வெள்ளி, 9 ஜனவரி, 2009

என் பிருந்தாவனத்தில் நந்தகுமரனாக


என்றன் தாய்பூமியை நினைக்கின்றபோதே என் நெஞ்ச முழுவதும் சொல்லால் விவரிக்க முடியாத அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கி வழிகின்றது.இந்தப் புனிதமான பிருந்தாவனத்திலே நந்தகுமாரனாக நான் உலவிய நாட்களை எண்ணி இன்றும் சிறுகுழந்தையாய் ஏங்குகிறது என்னிளமனது.
சிந்துபாடும் சிறுபறவையாய் பறந்து திரிந்த பால்ய நாட்களும், பயமென்ற சொல்லறியாது காடும் மேடும் சுற்றித்திரிந்த பொழுதுகளும், காட்டாற்று வெள்ளமென பொங்கிய மனத்தோடு துள்ளல்நடை பயின்ற காலங்களும், ஆசையோடு அமுத மழையில் ஆட்டம்போட்ட அருமை நாட்களும்.... மீண்டும் வருக என்னை அழைத்துச் செல்க.
இந்த பிருந்தாவன மண்ணின் வாசம் இந்தக் குருதியோடு கலந்து விட்டது. செம்மண் சாலையில் என் பாதம் பதித்தத் தடங்கள் இன்னும் என் கண்ணுக்குத் தெளிவாய் தெரிகின்றது. மழைநாட்கலில் ரப்பர் மரக் காடுகளிலுள்ள கால்வாய்களில் நீர்பெருகிடும்போது நண்பர்களோடு கும்மாளமிட்ட நாள்கள் நெஞ்சக் கலயத்தில் இன்றும் கொஞ்சி விளையாடுகின்றது.
இந்தப் புனித பூமியின் ஒவ்வொரு துகளும், ஓடையும், மரங்களும், குன்றும், எறும்புகளும், பறவைகளும்.... என்னுள்ளே தெய்வவீணை நாதமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலையுதிர்க் காலத்தில் மேலாடையின்றி நிர்வாணமாய் நாணி நிற்கும் மரங்களைக் காணுகையில் எனக்கும் வெட்கம் வரும்.
இன்று நாகரிக வெளிச்ச விழுதுகள் என் தாய் பூமியில் புது மாற்றங்களை வேர்விட்ட போதிலும் அன்றைய அற்புத நாள்களை ஆழமாக அழகாக இதயத்தில் பொன்வண்ண சித்திரமாய் செதுக்கி வைத்திருக்கின்றேன். இந்த கைப்புனைந்து இயற்றா கவின்பெரு வனப்பில் மீண்டும் முகித்தெழும்போது நான் நித்தம் புத்தம்புது பிறவியெடுக்கின்றேன்.
என் பிருந்தாவனத்தில் பனித்துளிகளைத் தலையில் சுமந்திருக்கும் பசும்புல் வெளியில் காலை நேரப் பொழுதில் வெறுங்கால்களில் மனத்தில் ஈரங்கசிய நடந்த அந்த சுந்தர சுகத்தைச் சொல்லி முடியாது. பனிபெய்யும் மார்கழிக் காலைப் பொழுதுகளின் குளிர் இன்னும் என்னுள்ளே கசிகிறது. இறுக்கமான கார்காலங்களில் கையது கொண்டு மெய்யது போர்த்தி இளகாத இருள் கவிந்திருக்கும் ரப்பர் மரக்காடுகளை நோக்கி நான் செய்த பயணம் தாலாட்டுகிறது. புலர்ந்து புலராத பூபாள வேளையில் தீமூட்டி குளிர்காய்ந்த பொழுதுகள்தாம் எத்துணை இன்பம்?
தாவரங்களின் இலைகளினூடே தங்கக்கம்பிகளாய் ஊடுருவி புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி, ச்ங்கீத இலயத்தோடு சலசலத்தோடும் நீரில் மலர்ச்சி தந்து, பசுமைத் தாயான கானகத்துக்கு உயிர் தரும் கதிரவனின் ஒளிக்கதிர்கல் என் பிருந்தாவனத்தில் செய்யும் அற்புதங்களை ஏட்டில் எழுதுதற்கும் வளமிகுந்த தமிழுக்கும் வலிவில்லையோ என்றே நினக்கின்றேன்.
வாழையிலையில் நர்த்தனமிடும் மழை முத்துக்களையும், இதயச் சிலிர்ப்போடு ஆனந்த பூமழையில் சிந்திட்ட ரோஜா இதழ்களையும் சின்னஞ்சிறு நீர்த்தேங்கிய குட்டைகளில் கும்மாளமிட்டு சங்கீதம் பாடும் தவளைகளையும் இன்றும் காதலிக்கின்றேன்.
தனது சிறு துவாரங்களுக்குச் சாரைசாரையாக இரை சுமந்து செல்லும் எறும்புக் கூட்டத்தினிலே நானும் ஒருவனாக கற்பனையில் செல்வேன். மழைக்காலங்களில் காகிதப் படகுவிட்டு நானும் அதில் ஏறி செல்வேன். என் பிருந்தாவனத்தில் வாழ்ந்த வாழ்கின்ற மனிதர்கள் என்றும் என் நேசத்திற்குரியவர்கள். நான் இந்த மண்ணில் தவழ்ந்தபோது எனக்குத் தாயினும் சாலப்பரிந்து அன்பமூதூட்டிய வெள்ளை உள்ளங்கள்.
என் பிருந்தாவனத்தில் ஆழமாக காலூன்றியபடியே நிலவை முத்தமிட்டிருக்கிறேன்; காற்றில் உலா வந்திருக்கின்றேன்; மனித உணர்வுகளோடு சங்கமித்திருக்கின்றேன்; இயற்கையோடு இரண்டறக் கலந்திருக்கின்றேன். இங்கு சுதந்திரக் காற்றை மட்டுமல்ல வாழ்க்கையில் வசந்தங்களை நிறையவே தரிசித்திருக்கின்றேன். கிழிந்த பாயில் எச்சில் கறைப்பட்ட தலையணையில் படுத்துக்கொண்டே எதிர்கால கனவுகளை வண்ணத்திரையாக மனத்தில் ஓடவிட்டு மகிழ்ந்திருக்கின்றேன். இன்றும் இதயத்தில் உனக்காக தவமிருக்கின்றேன் தாயே என் தேவபூமியே.

கருத்துகள் இல்லை: