திங்கள், 15 ஜூலை, 2019

நூல்கள்தானே நம்மை உயர்த்தும் ஏணி


எங்கோ எப்போதோ படித்ததாக நினைவு. அது உண்மையா மிகை புனைவா என்றெல்லாம் தெரியாது ஆனாலும் எனக்குள் அதன் சாரம் இன்னும் ஈரம் குறையாமல் இருக்கிறது. ஞானத்தைக் கற்க வேண்டி காடு, மேடு, மழை, வெயில், குளிர், கடல் எல்லாம் கடந்து சீன தேசத்து துறவி ஒருவர் இந்தியாவிற்கு வந்தாராம். பலநாள் தேடலுக்குப்பின் அவருக்கு இங்கே அள்ள அள்ளக் குறையாத ஞானக் கருவூலங்களான ஓலைச் சுவடிகள் கிடைத்தனவாம். அவற்றையெல்லாம் குழந்தைகள்போல் அள்ளியெடுத்து கங்கை நதியைக் கடப்பதற்குத் துறவி படகில் கிளம்பினாராம். நிறைந்த ஓலைச்சுவடிகளின் பாரத்தால் அந்தப் படகு பயணம் தடைப்படும் என்பதை உணர்ந்த படகோட்டி அதில் சிலவற்றை ஆற்றில் வீசும்படி துறவியிடம் கூறினான். மறுப்பேதும் பேசாத துறவி முதலைகள் வாழ்கின்ற ஆற்றில் மறுகணமே விருட்டென பாய்ந்து, இந்தச் செல்வங்களை அக்கரையிலுள்ள மடத்தில் சேர்த்துவிடும்படியும் வாய்ப்பிருந்தால் தான் அங்கு வந்து சேர்கிறேன் என்று கூறினாராம். நூல்கள் போற்றுதற்குரியவை மட்டுமல்ல வணங்குதற்குரியவை என்பதற்கு இதுவே சான்று. பிறருக்கு எப்படியோ தெரியாது எனக்கு நூல் எனப்படுவது உடலும் உணர்வும் அறிவும் தோழமையும் மிக்க ஆத்மார்த்த நண்பனாகவே தோன்றுகிறது. ஒரு சில வேளைகளில் நட்பெனும் எல்லையைத் தாண்டி ஆசானாக நின்று நெறிப்படுத்தி  நல்வழிகாட்டுகிறது. நான் புரட்டிய நூல்களைவிட என்னை புரட்டிய நூல்கள் அதிகம். அவற்றின் ஒவ்வொரு சொல்லும் என் இதய அறைக்குள் கூடுகட்டி வாழ்கிறது. உலகத்தைப் புரட்டிப் போட்டதில் மகத்தான நூல்களின் பங்கு அதிகம். வாள் உனையைவிட பேனா முனைக்கு வலிவு அதிகம் என்பதை தொன்று தொட்டு உலக வரலாறு பலமுறை உறுதிபடுத்தியிருக்கிறது. மூலதனம் நூல் மூலம் பொதுவுடைமை சிந்தாந்தத்தை உலகம் முழுதும் பரவச் செய்த காரல் மார்க்ஸ் மீது எனக்குத் தனிக் காதலுண்டு. மூன்று பாகங்களாக வெளிவந்து உலகை குலுக்கிய அந்நூலை எப்படியாவது தேடிப்பிடித்துப் படிக்க வேண்டும் என்ற என் நெடுநாளைய ஆவல் ஒரு இந்தியப் பயணத்தின்போது நண்பர் மூலம் கிடைத்தது. இன்றுவரை மூலதனத்தின் மூன்று பாகங்களையும் முழுமையாகப் பார்த்ததில்லை. பொதுவுடைமை சிந்தனைக்கு எதிரானது என்பதால் அந்நூல் நம் நாட்டில் தடை செய்யப்பட்டதால் அதை வைத்திருக்கவும் மீள்வாசிப்பு செய்யவும் வழியில்லாமல் போய்விட்டது. அதனால் அதன் சுவையை முழுமையாக உணரும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. காரல் மார்க்ஸ் 15 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷ் அருட்காட்சியகத்தின் நூலகத்திலேயே அடைந்து கிடந்து தவமாக இந்நூலை ஆக்கினார் என்பதே தனித்தச் செய்தி. இதுபோல எத்தனையோ நூல்கள் மனிதனைச் செதுக்கி உலகத்தை வாழ்வித்துக்கொண்டுதான் இருக்கின்றன.  வரலாற்று ரீதியாக எத்தனையோ நூல்கள் உலகைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. “எனக்குள் ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்தியது டால்ஸ்டாயின் இறைவனின் அரசாங்கம் உனக்குள் இருக்கிறது என்ற நூல்” என்று  மகாத்மா காந்தியின் வாக்கு மூலத்தைப் படித்ததும் அதை அப்போதே தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் வேர்விட்டது. வெறும் 47 பக்கங்கள் கொண்ட பகுத்தறிவு அமெரிக்கர்களிடம் எழுப்பிய மறுமலர்ச்சி சிந்தனையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. “நாம் எவ்வளவு பெரிய கண்டத்துக்குச் சொந்தக்காரர்கள், சிறிய குட்டி தீவுக்கு அடிமையாகக் கிடக்கிறோமே” என்ற மனவெழுச்சியை அமெரிக்கர்களிடம் ஏற்படுத்தி புரட்சி பிகடனத்துக்கு வித்திட்டது. “கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து யார் மீட்கப் போகிறார்கள்?” என்று காலம் காத்திருந்தபோது டாம் மாமாவின் குடில் என்ற நூல் ஆப்ரகாம் லிங்கன் மனச் சாளரங்களைச் சட்டென்று திறந்துவிட்டது வரலாற்று உண்மை. பின்னாளில் வெளிவந்த பிரபலமான வேர்கள் நாவல் படித்தவர்கள் அமெரிக்க கறுப்பினத்தின் வலிகளை நன்கு உணர முடியும். நாம் பயின்று இன்புறத்தானே சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான பல்லாயிரம் நூல்கள் தமிழிலே கொட்டிக் கிடக்கின்றன. தொல்காப்பியச் சுவையும் ஐம்பெருங் காப்பியச் சிறப்பும் தெய்வீகம் கமழும் தீந்தமிழ்ப்பாக்களும் இதிகாச இனிமையும் சித்தர் களஞ்சியமும் என்றும் படிக்கப் படிக்க சிந்தை இனிக்கும். தற்கால கவிதையும் சிறுகதை நாவல் புனைவுகளும் தனித்ததோர் பூக்காடு. உலகத்தின் எல்லா ஐயங்களுக்கும் தீர்க்கத்தரிசனமாகத் திகழும் திருக்குறள் ஒன்றுபோதுமே நம்மை வானளவு விரியச் செய்வதற்கு?

கருத்துகள் இல்லை: