வானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.
செவ்வாய், 10 பிப்ரவரி, 2009
ஏற்போம் சபதமே
படை திரட்டுவோம் – ஈனப்
பகை விரட்டுவோம் – வீர
நடை முடுக்குவோம் – வெற்றி
நகை முழக்குவோம் ... (படை)
திங்களோடு தென்றலோடு
வந்ததெங்கள் தமிழ்மொழி
எங்கிருந்து வந்தவர்க்கும்
வாழ்வளித்த பெருமொழி
சிங்கமக்கள் பெற்றெடுத்த
சீருலாவும் திருமொழி
பங்கமொன்று வருகுதெனில்
பார்த்திடவோ எம்விழி ... (படை)
ஆண்டதமிழ் மீண்டும் ஆள
வேண்டுமிந்த உலகிலே
மாண்டபுகழ் மீண்டுமிங்கு
மலரவேண்டும் கண்ணிலே
தோன்றின் புகழோடு நீயும்
தோன்ற வேண்டும் தமிழனே
ஈன்ற தாயின் நெஞ்சினிக்க
ஏற்கவேண்டும் சபதமே ... (படை)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
உங்கள் படகு பயணத்தில் நானும் பயணம் செய்ய ஆவலாய் இருக்கின்றேன்.உங்களுடைய படைப்புகளைப் பார்த்துப் பிரமித்துப் போனேன்.நானும் இனிமேல் என் படைப்புகளை அனுப்ப தயாராக இருக்கின்றேன்.நீங்கள் மென்மேலும் உங்கள் பயணத்தைத் தொடர என் வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக