திங்கள், 23 ஜூலை, 2018

வாழ்க்கையே விளையாட்டுதானே....


ஒவ்வொரு நாளும் என் குடும்பத்தில் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் குதூகலம் கூடி வருகிறது என்று சொல்லலாம். என் இரு மகள்களும் மனைவியும் ஒவ்வொரு நாளும் பொழுதும் விளையாடிய அணிகளை விமர்சனம் செய்யும்போது கண்டு வியக்கின்றேன். என் சின்ன மகள் ஒவ்வொரு காற்பந்து அணியைப் பற்றிய தகவல்களையும் நட்சத்திர காற்பந்து வீரர்களின் வரலாற்றையும் துல்லியமாக எப்படி தெரிந்து வைத்திருக்கிறாள் என்றெண்ணும்போது மலைப்புதான் ஏற்பட்டது. கூகள் அண்ணாவின் உதவியுடன் ஒவ்வொரு விளையாட்டரின் கோல் போட்ட வரலாறு சொன்னபோது அந்த வயதில் எனக்குக்கூட இந்தளவுக்கு ஆர்வம் இருந்ததில்லை. கடந்த 2014 உலகக் கோப்பையின்போது ஒன்றிரண்டு ஆட்டம் பார்த்துவிட்டு தூங்கியவள் இந்த விடுமுறையில் விடிய விடிய காற்பந்து ஆட்டத்தை ரசிக்கும் தீவிர ரசிகையாகிவிட்டாள். நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டினோ ரொனால்டோ, நெய்மார், சாலாக்,.. என யார்யாரோ வந்தாலும் அவளின் விருப்ப நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸிதான். மெஸ்ஸி ஆடிய ஆட்டங்களில் கோல்களைத் தவறவிட்டதும் குரோஸியாவுக்கான ஆட்டத்தில் 0-3 இல் படுதோல்வி அடைந்ததும் மிகவும் கவலைப்பட்டாள். நல்ல வேளையாக அன்று சினேகலுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா மெஸ்ஸியின் வழி ஒரு கோல் போட்டதும் துள்ளிக் குதித்து கவலையைத் தீர்த்துக் கொண்டாள். அவள் மெஸ்ஸிக்காகவே ஆர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரிதும் தெரிகிறது. பெரியவள் சின்னவள் அளவுக்குத் தீவிரம் இல்லாவிடினும் அவளுக்குப் போட்டியாக விளங்கும் அணிக்கே என்றும் ஆதரவு தெரிவிப்பாள். இருவருக்குமே என்றும் ஏட்டிக்குப்போட்டிதான். அதனால் அவர்கள் இருவருக்குமான மோதலில் நாநும் மனைவியும் தலையிடுவதில்லை. ஒருவழியாக அவர்களே சமாதானமாகி ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அதேவேளையில் இந்த முறை என் மனைவியும் இந்தப் பிள்ளைகளால் காற்பந்து ஆட்டத்தின் மீதுள்ள ஆர்வமும் தூண்டுதலும் அதிகரித்திருப்பதை மெய்யாக உணர்கின்றேன். ஒவ்வொரு நாளும் விடியற் காலையில்  நடைபெற்ற ஆட்ட முடிவுகளை எங்களுக்கு எழுந்ததும் சொல்வது மனைவிதான். அவளும் பிள்ளைகளோடு சேர்ந்து காற்பந்தாட்டத்தைப் பற்றி நுணுக்கமாக அலசலும் கணிப்புகளும் செய்வார்கள். காற்பந்து அணியின் ஆட்டத் திறத்தையும் போக்கையும் ஆராய்ந்து பெரும்பாலும் என் மனைவி செய்யும் கணிப்புகள் சரியாகவே நடப்பதை அறிந்து கொஞ்சம் மலைப்பாகவே அவளைப் பார்க்கின்றேன். நேற்றைய ஜெர்மனுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடத்தில் ஜெர்மன் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை வெற்றி தென்கொரியாவுக்குத்தான் என்றபோது ஜெர்மன் அணியின் விசிறியான என் பெரியமகள் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள். இப்படியே ஒவ்வொரு நாளும் காற்பந்து விழாவில் ஆழ்ந்து தோய்ந்துபோய் என் குடும்பம் செல்கிறது. எனக்கும் சிலசமயம் அவர்களுக்கு ஈடு சொல்லும் அளவுக்கு காற்பந்தாட்டத்தை நோக்கத் தெரியவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம் தொடங்கிய முதல் ஏதோ புதிதான ஒரு சூழலும் இதமும் எங்கள் குடும்பத்தில் ஊடுருவி இருப்பதை மெய்யாக உணர முடிகின்றது. அலகிலா விளையாட்டுடையான் என்று கம்பர் இறைவனைச் சொல்லும்போது சுற்றிச் சுழலும் இந்தக் கோள்கள் யாவும் இறைவன் உதைத்து விளையாடும் காற்பந்தாகவே என் கற்பனைக்குத் தெரிகிறது. ஆனால் என்ன இங்கு ஒரு பந்தை இருபத்துரெண்டு பேர் ஓடியாடி உதைக்கின்றனர். அங்கு அவர் ஒருவரே எண்ணிலடங்கா பந்தை உதைத்துத் தள்ளுகின்றார். விளையாட்டிற்கு மனித மனங்களை மட்டுமல்ல உலக நாடுகளையே ஒன்றிணைக்கும் பேராற்றல் உள்ளதுதானே?

கருத்துகள் இல்லை: