செவ்வாய், 15 நவம்பர், 2016

ஆசிரியர் கல்விக் கழக இலக்கியப் பாடங்கள் கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைகள் செயல்பாடும் வெளிப்பாடும்


தமிழ்மாறன் பலராம்
ஆசிரியர் கல்விக் கழகம்,
சுல்தான் அப்துல் அலிம் வளாகம்,
08000 சுங்கை பட்டாணி, கடாரம்


1.0     முன்னுரை
அற்றைநாள் கற்றல் கற்பித்தலில் ஆசிரியரானவர் அறிவின் கொள்கலனாக விளங்கினர். மாணாக்கர் ஆசிரியரிடமிருந்து அறிவை ஒருவழித் தடத்திலே மட்டுமே பெற்றனர். ஆசிரியர்  கேள்வி கேட்பவராக மாணவர் விடை தருபவராக மட்டுமே விளங்கினர், ஆனால் இற்றைய சூழலில் ஆசிரியரானவர் வழிகாட்டுபவராகவும் மாணாக்கரை சிந்திக்கத் தூண்டுபவராகவும் விளங்குகின்றனர். இதன்வழி ஆசிரியரும் மாணாக்கரும் சேர்ந்தே பல்வேறு விடயங்களைக் கலந்தாய்ந்து கண்டடைகின்றனர். ஆசிரியர் மாணவர் இவ்விருவழித் தொடர்பும் உறவும் சீரிய கருத்துப் பரிமாறலுக்கும் கல்வியலில்  புதியதொரு திறப்பு உருவாவதற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆக, இற்றைய புதுமையை நோக்கித் துரிதமாகப் பெயரும் கல்வி உலகில் உயர்நிலைச் சிந்தனைச் செயல்பாடும் வெளிப்பாடும்  தவிர்க்க இயலாதொன்றாகும்.
புதிய பாடத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட்ட காலந்தொட்டே மலேசியக் கல்வி அமைச்சால் பள்ளிகளில் உயர்நிலைச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெறலாயின. இருபதாண்டுகளுக்கும் மேலாக வகுப்பறை கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைப் பயன்பாட்டை ஊக்குவதன் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பல்வேறு நிலையிலான வழிகாட்டி பயிலரங்குகள் பட்டறைகள் வழங்கப்பட்டுள்ளன எனலாம். உயர்நிலைச் சிந்தனைகளை ஆசிரியர்கள் அவசியம் நாளும் தங்கள் கற்றல் கற்பித்தலில் செயல்படுத்த வேண்டும் என்பதை மலேசியக் கல்வியமைச்சின் தலையாய கோரிக்கையாகும். எதிர்கால வாழ்வில் எதிர்ப்படும் சவால்களைச் சமாளிப்பதற்கு இன்றே உயர்நிலைச் சிந்தனைகளைப் பற்றியப் புரிதலும் செயல்பாடும் அனைவருக்கும் மிக அவசியமாகும்.
இலக்கியம் என்றாலே வாசிப்பின் பரப்பளவு அதிகமிருக்கும்; நிறைய கருத்துகளையும் மறைப்பொருள் உண்மைகளையும் கொண்டிருக்கும்; பல அடர்த்தியான சொற்களையும் பொருளையும் உள்ளடக்கியிருக்கும்; நிறைய குறியீடும் இருண்மையும் கொண்டிருக்கும் போன்றதொரு தோற்ற மயக்கம் பெரும்பாலான மாணவர்களிடத்து உலவுகிறது. இந்த மனத்தடை எல்லாவற்றையும் தாண்டி இலக்கியத்தை இனிமையாகச் சுவைப்பதற்கும் அதன் மீதூர்ந்து மேலும் ஆழ்நிலைக்கு இட்டுச்சென்று உய்த்துணரச் செய்வதற்கும் இலக்கியம் கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைகள் கட்டாயம் செயலாக்கம் பெறவேண்டுவது முக்கியமாகும்.
2.0     இலக்கியம் கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைத் திறன்களின் முக்கியத்துவம்
சிந்தனை என்பது மூலைச் செயற்பாங்கின் விளைவாகும். இச்செயற்பாங்கின் விளைவை மாணவர்களின் பேச்சாலும் எதிர்வினையாலும் இன்னும் பிற நடத்தை செயற்பாடுகளின் வழி அறிய இயலும். கற்றல் செயல், கற்போரின் போக்கு, கற்றல் விளைவுகள், கற்பிக்கும் முறை இவற்றினூடாக மாணவர்களிடையே உயர்நிலைச் சிந்தனை உருவாக்க இயலும் என்கின்றனர் கல்வியாளர்கள். பெஞ்சமின் புளூம் (Taxonomy Bloom,1956) வகைதொகை நெறியில் உள்ளடங்கியுள்ள அறிவு, உணர்வு, முனைவு ஆகிய மூன்று களங்களில் அறிவுசார் நிலையே இங்கு முகாமை பெறுகிறது. மேலும் அண்டர்சன், கரத்வோல் (2001) கூற்றுப்படி வழக்கத்திற்கு மாறாக சூழலுக்கேற்பப் புதிய பொருள் பெயர்ப்பு செய்வதும்கூட உயர்நிலைச் சிந்தனைகளின் முக்கிய வெளிப்பாடு என்கிறார்.
மற்றெல்லாப் பாடங்களைப் போலவே இலக்கியப் பாடத்திலும் மாணவர்கள் ஆழச் சிந்திக்கும் நோக்கில் சிந்தனைத் திறன் வெளிப்படையாகவே கற்பிக்கப்பட வேண்டும் என்ற நிலை இன்றுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் சிந்தனைத் திறனை உட்புகுத்தி கற்பிக்கப்பட வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் (ரெஸ்நிக், 1987). வகுப்பறையில் இலக்கியம் கற்றல் கற்பித்தலின்போது ஆசிரியரானவர் உயர்நிலைச் சிந்தனைகளை எவ்விதம் மாணவர்களிடம் கிளர்த்தல் செய்ய வேண்டும்? மாணவர்கள் அறிவுநிலைக்கொப்ப உயர்நிலைச் சிந்தனைக் கேள்விகளை எவ்வாறு கையாள வேண்டும்? மாணவர்களின் அடிப்படை புரிதலிலிருந்து எப்படி உயர்நிலைச் சிந்தனை நோக்கிச் செல்ல வேண்டும்? உயர்நிலைச் சிந்தனை நோக்கிச் செல்ல செல்ல மாணவர்கள் எதனை மையப்படுத்தி தன்னுணர்வை வலுப்படுத்தியும் வளப்படுத்தியும் கொள்ள வேண்டும்? போன்ற வினாக்களை உள்முகமாக ஆசிரியர் நோக்குதல் நலம்.
இதனைத் தொடர்ந்து, இலக்கியம் துய்த்தலில் மாணவர் உயர்நிலைச் சிந்தனைவழி அடைந்த அனுபவம் அல்லது உணர்வுநிலை மாற்றத்தை எவ்வாறு அணுக வேண்டும்? உயர்நிலைச் சிந்தனையின்வழி மாணவர்கள் பெற்ற பல்வேறுபட்ட இலக்கிய நுகர்வை எவ்விதம் வகைப்படுத்தி ஒவ்வொருவரின் கண்டடைதலுக்கு ஏற்றவாறு பொருள் பெயர்ப்புச் செய்வது? இலக்கியத்தின் ஊடாக உயர்நிலைச் சிந்தனைகளின் நிலைகளான ஆய்வுச் சிந்தனை ஆக்கச் சிந்தனை கண்ணோடத்தை எப்படி தூண்டுவது? இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைச் செயலாக்கத்தின்வழி மாணவர் தம் வாழ்வில் எதிர்ப்படும் சிக்கல்களைக் களையும் திறனை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? போன்றவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மாணவர்கள் இலக்கியப் பாடத்தில் பயின்ற பாடப் பொருளை தாங்கள் வகுப்புக்கு வெளியே நாள்தோறும் எதிர்நோக்கும்  நடைமுறைச் சூழல்களுக்கேற்பப் பொருத்தப்பாட்டுடன் பயன்படுத்தி அச்சூழலைத் திறம்படக் கையாளும் திறத்தையே உயர்நிலைச் சிந்தனையின் வெளிப்பாடு எனலாம். இத்தகு உயர்நிலைச் சிந்தனைகள் சமுதாய நிலைக்கு உற்றதாகவும் அறிவு நலத்திற்கு ஏற்றதாகவும் திகழ வேண்டும். மேலும்  அவ்வறிவானது எளிமையாகவும் இலகுவாகவும் பயன்பாட்டு நிலைக்குக் கொணரக் கூடியதாகவும் இருந்தால் சீரிய நற்பயன் விளைவிக்கும்.

          இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைகளை உட்புகுத்திக் கற்பிக்கும்போது, மாணவர்கள் வெறும் இலக்கிய இன்பத்தையும் பாடப் பொருளறிவையும் மட்டும் பெறுவதில்லை. மாறாகப் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் சூழல் கருதிப் பயன்படுத்தும் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். ஆகையால்தான் வகுப்பறையில் இலக்கியப் பாடம் கற்பிக்கப்படும்போது உயர்நிலைச் சிந்தனைகளை செவ்வனே திட்டமிட்டுக் கற்பிப்பது இன்றியமையாததாகிறது. இலக்கியப்பாடம் வாயிலாக கற்ற உயர்நிலைச் சிந்தனைகள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடியதாக இருத்தல் அவசியம். ஆசிரியர் கல்விக் கழக இலக்கியப் பாடங்கள் கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைகளைப் பயன்படுத்துவதற்கான தொடர் வாய்ப்புகளை வழங்குவதால் எதிர்காலத்தில் தெளிந்த சமன்நிலை கொண்ட நல்லாசிரியர்களை உருவாக்க முடியும்.
3.0     உயர்நிலைச் சிந்தனைகளின்வழி மாணவர்கள் பெறக்கூடிய திறன்கள்
பொதுவாகக் கல்வி மையங்களில் புளூமின் அறிவுசார் படிநிலைகளே சிந்தனைத்திறன் செயல்பாட்டிற்கு வழியமைக்கிறது. அந்தக் கட்டமைப்பை அடித்தளமாகக் கொண்டே வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைச் செயல்பாட்டிற்கு வித்திட வேண்டும். உயர்நிலைச் சிந்தனைத்திறன்களின் அடிப்படையில் இலக்கியம் கற்றல் கற்பித்தல் வடிவமைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பன்முறைப் பயிற்சியும் மதிப்பீடும் செய்யப்பட வேண்டுவதோடு    கருத்துகளுக்கிடையேயான சார்பு எதிர்வுத் தன்மைகளை வகைப்படுத்தவும் மதிப்பிடவும் ஒவ்வொரு மாணவரும் ஆற்றல் பெற வேண்டும். ஆசிரியர்கள் வெறுமனே இலக்கியச் சுவையையும்  பொருளையும் மட்டுமே கற்பித்தலில் மையப்படுத்தாமல், உயர்நிலைச் சிந்தனைகளைக் கொண்டு நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி உணரச் செய்ய வேண்டும்.
இலக்கியத்தில் உயர்நிலைச் சிந்தனைகளை உட்புகுத்திக் கற்பிக்கும்போது ஆசிரியர்கள், ஆய்வுச்சிந்தனையையும் ஆக்கச் சிந்தனையையும் ஒருசேர வலியுறுத்த வேண்டுவது மிக அவசியம். இதன் மூலம் எதிர்கால மாணவர்களை வழிநடத்தப்போகும் ஆசிரியர்களான இவர்கள் நடைமுறைச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் சிக்கல்களுக்கு மிகச் சிறந்த தீர்வுகளையும் கண்டறிய வழிகோலும் திறம் பெறுவர். இன்றைய மின்னியல் உலகில் மாணவர்களை வந்தடையும் பல்வேறு தகவல்களுள் எது ஏற்புடையது? நம்பகத்தன்மையுடையது? என்று பகுத்தாராய்ந்து தெரிவு செய்ய உயர்நிலைச் சிந்தனைத் திறம் பேருதவி புரியும்.  
இலக்கியம் கற்றல் கற்பித்தலில் திட்டமிட்டு உயர்நிலைச் சிந்தனைகளை ஆசிரியர்கள் மேற்கொண்டால் அதற்கேற்ற வகையில் மாணவர்கள் பொருத்தமான விளைபயனை கண்டறிபவர்களாகவும், முன்வைத்த கேள்விகளை ஆய்ந்து நோக்குபவர்களாகவும்; உற்றுநோக்கியதை விளக்கப்படுத்தி நிறுவும் திறமுள்ளவர்களாகவும், ஒவ்வொன்றுக்குமிடையே காணப்பெறும் தொடர்பினை அறிபவர்களாகவும், எதிர்படும் சிக்கல்களுக்குப் பொருத்தமான மாற்றுவழியைக் காணும் ஆற்றல் கொண்டவர்களாகவும், பல்முனைகளில் எழும் கருத்துகளைச் சீராய்ந்து தெளிந்த முடிவு எடுக்கும் வல்லாண்மை கொண்டவர்களாகவும்  விளங்குவது திண்ணம். ஆகவேதான் இத்தகையப் பயன் நல்கும் உயர்நிலைச் சிந்தனைகளை இலக்கியப் பாடத்தில் மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டியது அவசியமாகும்.
ஆசிரியர் கல்விக் கழகத்தின் கலைத்திட்டத்தில் உள்ளடங்கிய இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைகளைக் கற்பிப்பதன்வழி ஆசிரிய மாணவர்களான இவர்கள் நாளை பள்ளியில் தங்கள் போதனையில் இக்கூறுகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இலக்கியப் பாடத்தில் மாணவர்கள் கவிதையையோ கதையையோ கட்டுரையோ படித்தவுடன் அதன்  நம்பகத்தன்மையையும் ஏற்புடைமையையும் அடையாளங்காணும் திறம் பெறுவர். இதற்கு மேலும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ள ஆருடங்களையும் நடுநிலையின்றி தற்சார்பு கொண்டுள்ள கருத்துகளை உற்றாய்ந்து மெய்மையைக் கண்டடையும் திறத்தையும் கைவரப்பெறுவர். இலக்கியப் பாடுபொருள் பகுப்பாய்வில் முக்கியக்கூறாக விளங்குவது உயர்நிலைச் சிந்தனைகளுள் ஒன்றான சிக்கல்கள் களையும் திறனாகும். ஒரு சிக்கலை முறையாகக் களைந்து அடைய வேண்டிய இலக்குகளுக்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் உற்றாய்ந்து  செயற்படுத்துவதையே சிக்கல்களைக் களையும் திறன் என்கிறோம். இதற்கு மேலும் படைப்பிலக்கியத்தின் சாரத்தை மீட்டுக் கொணரல், ஆழமாக உள்வாங்கிக் கொள்ளல், ஏடல்களை ஆய்வு மனப்பான்மையோடு சீர்தூக்கிப்பார்த்தல், ஆக்கச் சிந்தனையோடு மாற்றுவழிகளைச் சிந்தித்துப் பார்த்தல், பிறரிடைத் தொடர்புத் திறனைக் கொண்டிருத்தல் போன்ற உயர்நிலைச் சிந்தனைகள் வெளிப்பாடுகள் மாணவர்களிடம் வலுப்பெறச் செய்கிறது.
4.0     இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைகளைக் கற்பிக்கும் அணுகுமுறைகள்
4.1    கவிதை - கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைகளை இணைத்துக் கற்பிக்கும் ஆசிரியர் தெளிவான அணுகுமுறைகளைக்  கையாள வேண்டுவது அவசியமாகும். கொடுக்கப்படும் கவிதையின் முக்கியக் கருத்தை மாணாக்கர் எவ்வாறு மேல்நிலையிலிருந்து ஆழ்நிலை நோக்கிச் சிந்திக்கத் தூண்டுவது என்ற திட்டமைப்பு ஆசிரியரிடம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரின் புரிதலுக்கும் கருத்துக்குமிடையே காணப்பெறும் வேறுபாட்டை அறிந்து சிக்கல்களைக் களையும் வகையிலும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இருத்தல் வேண்டும். கவிதையின் மையத்தைக் மாணாக்கர் தாமாகவே கண்டடையும் நிலைக்கு ஏற்ற உயர்நிலைச் சிந்தனைப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். கவிதையின் கருத்திலிருந்து அதன் அகப்புறத்தில் ஏற்பட்ட விளைபயனையும் விவாதிக்கும் அளவிற்கு மாணவர்களை உயர்த்தல் வேண்டும். மேலும் உயர்நிலைச் சிந்தனைத் திறம் வலுப்பெற ஆசிரியர் பொருத்தமான சிந்தனை வரிபடங்களின் துணைகொண்டு மாணவர்களின் கருத்துகள் ஏற்புடையதா? இல்லையா? ஏன்? எவ்வாறு? போன்ற மாற்றுச் சிந்தனைகளை உருவாக்க  விவாதங்களைத் தூண்டும் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, கவிதைக்கு பதவுரை பொழிப்புரை சொல்லி விளக்குவதையெல்லாம் தவிர்த்து மாணவரின் புரிதலிலிருந்து மேலெழுந்து செல்லலாம்.
நெடுநாள் திண்ணையில் கிடந்த
தாத்தா
இல்லத்திற்குள் வந்தார் இறந்தபின்
படமாக....
 எடுத்துக்காட்டாக, மாணவர்களுக்கு மேற்கண்ட புதுக்கவிதையை அளித்து அந்தக் கவிதையின் கருத்தையும் அது ஏற்படுத்தும் பாதிப்பையும் வகுப்பில் மாணாக்கரை வட்டவடிவில் அமர வைத்து பார்வையைப் பகிரலாம். கவிதையை மாணவர் பன்முறை வாசித்தவுடன் அதில் உள்ளடங்கி இருக்கும் முக்கியச் செய்தியைப் புரிந்து வெளிக்கொணர ஊக்க வேண்டும்.  மாணவர் தம் கருத்துகளை முன்னிறுத்தி சான்று பகர்வதோடு அதனுள் பொதிந்திருக்கும் மனித நேயம், புறக்கணிப்பு, பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றை அவர்களே அடையாளங்காண தூண்ட வேண்டும். மாணவர் வெளிப்படுத்தும் எவ்வித கருத்தையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள ஆசிரியர் திறந்த மனப்பான்மையுடன் விளங்க வேண்டும்.
கவிதை மீதான புரிதலை மாணவர்கள் வெளிப்படுத்தும் விதத்தில் தனிநபராகவும் குழுவாகவும் வரைபடங்களாகத் வரையச் செய்யலாம். இச்செயல்பாட்டின்போது மிக முக்கியமாக மாணவர்களது கருத்துகளுக்கிடையிலான தொடர்பும்  உயர்நிலை சிந்தனைத் திறனும் வெளிப்படுவதை ஆசிரியர் உற்றாய்தல் வேண்டும்.  மாணவர்கள் கவிதையின் உட்கருத்தை நியாயப்படுத்தும்போது அவர்களது முடிவு செய்யும் திறனும் சீர்தூக்கிப் பார்க்கும் திறனும் எப்படி  வெளிப்பட்டது என்பதை ஆசிரியர் உற்றாய்ந்து விளக்குதல் அவசியம். மேலும் இதுபோல மாணவர்களின் சுயப்புரிதலையும் பார்வையையும் புறந்தள்ளாமல் மெருகூட்டி உயர்நிலைச் சிந்தனைத் திறனை பல்வகை முறைமைகளால் உயர்நிலைகளுக்கு ஊக்கலாம்.
4.2     சிறுகதை - கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
உயர் நிலைச் சிந்தனைகளை மேலும் வளர்ப்பதற்குப் பரவலான இலக்கிய வாசிப்பை ஆசிரியர் ஒரு கருவியாகக் கைக்கொள்ள வேண்டும். மாணவர்களே சுய விருப்பத்தின் பேரில் தேடி வாசித்த ஒரு சிறுகதையை தத்தம் புரிதலுக்கேற்ப ஆய்வு செய்து அவற்றில் உள்ளடங்கியுள்ள பல்வகையான கூறுகளைத் தம் கருத்திற்கேற்பத் தொகுத்துப் படைக்கப் பணிக்க வேண்டும். சிறுகதையில் தாம் உணர்ந்த கருத்துகளைப் படைப்புகளாக முன்வைப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் விவாதங்களில் வலுவான பங்கேற்பிற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இதன்வழி மாணவர்கள் படைப்பிலக்கியமான சிறுகதையை உற்று நோக்கவும் ஆய்வு மனப்பான்மையுடன் சிந்திக்கவும் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட வாய்ப்புண்டு. 
சிறுகதை வாசிப்பின் மூலம் அதன் மையச் சரடைக் கண்டறிதலும்; கருத்தாடலின் மூலம் குழு விவாதமும்; மாணவர் படைப்பாற்றலும் உயர்நிலைச் சிந்தனைகள் வேரூன்ற உறுதுணைப் புரியும். உயர்நிலைச் சிந்தனைகளைத் தூண்ட மாணவர்கள் முன்வைக்கும் ஒரு கருத்தானது, காட்சி நிலையிலுள்ளதா?, கருத்து நிலையிலுள்ளதா?, பொருத்தமான செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளதா? என்பதை நோக்குதல் வேண்டும். மேலும் மாணவர்கள் கண்டடையாத பூடகமாக மறைந்திருக்கும் ஏனைய தொடர்புடைய கருத்துகளையும் கூர்நோக்கோடு அடையாளங்காணச் செய்ய வேண்டும். மேலும் சிறப்பான எடுத்துக்காட்டுகளைச் சான்றுகாட்டி உயர்நிலைச் சிந்தனைகளைப்  பயன்மிகுந்த வகையில் உட்புகுத்தலாம். மேலும் படைப்பிலக்கியமான பல்வேறு உள்ளோட்டங்களைக் கொண்ட சிறுகதைகளை  வாசித்துத் தம் கருத்துகளையும் புரிதலையும் மனவோட்டவரையின்வழி குழுமுறையில் வெளிப்படுத்தி மாணவர்களை அறிவார்ந்த விவாதத்தில் ஈடுபட ஆசிரியர் ஊக்கலாம். இதன்வழி பிறரின் கருத்துகளையும் உள்வாங்கி, விடுபட்டவற்றை மீட்டுக்கொணர்ந்து ஏற்புடைய சான்றுகளுடன் தொடர்புபடுத்தி மாணவர்களின் சுயமாகவும் உள்முகமாகவும் உயர்நிலையில் சிந்திக்கும் ஆற்றலை பன்மடங்கு ஊக்கலாம்.
5.0 முடிவுரை
உயர்நிலைச் சிந்தனைக்குத் தூண்டுகோலாகவும் உரமாகவும் விளங்குவது பொருத்தமான வினாக்கள் என்றால் மிகையாகாது. மாணவர்கள் எவ்வளவு உயரம் சிந்திக்கிறார்கள் என்பதை ஆசிரியரானவர் மேல்நிலை குவிநிலை வினாக்கள் எழுப்பி மாணவர்களின் விடைகளைப் பெறுவதின் மூலம் துல்லியமாக அவர்களின் சிந்தனை செயல்பாட்டை அறிந்து கொள்ள இயலும். ஆசிரியர் கல்விக் கழகக் கலைத்திட்ட இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைகளைப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக பரிந்துரைக்கப்பட்ட மேற்கண்ட  இரண்டு கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் வழிகாட்டியாக மட்டுமே அமையும்.
மேலும் ஆசிரிய மாணவர்கள் தொடர்ச்சியான பரவலான வாசிப்பும் தேடலும் மேற்கொள்வதன்வழி இலக்கியத்தின் மேல்நிலையிலும் ஆழ்நிலையிலும் பொதிந்துள்ள கலை நயம், சொல் நயம், பொருள் நயம்  ஆகியவற்றைத் தெளிவாக உய்த்துணர்ந்து இலக்கியம் நலம் போற்ற முடியும். தொடர்ந்து இந்த ஆசிரிய மாணவர்கள் இயைபுடனும் ஏரணத்துடன் தாம் இதுகாறும் கொண்டிருந்த ஒரு கருத்தைச் சான்றுகாட்டி நிறுவவும் உள்முக உணர்வால் இலக்கிய இன்பம் எய்தவும் துணை புரியும். ஆசிரியர் கல்விக் கழகங்களில் கற்பிக்கப்படும் இலக்கியப் பாடங்களில் மேற்கண்ட நிலையை ஒவ்வொரு ஆசிரிய மாணவரும் அடையும்போதுதான் உயர்நிலைச் சிந்தனைகளின் செயல்பாடும் வெளிப்பாடும் பொருளுள்ளதாகிறது.  
மேற்கோள் நூல்கள்:
1. Anderson, L., Krathwohl, D., Airasian, P. et al (2001), A Taxonomy for Learning, Teaching, and Assessing:        A revision of Bloom's Taxonomy of Educational Objectives, New York: Pearson, Allyn & Bacon
2. Bloom B. S. (1956), Taxonomy of Educational Objectives, Handbook I: The Cognitive Domain, New York:      David McKay Co Inc.
3. Thomas, A., and Thorne, G. (2009), How to Increase Higher Order Thinking, Metarie, LA: Center for Development and Learning, 
http://www.readingrockets.org/article/34655
4. http://theonlinepd.files.wordpress.com/2008/03/teachinghigherorderthinking.pdf.


வாழிநலம் சூழ வாழ்த்துகிறேன்….
முத்தமிழ் வணக்கம். அன்பிற்கினிய நண்பர் திரு. இராஜேந்திரனுக்கும் எனக்குமான நட்பு 35 ஆண்டுகளுக்கு மேலான காலத்தை உள்ளடக்கியது. இவ்வினிய நண்பரைப்  பற்றி சில நினைவுகளை  இப்பிரியாவிடை மலரில் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன். கருத்த உருவமென்றாலும் காந்தம்போல் காண்போரைக் கவர்ந்திழுக்கும் சிரித்த முகம்; அமைதி தவழும் முகத்தில் கருணை பொங்கும் கனிந்த கண்கள்; சுருள்சுருளாய் அடர்ந்து கீரிடம் சூட்டிய தலைமயிர்; நடுத்தர உயரத்தில் நிதானமான நேர்கொண்ட நன்னடை; பேச்சில் அன்பும் பண்பும் குழைந்து வெளிவரும் வார்த்தைகள்; இவைதாம் முதற் பார்வையில் என்னுள் கருக்கொண்ட  இவ்வினிய நண்பரின் தோற்றம். இவர் ஸ்ரீகோத்தா கல்லூரியில் பயிற்சி ஆசிரியராகக் காலூன்றிய காலந்தொட்டே என் நெஞ்சத்தில் தமது கனிந்த அன்பால் கோலோச்சினார்.
           கல்லூரியில் நான் அதிகம் பேசாத சுபாவம் கொண்டிருந்த காலத்திலும் என்னை நாடி ஒருசில வார்த்தைகளை கனிவோடும் நட்போடும் உதிர்த்துவிட்டுச் செல்வார். அவரின் இந்த அக்கறையே பின்னாளில் எங்கள் நட்பு தொடர்வதற்கும் வளர்வதற்கும் அடித்தளமாக அமைந்தது. கல்லூரி பயிற்சிக் காலத்தின்போது அவர் தமிழ்ப்பிரிவுக்கு மாணவத் தலைவராகப் பொறுப்பேற்று ஆக்ககரமான பல அரும்பணிகளை செய்திருப்பதை அருகிலிருந்து கண்டு வியந்திருக்கின்றேன். புயலே அடித்தாலும் தலைவனுக்குரிய நிதானம், தெளிவு, தூரநோக்கு, சமன்பாடு, பொறுமை, நடுவுநிலைமை என அத்தனை உயர்குணங்களும் கொண்டு வெல்லும் திறமுள்ளவர். எவ்வித சிக்கல் தம்முன் எதிர்பட்டாலும் கொஞ்சமும் கலங்காமல் அமைதி காத்து மிகவும் பொறுப்போடும் மாறாத புன்னகையோடும் அன்றே அவர் சாதூர்யமாக செயல்பட்டதை அறிந்து நிச்சயம் ஒருநாள் நம் இந்தியச் சமுதாயத்தின் மிகச் சிறந்த தலைவராக வருவார் என நினைத்திருக்கின்றேன். மேலும் கல்லூரி காலங்களில் அவர் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டியதோடு டத்தோ ஸ்ரீ சா.சாமிவேலு அவர்களோடு நெருங்கி பழகியவர் என்பதால் அப்போதைய சூழலில் இச்சிந்தனையே என்னுள் வலுப்பெற்றது.
கல்லூரியில் வளர்ந்த எங்கள் நட்பு பின்னாளில் நான் விரிவுரைஞராகப் பணியாற்றிய பதினைந்து ஆண்டுகளில் விருட்சமாக வளர்ந்து வலுப்பெற்றது எனலாம். இந்த வாழ்க்கையில் என் இதயமும் அறிவும் தொட்ட மிக நெருங்கிய பொருள் பொதிந்த நட்பாளர்களுள் நண்பர் திரு. இராஜேந்திரனும் உள்ளடக்கம் என்பதை இம்மலரில் பணிவுடன் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன். அன்று தொடங்கி இன்றுவரை தலைமைத்துவத்திற்குரிய அத்தனை உயர்ப்பண்புகளையும் கொண்டு தமிழ்த்துறைக்குத் தலைவராகப் பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தியத்தோடு தாம் பெற்ற அனுபவத்தையும் சிந்தனையையும் தம்மோடு பணியாற்றும் நண்பர்களோடு கிஞ்சிற்றும் சிதறாமல் பகிர்ந்து கொள்வதோடு தன்னம்பிக்கையை ஊக்குவதில் ன்னிகரற்றவராகவும் திகழ்கிறார். நல்லாசிரியப் பெருந்தகைக்கேயுரிய மலர்ச்சியான தோற்றப் பொலிவு, அன்பான புன்னகை, கனிவான பேச்சு, தெளிந்த சிந்தனை, முன்மாதிரி வழிகாட்டல், உறுதியான நிலைப்பாடு என அனைத்தும் ஒருங்கே ஒளிரும் இனிய மனிதரான இவரை நண்பராகப் பெற்றதில் இயற்கைக்கு நான் என்றென்றும் நன்றி சொல்கின்றேன்.
உள்ளத்தால் உயர்ந்த ந்த மகத்தான நண்பர் எதிர்வரும் 3.1.2017 இல் விருப்பப் பணி ஓய்வு பெற்றாலும் என்றும் ல்லோர் இதயங்களிலும் அன்புமணம் வீசிக்கொண்டிருப்பார். பள்ளி தொடங்கி கல்லூரிவரை என்றும் புன்னகை குறையாமல் பொறுமையோடும் இலகுவாகவும் இதமாகவும் கற்பிக்கும் இவரின் பாங்கு எந்த மாணாக்கரையும் எளிதில் ஈர்த்துவிடும். ரின் அறிவும் அனுபவமும்  இன்று நாட்டில் பல நல்லாசிரியர் உருவாவதற்குப் பெருந்துணையாய் அமைந்துள்ளதை மறுப்பாரில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் தமது  கற்றல் கற்பித்தல்  அறிவாலும் அனுபவத்தாலும் ஆழ வேரூன்றிய இவரின் அளப்பரிய சேவை கால பேரேட்டில் பொன்னெழுத்துகளால் நிச்சயம் பொறிக்கப்படும்.
நான் சந்திக்கத் தொடங்கிய நாள் முதல் எனக்கு நேசமிக்க நண்பனாக, பாசமிக்க சகோதரனாக, பொறுப்புமிக்க வழிகாட்டியாக, சிறந்ததொரு தலைவராக, நல்லதொரு மனிதராக, எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான நட்புக்கு இலக்கணமாக இன்றுவரை இவர் திகழ்ந்து வருகின்றார். பழகியவரை என்றுமே மறக்காமல் நட்புக்கு முன்னுரிமை தந்து போற்றும் உயர்ந்த இதயம் திரு.இராஜேந்திரனுக்கு மட்டுமே உரியது. தம்மோடு பழகியவரின் இயல்புக்கேற்ப நட்புறவுடனும் அன்புடனும் இனிமையாகப் பழகி அவரவர் மனத்தையும் தேவையையும் குறிப்பால் உணர்ந்து செயல்படும் வரின் வல்லமை வேறு யாருக்கும் எளிதில் வாய்க்காத வரம்.
இந்நாட்டில் தமிழ் கல்வி உயர அரும்பணியாற்றிய அன்பு நண்பர் திரு.இராஜேந்திரனை வெறும் ‘வாழ்க என்ற ஒற்றை வார்த்தையால் வாழ்த்தி பணி ஓய்வுபெற வழி அனுப்பிவிட முடியாது?. இந்த இனிய நண்பர்க்கும் குடும்பத்தார்க்கும் இறைவன் என்றென்றும் வற்றாத உடவுள நலத்தையும் வளத்தையும் அருளையும் வழங்க வேண்டுமென இறைஞ்சுவதைத் தவிர வேறென்ன அவரின் அன்புக்கு ஈடாக என்னால் செய்ய இயலும்?. பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு நீடூழி வாழ்கவென்று என் இதயத் தோட்டத்து அன்பு மலர்கள் தூவி வாழ்த்துகிறேன் ‘நண்பா...வாழி நலம் சூழ்க
என்றென்றும் அன்புடன்,
தமிழ்மாறன் பலராம்
சுல்தான் அப்துல் அலிம் வளாகம்                                          


ஞாயிறு, 20 மார்ச், 2016

தேன்தமிழ் தூவி வாழ்த்துகிறேன்….
முத்தமிழ் வணக்கம். கல்வி உலகில் கோலோச்சிய அன்பு நண்பர் ஐயா உயர்திரு பன்னீர் செல்வம் அந்தோணி அவர்களைப் பற்றி சில நினைவுகளை  இப்பிரியாவிடை மலரில் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன். அவரோடு சேர்ந்து விரிவுரைஞராகப் பணியாற்றிய பதினைந்து ஆண்டுகள் என் வாழ்க்கையில் மிகுந்த பொருள் பொதிந்தவை என்பதையும் பணிவுடன் பதிவு செய்கிறேன்.
நான் பணிபுரிந்த தமிழ்த்துறைக்குத் தலைவராகவும் பின்பு நிபுணத்துவத் தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தியத்தோடு தாம் பெற்ற அனுபவத்தையும் சிந்தனையையும் சிதறாமல் பகிர்ந்து கொண்டது எங்களின்  வாழ்க்கைக்கு மிகுந்த பயனை அளித்தது. ‘குலனருள் தெய்வம் கொள்கை’ எனத் தொடங்கும் நன்னூல் பவணந்தி முனிவர் குறிப்பிடும் நல்லாசிரியர் இலக்கண கட்டுக்குள் அடங்கும் நான் கண்ட ஆசிரியர்கள் வெகுசிலரே. அந்தக் நல்லாசிரியர் இலக்கணக் கட்டுக்குள் ஒளிர்பவர்களுள் தனியொருவர்தாம் மதிப்புமிகு ஐயா பன்னீர் செல்வம் அவர்கள்.
ஆசிரியப் பெருந்தகைக்கேயுரிய மலர்ச்சியான தோற்றப் பொலிவு, அன்பான புன்னகை, கனிவான பேச்சு, தெளிந்த சிந்தனை, முன்மாதிரி வழிகாட்டல், உறுதியான நிலைப்பாடு என அனைத்தும் ஒருங்கே கொண்டிலங்கும் இனிய மனிதர். அவரைச் சந்திக்கிறவர்கள் யாரும் அவரது தோற்றத்திற்கும் வயதுக்கும் கிஞ்சிற்றும் தொடர்புப்படுத்த முடியாது. அவரின் வயது நாற்பத்தைந்தை தாண்டியிருக்காது என்றும் சொல்லும் பலருக்கு உண்மை வயதை அறிந்ததும் “அதற்குள்ளாகவா அகவை அறுபதாகப் போகிறது?” என்று மலைப்பாகத் திரும்பக் கேட்பார்கள்.
உரிய வயதுக்குள் அடங்காமல் என்றும் இளமைத் தோற்றத்தோடு காட்சியளிக்கும் அந்த மகத்தான மனிதர் எதிர்வரும் மார்ச்சு மாதம் 30ம் தேதியோடு கட்டாயப் பணி ஓய்வு பெற்றாலும் என்றும் எல்லோர் மனங்களிலும் நல்லாசிரியராய் வீற்றிருப்பார். கல்லூரி மாணவர்களால் ‘இலக்கணத் தந்தை’ என்று செல்லமாக போற்றப்படும் அந்த உருவத்தாலும் உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர் இந்நாட்டு கல்வியாளர்கள் மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனத்திலும் தமது தமிழ் இலக்கண அறிவாலும் கற்றல் கற்பித்தல்  அனுபவத்தாலும் ஆல விழுதாக வேரூன்றியுள்ளார்.
சலிப்பு என்பதே இல்லாமல் புன்னகைத் ததும்பும் முகத்தோடும் என்றும் குன்றா இளமைத் துடிப்போடும் மிகுந்த கருணையோடும் பொறுமையோடும் இலகுவாக இலக்கணத்தை சொல்லிக் கொடுக்கும் அவரின் கற்பிக்கும் பாங்கு இலக்கணம் வேம்பென இதுவரை கருதியோரையும் இன்பமாக இலக்கணம் கற்கத் தூண்டிவிடும். ஆசிரியராக தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளியிலும் அவர் பெற்ற பயிற்றியல் அறிவும் அனுபவமும்  இன்றுவரை கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் நல்லாசிரியராய் மிளிர பெருந்துணையாய் அமைந்து வருவது கண்கூடு.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் கால் வைத்த நாள்முதல் அவரோடு பழகி வருகின்றேன். சிறந்ததொரு தலைவராக, பொறுப்புமிக்க வழிகாட்டியாக, பாசமிக்க அண்ணனாக, நேயமிக்க நண்பனாக, நல்லதொரு மனிதராக என்றுமே ஆசிரியர் பணிக்கு வாழும் இலக்கணமாக அவர் திகழ்கிறார். பயிற்சி ஆசிரியர்களின் மனத்தையும் தேவையையும் குறிப்பால் அறிந்து உடனுக்குடன் செயல்படும் அவரின் சாதூரியமும் உத்வேகமும் கண்டு வியந்திருக்கின்றேன்.
கல்லூரியில் எல்லாத் தரப்பினரிடமும் அவரவர் இயல்புக்கேற்ப நட்புறவுடனும் அன்புடனும் மரியாதையுடனும் இனிமையாகப் பழகுவதால் என்றும் ‘பன்னீராய்’ அனைவரின் உள்ளங்களிலும் மணக்கிறார். கல்வி உலகில் எதிர்பட்ட எத்தனையோ சிக்கல்களை அனுபத்தால் எளிமையாக களைந்த விதமும் தெளிவான கருத்தை நிலை நிறுத்துவதில் கொண்ட உறுதியும் தவறுகளை நாசுக்காகச் சுட்டிக்காட்டி இதமாக திருத்தும் பண்பும் தாமே தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கும் உயர் குணமும் நேரக் காலம் பாராமல் இந்தத் தொழிலை நேசத்தோடு தவமாகச் செய்வதைக் கண்டு பலமுறை வியந்திருக்கின்றேன்.
தமிழ் கல்வி உலகுக்குத் தொண்டு செய்த ஐயா பன்னீர் செல்வத்தை வெறும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் வாழ்த்திப் பாராட்டிவிட முடியாது?. அவர் என்றென்றும் பரம்பொருள் கருணையினால் நல்ல உடல் உள நலத்தோடும் வளத்தோடும் அருளோடும் வாழ வேண்டுமென இறைஞ்சுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?.மதிப்புமிகு ஐயா பன்னீர் செல்வத்தை மலர்தூவி வாழ்த்தினால் வாடிவிடுமென்று என்றும் வாடாத தேன்தமிழ் தூவி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு
என்றென்றும் அன்புடன்
தமிழ்மாறன் பலராம்


திங்கள், 15 பிப்ரவரி, 2016

ரெ.கா.வின் படைப்புகளில் சில வெளிச்சங்கள்
 எனது பார்வையில் இலக்கியமானது மொழியின் வழியாக முடிவில்லாத இந்த வாழ்க்கையின் அடியாழத்தில் புதைந்திருக்கும் அடர்த்தியான, நுட்பமான, தத்துவமான, வசீகரமான, ஒன்றை படம் பிடிப்பதோடல்லாமல் உருவாக்கிக் காட்டுவதுமாகும்.

மொழியின் ஊடாக இத்தகையப் புனைவுலகை உருவாக்கும் படைப்பாளிகள்தாம்  ஒரு சமூகத்தின் கனவுகளை வாழ்க்கைச் சங்கிலியிலிருந்து விடுபடாமல் நெய்கிறார்கள். அந்த வரிசையில் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றை  நெய்தவர்களில் முன்னோடியாகத் திகழ்பவர் முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை

மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமானால் முனைவர் ரெ.கார்த்திகேசுவை தவிர்த்துவிட்டு எழுதவே முடியாது. சிறுகதை, நாவல், கட்டுரையாளார், இலக்கிய விமர்சகர் எனும் பன்முக படைப்பாளியாக மிளிரும் அவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட எத்தனையோ வாசகர்களைப்போல நானும் அவரது வாசகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

எழுபதுகளின் இறுதியில்தான் ரெ.கா.வின் பெயர் எனக்கு அறிமுகமானது. வானொலியில் இலக்கியப் பேச்சுகளில் அவர் பெயர் ஒலிக்கப்பட்டபோது அவரைக் காண வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் எழுந்ததுண்டு. சில வேளைகளில் அவரின் குரலை வானொலியில் செவிமடுக்கும்போது அவரின் திருத்தமான தெளிவான செறிவான உள்ளீடு கொண்ட பேச்சு என்னையும் அறியாமல் ஒருவித இலக்கிய ஆதர்சனத்தை அவரின்பால் ஏற்படுத்தியது.

அந்த ஈர்ப்பால் அவரின் ‘வானத்து வேலிகள்’ எனும் முதல் நாவலை கல்லூரி நூலகத்தில் தேடிப் படித்து நண்பர்களோடு பகிர்ந்திருக்கிறேன். ரெ.காவை, நான் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கியம் கருத்தரங்கம் ஒன்றில்தான் முதலில் சந்தித்தேன். அவர் அப்போது தமிழ் நாவல்களைப் பற்றி தமது பார்வையை அவையில் பகிர்ந்து கொண்டார்.

தாம் நாவலில் வடித்தக் கதாபாத்திரங்களையும் இணைத்து வாசகனுடன் நேரிடையாக பேசும் பாணியில் அவர் அன்று உரையாடியது இன்னும் என் நினைவுத் திரையில் நிழலாடுகிறது. அதன் பிறகுதான் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவரின் ‘காதலினால் அல்ல’, ‘தேடியிருக்கும் தருணங்கள்’,’அந்திம காலம்’ போன்ற நாவல்களைத் தீவிரமாக தேடிப் படித்தேன்.

‘காதலினால் அல்ல’ நாவல் வெளிவந்த காலகட்டத்தில் நானே அவரைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இருபது நாவல்களை அவரிடமிருந்து பெற்று விற்றுத்தருவதாகச் சொன்னதும் ரெ.கா. நெகிழ்ச்சியால் என் தோள்தட்டியது இன்றும் எனக்குள் ஆனந்த சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. இயற்கையாகவே அவர் இலக்கியம் பேசும் நேசிக்கும் இளைஞர்களை மிகவும் வாஞ்சையோடு வரவேற்று உபசரிப்பார்.

அவரின் கனிவான போக்கையும் ஆழ்ந்தகன்ற இலக்கிய வாசிப்பையும் பயன்படுத்தும் நோக்கில் நான் கல்விக் கழகத்தில் விரிவுரைஞராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது பயன்படுத்திக் கொண்டேன். எங்கள் கல்விக் கழகத்தில்  நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் சிறுகதை, நாவல், இலக்கியத் திறனாய்வுப் பற்றி உரையாற்றவும் படைப்பாளரின் அனுபங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஐந்து முறை சிறப்பு வருகை தந்துள்ளார். எங்கள் அன்பழைப்புக்கேற்ப அவர் தவறாது பங்கேற்றது புதிய தலைமுறைக்கு  இலக்கியத்தை இதயத்திற்கு அருகில் கொண்டு செல்லும் அவரின் முயற்சியைத் தெள்ளிதின் பறைசாற்றியது.

அதேவேளை என்னையும் ஒரு பொருட்டாக மதித்து வடக்கில் நடைபெற்ற அவரின் வெளியீடுகளான ‘இன்னொரு தடவை’, ‘நீர்மேல் எழுத்து’, ‘விமர்சன முகம்’ ஆகிய நூல்களை  திறனாய்வுச் செய்ய வாய்ப்பு தந்ததையும் பெரும் பேறாகவே கருதுகிறேன். கல்விக் கழக இளங்கலை பாடத்திட்ட வடிவமைப்பின்போது விரிவுரைஞர் குழாம் அவரின் ஆலோசனையைப் பெற்று மலேசிய தமிழ் இலக்கியப் படைப்புகளையும் உட்சேர்த்ததை எண்ணி பெருமிதம் கொள்கின்றோம்.

பெரும்பாலும் ரெ.கா தாம் சந்தித்த மனிதர்களும் இடமும் அனுபவமுமே மையச்சரடாகப் பின்னி கதைகளினூடே பயணிக்கவிடுவதை என்னால் ஒரு வாசகனாக எளிதில் கண்டு கொள்ள முடிந்தது. அதிலும் பினாங்கும் தாம் பணிபுரிந்த மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமும் அதற்கப்பால் அவரின் சிறுவயது தோட்டத்து வாழ்க்கையும் மனிதர்களும் அவர் படைப்புகளில் முகங்காட்டத் தவறுவதேயில்லை.

ரெ.கா. தமது இயல்பான எளிமையான ஆனால் அடர்த்தியான கூறுமொழியாலும் மெளனமிக்க வெளிப்பாடுகளாலும் சட்டென்று வாசகன் கண்களுக்குப் புலனாகாத மனித உணர்ச்சிக் குமைச்சலை தமக்கே உரித்தான தொனியில் படைப்புகளில் காட்டுவதில் வல்லவர். அவரின் ‘வானத்து வேலிகள்’ தொடங்கி ‘சூதாட்டம் ஆடும் காலம்’ வரை அனைத்து நாவல்களையும் நான் படித்திருந்தாலும் எனக்கு என்னவோ அவரின் சிறுகதைகள் நிறைய வெளிச்சத்தைத் தந்திருக்கின்றன. 

ரெ.கா. புறத்தில் தெரியும் வாழ்க்கையைவிட அகத்தில் அமிழ்ந்து கிடக்கும் உக்கிரமான கனவுகளை மிக இலாவகமாகப் படம் பிடிப்பதில் வல்லவர். வாழ்வில் தன்னைச் சுற்றி நாளும் நடப்பவனற்றையும் ஏன் தனக்கே நேர்ந்தவற்றையும்கூட ஒரு பார்வையாளனாகக் கவனித்து அதை பொறுப்பான படைப்பாளாராக முன்வைத்திருப்பதை சிறுகதைகளில் நிறைய தரிசிக்கலாம்.

வாழ்வின் உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் ரெ.கா வடித்திருப்பதை அவரின் ‘இன்னொரு தடவை’, ‘ஊசி இலை மரங்கள்’, ‘நீர்மேல் எழுத்து’ ஆகிய சிறுகதைகளில் ஒரு வாசகன் பரவலாகக் காணலாம். வாழ்வில் வழிநெடுக தன்னைப் பாதித்த ஏதோ ஒரு சம்பவம், அது துயரமாகவோ, மகிழ்ச்சியாகவோ, கோபமாகவோ எள்ளலாகவோ இப்படி ஏதோ மனதுக்குள் அழுந்திய ஒன்றை அவர் தன் படைப்பின் வழியே நம் பார்வைக்குக் கொண்டு வருகிறார்.
அவரின் ‘மகேஸ்வரியின் குழந்தை’ எனும் சிறுகதை என் மனதுக்கு மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தியது. அதேபோல் ‘சூரியனைக் கொன்றுவிட்டார்கள்’ அறிவியல் புனைவின் மிகச் சிறந்த கதையாக அவர் படைத்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ரெ.கா. போன்ற அன்பும் கனிவும் நிறைந்த படைப்பாளரால் மட்டுமே இந்த உயிர்த்துடிப்பை கதைகளில் கொணர முடியும்.
அவரவர் வாழ்வுசார் நுண்ணிய அவதானிப்புகளுக்கு ஏற்ப புரிந்து கொள்வதையே இலக்கிய விமர்சனமாக நான் முன்மொழிந்தாலும் எவ்வித முன்னனுமானமும் மனச் சாய்வும் இல்லாமல் தன்னுள் பதிந்ததை முன் வைக்கும் திறமும் தீரமும் ரெ.காவிடம் இருப்பதை நான் பலவேளைகளில் உணர்ந்திருக்கின்றேன். ரெ.காவின் படைப்பாக்க பன்முகங்களில் நான் பெரிதும் மலைப்பது அவரின் ‘விமர்சன முகமே’. நிலையான தீர்மானங்கள், அபிப்ராயங்கள் போன்ற தன்னிலை என்ற ஒன்றையும் தாண்டி இலக்கியப் படைப்புகளைப் பலகோணங்களில் அலசிப்பார்த்துப் பந்தி வைக்கும்போதுதான்  இன்னொரு புரிதல் நமக்குள் தோன்றும்.
ரெ.கா. எதையும் எதிர்பார்க்காமால் எதன் மீதும் மறைந்தோ சாய்ந்தோ ஒளிந்தோ கொள்ளாமல் நேரிடையாக தெளிந்த நடையில் தளுக்கின்றி இலக்கிய விமர்சனத்தை உரத்துப் பேசுவது அவர் படைப்புகளின் வழியே இன்னமும் கேட்கிறது. இலக்கியப் படைப்புகளின்பால் சமூகம் கொண்டுள்ள போலியான மதிப்பீடுகள், கற்பிதங்கள், வரம்புகளைத் தாண்டி உரிமையோடு உண்மையை எழுப்ப விரும்பும் அவரின் குரலின் தடங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன்.
இலக்கிய விமர்சனம் என்ற போர்வையில் சார்பு நோக்குடன் நடக்கும் போலித்தனங்களை மறைக்காமல் ஒளிக்காமல் தம் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பாலும் அனுபவத்தாலும் விமர்சனப் பார்வையால் நம் முன் சொற்களால் லாவகமாகக் கடத்துகிறார். ஆதார இருப்பிடத்திலிருந்தும் வீசிக் கலங்கடிக்கிற காற்றுக்கும் மத்தியில்தான் ஒரு படைப்பாளன் இன்றைய சூழலில் தம் படைப்பின் சுடரை அணையாமல் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ரெ.கா எனும் மலையகத்தின் இலக்கியச் சுடரை காக்க வேண்டியக் கடப்பாடு ஒவ்வொரு மலேசியத் தமிழ் இலக்கிய வாசகனுக்கும் உண்டு. ரெ.கா. தந்த இலக்கிய வெளிச்சம்தான் என்னைப் போன்ற ஒருவனையும் ஏனைய பலரையும் இலக்கியம் பேசவும் பகிரவும் ஏதோ கொஞ்சம் கருணையோடு கைப்பிடித்து உயர்த்தி இருக்கிறது என்பதை என்னால் உரத்து சொல்ல முடிகிறது. அந்த வகையில் ரெ.கா.வுக்காக பெருவிழாவை முன்னெடுக்கும்  மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் முயற்சியையும் எண்ணத்தையும் நெஞ்சம் நிறைய வாழ்த்தி விடைபெறுகிறேன்.
நன்றி
              





ஞாயிறு, 11 அக்டோபர், 2015

சீ.முத்துசாமியின் ‘அகதிகள்’ குறுநாவல் ஒரு கண்ணோட்டம்

இலக்கியம் என்பது மொழியின் வழியாக வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக் கொள்வது. வாழ்க்கை போலவே அடர்ந்த, ஆழம் கொண்ட, வசீகரமான, முடிவில்லாத முழுவாழ்க்கை ஒன்றை. அத்தகைய புனைவுலகை உருவாக்கும் படைப்பாளிகள் ஒரு சமூகத்தின் கனவுகளை நெய்கிறார்கள்.
வெளியே தெரியும் வாழ்க்கையால் எந்தச் சமூகமும் வாழ்ந்துகொண்டிருப்பதில்லை. அகத்தே நிகழும் கனவுகளிலேயே அது மேலும் உக்கிரமாக வாழ்கிறது. அக்கனவுகளை உருவாக்குபவையே இலக்கியம் என தகுதி பெறுகின்றன.
அவை மிகக் குறைவான பேரால் வாசிக்கப்பட்டால்கூட மெல்லமெல்ல  அச்சமூகத்தின் கனவுலகில் படர்ந்து பரவுகின்றன.  அத்தகைய நுண்ணிய இலக்கியச் சாதனைகளில் ஒன்று
படைப்பாளர் என்பவர் யார்? வாழ்வில் தன்னைச் சுற்றி நாளும் நடப்பவனற்றையும் ஏன் தனக்கே நேர்ந்தவற்றையும்கூட ஒரு பார்வையாளனாகக் கவனித்து அதை முன்வைப்பன் படைப்பாளன்.
வாழ்வின் உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் வடிக்க எண்ணுகிறவனே படைப்பாளி. அப்படி எழுதப்படுவதே இலக்கியம். அன்பும் கனிவும் நிறைந்தவனால் மட்டுமே அந்த உயிர்த்துடிப்பை உணர முடியும்.
என்னைப் பொறுத்தவரை நூலாய்வு என்று வழங்கப்பெறும் தகுதிப்பாடு படைப்பாளரின் கதைகளை விளக்குவது என்று பொருள் புரிந்துகொண்டால் அபத்தமானது என்றே கருதுகிறேன்.
கவிதையாகட்டும் கதையாகட்டும் வாசகன் தன்னளவிலே வாசித்துப் புரிந்து கொள்வதையே நான் விரும்புகின்றேன். அவரவர் வாழ்வுசார் நுண்ணிய அவதானிப்புகளுக்கு ஏற்ப புரிந்து கொள்வதையே இலக்கிய வாசிப்பாக முன் மொழிகின்றேன்
வாழ்வில் வழிநெடுக தன்னைப் பாதித்த ஏதோ ஒரு சம்பவம், அது அவமானமாகவோ துயரமாகவோ, மகிழ்ச்சியாகவோ, கோபமாகவோ எள்ளலாகவோ இப்படி ஏதோ மனதுக்குள் அழுந்திய ஒன்றை அவர் தன் படைப்பின் வழியே நம் பார்வைக்குக் கொண்டுவருகிறார்.
எவ்வித முன்னனுமானமும் மனச் சாய்வும் இல்லாமல் தன்னுள் பதிந்ததை முன் வைக்கும் திறமும் தீர்மானங்கள், அபிப்ராயங்கள் போன்ற தீரமும் தன்னிலை என்ற ஒன்றும் இல்லாமல் ஒரு விஷயத்தைப் படைப்பாக்கி நம் பார்வைக்கு வைப்பது போலத்தான் அது நமக்குத் தோன்றும்.
மலேசியத் தமிழ் படைப்பிலக்கியத்தை எழுத வேண்டுமானால் கடாரம் தந்த சீ,முவை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. சீ.மு தமது எழுத்து வலிமையால் ரசவாத்தால் எவரையும் உருமாற்றிவிடுவார். அவர் காட்டும் காட்சிச் சித்திரங்கள் படிப்பவர் மனதில் ஆழமாக உறைந்துவிடக் கூடியவை.
சமூகத்தின் போலியான மதிப்பீடுகள், கற்பிதங்கள், வரம்புகளைத் தாண்டி உரத்த குரலால் உணர்ச்சியில் இழைத்த அனுபவங்களை எழுதிக் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானாலும் எவருக்கும் கட்டுபாடாது தன்னுடைய வழியை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை விட்டுக்கொடுக்காத சுயமரியாதைக்காரர்.
ஆனால் இங்குதான் சி.மூ நுட்பமான உலகில் பிரவேசிப்பதாக எனக்குக் காட்சியளிக்கிறார். தன்னைப் பற்றியதோ சமூகம் பற்றியதோ விமர்சனமோ புகாரோ இன்ன பிறவோ ஏதுவோ அதையெல்லாம் காட்டி அதில் ஏதோவொன்றை நாம் உணரும்படி சொற்களில் கடத்தி வைப்பார். 
அவரின் கதை பாத்திரங்கள் எழுப்புகிற குரல்களிலும் தர்க்கங்களில் ஒரு ஊமைக்காயம்பட்ட ஒரு மனிதனின் வலி வழிந்தோடும் அவர் கண்டுணர்ந்த, அனுபவித்த, ஆயிரம் விஷயங்களில் அவர் நமக்கு எதைச் சொல்ல வந்தார் என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது என் பார்வை
எல்லோரையும் சட்டென ஈர்க்கும் யத்தனத்தையோ செதுக்கி எடுத்து மினுமினுப்பாய்த் துலக்கிப் பார்வைக்கு வைப்பதையோ பிரகடனங்களையோ அவர் படைப்புகளில் நாம் காணமுடியாது.
ஒரு வகையில் இவைதான் அவர் எழுப்ப விரும்பும் குரலின் தடங்கள். இவற்றின் வழியாகத்தான் அவர் சொல்ல விரும்பும் எல்லாவற்றையும் நமக்குள் லாவகமாகக் கடத்துகிறார்
மனித மனத்தின் அடியில் படிந்து போயிருக்கும் தன்முனைப்பு, காமம், பொருந்தாக்காமம், செல்வம் சேர்ப்பதில் உள்ள வேட்கை, அதன் பொருட்டு நடக்கும் கேவலங்கள், பக்தியின் பெயரால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் போலித்தனங்கள் என்று எல்லாவற்றையும் மறைக்காமல் ஒளிக்காமல் தன் படைப்புகள் மூலம் நம் முன்வைக்கிறார்
. எதையும் எதிர் பார்க்காமால் எதன் மீதும் மறைந்தோ சாய்ந்தோ ஒளிந்தோ கொள்ளாமல் நேரிடையாகக் கணீரென்ற குரலில் தளுக்கின்றி அவர் சத்தியத்தைப் பேசுவது அவர் படைப்புகளின் வழியே இன்னமும் கேட்கிறது.
சில இடங்களில்தான் கண்ணுக்குத் தெரியாத சிக்கல் சிடுக்கான நிரடான மொழியில் கவிதை உணர்வாய், விண்டு சொல்ல முடியாத அனுபூதியாய், சீ.மு ஆளுமை விரவிக்கிடக்கிறது. இவர் படைப்பினை நகர்த்திச் செல்லுகிற பாதை பிற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுகிறது.
ஆதார இருப்பிடத்திலிருந்தும் வீசிக் கலங்கடிக்கிற காற்றுக்கும் மத்தியில்தான் ஒரு கலைஞன் தன் படைப்பின் சுடரை அணையாமல் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
மேதாவித்தனமாக சின்னஞ்சிறு குறைபாட்டை வேண்டுமானால் முன்வைக்கலாம். அவரே அறியாமல் என்னிடம்  உரைத்த ‘அடங்காதவன்’. அவரின் படைப்புக்களை உச்சி மோந்தவன் என் நோக்கில் சி.மூ என்றுமே எனக்கு ஒரு காட்டாற்று வெள்ளமாகவே தெரிகிறார்.
ஏற்கெனவே எந்த கதைக்கள கட்டமைப்புக்குள்ளும் அடங்கிவிடாமல்  காட்டாற்று வெள்ளமென எல்லாக் கட்டமைப்புகளையும் கடந்து தமக்கென சுய வரைமானத்தில் செயல்படும் இவரின் சுதந்திரம் எனக்குப் பிடிக்கிறது.
சீ.முவின்  ‘மண்புழுக்கள்’ நாவல் மலேசிய பால் மரக்காட்டு தமிழர் வாழ்வியல் வேர்களை உலகுக்கு காட்டியது.. ‘இருளில் அலையும் குரல்’ குறுநாவலில் உள்ளடங்கியுள்ள மூன்று கதைகளிலும் அவரின் இதய அடியாழத்தில் இன்னும் எஞ்சியிருக்கும் தோட்டப்புற வாழ்வு நூலிழையாக பின்னிப்பிணைந்து தொடர்கிறது.
இந்தக் குறுநாவல் தொகுப்பின் வாசல்களாக விளங்கும் ரெ.கார்த்திகேசுவின்  ‘எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்’ எனும் சீமுவின் தனித்த கட்டுக்குள் அடங்காத எழுத்தாளுமையையும்  சிங்கை கமலாதேவி அரவிந்தனின் ‘கித்தாக்காட்டு மொழி’ மண்ணும் மனிதனையும் தூர்வாரும் துல்லியத்தைக் காட்டும் வெறும் இரண்டு முன்னுரைகளாக கருதாமல்  தேர்ந்த மதிப்புரைகளாகக் கருதுகிறேன்.
சா.கந்தசாமி சொன்னதுபோல் கதையில் இருந்து கதையை நீக்கும் முறைதான் தனது கலைந்த கதைத் திட்டம் என்று சீமு போகிற போக்கில் சொல்வதை இலக்கிய வாசிப்பை அடுத்தத் தளத்தை நோக்கித் தொடங்வோர்க்கு ஆரோக்கியமான சவலாகவே நான் கருதுகின்றேன்.
எந்த வரைமானத்துக்குள்ளும் சிக்காமல் தன்போக்கிலே மேகம்போல அலைந்து திரியும் சீ.முவின் கதையோட்டமும் உள்ளோட்டமுமான கதைமாந்தர்களும் தொடக்க வாசகனுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தாலும் அவனே புரிந்து வழித்தேடி வெளியேறும்போது உள்ளூர மகிழ்ச்சி ஏற்படுத்தும் முயற்சியை விதைத்திருக்கிறார்.
எனது பார்வையில் கதைக்களத்தை செறிவான கூர்மொழியால் வார்த்தெடுப்பதில் சீமு காட்டும் தீவிரம் கதை சொல்வதில் கரைந்து போகிறது..ரெ.கார்த்திகேசு சொல்வதுபோல கதை என்ன கதை? பல எழுத்தாளர்கள் தங்கள் கதைக்குப் பின்னணியாகச் சில செடிகளை வைத்து அழகுபடுத்தும் இடங்களில் சீமு ஒரு காட்டையே வைக்கிறார்.
‘மூன்று மாதமாய் இழுத்துக்கொண்டு கிடக்கிறது’ என்று தொடங்கும் ‘அகதிகள்’ கதையில் தோட்டத்து மக்களின் விளிம்புநிலை வாழ்க்கையைத் தாண்டி மக்களோடு ஒட்டி உறவாடும் நுண்ணிய உயிர்களையும் பந்தி வைத்திருப்பது என் கவனத்தை முழுக்க ஈர்த்தது.
‘மதியம் கொடுத்த கஞ்சி குவளை காய்ந்து கிடந்தது. ஈக்கள் உட்கார்ந்து ஒட்டி உறவாடிப் பறந்து போயின. ஒன்று கஞ்சியில் சிக்கிக் கொண்டு தவித்தது, அதுவும் வேறு உலகம் போகலாம்’
‘கீழே விரவிக் கிடக்கும் சோகச் சூழலின் தாக்கத்தில், எப்போதும் ஏதேனும் ஒரு பறவை இலை மறைவில் உட்கார்ந்து சோகம் பாடும்’ ,‘தொலைவில் மேகத்துள் உடல் புதைந்து கிடக்கும் நீல மலைத்தொடர்’, ‘மேய்ச்சலுக்குப் போய் வீடு திரும்பும் மாடுகளின் கழுத்து மணியோசை’, ‘தோட்ட மண்ணின் வாசம் உயிரின் அடி வேரில் கசிந்து, மூச்சு முட்ட மணக்கிறது. போகத் துடிக்கும் உயிரை மல்லுக்கு நின்று இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது., ‘எங்கோ போகும் புதிய சாலை மண்ணுக்குள் புதைந்துபோன தோட்டத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மெளனித்துக் கிடக்கலாம்’
பிறரின் கதைகள்போல கதாமாந்தரை மிகைப்படத் தூக்கிப்பிடித்து கதை சொல்லாமல் கதைக்கள பின்புலத்தில் உலவும் உயிருள்ள உயிரற்றவற்றையும் வாசிப்பவரின் மனதுக்குள் படிமங்களாக பதித்துவிட்டு  அடுத்த இருண்மைக்குள் புகுந்து விடும் சிமூவின் தனித்த நடை கதையின் இறுதிவரை எந்த ஆர்ப்பரிப்புமின்றி நிதானமாக நீள்கிறது.
சீ.முவைப் பொறுத்தவரை கதையைவிட தன் உயிரணு ஒவ்வொன்றிலும் கலந்துவிட்ட தோட்டத்து வாழ்க்கையை குறைவில்லாமல் வாசகனுக்குப் பந்தி வைப்பதையே தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது தெளிவாகிறது.
கதைக்களத்தில் நீளவாக்கில் இருக்கும் பலகைத் தடுப்பும் தகரக் கூரையும் கொண்ட லய வீடுகள், கயிற்றுக் கட்டிலும் பிரஞ்சாவும், பலகை சந்துக்குள் மறைந்திருக்கும் மூட்டைப்பூச்சி, தாய்மைப் பறைசாற்றும் குஞ்சீத்தா கோழி, சீக்காலி வார்டுகள், பால்காட்டு துணிகாயும் கொடிகள், நாறும் பொதுமலக்கூடம், கோயிலில் சுற்றித்திரியும் புறாக்கள், தள்ளியோடும் ஆறு, உணவாகும் காட்டுப்பன்றி, நாய்கள் என்று பலவற்றையும் உள்முகக் காட்சிப் படிவங்களாகக் காட்டியிருப்பது தோட்ட வாழ்வின் மீது இன்னும் வடிந்திடாத காதலை ஏற்படுத்துகிறது.
சாமிக்கண்ணு- பாப்பம்மாள் இணையரின் பிள்ளைகள் ராதா, ஜெயா, பெரியவனே என்றழைக்கப்படும் கிருஷ்ணா, முனுசாமி – பாப்பம்மாள், டீக் கடை நாயர், பெரியான், அலாவூடின் முனியாண்டி, சன்னாசிக் கிழவன்- மலயா, தற்கொலைகளை செய்து கொண்டு செத்துப் போன அவர்களின் மகள், பொன்னம்மா, மேட்டுக்குச்சி சின்னான், மேட்டுக்குச்சி பச்சம்மா, ரொட்டிக்கார பாய், மாரியாரி, ராஜமாணிக்கம், நொண்டித் தாத்தா சுப்புராயன் கைம்பெண் லட்சுமி, மாரியாயி, ராஜமாணிக்கம், சிவகாமி என்று பல கதாமாந்தர்கள் இக்கதைகளில் உலா வந்தாலும் யாரும் தனித்த மலராய் காட்டப்படாமல் தோட்டம் என்ற மரத்தில் உதிர்ந்துவிழும் மலர்களாய் மலர்ந்து மறைகிறார்கள்.
 நாகரிக வெளிச்சம் புகாத அந்தத் தோட்டக் காடுகளில் பல்வேறு உயிர்களில் ஒன்றாக பிறந்ததற்காக ஏதோ வாழ்ந்தோம் என்று ‘வந்துபோகிறார்கள்’ இந்த ‘அகதிகள். இந்த அகதிகளினூடே கசிந்து வழியும் வாழ்வை நம் இதயத்தோடு எழுத்தால் ஒட்ட வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் எழுத்தாளருக்கு எழுத்தாளரான சீ.முத்துசாமி.