‘சென்றுவா மகனே சென்றுவா, அறிவை வென்றுவா மகனே வென்றுவா,..அறிவுலகம் உன்னை
அழைக்கின்றது’ இந்த மகாகவி காளிதாஸ் படப்பாடல்தான் இதயத்தில்
ஒலிக்குந்தோறும் என் மனத்திரையில் ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாவின் நிழலுருவே சித்திரமாகத் தோன்றி மறையும். இன்று மின்வெளியில்
பலவாறாகத் தம் சுயத்தையும் படோடபத்தையும் பிதற்றித் திரியும் இளையர்களுக்கு
மத்தியில் கடந்த தலைமுறை எப்படியெல்லாம் அறிவைத் தேடியிருக்கிறது என்பதற்கு ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாவின் வாழ்வும் அவரின் குருவான
‘தமிழ்க் கொண்டல்’ மகாவித்வான்
தெ.பொ.மீனாட்சிசுந்தரத்தின் வாழ்வும் சிறந்ததொரு எடுத்துக்காட்டு. சீண்டுவாரற்று
பரண்களிலும் கோயில்களிலும் கரையான்களுக்கு இரையாகிக்கொண்டிருந்த இலக்கியச் சுவடிகளையெல்லாம் ஊரூராகக் கால்
கடுக்க நடந்து அலைந்து தேடித் தேடி உடல் களைத்தாலும் கிஞ்சிற்றும் மனம் சோராமல்
தம்வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணி செய்தவரை நாம் மறப்பது அறம்தானா?. ஓலைச்சுவடியில் சிதிலமடைந்திருந்த படைப்புகளையெல்லாம் பொன்னாகப் பொறுக்கி
எடுத்து தம் சொத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டு அச்சுக்கூடத்தில் உயிர்பித்தவரை
நாம் மறந்துவிட்டால் நம்மைவிட நன்றிகெட்டவர் யாருளர்?. ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாவின் ‘எனது
சரித்திரம்’ ஒவ்வொரு தமிழரும் படித்து பின்பற்ர வேண்டிய
காவியம் என்பேன். கண்கள் பழுதுபட்டபோதும் குவியாடியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு
எழுத்தாகப் படித்துப் படித்து ஆயுள் அழித்த அந்தத் தியாகத்திற்கு ஈடாக வேறில்லை .அது
ஒரு புறமிருக்க ‘தமிழ்த்தாத்தா’வின்
குருவான ‘தமிழ்க் கொண்டல்’ மகாவித்வான்
தெ.பொ.மீயின் தமிழ்ப்பணி நெஞ்சை உருக்குகிறது. இளமையில்
வறுமை வாட்டியெடுத்தாலும் தமிழ் கற்கும் வாட்டம் சிறிதும் அவரிடமில்லை. தாம் கற்க
வேண்டிய இலக்கணச் சுவடியொன்று ஒரு பரதேசியிடம் இருப்பதை அறிந்து அவரிடம் பலமுறை
கெஞ்சி கேட்டும் கிடைக்காமல் தவிக்கிறார். பணம் இருந்தால் மட்டுமே அந்தச்
சுவடியைத் தருவதாக தீர்க்கமாகக் கூறும் அந்தப் பரதேசியிடம் நாளும் மன்றாடி கல்லும்
கனிந்துருகும்படி கெஞ்சக் கெஞ்ச
பரதேசியின் மனம் இரங்குகிறது. “சரி, பணம் இல்லையென்றால்
பரவாயில்லை; நான் சொல்கின்ற வேலை செய்ய முடியுமா?” என்று அதிகாரத் தொனியோடு பரதேசியின் குரல் ஒலிக்கிறது. “தங்கள் உத்தரவு”
என்று நெடுநாள் சுவடியைக் காணும் ஆவலுடன் காத்திருந்த தமிழ்க் கொண்டல் சொல்ல
“நாளையிலிருந்து எனக்குப் பதிலாக இந்தப் பிச்சைப் பாத்திரத்தை வீடு வீடாக தூக்கி
வர வேண்டும். அன்னக்காவடி பாத்திரத்தில் பிச்சையெடுத்து வந்து கொடுத்தால்தான்
இந்தச் சுவடியைத் தருவேன்” என்று பரதேசி எதிரொலிக்க “அப்படியே ஆகட்டும்” என்று
பிச்சையெடுத்து அந்தச் சுவடியை மீட்டார் ‘தமிழ்க் கொண்டல்’ மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. ‘கற்கை
நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கே நன்று’ என்ற
நறுந்தொகையின் பாடலுக்கு உண்மையாகப் பொருள்படும்படி வாழ்ந்தவர் தெ.பொ.மீ. நெஞ்சை சிறு
வயதிலிருந்தே நூல்கள்தான் அறிவை வழங்கும் தோழன்; ஆசான்; வழிகாட்டி என்றெல்லாம் ஆசிரியர்கள் பெரியவர்கள் சொல்கேட்டு வளர்ந்த
தலைமுறை நாங்கள். தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக நம் முன்னோர்கள் செய்த தியாகத்தை
நினைத்தாலே நெஞ்சம் உருகும். அவர்கள் பெருமுயற்சியோடு திரட்டித் தந்த பனுவல்களை
இன்றைய தலைமுறை படித்து சமூகத்துக்கு அதன் கருத்துகளைப் பரப்ப வேண்டும்.
எவ்வளவுதான் இணையவெளியில் படித்துப் படித்து மகிழ்ந்தாலும் நூல்களை கையில்
குழந்தைபோல் எந்தி சுமந்து நெஞ்சில் அணைத்தவாறு பூரிப்பதிலுள்ள சுகானுபவம்
சொல்லுக்குள் சிக்காது. இன்றைய தாய்மொழி நாளிலாவது தமிழர்களான நாம் நல்ல தமிழ்
நூல்களைத் தேடிப் பிடித்து படிக்கும் பழக்கத்தை வேள்வியாகக் கொள்வோமா?
வானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.
திங்கள், 15 ஜூலை, 2019
கற்றல் சுகமா? சுமையா?.
ஒவ்வொரு நாளும் நமக்கு உள்ளும் புறமும் நிகழும்
கற்றலில்தான் இந்த வாழ்க்கை தொடங்குகிறது. மனிதம் நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக மேம்பட்டுச் சிறப்பதும் கற்றலினால்தான். கற்றல் என்பது என்ன? சுருங்கச்
சொல்லின் தன்னை உணர்தல். கற்றுக் கொள்வதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?. நான் கற்றுக்கொண்டேன் என்பதைவிட என்னைச் சுற்றி இன்னும் கற்கவேண்டியவை
நிறைய உள்ளன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இரத்தினச் சுருக்கமாகச் சொன்னால் ‘கற்றது கை மண்ணளவு கல்லாதது உளகளவு’ என்பதுதான்.
அந்தச் சிறுவனை அவனது தந்தை குருகுலத்தில் கல்விக் கற்க அனுப்பினார். காலம் உருண்டோடியது. “எல்லாம் கற்றுத் தெளிந்துவிட்டாய், சென்று வா” குருகுலத்தில் கல்வி முடித்த அவனை குரு வாழ்த்தி அனுப்பினார். தாம் எல்லாம் கற்றுக் கொண்டேன் கர்வத்தோடு இல்லம் திரும்பியவனை தந்தை கண்டு கொண்டார். “ எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாயா?” தந்தையின் கேள்விக்கு “குருவிடம் அனைத்தையும் கற்றேன்” என்ற மகனை நோக்கி “ எதைக் கற்றுக்கொடுக்க முடியாதோ?, எதைக் கற்றுக் கொண்டால் இந்த உலகத்தின் துன்பம் நீங்குமோ அதைக் கற்றுக்கொண்டு வா” என்று கட்டளையிட்டார் தந்தை. தந்தையின் குரலில் வெளிப்பட்ட உண்மையைப் புரிந்து கொண்டு மீண்டு குருவிடம் திரும்பி போனான். அவனைப் புரிந்து கொண்ட நானூறு மாடுகளைத் தந்து, “இவற்றை காட்டுக்கு ஓட்டிச்செல். இந்த நானூறும் ஆயிரம் ஆகியப்பின் திரும்பி வா” என்று கட்டளையிட்டார். நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி ஆண்டுகளும் ஆயின. தனிமை முதலில் சலித்தாலும் அதுவே வாழ்க்கையாகிப் போனது. தனிமை, இனிமையான மெளனமாகி தவமாகி விலங்குகளின் விலங்குகளின் மொழியும் மாடுகளின் பேச்சும் இயற்கையின் ஒவ்வோர் அசைவும் உணர்வும் புரியத் தொடங்கியது. ஒருநாள் “நாங்கள் ஆயிரமாகிவிட்டோம்” மாடொன்றின் பேச்சு குருவை நினைவுப்படுத்தியது. தூரத்தில் அவன் வருவதைக் கண்ட குரு அவன் கண்களில் பொழியும் கருணையை உணர்ந்துகொண்டு அருகில் வந்ததும் அன்போடு “இதோ ஆயிரத்து ஒன்றாவது விலங்கும் வந்துவிட்டது. இப்போது எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்துவிட்டாய்” அவனை அணைத்தபடியே கூறினார். அந்தச் சிறுவன்தான் சுவேதகேது என்று உபநிசிதம் பகர்கின்றது. இதில் கற்றலின் ஆழ்நிலை உணர்த்துதல் மிக முக்கியம். தாயின் கருவறையில் குடியிருந்தபோதே ஒரு குழந்தையின் கற்றல் தொடங்கிவிடுவதாக அன்றைய இதிகாசமும் இன்றைய அறிவியலும் ஒருசேர சொல்கிறது. ஒவ்வொரு கட்டத்தில் கற்றல்தான் மனதுக்குள் மறைந்திருக்கின்ற எண்ணங்களைச் செயல் வடிவம் கொடுக்கின்றது. காலங்காலமாக அடிமைத்தனத்தில் ஊறி வளர்ந்த கறுப்பினக் குழந்தையொன்று தமது வீட்டுக்கு அருகேயுள்ள தெருவோரத்தில் பலூன் வியாபாரியைப் பார்க்கிறது. அவன் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் எனப் பல வண்ணங்களில் பலூன்களைக் கயிற்றில் பிணைத்தபடியே குழந்தைகளை நோக்கி ஆரவாரத்தோடு கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தது அந்த பிஞ்சு நெஞ்சில் மகிழ்ச்சியை விளைவித்தது. அந்தக் காட்சியைக் குதூகலமாகக் கண்டு ரசித்த குழந்தை நம்பிக்கையோடு பலூன் வியாபாரியிடம் தன்னை மறந்து நகர்ந்து சென்றது. “பலூன் வேண்டுமா பாப்பா?. என்ன நிற பலூன் வேண்டும்?” வாஞ்சையோடு கேட்ட பலூன் வியாபாரியைப் புன்னகையோடு சற்று நேரம் உற்றுப்பார்த்து “உங்க கையிலே இருக்கும் கறுப்பு பலூன் மற்ற நிற பலூனைப்போல வானத்தில் பறக்க முடியுமா?” புரியாமல் கேட்டது. “பலூன் வானத்தில் பறப்பதற்கு அதோட நிறம் காரணம் இல்லம்மா கண்ணு. அதுக்குள்ள இருக்கும் காற்றுதான் அதைப் பறக்க வைக்குது” என்று செல்லமாக குழந்தையின் கன்னம் கிள்ளி கேட்ட கறுப்பு பலூனைத் தந்தார். குழந்தை மகிழ்ச்சியோடு அதை வாங்கித் தமது தலைக்கு மேலே பறக்கின்ற கறுப்பு பலூன் பறக்கின்ற காட்சியில் இலயித்தது. கற்றல் சுகமா? சுமையா?.
நூல்கள்தானே நம்மை உயர்த்தும் ஏணி
எங்கோ எப்போதோ படித்ததாக நினைவு. அது உண்மையா மிகை
புனைவா என்றெல்லாம் தெரியாது ஆனாலும் எனக்குள் அதன் சாரம் இன்னும் ஈரம் குறையாமல்
இருக்கிறது. ‘ஞானத்தைக் கற்க வேண்டி காடு, மேடு, மழை, வெயில், குளிர், கடல் எல்லாம் கடந்து சீன தேசத்து துறவி ஒருவர் இந்தியாவிற்கு வந்தாராம்.
பலநாள் தேடலுக்குப்பின் அவருக்கு இங்கே அள்ள அள்ளக் குறையாத ஞானக் கருவூலங்களான
ஓலைச் சுவடிகள் கிடைத்தனவாம். அவற்றையெல்லாம் குழந்தைகள்போல் அள்ளியெடுத்து கங்கை
நதியைக் கடப்பதற்குத் துறவி படகில் கிளம்பினாராம். நிறைந்த ஓலைச்சுவடிகளின்
பாரத்தால் அந்தப் படகு பயணம் தடைப்படும் என்பதை உணர்ந்த படகோட்டி அதில் சிலவற்றை
ஆற்றில் வீசும்படி துறவியிடம் கூறினான். மறுப்பேதும் பேசாத துறவி முதலைகள்
வாழ்கின்ற ஆற்றில் மறுகணமே விருட்டென பாய்ந்து, இந்தச்
செல்வங்களை அக்கரையிலுள்ள மடத்தில் சேர்த்துவிடும்படியும் வாய்ப்பிருந்தால் தான்
அங்கு வந்து சேர்கிறேன் என்று கூறினாராம்.’ நூல்கள்
போற்றுதற்குரியவை மட்டுமல்ல வணங்குதற்குரியவை என்பதற்கு இதுவே சான்று. பிறருக்கு
எப்படியோ தெரியாது எனக்கு நூல் எனப்படுவது உடலும் உணர்வும் அறிவும் தோழமையும்
மிக்க ஆத்மார்த்த நண்பனாகவே தோன்றுகிறது. ஒரு சில வேளைகளில் நட்பெனும் எல்லையைத் தாண்டி
ஆசானாக நின்று நெறிப்படுத்தி
நல்வழிகாட்டுகிறது. நான் புரட்டிய நூல்களைவிட என்னை புரட்டிய நூல்கள்
அதிகம். அவற்றின் ஒவ்வொரு சொல்லும் என் இதய அறைக்குள் கூடுகட்டி வாழ்கிறது.
உலகத்தைப் புரட்டிப் போட்டதில் மகத்தான நூல்களின் பங்கு அதிகம். வாள் உனையைவிட
பேனா முனைக்கு வலிவு அதிகம் என்பதை தொன்று தொட்டு உலக வரலாறு பலமுறை
உறுதிபடுத்தியிருக்கிறது. ‘மூலதனம்’
நூல் மூலம் பொதுவுடைமை சிந்தாந்தத்தை உலகம் முழுதும் பரவச் செய்த காரல் மார்க்ஸ்
மீது எனக்குத் தனிக் காதலுண்டு. மூன்று பாகங்களாக வெளிவந்து உலகை குலுக்கிய அந்நூலை
எப்படியாவது தேடிப்பிடித்துப் படிக்க வேண்டும் என்ற என் நெடுநாளைய ஆவல் ஒரு
இந்தியப் பயணத்தின்போது நண்பர் மூலம் கிடைத்தது. இன்றுவரை ‘மூலதனத்தின்’ மூன்று பாகங்களையும் முழுமையாகப் பார்த்ததில்லை. பொதுவுடைமை சிந்தனைக்கு
எதிரானது என்பதால் அந்நூல் நம் நாட்டில் தடை செய்யப்பட்டதால் அதை வைத்திருக்கவும்
மீள்வாசிப்பு செய்யவும் வழியில்லாமல் போய்விட்டது. அதனால் அதன் சுவையை முழுமையாக
உணரும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. காரல் மார்க்ஸ் 15 ஆண்டுகளுக்கு மேலாக
பிரிட்டிஷ் அருட்காட்சியகத்தின் நூலகத்திலேயே அடைந்து கிடந்து தவமாக இந்நூலை
ஆக்கினார் என்பதே தனித்தச் செய்தி. இதுபோல எத்தனையோ நூல்கள் மனிதனைச் செதுக்கி
உலகத்தை வாழ்வித்துக்கொண்டுதான் இருக்கின்றன. வரலாற்று ரீதியாக எத்தனையோ நூல்கள் உலகைப்
புரட்டிப் போட்டிருக்கின்றன. “எனக்குள் ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்தியது
டால்ஸ்டாயின் ‘இறைவனின் அரசாங்கம் உனக்குள் இருக்கிறது’ என்ற நூல்” என்று மகாத்மா
காந்தியின் வாக்கு மூலத்தைப் படித்ததும் அதை அப்போதே தேடிப் படிக்க வேண்டும் என்ற
ஆசை என்னுள் வேர்விட்டது. வெறும் 47 பக்கங்கள் கொண்ட ‘பகுத்தறிவு’ அமெரிக்கர்களிடம் எழுப்பிய மறுமலர்ச்சி சிந்தனையை எண்ணி வியக்காமல்
இருக்க முடியவில்லை. “நாம் எவ்வளவு பெரிய கண்டத்துக்குச் சொந்தக்காரர்கள், சிறிய குட்டி தீவுக்கு அடிமையாகக் கிடக்கிறோமே” என்ற மனவெழுச்சியை
அமெரிக்கர்களிடம் ஏற்படுத்தி புரட்சி பிகடனத்துக்கு வித்திட்டது. “கறுப்பின
மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து யார் மீட்கப் போகிறார்கள்?” என்று காலம் காத்திருந்தபோது ‘டாம் மாமாவின்
குடில்’ என்ற நூல் ஆப்ரகாம் லிங்கன் மனச் சாளரங்களைச்
சட்டென்று திறந்துவிட்டது வரலாற்று உண்மை. பின்னாளில் வெளிவந்த பிரபலமான ‘வேர்கள்’ நாவல் படித்தவர்கள் அமெரிக்க கறுப்பினத்தின்
வலிகளை நன்கு உணர முடியும். நாம் பயின்று இன்புறத்தானே சங்க காலம் முதல் தற்காலம்
வரையிலான பல்லாயிரம் நூல்கள் தமிழிலே கொட்டிக் கிடக்கின்றன. தொல்காப்பியச்
சுவையும் ஐம்பெருங் காப்பியச் சிறப்பும் தெய்வீகம் கமழும் தீந்தமிழ்ப்பாக்களும்
இதிகாச இனிமையும் சித்தர் களஞ்சியமும் என்றும் படிக்கப் படிக்க சிந்தை இனிக்கும்.
தற்கால கவிதையும் சிறுகதை நாவல் புனைவுகளும் தனித்ததோர் பூக்காடு. உலகத்தின் எல்லா
ஐயங்களுக்கும் தீர்க்கத்தரிசனமாகத் திகழும் திருக்குறள் ஒன்றுபோதுமே நம்மை வானளவு விரியச்
செய்வதற்கு?
நீள்கிற கேள்விகளோடு?????
‘குழந்தைகள் மலர்கள், அவர்களைக் கசக்கிவிடாதீர்கள். குழந்தைகள் ஓவியங்கள், அவர்களைக் கலைத்து
விடாதீர்கள். குழந்தைகள் கவிதைகள், அவர்களை வாசிக்கப்
பழகிக்கொள்ளுங்கள். குழந்தைகள் கண்ணாடிகள், அவர்களை
உடைத்துவிடாதீர்கள். குழந்தைகள் கற்க வேண்டிய புத்தகங்கள்,
அவர்களைக் கிழித்துவிடாதீர்கள்’ எங்கோ படித்த வரிகள்
ஆசிரியர் கொண்டாட்ட மகிழ்ச்சியில் என்னுள் மீண்டும் உயிர்த்தெழுந்தது. கற்றலும்
கற்பித்தலும் அன்பு சார்ந்தது என ஆழமாக நம்புபவன் நான். ஒவ்வொரு மாணாக்கன் மனதுக்குள்ளேயும்
பயணம் செய்து அவனவன் தெய்வ குணத்தை அவனவனே கண்டறியச் செய்யும் மாபெரும் வித்தையைக்
கற்றுக் கொடுப்பவர்தான் ஆசிரியர். முன்பெல்லாம் ஒருநாள் மாணாக்கர் பள்ளிக்கு
வரவில்லையென்றாலே வீட்டுக்குத் தேடிச் சென்று காரணத்தைக் கண்டறிந்து வரும்
ஆசிரியர்கள் அதிகம் இருந்தனர். இன்று அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கற்றல்
கற்பித்தல் நடந்தால் சரி என்று இயந்திரகதியாக அரங்கேறுகிறது. மாணவர் ஆசிரியர்க்கான
உறவில் இடைவெளி அதிகரிப்பது கற்றலுக்குப் பெருந்தடை. தாயின் அரவணைப்பைப் பிரிந்து
பள்ளிக்குப் போகிற புதிதில் குழந்தைகள் கதறிக் கதறி அழுவதைப் பார்த்திருப்போம்.
பின்னர் பள்ளிக்கூடச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிப்போய் ஆசிரியரோடு
இணைந்துவிடுகிறது. தம் தாயிடம் பேசுவதைப்போல நம்பிக்கையோடு ஆசிரியரிடமும்
பழகுகிறது. இப்போது அந்தக் குழந்தைக்கு இரு தாய்மார்கள் கிடைத்திருக்கிறார்கள்.
மெய்யாக இன்றைய பள்ளிக்கூடங்கள் இப்படி இயங்குகின்றனவா? இதுவரை
பள்ளிக்கூடத்தையும் ஆசிரியர்களையும் புனித பிம்பம் தந்து பொது புத்தியில் பார்த்த
நமக்கு சில கயவர்களை காண்பது மனதுக்குச் சங்கடமாகத்தான் இருக்கும். இன்றைய
இயந்திரத்தனமான கல்வி முறையில் மனமிழந்த ஆசிரிய எந்திரங்கள் கட்டவிழ்க்கும்
வன்முறைகள் மறைப்பதற்கில்லை. அப்பழுக்கில்லாத மாணாக்கரிடம் கேட்டால் முதலில்
தங்கள் தேவையெல்லாம் வன்முறைகள் இல்லாத பள்ளிக்கூடங்களும் வெஞ்சினம் இல்லாத
ஆசிரியர்களும்தான் என்பர். சுடர்விட்டு எரிய வேண்டிய மாணாக்கர் அறிவு ஒளியை
பிரம்புகளால் அணைத்துவிடும் ஆசிரியர்களை மெல்ல இந்தக் கல்வி முறையிலிருந்து
களையெடுப்போம். தொடக்கப்பள்ளிகளிலோ இடைநிலைப்பளிகளிலோ ஏன் உயர் கல்விக் கூடங்களிலோ
ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட அவமானப்படுத்தப்பட்ட கேலி செய்யப்பட்ட
மாணவர்களிடம் மனம்விட்டு நீங்கள் பேசியதுண்டா?. அவர்கள்
ஆசிரியர் மீது கட்டவிழ்க்கும் குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் மனத்தை உலுக்கிப்
போட்டுவிடும். படிப்பிலும் தோல்வியுற்றவர்களாகி பிரச்சனைக்குரிய மாணவர்கள் என்று
முத்திரைக் குத்தப்பட்டு, நண்பர்களாலும் கேலி செய்யப்பட்டு, பள்ளிச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு அடுத்து என்ன செய்வதென்று
தெரியாமல் தவிக்கும் அவர்களை ஒரு நாளாவது அழைத்து அன்புடன் பேசியதுண்டா?. தவற்றை அன்புடன் உணர்த்தாமல் தண்டிக்க மட்டுமே தெரிந்த
ஆசிரியர்களின்மீது கொண்ட வெஞ்சினத்தால் கழிப்பறைகளில் தாறுமாறாகக் கிறுக்கல்கள்
செய்யும் மாணவர்களின் மனநிலையை அறிந்ததுண்டா? தீர
விசாரிக்காமல் சட்டென்று மனம் நாணும்படி கடிச்சொற்களால் அர்ச்சிக்கும் ஆசிரியர்களைப்
பற்றிய அவர்களின் எண்ணத்தை கேட்டறிந்ததுண்டா? இன்னும்
இன்னும் நீள்கிற கேள்விகளோடு நிற்கிற அவர்களுக்கு நிறைவளிக்கும் வகையில் சொல்ல பதில்கள் என்னிடமில்லை?
தன்னை உணரச் செய்யத்தானே கல்வி?
“உண்மையிலேயே கல்வி என்றால் என்ன? அது
எப்படிப்பட்டதாக இருந்தால் நல்லது?” என்னை அன்னொருநாள்
மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வந்த அந்த இளம் ஆசிரியர்களிடம் வினவினேன். “மீண்டும்
கேள்வியா?” என இருவரும் ஒருவரையொருவர் புன்னகைத்தபடி
பார்த்தனர். நான் தீர்க்கமாகப் பதில் எதிர்பார்ப்பதை உணர்ந்து ஒருவர் “கல்வி அறிவை
வளர்க்க வேண்டும். அது மகிழ்ச்சியைத் தரவேண்டும்” பதைபதைப்பாகக் கூறினார்.
“சந்தேகமாகக் கூறினாலும் உங்கள் பதில் சரிதான்” என்றதும் தமது கட்டை பெருவிரலை
உயர்த்தி நண்பரிடம் காட்டிச் சிரித்தார் சொன்னவர். சில வினாடிகளுக்குப் பிறகு
“சரிதான் ஆனால் மிகச் சரியானதைச் சிந்திப்போமா?” என்றதும்
கவனமாகக் கேட்டனர். “சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார்
செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம்
போன்று வீரம் துணிவைக் கொடுக்காத கல்வியை உண்மையான கல்வி என்று சொல்ல முடியுமா? ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலே நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி”
என் மேசையின் இழுவறையில் வைத்திருந்த விவேகானந்தரின் வாசகம் ஒன்றை அவர்களிடம்
காட்டியபடி அமைதியாக வாசித்துக் காட்டினேன். “நம் வகுப்பில் இருக்கும் பலதரப்பட்ட
மாணவர் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். கல்வியானது
அம்மாணவனின் தனித்துவத்தையும் அடையாளம் காட்டுவதாக அமைய வேண்டும். இதற்கு
பொருத்தமாகக் கற்பனைக் கதை ஒன்று சொல்லட்டுமா?” நான் சொல்வதை
தலையாட்டி ஆமோதித்தனர். “ஒரு காட்டில் ஒன்றாக சேர்ந்து வாழும் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன என அனைத்து விலங்குகள் பரந்துபட்ட
கல்வித் திட்டம் கொண்ட பள்ளிக்கூடம் ஒன்றை நடத்த விரும்பின. அதனால் அந்தப்
பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் பறத்தல், மரமேறுதல், நீந்துதல், தோண்டுதல் என அனைத்தையும் சேர்ப்பதென
முடிவெடுக்கப்பட்டது. பறவைகள் சிறப்பாகப் பறந்தன ஆனால் ஓடுவதில் தோற்றுப் போயின.
ஓடுவதில் வேகமான மான்கள் பறக்க முயன்று கீழே விழுந்து காலொடித்துக் கொண்டன.
மரத்தில் விறுவிறுவென ஏறத் தெரிந்த அணில்கள் நீந்தத் தெரியாமல் தவித்தன. நீந்தத்
தெரிந்த மீன்களோ வேறெந்த பயிற்சியிலும் கலந்து கொள்ள முடியாமல் கலங்கின. காட்டு
நரிகளோ, “ஊளையிடும் போட்டி பாடத்திட்டத்தில் சேர்க்காததால் பள்ளியிலிருந்து வெளியேறுவதாக
வம்படித்தன. ஏதோ கொஞ்சம் அரைகுறையாகாக்
கற்றுத் தேர்ந்த ஓணான் மட்டும் எல்லாப் பாடங்களிலும் சராசரி மதிப்பெண் பெற்றது.”
இப்படி நான் சொல்லி முடித்ததைக் கேட்டு சிரித்த ஆசிரியர்கள் என் கதையின் சாரத்தைப்
புரிந்து கொண்டனர். பின்பு எங்கள் உரையாடல் சிறிதுநேரம் அதையொட்டி வளர்ந்தது. “அப்போதெல்லாம் ஒவ்வொரு
ஆசிரியருக்கும் ஒரு மாணவனுக்குள்ளே என்னனென்ன திறமை மறைந்திருக்குன்னு பளிச்சின்னு
தெரியும். அதுக்கு ஏற்ப அவரவர் திறமைகளை முடுக்கி விடுவாங்க.” தம் அனுபவத்தை
ஒருவர் பகிர மற்றவரோ “அன்று ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். ஒருநாள்
பள்ளிக்கு வரவில்லை என்றாலும் அடுத்த நாளே ஆசிரியர் வீட்டுக்குத் தேடி
வந்துவிடுவார்; அக்கறையோடு நலம் விசாரிப்பார்” என
ஆமோதித்தார். “ம்ம்ம்.. அப்படிப்பட்ட உணர்வும் உறவும் இன்று ஆசிரியர்களிடம் ஏன்
தொலைந்து போனது?” கேள்வியை அவர்கள் முன் வைத்தேன். அவர்கள்
புறப்படுமுன் நான் மீண்டும் தொடக்கத்தில் கேட்ட கேள்வியை முன் வைத்தபோது “மாணவன்
தம் சுயத்தை தாமே அறியச் செய்து மலர வைப்பதே உண்மையான கல்வி” என்று அவர்கள்
புரிந்து சொன்னது என்னுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை உணரச் செய்யத்தானே கல்வி?
நெடுங்காவியம்தானே ஆசிரியர்?
என்னைப் பொறுத்தவரைக்கும் வாசிக்கக் கற்றுத் தரும்
ஆசிரியர்களைவிட வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள உதவும் ஆசிரியர்களேதான் இன்றைய காலத்தின்
தேவையாக இருக்கின்றது?. நாங்கள் மாணாக்கராய் இருந்த காலத்தில் எந்த வசதியும் இல்லாத எங்கள்
ஆசிரியர்கள் பாடவேளையினூடே நாட்டிலும் வெளியிலும் நடக்கும் நிறைய விசயங்களைச்
சுட்டிக்காட்டி சிந்தனையில் தெளிவு ஏற்படுத்துவார்கள். எழுத்தும் ஒலியும் மனத்தில்
ஆழப் பதியும் வகையில் பன்முறை ஒலிக்கச் செய்து எங்கள் இதய நாற்றங்காலில் தமிழ்
எழுத்துக்களை நட்டு வைத்த ஆசிரியர் திரு.சின்னையா அவர்களையும் திரு.சின்னக்கண்ணு
அவர்களையும் நன்றியோடு கைகூப்புகின்றோம். தமிழ் எழுத்துகளை வடிவத்தோடும் கலை
உணர்வோடும் எழுத வேண்டுமென்பதற்காக மெனக்கெடும் ஆசிரியர் திரு.கதிரவனின்
கண்டிப்பும் கோபமும் இப்போது புரிகிறது. தொலைக்காட்சியோ வானொலியோ தோட்ட மக்களிடம்
இல்லாத அந்த அறுபதுகளின் இறுதியில் ஆசிரியர்கள்தான் உலக நடப்புகளை எங்களுக்குப்
பந்தி வைப்பார்கள். பாட நூலைத் தவிர
வெறெதுவும் வாசிக்காத எங்களுக்குப் பொது அறிவை வளர்ப்பதற்காக ஆசிரியர் திரு.கிருஷ்ணன்
அவர்கள் தாம் பழைய நாளிதழ்கள் திரட்டிக் கொண்டு
வந்து வாசிக்க ஊக்குவிப்பார்கள். ஆப்ரகாம் லிங்கன் என்ற சப்பாத்து தைக்கும்
ஏழையின் மகன் எப்படி நெடுந்தூரம் நடந்து சென்று ஒரு பண்ணையில் வேலை செய்து
அதற்குக் கூலியாக நூல் இரவல் பெற்று தெருவிளக்கின் ஒளியில் படித்து அறிவை
வளர்த்துக்கொண்டு பின்பு உயர்ந்து அமெரிக்காவின் பதினாறவது அதிபரானர் என்ற கதையை
ஆசிரியர் திரு. மு. இராஜகோபால் அவர்கள் வேப்பமர நிழலில் வாசிப்பு வகுப்பை
நடத்தும்போது சொன்னது இன்னும் என்னுள்ளே சுருதி மாறாமல் ஒலிக்கின்றது. காற்பந்து, பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில்
எங்களைக் கலந்துகொள்ள செய்வதற்காகத் தம் சொந்த பணத்தில் வண்டி பிடித்து
அழைத்துச் செல்லும் ஆசிரியர் திரு.சின்னப்பன் அவர்களின் ஊக்கம் மறக்கவியலாது. மனிதன் சந்திர மண்டலத்துக்குச் சென்ற சம்பவத்தை
தந்த வாரம் காலை சபையின்போது ஆசிரியர் திரு.மணியம் சிலாகித்து கூறியது இன்றும்
நினைவில் இனிக்கிறது ஒவ்வொரு வகுப்பிலும் வாசிப்பு மூலைகளை உருவாக்கி அப்போதைய அம்புலிமாமா, திருமகள், போன்ற இதழ்களை வைத்து வாசிக்கச் செய்த
ஆசிரியர் திரு. க.இராஜகோபால் அவர்களை மறக்கத்தான் முடியுமா?.
மாலையில் குழு நடவடிக்கையையும் நிறைய அறிவுப் புதிர் போட்டிகளையும் நடத்தும்
ஆசிரியர் திரு.பரசுராமன் அவர்கள் தனித்தொரு அடையாளம். ஆங்கில மொழிப் போட்டிகளையும்
வாசிப்பு நடவடிக்கைகளையும் இவர்களோடு இணைந்து செயற்படுத்தும் ஆசிரியர் திரு.சின்
அவர்களும் இன்றுவரை நினைவில் நிற்கிறார்கள். தமிழ்ப்பள்ளியில் இவர்கள் காட்டிய
அன்பும் அரவணைப்பும்தான் எங்கள் வாழ்க்கை வழிநெடுகிலும் துணை வந்திருப்பதை
நன்றியோடு சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கின்றோம். இத்தனைக்கும் அவர்களில்
ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்து பலகாலம்
காத்துக் கிடந்தவர்களே. பின்னாளில் நான் ஆசிரியராகப் பணியாற்றியபோது அவர்களின்
சம்பளம் வெறும் தொண்ணூற்று ஆறு வெள்ளி என்பதை அறிந்து அதிர்ந்தேன். அந்தச் சொற்ப
பணத்திலும் தேவைப்படும் மாணவர்களுக்கு புத்தகம், பென்சில், உணவு என்று கொடுக்கும் அவர்களின் தியாக மனம் போற்றுதற்குரியது.
இடைநிலைப்பள்ளியிலும் மனத்தை மலரச் செய்த மக்கத்தான ஆசிரியர்கள் அமைந்தது மற்றொரு
கதை. இடைநிலைப் பள்ளிக்குச் சென்ற பின்னரும் தோட்டத்துப் பின்னணியில் வசிக்கும்
சூழல் சரியாக இல்லாததை உணர்ந்த ஆசிரியர் திரு.மணியம் அவர்கள் தாம் புதிதாக கட்டிய
வீட்டுக்குக் குடிபுகாமல் எங்களுக்கு இலவயமாக அங்கு மூன்றாண்டுகள் தங்கிப் படிக்க
நம்பிக்கையோடு அனுமதியும் முழுச் சுதந்திரம் கொடுத்தது எவ்வளவுப் பெரிய தியாகம்?. நான் எடுத்துக்காட்டிய இவை வரலாற்றுச் சான்றுகள்
மட்டுமல்ல ஆசிரியர்கள் ஏற்றிவைத்த ஏணிப்படிகள். என்றுமே நன்றி என்ற ஒற்றைச்
சொல்லில் அடக்க முடியாத நெடுங்காவியம்தானே ஆசிரியர்?
கல்லைச் சிற்பமாக்கும் உளிகள்தானே ஆசிரியர்கள்!!!
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பதைப்போல ‘என் எல்லாப் பெருமைகளும் என் ஆசிரியருக்கே’ என்று
டாக்டர் அப்துல் கலாம் அன்று சொன்னது ஒவ்வொரு ஆசிரியர் தினத்திலும் என் நினைவில்
வந்து போகிறது.குடியரசுத் தலைவர் பணிக்காலம் முடிந்ததும் ஆசிரியர் பணியைத் தேடிப்
போனது மட்டுமல்ல ஒரு மதிப்புமிகு ஆசிரியராகவே இறுதி மூச்சையும் விட்ட பேராசிரியர்
டாக்டர் அப்துல் கலாம். நல்ல குழந்தைகளை உருவாக்குகிற பொறுப்பு
ஒருதலையாக பெற்றோரை சார்ந்தது மட்டுமல்ல இந்த ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உண்டு
என்று ஆழமாக நம்புபவன் நான். அதிலும் நல்ல குடிமகனை உருவாக்கும் மாபெரும்
பொறுப்பில் இந்தக் கல்விக்கூடங்களுக்கும் அதில் பாரதி வார்த்தையில் சொன்னால் ‘விழியெதிர்படும் தெய்வங்களாக’
கருதப்படும் ஆசிரியப் பெருமக்களுக்கு அளப்பரிய பங்குண்டு. அன்பு தொடுதலால் அறிவு
விளக்கால் வழிகாட்டிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஆசிரியப் பெருமக்களுக்கு என்
ஆசிரியர் நாள் வாழ்த்துகள். ஆசிரியரின் அன்பான பார்வையும் தொடுதலும் மாணவரின்
எத்தனையோ மறைந்த பக்கங்களைத் திறக்கும். ஆசிரியரின் அறிவு முதலில் அன்பின்
பாதையைத் திறக்க வேண்டும். அன்பும் அறிவும் இணையும்போதுதான் உலகம் அருள்மயமாகும்.
அன்பும் அறிவும் பிரிந்தால் உலகம் இருள்மயமாகிவிடும். என்றென்றும் உலகம்
அருள்மயமாக அன்பின் பாதையில் அறிவின் தடத்தில் பயணம் செய்ய வேண்டும். இதற்கு
அமெரிக்காவின் பதினாறாம் குடியரசுத் தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் தம் மகனின் பள்ளி
ஆசிரியருக்கு எழுதிய கடிதம்தான் நல்லதொரு எடுத்துக்காட்டு. “என் மகனுக்கு எல்லாவற்றையும்
கற்றுக் கொடுங்கள். வெற்றி தோல்விகளை அவன் புரிந்து ஒள்ள வேண்டும். தேர்வில் தவறான
முறையில் தேர்ச்சியடைவதைவிட தோல்வி அடைவது மேலானது என்பதை அவனுக்குக் கற்று
கொடுங்கள். சாலையில் சாதரணமாகக் கைக்கிற நூறு டாலரைவிட,
உழைத்துப் பெறுகிற ஒரு டாலர் மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
எல்லாவற்றையும்விட, நேர்மைதான் புனிதமானது என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும்” இப்படி
முடிகிறது அவரின் கடிதம். குடியரசுத் தலைவர் என்ற அதிகாரத் தோரணையில்லாமல்
பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி காத்திருக்கும் சராசரி தந்தையின்
எதிர்ப்பார்ப்புதான் இன்றும் பலருக்கு. எனக்குத் தெரிந்த
நல்லாசிரியர் பலர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு, தம்தம்
கல்விப் பணியை முடித்தவர்களில்லை. பல மாணவர்களின் வாழ்க்கைப் பதிவேட்டில்
கையெழுத்திட்டு, பலரின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியவர்கள். ‘வறுமையும் ஏழ்மையும் வாழ்க்கை உயர்வுக்குத் தடையல்ல. கருத்தூன்றி கல்வி
கற்றால் நீயும் சிகரம் தொடலாம்’ என்று மாணவர்களின்
ஆழ்மனத்தில் அழுத்தமாகப் பதித்த எத்தனையோ ஆசிரியப் பெருமக்கள்
இருந்திருக்கிறார்கள்; இன்னும் இருக்கிறார்கள். அவர்களில்
பலர் பணி ஓய்வுப்பெற்று இன்று ஊரும் உலகும் அறியா வண்ணம் இலைமறைகாயாக அமைதியாக
வாழ்ந்துகொண்டிருப்பதை நான் கண்டுவருகின்றேன். இன்னும் நமக்கு மத்தியிலும்
இதுபோன்ற தன்னலமற்ற நல்லாசிரியர்கள் துடிப்போடு பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய இளைய தலைமுறை அவர்களைத் தேடிப்பிடித்து நன்றியை நினைவுகூரத்தான் வேண்டும். தம்மிடம் பயிலும் எல்லா
மாணாக்கரையும் பேதமின்றி சொந்த பிள்ளைகளாக எண்ணி உரிமையோடு குற்றங் குறைகளைச்
சுட்டிக்காட்டி கண்டித்து நல்வழிப்படுத்தி கல்வியிலும் பண்பிலும் உயர்த்தும்
நல்லாசிரியர்களை நாடும் சமூகமும் என்றுமே மதிக்கிறது. ஆசிரியப் பணியை
ஆத்மார்த்தமாக மதிக்கும் ஆசிரியர் என்றுமே மாணாக்கர் மனங்களில் கூடுகட்டிக்கொண்டுதானே
வாழ்கிறார்?. வாழ்க்கைக்கு ஒளிகூட்டும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம்
நிறை வாழ்த்துகள். ஆசிரியர்களே! உங்கள் முன்னே மாணவர்கள் கற்பாறைகளாக இறுகிக்கிடக்கிறார்கள்.
அவர்கள் உடைந்து விடாதபடி அழகாக உங்கள் அறிவெனும் உளியால் மெல்ல செதுக்குங்கள்.
காலத்தால் உங்கள் முன்னே உலகம் வியக்கும் அழகிய மாணவச் சிற்பங்கள் உருவாகட்டும். எந்தக்
கல்லாக இருந்தாலும் உளிகள் மட்டும் சரியாகச் செயல்பட்டால் எதையும் சிற்பமாக்கிவிட
முடியும்தானே?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)