வெள்ளி, 26 ஜூன், 2009

இசைப் புயல் ஓய்ந்தது


மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, பி. ஆகஸ்ட் 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1971இல் 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த த்ரிலர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.
1980களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.
பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.
2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்[1], [2]. இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார்[3]. அதிகாரபூர்வமாக இவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சங்க இலக்கிய வரலாறு

சங்க இலக்கிய வரலாறு

சங்க இலக்கியம் கி.மு 500 லிருந்து கி.மு 100 வரை 4440 ஆண்டுகள்
இருந்தாக கூறப்பாடுகிறது.அவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.அவை
முதற்சங்கம்,இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும்.

முதற் சங்க காலம்

 அக்காலத்தில் 549 புலவர்கள் இருந்தனர்.அகத்தியர் ,சிவபெருமான்,முருக
வேல் போன்றோர் பாடல்களைப் பாடியதாகவும்,பெரும் பரிபாடல்,முதுநாரை
,முது குருகு,அகத்தியம் போன்ற நூல்கள் இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இடைச் சங்க காலம்

 அக்காலத்தில் 59 புலவர்கள் இருந்தனர்.அக்காலத்தில் அகத்தியமும்
தொல்காப்பியமும் அடிப்படை நூலாக இருந்ததாக கருதப்படுகிறது.கபாடபுரம் தான்
நூல்களை ஆய்வு செய்யும் கூடமாக இருந்தது.


கடைச் சங்க காலம்

 கடைச்சங்க காலம் என்பது இன்றைய மதுரை.அதில் 49 புலவர்கள்
இருந்தனர்.அதில் ,நக்கீனார் தலைமைப் புலவராக இருந்தாககவும்
கூறுகிறார்கள்.1090 ஆண்டுகள் உத்திர மதுரை ஆய்வுக்கூடமாக
விளங்கியது.
தமிழின் சிறப்பு -கி.ஆ.பெ

செவ்வாய், 19 மே, 2009

காலமே! கருணையே இல்லையா?


காலமே! உனது நெஞ்சில்
கருணையே இல்லையா?
எங்கள் ஓலமே நாதமாக
உன்வன்செவி வீழும்போலும்!
பாலையில் பயணம்போகும்
பாதையேன் தந்தாய்? நாங்கள்
ஆலைவாய் கரும்பாய்மாறி
அழுவதைக் காண்கின்றாயோ!
உணவில்லை பகிர்ந்துண்ண
உறவில்லை உடமையேதுமில்லை
உயிர்விலை என்னவிலை இனியில்லை
உணர்விலை உலகுக்கோ மனமில்லை
உனக்கோ எதுயெல்லை
ஏதும் தெரியவில்லை
கொடியோர் தினம்கொழுத்தே
உவப்பதும் நியாயந்தானா?
தமிழினத்தைத் துண்டாடி
துயராட வைப்பதும் சரிதானா?
புதுவெள்ளம் பெருக்கு
நாங்கள் மீண்டு துள்ளியெழ
புதுவிளக்கேற்று! புதியதோர்
தமிழ் உலகைக்காண
இல்லையேல் இனியும்
கெஞ்சாமல் எஞ்சிய
உயிரோடு உன்னையும்
வேரறுத்து நானும் வீழ்வேன்!
(‘விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய்ய நினைத்தாய்...’ என பாரதி தமிழரின் நிலைக்கு வருந்தி அழுதது என்னுள் அழியாத பதிவாக உள்ளது. இன்று இலங்கை கொடூர அரக்கனால் நடக்கும் தமிழினப் படுகொலையை எண்ணி என் இதய வலியில் கசிந்த வார்த்தைகள்)

ஞாயிறு, 17 மே, 2009

இதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்

இதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்
இலக்கியங்களுக்கும் எனக்குமுள்ள உறவும் தொடர்பும் தொப்புள்கொடியில் தொடங்கியதல்ல. ஊழ்வினைப் பயனோ எனக்கு வாய்த்த வரமோ நானறியாமலே என்னுள் நிலைப்பெற்ற பேறு. இந்த இன்ப உறவை புனித பந்தத்தை என் உயிராகவே கருதுகிறேன்.
என் இதயத்துள் புதைந்திருந்த இலக்கிய உணர்வினை தொட்டெழுப்பியதில் பெரும் பங்கு என்னோடு வாழ்ந்த மண்ணையும் மனிதர்களையும் சாரும். அந்தத் தோட்டத்து மக்களை வாசிக்கும்போது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகம் விரிந்து செல்வதை என்னால் உணரமுடிந்தது.
‘என்னை எழுத வைத்தது வான்’ என்று பாரதிதாசன் கூறியதுபோல என் கற்பனை முகடுகளில் தடம் பதித்து தமிழ்க்காவியம் பாட வைத்து எண்ண ஏர் கொண்டு எழுத்தாய் காகித வயலை உழ வைத்து கவிப்புறாவின் காந்தர்வச் சிறகுகளை சொல் வானமெல்லாம் சிறகடித்து இதயமெல்லாம் இரண்டறக் கலந்தினிக்கும் என் தாய்மண்ணே உன்னில் மீண்டும் தலைசாய்கிறேன்.
எத்தனையோ பூபாளப் பொழுதுகளில் புல்லாங்குழல் நாதம் தேன்மழையாய் செவிமடல்களில் பாய்ந்தாலும் உன் தாயன்புக்காக மீண்டும் நான் சேயாய் தவிக்கிறேன். என் சிந்தனை பறவை சிறகடிக்கிற தேவவேளை இது.
இளமை பூரிப்போடு நிமிர்ந்து நிற்கும் மூங்கில் காடுகளைப் பார்த்துப் பரவசப்படுகிற பால்மணம் மாறாத பருவ மனத்தோடு என் பழைய பசுமை நாட்களில் உலா வருகின்றேன். என் நினைவுகளின் பின்வீச்சு சலனமற்ற கால வெள்ளத்தின் வெளிச்ச விளிம்பைத் தொட்டுப் பார்க்கிறது
மேனியில் புழுதிப் படிந்தாலும் மனதிலே மாசு படியாத அந்த இறந்த காலங்களை இதயத்தில் இனிக்கும் இளைய காலங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பள்ளி முடிந்து பட்டம் விட்டு மனது மகிழ்ச்சியில் துள்ளித் திரிந்த பருவம் இன்பப் பருவமது.
ரப்பர் பாலை தேடியெடுத்து காகிதங்களில் தென்னங் குச்சிகளை வளைத்து வைத்து பட்டம் செய்வதிலேயே நாட்கள் நகரும். செய்த பட்டத்திற்கு நீண்ட குட்டை வால்களை அலங்கரிப்பது தனியின்பத்தைத் தரும். ஒரு நாள் பட்டம்விடும் உற்சாகத்தில் தன்னையே மறந்த நண்பன் காலில் கண்ணாடித் துண்டை மிதித்துத் துடித்தக் காட்சி இன்றும் என் நினைவுகளில் மின்னலிடுகிறது.
என் புண்ணிய பூமியில் அறிவியல் வெளிச்சம் புகாத அந்த அந்தக நாட்கலில் தொலைக்காட்சி, வானொலி கருவிகள் எல்லாம் காண்பது அரிது. தோட்டத்தில் யாரோ இருவர் வீட்டில்தான் வானொலியைக் கண்டதாக ஞாபகம். நாளடைவில் பல வீடுகளிலும் வானொலி மெல்ல நுழையத் தொடங்கியது.
நான் முதன் முதலாக தொலைக்காட்சியைப் பார்த்தது தோட்டக் கிராணி வீட்டில்தான். தொலைக்காட்சி பார்க்க வேண்டும் எனும் உந்துதலில் கிராணி வீட்டிற்குப் பறப்பட்ட நானும் என் நண்பர்களும் எப்படியெல்லாம் அவரின் பிள்ளைகளின் கட்டளைகளுக்கு மனம் வாடாமல் சேவை செய்தோம் என நினைத்தால் இப்போது வேதனையாக உள்ளது.
அந்த மேல்தட்டு பிள்ளைகளின் ஏவலுக்கிணங்க பூச்செடிகளுக்கு நீரூற்றுவதிலிருந்து உடம்பு பிடிப்பதுவரை செய்ததை நினைத்துப் பார்த்தால் சின்ன மனத்தின் ஆசைகள் எப்படியெல்லாம் எங்களை அடிமைப்படுத்தியுள்ளது என்று தெரிகிறது. பூச்செடிகளுக்கு நீரூற்றினால்தான் கறுப்பு வெள்ளை ‘கெளபாய்’, ’கார்டூன்’ படங்களை ஐந்தடியில் நின்று பார்க்க அனுமதிக்கப்படுவோம் இல்லையேல் விரட்டியடிக்கப்படுவோம்.
தோட்டத்து இலையுதிர் காலங்களை என்னால் கொஞ்சமும் மறக்கவியலாது. கோடைக்கனல் கொப்பளிக்கும் வெப்பப் பொழுதுகளில் மேலாடைகளை களைந்து நிர்வாணமாய் காட்சியளிக்கும் ரப்பர் காடெல்லாம் வெளிச்சம் விழுதுவிட்டிருக்கும்.
உதிர்ந்து விழும் இலை சருகுகளில் நடக்கும்போது ஏற்படும் சரசர ஓசை இன்னும் காதில் ஒலிக்கிறது. இலையுதிர் காலத்தில் புகை மூட்டத்தையோ நெருப்பொளியையோ ரப்பர் காட்டில் கண்ணுற்றால் உடனே தோட்டத்தில் இரும்பு மணி அடிக்கப்படும்.
இதற்காகவே காத்திருக்கும் நானும் என் தோழர்களும் தோட்டத்து ‘டிரக்டரில்’ முண்டியடித்துக் கொண்டு ஏறுவோம். தளிர்களையும் கோணிப் பைகளையும் கொண்டு ஓடியோடி தீப்பரவாமல் அணைப்போம்.எங்கள் ரப்பர் மரங்களை தீயிலிருந்து காப்பாற்றியதற்காக கிராணியார் பத்து அல்லது இருபது காசுகளை எண்ணித் தருவார்.
உன்னதமான இசையின் உயிர் அடங்குகிறபோது மெல்லிழையோடும் நாதத்தைப் போல் என் மன ஆழத்தின் மெளனமான மூலையில் எங்கோ அந்த நினைவு புலம்பிக் கொண்டே இருக்கிறது. தமிழ் வாசத்தோடு இடைநிலைப் பள்ளிக்கு இடம் பெயர்ந்த அந்த இறுக்கமான நாட்கள்; மாலை பள்ளியாதலால் மனதிற்குள் கவலை வீட்டிலுள்ளவர்க்கோ பூமழை.
விடுமுறை நாட்கள்போல் இனிமேல் காலையில் ரப்பர் காட்டுக்குள் காலையில் வசித்துவிட்டு மாலையில் இடைநிலைப் பள்ளியில் வாசிக்க வேண்டியதால் மனம் கனமாகிப் போனது. பால்மரக் காட்டிலே பாடுபட்டு நேரமில்லாமல் பள்ளிக்குப் பசியோடு நானும் என் நண்பர்களும் ஓடிய நாட்கள் பல.
குளித்தப் பின்னரும் உடலில் பட்ட ரப்பர் பால் சரியாக நீங்கப்பெறாமல் பல நாட்கள் பள்ளிச் சென்றிருக்கிறேன். ஒரு நாள் சீன ஆசிரியரொருவர் சுட்டிக் காட்டி கிண்டல் செய்தது என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
அப்போது வறுமை அரக்கனின் வாய்க்குள் நொறுங்கிக்கொண்டிருந்த பொல்லாத வேளையென்றாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கல்வியை நோக்கி என் இதயம் பயணம் போனது இன்னும் என்னுள் பிரமிப்பூட்டுகிறது.
இளைய நாட்களில் தெளிவற்ற நீரோடைகளில் கூழாங்கற்கள் ஏற்படுத்துகிற சலனத்தைப்போல என் எண்ண விரிசல்களில் திரைப்படங்கள் சில உறுத்துதல்களை உண்டாக்கிவிட்டிருந்தன. இன்று திரைப்படங்களைக் காண்பதற்கு ஆர்வமில்லாத நான் அன்று தமிழ்த் திரைகளை நேசித்ததாகவே தெரிகிறது.
எனது பால்ய நினைவுகளிலிருந்து இன்னும் உதிர்ந்து போகாமல் அந்த நாள் இன்றும் என்னுள் பிரகாசிக்கிறது. எனது பக்கத்து தோட்டத்தில் (புக்கிட் சிலாரோங் - கெடா) மாதத்திற்கொரு முறை இரவில் திரைப்படம் காட்டப்படும். இதைக் காண்பதற்கென்றே நானும் நண்பர்களும் மிதி வண்டியில் புறப்படுவோம்.
அங்கு பார்த்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘தங்கப்பதக்கம்’ போன்ற பல திரைப்படங்கள் நினைவில் இன்றும் சிரிக்கிறது. நள்ளிரவு படம் முடிந்து பயத்தோடு வீடு திரும்புகையில் நண்பனின் மிதிவண்டியின் சங்கிலி அறுந்து விழ உதவிக்கு வேறு துணையின்றி விரைந்து தள்ளி புறப்படும்போது கீழேவிழுந்து உண்டான காயத்தின் வடு கதை சொல்கிறது.
என் உயிர்க்காற்று கலந்துலவும் இந்தப் புண்ணிய பூமியில் நான் உலவிய அந்த பிஞ்சு நாட்கள் என்னுள்ளே அழியாத கோலங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சிதைந்தும் சிதையாமலும் நெஞ்சத்தில் நின்றாடும் அந்த இளைய நாட்களை ஏக்கத்தோடு இன்றும் நேசிக்கின்றேன்.

என்ன வளமில்லை தமிழ் மொழியில்

என்ன வளமில்லை தமிழ் மொழியில்
தமிழைப் படிக்கின்றபோது ஏற்படுகின்ற இன்பமிருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்லிட முடியாது. அதிலும் அதன் இலக்கணச் சிறப்பிலும் இலக்கிய வளத்திலும் காலூன்றி கற்க விழைந்திட்டால் நம்மை பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும்.
தமிழின்பக் கடலில் முத்தெடுக்கத் தொடங்கிவிட்டால் அதுவே நம்மை பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் என்னவோ சங்கக்கால பெயர் குறிப்பிடாத புலவனொருவன் ‘ இருந்தமிழே உன்னால் இருந்தேன் – இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்றார் போலும்.
விந்தைமொழிச் செந்தமிழ்ப்போல் உலகில் வேறுமொழி இல்லையென எல்லீசர், ஜி.யு.போப்பையர், வீரமாமுனிவர் போன்ற மேனாட்டு அறிஞர் பகன்றதை எண்ணிப்பாருங்கள். ஆங்கிலத்தில் சிந்தைக்கவர் பெண்களுக்கெனப் பருவமெனும் சொல்லொன்றே ‘உமன்’ என்பதாகும்.
நந்தமிழில்தான் ‘பேதை’,’பெதும்பை’,’மங்கை’,’மடந்தை’,’அரிவை’,’பேரிளம் பெண்’ என்று சொற்கள் பல்கிப் பெருகியுள்ளன. பூக்களின் பருவத்தை தமிழரைவிட அழகுறச் சொன்னவர் யார்? ‘அரும்பு’,’மொட்டு’,’முகை’,’மலர்’,’அலர்’,’வீ’,செம்மல்’ அமுதாக ஏழுநிலை அடுக்கி வைத்தானே.
தருக்களிலே இலையுண்டே அதற்கும் தமிழில் பருவங்கள் உள்ளன. ‘கொழுந்து’ இளமைப் பருவத்தை ‘தளிர்’ என்போம். இலை,’பழுப்பு’,’சருகு’ என்ற சொற்களெல்லாம் தமிழிலுண்டு. ஆல், அரசு,,அத்தி, பலா, மா, வாழைக்கோ அழகு ‘இலைகள்’ என்போம்.
அகத்தி போலிருக்கும் செடி பிறப்பைக் ‘கீரை’ என்போம். பூமியிலே படரும் வகை தாவரத்தை ‘பூண்டு’ என்றும் அருகு, கோரை போன்ற சப்பாத்திச் செடியைத் ‘தாழை’ என்றும் கரும்பு நாணலை ‘தோகை’ என்றும் உடலோங்கி நிற்கின்ற பனைதென்னைக்கோ ‘ஓலை’ என்று பெயரிட்டோம்.
மேற்கண்ட சொற்சிறப்பெல்லாம் பிறமொழிக்குள் வலைபோட்டுத் தேடினாலும் கிடைப்பதில்லை. கடலைப்போல் பரந்திருக்கும் தமிழில்தான் களஞ்சியம்போல் கணக்கிலா சொற்களுண்டு.
நீல வண்ணக் கடல்நீரை இரைத்துக் கொண்டிருந்தபோதும் கடுகளவும் குறையாமல் இருப்பதைப்போல் கடன் கொடுத்தும் பிறமொழிகள் கவர்ந்து சென்றும் கட்டுடலம் குலையாமல் கன்னிமாறா உடலழகைப் பெற்றதெங்கள் தமிழே என்ற உண்மையினை மறுத்திடுவோன் மடையனாவான்.
ஆங்கிலத்தை உலகமொழி என்கிறோமே அதுகூட கடனாளி நம் தமிழுக்கு, மாங்காயை நாம் தந்தோம், ’மெங்கோ’ என்றான். ‘சாண்டல் ஊட்’ என்கிறான் நாம் கொடுத்த சந்தனத்தின் மணம் நுகர்ந்து.
அரிசியை ‘ரைஸ்’, இஞ்சியை ‘ஜிஞ்சர்’, அணைக்கட்டை ‘அணைகட்’ என்று ஆங்கிலமாக்கியவன் வெள்ளையன். தனித்தினிக்கும் தாய்ப்பாலில் சர்க்கரையும் நீரும் தேவையில்லை என்பதுபோல தனித்தியங்கும் வல்லமை தமிழுக்குண்டு.
தமிழ் தன்காலில் தான்நிற்கும் பிறரைத் தாங்கும். அணித்தமிழில் பிறமொழியைக் கலந்துவிட்டால் அழகாக வளருமென்போர் அறிவிலிகள். தனித்திருகும் அரிசியிலே கல்கலந்தால் தின்பவரின் பல்லுடையுமே தவிர சுவைத்திடாது.
ஓரெழுத்து ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்தென எத்தனையோ சொற்கள் அடக்கமாகி பொருள் கொண்டிருக்கும். மூன்று இலக்கத்திற்குமேல் சொற்களிருக்க தமிழ் பிறமொழிகளிடம் கடன் வாங்கத் தேவையில்லை.
நீர் மிதக்கும் கப்பலுக்கு நங்கூரம்போல் மரங்களுக்கு வேரிருந்து காப்பதுபோல் மக்கள் வாழ்வில் வேர்ப்பிடிப்பாய் இருப்பததன் மொழியே. இட்லர் போர்வெறியன் தானெனினும் அவனுங்கூட ஒன்றைச் சொன்னானே ‘ஓரினத்தைச் சீரழிக்க வேண்டுமென்றால் மொழியைச் சிதைத்துவிடு; இனம் தானாக அழிந்தேபோகுமென்றானே’.
விரல்களெல்லாம் பறித்தாலும் உடலிருக்கும்; விலா எலும்பை முறித்தாலும் உயிரிருக்கும் ஆனால் குரல்வளையை நெறித்தபின்னே உயிரா மிஞ்சும் அதுபோல குலமொழியை அழித்துவிட்டால் இனமேயில்லை
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
மொழியென்றால் மனிதனுக்கு உயிரின்மூச்சு; மூச்சுதனை இயக்குகின்ற உயிர்ப்புக்காற்று. மொழிதான் குமுகாயத்தை முறியாமல் காக்கும் அச்சாணி. பேசும் மொழியொன்றே இலக்கியங்கள் பிறப்பதற்கு மூலமாகும்; வம்சப் பூ மலர்வதற்கே அதுவே இரத்தநாளம்.
மொழிப்பற்றும் இனப்பற்றும் இருப்பவனே முழுமனிதன். செழிப்புற்று வளர்ந்துயர்ந்து ஓங்கிநிற்கும் ஜாப்பனியர் பிரான்சு நாட்டார் கொண்டிருக்கும் மொழியுணர்ச்சி நாம் பெற்றாலே விடிவுண்டு. நாகரிக வளர்ச்சிக்கும் நம் இனத்தின் நல்ல மறுமலர்ச்சிக்கும் புதுவெள்ளம்போல் வேகமாக அறிவெழுச்சிப் பெறுவதற்கும் மொழியே வேண்டும்.
தமிழின் வளமறிந்து இருபத்தோராம் நூற்றாண்டின் தேவையறிந்து அறிவியல் தொழில்நுட்ப சொற்களைப் பெருக்கி கணினி போன்ற நவின கருவிகளிலும் தமிழை உலாவரச் செய்வது தமிழனின் கடமையாகும்.
தமிழைக் குறைகூறி வாளாவிருப்பதைவிட்டு இனியாகிலும் தமிழன் தமிழின் நிலையுயர்த்த நினைப்பானா?

சனி, 16 மே, 2009

காதல் செய்வீர் உலகத்தீரே

“காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!”

பாரதியின் காதல் பரிந்துரை, மனிதக் காதலையும் தாண்டி தெய்விகம் சிந்தும் திருவார்த்தை .
‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்று உள்ளமுருகிய உத்தமக் காதலன் பாரதி

‘காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்...’ என்று சூளுரைத்தவனும் அவனே. மதம், இனம், மொழி, தேசம் என்ற எல்லா எல்லைகளயும் கடந்தவன் பாரதி.

காதலெனும் மோகனச் சொல்லில் விவரிக்க முடியாத தேவமயக்கம் என்றும் காந்தமாய் மனித இனத்தை கவர்ந்திழுக்கிறது.

காதல் ஒன்றுதான் இந்தப் பூமியை இன்றும் ஈரப்பசையோடு வைத்துள்ளது. காதல் இல்லையென்றால் பூமி வெறும் சுடுகாடு.

எல்லையில்லாத அன்பு மனிதனிடத்தோ இயற்கையிடத்தோ இறையிடத்தோ இல்லை அங்கெங்கெனாதபடி எவ்விடத்தும் நீக்கமற நிறைந்துள்ள பேராற்றல்தான் காதல்.

சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்

இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.

கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.

வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.

இன்றைய இரவு நாளை விடிந்து விடும்; துன்பங்கள் துயரங்கள் மடிந்து விடும். நடக்கிறவரை நட பாலைவனப் பயணத்திலும் ஒருநாள் பசுஞ்சோலை தென்படும் என்ற நம்பிக்கையோடு நட.

முள்செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?. கல்லிலும் கால் நடக்காது; முள்ளிலும் வதைபடாது ஒரு காலும் முன்னேற்றத்தை முத்தமிட முடியாது தோழா.

உயர்வின் உச்சியிலே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோமேயொழிய அந்த நிலைக்குயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்தத் தொடர் முயற்சிகளையும் எண்ணிப்பார்ப்பதில்லை.

தந்தையின் திருவாக்கைக் காப்பதற்கு பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல துணியாவிட்டால் இன்று இராமன் நாமமில்லை
தோளிலே சிலுவை சுமந்து கல்வாரிக்கு நடக்காவிட்டால் இயேசு பிரானுமில்லை; கபிலவஸ்துவைவிட்டு வெளியேறாவிட்டால் போதிமர புத்தனுமில்லை.

கல்லடி, சொல்லிடி, கொலை மிரட்டல் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும் நம்பிக்கையோடும் சமாளித்தப் பின்னரே நபிகள் இஸ்லாத்தை உலகுக்குப் பரப்பினார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியையே தழுவிய ஆப்ரகாம் லிங்கன் பின்னாளில் அதிபராக எழவில்லையா?

எத்துணை தோல்விகளையும் வெற்றியாக உருமாற்றிய எடிசனை உலகம் கொண்டாடவில்லையா? உடல் பழுதுபட்டாலும் உயர் எழுத்துக்களால் எலன் கெல்லர் பிரகாசிக்கவில்லையா?
இன்றும் நம்மோடு வாழும் சிலர் புயலையும் கடந்து வெள்ளி நிலவாய் பிரகாசிக்க நாம் மட்டும் இயலாமைகளையே வாழும் இலக்கணமாய் வைத்துக்கொண்டு வாழ்வது தகுமா?

நமது சொந்தச் சிறைகளிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். காட்டு யானையைப் பழக்குவதற்காக முதலில் அதன் காலை சங்கிலியால் பிணித்துத் தூணில் கட்டுவார்கள்.

காலப்போக்கில் எதிலும் கட்டப்படாத சிறிய சங்கிலி மட்டுமே அதன் காலில் தொங்க அந்த யானை நினைவால் வாழ்நாள் முழுவதும் சிறைப்பட்டிருக்கும்.
நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மாபெரும் உண்மை. நம்பிக்கையோடு நாள்களை நடத்திக் கொண்டிருப்பவர் வெள்ளி நட்சத்திரமாகிறார். நம்பிக்கை நலிந்து போனவர் தம்முள் நரகத்தை உருவாக்கி தம்மையே பலியிட்டுக் கொள்கிறார்.

எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன; நாளை விடியல் இல்லையென்று யார் கூறினாலும் நாம் ஏற்கப் போவதில்லை.
மனிதர்கள் வெறும் காற்றைச் சுவாசிப்பதால் வாழவில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறார்கள். பிழைக்கவே மாட்டேன் என நினைக்கும் நோயாளிக்கு எத்தகைய மருந்து கொடுத்தும் பயனென்ன?

தூந்திர வெளிகளில் துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்களை வாழவைப்பதே என்றேனும் ஒரு பொழுது சூரியக் கதிர் எட்டிப் பார்க்குமென்ற நம்பிக்கைதான்.
எப்போதும் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும். நிதமும் எதிர்காலம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கையைச் சுமந்து நடைபயில வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையின் மீது சலிப்போ வெறுப்போ இருக்காது.

பாதைகள் பசுமையானவை; பயணங்கள் இனிமையானவை என்று நிதமும் எண்ண வேண்டும். துன்பங்கள் எதிர்பட்டாலும் அதைக் கண்டு துவண்டுவிடாமல் மேலே மேலே முன்னேற வேண்டும்.
துன்பம் தொடாத மனிதன் யாரேனும் உண்டா? துன்பத்தைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு பயணம் செய்தால் இன்பம் தானாக நம்மை வாழ்த்தும்.

சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும். அதுபோல நம்மை வருத்தும் துயரம் யாவும் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது. வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கிலே எதிர்படும் சவால்களை நம்பிக்கையோடு போராடி வெல்ல வேண்டும்.

‘சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்’ என்ற கவிஞர் வைரமுத்து கூற்றுக்கிணங்க முன்னேற்றத்தைத் தரிசிக்க முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்தெறிந்து போராடுகிறவனே மனிதன்.
நமது முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. பசுமையான நிலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைக்காமல் போனதில்லை. நம்பிக்கை நம்மை மனிதர்களாக்கின்ற மகாமந்திரம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. அதை எப்போதும் நெஞ்சிலே வைத்து வளர்த்தாக வேண்டும்.
‘காலம் இருண்டிருந்தாலும் இதயத்தையே தீபமாகப் பிடித்துக்கொண்டு தீர்க்க தரிசனத்தோடு முன்னேறுவோம், உழைப்புச் செங்கோலை உயர்த்திப் பிடிப்போம், நம் காலடிச் சுவடுகளால் எதிர்காலங்கள் பிரகாசிகட்டும்’ என்ற சூரிய காந்தன் வரிகளை துவழும் போதெல்லாம் நினைவு கொள்வோம்.

மாணவர்களே! இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்

மாண்புமிக்க மாணாக்கரே,
நாளையொரு புதிய விடியலுக்கு வித்திடப்போகிற நம்பிக்கை நட்சத்திரங்களே, உங்கள் இதயத்தோடு ஒரு சில வார்த்தைகள். ஒரு தாயின் அன்போடும் தந்தையின் எதிர்பார்ப்போடும் உங்கள் பள்ளி வாழ்க்கை ஏடுகளைப் புரட்டுகின்றேன்.
பள்ளிப் பாடங்களே பெருஞ்சுமையாகிவிட்ட இன்றைய சூழலில் பெற்றோரின் கனவுகளையும் சுமந்து கொண்டு நடைபோடும் உங்களைப் பார்க்கும்போது எனக்கும் வருத்தம் மேலிடுகிறது.
இந்த மனச்சுமையைச் சுகமாக மாற்றும் வல்லமையை நீங்கள் வளர்த்துக் கொள்வது தவிர மீள்வதற்கு வேறுவழியில்லை.
அன்பு பெற்றோர் எப்படியெல்லாம் அரும்பாடுபட்டு உங்களைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று கொஞ்சம் ஆழ்மனத்தில் நிறுத்தி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?.
உங்களின் ஒளிமயமான எதிர்காலமே முக்கியமென தங்கள் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது அல்லும் பகலும் உழைக்கிறார்களே அந்தத் தியாக உள்ளங்களின் நம்பிக்கைகளை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வெயில் மழை பாராமல் அத்தனை துன்பங்களையும் தனதாக ஏற்றுக்கொண்டு உங்களின் நலனே தன் சுகமென்று நம்பிக்கையில் கழிக்கும் அவர்களின் உள்மன ஆவலையாவது அறிந்துள்ளீர்களா?
படிக்கின்ற வயதினிலே கற்பனை தேரோடத்தில் சினிமா நாயகன் நாயகிப்போல் உங்களையே நீங்கள் வரித்துக்கொண்டு காதல் வலையில் வீழ்ந்து காமலீலையில் அழுகிப் போவதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது.
தொன்றுத்தொட்டு நம் முன்னோர் சேர்த்து வைத்த பண்பாட்டுச் செழுமைகளைச் சிந்தையிலே நிறுத்தாமல் பள்ளிச் சந்தையிலே சீரழிக்கும் உங்களைப் போன்ற மாணவர்களின் எண்ணிக்கை சிறிதில்லை.
காடுமேடு கழனி திருத்தி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பெற்றக் குழந்தைகள் புவியோங்கப் பாடுபடும் பெற்ற மனங்களின் மனக்கோட்டைகளைச் சிதறடிக்கும் மாணவர் கூட்டத்திற்கு இப்போதும் குறைவில்லை.
கல்வியென்றாலே கசக்கும் கற்றவர் சொல் என்றாலே முகத்தைத் திருப்பும் முன்னோர் நெறிமறந்து உருமாறி இலக்கின்றி காற்றடித்தால் அலைக்கழிக்கும் இலவம் பஞ்சாய்ப்போன உங்களைப் போன்ற மாணவர் இந்நாளில் ஆன நெடுங்கதைகள் பலவுண்டு.
புனித புத்தகங்களைச் சுமக்கும் பையிலே சினிமா செறிவட்டுகளை சுமந்து சென்று சகாக்களோடு சினிமா ஆய்வரங்கம் செய்யும் மாணக்கரை நிறையவே சந்திக்கின்றேன்.
கணிதம் அறிவியல் என்றாலே புறமுதுகு காட்டி ஓடியதன் விளைவாக இன்று அறிவியல் பிரிவில் பயிலும் இந்திய மாணவர் எண்ணிக்கை அருகிவருவது கண்கூடு.
சீன, மலாய் மாணவர்களைவிட நாம் அறிவில் குறைந்தவர்களென்று தம்மையே தாழ்த்திக்கொண்டு படிப்பில் போட்டியின்றி மெளன நாடகம் நடத்துகின்ற மாணவர் நிறையவே உள்ளனர்.
இந்திய மாணவர்கள் என்றாலே பிரச்சனைகளின் பிரதிநிதிகளென்று இடைநிலைப்பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் முகஞ்சுளிக்கிறார்கள். மிகுதியான கட்டொழுங்குப் பிரச்சனைகளும் குறைவான தேர்ச்சி விகிதமும் அந்த முகச்சுளிப்பிற்கு மூலமாகிறது.
நம் மாணவர்கள் ஏவல் செய்யும் கூலிகளாகவே தகுதியானவர்கள்; கல்வியில் அக்கறையற்றவர்கள்; நல்லொழுக்கத்திலிருந்து நழுவிவிட்டவர்களென தப்பெண்ணம் பரவலாக உலாவருகிறது.
நாடு தழுவிய நிலையில் பல்லின ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது வெளிப்பட்ட குற்றச்சாட்டுகள்தான் மேலே நான் குறிப்பிட்டவை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
ஒரு சிலர் விதிவிலக்காகலாம் ஆனால் பெரும்பாலான நம்மின மாணவர் இன்னும் இருட்டில் உலவுகிறார்கள் என்றெண்ணத் தோன்றுகிறது. அன்பு மாணவர்களே, போனது போகட்டும் இனியாவது இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்.
காலக் கணக்கிலே கணநேரமும் ஓயாமல் கல்வியெனும் கற்கண்டை கருத்தாய் பயின்றிடுங்கள். கல்வி விளக்கு உங்கள் உள்ளங்களில் எரிகின்ற வரைக்கும் நம் சமுதாயம் சிறக்கும்.
வறுமைப் புயலிடையே ஒவ்வொரு கணமும் வேதனையால் வெந்திடும் உங்கள் பெற்றோர் அகம் மகிழவுக் காண இன்றே இலக்கைத் தீர்மானித்துவிடு; சீர்கெட்ட செயல்களின் வேரையழித்து கல்வி வேள்வியில் இதயத்தை நிறுத்திடு.
நன்செய் நிலத்தினில் களையிருந்தால் நீக்குவன் உழவன்; அதுபோல உங்கள் நலத்திலே நாசமென்றால் நீக்குவது என் கடமையன்றோ?.
கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்க் கும்மிருட்டில் திரிகின்ற நம் மாணவ இனத்தைக் கைகொடுத்து நல்வழிக்காட்டும் பெரும்பொறுப்பு சமுதாய முழுமைக்குமுண்டு.

புதன், 8 ஏப்ரல், 2009

சங்கத் தமிழ் சாரம்

குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டுயில் மொத்தம் 216 அடிகள் ஆகும்.வடநாட்டு அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ் இலக்கிய மரபை உணர்த்துவத்ற்காக அவர் இந்தப் பாட்டை இயற்றினார் என்று பாட்டின் அடியின் பழங்காலக் குறிப்பு உள்ளது.இந்த பாட்டைப்பாடியவர்புலவர் கபிலர் ஆவார்.

பட்டினப் பாலை
பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டில் உள்ள மற்றோர் அகப்பட்டு[காதல் துறைபற்றி அமைந்த கறபனைப் பாட்டு] ஆகும்.இந்நூலில் காவிரியாற்றின் வளமும்,காவிரிப்பூம்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளின் அழகும்,மேலும், அந்நகரில் வாழும் அந்தணர்,வணிகர், வேளாளர் மற்றும் பரதவர் போன்றோரின் பண்பு ஆகியவற்றைக் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பாட்டு,சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதாகும்.

நெடுநல்வாடை
இது 188 அடிகள் கொண்ட அகவற்பாவால் அமைந்த நூலாகும்.இதை,கற்பனைக் காதல் பாட்டு என்று கொண்டு ,அகப்பாட்டு என ஏற்கலாம்.அந்த அளவிற்குப் பழைய இலக்கிய மரபு இடந் தருகிறது.இதைப் பாடியவர் புகழ் பெற்ற சங்ககாலப் புலவர் நக்கீரர்.

மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி எனும் நூல்தான் மிகப் பெரிய பாட்டைக் கொண்டுள்ளது.இதில் மொத்தம் 782 அடிகள் ஆகும்.இதில் மதுரையை ஆண்ட மன்னனுக்கு உலக இன்பம்,பொருட்செல்வம், இளமை,யாக்கை என்பவை நிலையில்லாதவை என்னும் காஞ்சித்திணையை விவரித்துக் கூறுகிறது.இதை மாங்குடி மருதனார் என்பவர் பாடியுள்ளார்.

திருமுருகாற்றுப்படை
முருகக் கடவுளின் அருளைப் பெற்றவர் ஒருவர் அந்த அருளை நாடும் மற்றவர்க்கு வழிகாட்டுவதாக நக்கீரர் பாடிய பாட்டு.இது 314 அடிகள் கொண்டுயுள்ளது.இது சங்க காலத்தில் பக்தியுணர்ச்சி நிரம்பிய முழுநூல் ஆகும்.இது ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது .பரிபாடலில் முருகன் திருமால் ஆகியோரைப் பற்றிச் சில பாடல்கள் உள்ளது.பாட்டின் முடிவில் மலையிலிருந்து விழுந்து பாயும் அருவியின் காட்சி நம் உள்ளத்தைக் கவர்கிறது.முருகு என்ற சொல்லுக்கு முருகனாகிய தெய்வம் என்ற பொருளோடு அழகு என்னும் பொருளும் உண்டு என்பதை விளக்குகிறது.ஆயினும் திருமுருகாற்றுப்படையே நீண்ட பக்திப் பாடலாகச் சங்க இலக்கியத்தில் உள்ளது.

பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படை என்பது சோழன் கரிகாலனின் சிறப்பைக் கூறுவது.இதில் 248 அடிகள் உடையது.சோழ நாட்டு மக்கள் இயற்றிவந்த தொழில் ,கலைவளம்,காவிரிச் செழிப்பு ஆகியவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.பொருநர் முதலான கலைஞர்களிடம் சோழன் கொண்ட அன்பும் காவிரியாற்றின் பெருமையும் இப்பாட்டால் விளங்குகின்றன.

சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை 269 அடிகள் உடையது.பாணர் குடும்பத்தின் வறுமை அதில் சொல்லோவியமாக்க
ப்பட்டுள்ளது.இஃது ஓய்மாநாட்டு நல்லியக் கொடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. அதில் பாரி. ஓரி, காரி, ஆய், அதியமான் நள்ளி ஆகியோரின் கொடைச் சிறப்பையும், நிலவளம், யாழின், வருணன், நல்லியக்கோடலின் தோளான்மையும் மற்றும் பாணை ஆதரிக்கும் அவனின் பெருமையும் ஆகியவை இந்நூலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன.


பரிபாடல்
இந்நூலில் 25 முதல் 40 அடி வரை உள்ளது. ஆசிரியப்பா,வஞ்சிப்பா,வெண்பா மற்றம் கலிப்பா என்று நான்கு பாவினங்கள் கலந்த ஒரு வகைபாடல். ஆனால், அதில் 25 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நூலில் திருமாலையும் முருகனையும் பற்றி கூறப்படுகிறது.

புறநானூறு
இந்நூலுக்கு புறம்,புறப்பாட்டு,புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. ஏறக்குறைய 160 புலவர்கள் இந்நூலில் பாடியுள்ளனர். பண்டைத் தமிழ் மக்களுடைய வாழ்வியல்,பழக்க வழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றையும் பண்டைய அரசியல்,வாணிகம்,சமயம், சமுதாய அமைப்பு போர் முறை, விழுமங்கள் ஆகியவற்றையம் புறநானூற்றுப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.

அகநானூறு
இந்நூலை நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 145 புலவர்கள் பாடியுள்ளனர். அகநானூறைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மானார் ஆவார். இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.

கலித்தொகை
பாலைக் கலியைப் பெருங் கடுங்கோவும் குறிஞ்சிக் கலியைக் கபிலரும்,மருதக் கலியை மருதனிள நாகனாரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லுந்துவனாருமாக மொத்தம் 149 பாடல்களை இயற்றியுள்ளனர்.

குறுந்தொகை
ஐந்தினை தழுவிய 400 பாக்கள் ஊள்ளது. இதில் 205 புலவர்கள் இருக்கின்றன.
இந்தக் குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் பூரிக்கோ ஆவர். தொகை நூல்களுள் முதன்முதலில் தொகுக்கப்பட்ட நூலாக குறுந்தொகை அமையலாம் என்று கூறப்படுகிறது.

நற்றினை
400 பாடல் ஐந்தினை தழுவிய பாடல்களாக இருந்தன. 275 புலவர்கள் அதில் பாடியுள்ளன. இதை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவர். ஆனால் நற்றினையின் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை.

பெரும்பாணாற்றுப்படை
அது 500 அடிகள் உடையது .அது பாணர் குடும்பத்தைப் பற்றி விளக்குவதாம்.இளந்திரையன் என்னும் அரசனுடைய ஆட்சிச் சிறப்பைப் பற்றியும் ,அவனுடைய நாட்டின் இயல்புபற்றியும், கடற்கரைப் பட்டினம் பற்றியும் அங்கு இருந்த கலங்கரை விளக்கம்ப்பற்றியும் மலைவளம்பற்றியும் இந்த பட்டால் அறியலாம். பாணனைத் தொண்டைமான் இளந்திரையின் பால் ஆற்றுப்படுத்துவதாக கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் பாடியது.

மலைபடுகடாம்
மலைபடுகடாம் என்பது கூத்தர் குடும்பத்தைப்பற்றிய ஆற்றுப்படை ஆகும்.அது 583 அடிகள் உடையது. இது கூத்தராற்றுப்படை என்றும் கூறப்படும்.ஒரு மலையின் பிறக்கும் பலவகை ஓசைகள் இதில் விளக்கப்படுகின்றன.மலைபடுகடாம் என்ற அந்தப் பெயர் கற்பனை நயம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நூலில் கூத்தருடைய இசைக் கருவிகளும் கலைவாழ்க்கையும் விளக்கப்படுகின்றன.

முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டு 103 அடிகள் உடையது.பத்துப்பாட்டில் உள்ள அகப்பாட்டுகளுள் (காதல் பற்றிய பாட்டுகளுள்)சிறந்தவை முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ஆகும்.அகப்பொருள் ஆகிய காதல் ஒன்றை விளக்குவதே இவற்றின் நோக்கம்.இந்த நூலின் ஆசிரியரின் பெயர் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

குடும்பம் ஒரு கோயில்

உறவுகளின் தொகுப்பாய் உருவெடுத்ததுதான் குடும்பம். தாத்தா-பாட்டி தொடங்கி பேரன்-பேத்தி என ஆலமரமாய் ஆயிரம் விழுது பரப்பிய குடும்பம்தான் இன்று உறவுகளைத் தவிர்த்து ஒற்றைப் பனை மரமாய் ஒதுங்கி நிற்கிறது.

அன்பின் அடித்தளத்தில் எழுந்து நின்ற குடும்பக் கோவில் இன்று பொருள் தேட்டம், இன்ப நாட்டம் என்ற அந்நியக் கலாச்சாரச் சூறைக் காற்றில் ஆட்டங்கண்டு சிறந்த விழுமங்களை இழந்து விழுந்து கிடக்கிறது.

நம் முன்னோர்களின் இல்லற வாழ்வை இனிதாகக் காட்டுவது திருக்குறள். அறம் சார்ந்த வாழ்வும், அன்பு சார்ந்த உறவுந்தான் தமிழர்தம் குடும்பங்களின் அடித்தளம். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்று நினைத்தவன்தான் தமிழன்.

’அன்பின் வழியது உயிர்நிலை’ வாழ்ந்தவன்தான் தமிழன். அகவாழ்வின் பண்பாடும், புறவாழ்வின் நாகரிகமும் பழுதுபடாமல் பார்த்துக் கொண்டதுதான் தமிழினம். ஆனால் இன்று நினைக்கவே நெஞ்சம் நோகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்து, அன்பு சார்ந்து, அறத்தின் வழியில் நடத்துவதுதான் இல்லறம். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் இடம்தான் வீடு. துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மா பேரின்பத்தில் திளைப்பதுதான் வீடுபேறு.

இறந்த பின்பு அடையும் இன்பத்தை இருக்கும்போதே அடைவதற்கான இடமே வீடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்க்மும் உள்ள இடம்தான் உண்மையான வீடு.

குடும்ப வீணையின் ஆதாரசுருதி என்றுமே பெண்தான், அதனால்தான் ‘மனைக்கு விளக்கம் மடவாள்’ என்கிறது நான்மணிக்கடிகை. ‘இல்லதென் இல்லவள் மாண்பானால்?’ என்று வினாத் தொடுக்கிறது வள்ளுவம்.’ இல்லாள் அகத்திருக்க இல்லாதத்தொன்றில்லை’ எனும் உண்மையை அறியாத தமிழ்ர் இல்லை.
ஆண் மட்டும் இருக்கும் இடத்தைக் குடும்பம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. ‘சிறந்த மனையாளை இல்லாதான் இல் அதர் காண்டற்கரியதோர் காடு’ என்கிறது நம் நாலடியார்.

‘இல்லறம் என்பது கற்புடைய மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம்’ என்கிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு ந்ல்லார். ‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்று ஔவை சொன்னதன் நோக்கமே பெண்ணின் பெருமையைப் போற்றுவதுதான்.

அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம், பிறர்நலம், தொண்டு அனைத்தும் கலந்த கலவையே பெண். அவளுடைய தலைமையில் இயங்குவடனால்தான் இல்லறம் நல்லறமாகிறது.

குடும்பம் கோவிலாவதும், குப்பை மேடாவதும் பெண்ணின் கைகளில்தான் இருக்கிறது. பெண்ணின் சிந்தையணு ஒவ்வொன்றிலும் நீக்கமற நிறைந்திருப்பது குடும்ப நலன்தான் என்பதை ‘குடும்ப விளக்கில்’ பாரதிதாசன் அற்புதமாகக் காட்டுவார்.

‘முத்தர் மனமிருக்கும் மோனத்தே வித்தகமாய்க் காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான்’ என்ற பட்டினத்தார் வரிகளுக்கேற்ப எந்நிலையிலும் தலையில் தண்ணீர்க்குடம் சுமந்து வரும் பெண்ணின் சிந்தனை நீர்க்குடத்தில் இருப்பதுபோல பெண்ணின் நெஞ்ச முழுவதும் குடும்ப சிந்தனைதான்

‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்றும் ’ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ பென்ணின ஏற்றத்திற்கே முரசு கொட்டினானே முண்டாசுக் கவி பாரதி. பெண் எனும் ஆக்க சக்தி அன்பும் இனிமையும் நிறைந்த புதுவுலகை உருவாக்கவல்லது என்று நம் முன்னோர்கள் உணர்ந்து போற்றியுள்ளது தமிழர் வாழ்வியலை ஊடுருவி பார்த்தால் தெள்ளிதின் விளங்கும்.

தந்தைக்கு நினைவாஞ்சலி

‘அப்பா’வென்று என்செல்லக் குழந்தைகள் அழைக்கையிலே
அப்பாநின் அன்பான முகந்தான் என்னுள் முகிழ்கிறது
இதயம் இழப்பால் துடிக்கிறது; கண்கள் அன்பால் கசிகிறது
இழந்த உன்னை எண்ணி உயிருமுருகிப் போனது

தந்தையாய் அறிவுத்தந்தாய்; அன்பும் குழைத்தூட்டினாய்
தென்றலாய் ஆரத்தழுவினாய்; தேன்பாகாய் என்றும் இனித்தாய்
ஆவித்துடிக்குது இன்றும் உனைக்காண நினைக்குது நெஞ்சம்
ஆயிரமாண்டு அழுதாலும் உனைக்காண தீராது ஏக்கம்

குடும்பத்தை ஆலமரமாய் நிழல்தந்து காத்த பாசதீபமே
தந்தையாய் தாங்கி பொறுமையால் எனைக் காத்த தெய்வமே
அதிர்ந்தொருசொல் கேட்டதில்லை அன்பாலேயாளும் சுடரே
அருள் விழிகளும் உன்னமைதித் திருமகமும் குளிர்தருவே

சிவனுள் கரைந்தாய் முருகனுள் கலந்தாய் நற்பணிக்கே அர்ப்பணித்தாய்
சீர்மிகுவாழ்வுக்கு இறையருள் தானென்று நாளும் சொன்னாய்
என்றும் மூச்சில் உணர்வில் உயிரில் கலந்தினிக்கும் அருள்விருந்தே
என்றினி வாய்க்குமோ ஒருபொழுது உனைக்காண அன்புருவே

எண்பது தொடுமுன்னே எட்டாதூரம் எனைவிட்டு போனதேனப்பா
எல்லாமிருந்தும் நீயில்லாமல் இருப்பதிங்கு வெறுமைதானப்பா
நாளும் உன்னினைவுகள்தாம் என்னுள் மெழுகாய் உருகுதப்பா
நன்றிசொல்லி உன்திருவடியை என்றும் வணங்கி தொழுவேனப்பா

(கழிந்த 23.3.2009 ஆம் பக்கல் இரவு 10.40க்கு உயிர் நீத்த என் தந்தைக்கு அஞ்சலியாக இந்த கவிதையைச் சமர்ப்பிக்கின்றேன். எனக்கு உடலும் உயிரும் ஈந்த என் தந்தையைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளன..அவரிடம் நான் பெற்றவற்றை நன்றியோடு பிறிதொருகால் பகிர்ந்து கொள்கிறேன்.. என் தந்தையின் இறப்பு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுதாபத்தை நேரிலும் குறுஞ்செய்தியிலும் தொலைநகலிலும் தெரிவித்த அன்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாக்குகின்றேன்.)

திங்கள், 16 மார்ச், 2009

தித்திக்கும் தொல்காப்பியம்

தொல்காப்பியம்

‘தமிழ் முதனூல்’ என்று போற்றப்படும் தொல்காப்பியம் பண்டைத் தமிழ் இலக்கண நூல்களுள் மிகப் பழமையும் முதன்மையையும் பெற்றதாகும்.

ஒல்காப்புகழ் தொல்காப்பியம் இன்று நேற்று தோன்றிய நூலல்ல. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததென்று மொழியியலர் சான்று பகர்கின்றனர். என்ன வியப்பு ஏற்படுகிறதா?. மூவாயிரம் அகவையுடைய தொல்காப்பியமே மிகச் செறிவாக இருப்பதனால் நமது தமிழ் அதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கண இலக்கிய வளமிகுந்த மொழியாய்ச் சிறப்புற்றிருத்தல் வேண்டும் என்பர் நற்றமிழறிஞர்.

தொல்காப்பியரை நினைத்தால் மிகப் பெருமையாக உள்ளது. அவர் தம்மினும் முன்னோரை உயர்மொழிப் புலவர், யாப்பறி புலவர், நுணங்குமொழிப் புலவர், நூனவில் புலவர், சொல்லியற் புலவர், தொன்னெறிப் புலவர் என உவகைப் பொங்க நன்றி பாராட்டுதல் போற்றத்தக்கது.

“இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பலதுறை பற்றி அறிவதற்குத் துணை புரிவதாகும். இதனைத் தமிழ்ப் புலவர் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர். இஃது இலக்கண நூல்தான் என்றாலும், ஏனைய மொழிகளிலுள்ள இலக்கண நூல் போன்றதன்று; அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழியாராய்ச்சியும், இலக்கிய ஆராய்ச்சியும், பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியனவும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது.” டாக்டர் சி.இலக்குவனார்

தொல்காப்பியம் தமிழ் மொழியின் இயல்பை உள்ளவாறு ஆராய்ந்து விளக்குவது; பேச்சு வழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக் கொண்டிலங்குவது. அதற்குச் சான்றாக விளங்குவது கீழ்க்கண்ட சிறப்புப்பயிரம் வரிகள் உணர்த்துகின்றன.

“தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி “

தொல்காப்பியத்தை நாம் மொழி விளக்கவியல் நூலாகவே கொள்ளலாம். தொல்காப்பியம், தொல்காப்பியர் காலத்து மொழி நிலையையும் அதன் முந்திய நிலையையும் ஓரளவு உணர்த்துகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட மொழி நூலின் விதிகளை ஒட்டியே பெரிதும் இலங்குவதால் அதனைக்கொண்டு மொழியின் பொதுவியலையும் ஓரளவு அறியவியலுகிறது.

மூவாயிரம் ஆண்டுகள் பழமையுடையதாயினும், இன்றும் தொல்காப்பியத்தின் ஆட்சி தமிழ்மொழியில் பெரும் பகுதி நிலைத்து நிற்கிறது. தொல்காப்பியர் ஆழ்ந்து சிந்தித்துத் தமிழின் அடிப்படையான இலக்கணக் கூறுகளையெல்லாம், முன்னோர் வழிநின்று, தொகுத்துத் தந்திருப்பதால் தமிழுக்கு நிலைபேறான காப்பு நூலாக விளங்கி வந்திருக்கின்றது.

எத்தனையோ இலக்கிய இலக்கண நூல்கள் இடைப்பட்ட காலத்தில் தோன்றி மறைந்திருந்தாலும் இந்நூல் சிதைவு பெறாமல் வழிவழியாகப் போற்றிக் காக்கப்பட்டு இன்று நம் கைக்கு முழுமையாக கிடைத்திருப்பதே இதற்கு பெரும் சான்றாகும் என்கிறார் தமிழண்ணல்.

தமிழரின் பழைய வாழ்க்கை மரபுகள், நூல்மரபுகள் யாவற்றையும் பிற்பட்ட காலத்தவர்க்குக் கொண்டு சேர்த்த பெருமை இந்நூலுக்கே உண்டு. தொல்காப்பியம், இவ்வகையில் தமிழ் இலக்கியம் இலக்கணம் தமிழர் வாழ்க்கைப் பண்பாடுகள் யாவற்றிலும் கொண்டு செலுத்திய செல்வாக்கு வேறு உலகநூல் எதனினும் காணப்படாத ஒன்றாகும்.

தொல்கப்பியர் காலத்தில் ‘நூல்’ என்றால் . அஃது இலக்கண நூல் ஒன்றையே குறிக்கும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என முப்பெரும் பிரிவுகளை உடையது.

எழுத்து என்ற பிரிவில் தனிநின்ற எழுத்து, சொல்லிடை வரும்போது அவ்வெழுத்தின் நிலை, எழுத்துகளின் உச்சரிப்பு நிலை, சொற்களில் எழுத்துகள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் புணரும்போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் ஆகியன கூறப்படுகின்றன.

சொல் பற்றிய பெரும் பிரிவில் சொற்கள் தொடர்ந்து தொடர்களாக அமையும் முறை, தமிழுக்குச் சிறப்பாக அமையும் அல்வழி வேற்றுமைத் தொடரிலக்கணம், தனிச்சொற்களின் இலக்கணம் ஆகியவை பேசப்படுகின்றன.

பொருள் இலக்கணம் இலக்கிய ஆக்கம் பற்றியது. மக்கள் வாழ்வு எங்ஙனம் இலக்கியமாகப் படைக்கப்படுகிறது என்பதே இதில் விளக்கப்படுகிறது. இது தமிழில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்புடைய பகுதியாகும். இப்போது நன்கு புரிந்திருக்குமே நமது தொல்காப்பியத்தின் சிறப்பு எத்துணை பெரிதென்று.

தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் தமிழில் பலப்பல இலக்கண நூல்கள் தோன்றின. தமிழ் இலக்கண வரலாறு ஒன்று விரிவாக எழுதக்கூடிய வகையில் தமிழில் இலக்கண நூல்கள் காலந்தோறும் தோன்றின.

முதலாவதாக ஐந்திலக்கண நூல்களைக் குறிப்பிடலாம். அவை முறையே வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமிநாதம். இவற்றுள் ஒரு சில வடநூல் மரபிற்கு ஆட்பட்டு இலக்கணங் கூறினாலும் தொல்காப்பிய மரபே நிலைபெறுவதாயிற்று.

யாப்பிலக்கணம் சார்ந்து தோன்றியவற்றில் குறிப்பிடத்தக்கவை யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையும் ஆகும். அவிநயம், காக்கைபாடினியம் என முற்பட்டனவாயும்; யாப்பிலக்கணம், சிதம்பர செய்யுட்கோவை, மாறன் பாப்பானினம், பல்சந்தப் பரிமளம், திருவலங்கல் திரட்டு, விருத்தப்பாவியல் எனப் பிற்காலத்தும் தோன்றிய யாப்பிலக்கண நூல்கள் மிகப்பலவாகும்.

தண்டியலங்காரம், மாறனலங்காரம், அணி இலக்கணம் போலும் தமிழ் அலங்கார நூல்களில் வடமொழிச் செல்வாக்கு மிகுதி எனினும் கூர்ந்து நோக்குவார்க்கு அவற்றிலுள்ள தமிழ் அடிப்படைகளும் தெள்ளிதின் விளங்கும்.

நேமிநாதமும் நன்னூலும் எழுத்து, சொல் பற்றித் தனியே இலக்கணங்கூறுவன. இலக்கணக்கொத்து சொல்லிலக்கணம் பற்றியது. இறையனார் களவியல், நம்பியகப் பொருள், தமிழ்நெறி விளக்கம், களவியற் காரிகை, மாறனகப் பொருள் என்பன அகம் பற்றியும் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை என்பன புறப்பொருள் பற்றியும் தோன்றியனவாகும்.

நன்னூல் தொல்காப்பியத்தின் வழிநூலாகும். இதனைப் பழையனவற்றை ஓரளவு கழித்துப் புதிய வழக்குகளைப் புகுத்தித் தன் காலத்து நிலையை விளக்கும் மொழிவிளக்க நூல் எனலாம். நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் என இரண்டு வகையான பாயிரங்களைக் கொண்டிலங்குகின்றது.

நன்னூல் எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம் என்று இரண்டு அதிகாரங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் ஐந்து இயல்கள் உள்ளன. இதனை இயற்றிய பவணந்தி முனிவர் வடமொழியினையொட்டி பதவியல் என ஓர் இயலைப் புகுத்தியுள்ளார். நன்னூல், பிற்காலத்துக் கருத்துகளை ஏற்றுப் புதுவிதிகள் சொல்லுவதைப் பலவிடங்களில் காணலாம்.

தற்போது மேலைநாட்டார் கண்ட மொழியியலை நம் முன்னோர்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டு சிறந்த முடிவுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட இலக்கண நூல்கள் செவ்விய சான்றுகளாகின்றன.

தொல்காப்பியத்திற்கு ஈடு சொல்லக்கூடிய அளவிற்கு வேறு சிறந்த மொழியியல் விளக்க நூல் இன்றளவும் பிற மொழியிலில்லை என்று துணிந்து கூறலாம். இன்று பல்கிப் பெருகிவரும் மேலைநாட்டாரின் புதுக்கருத்துகளோடு தொல்காப்பியம் பெரிதும் ஒத்து இயங்குகிறது; தமிழின் இயலை நன்கு விளக்குகிறது.


தமிழ்மொழியின் தோற்றம் மிகத் தொன்மையானது. கடற்கோளால் முதற்சங்கம் தோன்றிய குமரிக் கண்டமும், இடைச்சங்கம் தோன்றிய கபாடபுரமும், கடைச்சங்கம் தோன்றிய மதுரையும் அழிந்தன என சான்றுகளைக் கண்டோம்.

என்றுமுள தென்தமிழாய் பல்லோரலும் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது நம் தமிழ்மொழி. தமிழில் பேச்சு வழக்குகள் காலத்திற்கேற்ப மாற்றம் கண்டு வந்தாலும் அடிப்படைத் தமிழ்மொழியானது நிலைபெற்று இருக்கிறது. இனி வரும் எத்துணைக் காலமும் தொல்காப்பியமும் நன்னூலும் தமிழ்மொழிக்கு அடிப்படையாகவே விளங்கும்.

செவ்வாய், 3 மார்ச், 2009

தமிழ்மொழியின் சிறப்புகள்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.

தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
- ஞா.தேவநேயப் பாவாணர்

உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.

அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் திருக்குறள் போல் வேறு மொழிகளில் அறநூலுண்டோ?.

மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன. வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.

‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல்

‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது

தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.

தமிழில் ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளையும் சிறப்பெழுத்துகள் என நற்றமிழ் இலக்கணம் எனும் நூலில் டாக்டர் சொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இவ்வைந்து எழுத்துக்களைத் தவிர்த்து தமிழிலுள்ள பிற எழுத்துகள் வட மொழியிலும் உள்ளவை; இரண்டிற்கும் பொதுவானவை.

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.

பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது

“தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

உலகில் ஒரு மொழியில் இருக்கின்ற இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகியவை குன்றாமல் மொழி பெயர்த்திட இயலும். ஆனால் தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் இந்நான்கும் குன்றாமல் மொழி பெயர்க்க முடியாது. எனவே தமிழ் இலக்கியத்தின் உயிர்ப் பொருளை பிற மொழிகளில் மொழி பெயர்க்க இயலாதது; முடியாதது.

தொன்மை மொழிகளான இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் ஆகியன பேச்சு வழக்கிழந்து ஏட்டளவில் மட்டுமே வாழ்கிறது. சமஸ்கிருதமோ ஏட்டளவிலும் குறைந்த எண்ணிக்கையினர் பேசுகின்ற கோயில் மொழியாக இருக்கின்றது. கடினமான மொழியான சீனம் ஒரே எழுத்துரு கொண்டிருப்பினும் பல்வேறு கிளைமொழிகளாகப் பிரிந்து விட்டது.

தமிழ்மொழி இன்றளவும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் உள்ள கன்னித் தமிழாக அழியாமல் இருக்கின்றது. தமிழின் இனிமையை பாராட்டாத இலக்கியங்களே இல்லை. கம்ப இராமாயணம்,
“ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”

“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்று புகழ்கின்றது.

தமிழ் விடுதூது,
“ இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.


தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதி இவ்வாறு தமிழைப் புகழ்ந்துரைக்கின்றார்.
“ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
பாரதிதாசன்,
“ தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்”

என்று நெஞ்சார நெகிழ்கிறார்.

தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.

திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பினை கொண்டிருக்கும். ஆங்கிலம் வாணிக மொழியென்றும், இலத்தீன் சட்ட மொழியென்றும், கிரேக்கம் இசை மொழியென்றும், பிரெஞ்சு தூது மொழியென்றும், தமிழ் பத்தி மொழியென்றும் உலகோரால் வழங்கப்படுகின்றது. தமிழில்தான் பத்திச் சொற்களும், பத்தி பாடல்கல்ளும் அதிகம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

தமிழ்மொழியின் தொன்மை

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூல்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பி ளாம் எங்கள் தாய்
- மகாகவி பாரதியார்

தமிழ்மொழி மிக நீண்ட நெடிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்தொழிந்தன என மொழியியல் அறிஞர்கள் கருத்துத்துரைத்துள்ளனர்.

அவற்றுள் ஒரு சில மொழிகள் மட்டுமே இன்னும் அழியாமல் நிலைபெற்றுள்ளன. அவ்வாறு நிலைபெற்ற மொழிகளிலும் சில பேச்சு வழக்கு இழந்து வெறும் இலக்கிய மொழியாக மட்டுமே காட்சியளிக்கின்றன.

கால மாற்றத்திற்கேற்ப புத்தம்புது மொழிகளும் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு தோன்றி மாயும் மொழிகளுக்கிடையே, மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளர்ந்து, இன்றளவும் வாழ்ந்து விளங்குவன தமிழ், சீனம் முதலிய சில மொழிகளேயாகும்.

தமிழ் மிகவும் பண்பட்ட மொழி. தனக்கே உரிய வலம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி - மாக்ஸ் முல்லர்

பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது நமது தமிழ் மொழியாகும்.

‘மாடு கிழமானாலும் பால் புளிக்காது’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே!.அப்பழமொழியின் பொருள்போல் தமிழ் எத்துணை பழமை வாய்ந்திடினும் இனிமை குன்றாத மொழியென்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

“தமிழ்” என்னும் சொல் முதன் முதலில் காணப்பெறும் நூல் தொல்காப்பியமாகும். “தமிழென் கிளவி”,”செந்தமிழ் நிலத்து” என வரும் நூற்பாத் தொடர்களில் இவ்வுண்மையைக் காணலாம். பனம்பாரனார்தம் தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் “தமிழ்கூறும் நல்லுலகத்து” எனும் தொடரும் தமிழின் தொன்மையைத் தெளிவாகக் காட்டுவனவாம். “தமிழ் வையைத் தண்ணம் புனல்” என எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடல் தமிழின் இனிமையைக் கூறுகின்றது.

செந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், தெய்வத்தமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ் ...................

மொகஞ்சதரோவில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் கூறுகள் தமிழில் காணப்படுகின்றன. அதனால் இப்போது உலகில் பேசப்படுகின்ர மிகவும் பழமையான மொழி தமிழ் மொழிதான். ஐரோப்பிய மொழிகளில் உள்ள சொற்கள் பலவற்றின் மூலங்கள் தமிழில் காணப்படுகின்றன.
- ஹீராஸ் பாதிரியார்

சுமேரியர் – ரோமானியர் – கிரேக்கர் ஆகிய பண்டைய இனத்தவர்கள் நாகரிகமுடையவர்களாக விளங்குவதற்கு முன்னரே தமிழர்கள் செப்பமிட்ட சீரிய நெறிகளைக் கடைப்பிடித்து பண்புடையோராய் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. சமஸ்கிருதம் – ஹிப்ரு – கிரேக்கம் ஆகிய மொழிகளிலுள்ள பழைய இலக்கியங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று மொழியியலர் இராய்ஸ் டேவிட்ஸ் கூறுகிறார்.

மனித இனம் வாழவும் – வசிக்கவும் ஏற்புடைய நிலமாக விளங்கியது இன்றைய தமிழகத்தின் தென்நிலப்பரப்பு என்பது ஆய்வறிஞர்களின் கருத்தாகும். அந்தத் தென்நிலப்பரப்பிலே பேசப்பட்ட மொழியானது மிகத் தொன்மை வாய்ந்த நமது உயர்தனிச் செம்மொழி தமிழாகும் என்பது பன்னாட்டு மண்ணியல், உயிரியல், அறிவியலாளர் ஆய்வுகளின் வழி கிடைக்கப்பெற்ற ஒருமித்த உண்மைக் கருத்துகள்.

குமரிக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதியே மக்கள் வாழ்வதற்குத் தக்க நிலையை அடைந்தது. அங்குதான் முதன் முதலில் மக்கள் தோன்றி வளர்ந்து நாகரிகத்தை உலகிற்குப் பரப்பினர்.
- அறிஞர் ஹெக்கல்

உலகிலேயே மொழிக்கென முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ச் சங்கமே. தமிழ் மொழியின் வாழ்வுக்கும் உயர்வுக்கும் சிறப்பீட்டித் தந்த பெருமைக்கு உரியவர்கள் சேர,சோழ,பாண்டிய மன்னர்களே. தமிழினம் சிறப்புற்றிருக்கும் வகையில் தமிழைச் சீர்செய்யவும் வளப்படுத்தவும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செயலாற்றியவர்கள் பாண்டிய மன்னர்களே என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நான் முதன் முதலில் தமிழர்களிடத்தே எனது சமயத்தைப் பரப்புவதற்காகவே தமிழைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் படிக்கத் தொடங்கும்போதே, அதன் இனிமையும் எளிமையும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. உலகத்தின் தலைசிறந்த ஒரு மொழியைக் கற்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அன்றிலிருந்து தமிழைக் கற்பதிலும் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதிலுமே எனது வாழ்நாளைச் செலவிட்டேன்.
-போப்பையர்

தமிழின் தொன்மையையும் இனிமையையும் அறிந்து அனுபவித்து மேலும் செழிப்புடையதாக்கவும் செம்மைப்படுத்தவும் கற்றறிந்த மேதைகளை ஒன்றிணைத்து மொழி ஆய்வு செய்யவும் அரும் பெரும் இலக்கியங்களை உருவாக்கவும் முதல் சங்கத்தைத் தோற்றுவித்தவன் காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். காய்சினவழுதி முயற்சியால் விளைந்ததே முதற்சங்கம்.

குமரிக் கண்டத்திலே தோற்றுவிக்கப்பட்ட முதற்சங்கத்தின் காலம் ஏறத்தாழ பதின் மூன்றாயிரம் ஆண்டுகளாகும். நூற்றுக்கணக்கான புலவர்கள் தமிழ்த்தொண்டாற்றிய ஏறக்குறைய 4400 ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்த இந்த தமிழ்ச் சங்கத்தை பாண்டிய மன்னர்கள் கண்ணும் கருத்துமாய் பேணி வளர்த்தனர். ‘கடுங்கோன்’ என்ற மன்னன் காலத்தில் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் முதற்சங்கம் அழிவுற்றது.

இடைச்சங்கம் வெண்டேர்ச்செழியன் என்ற பாண்டிய மன்னனால் கபாடபுரத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் இயங்கி வந்தது. மீண்டும் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் இடைச்சங்கமும் அழிவுற்றது.

சிலகாலங் கழிந்து முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னனின் பெருமுயற்சியால் தமது தலைநகரான மதுரை நகர் எனப்படும் கூடல் மாநகரில் கடைச்சங்கம் தோற்றம் கண்டது. ஏறத்தாழ 1800 ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கிய இக்கடைச் சங்கமும் காலச்சூழ்நிலை காரணத்தால் மறைந்து போனது. மாணவர்களே! மொழிக்கெனச் சங்கம் வைத்து வளர்த்த மூத்த தமிழினத்தின் வரலாறு இப்படித்தான் முடிவுற்றது.

தமிழின் நிலைப்பாட்டிற்கு வழிகோலிய பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தை களப்பிரர், பல்லவர், மராட்டியர், முகமதியர்கள், நாயக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல்லினத்தவர் ஆட்சி செலுத்தினர். அதிகார பீடத்திலிருந்தோரின் பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றின் தாக்குறவால் தமிழ் இலக்கியத்திலும் பற்பல மாறுதல்கள் உருபெற்றன.

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
-பாவேந்தர் பாரதிதாசன்

திங்கள், 23 பிப்ரவரி, 2009

மரண தேவதையே!

மரணமே! உன்னை நான் நேசிக்கின்றேன்
ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கம்
மலரின் முடிவில் காயின் பிறப்பு
காயின் இறப்பில் கனியின் சிரிப்பு
ஒன்று உரமாகி இன்னொன்று உருவாகும்
சருகுகள் உதிராவிட்டால் புதிய தளிர்களுக்குப் பிறப்பேது?
கரையே இல்லாத கடல் எங்கேயாவது நீங்கள் கண்டதுண்டா?
முடிவே இல்லாத நதி பூமியில் நடை பயின்றதுண்டா?
ஒவ்வொரு மூலத்திற்கும் ஒரு முடிவு தவிர்க்க முடியாதது
ஆதலால் மரணமே உன்னை நேசிக்கின்றேன்
மரணம் என் நேசத்திற்குரிய நெருங்கிய நண்பன்
அதன் வலிமை என்றும் என் ஆராதனைக்குரியது
ஞானம் போதிப்பதில் எந்த ஆசானும் மரணத்திற்கு ஈடில்லை
பலர் ‘மனிதர்களாக’ வாழ்வதே மரண தரிசனத்தில்தான்
மரணம் இன மத நிற வேற்றுமையின்றி நம்மை அரவணைக்கும் தலைவன்
‘காலா என் காலருகே வாடா, உனை சிறு புல்லென மதிக்கின்றேன்
உனை என் காலாலே மிதிக்கின்றேன்’ என்று பாரதிபோல் சவால்விடவும் தெரியாது
‘சாவே உனக்கொரு நாள் சாவுவந்து சேராதோ -
தீயே உனக்கொரு நாள் தீமூட்டிப் பாரோமோ’
என்று கவியரசு கண்ணதாசன்போல் புலம்பவும் தெரியாது
மரணம் எனைத் தேடிவரும்போது
அதை ஒரு தேவதையைப் போல் வாழ்த்தி வரவேற்பேன்
தெய்விக அமைதியுடன் அதன் தாய்மடியில் கண் துயில்வேன்
ஏனென்றால் மரணமே வாழ்வைப்போல் உன்னை நேசிக்கின்றேன்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

நெஞ்ச வயலில் நம்பிக்கை விதைப்போம்.

என் அன்பு சோதரனே,
வாழ்வின் வசந்தத்தை எல்லாம் நாடு வளர பிறர் வாழ வாரி இரைத்து நலிந்துவிட்ட தோழனே, உன்னோடு என் உள்ளப்பூர்வமான வார்த்தை பரிமாறல்கள். அன்று உடல் உயிர் பொருளென உன் வாழ்வையே அர்ப்பணித்தாய். இன்று குழிவிழுந்த கண்களோடும் உடைந்த மார்போடும் கூன் விழுந்த முதுகொடும் சரிந்த தோளோடும் உரமற்ற நெஞ்சோடும் நீ உலாவருவதை பார்க்கும்போது என் இதயத்துள் இரத்தம் கசிகிறது.

என் இனிய நண்பனே,
அனைத்தும் உன்னைவிட்டு சென்றுவிட்டாலும் நீ இழக்காதா நம்பிக்கை வைரமாய் ஒளிருகிறது. இந்த உலகத்தில் நீ தொடர்ந்து போராடி வாழ்வதற்கு உனக்குத் தேவைப்படும் மூலதனமே நம்பிக்கைதான். மறந்திடாதே, ‘வெறுங்கை என்பது மூடத்தனம் உன் பத்து விரல்களும் மூலதனம்’. மீண்டுமொரு உதயம் உன்னால் உருவாகட்டும்.

என் அருமைத் தோழனே,
இரவுகள் என்பவை நிரந்தரமானவை அல்ல; ஒவ்வொரு பொழுதும் புலரவே செய்கிறது என்பது இயற்கையின் நியதி. இருளின் திரையைக் கிழித்தெரியும் கதிரவனைப்போல் உன் மன ஆழத்திலே ஊற்றெடுக்கின்ற நம்பிக்கை துளிகள்தாம் உனக்கொரு திருநாளைக் கொண்டுவரப் போகிறது. கோடையின் வெப்பம் குளிரில் மறைவதுபோல் நீ வறுமையின் கோரப்பிடியில் விடுகின்ற ஏக்கப் பெருமூச்செல்லாம் நம்பிக்கை நீரூற்றால்தான் தணியப்போகிறது.

என் நேசத்திற்குரியவனே,
மனிதன் காற்றை சுவாசிப்பதால் வாழ்வதில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறான் என்ற கருத்தை உன் இதயத்தில் ஆழமாக செதுக்கி வைத்துக்கொள். நம்பிக்கை ஆணிவேர்கள் ஆழ வேரூன்றிய உன் மனத்தில் சூறையென துன்பம் சூழ்ந்தடித்தாலும் புயலெனப் படை பாய்ந்தெதிர்த்தாலும் அதையெல்லாம் இடுப்பொடித்து தவிடுபொடியாக்கும் பட்டை வைரமாய் ஒளிவீசுகிறது.

என் நெஞ்சிற்கு நெருக்கமானவனே,
“சுற்றி நில்லாதே போ - பகையே துள்ளி வருகுது வேல்” என்ற பாரதியின் வாய்மையைப்போல் நம்மை ஆயிரம் சோதனை ஆர்த்து வந்தாலும் அவற்றை அழித்து ஆக்கும் சக்தியாக வெற்றிக் கொள்ளச் செய்ய திருமுருகன் நமக்கு அளித்துள்ள வேலாயுதம் நம்பிக்கைதான். இராமன் தம்மை இராவணனிடமிருந்து விடுவித்து வாழ்விப்பான் என்ற அசோகவன சீதையின் நம்பிக்கை; தம் கணவன் கள்வனல்ல என்று பாண்டிய மன்னனிடம் நீதியுரைத்த கற்புக்கரசி கண்ணகியின் வாய்மையான நம்பிக்கை; துச்சாதனன் பலரறிய அவைக்களத்தில் துகிலுரித்தபோது தம்மையே கண்ணனிடம் தந்துவிட்டு சரண்புகுந்த தெளரபதியின் நம்பிக்கை இதிகாசங்களையும் காப்பியங்களையும் மட்டும் வாழவைக்கவில்லை மானுடத்தையும் தாங்கிப் பிடித்து உயர்த்தியிருக்கின்றன.

என் அன்பு சிநேகிதனே,
ஆற்றங்கரையோரம் ஓடுமீனோட உறுமீன் வருமளவு மெளனத்தவமிருக்கிற கொக்கின் நம்பிக்கையை நீ கூர்ந்து கவனித்ததுண்டா? கொக்கை விடவா நீ நம்பிக்கையில் தாழ்ந்தவன்?. சின்னஞ்சிறிய மீன்கள் தன் கால்களினூடே துணிச்சலோடு அனுமதிக்கும் கொக்கு, பெரிதான மீன் வருவதென்னவோ உறுதி என்றுதானே அத்துணை நம்பிக்கையோடு பொறுமை காத்து நிற்கிறது. எனக்குத் தெரியும் நீ கடுமையாய் உழைத்து களைத்திருக்கிறாய். நீண்ட வழிநடந்த களைப்பால் ஓரடி எடுத்து வைக்க தெம்பில்லாமல் மனம் தடுமாடுகிறாய். சற்றே அமர்ந்து நீ நடந்து வந்த பல்லாயிரம் பாதத் தடங்களை மெல்ல திரும்பிப்பார். நீ முதலில் எடுத்து வைத்த நம்பிக்கையே இதுவரை உன்னை சுமந்து வந்திருக்கிறது இனியும் உன்னை வானம் தொடும் தூரம்வரை இட்டுச் செல்லும்.

என் நம்பிக்கைச் சுடரே,
“நம்பிக்கைகளே வானத்தின் நட்சத்திரங்கள்; வாழ்க்கையின் எல்லைக் கற்கள்; சகாரா பாலைவனத்தில் நீ நடைபயின்றாலும் நம்பிக்கைகளே உன் தாகம் தீர்க்கப்போகும் தண்ணீர்ப் பந்தல்கள்; நம்பிக்கை என்றும் மகத்தானது; உலகை என்றும் செழிப்பில் வாழ வைப்பது” என்றோ நான் படித்த இந்தப் பேருண்மை வரிகளுக்குச் சொந்தக்காரனை நேசமுடன் `இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்’ என்ற தமிழ் நம்பிக்கையின் சிகரம் திருவள்ளுவரின் திருப்பாதங்களுக்கு பூத்தூவ காத்து நிற்கிறேன்.

என் இதய நாயகனே,
நம்பிக்கைத் துளிர்கள் காணாத விதைகள் பசுஞ்சோலையிலும் உயிர்ப்பதே இல்லை. நம்பிக்கை வெள்ளம் பாயாத மணற்பரப்பில் பசுமை பூப்பதே இல்லை. `நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் வேறில்லை’ என்று வறட்டு வேதாந்திகள் தம்மீது நம்பிக்கை கொள்ளாமல் நாளும் பொழுதும் தங்கள் இயலாமையை புலம்பிக் கொண்டு திரிவதை எண்ணி வெட்கப்படு தோழா. அவர்கள் மீது அறிவுவாள் வீசுவோம்.

என், உதய நிலவே,
‘நாளை இறக்கப்போவதற்காக இன்றே கண்ணீர் சிந்தும் அறிவிலிகள் கவலைப்படுவதாலும் துயரப்படுவதாலும் உங்கள் உயரத்திற்கு மேலே ஒரு முழம் கூட்ட உங்களுக்குள் எவரால் இயலும்’ என்று இயேசுநாதர் கேட்பதை சிந்தித்துப்பார். ‘காலா எந்தன் காலருகே வாடா - சற்றே உன்னை மிதிக்கின்றேன்’ என்ற பாரதியின் கண்ணொளியில் பிரகாசிக்கும் நம்பிக்கையை உன்னிப்பார். அடிவானம் எட்டாக் கனியாய் இருக்கலாம் அருகே செல்லச் செல்ல தொலைதூரம் போகலாம் ஆனாலும் தொடவேண்டுமென்ற நம்பிக்கைதான் வாழ்வை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.

என் இளஞ் சூரியனே
நம்பிக்கைதான் இந்தப் பூமியை இயக்கிக் கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பு. நம்பிக்கை இருக்கிறவரை பூமி செழிப்பில் சொர்க்கமாய் சிரிக்கும்; நம்பிக்கை அற்றுப் போனால் இருண்ட நரகமாய் விளங்கும். நம்பிக்கை நெஞ்சுரங் கொண்டவனே,` பூட்டிய இருப்புக் கூட்டின் கதவுகள் திறந்தன, சிறுத்தையே வெளியே வா’ என்று பாரதிதாசன் உன்னை அழைப்பது செவிகளில் விழவில்லையா?. இன்னுமென்ன தயக்கம்?. உலகம் உன் பொன்வரவுக்காக காத்து நிற்கிறது. நம்பிக்கையோடு புறப்படு தோழா, காலம் உனக்கொரு காவியம் பாடும்.

(பெரும்பாலான நம்மின இளைஞர்களைப் பார்த்து கவிஞர் வைரமுத்து முப்பது வயதுக்குள்ளே முதுமை வந்து தளர்ந்துவிட்டனாக இருக்கின்றான் என்று கவிதைச் கணையால் உணர்த்தியுள்ளார். அந்தக் கருத்திற்கும் எனது நோக்கிற்கும் உடன்பாடு உண்டு. இன்றைய இளைஞர்களின் தோற்றமும் வாழ்க்கையில் ஒரு தேடுதலும் இலக்குமின்றி உடலையும் உயிரையும் பேணாமல் மனமும் ஆன்மாவும் மலராமல் சிந்தனைக் குறுகி நம்பிக்கை வற்றி நடைப் பிணமாகத் தேங்கியக் குட்டையாய் வாழ்ந்து விதிவந்து சாவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. ஒவ்வொரு இளைஞனையும் மாசக்தியாக உருவாக்கும் தார்மிகப் பொறுப்பும் சமூகக் கடப்பாடும் அனைவருக்குமுண்டு. இராமாயணத்தில் தன்னுடைய ஆற்றல் புரியாததால் கடலைக் கடந்து இலங்கைக்கு செல்ல முடியாமல் வாயு புத்திரனான அனுமான் மனம்வாடி நின்றபோது ‘சாம்பன்’ என்ற வானரம் அனுமனின் ஆற்றலை அறிந்து வீரதீர வார்த்தைகள் வலிமையோடு உச்சரிக்க அனுமன் தன்னையுணர்ந்து மெல்ல பேருருவம் எடுத்து இலங்கைக்குப் பறந்து செல்வதாகக் காட்சியுண்டு. இங்கே எனக்கு அந்தச் ‘சாம்பன்’ போன்று நம்மின இளைஞர்களுக்குப் பெரியோர்கள் நம்பிக்கை நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்தால் விரைவிலேயே நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். ஒரு இளைஞன் சொன்னது `we are not useless but we are used less’. என் பங்குக்கு இன்றைய சோர்ந்த இளைஞனை தட்டிக் கொடுக்கும் நோக்கிலே இந்தக் கட்டுரை எழுதியுள்ளேன்)

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

கவியரசரின் கூர்த்த மதி

இலக்கியக் கூட்டமொன்றில் கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் என் மன்னன் , அவன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் " என்று பேசிக் கொண்டிருந்தாராம் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து
" கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழல் கூட பட்டமரம் தானே ? , கண்ணபிரான் கைகளில் இருந்தும், அது மட்டும் ஏன் தளிர்க்கவில்லை" என்றுகேட்டாராம்.
உடனே கண்ணதாசன்," கண்ணன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் , ஆனால் புல்லாங்குழல் கண்ணனின் கையிலேயே பட்டுக் கொண்டிருக்கிறது ,பெருமாளின் கரம் பட்டால் மீண்டும் பிறவி கிடையாது , நேராக மோட்சம் தான்! அதனால் தான் புல்லாங்குழல் தளிர்க்கவில்லை " என்று கூறினாராம் .

தமிழை சுவாசி....

திருக்குறளைப் பொருளுணர்ந்து படிக்க வேண்டும். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்” என்பார் மாணிக்கவாசகர். நம் குழந்தைகளைத் திருக்குறளை ஒப்பிக்கும்படி பழக்குகிறோம். அது நல்ல பழக்கம். ஆனால் பெரியவர்கள் குறளின் பொருளைப் பலமுறை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல், திரும்பத் திரும்ப நினைத்தல், திரும்பத் திரும்பச் செயல்படுத்த முயலுதல் .. இவையே உருவேற்றுதல் ஆகும். இதைச் ‘ஜெபம்’ என்றும் ‘பாராயணம்’ என்றும் வடமொழியில் கூறுவர். தமிழில் ‘உரு’வேற்றுதல் என்பது மிக அழகான, பொருள் பொதிந்த சொல். ‘உரு’வாகிறது அது; பலமுறை .. நூற்றி எட்டு முறை .. ஆயிரத்து எட்டு முறை சொல்லுங்கள். எழுதுங்கள்.

நீங்கள் நினைப்பது முதலில் மனத்தில் ‘உரு’வாகும் பிறகு வாழ்க்கையில் உருவாகும். அதனால் நினைத்ததை அடைவீர்கள். இவ்வாறு செய்தால் நாம் திருவாசகம், தேவாரம், திருமுறைகள், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ் போன்றவை தொடங்கி பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் வரை நாமே மனப்பாடம் செய்கிற பழக்கம் வரும்.

இது நம்மைப் பார்த்து நம் குழந்தைகளுக்குப் போய்ச் சேரும். உலகிலேயே மிகமிகக் கூடுதலான பக்திப் பாடல்களைக் கொண்டது தமிழ்மொழி ஒன்றேயாகும். அதைப் பாடிப் பரவி உலகெலாம் ஒலிக்கச் செய்வது நம் கடமையாகும்.”

வாரியாரின் பதில்

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்

அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான்." பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?".வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம்கொடுத்திருப்பார்.

ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப்போகிறார்களா?. வாரியார் சுவாமிகளும் அவன் மொழியிலேயே அவனுக்குப்பதில் சொன்னார், " தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள்.

என்நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள். ஆகவே நீ ஒரு நாளும் உன்நெற்றிக்கு வெள்ளை அடிக்காதே!" அதற்குப்பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. வாயடைத்துப் போனான்

வாழ்வின் தேடல்....

வாழ்க்கையைப் பற்றி எத்தனை எத்தனை சிந்தனைகள்! நல்ல வாழ்விற்கு வழிகாட்டும் எண்ணற்ற வழிமுறைகள்! ஆயினும் மானுட வாழ்வென்பது அவலம்மிகுந்ததாகவே ஆனதை என் சொல்ல? வாழ்வென்பது என்ன? மூச்சுவிடுதல் மட்டுமா?

உண்ணுதலையும் உறங்குதலையும் சேர்த்துக் கொண்டால் போதுமா? இரை தேடுதலையும் நாளைக்கெனப் பொருள் குவிப்பதையும் வாழ்வின் கூடுதல் தேவைகளாகக் கொள்ளலாமா?அவை மட்டும் போதுமா இல்லை அன்பு காட்டுதலும் தன்பால் காட்டப்படும் அன்பை ஏற்றுக் கொள்ளுதலும் வாழ்வின் பகுதிகளாகுமா? கவிதையும் இலக்கியமும் இசையும் ஓவியமும் இன்னபிற கலைகளும் வாழ்க்கைக்குத் தேவையா இல்லையா?தேடல் என்பது என்ன? வாழ்வில் தேடலின் பங்களிப்பு என்ன?

தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று.. என்று
புகழின் பெருமையைப் பாடிச்சென்றார்களே.. வாழ்க்கைக்கு அந்தப் புகழால் என்ன பயன்?புகழ் பெற்று வாழ்ந்தவர்கள் எதைக் கொண்டு சென்றார்கள்? இல்லை அவர்கள் சென்ற பிறகு அவர்கள் சேர்த்த புகழால் அவர்களுக்குப் பயன் என்ன?
“பிறப்பிற்கு முன்பு ஏதுமில்லை; இறப்பிற்குப் பின்பு ஏதுமிருக்கப் போவதில்லை;”காட்டுப்âக்களாய்மலர்ந்து மறைந்தால் என்ன தவறு? புகழடைவதற்காகப் பலரது உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சிப் பிறர் வாழ்வில் முள்ளாய் உறுத்துதல் தகுமோ?

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

ஏற்போம் சபதமே


படை திரட்டுவோம் – ஈனப்
பகை விரட்டுவோம் – வீர
நடை முடுக்குவோம் – வெற்றி
நகை முழக்குவோம் ... (படை)
திங்களோடு தென்றலோடு
வந்ததெங்கள் தமிழ்மொழி
எங்கிருந்து வந்தவர்க்கும்
வாழ்வளித்த பெருமொழி
சிங்கமக்கள் பெற்றெடுத்த
சீருலாவும் திருமொழி
பங்கமொன்று வருகுதெனில்
பார்த்திடவோ எம்விழி ... (படை)
ஆண்டதமிழ் மீண்டும் ஆள
வேண்டுமிந்த உலகிலே
மாண்டபுகழ் மீண்டுமிங்கு
மலரவேண்டும் கண்ணிலே
தோன்றின் புகழோடு நீயும்
தோன்ற வேண்டும் தமிழனே
ஈன்ற தாயின் நெஞ்சினிக்க
ஏற்கவேண்டும் சபதமே ... (படை)

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்


(பாரதியின் ‘குயில் பாட்டு’ எனது மனத்தில் ஏற்படுத்திய மற்றொரு தாக்கத்தின் விளைச்சல்தான் இந்த எழுத்துக்கள். ‘நீலக்கடலோரம் ஒரு நீலக்குயிலின் நீலம்பரிராகம்’ எழுதிய ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு இதை எழுதியதாக இந்த எழுத்துச் சுவடியில் குறிப்பிட்டுள்ளேன்.(டிசம்பர் 1987) இயற்கையை முழுமனதோடு எனக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்தவன் பாரதி. இன்றுவரை அவனது கையைப் பிடித்துக் கொண்டே வாழ்க்கையின் விரிந்த எல்லைகளை நான் அளந்து வருகின்றேன். ’காக்கை குருவி எங்கள் சாதி’ என்று அவன் உறவு கொண்டாடியதுபோல் நானும் என் வீட்டுக் கூரைகளிலும் இதயத்திலும் கூடுகட்டி வாழும் சிட்டுக்குருவிகளின் மீது அமரக் காதல் உற்றேன். எந்த தேசத்தில் நான் சிடுக்குருவியைப் பார்த்தாலும் எனக்குள் ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவிபோலே’ என்ற் பாரதியின் அன்புணர்வுப் பொங்கியெழும். விட்டக் குறையோ தொட்டக் குறையோ இன்றுவரை என் வீட்டுக் கூரைகளில் சிட்டுக்குருவிகள் இன்பமாக குடும்பம் நடத்தி வருவதைப் பார்த்து மகிழ்கிறேன். அவற்றின் ஆனந்த கீச்சிடும் ஒலிகள்தாம் என் வைகறை பொழுதின் திருப்பள்ளியெழுச்சி. இளவயதில் நான் எழுதிய கீழேயுள்ள இந்தக் கட்டுரையை என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே மறைந்தும் மறையாமலும் வாழும் உறவுகளும் தோழர்களுமான என் வீட்டுச் சிட்டுக்குருவிகளுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்)

சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்
அதோ புலர்ந்தும் புலராத வைகறைப் பொன்வான விரிப்பிலே இயற்கையே உன்றன் உயிரோவியம். உன்னைக் கண்டதும் என்னிதய வீணையெங்கும் ஓர் இசையருவியின் ஆனந்த ஆலாபனை. முத்தச்சுவைக்காட்டி முத்தமிழை ஊட்டும் திருமுகமே, உன்னை தரிசிக்கும் போதெல்லாம் நான் புனிதம் அடைகின்றேன்; நித்தம் புதுப்பிறவி எய்துகின்றேன்.
எனது உயிரினில் கலந்திட்ட உறவே, உன்னை எண்ணும்போதெல்லாம் என்னுயிர் தொட்டெழுகிறது ஒரு பாட்டு. காலைப் பசும் பயிர்களைக் கொஞ்சி வரும் தென்றலின் தழுவலில் உன் காதலின் பெருஞ்சுகம் கட்டுண்டு கிடக்கிறது. கனிச்சாறே, குளிர் நிலவு முகிலை மெல்ல கொஞ்சி போவதுபோல் கூடல் நீக்கிச் செல்கின்றாய் எனை வாடவிட்டுச் செல்கின்றாய்
மாசில்லா மணியே, உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே, வழி தப்பியப் பறவை போல் உன்னிடம் பிடிபட்டேன். என்னுள்ளத்தை உலுக்கினாய்; உனது எல்லையற்ற கீதவலையில் மயங்க வைத்து என்னுள்ளத்தைப் பிடித்தாய். வான்மழியில் குள்த்தால் உடலும் உயிரும் சிலிர்ப்பதுபோல் எனது யாழின் நரம்புகளை தடவும்போது என் நெஞ்சம் இசைக்கிறது; என்னுயிரும் உன் பாடலோடு ஒன்றி நிற்கிறது.
யாழ்தன் இசையைத் தாங்வதுபோல நான் உன் அன்பைத் தாங்குவதுடன் அதை உனக்கே இறுதியில் ஆருயிரோடு அளிப்பேனாக. கவின் பெருவனப்பே, ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் புதியதோர் பொற்கடிதத்தை என் முன்னே நீட்டுகின்றாய். கார்மேகத்தில் பளிச்சிடும் மின்னல் கீற்றுபோல் பொருள் பொதிந்த பன்னகையைச் சிந்தி என் பாட்டு அலங்காரங்களை மெளனத்தால் கட்டி வைக்கிறாய்.
தாயினும் சாலப்பரிந்து பாலூட்டும் வானமுதே, வாழ்வின் பெருநிதியே, விழிவணக்கம் செய்தபடி வாயில் வீணை விளைவிக்கும் இசைக்கூட்டி நாளும் கவிமழைப் பொழிகின்றேன். உனை நாளும் பொழுதெல்லாம் கூட்டுக் குருவியைப்போல் எனதுள்ளம் கூட்டி மகிழ்ந்திருந்தேன்.
எழுதா பொன் சித்திரமே, எனது ஞாபகப் புறாக்கள் விண்ணில் சிறகடித்துப் பறக்கின்றன. கடலலையின் நுரைச்சுழி அலைகளால் கரைந்துபோன காலத் தடயங்களை இதமாக தடவிப் பார்க்கின்றேன்; அங்கே குறுமணலாய் உன் நினைவுகள் மட்டும் தேங்கிக் கிடக்கின்றன.
அன்றொருநாள் கடலலைகள் கவிதைப் பாடும் மணற்மேட்டில் காதல் இன்பத்தே நாமிருவர் திளைத்தப் பொழுதில் இளந்தென்றல் நம்மிருவர்க்கிடையில் செல்ல துன்புற்று சினந்திருக்க அதை நித்தம் நினைந்துருகி துயில் கொள்ளாமல் மன்றத்து சுடர்விளக்காய்த் துடிக்கின்றேனே. தேன் மறந்து வாழ்கின்ற வண்டு உண்டா? நாளும் உனையெண்ணி நலிகின்ற என் நெஞ்சுள்ளே என்றுறைவாய்?. இங்கு நீயின்றேல் நானில்லை.
நின்னிதழில் அமுதுறிஞ்சிய மங்காத நினைவென்றன் உளத்தெழுந்து வதைக்குமென்னை; புத்தமுதே, வீணை நாதம் இழந்துவிடில் என்ன பயனோ அதுபோல வெந்தழியும் சிந்தையிலே மெழுகாய் உருகுகிறேன். நித்தம் நித்தம் பலவெண்ணி நெஞ்சமெல்லாம் புண்ணாகிப் பித்தாகி மனமுடைந்து பின் தெளிந்து நாளோட அதைத் தொடர்ந்து தானோட காதல் வேள்வித் தீயில் வெந்து கொண்டிருக்கிறேன்.
காசு பணம் இல்லாத ஏழை என்னால் காதலுக்குத் தாஜ்மாகல் போல் கலைக்கோயில் கட்டமுடியாமல் போனாலும் காலத்தாலும் துடைத்தழிக்க முடியாத சொற்கோயில் கட்டுவேன். தோண்டிய மணலிலே ஊறிடும் சுடர்மணி நீரினைப்போல் உன்னை நினைக்கும்போதெல்லாம் கவிதை ஊற்றாய் பிறக்கிறது.
தேனமுதே, பழரசமே என் மனக்குகையிலெல்லாம் மெளனமாய் நீ வரைந்த காதல் உயிரோவியங்கள் அஜுந்தாவைப்போல் அழியாமல் சிரிக்கிறது. நான் மட்டிலுமே இந்த உயிரோவியக் கூடத்திற்குள் சொர்ணச் சிற்பமாய் உள்ளம் நெகிழ்ந்து கொண்டிருக்கின்றேன். என் நெஞ்சப் பொய்கையில் உன் பொன்வரவால் தளையவிழ்த்த தாமரை இன்னும் உன் தடம் பார்த்து விழிபூத்து நிற்கிறது.
உன் அழகிய ஆழக்கருவிழிகளோ ஆழங்காணமுடியாத உயிர்ப்பு மொழியில் தெய்விகத் தன்மை வாய்ந்த காதலின் கீதத்தை சோகமான திகட்டுதலோடு வெளியிடுகிறது. உன் இமைச்சிறகுகளின் கந்தர்வத் துடிப்பு என் நெஞ்சக அடுப்பில் அணைந்து போகாமல் கனன்றெரியும் காதல் பெருநெருப்பிலிருந்து சாம்பலையும் தீப்பொறிகளையும் வீசிறிச் சிதறச் செய்கிறது.
கவிதையின் விளைச்சலே, கற்கண்டு ஊற்றே, இமைப்பொழுதும் மறவா இனிமைத் தவிப்பினிலே நான் இருந்தபோது அன்பின் இன்ப இரகசியத் தாழ்த் திறந்தாய். எண்ணிய போதினிலே எதிர்வந்த இன்பப் பொருளினைப்போல் புண்ணியம் செய்தவர்க்கே கிடைத்திடப் போற்றும் திருவினைப்போல் பிறைநிலவாக நீ வந்தாய். நீ வந்த நாள் முதலாக செந்தமிழ்ப் பூக்காட்டில் வாசத்தேனெடுத்து புத்தம்புது பூங்கவிதைத் தொடுத்து வந்தேன்.
உன்னுடைய பேரமைதி நிரம்பிய நல்லொளியினிலே ஒளியை அள்ளி என்னிதய அறையிலுள்ள இருளைத் தட்டிவிட்டேன். உன் விழிவழி ஒளியைத் தந்துவிட்டு இன்று சிறகொடிந்த பறவையாக என்னை தவிக்கவிட்டுச் சென்றாய். இந்த வைகறைப் பொழுதின் உறவினிலே இதயத்தைப்போல் என் வார்த்தைகள், என் கவிதைகள் யாவும் தடுமாறுகின்றன. உனது கனிந்த பார்வை எனை சில சமயங்களிலாவது நோக்காதா என்ற பேரேக்கம் என்னுள் கடலாய் எழுகிறது.
என் இலட்சியப் பெருங்கனவே, உன் தெய்விக நினைவுகளே என்னை ஒரு கவிஞனாக்கி இயற்கைக் குமிழிகளிலே மூழ்கி மூழ்கி நித்தம் பறந்துவரச் செய்கிறது. இன்பவெறியின் உச்சியிலே நான் இசைக்கருவியாய் ஆவேச முழக்கம் புரிந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மெளனராகம் மீட்டுகின்ற தெய்விகமே, உன் விழிகள் பேசும் மொழியையாவது எனக்குச் சொல்லிக்கொடு. முதல் மழைச் சாரலில் சிலிர்க்கின்ற ரோஜா இதழ்கள் போல் உன் பார்வை இதயவாசல் நுழைந்த நாள் முதலாக இனிய தென்றல் வீசினாலும் பிரிவு புயலாய் என்னை பயமுறுத்துகிறது.
என் காதல் செங்கரும்பே, உன்னை சேரக் குளிர்விக்கின்றாய் சென்றிட்டால் விலகி என்னைத் தீய்கின்ற வித்தையினை எங்கிருந்து பெற்றாய்?. கண்ணிரண்டில் காதலெனும் நோயைத்தந்து கண்ணுறக்கம் பறிக்கின்றாய். கனவிlல் வந்தும் பேதையினை வாட்டுகின்றாய். உன் பிரிவால் என் நெஞ்சே எரிமலையாய் போனது. கொட்டுகின்ற குளிர் அருவியில் குளித்தாலும் காதல் இதயவெப்பம் இன்னும் கனன்றெரிகிறது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழ் நம் தாய்மொழி
உறவினில் சிறந்தது தாய்மை
தாய்மையைப் போன்ற இன்பத்தமிழை
இதயத்திலும் இல்லத்திலும் இனிதாக ஏற்போம்
இந்த உலகத்திலும் இணைந்து வளர்ப்போம்
இன்பத் தமிழை இணைந்து வளர்க்க
நாம் இக்கணமே
தமிழ் மக்களை தமிழின்பால்
அன்போடு விழிப்புறச் செய்ய வேண்டும்
நாளும் தமிழ் பயில்வோரை
என்றும் வாழ்த்திப் போற்ற வேண்டும்
உயர்ந்த தமிழ் கலைகளை
ஊக்க உரமிட்டு வளர்க்க வேண்டும்
இன்பத் தமிழுலகம் நாளை உருவாக
தமிழ் உணர்வுடன் பாடுபட வேண்டும்

சனி, 31 ஜனவரி, 2009

மு.வரதராசனார்.... ஒரு பல்கலைக்கழகம்

மு.வரதராசனார்.... ஒரு பல்கலைக்கழகம்

(மீசை சிறு கோடாய் அரும்பத் தொடங்கிய வயதில் மு.வ. எனும் பெயர் என் செவியில் நுழையக் காரணமாய் இருந்தவர் எங்கள் விக்டோரியாத் தோட்டத்துப் பாட்டாளியான திரு.இராமரெட்டி அவர்கள். பால்மரம் சீவும் பாட்டாளியானாலும் மு.வ.வின் அறிவுப் பட்டொளி வீசும் வாசகர் அவர். அவர் வீடு முழுவதும் மு.வ., அகிலன், சாண்டில்யன், ஜெயகாந்தன் என நூல்கள் கொட்டிக் கிடக்கும். பால்மரன் சீவிவிட்டு இடைப்பட்ட ஓய்வில்கூட அவர் நாவல் வாசிப்பதை நேசிப்பவர். அவரின் பேச்சில் மு.வ. மனம் தெரியும். அவரின் மூலம்தான் மு.வ. எனக்கு அறிமுகமானார். அந்த நல்ல மனிதர் எனக்கு வாழ்நாள் முழுதும் தந்த நல்ல உறவுதான் மு.வ.)

இளவயதில் என் இதயத்தை உழுத எழுத்து வேந்தே, நல்லெண்ணங்களையெல்லாம் பொன் எழுத்தாக்கிய உன்னை அறிஞன் என்றழைக்கவா? இலக்கியங்களை உயிரோவியங்களாக்கிய சமூக கலைஞன் என்றழைக்கவா?.... சமூக நெஞ்சில் இலக்கியத்தேனை அள்ளித் தெளித்த டாக்டர் மு.வ அவர்களே, உன் மங்காத புகழுக்கு என்ன பெயர் வைப்பது?

25.04.1912 இல் உன் பிறந்த தினம், இலக்கிய உலகில் ஒளி பிறந்த தினம்! அன்பிற்கினிய அன்னை அம்மா கண்ணம்மாள் அவர்களும் அற்விற்கினிய தந்தை முனுசாமி அவர்களும் செய்த தவம் நீ. அந்தத் தவத்தின் பயனாய் எங்களுக்குக் கிடைத்த நல்முத்து நீ ஐயா.

வட ஆற்காடு மாவட்ட திருப்பத்தூர் செய்த புண்ணியம் என்பதா? உண்மையைக் கூறினால் தமிழர்கள் முழுமனதோடு செய்த இதய வேள்வி தமிழுலகத்தில் தனியொரு பூவாய் நீ பூத்தது. இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகைப் புரட்டும்போது உன் மனம் தனி மணம்.

உன் இனிய 62 வருடங்களில் தமிழ்த்தாயின் மனதை அலங்கரித்த 85 நூல்கள் இன்றும் தனி மனிதனுக்கும் தமிழ்ச் சமுதாய வாழ்வியலுக்கும் கருத்துக் கருவூலம் இனியென்றும் இனிக்கும் தமிழ்ச்சுரங்கம்

அமுதான புதினம் 13, சிறுகதை 2, சிந்தனைக்கதை 2, நாடகம் 6, கட்டுரை நூல் 11, இலக்கிய ஆய்வு 27, சிறுவர் இலக்கியம் 7, கடித இலக்கியம் 4, பயண இலக்கியம் 1, மொழியியல் 6, வாழ்க்கை வரலாறு 4, மொழிபெயர்ப்பு நூல் 2, என நீ ஆக்கிய எழுத்துகள் அத்தனையிலும் தனி முத்திரை பதித்தாய்.

உன் எழுத்தை சுவாசிக்கும்போதெல்லாம் ஒரு தந்தையாய், தாயாய், தலைவனாய், ஆசிரியனாய், அறிஞனாய், இதயத்துக்கு நெருக்கமான நண்பனாய் நின்று நன்னெறி காட்டுவாய்.
உன் வாழ்வின் தெளிவும், ஊக்கமும், வலிமையும், உறுதியும், ஆழமும், எளிமையும் மானிட உலகம் முழுமையுமே கடைப்பிடிக்க வேண்டிய பெருவாழ்வு. அதை நீ உதாரண புருசனாக வாழ்ந்து காட்டியிருக்கிறாய்.

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேரறிஞர் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழன் நீ. சென்னை பல்கலைக்கழகத்தின் சரித்திரத்திலேயே முதன் முதலில் தமிழில் டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்ப் பெருந்தகை நீ. தமிழோடு, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளைக் கற்ற பன்மொழிப் புலவனும் நீதான்.

நீ - என்றும் வாடா மலர், கயமையை எதிர்த்த செந்தாமரை, அல்லியை வாழ்வித்த மண்குடிசை, உலகப் பேரேட்டின் அகல் விளக்கு, குறள் காட்டிய தமிழ் நெஞ்சம். நான் என்றும் உன்னில் தஞ்சம்.
10.10.1974 - தமிழுலகை கண்ணீரில் மிதக்க விட்டு உன் பொன்னுடல் மறைந்தது.

வாலிபத்தின் துளிர் பருவத்தில் நான் மலரத்துடித்தபோது என்னை வாடவிட்டுச் சென்றாய். நீ மறைந்தபோது ஒரு நண்பனய் இழந்த சோகம் இன்றும் எனக்குள் கசிகிறது. ஆனாலும் நீ என்னைப் போன்றவர்க்காக விட்டுச் சென்ற இலக்கியச் செல்வங்கள் வாழ்க்கை முழுவதற்குமான பாடங்கள்.

என்றும் என் நேசத்திற்குரியவனே, தமிழ் இலக்கிய வரலாற்றில், வாழ்வின் வேர்களை ஆராய்ந்து இலக்கைக் காட்டும் தமிழ்கூறு நல்லுலகில், மு.வ. என்றும் மறக்க முடியா மறைக்கவியலா பொன் வானம்.

பாரதிதாசன் ஒரு நெருப்புத் தென்றல்

பாரதிதாசன் ஒரு நெருப்புத் தென்றல்
புதுவைப் பூஞ்சோலையில் கன்னல் தமிழ்ச்சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவைக் கலந்து ஊன் மணக்க உயிர் மணக்க கூவிக் கொண்டிருந்த தமிழ்க்குயிலுக்கு ஒரு நூற்றாண்டு வசந்தம் உருண்டோடிவிட்டது.

புதுவையிலிருந்து புறப்பட்ட இந்த நெருப்புத் தென்றல் நிலவும் கதிரும் உள்ளவரை தமிழ்மணத்தைச் சுமந்து என்றும் தளிர்நடை பயிலும். இந்தச் சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்றுமே தமிழ் நெஞ்சக் கலயங்களிலே கொஞ்சி சிரிக்கும் இந்த சமத்துவக் கொள்கையின் சாரத்திற்கு ஆயுள் சிரஞ்சீவி என்பதாகும்.

பாளைச் சிரிப்பு; பசு நெய்யின் நறுமணம்; வாளைமீனின் துள்ளல்; வரிப்புலியின் கனல் பார்வை எல்லாமே இணைந்திட்ட கவிதைச் சுரங்கமே பாரதிதாசன்.தன்னுயிரை தமிழ் என்று சொன்னதால் இம்மண்ணுயிர் உள்ளவரை நம்மோடு வாழ்பவன்; நம் மனத்தை என்றும் ஆழ்பவன் பாரதிதாசன்.

கனகசபைப் பிள்ளைக்கும் இலக்குமி அம்மாளுக்கும் அருந்தவப் புதல்வனாய் முளைத்து மகாவித்துவான் பு.அ.பெரியசாமிப் புலவர் போன்ற ஆசான்களின் அறிவொளியில் கிளைவிட்டு பாரதியெனும் ஆலமர நிழலில் கனிவிட்ட இந்தக் கவிக்குயிலின் கவிதைக் குஞ்சுகள் மனித நேய உரத்தை உறிஞ்சி மண்ணிலெங்கும் மணப்பவை.

சாதி சமயச் சழக்குகளென்றும் சாக்கடைச் சுழிப்பில் சிக்கிச் சீரழிகிற, சிதறிக் கிடக்கிற சமுதாய மக்களை வலிமைமிகு கவிதைக் கரங்களால் தூக்க எழுந்த கவிஞன். மடமை, அறியாமை மண்டிய அழுக்கு மூட்டை சலக்குகளை மண்ணின் மைந்தர்களின் குட்டை மனங்களைக் கங்கையாய்ப் பொங்கிய கவிதை நீரால் வெளுக்க வந்த அற்புதக் கவிஞன்.

தமிழ்ச் சமுதாயம் தலைநிமிரப் பாடிய தன்னிகரற்ற புதுமைக் கவிஞன்; புரட்சிக் கவிஞன். நிமிர்ந்த நடை; நேர் கொண்ட பார்வை என பாரதி காட்டிய இலக்கணத்தின் இலக்கிய வடிவமாகத் திகழ்ந்தவன்; புதியதோர் உலகம் தேடியவன்; பகுத்தறிவுக் கருத்துகளைப் பாடினான்; மூட நம்பிக்கைகளைச் சாடினான்.

இலக்கியப் புலமைக் கூடியவன்; முத்தமிழ் இயக்கம் நாடியவன்; வாடாத புகழ்மாலை சூடியவன் பாரதிதாசன். எடுப்பான தோற்றம்; துடிப்பான மீசை; வீர விழிகள்; ஆண்மைக்குரிய சிம்மக்குரல் இவையனைத்தையும் கொண்டு செந்தமிழ் நெஞ்சில் சீருலா வந்தவன்.

முதன் முதலாக அந்தக் கவிச் சிங்கத்தைக் காணுகையில் ஒருவகையான அச்ச உணர்வு கூடச் சிலருக்கு தோன்றக்கூடும் ஆனால் கவிஞரிடம் பழகத் தொடங்கிவிட்டால் வீர விழிகளில் ஈரம் ததும்பும், பாசமும் பால் போன்ற வெண்மையான குழந்தை உள்ளமும் அனைவரையும் காந்தமாய் ஈர்த்துவிடும்.

பாரதிதாசனது நறுக்குத் தெறித்தாற் போன்ற சிம்மக்குரலிலே நகைச்சுவையும் மானுடமும் இழையோடிக் கொண்டிருக்கும். இளைய வயதிலே கவிதைக் காதலியைக் கைப்பிடித்து, ‘கிறுக்கன்’,`கிண்டல்காரன்’ என்ற புனைப்பெயர்களில் எழுத்தோவியங்களைப் படைத்த இந்தத் தமிழ்க்குயில் பாரடி எனும் சூரியனோடு இரண்டறக் கலந்தபோதுதான் பாரதிதாசனாய் தமிழ்வானில் சுடர்விட்டது.

‘சுப்பிரமணியர் துதி அமுது’ என்ற நயம் ததும்பும் இசைப்பாடலின் மூலம் ‘சிந்துக்குத் தந்தை’ எனப் பெயர் பெற்று ‘புரட்சிக் கவி’ என்ற காவியத்தை செந்தமிழால் தீஞ்சுவை மிளிர, புரட்சிப் பூக்கள் பாக்களாய் மலர படைத்ததால் புரட்சிக் கவிஞராய் என்றும் உலாவரலானாய்.

பதினெட்டாம் அகவையின்போது தமிழ்ப்புலமையில் முதல் மாணவனாகத் தேர்வுப் பெற்ற பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞன். தமிழ் இலக்கிய அடர்த்திக்கு மட்டுமன்றி மானுடத்திற்கும் சேர்த்து தனது பா வளத்தால் உரமிட்டு சீரிய சிந்தனை உளியால் செதுக்க முற்பட்ட சமுதாயச் சிற்பிதான் நம் பாரதிதாசன்.

சீர்திருத்த புயலாய் மலர்ந்து, புரட்சிப் பொறிகளை புதுமைச் சிந்தனைகளைத் திரட்டுப் பாலொத்த தேன்தமிழ்ச் சொற்களோடு வாரி வீசிய வண்ணமிகுந்த அணையாத கவிதைக்கனல் பாவேந்தர். சாதிகள், சாத்திரச் சடங்குகளை, மூடப் பழக்கங்களை முற்றும் வெறுத்து குருதிக் கொப்பளிக்கும் கோபத்துடன் பாடினாலும் மானுட நேசம் மறக்காதவன்.

உழைப்பாளியின் சிவந்த கரங்களில் அழகைக் கண்டு வாழ்த்தியவன்; மனித விடுதலை மலர விரும்பியவன்; கைப்பெண்டிருக்காக குரல் கொடுத்தவன்; பெண்ணை என்றும் பெருமை செய்தவன்; மண்ணைப்போல் மிதிப்படும் மானிடரைப் பார்த்து ‘உன்னை விற்காதே’ என்று எச்சரித்தவன்; தமிழ்ப் பகைவர் கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்ற ஆண்மையாளன் பாரதிதாசன்.

விரைந்தோடும் வெள்ளமும் விசீயடிக்கும் புயற்காற்றும் இவன் நடை இயல்புகள்; வெள்ளத்தைத் தாக்கும் படை இல்லை; வீசும் புயற்காற்றை விலக்கும் தடை இல்லை. அதுபோல இவனது சொற்களில் எந்தச் சிக்கலான பொருளும் சுள்ளிகளைப்போல் நொறுங்கிப் போகும். சாதி சமய பெயரால் நிகழும் அடிமைத் தலையறுக்க போர்ப்பரணி பாடியது இவனது கவிதை. அந்த மிடுக்கு இவன் நடையின் அரசவைப் பெருமிதம்.

கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் இழைக்கப்படும் கொடுமைகளைச் சாடிய பாரதிதாசன் ஒரு தனி மனிதனின் பெயரல்ல; தமிழ் இன்பம் பொழிகின்ற கவிதைத் தொகுப்பின் பெயர். பாற்கடலாய் பரந்து விரிந்து தமிழ் மண்ணின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திட்ட இவனது உவமையழகு, உணர்ச்சித் துடிப்பு, புதுமை நோக்கு, புரட்சி வெடிப்பு அனைத்துமே அலைகளாய்ப் பொங்கியெழுந்து சீறிப் பாய்ந்தன; சிலம்பமும் ஆடின.

அந்தக் கறுப்புக் குயிலின் உள்ளத்திலிருந்து பீறிட்ட நெருப்புக் குரலோ இழிதகைமையை, ஈனச் செயல்களை மிதித்துத் துவட்டக் கூடியது. இந்தப் புதுவைக் குயில் தமிழின் இனிமையைப் பாடியது; நிலவின் அழகைப் பாடியது; ஆண்டாண்டுக் காலமாய் வாழ்ந்த அடிமை வாழ்வைச் சாடியது; ஏழ்மையை அழித்து பொதுவுடைமை அமைக்க குரல் கொடுத்தது.

வேரோடிப் பழகிவிட்ட வீண்பழமை மாய்ப்பதற்கே நேர்மைத் திறத்தோடும் உள்ளத் துணிவோடும் போராடச் சொன்னவன் புதுவைத் தமிழ்வேந்தன். வண்டமிழர் மாண்புரைத்தே கையிருப்பைக் காட்ட கடலாய் எழுகவென்றான்; சாதிமதக் கேடுகளைச் சாத்திரத்தின் பொய்மைகளைத் தீதென்றான்; தாழ்ந்தோர் தலைநிமிரத் தன்மானச் சங்கொலித்தான்.

பாம்பாகச் சீறும் பகைப் புலத்தோர் பல்லுடைத்து மேம்பாடு கண்டுயர மேன்மை நிலையுரைத்தான். கல்லார் நினைவிலும் கற்றோர் நாவினிலும் கல்லும் கரைந்துருகச் செய்யும் கவின் தமிழே பங்கம் உனக்கென்றால் பச்சைரத்தம் ஈவோமென்று அங்கம் கனன்றான் அரிமா முழக்கமிட்டான். தீங்கனியாம் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டைப் பாங்குறவே பேணப் பகுத்தறிவுப் பண்ணிசைத்தான்.

இனிமைத் தமிழிலேயே தன்னை சதையும் ரத்தமும் உணர்வுமாய் கரைத்துக் கொண்ட பாரதிதாசனை நினைக்க நினைக்க என்றும் என் நெஞ்சம் நெகிழ்ந்துப் போகும். அவனது தமிழ்க் காதலுக்கு நான் என்றும் அடிமை.

‘முழுமை நிலா, அழகு நிலா முளைத்தது விண்மேலே - அது பழமையிலே புதுநினைவு பாய்ந்தெழுந்தாற்போல’ என்று பாடிய இந்த நெருப்புத் தென்றலின் குரலை உணர்ந்து இனியாவது தமிழறிஞர்கள் பழம்பாடல்களுக்கு விளக்கம் கொடுப்பதிலே காலங் கழிக்காமல் மாறிவரும் காலச்சுழலுக்கேற்ப புத்தம் புதிய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் இதயத்தில் இடங்கொடுக்க வேண்டுகிறேன்.

ஓர் ஊமைக்குயிலின் மெளனப் புலம்பல்கள்

ஓர் ஊமைக்குயிலின் மெளனப் புலம்பல்கள்

(பாரதியின் கைகளைப் பற்றி என் வாலிப வயதில் தளிர்நடை பயின்றபோது அவன் எனக்கு சிலரை அறிமுகப் படுத்தி வைத்தான். அவர்களில் முக்கியமானவர் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர். தாகூரின் கவிதைகளைத் தேடித் தேடி படித்திருக்கின்றேன். தாகூரின் ‘கீதாஞ்சலி’யின் இறைநேசம் என்னிலும் உருகி வழிந்து மனத்தை நிறைத்தது. அவரின் `stray birds’ படித்தபோது எனக்குள்ளும் கவிவாசம் பரவியது. அவரைப்போல நான் குயிலைக் கவியெழுத தொடங்கி அது உரைநடையாக வழிந்தோடியது. இந்த எழுத்துக்கள் எனது இளமை காலத்து பூக்கோலங்கள். 1989 ஜூலையில் எழுதப்பட்ட இந்த எழுத்துக்களை எனது பரணிலிருந்து மீட்டெடுத்து பதிவு செய்துள்ளேன் கிஞ்சிற்றும் மாற்றமின்றி. நான் தாகூரில் கரைந்தது உங்களுக்கும் புரியும்.)

கவிக்குயிலே,


என் கண்மணியே, கண்வழியே குடியேறி கனவைக் கொஞ்சும் தேவதையே, கண்ணில் கலங்கி கன்னத்தில் கால்வாய் வழிந்தோடும் கண்ணீரில் எனை மிதக்கவிட்டு தனியே வாடவிடுச் சென்ற உயிர்யாழே, உன் பாதச்சுவடுகளின் முகவரிகளை புதையலைப்போல் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
ஆருயிரே, என் நெஞ்சப் புண்வெளியை ஆற்றும் அருமருந்தே உன் உயிர்மூச்சைச் சுமந்து நின்ற காற்றிலும் உன்றன் கானத்தைக் கவிதைப்போல் யாசித்துக்கொண்டிருக்கின்றேன். இதய நாட்டை ஆள்பவளே, பாட்டுப் புனல்வெளியில் குதிக்கின்ற பேரழகே, காலக் காற்றில் உனைத் தேடித் தேடி சதிராடிக் கொண்டிருக்கின்றேன்.

அன்பே, வசந்தத்தைத் தரிசிக்க மேலாடையை இழந்துவிட்டு நிர்வாணமாய் ஆனால் ஞானச்செறுக்கோடு நிற்கும் எனது போதிமரத்தடியில் உனக்காக மீண்டும் என் மெளனத்தவம் தொடங்கிவிட்டது.
என்றன் தாய்மடியில் கண்ட கனவுகளை விட உன்றன் பூமடியில் தவழ்ந்து தேக்கி வைத்த காவியங்கள் யாவும் ஏட்டில் எழுத முடியா உயிரோவியங்கள். என்றன் கவிக்குயிலே, உன்றன் வருகையை ஆராதிக்கக் காத்திருக்கின்றேன்.

வானமுதே, வளர்பிறையே உன்றன் பிரிவை நினைத் நினைத்து நெஞ்சம் நெக்குருகிப் போனது. கருங்குயிலே, கண்மணியே என் இமைக்கதவை மூடிக் கண்ணை சாத்தும்போதெல்லாம் என்னுள்ளே எட்டிப்பார்க்கின்றாய் நிலவாய்.

காதலாம் தூண்டிலில், காலமாம் வலையில் தவித்திடும் மான் நான். காதலின் தீபம் நீ கையேந்திச் சென்றாய், காரிருள் தனிலென்னைத் தனிவிட்டுச் சென்றாய். கண்ணே கூடல் நீக்கி எனை வாடவிட்டுச் சென்றாய்.

நீ சென்ற திசை நோக்கித் தொழுதபடியே தவமிருக்கும் இந்த ஏழையின் நெஞ்சம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி புண்ணாகிப் போகும்வரை உன் கல்மனம் உருகாதா?அன்றொரு நாள் தனியனாய் மெளனக்கடலில் பொன்மாலைப் பொழுதிலே, நான் ஆழ்ந்திருந்த வேளை நீதானே துணைவந்தாய்.

உனக்காகத் காத்திருந்த ஒவ்வொரு துளி வினாடியும் காதலுணர்வுப் பொங்கிவர கவிதை அரும்பிவர நான் ஒரு கவிஞனாக, இயற்கையின் விந்தை குமிழிகளில் மூழ்கி மூழ்கி என்னை நானே மறந்தே போயிருக்கின்றேன்.

எத்தனையோ சுந்தரப் பொழுதுகளில் உன் தெய்வ தரிசனத்துக்காக தவங்கிடந்தேன். அந்த நினைவுகள் யாவும் என் இதயத்தில் அகண்ட இசைக்கடலைத் தாண்டி கவிக்கனலில் ஆழ்ந்திருக்கின்றது. முத்தே, நெஞ்சிலும் நினைவிலும் நீயே எப்பொதும் உள்ளாய்.

எனது உயிர்த் தொகுதி முழுவதும் உன் உருவமே நிறைந்துள்ளது. இன்றோ தொடங்கிற்று; தனிமை மிகுந்தது; இனிமையை எண்ணி ஏங்கியதுள்ளம்.என் நெஞ்ச உணர்வினைத் தூண்டி ஆண்டிட கொஞ்சங் கொஞ்சமாய் உணர்வே எனைக் கொன்றது.

எனது வார்த்தைகள் எனது கவிதைகள் இந்தப் பொன்மாலைப் பொழுதிலே தடுமாறுகிறது. ஓ... காதலே இசையின் இனிமையைப் பருகி ஓங்கி வளரும் காதலே தந்துவிட்டாய் இனிமை இனி பொறுக்க மாட்டேன் தனிமை.

நித்தம் ஏக்கச் சுழிப்புகளில் கண் வளர்க்கும் மாயக்கனவுகளின் சந்திப்பில் புண்பட்டுக் காதல் புயலில் சிறகொடிந்த பறவையாய் முகாரி பாடுகின்றேன். அருங்கனியே, வழி தப்பிய பறவையைப்போல் உன்னிடம் பிடிபட்டேன், என் உள்ளத்தைக் குலுக்கினாய், உனது எல்லையற்ற கீதவலையில் என்னுள்ளத்தைப் பிடித்தாய்.

ஆருயிரே, நானோ தாயாக வடிவம் மாறி பாக்களையே குழந்தையாக்கி உன்னைத் தாலாட்டி தூங்க வைத்தேன். எனது பாக்களில் நினது வசந்தகால மலகர்களின் தோற்றம் பொலிந்தது. இன்றோ உன் பிரிவு என் பாட்டு அலங்காரங்களைக் கட்டி வைத்துவிட்டது. என் இதயத்தில் ஒலிக்கும் கவிதை உன்னுள்ளத்தே ஒலி செய்யட்டும்.

எனது காதல் கீதம் உன்னுயிரிலே கலந்து பெருக்கெடுத்தோடட்டும். எனது சுருதியலைகள் உனது பாதக் கமலங்களைக் கழுவட்டும். யாழ் தன் இசையைத் தாங்குவதுபோல நான் உன்னன்பை தாங்குவதுடன் அதை உனக்கே இறுதியில் என் ஆருயிரோடு அளிக்க உறுதி கொண்டிருகின்றேன்.

என் உயிரொளிக் கதிரே; இன்னும் நான் சாகவில்லை; உயிர் நூலென உடலில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு இருக்கின்றேன்; சருகாக உன்னையெண்ணி துரும்பாக மடிவதற்குள் பூஞ்சிரிப்பில் மின்னும் உன் மதிமுகம் காண வழித் தேடுகின்றேன்.

உயிரொளி ஓவியமே,என் விழிகள் உன் மைத்தவழ் விழிகாணாமல் ஒளியிழந்துவிட்டன. பிரிவெனும் கசப்பைத் தந்தவளே இங்கே நான் துடிக்கின்றேன் தனிமைத் துயரில். அஞ்சுகமே, எனைப் பரிவோடு அணைத்திட்ட உன் பூங்கரங்கூட எனைவிட்டு பிரிவுக்கே உறவாகிப் போகுமென்று கிஞ்சிற்றும் நான் நினைக்கவில்லை.

அன்புத்தேனே, உணர்ச்சியாற்றில் ஓடி வரும் புதுப்புனலே, உன்றன் எண்ண வெள்ளத்தில் ஊழ்கி வரும் கனவுகளின் விளிம்புகளில் மிஞ்சுவது ஈரமான வெறுமையே. என் நெஞ்சத்துச் சிப்பிக்குள் கருத்து முத்தாய் நிலைத்தவளே, என்னிளமனது உனையெண்ணி நொடிக்கு நொடி நூறுமுறை துடிக்கிறது.

துன்பம் என்னை தனக்குள் விலங்கிட்டுக் கொண்டது; துடிப்பதற்கோ எனக்கிங்கே ஆற்றல்ல்லை; துவல்கின்றேன் கண்மணியே. என் கதையை மரணம் வந்துமுடிப்பதற்கு முயலுகிறது அதர்குள் உன் முகமலரை ஒரேமுறை கண்டு தரிசிக்க வேண்டும். என் அகங்குளிர இந்தச் செவிமுழுதும் தேன்மணங் கமழும் நின் தேவகானத்தை நான் கேட்க வேண்டும்.

அன்பே, சாவாலும் எந்நாளும் சாகாத காதலாலும் கூவாத ஊமைக் குயிலாய் சொல்லை நெஞ்சக் கூட்டுக்குள் போட்டடைத்து துன்ப வேதனயில் நெய்யாய் உருகுகின்றேன். என் நெஞ்சில் காதல் உணர்வை ஊஞ்சலாடவிட்டு ஆடுகின்ற பேரின்பத் திரவியமே, உன்றன் மடியதனைத் தலையணையாய்க் கொண்டே நான் துயின்ற நாளெண்ணி இப்போதிமரத்தின் அடியிலே நடைச்சடலமாய்த்தான் உலவுகின்றேன்.

பூந்தென்றலே, இறந்தகால நிகழ்வுகள் நெஞ்சத்தில் நிழலாய் நின்றாட நிகழ்கால வெப்பத்தில் நெக்குருகிப் போகின்றேன். புத்தமுதே, என் கண்ணிரெண்டில் காதலெனும் நோயைத் தந்து கண்ணுறக்கம் பறிக்கின்றாய்; கனவிலும் வந்தென்னை வாட்டுகின்றாய். கண்மணியே என் காதல் நோய்க்கு நீயல்லவோ அருமருந்து.பறவைகளில் பருவகால பறவையா நான்? இசையையே உணவாய் உட்கொள்ளும் அசுணப் பறவை; பனித் துளிக்கே ஏங்குகின்ற சக்ரவாகம் நான்.

உன் திருவரவன்றி என் இதயத்தாமரை இனி இதழ் விரிக்காது. ஆக வந்துவிடு விரைவில் உன் அன்பு முத்தம் தந்துவிடு. இடைவெளியே இல்லாமல் இருந்த காலம் இப்போது நினைத்தாலும் நெஞ்சுக்குள் புதியதொரு சொர்க்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றோ பிரிவையெண்ணி உன் பொன்வரவுக்காக வழி பார்த்திருக்கின்றேன்; விழி தேய பூத்து நிற்கின்றேன்

புதன், 21 ஜனவரி, 2009

நீலக்கடலோரம் ஒரு நீலக்குயிலின் நீலாம்பரிராகம்


(வாசிக்கும் முன்: பாரதியின் ‘குயில் பாட்டு’ படித்து அதன் காதற் சுவையிலே மனதை தொலைத்த என் இளமைக் காலத்தில் நான் எழுதிய எழுத்துகள் இவை. பாரதியைப்போல் நானும் கத்தும் குயிலோசைக்காக காடுமேடெல்லாம் அலைந்திருக்கின்றேன். நினைவிருக்கிறது 1986 இல் செப்டம்பர் மாத இறுதியிலே பினாங்கு(முகாயேட்) கடற்கரையோரத்தில் அமைந்த காட்டு மரமொன்றில் குயிலின் அமுதக் குரலைக் கேட்டு பாரதியின் காதல் உணர்வுப் பெற்றேன். மீண்டும் பாரதியில் முக்குளித்து 27.9.1986 நீள இரவினிலே இந்தக் கட்டுரையை எழுதினேன். என் பழைய பரணை சுத்தம் செய்தபோது கண்ணில் தட்டுப்பட்ட இந்தக் கட்டுரையை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே பதிவு செய்திருக்கின்றேன்.)

அதோ ஆர்ப்பரிக்கும் நீலக் கடலோரம் அலைகள் காயப்படுத்தியும் கட்டுக் குலையாமல் நிற்கும் அந்தக் கற்பாறை மீது அமைதியாக அமர்ந்து மீண்டும் எனது மோனத் தவம் கலைகின்றேன். அலைகளின் பேரிடிகளுக்கும் வளைந்திடாத அந்தக் கற்பாறையைப் போல் என் காதல் உள்ளமும் உடையுமேயன்றி எவராலும் வளைத்திட இயலாது..மனதில் உன் மீது கொண்ட காதல் அலைகள் உணர்வுக் கரை மோதி வழிந்தோடுகிறது.
இந்தப் பெளர்ணமி நிலா ஒளியில் பாலைவன மனத்தோடு தொலைந்து போன நமது கரைகாணா காதலின் முகவரிகளைத் தேடிக் கொண்டு இருக்கின்றேன். கரும்பே, உன் காலடிச் சுவடுகளைக் காணாததால் என் கண்மலர்கள் கண்ணீர் அரும்புகளைச் சிந்துகின்றன. நீ வாழும் நெஞ்சம் மட்டுமே நினைவுகளைத் தாலாட்டி என்னை உயிரோடு உலவவிடுகிறது.
இங்கே உன்றன் துணைத்தேடி தனியொரு சோகத் தரை மேகமாய் அலைகின்றேன். நான் கொதிக்கின்றேன் இவ்விடத்தில்; துடிதுடித்துத் தூங்காமல் போகின்றேன் இரவெல்லாம்; இவற்றையெல்லாம் ஒடிப்பட்ட சுள்ளிகளா அறியும்? அழகே, எத்தனை நாள் இப்படி ஏங்கி ஏங்கி இளத்திருப்பேன். என்புருகிப் போய் இருப்பேன் ஈடேற்றம் எந்நாளோ, உன்றன் அன்பு நிலையம் அடையும் நாள் எந்நாளோ?
பனிதூங்கும் மலரே, பண்பெனும் பயிரே, பண்ணோடு நாதம் இழைகின்றதைப்போல உன்னோடு நானும் இணைவதெப்போ? உன்றன் தேன்மதுர இதழ்ம் துடிக்கின்ற இமையும் சிலையான உடலும் சிந்தாத மொழியும் அணையென்று சொல்லி என்னை அணையென்று சொல்லி அழைப்பதெப்போ?. இன்பமே வந்துவிடு என் வாட்டம் பொக்கும் அமுதகானம் இசைத்துவிடு.
கண்ணென்ற வழியால் நெஞ்சக் கருவறையில் புகுந்து நிலைத்தவளே,நீர் பிரிந்த நிலம்போல் இங்கே நின்றன் பிரிவால் வறண்டுள்ளேன். மதுமலரையெல்லாம் மனம் வெறுத்துவிட்டது; மலர்ந்து வரும் புது இன்பமெல்லாம் கசக்கின்றது.. இதுவரையில் உன் பிரிவைத் தாங்கிக்கொண்டேன்; இனி ஒரு கணமும் தாங்காது என் இளமனது.
தாயைவிட்டு பிரிந்த சிறுபிள்ளைபோல் ஒவ்வொரு நாழியும் கலங்கி குலைகின்றேன். கார்மேகம் போல் வற்றாக் கண்ணீரைச் சொரிகின்ற நிலையில் உள்ளேன். கரையுடைத்துக் கட்டுக்கு மீறிபாயும் காட்டாற்று வெள்ளம்போல் கண்ணீர் சிந்த வைத்தல் சரிதானா சரியேதானா?. என் இதய பூமியில் சீருலாவும் தென்றலே ஓரிதயம் உனக்காக உயிர்வாதைப் படுவதும் முறைதானா முறையேதானோ?.
உன்றன் ஒளிமுகத்தை உயிரூட்டி எனைக் காக்கும் கலை முகத்தை நான் காண வேண்டும். மீண்டும் என் கண்ணிலே அக்காட்சி தன்னிலே என் இதயம் நீந்தி குளிக்க வேண்டும். என் எண்ணமெல்லாம் உன் நினைவே நிறைவதன்றி பிறிதொன்றில்லை. புதிருக்குள் சிக்கிய விடையானேன், கொதிப்புனலின் தகிப்பானேன்; நிலம் மழையால் சேறாகிப் போனதுபோல் நிறையழகே உன்னைக் கண்ட நாள்முதல் குழம்பிப் போனேன்.
நீ பிரிந்து போனாதால் முடங்கிப்போன கலையானேன்; கரையொதுங்கித் தவிக்கின்ற கப்பலானேன். கொம்பில் முழுதாகப் பழுப்பதற்குள் வீழ்ப்பழம்போல், முற்றி வந்த நம்முறவில் பேரிடி விழுந்திட நொந்தேன். இருக்கட்டும் இற்றுவிடவில்லை என் இதயம் நூலின் இழையைப்போல் அவ்வுறவைப் பேணிக் காப்பேன் என் சின்னஞ்சிறு இதயக்கூட்டில்...
பொருள் புதைந்த பார்வையால்; அடக்கத்தோடு புன்னகையால் மழைக் காலத்தின் வெள்ளம்போன்ற கலகலப்புப் புது சிரிப்பால் காதல் சிறகுகளை என்னுள் முளைக்க வைத்தாய். இன்னமுதே, இன்பக் கவிதையன்றி இலக்கியம் பூப்பதில்லை அதுபோல கனிச்சாறே, நீயின்றி நானில்லை. கவிதைப் புதையலே, உன் பேரன்பில் முகிழ்த்தெழுந்தால் பட்ட்த்துயர் எல்லாம் தீர்ந்துபோகும்.
உன் தோள் தொத்தும் பேறு நான் பெற்றால் உலகந்தன்னை ஓர் நொடியில் பெயர்த்தெடுக்கும் ஆற்றல் பிறக்கும். அகத்துறையே, உன்னிசைவின் திசை நோக்கித் தெண்டனிட்டுக் கிடக்கின்றேன். தீஞ்சுவையே, உன்னைதான் என் வாழ்வுப் பேராட்சிக்கு உயர்த் தலைவியாக்கி கீதம்பாடி நிற்பேன். என் மனம் பற்ற வரும் மட்டும் காத்திருப்பேன் குன்றம்போல் இலையெனில் தீயில் கருகியதோர் மரம் போல் பட்டுப் போவேன்.
அன்பே, நீ பிரிந்துபோன நாள்தொட்டு வெறிச்சோடிக் கிடக்கின்றேன் நன்செய் நிலம் அறுவடைக்குப் பிறகு காய்ந்து கிடப்பதுபோல. எனக்கும் ஓரிதயம் உண்டு; அதற்குள் வாடா எண்ணங்கள் ஏக்கங்கள் பல முளைப்பதுண்டு. ஓராயிரம் ஆசை அலைக்குள் சிக்கி எழுகின்ற பேரேக்கம் என்னுள் நீர்சுழலானது. கனவுக்குள்ளே கண்புதைத்து காதல் வளர்த்ததால் இதயத்தில் இன்று கனல் பூத்துவிட்டது.
‘காதலே எனக்கு நீ நன்றே செய்தாய் - துன்ப வேதனையைத் தந்து நன்றே செய்தாய்’ என்று கவி தாகூரைப் போல் நானும் புலம்பிக் கொண்டிருக்கிறேன். பேரழகே, எனக்கு வாழ்வோ எரிசூளை, இரும்பாலை ஆனதென்பேன். தெய்வீக மலர்க்கொடியே, உதிர்ந்த இறகுகளோடு இருளின் மடியில் தொலைந்து போன என் இதயத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
காதல் போர்க்களத்தில் என்றுமே நான்தான் நிரந்தரக் கைதி. கார்கால மேகங்களின் ஊர்கோலம் கலைந்ததுபோல் என் வண்ணக் கனவுகளில் நீந்தியவளே, நீ என் கைக்குள்ளே கிட்டிவிட்டால் உலகிற் முதல் கவிஞனாவேன். எனைவிட்டு நீ பிரிந்து சென்றாலும் உன்பால் துளிரும் அன்பை நெஞ்சில் தேக்கி நித்தம் இந்த நீலக்கடலோரம் மாதவத்தோடு காத்துக் கிடக்கின்றேன்.
இரவின் இறுகமான இருட்டில் எனது மெளனப் புலம்பல்கள் ஆன்ம வீணைகளை அழ வைக்கின்றன. உன் ஆழக் கருவிழிகளோ ஆழங்காண முடியாத இதயக் கருவறையில் இருந்து பூத்த கனவுகள் சோக சுருதி இலயத்தோடு அலைகின்ற மழையில் குளித்த மலர்கள் சிலிர்த்ததுபோல் உன் அன்பு என் சிந்தையணு ஒவ்வொன்றிலும் ஒளிருகிறது.
கவிதைப் புனலின் கற்கண்டு ஊற்றே, இன்பக் கதைகளெல்லாம் உனைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?- அன்புத் தருவதிலே உனை நேராகுமோர் தெய்வமுண்டோ?. பேடைக் குயிலே,பெண்மைக்கே இலக்கணம் நீ, இந்த ஏழைக்குக் கிடைத்த அற்புதப் புதையல் நீ. நீலப் பூங்குயிலே, என்னுயிர் ஏகிடும் முன்னே நீ பறந்து வா என் முன்னே....

(வாசித்த பின்: இடைப்பட்ட இந்த இருபத்து மூன்றாண்டு கால இடைவெளியில் பல குயில்களை கண்டிருக்கின்றேன் ஆனால் அந்த நீலப் பூங்குயிலை மட்டும் கண்டிலேன். ஏனோ அந்தக் குயிலைக் காண இன்றும் இதயம் ஏங்குகிறது)

கண்ணதாசா.... என் கவிநேசா

‘தமிழில் ஒரு கவிமகனைச் சிறுகூடற்பட்டியல் தந்த மலையரசித்தாயே’ என்று தமது மூலத்திற்கு முன்னுரைக் கூறிய காலத்தில் அழியாத காவியம் தரவந்த கவிமன்னனே, கன்னித்தமிழில் செழுங்கனித் தீஞ்சுவைக் கலந்து செவிமடல்களில் தேன்பாயும் சொல்லெடுத்து தித்திக்க தித்திக்க தீந்தமிழமூதூட்டிய செந்தமிழ்த் தேர்ப்பாகனே, நின்றன் எண்ணத்தில் விதையாய் விழுந்து தளிராய் நடைப்பயின்ற கவித்துவத்தை பேருவகையோடு நெஞ்சம் நெகிழ நினைத்துப் பார்க்கிறேன்.
சங்கத்தமிழ்ச் சாரத்தினைக் கவிதைப் பொங்கலாகக் கன்னல் கன்னல் நடையில் கருத்துப் பொலிவும் கவிதைச் சிறப்பும் மிளிர சிந்தையணு ஒவ்வொன்றிலும் சிலிர்த்து நிற்கும் உயிரோட்டமும் உணர்ச்சிப் பெருக்கும் மேவிட பாரிடை பட்டொளி வீசி பகழ்க் கொடி பரப்பிய பா வள்ளலே உன்னைப் பாடுவதற்கு வார்த்தைகளுக்காக தவமிருக்கிறேன்.
உயிர்ப்பெல்லாம் உணர்வெல்லாம் உள்ளக் கிளர்ச்சியெல்லாம் உள்மனச் சிரிப்பெல்லாம் எண்ணமெல்லாம் எழுச்சியெல்லாம் எழுத்தெல்லாம் எழிலெல்லாம் கவிதையாக ஊன்மணக்க உயிர்மணக்க வடித்துத் தந்த கவிச்சிற்பியே, காலத்தையும் கடந்து நிற்கும் நின்றன் உள்ளூரக் கள்ளூரும் கவியழகில் என் கவிமனத்தை கற்பூரமாய் கரையவிட்டு மீண்டும் உன் பொன்வரவுக்காகக் காத்து விழி பூத்து நிற்கின்றேன்.
உன்றன் கவி மலர்களில் கவின்வாசம் நாள்தோறும் தமிழறிந்தோர் செவிகளிலெல்லாம் செந்தேன் வெள்ளமாக சந்தனக் காட்டினுள்ளே சதிராடும் தென்றல்போல் மந்திர நடையும் மயக்குறு மொழியும் கொண்டு சீருலா வருகின்றது.
பாமர மக்களின் இதய சிம்மாசனத்தில் இலக்கியத்தின் இன்பமணிமுடி சூடிய மாக்கவிஞனே காற்றின் ஓசையிலெல்லாம் உன் இதயயாழ் மீட்டிய இன்ப கீதங்கள் உயிர்க் கவிதையாய் உலா வந்து கொண்டிருக்கும். பத்து விரல்களிலும் பாட்டினை ஊற்றி வைத்து முத்தாய் செந்தமிழை உதிர்த்த முத்தையாவே, உன் கவித்துவம் என்றும் அமிழ்தச் சுவையாய் தழைத்திருக்கும்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வானிலே சுடர்விட்ட முழுமதியே, உனைப்போல் புகழ் மகுடம் சூட்டி மக்கள் போற்ற வாழ்ந்த கவிஞன் வெகுசிலரே. தமிழ் மொழியின் தவப் புதல்வனாகச் ‘ஈரும் தலையும்’,’எதுகையும் மோனையும்’,’பாட்டும் பொருளும்’ கைக்கட்டி சேவகம் செய்ய கால்நூற்றாண்டுக்கும் மேலாக கவிச் சக்கரவர்த்தியாக பவனி வந்த கவிநாயகனே, நீ தமிழ் நெஞ்சினர்க்குக் கிடைத்த அருங்களஞ்சியம்.
என் பாட்டுத் தோட்டத்தில் பாடித் திரிந்த வானம்பாடியே, உன் கவிதைச் சிறகின் கந்தர்வ நிழல் எவ்வளவோ சுகந்தமும் இனிமையும் உள்ளதாய் ஒலி மண்டலம் முழுதும் நிறைந்து வழிகிறது. பாரதிக்குப் பிறகு பாரதிதாசனில் தமிழின் மேதை தெரிந்தது; உன்னில்தான் இன்பத் தமிழ் போதை தெரிந்தது. கம்பனுக்குப் பிறகு சந்தம் உன் ஒருவனிடத்தில்தான் சரணம் அடைந்தது.
பாடலுக்குப் பொருளான பழந்தமிழ் வேதமே! ஒளிப்பால் நீ சிந்துகிற ஒய்யாரச் சந்திரனின் மஞ்சளுக்கு உதாரணம் சொல்லிக் கொண்டே வாழ்ந்தபோதே வாடிப் போனவர்களுண்டு; கண்ணா! நீயோ சீதள இரவுகளில் மானிட விடியலுக்காகக் கவிதை மலர்களைத் தொடுத்த காவிய நாயகன். பெண்ணின் கூந்தல் அழகை மட்டும் நீ வர்ணித்தவன் அல்ல; குழி விழுந்த கன்னங்களிலும் உன் கவிதை முத்தம் மாறாமல் விழுந்திருக்கிறது.
மூன்றாம் பிறையைப் பார்த்ததும் ஆசைக்குரியவளின் நெற்றி மாத்திரம் உன் நிணைவுக்கு வரவில்லை; காலக் காற்றில் ஆடிப்போன மனித மரங்களின் வளைந்துபோன கூனல் முதுகும் உன் நினைவுக்கு வந்தது. திரையிசைப் பாடல்கள் உன்னால்தான் சிரஞ்சீவித்தன்மை பெற்றன. சந்தப் பேதமின்றி சுத்தமான பாட்டில் இனிமை சேர்த்த ராஜகவியே, உன்னைப் போல் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக விரித்து வைத்தவர் யாருமிலர். உனது பலத்தையும் பலவீனங்களையும் உலகறிய உளறிய பச்சிளங் குழந்தை. நீ அஞ்ஞான அஞ்ஞாத வாசத்தை ‘வனவாசம் ஆக்கினாய். நாளும் பட்டு பட்டுத் தெளிந்து பட்டறிவை ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ ஆக்கினாய். இலக்கிய மழையில் நனைந்து அதன் வாசத்தைத் ‘தென்றலில்’ உலவவிட்டாய்.
நீ சலனப்பட்டிருக்கிறாய்; மதுவிலும் மாதுவிலும் மயக்கமுற்று உன்னை இழந்திருக்கிறாய்; உணர்ச்சி வசப்பட்டு அரசியலில் களம் புகுந்தாய்; ஆனாலும் புகழ் வருமென்று பொய்யுரைக்கவில்லை; இகழ்வார்களென உண்மையைச் சொல்லாமலும் இருந்ததில்லை. மானுட வாழ்வை பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கோணங்களில் சிந்தித்து சமூக வாழ்க்கைக்கான பாடப் புத்தகங்கள் அளித்தவன் நீ.
கற்பனைக் கடலாடி முத்தெடுத்து, பசியால் தவித்து, தாகத்தால் அலைந்து, கானல் நீராடிய மரத்தின் நிழலில் கற்பகம் கண்டு ஆயக் கலைகள் அனைத்தும் அனுபவத்தால் தெளிந்த கவிப் பறவையே,’கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று உனக்கே பல்லவி பாடி திரையுலகில் அடியெடுத்து வைத்தாயே.
உன் வாழ்வில் எல்லாமே விதிப்படி நடந்ததால்தானோ எங்குமே தத்துவ மழை பொழிந்தாய் ஒரு மகா ஞானியைபோல. உன்னில் கருத்தூற்று மழையூற்றாய் பெருக்கெடுக்க நினைத்தவுடன் அருவியெனக் கவிபொழியும் உன் நாவினிலே கலைமகள் ஆனந்த வீணையை மீட்டி பெருமிதத்துடன் வீற்றிருந்தாள்.
காய்த்த மரத்திற்கே கல்லடி என்பதுபோல் சொல்லடி வல்லிடியாய் வந்தாலும் ‘போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்’ என எல்லா கண்டனக் கணைகளையும் கனிவோடு ஏற்ற மாமலையே, நீ அழுதாலும் சிரித்தாலும் சினந்தாலும் உன் கவிதையின் ஒவ்வோர் அணுவிலும் இனிமை இழையோடுவதை உன்னை விமர்சிப்பவன் கூட உணர்கின்றான்.
கண்ணதாசா, உனக்கென ஒரு தனிநடை வகுத்துக் கொண்டாய். பாரதியைப் போல் புயல் நடையுமல்ல; கவிமணிபோல் தளிர் நடையுமல்ல; பாரதிதாசன் போல் புயலையும் தென்றலையும் சேர்த்திணைத்த நடையுமல்ல. நீயோ மாந்தளிர்க் கொய்து சாறுமாந்தும் ஒரு மாங்குயில்.
புயலும் தென்றலும் மாந்தளிரை ஆட்டிப் படைப்பதுபோல் துன்பமும் இன்பமும் உன்னை வாட்டி எடுத்தன. துன்பச் சகதியிலே நீ நிம்மதியின்றி ஊனையும் உயிரையும் உருக்கி எழுதிய இறவா கவிதைகளை நட்ட நடுநிசியில் கூட நிம்மதியாய் கேட்டு கொண்டிருக்கின்றேன்.
தத்துவம் மட்டுமல்ல காதலும் உன்னிடத்தில் நேசம் கொண்டதால்தானே சங்க இலக்கியக் காதல் ரசத்தயும் மிஞ்சி உன் காதல் கவிதைகள் காதலர் கடிதங்களில் தூது போகின்றது. தமிழின் முற்றத்திலே தங்க நிலா பிறவாகமாய் வாழ்ந்திருந்த இலக்கியச் சித்தன் நீ.
உனது வாழ்வில் சரிபாதி சபலங்களும் சஞ்சலங்களும் தாமரைத் தண்ணீரின் தத்தளிப்புகள்; மறுபாதியோ பருவம் பட்டுப் போனதாலேயே ஏற்பட்ட துன்பத்தின் சுமைகள். விலைமாதர் வீட்டிற்கும் போனதுண்டு; அருணகிரிபோல் தெய்வப் புகழ் பாடியதுமுண்டு; அரசியலில் சிலம்பம் ஆடியதுமுண்டு; அங்கு குத்தீட்டிகள் தாக்கியதுமுண்டு; பிறகு இதையெல்லாம் தாண்டி இலக்கிய முகடுகளைத் தொட்டதுமுண்டு.
காவியச் சித்தனே, வசன நடையில் புதியநடை தந்த தமிழ் இமயம் நீ; புதுக்கவிதைச் சாயலின் சந்தங்கள் பிசகாது சங்கீதத்தில் சஞ்சரிக்கச் செய்த ராஜாளிப் பறவை நீ. வாழும்போதே வரலாறான வைரமே, இளமையைச் சாகவிடாமல் இன்ப நினைவுகளோடு மானுடத்திற்கு மகுடி ஊதிச் சொல்லும் மந்திரம் உன் சொற்கூடுகலில் சுகமாகத் தேங்கி நிற்பதைப் பார்த்தால் கம்பனை உன்னுருவில் கண்டதாகத் தோன்றும்.
குற்றால அருவியாக வந்து விழுகின்ற சொற்கோவைகளை தமிழ் முத்தாரமாக தொடுத்த செட்டிநாட்டுச் சிங்கமே, உன் உணர்வின் ஊற்றிலிருந்து எழுந்து வருகின்ற செந்தமிழில் சந்தனம் மணக்கும். சந்தங்களோடு பல சங்கதிகளைச் சதிராட வைத்து கவிதைக் கலைக்கு புதுப் பள்ளியெழுச்சிப் பாடிய நாவுக்கரசனே; சிந்தாமலும் சிதறாமலும் சொல்வதில் நக்கீரனே; உன் கவிதைகள் சுகமான சொர்க்க வாசல் மட்டுமல்ல; சுந்தர புரிக்கு அழைத்துச் செல்லும் ஞானப்பனுவல்.
‘என் கவிதைகள் ஜீவிதமானவை’ எனத் தமக்குத்தாமே ‘நடுகல்’ நட்டுக் கொண்ட தெய்வீகக் கவிஞன் நீ. இறை நம்பிக்கையால் தமிழில் பல சித்துக்களைச் செய்து காட்டிய ஞானத் தச்சன் நீ. தன்னிலை உணர்ந்து திருத்திக் கொள்ள ‘போதி’ மரத்தை தேடிச் செல்ல துவங்கிய புத்தனும் நீ. 17.10.1981இல் சிக்காகோவில் தமிழ்ப் பொழிவிற்குப் பிறகு தாயகம் திரும்பாமலேயே விண்ணுலகம் சென்றுவிட்ட கலைஞனே, அன்றுமுதல் காவிரிபோல் பொங்கி வந்த புதுவண்ண பாக்கள் பொட்டிழந்து பூவிழந்து நிற்கின்றன.
‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்றெழுதிய வரிகளுக்கு நீயே அபிநயம் பிடித்துக் கொண்டு அழகு காட்டுகிறாயா?. இன்னொருவன் எப்போது இங்கே பிறப்பானோ இப்படியோர் தோற்றம் எவர்க்கினிமேல் வாய்த்திடுமோ என்ற ஏக்கத்தில் தாயைப் பிரிந்திட்ட சேய்ப் பறவையாய் தவிக்கின்றேன்.

திங்கள், 12 ஜனவரி, 2009

பாரதி..........தீ


பாரதி...
கவிதைக் காதலியை பாமரனும் சொந்தங்கொள்ள நிலாமுற்றத்திலிருந்து தெருவுக்குக் கைப்பிடித்துக் கூட்டிவந்த தெள்ளுத்தமிழுலகின் காவியத் தலைவன். புவிகடல்மீது பாமரப் படகுக்குக் கவிதையால் கலங்கரை விளக்கங்கட்டிய கவிச்சிங்கம்.
அந்த எட்டயபுரத்துக் கட்டபொம்மனை ஏட்டில் எழுத எனக்கு இந்த ஆயுள் முழுதும் போதாது. அவன் கவிதையமுதினை கடைந்தெடுத்துப் பருக காலமும் ஞானமும் போதாது. அந்த வரகவியின் வாழ்வினை வார்த்தெடுக்க எனக்கு மட்டுமல்ல வளமிகுந்த நம் தமிழ்மொழிக்கே வார்த்தை வலிமை போதாது.
ஓர் இருண்ட பொழுதில் பாரதத் தேவியை வெள்ளைக்கெளரவர் பங்கப்படுத்தியபோது அவன்தான் கலியுகக் கண்ணணாய் கவியாடை தந்தான். அந்த அமாவாசை நாளில் பெளர்ணமி நிலவாய் உலாவந்து நீள்துயில் கொண்ட பாரதமாதாவின் இமைக்கதவுகளைத் திறக்க உணர்ச்சியோடு ‘திருப்பள்ளியெழுச்சி’ பாடிய புரட்சிக்கவியவன்.
கண்மூடி வழக்கத்தினால் மண்மூடிப்போய் கல்லும் முள்ளும் வளர்ந்திருந்த தமிழினத்தின் இமைக்கதவுகளைத் திறந்துவிட்ட எழுச்சித் திறவுக்கோல். கண்ணனையே காதலனாய், காதலியாய், நற்சேவகனாய் பற்பல உருவங்கள் தீட்டி மானுடத்தை தெய்வீகத்தோடு நெருங்கவிட்டவன்.
சுதந்திரத்தின் சூல் கொண்ட மேகமாய், விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியாய் உலக வாழ்க்கையில் உலாவந்த தேவமகன். பூமகளின் மார்புகளான மலைமுகடுகளில் பால்குடித்து தாய்மடியான பசும்புல் வெளிகளில் தலைசாய்த்து ஆடைகளான அருவிக்கடலில் நீந்தி மகிழ்ந்த கம்பீரத் தென்றலவன்.
வைரமீன் தொங்கும் வானத்தைத் தனது கைகளில் அடக்கிக் காட்டிய வித்தகன். புலர்ந்த காலையின் பொழுதுகள் தம்தவத்தின் பயனாகவே விளந்தனவென்று ஞானச்செறுக்கோடு பூபாளமிசைத்த பூமனங் கொண்டவன். கணுவில்லாத கவிதைக் கரும்புகளை உணர்வு நிலத்தில் ஊன்றி வளர்த்தவன்.
இனிக்கப்பாடும் இன்தமிழ்க்கவிதையாம் அனிச்சப்பூவினால் அணுகுண்டு செய்தவன். முடங்கிக்கிடந்த தமிழ்ச்சொற்களைப் பிரளய எழுச்சியோடு முடக்கிவிட்டவன். மென்மையாய் நடைப்பயின்ற செந்தமிழினுக்கு அச்சத்தை உடைத்தெறியும் ஆண்மைக்குரல் தந்த பெருகவி நெருப்பு.
கள்ளி நிறைந்த காட்டிலும் தேன் அள்ளி இறைத்த முல்லை அரும்பு. வீறு கமழும் இவனது கவிதைப் பாத்திரம் அமுதசுரபியில் அட்சயப் பாத்திரம். இமைத்தோரணத்தை எடுத்துக்கட்டி அமைந்த வீட்டின் அழகிய வாசலே விழியாம், இவனது விழியின் வாசலிலே பாக்கோலம் நர்த்தனமிடும். இளைத்துப்போன நம் தமிழ்க்கவிதைக்குப் புதுவிருந்து தந்தவன்.
தமிழன்னை பலநூற்றாண்டுகள் அருந்தவமிருந்து பெற்ற தெய்விகத் தமிழ்ப்பாவலன். அமரத்துவம் வாய்ந்த கற்கண்டு கவிதைகளால் தமிழ் நெஞ்சக் கோயிலில் அழியா அமரதீபமாய்ச் சுடர்விடும் கவிஞன்.வான்பூச்சொரியும் விண்மீன்களாலே கண்ணி கொஞ்சும் கவிதையாழ் மீட்டியவன்.
தீண்டத்தகாதவன் என்று விலகியோடியவனையும் அன்பொழுக அணத்து பூணூலிட்டு சாதியெனும் முடைநாற்றத்தின் மூக்கொடித்த பெரியோன். கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்குப் பிறகு கவிதையாம் பேராறு வற்றிப்போய் வளங்குமைந்து தடுமாறியது. ’இல்லையோ தமிழுக்கும் தமிழருக்கும் இனியொரு புதுவாழ்வு’ என்று நல்லுள்ளமெல்லாம் வருந்தி நிற்கையில்,’ஏனில்லை நானிருக்கிறேன்’ என்று எழுச்சிக் குரல் கொடுத்து ஏற்றம் நிறைக்க உதித்த விடிவெள்ளி அவன்.
கற்றவர் மட்டுமே காமுறும் கவிதைகளை, பண்டிதர் மட்டுமே சுவையுறும் பாக்களைப் பாமரர்களோடு கைக்குலுக்கி பழக வைத்த கருவிலே வளர்ந்த திரு அவன். பல்லுடைக்கும் பண்டிதத் தமிழென்று விலகியோடிய பாமரர்களுக்கும் பைந்தமிழைப் பழகுத் தமிழாக்கியவன். இலக்கியத்தில் எத்துறையைத் தொட்டாலும் அத்துறையிலெல்லாம் பாரதியின் முத்திரை கல்வெட்டுக்களாய் ஆழப்பதிந்திருக்கின்றன.
பாரதி வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் கிஞ்சிற்றும் இடைவெளியில்லாமல் வாழ்வாங்கு வாழ்ந்தவன். அவன் தனக்கென வாழா பொதுவுடைமைக் கொள்கையேற்று அஃறிணை உயிர்களிடத்தும் ஆழமாஅ அன்புக்காட்டி அணைத்து நின்ற ஆலமரமவன். உள்ளத்திலே உண்மையொளிக் கொண்ட பாரதியின் இறவாக் கவிதைகள் என்றென்றும் காலவெள்ளத்தால் செல்லரிக்க முடியா உயிர்க்காவியங்கள்.
குமுகாயத்திலே கரைபுரையோடிக் கொண்டிருக்கும் மூடவழக்கங்களையும் முரண்பாடுகளையும் சிந்தனை வாள்கொண்டு அறுத்தெடுத்தான். ‘எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் ஓர் நிறை’ அவனால் மட்டும்தான் அப்படி அழுத்தமாகச் சொல்ல முடிந்தது.
நேர்க்கொண்ட பார்வை, ஏறுபோல் பீடுநடை, அண்டஞ் சிதறினும் அஞ்சாத திண்ணிய நெஞ்சுரம் கொண்டு ‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே’ அவனால் மட்டும்தான் ஆங்கிலேயரைப் பார்த்து முழங்க முடிந்தது.
புதிய சுவை, புதிய பொருள், புதிய வளம் இவற்றைத் திரட்டிக் குவித்து பாரதி வடித்த கவிதைகள் புதியதோர் உலகத்தை பிரசவிக்கக்கூடிய ஆண்மையும் தாய்மையும் கொண்டது. மனிதகுலத்தின் பசிப்பிணி விட்டகல மேடுகலையும் பள்ளங்களையும் சரியாக விரவ மண்வெட்டி பிடித்திருக்கும் மாந்தனின் இரத்தத்திலும் புதியதொரு உலகை உருவாக்க துடித்திடும் உணர்விலும் அவன் கவிதையணுக்கள் கலந்திருக்கும்.
தமிழின் வளத்தையெல்லாம் வடித்து செதுக்கிய கவிதைகள் எதற்குமே வணங்காமல் விண்ணோக்கி நிற்கின்றன. தாயின் மணிக்கொடியின் கீழே அனைத்து மக்களும் ஒன்றாகக்கூடி நின்று பள்ளுபாடிய கனவுக்கு வித்து விதைத்தவன் பாரதி. சிந்து நதியின் நிலவுப் பொழுதிலே படகோட்டிப் பரவசமாகப் பாடிய இந்தக் கவிப்புயலை மீசை அரும்பாத ஓர் இளையப் பொழுதில் கண்டு காதல் கொண்டேன்.
பாரதியோடு என்மென்மனத்துள் ஆண்மை சுடர்விட்டது. அவன் ஆழ்கடல் நெற்றியைக் கண்டபோது ஞானக்கீற்று என்னுள் மின்னலாய் ஊடுருவியது. கூனிக்குறுகி நாண நடைப்பயின்ற என்னை நெஞ்சம் நிமிர்த்தி ராஜநடை போட வைத்தான். அவனுடைய சூரியப்பார்வையின் துணையினாலே மானுட வாழ்க்கையும் உலகத்தையும் புரிந்து கொண்டேன்.
எத்தனையோ பூபாளப் பொழுதுகளில் நான் சோம்பலில் துயிலெழுந்த போதெல்லாம் அவனுடைய அக்கினிக் கண்கள் ஆசிரியனாய் இருந்து என்னைக் கண்டிருத்திக்கின்றன. ஒவ்வொரு சுந்தரப் பொழுதும் எனக்குள் புதியதொரு வசந்தத்தை அழைத்து வந்தவன் பாரதிதான். அவனை அடையாளம் கண்ட இளைய வயதில் அவன்மீது மதிப்பிருந்தது. அவனை எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கியபோதுதான் தாயினும் சாலப்பரிந்த பாசம் மிகுந்தது.
மின்னலை விழுங்கி மின்சார சொற்களை ஓடவிட்ட அவனது நேசக்கையைப் பிடித்துக் கொண்டே என்னுலகத்தில் உலா வந்திருக்கின்றேன்; பாரதி இந்த உயிர்மூச்சோடு இரண்டறக் கலந்து என் செயல்களுக்குத் துணைவருகின்றான். ஒவ்வொரு நாளும் என் விழிகள் வைகறையில் விரியும்போது புதுப்பிறவி எடுத்துவிட்டதாக காதோரம் நற்செய்தி கூறுவான். வறுமைச் சுவடுகள் அவனது நெஞ்சைச் சுட்டதில் இன்னும் அந்த புண் ஆறவில்லை என்னுள். ’எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று துன்பம் சூறாவளியாய் சுழன்றடிக்கும்போதும் களியாட்டம் போட்ட பாரதியின் மனதை இரவல் கேட்கிறேன். பாரதியெனும் சூரியனை மரணமெனும் நீரூற்றால் அணத்துவிட முடியுமா....?