சனி, 16 மே, 2009

மாணவர்களே! இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்

மாண்புமிக்க மாணாக்கரே,
நாளையொரு புதிய விடியலுக்கு வித்திடப்போகிற நம்பிக்கை நட்சத்திரங்களே, உங்கள் இதயத்தோடு ஒரு சில வார்த்தைகள். ஒரு தாயின் அன்போடும் தந்தையின் எதிர்பார்ப்போடும் உங்கள் பள்ளி வாழ்க்கை ஏடுகளைப் புரட்டுகின்றேன்.
பள்ளிப் பாடங்களே பெருஞ்சுமையாகிவிட்ட இன்றைய சூழலில் பெற்றோரின் கனவுகளையும் சுமந்து கொண்டு நடைபோடும் உங்களைப் பார்க்கும்போது எனக்கும் வருத்தம் மேலிடுகிறது.
இந்த மனச்சுமையைச் சுகமாக மாற்றும் வல்லமையை நீங்கள் வளர்த்துக் கொள்வது தவிர மீள்வதற்கு வேறுவழியில்லை.
அன்பு பெற்றோர் எப்படியெல்லாம் அரும்பாடுபட்டு உங்களைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று கொஞ்சம் ஆழ்மனத்தில் நிறுத்தி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?.
உங்களின் ஒளிமயமான எதிர்காலமே முக்கியமென தங்கள் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது அல்லும் பகலும் உழைக்கிறார்களே அந்தத் தியாக உள்ளங்களின் நம்பிக்கைகளை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வெயில் மழை பாராமல் அத்தனை துன்பங்களையும் தனதாக ஏற்றுக்கொண்டு உங்களின் நலனே தன் சுகமென்று நம்பிக்கையில் கழிக்கும் அவர்களின் உள்மன ஆவலையாவது அறிந்துள்ளீர்களா?
படிக்கின்ற வயதினிலே கற்பனை தேரோடத்தில் சினிமா நாயகன் நாயகிப்போல் உங்களையே நீங்கள் வரித்துக்கொண்டு காதல் வலையில் வீழ்ந்து காமலீலையில் அழுகிப் போவதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது.
தொன்றுத்தொட்டு நம் முன்னோர் சேர்த்து வைத்த பண்பாட்டுச் செழுமைகளைச் சிந்தையிலே நிறுத்தாமல் பள்ளிச் சந்தையிலே சீரழிக்கும் உங்களைப் போன்ற மாணவர்களின் எண்ணிக்கை சிறிதில்லை.
காடுமேடு கழனி திருத்தி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பெற்றக் குழந்தைகள் புவியோங்கப் பாடுபடும் பெற்ற மனங்களின் மனக்கோட்டைகளைச் சிதறடிக்கும் மாணவர் கூட்டத்திற்கு இப்போதும் குறைவில்லை.
கல்வியென்றாலே கசக்கும் கற்றவர் சொல் என்றாலே முகத்தைத் திருப்பும் முன்னோர் நெறிமறந்து உருமாறி இலக்கின்றி காற்றடித்தால் அலைக்கழிக்கும் இலவம் பஞ்சாய்ப்போன உங்களைப் போன்ற மாணவர் இந்நாளில் ஆன நெடுங்கதைகள் பலவுண்டு.
புனித புத்தகங்களைச் சுமக்கும் பையிலே சினிமா செறிவட்டுகளை சுமந்து சென்று சகாக்களோடு சினிமா ஆய்வரங்கம் செய்யும் மாணக்கரை நிறையவே சந்திக்கின்றேன்.
கணிதம் அறிவியல் என்றாலே புறமுதுகு காட்டி ஓடியதன் விளைவாக இன்று அறிவியல் பிரிவில் பயிலும் இந்திய மாணவர் எண்ணிக்கை அருகிவருவது கண்கூடு.
சீன, மலாய் மாணவர்களைவிட நாம் அறிவில் குறைந்தவர்களென்று தம்மையே தாழ்த்திக்கொண்டு படிப்பில் போட்டியின்றி மெளன நாடகம் நடத்துகின்ற மாணவர் நிறையவே உள்ளனர்.
இந்திய மாணவர்கள் என்றாலே பிரச்சனைகளின் பிரதிநிதிகளென்று இடைநிலைப்பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் முகஞ்சுளிக்கிறார்கள். மிகுதியான கட்டொழுங்குப் பிரச்சனைகளும் குறைவான தேர்ச்சி விகிதமும் அந்த முகச்சுளிப்பிற்கு மூலமாகிறது.
நம் மாணவர்கள் ஏவல் செய்யும் கூலிகளாகவே தகுதியானவர்கள்; கல்வியில் அக்கறையற்றவர்கள்; நல்லொழுக்கத்திலிருந்து நழுவிவிட்டவர்களென தப்பெண்ணம் பரவலாக உலாவருகிறது.
நாடு தழுவிய நிலையில் பல்லின ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது வெளிப்பட்ட குற்றச்சாட்டுகள்தான் மேலே நான் குறிப்பிட்டவை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
ஒரு சிலர் விதிவிலக்காகலாம் ஆனால் பெரும்பாலான நம்மின மாணவர் இன்னும் இருட்டில் உலவுகிறார்கள் என்றெண்ணத் தோன்றுகிறது. அன்பு மாணவர்களே, போனது போகட்டும் இனியாவது இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்.
காலக் கணக்கிலே கணநேரமும் ஓயாமல் கல்வியெனும் கற்கண்டை கருத்தாய் பயின்றிடுங்கள். கல்வி விளக்கு உங்கள் உள்ளங்களில் எரிகின்ற வரைக்கும் நம் சமுதாயம் சிறக்கும்.
வறுமைப் புயலிடையே ஒவ்வொரு கணமும் வேதனையால் வெந்திடும் உங்கள் பெற்றோர் அகம் மகிழவுக் காண இன்றே இலக்கைத் தீர்மானித்துவிடு; சீர்கெட்ட செயல்களின் வேரையழித்து கல்வி வேள்வியில் இதயத்தை நிறுத்திடு.
நன்செய் நிலத்தினில் களையிருந்தால் நீக்குவன் உழவன்; அதுபோல உங்கள் நலத்திலே நாசமென்றால் நீக்குவது என் கடமையன்றோ?.
கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்க் கும்மிருட்டில் திரிகின்ற நம் மாணவ இனத்தைக் கைகொடுத்து நல்வழிக்காட்டும் பெரும்பொறுப்பு சமுதாய முழுமைக்குமுண்டு.

புதன், 8 ஏப்ரல், 2009

சங்கத் தமிழ் சாரம்

குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டுயில் மொத்தம் 216 அடிகள் ஆகும்.வடநாட்டு அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ் இலக்கிய மரபை உணர்த்துவத்ற்காக அவர் இந்தப் பாட்டை இயற்றினார் என்று பாட்டின் அடியின் பழங்காலக் குறிப்பு உள்ளது.இந்த பாட்டைப்பாடியவர்புலவர் கபிலர் ஆவார்.

பட்டினப் பாலை
பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டில் உள்ள மற்றோர் அகப்பட்டு[காதல் துறைபற்றி அமைந்த கறபனைப் பாட்டு] ஆகும்.இந்நூலில் காவிரியாற்றின் வளமும்,காவிரிப்பூம்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளின் அழகும்,மேலும், அந்நகரில் வாழும் அந்தணர்,வணிகர், வேளாளர் மற்றும் பரதவர் போன்றோரின் பண்பு ஆகியவற்றைக் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பாட்டு,சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதாகும்.

நெடுநல்வாடை
இது 188 அடிகள் கொண்ட அகவற்பாவால் அமைந்த நூலாகும்.இதை,கற்பனைக் காதல் பாட்டு என்று கொண்டு ,அகப்பாட்டு என ஏற்கலாம்.அந்த அளவிற்குப் பழைய இலக்கிய மரபு இடந் தருகிறது.இதைப் பாடியவர் புகழ் பெற்ற சங்ககாலப் புலவர் நக்கீரர்.

மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி எனும் நூல்தான் மிகப் பெரிய பாட்டைக் கொண்டுள்ளது.இதில் மொத்தம் 782 அடிகள் ஆகும்.இதில் மதுரையை ஆண்ட மன்னனுக்கு உலக இன்பம்,பொருட்செல்வம், இளமை,யாக்கை என்பவை நிலையில்லாதவை என்னும் காஞ்சித்திணையை விவரித்துக் கூறுகிறது.இதை மாங்குடி மருதனார் என்பவர் பாடியுள்ளார்.

திருமுருகாற்றுப்படை
முருகக் கடவுளின் அருளைப் பெற்றவர் ஒருவர் அந்த அருளை நாடும் மற்றவர்க்கு வழிகாட்டுவதாக நக்கீரர் பாடிய பாட்டு.இது 314 அடிகள் கொண்டுயுள்ளது.இது சங்க காலத்தில் பக்தியுணர்ச்சி நிரம்பிய முழுநூல் ஆகும்.இது ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது .பரிபாடலில் முருகன் திருமால் ஆகியோரைப் பற்றிச் சில பாடல்கள் உள்ளது.பாட்டின் முடிவில் மலையிலிருந்து விழுந்து பாயும் அருவியின் காட்சி நம் உள்ளத்தைக் கவர்கிறது.முருகு என்ற சொல்லுக்கு முருகனாகிய தெய்வம் என்ற பொருளோடு அழகு என்னும் பொருளும் உண்டு என்பதை விளக்குகிறது.ஆயினும் திருமுருகாற்றுப்படையே நீண்ட பக்திப் பாடலாகச் சங்க இலக்கியத்தில் உள்ளது.

பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படை என்பது சோழன் கரிகாலனின் சிறப்பைக் கூறுவது.இதில் 248 அடிகள் உடையது.சோழ நாட்டு மக்கள் இயற்றிவந்த தொழில் ,கலைவளம்,காவிரிச் செழிப்பு ஆகியவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.பொருநர் முதலான கலைஞர்களிடம் சோழன் கொண்ட அன்பும் காவிரியாற்றின் பெருமையும் இப்பாட்டால் விளங்குகின்றன.

சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை 269 அடிகள் உடையது.பாணர் குடும்பத்தின் வறுமை அதில் சொல்லோவியமாக்க
ப்பட்டுள்ளது.இஃது ஓய்மாநாட்டு நல்லியக் கொடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. அதில் பாரி. ஓரி, காரி, ஆய், அதியமான் நள்ளி ஆகியோரின் கொடைச் சிறப்பையும், நிலவளம், யாழின், வருணன், நல்லியக்கோடலின் தோளான்மையும் மற்றும் பாணை ஆதரிக்கும் அவனின் பெருமையும் ஆகியவை இந்நூலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன.


பரிபாடல்
இந்நூலில் 25 முதல் 40 அடி வரை உள்ளது. ஆசிரியப்பா,வஞ்சிப்பா,வெண்பா மற்றம் கலிப்பா என்று நான்கு பாவினங்கள் கலந்த ஒரு வகைபாடல். ஆனால், அதில் 25 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நூலில் திருமாலையும் முருகனையும் பற்றி கூறப்படுகிறது.

புறநானூறு
இந்நூலுக்கு புறம்,புறப்பாட்டு,புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. ஏறக்குறைய 160 புலவர்கள் இந்நூலில் பாடியுள்ளனர். பண்டைத் தமிழ் மக்களுடைய வாழ்வியல்,பழக்க வழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றையும் பண்டைய அரசியல்,வாணிகம்,சமயம், சமுதாய அமைப்பு போர் முறை, விழுமங்கள் ஆகியவற்றையம் புறநானூற்றுப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.

அகநானூறு
இந்நூலை நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 145 புலவர்கள் பாடியுள்ளனர். அகநானூறைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மானார் ஆவார். இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.

கலித்தொகை
பாலைக் கலியைப் பெருங் கடுங்கோவும் குறிஞ்சிக் கலியைக் கபிலரும்,மருதக் கலியை மருதனிள நாகனாரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லுந்துவனாருமாக மொத்தம் 149 பாடல்களை இயற்றியுள்ளனர்.

குறுந்தொகை
ஐந்தினை தழுவிய 400 பாக்கள் ஊள்ளது. இதில் 205 புலவர்கள் இருக்கின்றன.
இந்தக் குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் பூரிக்கோ ஆவர். தொகை நூல்களுள் முதன்முதலில் தொகுக்கப்பட்ட நூலாக குறுந்தொகை அமையலாம் என்று கூறப்படுகிறது.

நற்றினை
400 பாடல் ஐந்தினை தழுவிய பாடல்களாக இருந்தன. 275 புலவர்கள் அதில் பாடியுள்ளன. இதை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவர். ஆனால் நற்றினையின் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை.

பெரும்பாணாற்றுப்படை
அது 500 அடிகள் உடையது .அது பாணர் குடும்பத்தைப் பற்றி விளக்குவதாம்.இளந்திரையன் என்னும் அரசனுடைய ஆட்சிச் சிறப்பைப் பற்றியும் ,அவனுடைய நாட்டின் இயல்புபற்றியும், கடற்கரைப் பட்டினம் பற்றியும் அங்கு இருந்த கலங்கரை விளக்கம்ப்பற்றியும் மலைவளம்பற்றியும் இந்த பட்டால் அறியலாம். பாணனைத் தொண்டைமான் இளந்திரையின் பால் ஆற்றுப்படுத்துவதாக கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் பாடியது.

மலைபடுகடாம்
மலைபடுகடாம் என்பது கூத்தர் குடும்பத்தைப்பற்றிய ஆற்றுப்படை ஆகும்.அது 583 அடிகள் உடையது. இது கூத்தராற்றுப்படை என்றும் கூறப்படும்.ஒரு மலையின் பிறக்கும் பலவகை ஓசைகள் இதில் விளக்கப்படுகின்றன.மலைபடுகடாம் என்ற அந்தப் பெயர் கற்பனை நயம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நூலில் கூத்தருடைய இசைக் கருவிகளும் கலைவாழ்க்கையும் விளக்கப்படுகின்றன.

முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டு 103 அடிகள் உடையது.பத்துப்பாட்டில் உள்ள அகப்பாட்டுகளுள் (காதல் பற்றிய பாட்டுகளுள்)சிறந்தவை முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ஆகும்.அகப்பொருள் ஆகிய காதல் ஒன்றை விளக்குவதே இவற்றின் நோக்கம்.இந்த நூலின் ஆசிரியரின் பெயர் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

குடும்பம் ஒரு கோயில்

உறவுகளின் தொகுப்பாய் உருவெடுத்ததுதான் குடும்பம். தாத்தா-பாட்டி தொடங்கி பேரன்-பேத்தி என ஆலமரமாய் ஆயிரம் விழுது பரப்பிய குடும்பம்தான் இன்று உறவுகளைத் தவிர்த்து ஒற்றைப் பனை மரமாய் ஒதுங்கி நிற்கிறது.

அன்பின் அடித்தளத்தில் எழுந்து நின்ற குடும்பக் கோவில் இன்று பொருள் தேட்டம், இன்ப நாட்டம் என்ற அந்நியக் கலாச்சாரச் சூறைக் காற்றில் ஆட்டங்கண்டு சிறந்த விழுமங்களை இழந்து விழுந்து கிடக்கிறது.

நம் முன்னோர்களின் இல்லற வாழ்வை இனிதாகக் காட்டுவது திருக்குறள். அறம் சார்ந்த வாழ்வும், அன்பு சார்ந்த உறவுந்தான் தமிழர்தம் குடும்பங்களின் அடித்தளம். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்று நினைத்தவன்தான் தமிழன்.

’அன்பின் வழியது உயிர்நிலை’ வாழ்ந்தவன்தான் தமிழன். அகவாழ்வின் பண்பாடும், புறவாழ்வின் நாகரிகமும் பழுதுபடாமல் பார்த்துக் கொண்டதுதான் தமிழினம். ஆனால் இன்று நினைக்கவே நெஞ்சம் நோகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்து, அன்பு சார்ந்து, அறத்தின் வழியில் நடத்துவதுதான் இல்லறம். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் இடம்தான் வீடு. துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மா பேரின்பத்தில் திளைப்பதுதான் வீடுபேறு.

இறந்த பின்பு அடையும் இன்பத்தை இருக்கும்போதே அடைவதற்கான இடமே வீடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்க்மும் உள்ள இடம்தான் உண்மையான வீடு.

குடும்ப வீணையின் ஆதாரசுருதி என்றுமே பெண்தான், அதனால்தான் ‘மனைக்கு விளக்கம் மடவாள்’ என்கிறது நான்மணிக்கடிகை. ‘இல்லதென் இல்லவள் மாண்பானால்?’ என்று வினாத் தொடுக்கிறது வள்ளுவம்.’ இல்லாள் அகத்திருக்க இல்லாதத்தொன்றில்லை’ எனும் உண்மையை அறியாத தமிழ்ர் இல்லை.
ஆண் மட்டும் இருக்கும் இடத்தைக் குடும்பம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. ‘சிறந்த மனையாளை இல்லாதான் இல் அதர் காண்டற்கரியதோர் காடு’ என்கிறது நம் நாலடியார்.

‘இல்லறம் என்பது கற்புடைய மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம்’ என்கிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு ந்ல்லார். ‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்று ஔவை சொன்னதன் நோக்கமே பெண்ணின் பெருமையைப் போற்றுவதுதான்.

அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம், பிறர்நலம், தொண்டு அனைத்தும் கலந்த கலவையே பெண். அவளுடைய தலைமையில் இயங்குவடனால்தான் இல்லறம் நல்லறமாகிறது.

குடும்பம் கோவிலாவதும், குப்பை மேடாவதும் பெண்ணின் கைகளில்தான் இருக்கிறது. பெண்ணின் சிந்தையணு ஒவ்வொன்றிலும் நீக்கமற நிறைந்திருப்பது குடும்ப நலன்தான் என்பதை ‘குடும்ப விளக்கில்’ பாரதிதாசன் அற்புதமாகக் காட்டுவார்.

‘முத்தர் மனமிருக்கும் மோனத்தே வித்தகமாய்க் காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான்’ என்ற பட்டினத்தார் வரிகளுக்கேற்ப எந்நிலையிலும் தலையில் தண்ணீர்க்குடம் சுமந்து வரும் பெண்ணின் சிந்தனை நீர்க்குடத்தில் இருப்பதுபோல பெண்ணின் நெஞ்ச முழுவதும் குடும்ப சிந்தனைதான்

‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்றும் ’ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ பென்ணின ஏற்றத்திற்கே முரசு கொட்டினானே முண்டாசுக் கவி பாரதி. பெண் எனும் ஆக்க சக்தி அன்பும் இனிமையும் நிறைந்த புதுவுலகை உருவாக்கவல்லது என்று நம் முன்னோர்கள் உணர்ந்து போற்றியுள்ளது தமிழர் வாழ்வியலை ஊடுருவி பார்த்தால் தெள்ளிதின் விளங்கும்.

தந்தைக்கு நினைவாஞ்சலி

‘அப்பா’வென்று என்செல்லக் குழந்தைகள் அழைக்கையிலே
அப்பாநின் அன்பான முகந்தான் என்னுள் முகிழ்கிறது
இதயம் இழப்பால் துடிக்கிறது; கண்கள் அன்பால் கசிகிறது
இழந்த உன்னை எண்ணி உயிருமுருகிப் போனது

தந்தையாய் அறிவுத்தந்தாய்; அன்பும் குழைத்தூட்டினாய்
தென்றலாய் ஆரத்தழுவினாய்; தேன்பாகாய் என்றும் இனித்தாய்
ஆவித்துடிக்குது இன்றும் உனைக்காண நினைக்குது நெஞ்சம்
ஆயிரமாண்டு அழுதாலும் உனைக்காண தீராது ஏக்கம்

குடும்பத்தை ஆலமரமாய் நிழல்தந்து காத்த பாசதீபமே
தந்தையாய் தாங்கி பொறுமையால் எனைக் காத்த தெய்வமே
அதிர்ந்தொருசொல் கேட்டதில்லை அன்பாலேயாளும் சுடரே
அருள் விழிகளும் உன்னமைதித் திருமகமும் குளிர்தருவே

சிவனுள் கரைந்தாய் முருகனுள் கலந்தாய் நற்பணிக்கே அர்ப்பணித்தாய்
சீர்மிகுவாழ்வுக்கு இறையருள் தானென்று நாளும் சொன்னாய்
என்றும் மூச்சில் உணர்வில் உயிரில் கலந்தினிக்கும் அருள்விருந்தே
என்றினி வாய்க்குமோ ஒருபொழுது உனைக்காண அன்புருவே

எண்பது தொடுமுன்னே எட்டாதூரம் எனைவிட்டு போனதேனப்பா
எல்லாமிருந்தும் நீயில்லாமல் இருப்பதிங்கு வெறுமைதானப்பா
நாளும் உன்னினைவுகள்தாம் என்னுள் மெழுகாய் உருகுதப்பா
நன்றிசொல்லி உன்திருவடியை என்றும் வணங்கி தொழுவேனப்பா

(கழிந்த 23.3.2009 ஆம் பக்கல் இரவு 10.40க்கு உயிர் நீத்த என் தந்தைக்கு அஞ்சலியாக இந்த கவிதையைச் சமர்ப்பிக்கின்றேன். எனக்கு உடலும் உயிரும் ஈந்த என் தந்தையைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளன..அவரிடம் நான் பெற்றவற்றை நன்றியோடு பிறிதொருகால் பகிர்ந்து கொள்கிறேன்.. என் தந்தையின் இறப்பு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுதாபத்தை நேரிலும் குறுஞ்செய்தியிலும் தொலைநகலிலும் தெரிவித்த அன்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாக்குகின்றேன்.)

திங்கள், 16 மார்ச், 2009

தித்திக்கும் தொல்காப்பியம்

தொல்காப்பியம்

‘தமிழ் முதனூல்’ என்று போற்றப்படும் தொல்காப்பியம் பண்டைத் தமிழ் இலக்கண நூல்களுள் மிகப் பழமையும் முதன்மையையும் பெற்றதாகும்.

ஒல்காப்புகழ் தொல்காப்பியம் இன்று நேற்று தோன்றிய நூலல்ல. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததென்று மொழியியலர் சான்று பகர்கின்றனர். என்ன வியப்பு ஏற்படுகிறதா?. மூவாயிரம் அகவையுடைய தொல்காப்பியமே மிகச் செறிவாக இருப்பதனால் நமது தமிழ் அதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கண இலக்கிய வளமிகுந்த மொழியாய்ச் சிறப்புற்றிருத்தல் வேண்டும் என்பர் நற்றமிழறிஞர்.

தொல்காப்பியரை நினைத்தால் மிகப் பெருமையாக உள்ளது. அவர் தம்மினும் முன்னோரை உயர்மொழிப் புலவர், யாப்பறி புலவர், நுணங்குமொழிப் புலவர், நூனவில் புலவர், சொல்லியற் புலவர், தொன்னெறிப் புலவர் என உவகைப் பொங்க நன்றி பாராட்டுதல் போற்றத்தக்கது.

“இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பலதுறை பற்றி அறிவதற்குத் துணை புரிவதாகும். இதனைத் தமிழ்ப் புலவர் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர். இஃது இலக்கண நூல்தான் என்றாலும், ஏனைய மொழிகளிலுள்ள இலக்கண நூல் போன்றதன்று; அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழியாராய்ச்சியும், இலக்கிய ஆராய்ச்சியும், பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியனவும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது.” டாக்டர் சி.இலக்குவனார்

தொல்காப்பியம் தமிழ் மொழியின் இயல்பை உள்ளவாறு ஆராய்ந்து விளக்குவது; பேச்சு வழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக் கொண்டிலங்குவது. அதற்குச் சான்றாக விளங்குவது கீழ்க்கண்ட சிறப்புப்பயிரம் வரிகள் உணர்த்துகின்றன.

“தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி “

தொல்காப்பியத்தை நாம் மொழி விளக்கவியல் நூலாகவே கொள்ளலாம். தொல்காப்பியம், தொல்காப்பியர் காலத்து மொழி நிலையையும் அதன் முந்திய நிலையையும் ஓரளவு உணர்த்துகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட மொழி நூலின் விதிகளை ஒட்டியே பெரிதும் இலங்குவதால் அதனைக்கொண்டு மொழியின் பொதுவியலையும் ஓரளவு அறியவியலுகிறது.

மூவாயிரம் ஆண்டுகள் பழமையுடையதாயினும், இன்றும் தொல்காப்பியத்தின் ஆட்சி தமிழ்மொழியில் பெரும் பகுதி நிலைத்து நிற்கிறது. தொல்காப்பியர் ஆழ்ந்து சிந்தித்துத் தமிழின் அடிப்படையான இலக்கணக் கூறுகளையெல்லாம், முன்னோர் வழிநின்று, தொகுத்துத் தந்திருப்பதால் தமிழுக்கு நிலைபேறான காப்பு நூலாக விளங்கி வந்திருக்கின்றது.

எத்தனையோ இலக்கிய இலக்கண நூல்கள் இடைப்பட்ட காலத்தில் தோன்றி மறைந்திருந்தாலும் இந்நூல் சிதைவு பெறாமல் வழிவழியாகப் போற்றிக் காக்கப்பட்டு இன்று நம் கைக்கு முழுமையாக கிடைத்திருப்பதே இதற்கு பெரும் சான்றாகும் என்கிறார் தமிழண்ணல்.

தமிழரின் பழைய வாழ்க்கை மரபுகள், நூல்மரபுகள் யாவற்றையும் பிற்பட்ட காலத்தவர்க்குக் கொண்டு சேர்த்த பெருமை இந்நூலுக்கே உண்டு. தொல்காப்பியம், இவ்வகையில் தமிழ் இலக்கியம் இலக்கணம் தமிழர் வாழ்க்கைப் பண்பாடுகள் யாவற்றிலும் கொண்டு செலுத்திய செல்வாக்கு வேறு உலகநூல் எதனினும் காணப்படாத ஒன்றாகும்.

தொல்கப்பியர் காலத்தில் ‘நூல்’ என்றால் . அஃது இலக்கண நூல் ஒன்றையே குறிக்கும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என முப்பெரும் பிரிவுகளை உடையது.

எழுத்து என்ற பிரிவில் தனிநின்ற எழுத்து, சொல்லிடை வரும்போது அவ்வெழுத்தின் நிலை, எழுத்துகளின் உச்சரிப்பு நிலை, சொற்களில் எழுத்துகள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் புணரும்போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் ஆகியன கூறப்படுகின்றன.

சொல் பற்றிய பெரும் பிரிவில் சொற்கள் தொடர்ந்து தொடர்களாக அமையும் முறை, தமிழுக்குச் சிறப்பாக அமையும் அல்வழி வேற்றுமைத் தொடரிலக்கணம், தனிச்சொற்களின் இலக்கணம் ஆகியவை பேசப்படுகின்றன.

பொருள் இலக்கணம் இலக்கிய ஆக்கம் பற்றியது. மக்கள் வாழ்வு எங்ஙனம் இலக்கியமாகப் படைக்கப்படுகிறது என்பதே இதில் விளக்கப்படுகிறது. இது தமிழில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்புடைய பகுதியாகும். இப்போது நன்கு புரிந்திருக்குமே நமது தொல்காப்பியத்தின் சிறப்பு எத்துணை பெரிதென்று.

தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் தமிழில் பலப்பல இலக்கண நூல்கள் தோன்றின. தமிழ் இலக்கண வரலாறு ஒன்று விரிவாக எழுதக்கூடிய வகையில் தமிழில் இலக்கண நூல்கள் காலந்தோறும் தோன்றின.

முதலாவதாக ஐந்திலக்கண நூல்களைக் குறிப்பிடலாம். அவை முறையே வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமிநாதம். இவற்றுள் ஒரு சில வடநூல் மரபிற்கு ஆட்பட்டு இலக்கணங் கூறினாலும் தொல்காப்பிய மரபே நிலைபெறுவதாயிற்று.

யாப்பிலக்கணம் சார்ந்து தோன்றியவற்றில் குறிப்பிடத்தக்கவை யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையும் ஆகும். அவிநயம், காக்கைபாடினியம் என முற்பட்டனவாயும்; யாப்பிலக்கணம், சிதம்பர செய்யுட்கோவை, மாறன் பாப்பானினம், பல்சந்தப் பரிமளம், திருவலங்கல் திரட்டு, விருத்தப்பாவியல் எனப் பிற்காலத்தும் தோன்றிய யாப்பிலக்கண நூல்கள் மிகப்பலவாகும்.

தண்டியலங்காரம், மாறனலங்காரம், அணி இலக்கணம் போலும் தமிழ் அலங்கார நூல்களில் வடமொழிச் செல்வாக்கு மிகுதி எனினும் கூர்ந்து நோக்குவார்க்கு அவற்றிலுள்ள தமிழ் அடிப்படைகளும் தெள்ளிதின் விளங்கும்.

நேமிநாதமும் நன்னூலும் எழுத்து, சொல் பற்றித் தனியே இலக்கணங்கூறுவன. இலக்கணக்கொத்து சொல்லிலக்கணம் பற்றியது. இறையனார் களவியல், நம்பியகப் பொருள், தமிழ்நெறி விளக்கம், களவியற் காரிகை, மாறனகப் பொருள் என்பன அகம் பற்றியும் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை என்பன புறப்பொருள் பற்றியும் தோன்றியனவாகும்.

நன்னூல் தொல்காப்பியத்தின் வழிநூலாகும். இதனைப் பழையனவற்றை ஓரளவு கழித்துப் புதிய வழக்குகளைப் புகுத்தித் தன் காலத்து நிலையை விளக்கும் மொழிவிளக்க நூல் எனலாம். நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் என இரண்டு வகையான பாயிரங்களைக் கொண்டிலங்குகின்றது.

நன்னூல் எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம் என்று இரண்டு அதிகாரங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் ஐந்து இயல்கள் உள்ளன. இதனை இயற்றிய பவணந்தி முனிவர் வடமொழியினையொட்டி பதவியல் என ஓர் இயலைப் புகுத்தியுள்ளார். நன்னூல், பிற்காலத்துக் கருத்துகளை ஏற்றுப் புதுவிதிகள் சொல்லுவதைப் பலவிடங்களில் காணலாம்.

தற்போது மேலைநாட்டார் கண்ட மொழியியலை நம் முன்னோர்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டு சிறந்த முடிவுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட இலக்கண நூல்கள் செவ்விய சான்றுகளாகின்றன.

தொல்காப்பியத்திற்கு ஈடு சொல்லக்கூடிய அளவிற்கு வேறு சிறந்த மொழியியல் விளக்க நூல் இன்றளவும் பிற மொழியிலில்லை என்று துணிந்து கூறலாம். இன்று பல்கிப் பெருகிவரும் மேலைநாட்டாரின் புதுக்கருத்துகளோடு தொல்காப்பியம் பெரிதும் ஒத்து இயங்குகிறது; தமிழின் இயலை நன்கு விளக்குகிறது.


தமிழ்மொழியின் தோற்றம் மிகத் தொன்மையானது. கடற்கோளால் முதற்சங்கம் தோன்றிய குமரிக் கண்டமும், இடைச்சங்கம் தோன்றிய கபாடபுரமும், கடைச்சங்கம் தோன்றிய மதுரையும் அழிந்தன என சான்றுகளைக் கண்டோம்.

என்றுமுள தென்தமிழாய் பல்லோரலும் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது நம் தமிழ்மொழி. தமிழில் பேச்சு வழக்குகள் காலத்திற்கேற்ப மாற்றம் கண்டு வந்தாலும் அடிப்படைத் தமிழ்மொழியானது நிலைபெற்று இருக்கிறது. இனி வரும் எத்துணைக் காலமும் தொல்காப்பியமும் நன்னூலும் தமிழ்மொழிக்கு அடிப்படையாகவே விளங்கும்.

செவ்வாய், 3 மார்ச், 2009

தமிழ்மொழியின் சிறப்புகள்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.

தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
- ஞா.தேவநேயப் பாவாணர்

உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.

அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் திருக்குறள் போல் வேறு மொழிகளில் அறநூலுண்டோ?.

மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன. வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.

‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல்

‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது

தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.

தமிழில் ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளையும் சிறப்பெழுத்துகள் என நற்றமிழ் இலக்கணம் எனும் நூலில் டாக்டர் சொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இவ்வைந்து எழுத்துக்களைத் தவிர்த்து தமிழிலுள்ள பிற எழுத்துகள் வட மொழியிலும் உள்ளவை; இரண்டிற்கும் பொதுவானவை.

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.

பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது

“தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

உலகில் ஒரு மொழியில் இருக்கின்ற இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகியவை குன்றாமல் மொழி பெயர்த்திட இயலும். ஆனால் தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் இந்நான்கும் குன்றாமல் மொழி பெயர்க்க முடியாது. எனவே தமிழ் இலக்கியத்தின் உயிர்ப் பொருளை பிற மொழிகளில் மொழி பெயர்க்க இயலாதது; முடியாதது.

தொன்மை மொழிகளான இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் ஆகியன பேச்சு வழக்கிழந்து ஏட்டளவில் மட்டுமே வாழ்கிறது. சமஸ்கிருதமோ ஏட்டளவிலும் குறைந்த எண்ணிக்கையினர் பேசுகின்ற கோயில் மொழியாக இருக்கின்றது. கடினமான மொழியான சீனம் ஒரே எழுத்துரு கொண்டிருப்பினும் பல்வேறு கிளைமொழிகளாகப் பிரிந்து விட்டது.

தமிழ்மொழி இன்றளவும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் உள்ள கன்னித் தமிழாக அழியாமல் இருக்கின்றது. தமிழின் இனிமையை பாராட்டாத இலக்கியங்களே இல்லை. கம்ப இராமாயணம்,
“ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”

“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்று புகழ்கின்றது.

தமிழ் விடுதூது,
“ இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.


தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதி இவ்வாறு தமிழைப் புகழ்ந்துரைக்கின்றார்.
“ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
பாரதிதாசன்,
“ தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்”

என்று நெஞ்சார நெகிழ்கிறார்.

தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.

திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பினை கொண்டிருக்கும். ஆங்கிலம் வாணிக மொழியென்றும், இலத்தீன் சட்ட மொழியென்றும், கிரேக்கம் இசை மொழியென்றும், பிரெஞ்சு தூது மொழியென்றும், தமிழ் பத்தி மொழியென்றும் உலகோரால் வழங்கப்படுகின்றது. தமிழில்தான் பத்திச் சொற்களும், பத்தி பாடல்கல்ளும் அதிகம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

தமிழ்மொழியின் தொன்மை

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூல்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பி ளாம் எங்கள் தாய்
- மகாகவி பாரதியார்

தமிழ்மொழி மிக நீண்ட நெடிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்தொழிந்தன என மொழியியல் அறிஞர்கள் கருத்துத்துரைத்துள்ளனர்.

அவற்றுள் ஒரு சில மொழிகள் மட்டுமே இன்னும் அழியாமல் நிலைபெற்றுள்ளன. அவ்வாறு நிலைபெற்ற மொழிகளிலும் சில பேச்சு வழக்கு இழந்து வெறும் இலக்கிய மொழியாக மட்டுமே காட்சியளிக்கின்றன.

கால மாற்றத்திற்கேற்ப புத்தம்புது மொழிகளும் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு தோன்றி மாயும் மொழிகளுக்கிடையே, மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளர்ந்து, இன்றளவும் வாழ்ந்து விளங்குவன தமிழ், சீனம் முதலிய சில மொழிகளேயாகும்.

தமிழ் மிகவும் பண்பட்ட மொழி. தனக்கே உரிய வலம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி - மாக்ஸ் முல்லர்

பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது நமது தமிழ் மொழியாகும்.

‘மாடு கிழமானாலும் பால் புளிக்காது’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே!.அப்பழமொழியின் பொருள்போல் தமிழ் எத்துணை பழமை வாய்ந்திடினும் இனிமை குன்றாத மொழியென்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

“தமிழ்” என்னும் சொல் முதன் முதலில் காணப்பெறும் நூல் தொல்காப்பியமாகும். “தமிழென் கிளவி”,”செந்தமிழ் நிலத்து” என வரும் நூற்பாத் தொடர்களில் இவ்வுண்மையைக் காணலாம். பனம்பாரனார்தம் தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் “தமிழ்கூறும் நல்லுலகத்து” எனும் தொடரும் தமிழின் தொன்மையைத் தெளிவாகக் காட்டுவனவாம். “தமிழ் வையைத் தண்ணம் புனல்” என எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடல் தமிழின் இனிமையைக் கூறுகின்றது.

செந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், தெய்வத்தமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ் ...................

மொகஞ்சதரோவில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் கூறுகள் தமிழில் காணப்படுகின்றன. அதனால் இப்போது உலகில் பேசப்படுகின்ர மிகவும் பழமையான மொழி தமிழ் மொழிதான். ஐரோப்பிய மொழிகளில் உள்ள சொற்கள் பலவற்றின் மூலங்கள் தமிழில் காணப்படுகின்றன.
- ஹீராஸ் பாதிரியார்

சுமேரியர் – ரோமானியர் – கிரேக்கர் ஆகிய பண்டைய இனத்தவர்கள் நாகரிகமுடையவர்களாக விளங்குவதற்கு முன்னரே தமிழர்கள் செப்பமிட்ட சீரிய நெறிகளைக் கடைப்பிடித்து பண்புடையோராய் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. சமஸ்கிருதம் – ஹிப்ரு – கிரேக்கம் ஆகிய மொழிகளிலுள்ள பழைய இலக்கியங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று மொழியியலர் இராய்ஸ் டேவிட்ஸ் கூறுகிறார்.

மனித இனம் வாழவும் – வசிக்கவும் ஏற்புடைய நிலமாக விளங்கியது இன்றைய தமிழகத்தின் தென்நிலப்பரப்பு என்பது ஆய்வறிஞர்களின் கருத்தாகும். அந்தத் தென்நிலப்பரப்பிலே பேசப்பட்ட மொழியானது மிகத் தொன்மை வாய்ந்த நமது உயர்தனிச் செம்மொழி தமிழாகும் என்பது பன்னாட்டு மண்ணியல், உயிரியல், அறிவியலாளர் ஆய்வுகளின் வழி கிடைக்கப்பெற்ற ஒருமித்த உண்மைக் கருத்துகள்.

குமரிக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதியே மக்கள் வாழ்வதற்குத் தக்க நிலையை அடைந்தது. அங்குதான் முதன் முதலில் மக்கள் தோன்றி வளர்ந்து நாகரிகத்தை உலகிற்குப் பரப்பினர்.
- அறிஞர் ஹெக்கல்

உலகிலேயே மொழிக்கென முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ச் சங்கமே. தமிழ் மொழியின் வாழ்வுக்கும் உயர்வுக்கும் சிறப்பீட்டித் தந்த பெருமைக்கு உரியவர்கள் சேர,சோழ,பாண்டிய மன்னர்களே. தமிழினம் சிறப்புற்றிருக்கும் வகையில் தமிழைச் சீர்செய்யவும் வளப்படுத்தவும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செயலாற்றியவர்கள் பாண்டிய மன்னர்களே என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நான் முதன் முதலில் தமிழர்களிடத்தே எனது சமயத்தைப் பரப்புவதற்காகவே தமிழைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் படிக்கத் தொடங்கும்போதே, அதன் இனிமையும் எளிமையும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. உலகத்தின் தலைசிறந்த ஒரு மொழியைக் கற்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அன்றிலிருந்து தமிழைக் கற்பதிலும் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதிலுமே எனது வாழ்நாளைச் செலவிட்டேன்.
-போப்பையர்

தமிழின் தொன்மையையும் இனிமையையும் அறிந்து அனுபவித்து மேலும் செழிப்புடையதாக்கவும் செம்மைப்படுத்தவும் கற்றறிந்த மேதைகளை ஒன்றிணைத்து மொழி ஆய்வு செய்யவும் அரும் பெரும் இலக்கியங்களை உருவாக்கவும் முதல் சங்கத்தைத் தோற்றுவித்தவன் காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். காய்சினவழுதி முயற்சியால் விளைந்ததே முதற்சங்கம்.

குமரிக் கண்டத்திலே தோற்றுவிக்கப்பட்ட முதற்சங்கத்தின் காலம் ஏறத்தாழ பதின் மூன்றாயிரம் ஆண்டுகளாகும். நூற்றுக்கணக்கான புலவர்கள் தமிழ்த்தொண்டாற்றிய ஏறக்குறைய 4400 ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்த இந்த தமிழ்ச் சங்கத்தை பாண்டிய மன்னர்கள் கண்ணும் கருத்துமாய் பேணி வளர்த்தனர். ‘கடுங்கோன்’ என்ற மன்னன் காலத்தில் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் முதற்சங்கம் அழிவுற்றது.

இடைச்சங்கம் வெண்டேர்ச்செழியன் என்ற பாண்டிய மன்னனால் கபாடபுரத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் இயங்கி வந்தது. மீண்டும் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் இடைச்சங்கமும் அழிவுற்றது.

சிலகாலங் கழிந்து முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னனின் பெருமுயற்சியால் தமது தலைநகரான மதுரை நகர் எனப்படும் கூடல் மாநகரில் கடைச்சங்கம் தோற்றம் கண்டது. ஏறத்தாழ 1800 ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கிய இக்கடைச் சங்கமும் காலச்சூழ்நிலை காரணத்தால் மறைந்து போனது. மாணவர்களே! மொழிக்கெனச் சங்கம் வைத்து வளர்த்த மூத்த தமிழினத்தின் வரலாறு இப்படித்தான் முடிவுற்றது.

தமிழின் நிலைப்பாட்டிற்கு வழிகோலிய பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தை களப்பிரர், பல்லவர், மராட்டியர், முகமதியர்கள், நாயக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல்லினத்தவர் ஆட்சி செலுத்தினர். அதிகார பீடத்திலிருந்தோரின் பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றின் தாக்குறவால் தமிழ் இலக்கியத்திலும் பற்பல மாறுதல்கள் உருபெற்றன.

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
-பாவேந்தர் பாரதிதாசன்