புதன், 4 ஜூலை, 2018

வாழ்வின் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்?


ஐயா குழ.செயசீலனார் இறப்பின் இறுதி ஊர்வலத்தில் இருந்தபோது எண்பதுகளின் இடைக்காலத்தில்  ஐயாவிடமும் என்னிடமும் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிலர் அவரின் பிரிவுச் செய்தியைக் கேள்விப்பட்டு இறுதி மரியாதை செலுத்த ஓடோடி வந்திருந்தனர். அவர்களில் பலரை நான் பார்த்து முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஐயாவின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய கண்களோடு என்னிடம் தங்களது ஆழ்ந்த துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஐயாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சூழலில் சில மாணவர்கள் மிகுந்த மரியாதை காரணமாக வணக்கம் கூறி காலை தொட்டு வணங்க முற்படுவதை அறிந்து தவிர்க்க முயன்றேன். சில மாணவர்கள் உருவத்தால் நிரம்ப மாறியிருந்தாலும் அன்றிருந்த அன்பு கிஞ்சிற்றும் மாறாமல் நடந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. “ஐயா, நீங்களும் ஐயாவும் எங்களுக்கு சொன்னது எல்லாம் என்றுமே நினைவில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அதைதான் எங்கள் பிள்ளைகளுக்கு இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்” கண்ணீர் மல்க இன்று நான்கு பிள்ளைகளுக்குத் தாயான அந்த மாணவி என் இரு கைகளையும் பிணைத்தபடியே சொன்னார். “நம்ம ஐயா நேர்த்தியாகவும் எடுப்பாகவும் உடை உடுத்தி தோன்றும் அழகு கண்ணில் தெரிகிறது. ஐயா, அவ்வளவு திருத்தமாக அழகாகப் பேசிய தமிழ் இன்னும் நெஞ்சில் இனிக்கிறது. அவரை இடையில் வந்து கண்டு பேசலாம் என்று காலத்தைத் தள்ளிப்போட்டு இந்தச் சூழலில் காண்பதுதான் மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது” மற்றொரு மாணவர் என் உள்ளங்கையை இறுகப்பிடித்தபடியே உருகினார். “எப்போதும் காலத்தை நாம் தள்ளிப்போடவே கூடாது. எப்போது நேரம் வாய்க்குமோ நமது அன்புக்குரியவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்பதை நானும் சில இழப்புகளுக்குப் பிறகு உணர்ந்திருக்கின்றேன். அதனால்தான் நான் இப்போதெல்லாம் யாரை சந்திக்க வேண்டுமென நினைக்கின்றேனோ அவரைக் காலத்தை தள்ளிப் போடாமல் சென்று கண்டு வருவதைக் கடமையாகக் கொண்டிருக்கின்றேன். ஐயாவை இருவாரங்களுக்கு முன் சந்தித்து நெடுநேரம் உரையாடியது கொஞ்சம் ஆறுதல் தருகின்றது” அந்த மாணவர்களை சிறிது ஆற்றுப்படுத்தினேன். “ஐயா, நீங்கள் எங்களை பள்ளி பக்கத்தில் இருக்கும் ஆற்றங்கரைக்கும் காடுகளுக்கும் மெதுவோட்டம் செல்வதற்காக அழைத்துச் செல்வீர்களே அந்த இன்பத்தை ஆயுளுக்கும் மறக்க முடியாது” பிரிவின் துயரை மாற்றும் நோக்கில் அந்த நிகழ்ச்சியை இன்னொரு மாணவர் உணர்ச்சியோடு பகிர்ந்தார். அவர்கள் என் பழைய நினைவுகள் எல்லாம் தூசு தட்டியது மீண்டும் என்னைப் புதுப்பித்தது.  நான் ஏட்டில் உள்ள அறிவைவிட அனுபவங்களின் வழி கண்டடைந்ததைதான் அன்று முதல் இன்றுவரை வகுப்பில் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய கணினி வளர்ச்சி பயன்பாடு பற்றி எல்லாம் கற்றல் கற்பித்தல் தேவைக்கும் பயன்படுத்துவேனேயன்றி வேறெதுவும் பெரிதாகத் தெரியாது. தொழிற்நுட்பம் கோட்பாடு என எல்லாக் குழப்பங்களையும் துறந்து என்னுள்ளே முகிழ்க்கும் உள்ளுணர்வின் வழியில் வெளிப்படுபவனவற்றையே மூலதனமாக உள்ளன்போடு இன்று கல்லூரி நிலையிலும் மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளவே விரும்புகின்றேன். என்னுள்ளேயிருந்து பீறிட்டுக் கிளம்பும் உணர்வு கலந்த சொற்கள் இன்னும் வாழ்வின் வெளியில் பதிவு செய்யப்படாத எத்தனையோ கொண்டாட்டங்களையும் அழகியலையும் துயரங்களையும் பகிரவே விரும்புகின்றது. இன்னும் இன்னும் கற்க வேண்டிய விசயங்களும் தொடர்ந்து ஓட வேண்டிய தூரங்களும் நீண்டுகொண்டே செல்வதை உள்ளூர உணர்கின்றேன். இந்த வாழ்வின் தேடலில் உடன்பாடும் முரண்பாடும் மோதிக்கொண்டாலும் நான் ஓடுவதை நிறுத்திக் கொண்டதே இல்லை. இன்று ஏழாம் அறிவு வெளியிலிருந்து கொட்டுவதையும் கையேந்தி மாணவனாக கற்று வருகின்றேன். உலகியலில் என்றும்  மாணவனாக  என்னை உருமாற்றிக் கொண்டபின் கற்கும் ஆர்வம் ஆழ்கிணற்று ஊற்றைப்போல் ஊறுகிறதேயன்றி சலிப்புத் தட்டியதே இல்லை. மறைந்த ஐயா குழ.செயசீலனாரும் ஆசிரியனானவர் தேடலை வாழ்வின் இறுதிவரை தொடர்பவராக இருக்க வேண்டும் என்றே வலியுறுத்துவார். அசுர தேடல் உள்ளவன் நிச்சயம்  தேடியதைக் கண்டைவான் என்று எனக்கு முன்னே சொன்னதைதான் நான் என் மாணவர்களுக்குச் சொல்கின்றேன். மனித வாழ்வின் முடிவற்ற தேடலில் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்?

கருத்துகள் இல்லை: