பிறப்பு எப்படி மெய்யோ அதுபோலவே அதற்கு எதிரான
இறப்பும் மெய்யே. இந்த அழியாத மெய்களுக்கிடையிலான வாழ்வில் உண்மைதான் அடைய முடியாத
செல்வமாக இருக்கிறது. உண்மைதான் நமது அகத்தையும் புறத்தையும் விமர்சித்து
செல்கிறது. ஒவ்வொரு இழப்பின் துயரைக் கடக்கும்போதும் முடிந்தவரை இனி அரிதாரம் பூசாத
ஒப்பனை இல்லாத வாழ்க்கையை இன்னும் இன்னும் வைராக்கியத்தோடு வாழ்ந்து செல்ல
வேண்டுமென எனக்குள் வலிமை கூடுகிறது. என் நேசத்திற்குரிய மனிதர்கள் ஒவ்வொருவராக
இந்த வாழ்வு வெளியிலிருந்து விடைபெற்று செல்லும்போது இறப்பின் வலிமையும் உறுதியும்
தெளிவாகத் தெரிகிறது. இன்னும் என்னிடம் எஞ்சி இருக்கும் காலத்தை முழுமையாக மிகத்
துல்லியமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற தீவிரம் கூடி நிற்கிறது. எதிரே
தென்படும் ஒவ்வொரு மனிதரையும் சந்திக்கும்போதும் வாழ்வின் இறுதிநாளில் நிமிடத்தில்
நின்று அவருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு என்னுள் எப்போதும்
இருந்துகொண்டே இருக்கும். முடிந்தவரை எதிர்படும் அன்பருடன் உண்மையாகப் பேசிப் பழகி
விடைபெறுவோம். மீண்டும் அந்த அன்பரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் இயற்கைக்கு
இரு கரம் கூப்பி நன்றி சொல்வோம். காலத்தையும் இறப்பையும் ஒன்றாக்கி தத்துவம்
செய்தவர்கள் நம் முன்னோர்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் மனிதரும் காலமும்
ஒன்றுதானே.அதனால்தான் ஒருவர் இறந்துவிட்டால் இயற்கைக்கே திரும்பிவிட்டார் என்பதை
இயற்கை எய்தினார் என்றும் காலத்தோடு கலந்து கரைந்து போனதை காலமாகிவிட்டார் என்றும்
மறைந்து போனதை மறைந்துவிட்டார் என்றும் இன்னும் சமய நோக்கில் சிவனிடமிருந்து
வந்தவர் சிவனடிக்கே சென்று சேர்ந்திட்டார் என்றும் பலவாறு இறப்பைக் குறிக்கிறோம்.
உடலில் முன்னம் தங்கி இருந்த சத்து நிறைந்த உறுபொருள் நீங்கிப் போனதை ‘செத்து விட்டார்’ என்று திரித்தும் ‘மூச்சை விட்டுட்டார்’, ‘கட்டையைப்
போட்டுட்டார்’. ‘உயிரை நீர்த்தார்’ என்றும் பலவாறு இறப்பைப் பலவகைச் சொலவடைகளால் சிலாகித்து மகிழ்ந்தார்
முன்னோர்கள். அன்று தோட்டப்புறங்களில்கூட ஒவ்வொரு இறப்பிலும் துக்கத்தின்
அடர்த்தியும் பிரிந்தவர்க்காக செய்யும் பிரார்த்தனைச் சடங்குகளும் நீளமாக
இருக்கும். இன்று அவையெல்லாம் சுருங்கி முடிந்தவரை உற்றார் உறவினர் நண்பர் எல்லாம்
ஒருநாளில் கூடி பிரியும் நாளாக இறப்பு மாறிவிட்டது. இன்று இறப்பையும் இறுதி
ஊர்வலத்தையும் மெய்நிகர் தடயமாக பதிவு செய்து முகநூலில் பதிவிடும் காலத்தில்
அல்லவா வாழ்கிறோம்?. இதுகூட ஒரு புது வகை மனித நேயமோ? மனிதரின் நெஞ்சக்கூடு முழுவதும் சிந்தனைகளாலும் அதில் ஊறிய நினைவுகளாலும்
காலம்தானே நீக்கமற நிறைந்து வழிகிறது. இந்த நினைவுகளைக் கைமாற்றிவிடுவதன்
மூலம்தான் ஒருவர் வாழ்ந்ததற்கான எழுச்சியும் வீழ்ச்சியும் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும்
புதைந்து நிற்கும் நினைவுகளை ஏதாவது ஒருவகையில் கைமாற்றுவது என்பது காலத்தைக்
கைமாற்றுவது என்றுதானே பொருள்படும்.? யாருக்கு இந்த வாழ்வில்
எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது வாழும் இந்த நிமிடம்வரை தேவரகசியம்தானே?. எப்போது எந்த நிமிடம் யாருக்கு இறப்போலை வருமென்று யார்தான் அறிவாரோ?. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சுதானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக