பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்.
குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து புத்தகங்களே சமர்த்தாயிருங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்
அவன் மேலும் சொன்னான்...குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?
உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன
காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?
இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை
இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை
ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதைநீங்கள் அறிவதில்லை.
நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில் அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்
நீங்கள் மின்னலின் வாக்கியங்களை வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,
உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப் படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.
எழுத்துக்களால் அல்ல காயங்களால் கற்பதே கல்வி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.
எனக்கென்னவோ முரணாக சொன்னாலும்
இன்றைய நாளில் அதுதான் உண்மையோ என்று தோன்றுகிறது.
விளைவு பித்தன் எனக்கு சித்தனாகிப் போனான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக