வெள்ளி, 9 ஜனவரி, 2009

என் பிருந்தாவனத்தில் நந்தகுமரனாக

என்றன் தாய்பூமியை நினைக்கின்றபோதே என் நெஞ்ச முழுவதும் சொல்லால் விவரிக்க முடியாத அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கி வழிகின்றது.இந்தப் புனிதமான பிருந்தாவனத்திலே நந்தகுமாரனாக நான் உலவிய நாட்களை எண்ணி இன்றும் சிறுகுழந்தையாய் ஏங்குகிறது என்னிளமனது.
சிந்துபாடும் சிறுபறவையாய் பறந்து திரிந்த பால்ய நாட்களும், பயமென்ற சொல்லறியாது காடும் மேடும் சுற்றித்திரிந்த பொழுதுகளும், காட்டாற்று வெள்ளமென பொங்கிய மனத்தோடு துள்ளல்நடை பயின்ற காலங்களும், ஆசையோடு அமுத மழையில் ஆட்டம்போட்ட அருமை நாட்களும்.... மீண்டும் வருக என்னை அழைத்துச் செல்க.
இந்த பிருந்தாவன மண்ணின் வாசம் இந்தக் குருதியோடு கலந்து விட்டது. செம்மண் சாலையில் என் பாதம் பதித்தத் தடங்கள் இன்னும் என் கண்ணுக்குத் தெளிவாய் தெரிகின்றது. மழைநாட்கலில் ரப்பர் மரக் காடுகளிலுள்ள கால்வாய்களில் நீர்பெருகிடும்போது நண்பர்களோடு கும்மாளமிட்ட நாள்கள் நெஞ்சக் கலயத்தில் இன்றும் கொஞ்சி விளையாடுகின்றது.
இந்தப் புனித பூமியின் ஒவ்வொரு துகளும், ஓடையும், மரங்களும், குன்றும், எறும்புகளும், பறவைகளும்.... என்னுள்ளே தெய்வவீணை நாதமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலையுதிர்க் காலத்தில் மேலாடையின்றி நிர்வாணமாய் நாணி நிற்கும் மரங்களைக் காணுகையில் எனக்கும் வெட்கம் வரும்.
இன்று நாகரிக வெளிச்ச விழுதுகள் என் தாய் பூமியில் புது மாற்றங்களை வேர்விட்ட போதிலும் அன்றைய அற்புத நாள்களை ஆழமாக அழகாக இதயத்தில் பொன்வண்ண சித்திரமாய் செதுக்கி வைத்திருக்கின்றேன். இந்த கைப்புனைந்து இயற்றா கவின்பெரு வனப்பில் மீண்டும் முகித்தெழும்போது நான் நித்தம் புத்தம்புது பிறவியெடுக்கின்றேன்.
என் பிருந்தாவனத்தில் பனித்துளிகளைத் தலையில் சுமந்திருக்கும் பசும்புல் வெளியில் காலை நேரப் பொழுதில் வெறுங்கால்களில் மனத்தில் ஈரங்கசிய நடந்த அந்த சுந்தர சுகத்தைச் சொல்லி முடியாது. பனிபெய்யும் மார்கழிக் காலைப் பொழுதுகளின் குளிர் இன்னும் என்னுள்ளே கசிகிறது. இறுக்கமான கார்காலங்களில் கையது கொண்டு மெய்யது போர்த்தி இளகாத இருள் கவிந்திருக்கும் ரப்பர் மரக்காடுகளை நோக்கி நான் செய்த பயணம் தாலாட்டுகிறது. புலர்ந்து புலராத பூபாள வேளையில் தீமூட்டி குளிர்காய்ந்த பொழுதுகள்தாம் எத்துணை இன்பம்?
தாவரங்களின் இலைகளினூடே தங்கக்கம்பிகளாய் ஊடுருவி புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி, ச்ங்கீத இலயத்தோடு சலசலத்தோடும் நீரில் மலர்ச்சி தந்து, பசுமைத் தாயான கானகத்துக்கு உயிர் தரும் கதிரவனின் ஒளிக்கதிர்கல் என் பிருந்தாவனத்தில் செய்யும் அற்புதங்களை ஏட்டில் எழுதுதற்கும் வளமிகுந்த தமிழுக்கும் வலிவில்லையோ என்றே நினக்கின்றேன்.
வாழையிலையில் நர்த்தனமிடும் மழை முத்துக்களையும், இதயச் சிலிர்ப்போடு ஆனந்த பூமழையில் சிந்திட்ட ரோஜா இதழ்களையும் சின்னஞ்சிறு நீர்த்தேங்கிய குட்டைகளில் கும்மாளமிட்டு சங்கீதம் பாடும் தவளைகளையும் இன்றும் காதலிக்கின்றேன்.
தனது சிறு துவாரங்களுக்குச் சாரைசாரையாக இரை சுமந்து செல்லும் எறும்புக் கூட்டத்தினிலே நானும் ஒருவனாக கற்பனையில் செல்வேன். மழைக்காலங்களில் காகிதப் படகுவிட்டு நானும் அதில் ஏறி செல்வேன். என் பிருந்தாவனத்தில் வாழ்ந்த வாழ்கின்ற மனிதர்கள் என்றும் என் நேசத்திற்குரியவர்கள். நான் இந்த மண்ணில் தவழ்ந்தபோது எனக்குத் தாயினும் சாலப்பரிந்து அன்பமூதூட்டிய வெள்ளை உள்ளங்கள்.
என் பிருந்தாவனத்தில் ஆழமாக காலூன்றியபடியே நிலவை முத்தமிட்டிருக்கிறேன்; காற்றில் உலா வந்திருக்கின்றேன்; மனித உணர்வுகளோடு சங்கமித்திருக்கின்றேன்; இயற்கையோடு இரண்டறக் கலந்திருக்கின்றேன். இங்கு சுதந்திரக் காற்றை மட்டுமல்ல வாழ்க்கையில் வசந்தங்களை நிறையவே தரிசித்திருக்கின்றேன். கிழிந்த பாயில் எச்சில் கறைப்பட்ட தலையணையில் படுத்துக்கொண்டே எதிர்கால கனவுகளை வண்ணத்திரையாக மனத்தில் ஓடவிட்டு மகிழ்ந்திருக்கின்றேன். இன்றும் இதயத்தில் உனக்காக தவமிருக்கின்றேன் தாயே என் தேவபூமியே.

உயிர் பிழைக்கக் கற்பதே கல்வி

இந்த மண்ணில் மானிட குமுகாயம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மிருகங்களாக வாழ்ந்த மனிதன் தமது பட்டறிவால் பலவற்றைக் கற்று மெல்ல வாழும் வகை அறிந்து கொண்டான். வயிற்றுக்கு மட்டுமே உணவிட்டு வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் அறிவின் எல்லையை விரிவுப்படுத்த முயன்றபோது பிறந்ததுதான் கல்வி.
வெந்தழால் வேகாத, வேந்தரால் கொள்ளத்தான் முடியாத, அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியான கல்வியின் மேண்மயினை எல்லா மொழிகலும் போற்றியிருப்பினும் நம் தேன்தமிழோ வானளவு உயர்த்தியிருக்கிறது.
மனித உயிர்கள் சீரிய ஒழுக்கச் செறிவோடும் பண்பாட்டு அறநெறிகளோடும் வாழ்வியலில் சிறந்தோங்க உறுதுணையாய் விளங்கிவந்த கல்வியானது இன்று பெரும்பாலோரால் திசைமாற்றப்பட்டு வாழ்க்கையோடு ஒட்டாத வெறும் ஏட்டுக்கல்வியாய் மட்டுமே விளங்குகின்றது.
வள்ளுவன் சொன்ன ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற மெய்யெல்லாம் இன்றைய மக்களிடத்தே பொய்மையாய் வாழ்கிறது. ‘பயிற்று பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்’ என்றானே பாரடி அதையும் தவறாகப் புரிந்து கொண்ட நம்மில் படித்த பலர் ‘பாரை(bar)’ உயர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
நட்புறவோடும், அன்போடும், பண்போடும் ஆக்கரமான மேம்பாட்டோடும் உயிர்கள் பிழைக்கவும் தழைத்து வாழவும் பயன்பட வேண்டிய கல்வியானது இன்று பலரின் மத்தியிலே வெறும் வயிற்றுப் பிழைப்பாய் போனதே விந்தைதான். படித்தவன் மத்தியிலே பொய் பித்தலாட்டங்கள், வஞ்சகச் சிந்தனைகள், அநீதிகள் பல்கிவிட்டன. உயிர் பிழைக்கப் பெறவெண்டிய கல்வியை சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பெற்றதின் பயனாக குமுகாயம் முழுமையாக தீங்கிழைக்கும் கொடும் பிணி பரவியுள்ளது.
‘படிப்பு வளருது, பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான் ஐயோவென்று போவான்’ என்று பாரதி சொன்னது பேருண்மை. அன்று தொட்டு படித்தவர்களை மக்கள் முழுமனதோடு நம்புகிறார்கள். ஆதலால் படித்தவர்கள் கீழான எண்ணங்களும் செயல்களும் கொள்ளலாகாது. கல்விக் கற்பதின் உன்னத நோக்கம் புரியாதக் காரணத்தால் வயிற்றுப் பிழைப்புக்காக கற்கும் நிலையில் இன்று மெத்தப் படித்த பலர் சாதாரண மக்களுக்கு எதிராகச் சூது செய்து கொண்டுதான் வருகின்றனர்..
‘கல்வி என்பது ஆன்மாவில் ஏற்றப்படும் ஒரு ஒளி; அணையாது ஒளிவிடும் ஒளி. கல்வி, மனிதனின் பொறி புலங்அளுக்கு அர்த்தம் கற்பிப்பது; படைப்பாற்றலை வழங்குவது; அறிவியல் ஆளுமையை வழங்கி மனிதனை முழுமைப்படுத்துவது; மானுடம் வெற்றி பெறத் துணையாய் அமைவது’ என்றார் குன்றக் குடியடிகளார்.
இன்றைய கல்வி முறையோ மனித மூளையில் செய்திகளைத் திணீப்பதும் நினைவாற்றலை சோதிப்பதிலேயே நின்றுவிடுகிறது. கற்கும் மாணாக்கனிடத்தே தனம்பிக்கை, திறமை, ஆளுமை அனைத்தும் குறுகிப்போய் நாளை வேலையைப் பற்றிய கனவே பெரிதாய் நிற்கின்றது.
‘வயிறு பிழைக்கக் கற்பதல்ல கல்வி உயிர் செழிக்கக் கற்பதே கல்வி’ என்று வள்ளலார் கருத்துக்கேற்ப சிறந்த கல்வியானது பெருமையைத் தரும், புகழைத் தரும், நாளைய வாழ்க்கை ந்ன்முறையில் அமைய ஆக்ககரமான அறிவாண்மையைத் தரும்.

திங்கள், 5 ஜனவரி, 2009

மனம் வெளுக்க வழி

துணி வெளுக்க மண்ணுண்டு; தோல் வெளுக்கச் சாம்பலுண்டு; மணிவெளுக்கச் சாணையுண்டு

செவ்வாய், 25 நவம்பர், 2008

இறப்பு

எல்லார் வீட்டிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத நூலிழைப் போன்ற பாதையொன்று மயான பூமியை நோக்கிச் செல்கிறது

சனி, 8 நவம்பர், 2008

புலர்ந்தும் புலராத பூபாளப் பொழுதுகள்

புலர்ந்தும் புலராத பூபாளப் பொழுதுகள்

(வாழ்க்கையின் நெடுந்தூரப் பயணத்தில் சற்று இளைப்பாற நாம் திரும்பிப் பார்க்கும்போது நம்முள் துளிர்விடுவதெல்லாம் என்றும் இனிக்கும் நம் இளைய வயது பொழுதுகளே. இந்தக் கட்டுரை 1991ல் ஏப்ரல் மாதத்தில் விக்கோரியா தோட்ட முன்னாள் மாணவர் மன்றத்தின் காலாண்டு இதழான ‘தென்றலுக்கு’ நான் எழுதியது. நானே ‘தென்றல்’ இதழாசிரியாரானதால் இக்கட்டுரைகளை என் சொத்துகளாக சேர்த்து வைத்துள்ளேன். இந்த எழுத்துகளைத் திரும்பப் பார்க்கும்போதெல்லாம் அந்த வயது என்னில் வாழ்வது போன்ற உணர்வெழும். இந்தக் கட்டுரையில் என்னோடு வாழ்ந்த மண்ணும் மனிதர்களும் உங்களுக்குள்ளும் தெரிவார்கள். சுருதி மாறாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன்)

நெஞ்சகக் கூட்டில் நான் பத்திரமாகப் பதுக்கி வைத்த நினைவுப் புறாக்கள் மீண்டும் என்மனவானத்தில் சிறகடித்துப் பறக்கின்றன. தோட்ட குடில்களுக்கிடையே நான் ஊடாடி புகுந்தோடியபோதெல்லாம் தேனிசைக் கீதங்களாக என் செவிமடல்களில் பாய்ந்திட்ட பழம்பாடல்களை இன்று கேட்க நேரிடும்போது இறந்த காலத்தின் இனிய நினைவுகள் பெளர்ணமியாய் என்னுள் பிரகாசிக்கிறது. என்னையே நான் உள்முகப்படுத்தி என் இளையகால நினைவுகளோடு உவகைப் பொங்க நீராடுகின்றேன்.
அன்றொரு நாள்.... வேய்ங்குழல் நாதம் வானொலியில் இழையோட பொலபொலவென விடிகின்ற பூபாளப் பொழுதில் உணர்வுகள் விழித்திட்டும் இமைகள் விரித்திட மறுக்கும் வேளையில் எங்கள் தோட்டத்தில் ‘வெண்கலக் குரலோன்’ தண்டல் பொன்னுசாமியின் குரலினூடே தோட்டப் பாட்டாளிகள் ‘பெரட்டு’ முடிந்து வரும் இறைச்சலும் கேட்கும். தொடர்ந்தாற்போல் செல்லப்பன் பிள்ளைகளின் ‘இட்டிலி’,`தோசை’ கூக்குரல் தவறாமல் வீட்டைக் கடந்து செல்லும்.
அந்த ‘இட்டிலி’,`தோசை’ விற்கும் சிறுவர்களின் சுறுசுறுப்பையும் கூவிச் செல்லும் உற்சாகத்தையும், தாத்தா என் சோம்பேறித்தனத்தோடு ஒப்பிட்டு பேசும்போதெல்லாம் அவ்வதிகாலை வேளையிலே எரிச்சலும் கோபமும் வரும். எழுந்ததும் முதல் வேலையாக அந்த பையன்களை நாளை காலையில் என் வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரிக்கத் தோன்றும்.
என் வயதொத்த அந்தச் சிறுவர்களை இன்று என்னைப் போன்ற இளைஞர்களாகப் பார்க்கின்றேன். வாழ்க்கையிலும் உருவத்திலும் நன்கு வளர்ந்திருக்கின்றார்கள் ஆனாலும் என்னைவிட சுறுசுறுப்பு குறைந்தவர்களாகவே இருக்கின்றனர் என்பதை என்னோடு ஒப்பிட்டு பேசிய தாத்தாவிடம் சொல்லத் தோன்றுகிறது. ஆமாம் தாத்தாதான் இப்ப இல்லையே.
இளையப் பருவத்தில் கேட்பாரும் மேய்ப்பாருமின்றி அலைந்து திரிந்த பொழுதுகள் மிகமிக அற்புதமானவை. என் நண்பர்களோடு அடுப்பெரிக்க விறகு பொறுக்க மிதிவண்டியை சரிவர ஓட்டத் தெரியாத நிலையிலும் எடுத்துக்கொண்டு குதூகலத்தோடு ரப்பர் மரக்காடுகளுக்குச் செல்வோம். ஆளுக்கொரு பக்கமாய் விழுந்து கிடக்கும் கிளைகளை வெட்டி கட்டுவதுண்டு. சில வேளைகளில் காய்ந்த கிளைகளைத் தேடி மரமேறி வெட்டி வீழ்த்துவதுமுண்டு.
எங்கள் உயரத்துக்கும் அதிகமான விறகுகளை மிதிவண்டியிலே ஏற்றி சமாளிக்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி பலமுறை குடைசாய்ந்து இறுதியில் வீடடையும் இன்பம் இருக்கிறதே அதை சொல்லி முடியாது. மாலையில் என் போன்ற பிள்ளைகள் பிளந்த விறகுகளை சதுர வடிவில் அடுக்கி வைத்து விளையாடும் விளையாட்டு அதைவிட மேலானது.
தோட்டத் திருவிழாக் காலங்கள் என்றும் மனதுக்குள் பூமழை தூவுகின்ற மகிழ்ச்சியான நாட்கள். திருவிழா வருவதற்கு முன்பே நாங்கள் நகரும் நாட்களை போகவிடாமல் நன்றியோடு எண்ணிக் கொண்டிருப்போம். மாலையில் கோயிலுக்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக தோட்ட நிர்வாகம் ‘டிரக்டர்களை’ ஏற்பாடு செய்து தரும்.
இரவு கோயில் உபயத்தில் கலந்து கொள்வதற்காக பிள்ளைகள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிச் செல்வோம். ஒருமுறை அவ்வாறு செல்லுகையில் ‘டிரக்டர்’ ஓட்டுநர் முருகையா குடிபோதையில் வேகமாக செலுத்தியதால் நானும் சில நண்பர்களும் கீழே விழுந்து சொற்ப காயங்களோடு தப்பித்த அனுபவமும் உண்டு.
திருவிழாவிற்கு முன் நடக்கும் சிறப்பு உபய நாட்களில் தவறாமல் கோயிலுக்குச் செல்வோம் கடவுள் பக்தியினாலல்ல, ஆட்டம் போடத்தான். ஒருநாள் குறும்புமிக்க சிறுவனொருவன் தாரை தப்பட்டை கட்டிவைக்கப்பட்டுள்ள துணியில் அதையெடுத்துவிட்டு நாய்க்குட்டிகளை வைத்துவிட்டான். தப்பட்டையை எடுக்க வந்த அப்பாதுரை ஒட்டு மொத்தமாக கொச்சை மொழியில் அர்ச்சனை செய்தது மறக்க முடியாதது.
சாமி ஊர்வலம் முடிந்து அளிக்கப்படும் பொங்கலை அடித்துப் பிடித்து வாங்கிக் கொண்டு ‘டிரக்டர்’ எறி வீடு வந்து களைப்போடும் வியர்வையோடும் தூங்குவோம். சாமி ஊர்வலம் தோட்ட நிர்வாகி, கிராணி வீடுகளுக்குச் செல்லும்போது எனக்கு மடற்ற மகிழ்ச்சி ஏற்படும். தோட்ட நிர்வாகி வீடு குன்றிலிருப்பதால் இரவு வேளையில் ‘டிரக்டரில்’ ஆடி அசைந்து கூட்டத்தோடு செல்வதில் தனிச் சுகமிருக்கும்
திருவிழாவின்போது மக்கள் கூட்டத்தையும் காவடிகள் அசைவதையும் காண்பதில் ஆர்வமிருந்தபோதும் தோட்ட மக்களின் பொருளற்ற சமயக் கூத்துகளைப் பற்றி பல புரியாத கேள்விகள் என்னுள்ளே வேர்விடத் தொடங்கியது. அந்த புதிர்கள் வளர்ந்து என்னை நாத்திகத்தின்பால் ஈர்த்தது என்பது வேறுகதை. ஒருமுறை திருவிழா ஊர்வலத்தின்போது கரகாட்டக் குழு ஆட வந்திருந்தது. கரகாட்டம் நடக்கும் ‘ஆயக் கொட்டகையின்’ எதிர்ப்புறம் ஒரே சலசலப்பு. எங்கள் தோட்டத்து சங்கீத சிரோன்மணி ‘அடுப்பூதி’ வழக்கம்போல் மது அருந்திவிட்டு ‘பாட்டுக் கச்சேரி’ செய்தது தனிச்சுவை.
தோட்ட மக்களிடையே ‘சாமி’ பார்ப்பது என்பது மிகவும் ஈர்ப்பான ஒரு நடவடிக்கையாகவே எனக்குப் பட்டது. ஓரிரவு திடீரென ‘சிம்டா’ என்பவருக்கு ‘சாமி’ வந்திறங்க அதற்குப் போட்டியாக ‘புஷ்பா’ என்னும் பெண்ணுக்கும் ‘சாமி’வர தோட்டமே திரண்டு அவர்கள் பின்னோடி வேப்பமரத்தடியில் கூடிநிற்கின்றனர். நான் பயங்கலந்த மனத்தோடு நடப்பதைக் கூர்ந்து பார்க்கின்றேன். அந்த ‘சாமியாடும்’ இருவரும் அந்த இரவில் வேப்பமரத்தில் ஏற எத்தனித்தபோது பெரிய மீசை ஏழுமலை கணீர் குரலில் அதற்கு தடைவிதிக்க அதற்கு ‘சாமிகள்’ மறுக்க கோபப்பட்ட மீசைக்காரர் பிரம்பை எடுத்துக் கொண்டு விரட்ட ‘சாமிகள்’ ஓட்டம் பிடித்தது இன்றும் சிரிப்பூட்டுகிறது. மறுநாள் தோட்டம் முழுவதும் இச்சம்பவம் இனிக்க இனிக்கப் பேசப்பட்டது.
ஒருமுறை தோட்டத்தில் ஒருவரின் ‘செய்வினை’ நீக்குவதற்காக வரவழைக்கப்பட்ட ‘சங்கலி கருப்பன்’ சாமி கோழி தொடையை கடக்கு முடக்கென்று ஆவேசத்தோடு கடித்து சாப்பிட்டதும் தன்னையே சாட்டையால் மாறிமாறி அடித்துக் கொண்டதும் கண்டு இரவெல்லாம் பயத்தால் எனக்கு வியர்த்தது. அதேபோன்று நானும் என் பால்ய நண்பன் பிரகலாதனும் அடிக்கடி செல்லும் ‘கட்டை வெட்டி’ வீட்டில் நண்பரின் அக்காவுக்கு ‘சாமி’ வந்தது. அங்கே அவர்கள் குடும்பமே ‘சாமி’ பார்த்துக் கொண்டிருக்கையில் நெடுநேரம் நின்று ஆடியதால் ‘சாமி’ தன்னை ஏன் உட்கார வைக்கவில்லை என்று கோபித்துக் கொண்டு என்னை நாற்காலி எடுத்து வர கட்டளை இட்டதை நினைத்தால் நானே சிரித்துக் கொள்வேன்.
தோட்டத்தில் கிராமத்து தேவதை ‘மாரியம்மாவுக்கு’ அடுத்து ‘முனியாண்டி’,’மதுரை வீரன்’ போன்ற சிறுதெய்வ வழிபாடு நிறைய இருக்கும். ரப்பர் மரக் காடுகளிலும் புற்றுகளிலும் பழைய ‘குத்துக் கட்டை’களிலும் இந்த வழிபாடு பிரசித்தம். அப்போதெல்லாம் நானும் நண்பர்களும் சாப்பிடுவதற்கென்றே இவ்வழிபாடுகளில் கலந்து கொள்வோம். இங்கே தோட்ட மக்கள் உறவுமுறை கொண்டாடுவது, கூட்டமாக சேர்ந்து சமைப்பது, கனிவோடு பரிமாறுவது போன்ற மனித உணர்வுகள் என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. மண் தரையில் ரப்பர் மரவேர்களுக்கிடையில் அழுக்குப் படிந்த கைகளோடு அந்த வெள்ளையுள்ள மனிதர்களால் பரிமாறப்பட்ட அந்தச் சோற்றின் சுவை எங்கு தேடினும் கிடைக்காது.
அறியாமையால் உழன்ற அந்தப் புலராத பொழுதுகளில் பொருள் புரியாத செயல்களெல்லாம் அளவற்ற இன்பத்தை தந்தது. அறிவு வெளிச்சம் நுழைய அறியாமையின் இருள் மெல்ல விலக வாழ்க்கையின் தேடல் வேறு இலக்கு நோக்கி சென்றுவிட்டது. சரியோ தவறோ நான் என் தோட்ட மக்களோடு ஒன்றிவாழ்ந்து அனுபவித்த அந்த பூபாளப் பொழுதுகள் என்றுமே அழியாத கல்வெட்டுகளாய் நிலைத்திருக்கும். அந்தக் கரவற்ற தோட்ட மண்ணோடும் மக்களோடும் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு கிடைத்த வரம் மட்டுமல்ல வாழ்க்கைக்கு உரம். அந்த மண்ணும் மக்களும் என்றும் என் ஆராதனைக்குரியவர்கள்.

( இதைப் படிப்பவர்கள் மலேசியாவில் ஏதேனும் தோட்டத்தில் பிறந்து வளர்ந்திருப்பின் கட்டுரையின் சாரம் நன்கு புரியும். அவர்களும் தாங்கள் வாழ்ந்த தோட்டத்து பின்னணியை நினைத்துப் பார்க்க இக்கட்டுரை தூண்டுமேயாயின் அதுவே சிறப்பு. உலகளாவிய தமிழர்களுக்கு மலேசிய தோட்டப்புற மக்களின் வாழ்க்கை முறையின் சிறு பதிவாக முன் வைக்கின்றேன்)

முருகா

எழும்போதும் வேலும்மயிலும் என்பேன்,
எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலும்மயிலும் என்பேன்,
தொழுதே உருகி அழும்போதும் வேலும்மயிலும் என்பேன்,
அடியேன் சடலம் விழும்போதும் வேலும்மயிலும் என்பேன், செந்தில் வேலவனே