திங்கள், 12 ஜனவரி, 2009

பாரதி..........தீ


பாரதி...
கவிதைக் காதலியை பாமரனும் சொந்தங்கொள்ள நிலாமுற்றத்திலிருந்து தெருவுக்குக் கைப்பிடித்துக் கூட்டிவந்த தெள்ளுத்தமிழுலகின் காவியத் தலைவன். புவிகடல்மீது பாமரப் படகுக்குக் கவிதையால் கலங்கரை விளக்கங்கட்டிய கவிச்சிங்கம்.
அந்த எட்டயபுரத்துக் கட்டபொம்மனை ஏட்டில் எழுத எனக்கு இந்த ஆயுள் முழுதும் போதாது. அவன் கவிதையமுதினை கடைந்தெடுத்துப் பருக காலமும் ஞானமும் போதாது. அந்த வரகவியின் வாழ்வினை வார்த்தெடுக்க எனக்கு மட்டுமல்ல வளமிகுந்த நம் தமிழ்மொழிக்கே வார்த்தை வலிமை போதாது.
ஓர் இருண்ட பொழுதில் பாரதத் தேவியை வெள்ளைக்கெளரவர் பங்கப்படுத்தியபோது அவன்தான் கலியுகக் கண்ணணாய் கவியாடை தந்தான். அந்த அமாவாசை நாளில் பெளர்ணமி நிலவாய் உலாவந்து நீள்துயில் கொண்ட பாரதமாதாவின் இமைக்கதவுகளைத் திறக்க உணர்ச்சியோடு ‘திருப்பள்ளியெழுச்சி’ பாடிய புரட்சிக்கவியவன்.
கண்மூடி வழக்கத்தினால் மண்மூடிப்போய் கல்லும் முள்ளும் வளர்ந்திருந்த தமிழினத்தின் இமைக்கதவுகளைத் திறந்துவிட்ட எழுச்சித் திறவுக்கோல். கண்ணனையே காதலனாய், காதலியாய், நற்சேவகனாய் பற்பல உருவங்கள் தீட்டி மானுடத்தை தெய்வீகத்தோடு நெருங்கவிட்டவன்.
சுதந்திரத்தின் சூல் கொண்ட மேகமாய், விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியாய் உலக வாழ்க்கையில் உலாவந்த தேவமகன். பூமகளின் மார்புகளான மலைமுகடுகளில் பால்குடித்து தாய்மடியான பசும்புல் வெளிகளில் தலைசாய்த்து ஆடைகளான அருவிக்கடலில் நீந்தி மகிழ்ந்த கம்பீரத் தென்றலவன்.
வைரமீன் தொங்கும் வானத்தைத் தனது கைகளில் அடக்கிக் காட்டிய வித்தகன். புலர்ந்த காலையின் பொழுதுகள் தம்தவத்தின் பயனாகவே விளந்தனவென்று ஞானச்செறுக்கோடு பூபாளமிசைத்த பூமனங் கொண்டவன். கணுவில்லாத கவிதைக் கரும்புகளை உணர்வு நிலத்தில் ஊன்றி வளர்த்தவன்.
இனிக்கப்பாடும் இன்தமிழ்க்கவிதையாம் அனிச்சப்பூவினால் அணுகுண்டு செய்தவன். முடங்கிக்கிடந்த தமிழ்ச்சொற்களைப் பிரளய எழுச்சியோடு முடக்கிவிட்டவன். மென்மையாய் நடைப்பயின்ற செந்தமிழினுக்கு அச்சத்தை உடைத்தெறியும் ஆண்மைக்குரல் தந்த பெருகவி நெருப்பு.
கள்ளி நிறைந்த காட்டிலும் தேன் அள்ளி இறைத்த முல்லை அரும்பு. வீறு கமழும் இவனது கவிதைப் பாத்திரம் அமுதசுரபியில் அட்சயப் பாத்திரம். இமைத்தோரணத்தை எடுத்துக்கட்டி அமைந்த வீட்டின் அழகிய வாசலே விழியாம், இவனது விழியின் வாசலிலே பாக்கோலம் நர்த்தனமிடும். இளைத்துப்போன நம் தமிழ்க்கவிதைக்குப் புதுவிருந்து தந்தவன்.
தமிழன்னை பலநூற்றாண்டுகள் அருந்தவமிருந்து பெற்ற தெய்விகத் தமிழ்ப்பாவலன். அமரத்துவம் வாய்ந்த கற்கண்டு கவிதைகளால் தமிழ் நெஞ்சக் கோயிலில் அழியா அமரதீபமாய்ச் சுடர்விடும் கவிஞன்.வான்பூச்சொரியும் விண்மீன்களாலே கண்ணி கொஞ்சும் கவிதையாழ் மீட்டியவன்.
தீண்டத்தகாதவன் என்று விலகியோடியவனையும் அன்பொழுக அணத்து பூணூலிட்டு சாதியெனும் முடைநாற்றத்தின் மூக்கொடித்த பெரியோன். கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்குப் பிறகு கவிதையாம் பேராறு வற்றிப்போய் வளங்குமைந்து தடுமாறியது. ’இல்லையோ தமிழுக்கும் தமிழருக்கும் இனியொரு புதுவாழ்வு’ என்று நல்லுள்ளமெல்லாம் வருந்தி நிற்கையில்,’ஏனில்லை நானிருக்கிறேன்’ என்று எழுச்சிக் குரல் கொடுத்து ஏற்றம் நிறைக்க உதித்த விடிவெள்ளி அவன்.
கற்றவர் மட்டுமே காமுறும் கவிதைகளை, பண்டிதர் மட்டுமே சுவையுறும் பாக்களைப் பாமரர்களோடு கைக்குலுக்கி பழக வைத்த கருவிலே வளர்ந்த திரு அவன். பல்லுடைக்கும் பண்டிதத் தமிழென்று விலகியோடிய பாமரர்களுக்கும் பைந்தமிழைப் பழகுத் தமிழாக்கியவன். இலக்கியத்தில் எத்துறையைத் தொட்டாலும் அத்துறையிலெல்லாம் பாரதியின் முத்திரை கல்வெட்டுக்களாய் ஆழப்பதிந்திருக்கின்றன.
பாரதி வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் கிஞ்சிற்றும் இடைவெளியில்லாமல் வாழ்வாங்கு வாழ்ந்தவன். அவன் தனக்கென வாழா பொதுவுடைமைக் கொள்கையேற்று அஃறிணை உயிர்களிடத்தும் ஆழமாஅ அன்புக்காட்டி அணைத்து நின்ற ஆலமரமவன். உள்ளத்திலே உண்மையொளிக் கொண்ட பாரதியின் இறவாக் கவிதைகள் என்றென்றும் காலவெள்ளத்தால் செல்லரிக்க முடியா உயிர்க்காவியங்கள்.
குமுகாயத்திலே கரைபுரையோடிக் கொண்டிருக்கும் மூடவழக்கங்களையும் முரண்பாடுகளையும் சிந்தனை வாள்கொண்டு அறுத்தெடுத்தான். ‘எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் ஓர் நிறை’ அவனால் மட்டும்தான் அப்படி அழுத்தமாகச் சொல்ல முடிந்தது.
நேர்க்கொண்ட பார்வை, ஏறுபோல் பீடுநடை, அண்டஞ் சிதறினும் அஞ்சாத திண்ணிய நெஞ்சுரம் கொண்டு ‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே’ அவனால் மட்டும்தான் ஆங்கிலேயரைப் பார்த்து முழங்க முடிந்தது.
புதிய சுவை, புதிய பொருள், புதிய வளம் இவற்றைத் திரட்டிக் குவித்து பாரதி வடித்த கவிதைகள் புதியதோர் உலகத்தை பிரசவிக்கக்கூடிய ஆண்மையும் தாய்மையும் கொண்டது. மனிதகுலத்தின் பசிப்பிணி விட்டகல மேடுகலையும் பள்ளங்களையும் சரியாக விரவ மண்வெட்டி பிடித்திருக்கும் மாந்தனின் இரத்தத்திலும் புதியதொரு உலகை உருவாக்க துடித்திடும் உணர்விலும் அவன் கவிதையணுக்கள் கலந்திருக்கும்.
தமிழின் வளத்தையெல்லாம் வடித்து செதுக்கிய கவிதைகள் எதற்குமே வணங்காமல் விண்ணோக்கி நிற்கின்றன. தாயின் மணிக்கொடியின் கீழே அனைத்து மக்களும் ஒன்றாகக்கூடி நின்று பள்ளுபாடிய கனவுக்கு வித்து விதைத்தவன் பாரதி. சிந்து நதியின் நிலவுப் பொழுதிலே படகோட்டிப் பரவசமாகப் பாடிய இந்தக் கவிப்புயலை மீசை அரும்பாத ஓர் இளையப் பொழுதில் கண்டு காதல் கொண்டேன்.
பாரதியோடு என்மென்மனத்துள் ஆண்மை சுடர்விட்டது. அவன் ஆழ்கடல் நெற்றியைக் கண்டபோது ஞானக்கீற்று என்னுள் மின்னலாய் ஊடுருவியது. கூனிக்குறுகி நாண நடைப்பயின்ற என்னை நெஞ்சம் நிமிர்த்தி ராஜநடை போட வைத்தான். அவனுடைய சூரியப்பார்வையின் துணையினாலே மானுட வாழ்க்கையும் உலகத்தையும் புரிந்து கொண்டேன்.
எத்தனையோ பூபாளப் பொழுதுகளில் நான் சோம்பலில் துயிலெழுந்த போதெல்லாம் அவனுடைய அக்கினிக் கண்கள் ஆசிரியனாய் இருந்து என்னைக் கண்டிருத்திக்கின்றன. ஒவ்வொரு சுந்தரப் பொழுதும் எனக்குள் புதியதொரு வசந்தத்தை அழைத்து வந்தவன் பாரதிதான். அவனை அடையாளம் கண்ட இளைய வயதில் அவன்மீது மதிப்பிருந்தது. அவனை எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கியபோதுதான் தாயினும் சாலப்பரிந்த பாசம் மிகுந்தது.
மின்னலை விழுங்கி மின்சார சொற்களை ஓடவிட்ட அவனது நேசக்கையைப் பிடித்துக் கொண்டே என்னுலகத்தில் உலா வந்திருக்கின்றேன்; பாரதி இந்த உயிர்மூச்சோடு இரண்டறக் கலந்து என் செயல்களுக்குத் துணைவருகின்றான். ஒவ்வொரு நாளும் என் விழிகள் வைகறையில் விரியும்போது புதுப்பிறவி எடுத்துவிட்டதாக காதோரம் நற்செய்தி கூறுவான். வறுமைச் சுவடுகள் அவனது நெஞ்சைச் சுட்டதில் இன்னும் அந்த புண் ஆறவில்லை என்னுள். ’எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று துன்பம் சூறாவளியாய் சுழன்றடிக்கும்போதும் களியாட்டம் போட்ட பாரதியின் மனதை இரவல் கேட்கிறேன். பாரதியெனும் சூரியனை மரணமெனும் நீரூற்றால் அணத்துவிட முடியுமா....?

கருத்துகள் இல்லை: