சீ.முத்துசாமியின் ‘அகதிகள்’ குறுநாவல் ஒரு கண்ணோட்டம்
இலக்கியம் என்பது மொழியின் வழியாக வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக் கொள்வது.
வாழ்க்கை போலவே அடர்ந்த, ஆழம் கொண்ட, வசீகரமான, முடிவில்லாத முழுவாழ்க்கை ஒன்றை. அத்தகைய
புனைவுலகை உருவாக்கும் படைப்பாளிகள் ஒரு சமூகத்தின் கனவுகளை நெய்கிறார்கள்.
வெளியே தெரியும் வாழ்க்கையால் எந்தச் சமூகமும் வாழ்ந்துகொண்டிருப்பதில்லை.
அகத்தே நிகழும் கனவுகளிலேயே அது மேலும் உக்கிரமாக வாழ்கிறது. அக்கனவுகளை உருவாக்குபவையே
இலக்கியம் என தகுதி பெறுகின்றன.
அவை மிகக் குறைவான பேரால் வாசிக்கப்பட்டால்கூட மெல்லமெல்ல
அச்சமூகத்தின் கனவுலகில் படர்ந்து பரவுகின்றன. அத்தகைய நுண்ணிய இலக்கியச் சாதனைகளில்
ஒன்று
படைப்பாளர் என்பவர் யார்? வாழ்வில் தன்னைச் சுற்றி நாளும் நடப்பவனற்றையும்
ஏன் தனக்கே நேர்ந்தவற்றையும்கூட ஒரு பார்வையாளனாகக் கவனித்து அதை முன்வைப்பன் படைப்பாளன்.
வாழ்வின்
உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் வடிக்க எண்ணுகிறவனே படைப்பாளி.
அப்படி எழுதப்படுவதே இலக்கியம். அன்பும் கனிவும் நிறைந்தவனால் மட்டுமே அந்த உயிர்த்துடிப்பை
உணர முடியும்.
என்னைப் பொறுத்தவரை நூலாய்வு என்று வழங்கப்பெறும் தகுதிப்பாடு படைப்பாளரின்
கதைகளை விளக்குவது என்று பொருள் புரிந்துகொண்டால் அபத்தமானது என்றே கருதுகிறேன்.
கவிதையாகட்டும் கதையாகட்டும் வாசகன் தன்னளவிலே வாசித்துப் புரிந்து
கொள்வதையே நான் விரும்புகின்றேன். அவரவர் வாழ்வுசார் நுண்ணிய அவதானிப்புகளுக்கு ஏற்ப
புரிந்து கொள்வதையே இலக்கிய வாசிப்பாக முன் மொழிகின்றேன்
வாழ்வில் வழிநெடுக தன்னைப் பாதித்த ஏதோ ஒரு சம்பவம், அது அவமானமாகவோ
துயரமாகவோ, மகிழ்ச்சியாகவோ, கோபமாகவோ எள்ளலாகவோ இப்படி ஏதோ மனதுக்குள் அழுந்திய ஒன்றை
அவர் தன் படைப்பின் வழியே நம் பார்வைக்குக் கொண்டுவருகிறார்.
எவ்வித முன்னனுமானமும் மனச் சாய்வும் இல்லாமல் தன்னுள் பதிந்ததை
முன் வைக்கும் திறமும் தீர்மானங்கள், அபிப்ராயங்கள் போன்ற தீரமும் தன்னிலை என்ற ஒன்றும்
இல்லாமல் ஒரு விஷயத்தைப் படைப்பாக்கி நம் பார்வைக்கு வைப்பது போலத்தான் அது நமக்குத்
தோன்றும்.
மலேசியத் தமிழ் படைப்பிலக்கியத்தை எழுத வேண்டுமானால் கடாரம் தந்த
சீ,முவை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. சீ.மு
தமது எழுத்து வலிமையால் ரசவாத்தால் எவரையும் உருமாற்றிவிடுவார். அவர் காட்டும் காட்சிச்
சித்திரங்கள் படிப்பவர் மனதில் ஆழமாக உறைந்துவிடக் கூடியவை.
சமூகத்தின்
போலியான மதிப்பீடுகள், கற்பிதங்கள், வரம்புகளைத் தாண்டி உரத்த குரலால் உணர்ச்சியில்
இழைத்த அனுபவங்களை எழுதிக் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானாலும் எவருக்கும் கட்டுபாடாது தன்னுடைய வழியை தேர்ந்தெடுப்பதற்கான
உரிமையை விட்டுக்கொடுக்காத சுயமரியாதைக்காரர்.
ஆனால் இங்குதான் சி.மூ நுட்பமான உலகில் பிரவேசிப்பதாக எனக்குக் காட்சியளிக்கிறார்.
தன்னைப் பற்றியதோ சமூகம் பற்றியதோ விமர்சனமோ புகாரோ இன்ன பிறவோ ஏதுவோ அதையெல்லாம் காட்டி
அதில் ஏதோவொன்றை நாம் உணரும்படி சொற்களில் கடத்தி வைப்பார்.
அவரின் கதை பாத்திரங்கள்
எழுப்புகிற குரல்களிலும் தர்க்கங்களில் ஒரு ஊமைக்காயம்பட்ட ஒரு மனிதனின் வலி வழிந்தோடும்
அவர் கண்டுணர்ந்த, அனுபவித்த, ஆயிரம் விஷயங்களில் அவர்
நமக்கு எதைச் சொல்ல வந்தார் என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது என் பார்வை
எல்லோரையும் சட்டென ஈர்க்கும் யத்தனத்தையோ செதுக்கி எடுத்து மினுமினுப்பாய்த்
துலக்கிப் பார்வைக்கு வைப்பதையோ பிரகடனங்களையோ அவர் படைப்புகளில் நாம் காணமுடியாது.
ஒரு வகையில் இவைதான் அவர் எழுப்ப விரும்பும் குரலின் தடங்கள். இவற்றின் வழியாகத்தான்
அவர் சொல்ல விரும்பும் எல்லாவற்றையும் நமக்குள் லாவகமாகக் கடத்துகிறார்
மனித மனத்தின் அடியில் படிந்து போயிருக்கும் தன்முனைப்பு, காமம், பொருந்தாக்காமம்,
செல்வம் சேர்ப்பதில் உள்ள வேட்கை, அதன் பொருட்டு நடக்கும் கேவலங்கள், பக்தியின் பெயரால்
ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் போலித்தனங்கள் என்று எல்லாவற்றையும் மறைக்காமல் ஒளிக்காமல்
தன் படைப்புகள் மூலம் நம் முன்வைக்கிறார்
. எதையும் எதிர் பார்க்காமால் எதன் மீதும் மறைந்தோ சாய்ந்தோ ஒளிந்தோ கொள்ளாமல்
நேரிடையாகக் கணீரென்ற குரலில் தளுக்கின்றி அவர் சத்தியத்தைப் பேசுவது அவர் படைப்புகளின்
வழியே இன்னமும் கேட்கிறது.
சில இடங்களில்தான் கண்ணுக்குத் தெரியாத சிக்கல் சிடுக்கான நிரடான
மொழியில் கவிதை உணர்வாய், விண்டு சொல்ல முடியாத அனுபூதியாய், சீ.மு ஆளுமை விரவிக்கிடக்கிறது.
இவர் படைப்பினை நகர்த்திச் செல்லுகிற பாதை பிற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுகிறது.
ஆதார இருப்பிடத்திலிருந்தும் வீசிக் கலங்கடிக்கிற காற்றுக்கும் மத்தியில்தான்
ஒரு கலைஞன் தன் படைப்பின் சுடரை அணையாமல் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
மேதாவித்தனமாக சின்னஞ்சிறு குறைபாட்டை வேண்டுமானால் முன்வைக்கலாம். அவரே அறியாமல்
என்னிடம் உரைத்த ‘அடங்காதவன்’. அவரின் படைப்புக்களை
உச்சி மோந்தவன் என் நோக்கில் சி.மூ என்றுமே எனக்கு ஒரு காட்டாற்று வெள்ளமாகவே தெரிகிறார்.
ஏற்கெனவே எந்த கதைக்கள கட்டமைப்புக்குள்ளும் அடங்கிவிடாமல் காட்டாற்று வெள்ளமென எல்லாக் கட்டமைப்புகளையும்
கடந்து தமக்கென சுய வரைமானத்தில் செயல்படும் இவரின் சுதந்திரம் எனக்குப் பிடிக்கிறது.
சீ.முவின் ‘மண்புழுக்கள்’ நாவல் மலேசிய பால் மரக்காட்டு தமிழர்
வாழ்வியல் வேர்களை உலகுக்கு காட்டியது.. ‘இருளில் அலையும் குரல்’ குறுநாவலில் உள்ளடங்கியுள்ள
மூன்று கதைகளிலும் அவரின் இதய அடியாழத்தில் இன்னும் எஞ்சியிருக்கும் தோட்டப்புற வாழ்வு
நூலிழையாக பின்னிப்பிணைந்து தொடர்கிறது.
இந்தக் குறுநாவல்
தொகுப்பின் வாசல்களாக விளங்கும் ரெ.கார்த்திகேசுவின் ‘எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்’ எனும் சீமுவின்
தனித்த கட்டுக்குள் அடங்காத எழுத்தாளுமையையும்
சிங்கை கமலாதேவி அரவிந்தனின் ‘கித்தாக்காட்டு மொழி’ மண்ணும் மனிதனையும் தூர்வாரும்
துல்லியத்தைக் காட்டும் வெறும் இரண்டு முன்னுரைகளாக கருதாமல் தேர்ந்த
மதிப்புரைகளாகக் கருதுகிறேன்.
சா.கந்தசாமி சொன்னதுபோல்
கதையில் இருந்து கதையை நீக்கும் முறைதான் தனது கலைந்த கதைத் திட்டம் என்று சீமு போகிற
போக்கில் சொல்வதை இலக்கிய வாசிப்பை அடுத்தத் தளத்தை நோக்கித் தொடங்வோர்க்கு ஆரோக்கியமான
சவலாகவே நான் கருதுகின்றேன்.
எந்த வரைமானத்துக்குள்ளும்
சிக்காமல் தன்போக்கிலே மேகம்போல அலைந்து திரியும் சீ.முவின் கதையோட்டமும் உள்ளோட்டமுமான
கதைமாந்தர்களும் தொடக்க வாசகனுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தாலும்
அவனே புரிந்து வழித்தேடி வெளியேறும்போது உள்ளூர மகிழ்ச்சி ஏற்படுத்தும் முயற்சியை விதைத்திருக்கிறார்.
எனது பார்வையில்
கதைக்களத்தை செறிவான கூர்மொழியால் வார்த்தெடுப்பதில் சீமு காட்டும் தீவிரம் கதை சொல்வதில்
கரைந்து போகிறது..ரெ.கார்த்திகேசு சொல்வதுபோல கதை என்ன கதை? பல எழுத்தாளர்கள் தங்கள்
கதைக்குப் பின்னணியாகச் சில செடிகளை வைத்து அழகுபடுத்தும் இடங்களில் சீமு ஒரு காட்டையே
வைக்கிறார்.
‘மூன்று மாதமாய்
இழுத்துக்கொண்டு கிடக்கிறது’ என்று தொடங்கும் ‘அகதிகள்’ கதையில் தோட்டத்து மக்களின்
விளிம்புநிலை வாழ்க்கையைத் தாண்டி மக்களோடு ஒட்டி
உறவாடும் நுண்ணிய உயிர்களையும் பந்தி வைத்திருப்பது என் கவனத்தை முழுக்க ஈர்த்தது.
‘மதியம் கொடுத்த கஞ்சி குவளை காய்ந்து கிடந்தது. ஈக்கள் உட்கார்ந்து ஒட்டி உறவாடிப்
பறந்து போயின. ஒன்று கஞ்சியில் சிக்கிக் கொண்டு தவித்தது, அதுவும் வேறு உலகம் போகலாம்’
‘கீழே விரவிக் கிடக்கும் சோகச் சூழலின் தாக்கத்தில், எப்போதும் ஏதேனும் ஒரு
பறவை இலை மறைவில் உட்கார்ந்து சோகம் பாடும்’ ,‘தொலைவில் மேகத்துள் உடல் புதைந்து கிடக்கும்
நீல மலைத்தொடர்’, ‘மேய்ச்சலுக்குப் போய் வீடு திரும்பும் மாடுகளின் கழுத்து மணியோசை’,
‘தோட்ட மண்ணின் வாசம் உயிரின் அடி வேரில் கசிந்து, மூச்சு முட்ட மணக்கிறது. போகத் துடிக்கும்
உயிரை மல்லுக்கு நின்று இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது., ‘எங்கோ போகும் புதிய
சாலை மண்ணுக்குள் புதைந்துபோன தோட்டத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மெளனித்துக் கிடக்கலாம்’
பிறரின் கதைகள்போல
கதாமாந்தரை மிகைப்படத் தூக்கிப்பிடித்து கதை சொல்லாமல் கதைக்கள பின்புலத்தில் உலவும்
உயிருள்ள உயிரற்றவற்றையும் வாசிப்பவரின் மனதுக்குள் படிமங்களாக பதித்துவிட்டு அடுத்த இருண்மைக்குள் புகுந்து விடும் சிமூவின்
தனித்த நடை கதையின் இறுதிவரை எந்த ஆர்ப்பரிப்புமின்றி நிதானமாக நீள்கிறது.
சீ.முவைப் பொறுத்தவரை
கதையைவிட தன் உயிரணு ஒவ்வொன்றிலும் கலந்துவிட்ட தோட்டத்து வாழ்க்கையை குறைவில்லாமல்
வாசகனுக்குப் பந்தி வைப்பதையே தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது தெளிவாகிறது.
கதைக்களத்தில்
நீளவாக்கில் இருக்கும் பலகைத் தடுப்பும் தகரக் கூரையும் கொண்ட லய வீடுகள், கயிற்றுக்
கட்டிலும் பிரஞ்சாவும், பலகை சந்துக்குள் மறைந்திருக்கும் மூட்டைப்பூச்சி, தாய்மைப்
பறைசாற்றும் குஞ்சீத்தா கோழி, சீக்காலி வார்டுகள், பால்காட்டு துணிகாயும் கொடிகள்,
நாறும் பொதுமலக்கூடம், கோயிலில் சுற்றித்திரியும் புறாக்கள், தள்ளியோடும் ஆறு, உணவாகும்
காட்டுப்பன்றி, நாய்கள் என்று பலவற்றையும் உள்முகக் காட்சிப் படிவங்களாகக் காட்டியிருப்பது
தோட்ட வாழ்வின் மீது இன்னும் வடிந்திடாத காதலை ஏற்படுத்துகிறது.
சாமிக்கண்ணு- பாப்பம்மாள்
இணையரின் பிள்ளைகள் ராதா, ஜெயா, பெரியவனே என்றழைக்கப்படும் கிருஷ்ணா, முனுசாமி – பாப்பம்மாள்,
டீக் கடை நாயர், பெரியான், அலாவூடின் முனியாண்டி, சன்னாசிக் கிழவன்- மலயா, தற்கொலைகளை
செய்து கொண்டு செத்துப் போன அவர்களின் மகள், பொன்னம்மா, மேட்டுக்குச்சி சின்னான், மேட்டுக்குச்சி
பச்சம்மா, ரொட்டிக்கார பாய், மாரியாரி, ராஜமாணிக்கம், நொண்டித் தாத்தா சுப்புராயன்
கைம்பெண் லட்சுமி, மாரியாயி, ராஜமாணிக்கம், சிவகாமி என்று பல கதாமாந்தர்கள் இக்கதைகளில்
உலா வந்தாலும் யாரும் தனித்த மலராய் காட்டப்படாமல் தோட்டம் என்ற மரத்தில் உதிர்ந்துவிழும்
மலர்களாய் மலர்ந்து மறைகிறார்கள்.
நாகரிக வெளிச்சம் புகாத அந்தத் தோட்டக் காடுகளில்
பல்வேறு உயிர்களில் ஒன்றாக பிறந்ததற்காக ஏதோ வாழ்ந்தோம் என்று ‘வந்துபோகிறார்கள்’ இந்த
‘அகதிகள். இந்த அகதிகளினூடே கசிந்து வழியும் வாழ்வை நம் இதயத்தோடு எழுத்தால் ஒட்ட வைப்பதில்
வெற்றி பெற்றிருக்கிறார் எழுத்தாளருக்கு எழுத்தாளரான சீ.முத்துசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக