ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கற்றல் கற்பித்தலில் மாணாக்கர் அகத்தூண்டலை ஊக்கும்
மாற்றுவழிச் சிந்தனைகள்


1.   அறிமுகம்
அன்று மாணாக்கரின் ஆட்காட்டி விரலை ஆசிரியர் அழுந்த பிடித்து மணலில் இரத்தம் தோய அரிச்சுவடி கற்ற காலம் கனவாய்ப் போய், பசும்பலகையில் வெண்கட்டியால் கோலமிட்ட காலம் பழங்கதையாய்ப் போய், தாள்களில் எழுத்துகளின்மேல் எழுதிய காலமும் மெல்ல அருகிப்போய், இன்று மின்னியல் தொடுத்திரைகளின் ஊடாக ஒளிவழியாக எழுதும் காலத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டாலும் இன்றைய கல்வி மதிப்பீடுகளின் வாயிலாகப் பெரும்பாலும் மாணாக்கர் சிந்தனை விரிவாக்கம் பெறாமல் குறுகியே கிடப்பது கண்கூடு.

பொதுவாக இன்றைய கல்விச்சாலைகளில் செயல்படுத்தப்படும் கற்றல்கற்பித்தலில் மாற்றுவழிச் சிந்தனைகளின் வெளிப்பாடு மிகமிகக் குறைவே என்று அறுதியிட்டுக் கூறலாம். வகுப்பறையில் மாணாக்கர் எதிர்கொள்ளும் அனைத்துக் கற்றல் சவால்களையும் களைந்தெடுக்க மாற்றுவழி உள்ளது. இம்மாற்றுவழிச் சிந்தனை சட்டென மாணாக்கர் கண்களுக்குப் புலனாவதில்லை. மாணாக்கர் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை ஆகியவற்றை ஆசிரியர் சரியான முறையில் மாற்றி அமைத்தால் நிச்சயம் கல்வி உலகில் பல புதுவழிகள் பிறக்கும்.

2.   கல்வி உலகில் மாற்றுவழிச் சிந்தனைகள்
எதிர்காலத்தில் கல்விக்கூடத்திலிருந்து வெளிவரும் மாணாக்கர் தமது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் சவால்களையும் அறிவார்ந்த முறையில் வென்றெடுக்கும் வல்லமையை ஊக்கும். இன்றைய பள்ளிச் சூழலில் பெரும்பாலும் மாணாக்கரின் சிந்தனை விரிவு பெறாமால் குறுகிய நிலையிலேயே முடங்கிக் கிடப்பது வேதனையளிக்கிறது. மாணாக்கர் கண்பட்டை கட்டப்பட்ட பந்தய குதிரைகள்போல் தேர்வு இலக்கை நோக்கியே ஆசிரியர்களின் கடிவாளத்தால் கட்டப்பட்டுள்ளனர். மாணாக்கர் மாற்றுவழிச் சிந்தனையின்றி ஆசிரியர்களின் சிந்தனை நேர்க்கோட்டில் ஓடுவதற்கு பலகாலமாக பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.
கல்வி உலகு மேலும் புத்துணர்வுப் பெறுவதற்குக் கல்வியில் மாற்றுவழிச் சிந்தனை இன்று மிக அவசியமாகிறது. கற்றல் கற்பித்தலில் இயல்பாக வெளிப்படும் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு இன்று இறுக்கமான கற்றல் சூழலை மாற்றியமைக்கும் அருமருந்துதான் இந்த மாற்றுவழிச் சிந்தனை. ஆசிரியரின் பணிச்சுமையும் மாணாக்கரின் மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியையும் தொடர்ந்த தேடுதலையும் ஏற்படுத்தி புதிய கண்டடைதலை மாற்றுவழிச் சிந்தனை நிச்சயம் உண்டாக்கும்.

3.   கற்றல்கற்பித்தலில் மாற்றுவழிச் சிந்தனைக் கோட்பாடுகள்
மாற்றுவழிச் சிந்தனை என்பதைக் குறுக்குவழியென கொள்ளலாகாது. ஆழ்ந்து நோக்கினால் மாற்றுவழி என்பது நமது வாழ்வில் எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் மேற்கொண்டிருப்போம் அல்லது நமது செயல்பாட்டில் வெளிப்பட்டிருக்கும். மாற்றுவழி என்பது நடப்பதற்கும் பயணம் செய்வதற்கு மட்டுமல்ல நம் மனத்திலும் சிந்தனையிலும் உடன் வந்து கொண்டேயிருக்கும். அதற்கான உரிய சூழலும் சந்தர்ப்பமும் வாய்க்கும்போது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
மாற்றுவழிச் சிந்தனை என்பது ஒரு விசயத்தை இப்படிதான் சிந்தித்து செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளைத் தற்காலிகமாக மறந்துவிட்டு வெவ்வேறு விதங்களில் சிந்தித்து செயல்படுவது. பெரும்பாலும் இந்த மாற்றுவழிச் சிந்தனைகளால் நேரம் மிச்சமாவதோடு கடின உழைப்பில்லாமல் எளிதாக சிக்கல் களைந்து மேலும் உற்சாகத்தோடு செயல்படும் நிலையை எய்த வாய்ப்புள்ளது.
நமது புராணங்களில் கூட கடவுளர்களே மாற்றுவழிச் சிந்தனையில் செயல்பட்டு வெற்றியடைந்திருப்பதாகவே காட்டப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு நாரதர் கொடுத்த ஞானப்பழத்தைப் பெறுவதற்கு கணபதியும் முருகனும் போட்டியிட்ட கதையை அறிந்திருப்பீர்கள். ‘யார் இந்த உலகத்தை மூன்று முறை சுற்றி வருகிறீர்களோ அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்’ என்று போட்டி தொடங்குகிறது.
முருகன் உடனே மயிலோடு புறப்பட்டு உலகைச் சுற்ற தொடங்குகிறார். ஆனால் கணபதியோ மாற்றுவழிச் சிந்தனையை மேற்கொண்டார். ‘அம்மை அப்பன்தானே எனக்கு உலகம். இந்த உலகைச் சுற்றுவதைவிட என் பெற்றோரைச் சுற்றி வருவது உலகைச் சுற்றுவதாகாதா’ என நாரதரிடம் தெளிவடைந்து ஞானப்பழம் பெற்றது புராணமானாலும் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கணபதியின் மாற்றுவழிச் சிந்தனையையே.
பள்ளிச் சூழலில் ஏற்கெனவே பிறரிடமிருந்து பெறப்பட்ட முன்முடிவுகளானது மாற்றுச் சிந்தனைக்குப் பெருந்தடைக்கல்லாக அமைகிறது. முன்னமே மூளையில் திணிக்கப்பட்ட தகவல்களானது வித்தியாசமான மாற்றுவழிச் சிந்தனையைப் பெரிதும் பாதிக்கிறது. மரபுரீதியாக காலங்காலமாக ஒருவரிடமிருந்து வழங்கப்பெற்று மனத்தில் கொள்ளப்படும் முன்முடிவானது மாற்றுச் சிந்தனையின் வாயில்களை அடைத்துவிடுகிறது
கல்வியில் மாற்றுவழிச் சிந்தனை என்பது ஒழுங்குகளை மீறாமல் சட்டத்தை புறந்தள்ளாமல் வழக்கமான மாணவர் சிந்தனைத் தடத்தை மாற்றி மேலும் ஆழ்நோக்கு நிலையை வளர்ப்பதேயாகும். ஒரு விசயத்தை இப்படித்தான் அணுக வேண்டும் என்று கல்வி உலகம் வரையறுத்து வைத்திருக்கும் விதிமுறைகளை மாற்றி, கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து, குறைந்த நேரத்தில் நிறைந்த பயன் எய்துவதோடு கற்றலில் உள்ள மலர்ச்சியைத் தூண்டும் ஒரு பெருமுயற்சிதான் இந்த ஆய்வை மேற்கொள்ளும் முக்கிய நோக்கமாகும்.

4.   அகத்தூண்டலை ஊக்கும் மாற்றுவழிச் சிந்தனைக் கற்றல்கற்பித்தல்
மாற்றுவழிச் சிந்தனை என்பது நடனம், ஓவியம் போன்ற கலைகள்போல் பிறவியில் அமைந்தாலும் சிக்கல் ஏற்படும்போது பெரும்பாலோர் தம்மையறியாமலே இம்முறையைப் பின்பற்றத் தவறுவதில்லை. வழக்கத்தில் எந்த ஒரு பணியையும் இப்படிதான் செய்யவேண்டும் என்று எழுதப்படாத ‘நேர்’ வழிமுறை இருக்கிறது. அதைக் கொஞ்சம் மாற்றி யோசிப்பதைத்தான் மாற்றுவழிச் சிந்தனை என்கிறோம்.
ஆசிரியரொருவர் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களின் கூட்டுத்தொகையை யார் விரைவில் சொல்வது எனக் கேட்டார். பலரும் 1+2+3+4+5+6+7+8+9 = 45 என விரல் விட்டுக் கூட்ட ஒரு மாணவன் மட்டும் எண்களைப் பத்தின் அடிப்படையில் இணையாக்கி  (1+9, 2+8, 3+7, 4+6, +5= 45) என்று நொடியில் பதில் சொல்கிறான்.

மேற்கண்ட எடுத்துக்காட்டில் எல்லா மாணவரும் நேர்வழியைப் பயன்படுத்த அந்தக் குறிப்பிட்ட மாணவன் பயன்படுத்திய நுட்பத்தைத்தான் மாற்றுவழிச் சிந்தனை என்கிறோம்.
மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் நினைவில் எளிதாக வைத்திருப்பதற்கு ஆசிரியர் மாற்றுவழிச் சிந்தனை மூலம் ஊக்கலாம். வகுப்பறையில் அறிவியல் ஆசிரியர் கிட்டப் பார்வை உள்ளவர் குழி ஆடியும் தூரப் பார்வை உள்ளவர் குவி ஆடியும் அணிய வேண்டும் என்று எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் எத்தனை மாணவர்களின் நினைவில் நிலைத்திருக்கும். அதையே ‘கிட்டக் குழி வெட்டி எட்டக் குவி என்ற தொடரால் அகத்தூண்டலை உண்டாக்கலாம். இத்தொடரை விளக்கினால் கிட்டத்தில் குழி வெட்டி மண்ணை தூரத்தில் குவித்து வைக்கிறோம். இதை நினைவில் வைத்துக்கொண்டால், கிட்டப் பார்வைக்குக் குழி ஆடி, தூரப் பார்வைக்கு குவி ஆடி என்பதை மாணவர் எளிதில் நினைவில் நிறுத்திக் கொள்வர்.
தினமும் நாளிதழ் படிக்கிற அனைவரும் எல்லா விளம்பரங்களையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. நாளிதழில் வெளிவரும் விளம்பரங்களுள் ஏதேனும் ஒரு விளம்பரம் தலைகீழாகவோ வித்தியாசமாகவோ அச்சிடப்பட்டிருந்தால் வாசிப்பவர் நினைவிலிருந்து அது தப்பாது. இயற்கையில் நடக்கும் இதையே நாமாக மாற்று வழியில் சிந்தித்துக் கற்பதே ஒருவித புத்திசாலித்தனம்தான். இம்மாற்றுவழிச் சிந்தனையைப் பயன்படுத்தி நினைவாற்றலை திறம்பட வளர்த்துக் கொள்ளமுடியும்.
எதையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறை வைத்துக் கொள்ளாமல் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டால் மாற்றுவழிச் சிந்தனையால் எதையும் அடையலாம். ஆனால் கற்பனைக் காட்சியில் எல்லாக் கூறுகளும் ஒன்றோடொன்று தொடர்பு உள்ளதாக இருப்பது அதிமுக்கியம். எப்போதும் பார்க்கும் கோணத்தை கொஞ்சம் மாற்றினாலே அதன்மூலம் முற்றிலும் வேறுபட்ட இன்னொரு காட்சியைப் பார்த்த உணர்வும் சிந்தனையும் மகிழ்ச்சியும் பெறலாம்.

5.   மாணவர் சிந்தனையை மையப்படுத்தும் கருத்தூற்று முறைமை
‘மனமும் வான்குடையும் ஒன்று’ என்று ஒரு மேலைநாட்டு பொன்மொழி உண்டு. இவை இரண்டும் திறந்திருந்தால்தான் பயன் தரும். கற்றல்கற்பித்தலில் எந்த ஒரு சிக்கலுக்கு முடிவெடுக்கும்போதும், அதைப் பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்க மாணாக்கரைத் தூண்ட வேண்டும். மாணாக்கரின் கோணங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக இல்லாவிடினும் அசட்டுத்தனமாகத் தோன்றினாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் அவ்வாறு சிந்திப்பதைத் தூண்டிக் கொண்டே இருத்தல் அவசியம். ‘சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்’ என்று சொல்வது தப்பானது. ஏற்கெனவே இருக்கும் புவி ஈர்ப்பு விசையை மற்றவரைவிட மாறுபட்ட கோணத்தில் அடையாளம் கண்டதுதான் அவரின் சாதனை என்பதை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டும்.
கற்றல்கற்பித்தலில் கருத்தூற்று முறைமையானது மாணாக்கர் மாற்றுவழிச் சிந்தனைக்குப் பயன்படும் சிறந்த மேலாண்மை உத்தியாகும். ஒரு குறிப்பிட்ட சிக்கலை எடுத்துக்கொண்டு அனைவரும் அதைத் தீர்ப்பதொன்றே நோக்கமாக எண்ணிச் செயல்பட ஆசிரியர் வழிகாட்டலுடன் தூண்டினால் சிறந்த விளைபயன் எய்தலாம். எடுத்துக்காட்டிற்கு பணி ஓய்வு பெறவிருக்கும் ஆசிரியருக்கு எத்தகைய வித்தியாசமான பரிசு தரலாம் என்பதைக் கருத்தூற்று முறைமையில் மாணாக்கரிடம் கேட்கலாம். என்ன வித்தியாசமான பரிசுப்பொருளை ஆசிரியருக்குத் தருவார்கள் என்பதைவிட கிடைத்த பணத்திற்கொப்ப கைக்கடிகாரம், நூல், சட்டை என ஒவ்வொருவரும் காரண காரியத்தோடு தொடர்புப்படுத்திச் சொல்வதை கண்டறியலாம். பல மூளைகளின் கற்பனையை ஒன்றாகச் சாறு எடுத்துத் தரக்கூடிய அற்புத அணுகுமுறை இது. இந்த மாணாக்கர் மூளைகளெல்லாம் ஒன்றாகச் சேரும்போது கிடைக்கும் விவாதக்களம் புதிய சிந்தனைகளுக்கான சூழலை உருவாக்கித் தருகிறது.
இந்த மாற்றுவழிச் சிந்தனையான கருத்தூற்றுமுறைமை வகுப்பறையில் செயல்படுத்தும்போது ஆசிரியர் சிக்கலை எளிமையாக விளக்குவதோடு எம்மாதிரியான தீர்வு எதிர்பார்க்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். மாணாக்கரின் கருத்து சரியா பிழையா என்றெல்லாம் புறந்தள்ளாமல் தங்கள் சிந்தனைக்குத் தோன்றுவதைத் துணிவோடு கூறுவதற்கு ஊக்கமூட்ட வேண்டும். அவற்றை கவனமாகப் பதிவு செய்வதோடு மாற்றுவழிச் சிந்தனைகளை வரவேற்கும் விதத்தில் மாணாக்கரைத் தூண்டுவது அவசியம். அந்தத் தீர்வுகளில் மறுத்துப் பேசும் விவாதங்களை முறைப்படுத்தி ஆரோக்கியமான அலசல் ஏற்பட நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.
எல்லா மாணாக்கருக்கும் பேச வாய்ப்பளிப்பதோடு ஒரே சிந்தனையை நெடுநேரம் விவாதித்து வீணடிப்பதைத் தவிர்ப்பதோடு அடுத்த நிலைக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டும். ஒருவருடைய மாற்றுச் சிந்தனையை மற்றொருவர் ஏற்றுக் கொண்டு மேம்படுவதை ஊக்கவேண்டும். அனைத்து மாணாக்கரின் சிந்தனைகளைத் தொகுத்துச் சொல்லி வழிநடத்துவதும் அவற்றில் சிறப்பான மாறுபட்ட சிந்தனையை தேர்வு செய்து பாராட்டுவதும் மாணாக்கர் மனத்தில் நம்பிக்கை உரமூட்டும்.
புராணங்களில் தறிகெட்டு ஓடாமல் ஏழு குதிரைகளையும் கடிவாளத்தால் சரியான திசைநோக்கிச் செலுத்தும் சூரிய பகவானப்போல் ஆசிரியர் செயல்பட வேண்டும். தொடக்கத்தில் ஆசிரியர் செய்யும் இப்பணியை நாளடைவில் சுழல்முறையில் மாணாக்கரே செயல்படுத்த ஊக்குதல் அவசியம். ஆசிரியர் தேவையானபோது மட்டுமே உள்நுழைவு செய்தல் வேண்டும். இம்முறை வழி மாணாக்கர் மையக் கற்றல் அதிகரிப்பதோடு தங்கள் செயல்பாட்டில் தன்னிறைவு கொள்ள வாய்ப்புண்டு.

6.   மாணவர் மனத்தை விரிவாக்கும் மனவோட்டவரை
மாணாக்கரின் அறிவில் மாற்றுவழிச் சிந்தனைகளை விதைப்பதற்கு மனவோட்டவரை முறையை மேற்கொள்ளலாம். இயல்பிலேயே மாணாக்கர் மனம் எழுத்துகளை மட்டுமல்ல படங்கள் வண்ணங்கள் போன்றவற்றை தொடர்புப்படுத்தியே பார்க்க விரும்புகிறது. எதையும் ஓர் ஒழுங்கோடு பார்க்க கற்றல்கற்பித்தலில் மாணாக்கர் மனத்தைப் பழக்கினால் அவர்கள் பொதுத்தன்மையோடும் தர்க்கரீதியாகவும் நோக்கும் ஆற்றல் பெறுவர். மேலும் எழுத்துக்களாக அனைத்தையும் கொடுப்பதைவிட மனவோட்டவரை துணையுடன் காட்சிபூர்வமாக்கினால் புதிய  உடனடித் தீர்வுகளை எளிதில் புரிந்து கொள்வர்.
பாடத்தில் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்வரை மனவோட்டவரையில் மையத்திலிருந்து முதல் கிளைகள், வேறு உபகிளைகள், சிறுகிளைகளென சிந்தனையைப் பல கோணங்களில் படரவிடலாம். ஒவ்வொரு கிளையிலும் குறைந்த வார்த்தைகளில் நிறைய விசயங்களைச் சொல்லப் பழக்க வேண்டும். வெளிப்படும் அனைத்துக் கருத்துகளையும் வரைபடமாகக் குறித்து வைக்க மாணாக்கரைப் பழக்கினால் எதிர்காலத்தில் வாழ்வில் எதிர்ப்படும் எந்தச் சிக்கலையும் மனவோட்டவரைவின் மூலம் அணுகி வெற்றி பெறுவர்.
அன்றாட கற்றல்கற்பித்தல் செயல்பாடுகளில் வண்ணங்கள் மாணாக்கர் மனத்தில் பல்வகையான தாக்கங்களையும் குணங்களையும் ஏற்படுத்துகின்றன. ஆக இம்மனவோட்டவரை மேலும் மாணாக்கர் மனத்தில் ஆழப்பதிய மூன்று அல்லது நான்கு விதமான நிறங்களை பயன்படுத்த ஆசிரியர் ஊக்குதல் சீரிய விளைபயன் நல்கும். தேர்ந்தெடுத்த ஒவ்வொரு நிறத்திற்கும் என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் அவசியம். எடுத்துக்காட்டுக்கு முதன்மைத் தீர்வுக்கு பச்சை நிறமும் அடுத்த நிலைக்கு மஞ்சள் நிறமும் குறைவான சாத்தியம் உடையவற்றுக்கு சிவப்பு நிறமுமென வகைப்படுத்தத் தூண்டலாம்.
மாணாக்கர் மனவோட்டவரையைக் கைவரப்பெற்ற நிலையில் ஏற்புடைய பொம்மைச் சின்னங்களையும் இணைத்துக் கொள்ள தூண்டலாம். மனவோட்டவரையில் எங்கெல்லாம் புதிய சிந்தனை இருக்கிறதோ அங்கெல்லாம் சூரியனையும் நிச்சயமில்லாத விசயங்களுக்கு கேள்விக்குறியையும் இதுபோல ஏற்புடையவற்றை  வரைய மாணாக்கரைத் தூண்டும்போது மகிழ்ச்சியான விளையாட்டாய் கற்றலில் ஈடுபடுவர். மனவோட்டவரையில் தகவல்களை எப்படி வேண்டுமானாலும் எழுதலாமென்று கருத்து இருந்தாலும் மாணாக்கர் நிலைக்கு இடமிருந்து வலப்பக்கமாக எழுதத் தூண்டுதல் வேண்டும். மையத்தில் தொடங்கிப் பிரியும் கிளைகளை அவற்றின் முக்கியத்துவ அடிப்படையில் கடிகாரச் சுழற்சிமுறையில் எழுதுதல் நலம். கடிகார முள் பன்னிரண்டில் தொடங்கி நகர்வதுபோல மாணாக்கரின் மனவோட்டவரை கிளைகளும் விரிந்தால் வாசிப்பதற்கு வசதியாக இருக்கும்.
வண்ணங்களையும் சின்னங்களையும் சரியான ஒழுங்குடன் பயன்படுத்தி மனவோட்டவரை செய்தால் மீள்பார்வை செய்யுங்கால் நேரம் மிச்சமாவதோடு  வண்ணங்களே பல விசயங்களை சட்டென்று குறிப்பாக உணர்த்திவிடும். மேல்நிலை வகுப்புகளில் காகிதத்தில் வரையப்பட்ட இந்த மனவோட்டவரையை மென்பொருள் துணைக்கொண்டு கணினியில் வரைவதற்கும் தூண்டலாம். மனவோட்டவரை மாணாக்கரின் வழக்கமான சிந்தனைப் போக்கிலிருந்து விலக்குவதோடு சார்பு எதிர்வு கருத்துகளையும் அலசி ஆராய்வோதடல்லாமல் புதிய முறையில் யோசிக்கவும் அகத்தூண்டலை ஏற்படுத்துகிறது.

7.   தொகுப்புரை
வகுப்பறைக் கற்றல்கற்பித்தலில் ஏற்படும் எத்தகையச் சிக்கலையும் மேற்கண்ட மாற்றுவழிச் சிந்தனையைப் பாடத்தினூடே செயல்படுத்துவதனால் ஆசிரியர் சீரிய விளைபயன் அடையலாம். இம்முறைமையானது மாணாக்கரிடம் நேர்மறைப் பண்பையும் இணக்கப்போக்கையும் தன்னம்பிக்கையையும் பிறரின் மாற்றுக்கருத்தை ஏற்கும் திறந்த மனப்போக்கையையும் வளர்க்கிறது. இம்மாற்றுவழிச் சிந்தனையானது நாளடைவில் மாணாக்கர் கற்பனைத் திறத்துக்கேற்ப எந்த வரையறைக்குள்ளும் கட்டுப்படாமல் வித்தியாசமாகச் சிந்தித்து தினசரி வாழ்வில் வெற்றியடைய வழிவகை செய்கிறது. மாணவர் இதற்குமுன் தம்வாழ்வில் கற்பனைகூடச் செய்திராத பல புதிய வாசல்களை இம்மாற்றுவழிச் சிந்தனைகள் நிச்சயம் திறந்து வைக்கும்.




துணை நூல்கள்:

மீனாட்சி சுந்தரம், அ. கல்விப் புதுமைகள் மற்றும் மேலாண்மை, காவ்யமாலா
   பப்ளிசர்ஸ், சின்னாளப்பட்டி, 2010

சாலமன், சிபிகே. மாறுபட்டு யோசித்தால் ஜெயிக்கலாம், கிழக்குப் பதிப்பகம்,
   சென்னை, 2009

David J.Schwartz, The Magic of Thinking BIG,  New Literacy Learning, 2007

Neil, Diane & Carol, Educational Game: Answering The Call, United Publications,
   London, 2007

இணையதளம்:

Mind manager (http://www.mindjet.com/)









கருத்துகள் இல்லை: