சனி, 31 ஜனவரி, 2009

பாரதிதாசன் ஒரு நெருப்புத் தென்றல்

பாரதிதாசன் ஒரு நெருப்புத் தென்றல்
புதுவைப் பூஞ்சோலையில் கன்னல் தமிழ்ச்சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவைக் கலந்து ஊன் மணக்க உயிர் மணக்க கூவிக் கொண்டிருந்த தமிழ்க்குயிலுக்கு ஒரு நூற்றாண்டு வசந்தம் உருண்டோடிவிட்டது.

புதுவையிலிருந்து புறப்பட்ட இந்த நெருப்புத் தென்றல் நிலவும் கதிரும் உள்ளவரை தமிழ்மணத்தைச் சுமந்து என்றும் தளிர்நடை பயிலும். இந்தச் சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்றுமே தமிழ் நெஞ்சக் கலயங்களிலே கொஞ்சி சிரிக்கும் இந்த சமத்துவக் கொள்கையின் சாரத்திற்கு ஆயுள் சிரஞ்சீவி என்பதாகும்.

பாளைச் சிரிப்பு; பசு நெய்யின் நறுமணம்; வாளைமீனின் துள்ளல்; வரிப்புலியின் கனல் பார்வை எல்லாமே இணைந்திட்ட கவிதைச் சுரங்கமே பாரதிதாசன்.தன்னுயிரை தமிழ் என்று சொன்னதால் இம்மண்ணுயிர் உள்ளவரை நம்மோடு வாழ்பவன்; நம் மனத்தை என்றும் ஆழ்பவன் பாரதிதாசன்.

கனகசபைப் பிள்ளைக்கும் இலக்குமி அம்மாளுக்கும் அருந்தவப் புதல்வனாய் முளைத்து மகாவித்துவான் பு.அ.பெரியசாமிப் புலவர் போன்ற ஆசான்களின் அறிவொளியில் கிளைவிட்டு பாரதியெனும் ஆலமர நிழலில் கனிவிட்ட இந்தக் கவிக்குயிலின் கவிதைக் குஞ்சுகள் மனித நேய உரத்தை உறிஞ்சி மண்ணிலெங்கும் மணப்பவை.

சாதி சமயச் சழக்குகளென்றும் சாக்கடைச் சுழிப்பில் சிக்கிச் சீரழிகிற, சிதறிக் கிடக்கிற சமுதாய மக்களை வலிமைமிகு கவிதைக் கரங்களால் தூக்க எழுந்த கவிஞன். மடமை, அறியாமை மண்டிய அழுக்கு மூட்டை சலக்குகளை மண்ணின் மைந்தர்களின் குட்டை மனங்களைக் கங்கையாய்ப் பொங்கிய கவிதை நீரால் வெளுக்க வந்த அற்புதக் கவிஞன்.

தமிழ்ச் சமுதாயம் தலைநிமிரப் பாடிய தன்னிகரற்ற புதுமைக் கவிஞன்; புரட்சிக் கவிஞன். நிமிர்ந்த நடை; நேர் கொண்ட பார்வை என பாரதி காட்டிய இலக்கணத்தின் இலக்கிய வடிவமாகத் திகழ்ந்தவன்; புதியதோர் உலகம் தேடியவன்; பகுத்தறிவுக் கருத்துகளைப் பாடினான்; மூட நம்பிக்கைகளைச் சாடினான்.

இலக்கியப் புலமைக் கூடியவன்; முத்தமிழ் இயக்கம் நாடியவன்; வாடாத புகழ்மாலை சூடியவன் பாரதிதாசன். எடுப்பான தோற்றம்; துடிப்பான மீசை; வீர விழிகள்; ஆண்மைக்குரிய சிம்மக்குரல் இவையனைத்தையும் கொண்டு செந்தமிழ் நெஞ்சில் சீருலா வந்தவன்.

முதன் முதலாக அந்தக் கவிச் சிங்கத்தைக் காணுகையில் ஒருவகையான அச்ச உணர்வு கூடச் சிலருக்கு தோன்றக்கூடும் ஆனால் கவிஞரிடம் பழகத் தொடங்கிவிட்டால் வீர விழிகளில் ஈரம் ததும்பும், பாசமும் பால் போன்ற வெண்மையான குழந்தை உள்ளமும் அனைவரையும் காந்தமாய் ஈர்த்துவிடும்.

பாரதிதாசனது நறுக்குத் தெறித்தாற் போன்ற சிம்மக்குரலிலே நகைச்சுவையும் மானுடமும் இழையோடிக் கொண்டிருக்கும். இளைய வயதிலே கவிதைக் காதலியைக் கைப்பிடித்து, ‘கிறுக்கன்’,`கிண்டல்காரன்’ என்ற புனைப்பெயர்களில் எழுத்தோவியங்களைப் படைத்த இந்தத் தமிழ்க்குயில் பாரடி எனும் சூரியனோடு இரண்டறக் கலந்தபோதுதான் பாரதிதாசனாய் தமிழ்வானில் சுடர்விட்டது.

‘சுப்பிரமணியர் துதி அமுது’ என்ற நயம் ததும்பும் இசைப்பாடலின் மூலம் ‘சிந்துக்குத் தந்தை’ எனப் பெயர் பெற்று ‘புரட்சிக் கவி’ என்ற காவியத்தை செந்தமிழால் தீஞ்சுவை மிளிர, புரட்சிப் பூக்கள் பாக்களாய் மலர படைத்ததால் புரட்சிக் கவிஞராய் என்றும் உலாவரலானாய்.

பதினெட்டாம் அகவையின்போது தமிழ்ப்புலமையில் முதல் மாணவனாகத் தேர்வுப் பெற்ற பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞன். தமிழ் இலக்கிய அடர்த்திக்கு மட்டுமன்றி மானுடத்திற்கும் சேர்த்து தனது பா வளத்தால் உரமிட்டு சீரிய சிந்தனை உளியால் செதுக்க முற்பட்ட சமுதாயச் சிற்பிதான் நம் பாரதிதாசன்.

சீர்திருத்த புயலாய் மலர்ந்து, புரட்சிப் பொறிகளை புதுமைச் சிந்தனைகளைத் திரட்டுப் பாலொத்த தேன்தமிழ்ச் சொற்களோடு வாரி வீசிய வண்ணமிகுந்த அணையாத கவிதைக்கனல் பாவேந்தர். சாதிகள், சாத்திரச் சடங்குகளை, மூடப் பழக்கங்களை முற்றும் வெறுத்து குருதிக் கொப்பளிக்கும் கோபத்துடன் பாடினாலும் மானுட நேசம் மறக்காதவன்.

உழைப்பாளியின் சிவந்த கரங்களில் அழகைக் கண்டு வாழ்த்தியவன்; மனித விடுதலை மலர விரும்பியவன்; கைப்பெண்டிருக்காக குரல் கொடுத்தவன்; பெண்ணை என்றும் பெருமை செய்தவன்; மண்ணைப்போல் மிதிப்படும் மானிடரைப் பார்த்து ‘உன்னை விற்காதே’ என்று எச்சரித்தவன்; தமிழ்ப் பகைவர் கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்ற ஆண்மையாளன் பாரதிதாசன்.

விரைந்தோடும் வெள்ளமும் விசீயடிக்கும் புயற்காற்றும் இவன் நடை இயல்புகள்; வெள்ளத்தைத் தாக்கும் படை இல்லை; வீசும் புயற்காற்றை விலக்கும் தடை இல்லை. அதுபோல இவனது சொற்களில் எந்தச் சிக்கலான பொருளும் சுள்ளிகளைப்போல் நொறுங்கிப் போகும். சாதி சமய பெயரால் நிகழும் அடிமைத் தலையறுக்க போர்ப்பரணி பாடியது இவனது கவிதை. அந்த மிடுக்கு இவன் நடையின் அரசவைப் பெருமிதம்.

கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் இழைக்கப்படும் கொடுமைகளைச் சாடிய பாரதிதாசன் ஒரு தனி மனிதனின் பெயரல்ல; தமிழ் இன்பம் பொழிகின்ற கவிதைத் தொகுப்பின் பெயர். பாற்கடலாய் பரந்து விரிந்து தமிழ் மண்ணின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திட்ட இவனது உவமையழகு, உணர்ச்சித் துடிப்பு, புதுமை நோக்கு, புரட்சி வெடிப்பு அனைத்துமே அலைகளாய்ப் பொங்கியெழுந்து சீறிப் பாய்ந்தன; சிலம்பமும் ஆடின.

அந்தக் கறுப்புக் குயிலின் உள்ளத்திலிருந்து பீறிட்ட நெருப்புக் குரலோ இழிதகைமையை, ஈனச் செயல்களை மிதித்துத் துவட்டக் கூடியது. இந்தப் புதுவைக் குயில் தமிழின் இனிமையைப் பாடியது; நிலவின் அழகைப் பாடியது; ஆண்டாண்டுக் காலமாய் வாழ்ந்த அடிமை வாழ்வைச் சாடியது; ஏழ்மையை அழித்து பொதுவுடைமை அமைக்க குரல் கொடுத்தது.

வேரோடிப் பழகிவிட்ட வீண்பழமை மாய்ப்பதற்கே நேர்மைத் திறத்தோடும் உள்ளத் துணிவோடும் போராடச் சொன்னவன் புதுவைத் தமிழ்வேந்தன். வண்டமிழர் மாண்புரைத்தே கையிருப்பைக் காட்ட கடலாய் எழுகவென்றான்; சாதிமதக் கேடுகளைச் சாத்திரத்தின் பொய்மைகளைத் தீதென்றான்; தாழ்ந்தோர் தலைநிமிரத் தன்மானச் சங்கொலித்தான்.

பாம்பாகச் சீறும் பகைப் புலத்தோர் பல்லுடைத்து மேம்பாடு கண்டுயர மேன்மை நிலையுரைத்தான். கல்லார் நினைவிலும் கற்றோர் நாவினிலும் கல்லும் கரைந்துருகச் செய்யும் கவின் தமிழே பங்கம் உனக்கென்றால் பச்சைரத்தம் ஈவோமென்று அங்கம் கனன்றான் அரிமா முழக்கமிட்டான். தீங்கனியாம் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டைப் பாங்குறவே பேணப் பகுத்தறிவுப் பண்ணிசைத்தான்.

இனிமைத் தமிழிலேயே தன்னை சதையும் ரத்தமும் உணர்வுமாய் கரைத்துக் கொண்ட பாரதிதாசனை நினைக்க நினைக்க என்றும் என் நெஞ்சம் நெகிழ்ந்துப் போகும். அவனது தமிழ்க் காதலுக்கு நான் என்றும் அடிமை.

‘முழுமை நிலா, அழகு நிலா முளைத்தது விண்மேலே - அது பழமையிலே புதுநினைவு பாய்ந்தெழுந்தாற்போல’ என்று பாடிய இந்த நெருப்புத் தென்றலின் குரலை உணர்ந்து இனியாவது தமிழறிஞர்கள் பழம்பாடல்களுக்கு விளக்கம் கொடுப்பதிலே காலங் கழிக்காமல் மாறிவரும் காலச்சுழலுக்கேற்ப புத்தம் புதிய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் இதயத்தில் இடங்கொடுக்க வேண்டுகிறேன்.

1 கருத்து:

அனித்தா சொன்னது…

பாரதியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவியதற்கு மிகவும் நன்றி