மு.வரதராசனார்.... ஒரு பல்கலைக்கழகம்
(மீசை சிறு கோடாய் அரும்பத் தொடங்கிய வயதில் மு.வ. எனும் பெயர் என் செவியில் நுழையக் காரணமாய் இருந்தவர் எங்கள் விக்டோரியாத் தோட்டத்துப் பாட்டாளியான திரு.இராமரெட்டி அவர்கள். பால்மரம் சீவும் பாட்டாளியானாலும் மு.வ.வின் அறிவுப் பட்டொளி வீசும் வாசகர் அவர். அவர் வீடு முழுவதும் மு.வ., அகிலன், சாண்டில்யன், ஜெயகாந்தன் என நூல்கள் கொட்டிக் கிடக்கும். பால்மரன் சீவிவிட்டு இடைப்பட்ட ஓய்வில்கூட அவர் நாவல் வாசிப்பதை நேசிப்பவர். அவரின் பேச்சில் மு.வ. மனம் தெரியும். அவரின் மூலம்தான் மு.வ. எனக்கு அறிமுகமானார். அந்த நல்ல மனிதர் எனக்கு வாழ்நாள் முழுதும் தந்த நல்ல உறவுதான் மு.வ.)
இளவயதில் என் இதயத்தை உழுத எழுத்து வேந்தே, நல்லெண்ணங்களையெல்லாம் பொன் எழுத்தாக்கிய உன்னை அறிஞன் என்றழைக்கவா? இலக்கியங்களை உயிரோவியங்களாக்கிய சமூக கலைஞன் என்றழைக்கவா?.... சமூக நெஞ்சில் இலக்கியத்தேனை அள்ளித் தெளித்த டாக்டர் மு.வ அவர்களே, உன் மங்காத புகழுக்கு என்ன பெயர் வைப்பது?
25.04.1912 இல் உன் பிறந்த தினம், இலக்கிய உலகில் ஒளி பிறந்த தினம்! அன்பிற்கினிய அன்னை அம்மா கண்ணம்மாள் அவர்களும் அற்விற்கினிய தந்தை முனுசாமி அவர்களும் செய்த தவம் நீ. அந்தத் தவத்தின் பயனாய் எங்களுக்குக் கிடைத்த நல்முத்து நீ ஐயா.
வட ஆற்காடு மாவட்ட திருப்பத்தூர் செய்த புண்ணியம் என்பதா? உண்மையைக் கூறினால் தமிழர்கள் முழுமனதோடு செய்த இதய வேள்வி தமிழுலகத்தில் தனியொரு பூவாய் நீ பூத்தது. இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகைப் புரட்டும்போது உன் மனம் தனி மணம்.
உன் இனிய 62 வருடங்களில் தமிழ்த்தாயின் மனதை அலங்கரித்த 85 நூல்கள் இன்றும் தனி மனிதனுக்கும் தமிழ்ச் சமுதாய வாழ்வியலுக்கும் கருத்துக் கருவூலம் இனியென்றும் இனிக்கும் தமிழ்ச்சுரங்கம்
அமுதான புதினம் 13, சிறுகதை 2, சிந்தனைக்கதை 2, நாடகம் 6, கட்டுரை நூல் 11, இலக்கிய ஆய்வு 27, சிறுவர் இலக்கியம் 7, கடித இலக்கியம் 4, பயண இலக்கியம் 1, மொழியியல் 6, வாழ்க்கை வரலாறு 4, மொழிபெயர்ப்பு நூல் 2, என நீ ஆக்கிய எழுத்துகள் அத்தனையிலும் தனி முத்திரை பதித்தாய்.
உன் எழுத்தை சுவாசிக்கும்போதெல்லாம் ஒரு தந்தையாய், தாயாய், தலைவனாய், ஆசிரியனாய், அறிஞனாய், இதயத்துக்கு நெருக்கமான நண்பனாய் நின்று நன்னெறி காட்டுவாய்.
உன் வாழ்வின் தெளிவும், ஊக்கமும், வலிமையும், உறுதியும், ஆழமும், எளிமையும் மானிட உலகம் முழுமையுமே கடைப்பிடிக்க வேண்டிய பெருவாழ்வு. அதை நீ உதாரண புருசனாக வாழ்ந்து காட்டியிருக்கிறாய்.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேரறிஞர் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழன் நீ. சென்னை பல்கலைக்கழகத்தின் சரித்திரத்திலேயே முதன் முதலில் தமிழில் டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்ப் பெருந்தகை நீ. தமிழோடு, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளைக் கற்ற பன்மொழிப் புலவனும் நீதான்.
நீ - என்றும் வாடா மலர், கயமையை எதிர்த்த செந்தாமரை, அல்லியை வாழ்வித்த மண்குடிசை, உலகப் பேரேட்டின் அகல் விளக்கு, குறள் காட்டிய தமிழ் நெஞ்சம். நான் என்றும் உன்னில் தஞ்சம்.
10.10.1974 - தமிழுலகை கண்ணீரில் மிதக்க விட்டு உன் பொன்னுடல் மறைந்தது.
வாலிபத்தின் துளிர் பருவத்தில் நான் மலரத்துடித்தபோது என்னை வாடவிட்டுச் சென்றாய். நீ மறைந்தபோது ஒரு நண்பனய் இழந்த சோகம் இன்றும் எனக்குள் கசிகிறது. ஆனாலும் நீ என்னைப் போன்றவர்க்காக விட்டுச் சென்ற இலக்கியச் செல்வங்கள் வாழ்க்கை முழுவதற்குமான பாடங்கள்.
என்றும் என் நேசத்திற்குரியவனே, தமிழ் இலக்கிய வரலாற்றில், வாழ்வின் வேர்களை ஆராய்ந்து இலக்கைக் காட்டும் தமிழ்கூறு நல்லுலகில், மு.வ. என்றும் மறக்க முடியா மறைக்கவியலா பொன் வானம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக