சனி, 8 நவம்பர், 2008

நட்புறவு

என் இளவேனிற் கால தொடக்கமே கல்லூரியில்தான் துளிர்விட்டது. என்னுள்ளேயும் வெளியேயும் இளமை எழில்கோலம் வரைந்த இனிய வசந்தமது. என் பார்வையில் அழகும் ஆர்வமும் ஆசையும் அரும்பி வழியும் தேவ காலமது.
எதையும் இதயத்தோடு இணக்கமாக இணைத்து அணுஅணுவாய் இரசித்து உருசித்துப் பார்க்கும் பெருநெருப்பு நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும்.. அறிவின் வேர்களை அகழ்ந்தாயத் துடிக்கும் ஆர்வம் மறுபுறம் மூளையில் முளைவிட்டு எழும். இதயத்துக்கும் மூளைக்கும் அடிக்கடி போராட்ட்ம் நிகழும். பெரும்பாலான வேளைகளில் இதயமே வெற்றி வாகைச் சூடும்.
அந்த இனிமையான பொழுதுகளில் என் இதயம் அதிகம் இளைப்பாறிய இடம் தமிழிலக்கிய நூல்களே. கல்லூரியின் நூலகத்தில் என்னென்ன நூல்கள் எங்கெங்கு உள்ளன என்பதை முழுமையாக அறிவேன். என் கை தொடாத தமிழ்நூல் இல்லையெனும் அளவுக்கு எனக்கும் நூல்களுக்குமுள்ள நட்புறவு பின்னிப்பிணைந்திருந்தது.
கல்லூரி நூலகம் எனக்கு அறிமுகப்படுத்திய உன்னத நண்பர்கள் பலர். அவர்களோடு எத்துணப் பொழுதுகள் ஆத்மார்த்தமாக உலவியிருக்கிறேன். எத்தனையோ கருத்து முரண்பாடுகளோடு கட்டிப் புரண்டு, சிந்தனை சிதறல்களால் சிக்குண்டு குழம்பியப்பின் தெளிந்து கூடிக்குலவி கரைகாணா காதலால் கட்டுண்டு, எனக்குள்ளே வேள்வி நடத்தியிருக்கிறேன்.
பள்ளிக் காலத்தில் விதையாய் விழுந்த பாரதியின் சில தெறிப்புகள் என்னுள் விருட்சமாய் வளர்ந்தது கல்லூரி நந்தவனத்தில்தான். டாக்டர் மு.வ., நா.பா, அகிலன், ஜெயகாந்தன் என நான் செவிவழி அறிந்திருந்த அவர்களின் ஆழம் தெளிவாய் புரிய வைத்தது கல்லூரி காலம்தான்

கருத்துகள் இல்லை: