திங்கள், 23 ஜூலை, 2018

தமிழமுதச் சுவை....


அமுதான தமிழே நீ வாழி! என் ஆவியிலே கலந்து நாவினிலே தவழும் என்று காலந்தோறும் தமிழை வாழ்த்தியும் வாழ்வாங்கு வாழ்ந்தவரான ஐயா சீனியாரின் வழிகாட்டலால் கொஞ்சம் தமிழ்ப்பால் உண்டவன் என்பதால் அதன் தித்திப்பை உயிரில் உணர்கின்றேன். அண்மையில் மறைந்த ஐயா குழ.செயசீலனாரின் நட்புறவால் தமிழின் அடர்த்தியையும் செறிவையும் உணர்ந்து விழிப்புற்றேன். இதுவரை வாழ்ந்த அனுபவத்தின் சாரத்தை மொழியின் மேல் நிதம் ஏற்றி ஏற்றி ஊனுருக உயிருருக ஊற்றி ஊற்றி இந்த வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் மதுவுண்ட வண்டாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றேன். கடந்த சனிக்கிழமை சுங்கைகோப்பு பிரம்மவியாரண்யத்தில் மலைச்சாரலை நோக்கி பாரதி பயணம் எனும் தாப்பா மாவட்ட தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்ணாக திருவாட்டி இராமேசஸ்வரின் தலைமையின்கீழ் நாற்பது இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். மாலையில் சுவாமி பிரம்மானந்தாவும் நாடறிந்த எழுத்தாளர் கோ.புண்ணியவானும் இலக்கிய வாசிப்பும் படைப்பும் பற்றி அருமையாதொரு கலந்துரையாடலை  வழிநடத்தினர். இலக்கிய வாசிப்பும் படைப்பும் மனிதனை எப்படி உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்று சிறுகதைகள் கவிதைகள் வழி சான்று காட்டினர். இரவில் கலைநிகழ்ச்சிக்கு முன்பாக பாரதியும் அமுதத் தமிழும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். காலந்தோறும் தமிழின்பத்தில் தோய்ந்த அறிஞர்களிலிருந்து பாரதி எந்தளவுக்கு வேறுபடுகின்றார் என்பதை தெள்ளுற்ற தமிழின் சுவை கண்டார்- இங்கு அமரர் நிலை கண்டார் எனும் அவனின் ஒற்றை வரி போதும் தமிழை எந்தளவுக்கு மாந்தி உண்டு வாழ்ந்திருக்கின்றான் என்பது புரிய வரும். உரைநிகழ்த்தி இரவில் வீடு திரும்புகையில் தமிழ்மொழியின் வடிவச் செயல்பாடு குறித்து கேள்விகள் தொடர்ந்து உள்ளிருந்து கேட்டன. முன்னோர் உயிரெழுத்து’, மெய்யெழுத்து’, உயிர்மெய் எனப் பெயரிடக் காரணமென்ன?. மெய் என்றால் உடல் என்றும் உண்மை என்றும் பொருளாகின்றது. மொழியின் பின்னுள்ள மெய்யியல் எது? தமிழொலிகளைக் கூர்ந்தாய்ந்து  ஒன்றை உயிரென்றும் மற்றொன்றை மெய்யென்றும் பாகுப்படுத்திய அறிவாளி யார்?. இன்று எவ்வளவோ தொழிற்நுட்பமெல்லாம் பயன்படுத்தி சோம்ஸ்கி போன்ற பலநூறு மாபெரும் மொழி அறிஞர்கள் மொழி என்பதை வெறும் தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகம் (language - communication tools) என்று வரையறுக்கும்போது  அதை பல்லாயிரம் காலந்தொட்டே நம் பாட்டன் முப்பாட்டனால் உயிராகவும் மெய்யாகவும் எப்படி பார்க்க முடிந்தது என்பது எனக்கு வியப்பாகவே உள்ளது?. மொழியை ஊடகம் என்ற சடப்பொருளிலிருந்து விலக்கி உடல் தாங்கி வந்த உயிராகக் காணுதல் என்பதே மிகப்பெரும் தத்துவமாகவும் அறிவாகவும் எனக்குத் தோன்றுகிறது. அகமும் புறமும் இருபக்கங்களாய் இணைந்த இந்த வாழ்வையே அக இலக்கியங்களும் புற இலக்கியங்களும் பகுத்துக் கூறும்போது தமிழரின் தெளிந்த சிந்தனை எண்ணியெண்ணி வியக்கத் தொன்றுகிறது. வாழ்வைக் கொண்டாடும் மெய்யியலைத் தமிழ் இயல்பாக தன்னகத்தே கொண்டுள்ளதைத் தமிழர் பெரும் முயற்சி கொண்டு ஆழ்ந்து அறியாதவரை தமிழமுதச் சுவையைச் சொல்லால் சொல்ல முடியுமேயன்றி உயிரால்  உணரவே முடியாது?

கருத்துகள் இல்லை: