்போது சோற்று உருண்டையில் நீரே வெட்கமுறும் அளவுக்கு நெய்யை நீராக ஊற்றி பகிர்ந்துண்டதாகப் பாடல் தெரிவிக்கிறது. நீர் நாணும் அளவுக்கு சோற்றில் நெய் பிழிந்து உண்ணும் அளவிற்கு கால்நடைச் செல்வம், பால்படு பொருட்கள், காய், கனி, கிழங்கு, கீரைகளை தன் உணவில் கையாண்டுள்ளனர். அந்தளவிற்கு இயற்கை அறிவும், வேளாண் அறிவும், செல்வச் செழுமையும் நிரம்பியோர் தமிழர்கள்.
ஆறாம் திணை
தமிழர்களின் இலக்கியங்கள் ஐந்திணைகள் நிலப்பகுதியைக் கொண்டு படைக்கப்பட்டவை. பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற அனைத்து நிலப்பகுதிகளிலும் இயற்கையின் இயக்கம் சுழற்சியாக பருவ நிலைகளை மாறி மாறி நிகழ்த்தும். பாலை நிலத்தில் பனியும், மழையும், தென்றலும் குறிப்பிட்ட பருவத்தில் இயற்கை தம் செயல்பாட்டை நிகழ்த்தும். அதைப்போலவே முல்லை, மருதம், குறிஞ்சி நெய்தலில் பனி, மழை, வசந்தம் என்ற பருவ காலம் குறிப்பிட்ட திங்கள்களில் வந்து இயற்கை நிகழ்வை நிகழ்த்தும். ஆனால் மேற்கு மலைத் தொடர்களில் நிலவும் பனியும், மேகங்களின் உலாவலும் பிற நிலங்களில் நிலையாய்க் காண இயலாது. குறிஞ்சி நிலத்தில் கோடை, வறட்சி நிலவினாலும் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக பனி பிற இடத்தில் பொழியும். ஆனால் வாழ்க்கைச் சூழல் மொத்தமும் பனிப் பொழிவிற்குள்ளேயே அமைந்த நிலை பண்டைக்கால தமிழர்க்கில்லை.
ஆனால் இன்று பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர்ந்து தமிழர்கள் தம் பண்பாட்டுச் சூழல் மாறாமல் உலகின் பனி நிலங்கள் அமைந்த பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்றனர். பல்வேறு இடங்களில் தமிழர்கள் வாழ்ந்தாலும் மொழியாலும், இனத்தாலும் ஒன்றுபடும் பல்வேறு அமைப்புகளை தங்களுக்குள் உருவாக்கி தமது உணர்வுகளை ஐந்திணைகளுக்கு அடுத்ததாக ஆறாம் திணை எனும் புதிய நிலத் திணை இலக்கியங்களை தற்கால தமிழ் இலக்கிய புது மரபாகத் தமிழ் மொழிக்கு தந்துள்ளனர். தமிழர்கள் வாழ்விடம் தேடி புலம் பெயர்ந்தது ஒரு சோகமெனினும் தம் பண்பாட்டு மரபுகளை கைவிடாமல், திணைப் புலம் தோறும் முன்னோர் ஆக்கிவைத்த இலக்கியச் செல்வம் போன்றே இன்று இந்த புதிய இலக்கியங்களில் அவர்தம் வழியில் படைப்புகள் வெளி வருகின்றன.
தாய் மண்ணை விட்டுப் பிரிந்த அவர்களின் உணர்வின் வெளிப்பாடான அவலச்சுவை இலக்கியங்கள் ஊடாக பனித் திணை தமிழர்களுக்குள் புதிய கோட்பாடாக இன்று நாம் அறிவது என்னவெனில் ஆறாம் திணை வாழ்த் தமிழர்கள் உழைப்பது, உழைப்பால் வரும் பொருளை சேமிப்பது எனும் குறிக்கோள்கள் அவர்களிடம் உருவாகியுள்ளன. அத்துடன்
மொழியின் அடிப்படைக் கூறுகளான இலக்கணச் செழுமையும் சில நாட்டுத் தமிழர்களிடம் வளமாகவே உள்ளது. அறிவியல் நுட்பங்களில் தமிழர்கள் பெருமளவில் கோலோச்சுகின்றனர். இதனால் அறிவியல் கருவிப் பயன்பாட்டில் பிற மொழி இனத்தவரை விட அயல்நாட்டுத் தமிழர்கள் மேலோங்கியுள்ளனர். இந்தப் பயன்பாட்டுப் பெருக்கத்தால் உலக மொழியில் ஊடக நுட்பக் கருவி மற்றும் மெல்லியம் தயாரிப்போர் தமிழ் மொழியிலும் அத்தகையவற்றை உருவாக்க முனைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக