திங்கள், 23 ஜூலை, 2018

வாழ்க்கையே விளையாட்டுதானே....


ஒவ்வொரு நாளும் என் குடும்பத்தில் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் குதூகலம் கூடி வருகிறது என்று சொல்லலாம். என் இரு மகள்களும் மனைவியும் ஒவ்வொரு நாளும் பொழுதும் விளையாடிய அணிகளை விமர்சனம் செய்யும்போது கண்டு வியக்கின்றேன். என் சின்ன மகள் ஒவ்வொரு காற்பந்து அணியைப் பற்றிய தகவல்களையும் நட்சத்திர காற்பந்து வீரர்களின் வரலாற்றையும் துல்லியமாக எப்படி தெரிந்து வைத்திருக்கிறாள் என்றெண்ணும்போது மலைப்புதான் ஏற்பட்டது. கூகள் அண்ணாவின் உதவியுடன் ஒவ்வொரு விளையாட்டரின் கோல் போட்ட வரலாறு சொன்னபோது அந்த வயதில் எனக்குக்கூட இந்தளவுக்கு ஆர்வம் இருந்ததில்லை. கடந்த 2014 உலகக் கோப்பையின்போது ஒன்றிரண்டு ஆட்டம் பார்த்துவிட்டு தூங்கியவள் இந்த விடுமுறையில் விடிய விடிய காற்பந்து ஆட்டத்தை ரசிக்கும் தீவிர ரசிகையாகிவிட்டாள். நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டினோ ரொனால்டோ, நெய்மார், சாலாக்,.. என யார்யாரோ வந்தாலும் அவளின் விருப்ப நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸிதான். மெஸ்ஸி ஆடிய ஆட்டங்களில் கோல்களைத் தவறவிட்டதும் குரோஸியாவுக்கான ஆட்டத்தில் 0-3 இல் படுதோல்வி அடைந்ததும் மிகவும் கவலைப்பட்டாள். நல்ல வேளையாக அன்று சினேகலுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா மெஸ்ஸியின் வழி ஒரு கோல் போட்டதும் துள்ளிக் குதித்து கவலையைத் தீர்த்துக் கொண்டாள். அவள் மெஸ்ஸிக்காகவே ஆர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரிதும் தெரிகிறது. பெரியவள் சின்னவள் அளவுக்குத் தீவிரம் இல்லாவிடினும் அவளுக்குப் போட்டியாக விளங்கும் அணிக்கே என்றும் ஆதரவு தெரிவிப்பாள். இருவருக்குமே என்றும் ஏட்டிக்குப்போட்டிதான். அதனால் அவர்கள் இருவருக்குமான மோதலில் நாநும் மனைவியும் தலையிடுவதில்லை. ஒருவழியாக அவர்களே சமாதானமாகி ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அதேவேளையில் இந்த முறை என் மனைவியும் இந்தப் பிள்ளைகளால் காற்பந்து ஆட்டத்தின் மீதுள்ள ஆர்வமும் தூண்டுதலும் அதிகரித்திருப்பதை மெய்யாக உணர்கின்றேன். ஒவ்வொரு நாளும் விடியற் காலையில்  நடைபெற்ற ஆட்ட முடிவுகளை எங்களுக்கு எழுந்ததும் சொல்வது மனைவிதான். அவளும் பிள்ளைகளோடு சேர்ந்து காற்பந்தாட்டத்தைப் பற்றி நுணுக்கமாக அலசலும் கணிப்புகளும் செய்வார்கள். காற்பந்து அணியின் ஆட்டத் திறத்தையும் போக்கையும் ஆராய்ந்து பெரும்பாலும் என் மனைவி செய்யும் கணிப்புகள் சரியாகவே நடப்பதை அறிந்து கொஞ்சம் மலைப்பாகவே அவளைப் பார்க்கின்றேன். நேற்றைய ஜெர்மனுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடத்தில் ஜெர்மன் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை வெற்றி தென்கொரியாவுக்குத்தான் என்றபோது ஜெர்மன் அணியின் விசிறியான என் பெரியமகள் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள். இப்படியே ஒவ்வொரு நாளும் காற்பந்து விழாவில் ஆழ்ந்து தோய்ந்துபோய் என் குடும்பம் செல்கிறது. எனக்கும் சிலசமயம் அவர்களுக்கு ஈடு சொல்லும் அளவுக்கு காற்பந்தாட்டத்தை நோக்கத் தெரியவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம் தொடங்கிய முதல் ஏதோ புதிதான ஒரு சூழலும் இதமும் எங்கள் குடும்பத்தில் ஊடுருவி இருப்பதை மெய்யாக உணர முடிகின்றது. அலகிலா விளையாட்டுடையான் என்று கம்பர் இறைவனைச் சொல்லும்போது சுற்றிச் சுழலும் இந்தக் கோள்கள் யாவும் இறைவன் உதைத்து விளையாடும் காற்பந்தாகவே என் கற்பனைக்குத் தெரிகிறது. ஆனால் என்ன இங்கு ஒரு பந்தை இருபத்துரெண்டு பேர் ஓடியாடி உதைக்கின்றனர். அங்கு அவர் ஒருவரே எண்ணிலடங்கா பந்தை உதைத்துத் தள்ளுகின்றார். விளையாட்டிற்கு மனித மனங்களை மட்டுமல்ல உலக நாடுகளையே ஒன்றிணைக்கும் பேராற்றல் உள்ளதுதானே?

தமிழமுதச் சுவை....


அமுதான தமிழே நீ வாழி! என் ஆவியிலே கலந்து நாவினிலே தவழும் என்று காலந்தோறும் தமிழை வாழ்த்தியும் வாழ்வாங்கு வாழ்ந்தவரான ஐயா சீனியாரின் வழிகாட்டலால் கொஞ்சம் தமிழ்ப்பால் உண்டவன் என்பதால் அதன் தித்திப்பை உயிரில் உணர்கின்றேன். அண்மையில் மறைந்த ஐயா குழ.செயசீலனாரின் நட்புறவால் தமிழின் அடர்த்தியையும் செறிவையும் உணர்ந்து விழிப்புற்றேன். இதுவரை வாழ்ந்த அனுபவத்தின் சாரத்தை மொழியின் மேல் நிதம் ஏற்றி ஏற்றி ஊனுருக உயிருருக ஊற்றி ஊற்றி இந்த வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் மதுவுண்ட வண்டாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றேன். கடந்த சனிக்கிழமை சுங்கைகோப்பு பிரம்மவியாரண்யத்தில் மலைச்சாரலை நோக்கி பாரதி பயணம் எனும் தாப்பா மாவட்ட தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்ணாக திருவாட்டி இராமேசஸ்வரின் தலைமையின்கீழ் நாற்பது இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். மாலையில் சுவாமி பிரம்மானந்தாவும் நாடறிந்த எழுத்தாளர் கோ.புண்ணியவானும் இலக்கிய வாசிப்பும் படைப்பும் பற்றி அருமையாதொரு கலந்துரையாடலை  வழிநடத்தினர். இலக்கிய வாசிப்பும் படைப்பும் மனிதனை எப்படி உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்று சிறுகதைகள் கவிதைகள் வழி சான்று காட்டினர். இரவில் கலைநிகழ்ச்சிக்கு முன்பாக பாரதியும் அமுதத் தமிழும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். காலந்தோறும் தமிழின்பத்தில் தோய்ந்த அறிஞர்களிலிருந்து பாரதி எந்தளவுக்கு வேறுபடுகின்றார் என்பதை தெள்ளுற்ற தமிழின் சுவை கண்டார்- இங்கு அமரர் நிலை கண்டார் எனும் அவனின் ஒற்றை வரி போதும் தமிழை எந்தளவுக்கு மாந்தி உண்டு வாழ்ந்திருக்கின்றான் என்பது புரிய வரும். உரைநிகழ்த்தி இரவில் வீடு திரும்புகையில் தமிழ்மொழியின் வடிவச் செயல்பாடு குறித்து கேள்விகள் தொடர்ந்து உள்ளிருந்து கேட்டன. முன்னோர் உயிரெழுத்து’, மெய்யெழுத்து’, உயிர்மெய் எனப் பெயரிடக் காரணமென்ன?. மெய் என்றால் உடல் என்றும் உண்மை என்றும் பொருளாகின்றது. மொழியின் பின்னுள்ள மெய்யியல் எது? தமிழொலிகளைக் கூர்ந்தாய்ந்து  ஒன்றை உயிரென்றும் மற்றொன்றை மெய்யென்றும் பாகுப்படுத்திய அறிவாளி யார்?. இன்று எவ்வளவோ தொழிற்நுட்பமெல்லாம் பயன்படுத்தி சோம்ஸ்கி போன்ற பலநூறு மாபெரும் மொழி அறிஞர்கள் மொழி என்பதை வெறும் தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகம் (language - communication tools) என்று வரையறுக்கும்போது  அதை பல்லாயிரம் காலந்தொட்டே நம் பாட்டன் முப்பாட்டனால் உயிராகவும் மெய்யாகவும் எப்படி பார்க்க முடிந்தது என்பது எனக்கு வியப்பாகவே உள்ளது?. மொழியை ஊடகம் என்ற சடப்பொருளிலிருந்து விலக்கி உடல் தாங்கி வந்த உயிராகக் காணுதல் என்பதே மிகப்பெரும் தத்துவமாகவும் அறிவாகவும் எனக்குத் தோன்றுகிறது. அகமும் புறமும் இருபக்கங்களாய் இணைந்த இந்த வாழ்வையே அக இலக்கியங்களும் புற இலக்கியங்களும் பகுத்துக் கூறும்போது தமிழரின் தெளிந்த சிந்தனை எண்ணியெண்ணி வியக்கத் தொன்றுகிறது. வாழ்வைக் கொண்டாடும் மெய்யியலைத் தமிழ் இயல்பாக தன்னகத்தே கொண்டுள்ளதைத் தமிழர் பெரும் முயற்சி கொண்டு ஆழ்ந்து அறியாதவரை தமிழமுதச் சுவையைச் சொல்லால் சொல்ல முடியுமேயன்றி உயிரால்  உணரவே முடியாது?

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி....


உணர்ச்சிவசப்படும்போது மனிதன் விலங்காகிறான்; உணர்ச்சியை நிர்வகிக்கும் திறன் பெறும்போது மனிதனாகின்றான்; உணர்ச்சியிலிருந்து தன்னை வெல்லும்போது மட்டும்தான் தெய்வமாகின்றான் என்று எப்போதோ படித்த வாசகம் அவரைக் காணுந்தோறும் என்னுள்ளே எழும். இயல்பாகவே பேசும் தோரணையும் சில சமயம் பயன்படுத்தும் வார்த்தைகளும் தடித்திருப்பது போல இருந்தாலும் அவர் கொண்ட நேசமும் உணர்ச்சியும் உண்மை நிறைந்தவை. பிறர் மெச்ச வேண்டுமென்பதற்காக போலித்தனமான பாசமும் பொய்யான கோபமும் அவரிடம் இதுநாள் வரை நான் கண்டதேயில்லை. சிலவேளை அவரின் கோபம் உக்கிரமாக இருந்தாலும் சற்று நேரத்திற்கெல்லாம் தடம் மறைந்து போய்விடுமளவு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறர்க்கு எப்படியோ என்மீது நல்ல அன்பும் மதிப்பும் கொண்டிருந்ததை பலமுறை உணர்ந்திருக்கின்றேன். வேலையிடத்தில் மயங்கி விழுந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு அவரின் இல்லம் சென்றேன். என்னைப் பார்த்ததும் மெத்திருக்கையிலிருந்து எழுந்து வந்தவரிடம்  நலம் விசாரிக்க “ஒண்ணுமில்லய்யா... கொஞ்சம் இரத்த அழுத்தம்ன்னு சொன்னாங்க,” அமைதியாகச் சொன்னார். எதிரிலிருந்த நாற்காலியில் என்னை அமரச் சொல்லி சைகை காட்டியபடியே கோப்பையிலுள்ள நீரை எடுத்து சில மிடற்று குடித்தார்.   “எனக்கு யார் மேலேயும் வருத்தமில்லை ஆனால் என்னை யாரும் புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க. என்னால் யாரையும் எதிரியாக நினைக்கவும் முடியலை. நான் மற்றவங்க செய்யறது தவறுன்னு தெரிஞ்சா உடனே திருத்த நினைப்பேன். சொல்லியும் கேட்கலன்னா சட்டுன்னு கோபம் வந்துடுது. அதைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை.” அவர் உணர்ந்து சொல்வதை பொறுமையோடு கேட்டுக் கொண்டருந்தேன். இரண்டு நாட்களுக்குமுன் தனியார் கல்லூரியில் படிக்கும் தன் மகனோடு கொண்ட கோபத்தால் தாம் கண்டிப்புடன் பேசிய வார்த்தையை எண்ணி மனம் நொந்துபோய் பேசினார். “நான்தான் பிள்ளைங்கள புரிஞ்சிக்க மாட்டறேனா இல்ல பிள்ளைங்கத்தான் என்னைப் புரிஞ்சிக்க மாட்டறாங்களான்னு தெரியலைய்யா. எனக்கு வயசுதான் ஏறுதே தவிர எனக்குள் கோபம் குறைந்த மாதிரி தெரியல. எப்பவுமே கோபம்தான் எரிமலையாய் நிறைஞ்சி இருக்குதய்யா..” சிறு புலம்பலும் பேச்சில் தெறித்தது. சில மனிதர்கள் உணர்ச்சிகளைக் கெட்டிப்படுத்திக் கொள்வார்கள் பலர் கொட்டித் தீர்த்து விடுவார்கள். இவர் கொட்டித் தீர்க்கும் ரகம். நானறிந்தவரை அவரின் கடந்த கால வாழ்வனுபவம் கசப்பும் துவர்ப்பும் நிறைந்தவை. எப்போதாவது அரிதாக கொஞ்சம் இனிமை கலந்திருக்கும் பக்கங்களையும் பட்டும்படாமல் பகிர்ந்துள்ளார். வாழ்வின் அனைத்துத் துயரங்களையும் அனுபவித்துவிட்டு மெல்ல அதிலிருந்து வெளிப்பட்டு சொந்தமாகவே கடும் உழைப்பால் காலூன்றி எழுந்தவர் என்பதால் பிறர் துச்சமாகக் கருதும் எளிய செயலையும் அவரால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபம் முந்தி தள்ளும். ஒருமுறை அவரின் மனைவி இவரின் விருப்பத்திற்கேற்ப மரவள்ளிக்கிழங்கு அவித்து மசித்து தேங்காய்ப்பூவும் சீனியும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்தார். அதை அவரின் குழந்தைகள் அறவே சீண்டாததால் நம்மள மாதிரி கஷ்டப்பட்டு வந்திருந்தாதான்ன இதன் அருமை தெரியும். சொகுசா வளர்ந்ததால் இதையெல்லாம் சாப்பிடாம திமிரா நடந்துகிதுங்க பிள்ளைகள்மீது கடுங்கோபம் வந்ததாம். பிள்ளைகளிடம் கோபத்தால் வீம்பாக இரண்டு மூன்று நாட்கள் பேசாமல்கூட இருந்தாராம். அவரின் மனைவிதான் ஒருவழியாக அவரின் கோபத்தை அறிந்து சமாதானப்படுத்தினாங்க என்று என்னிடம் சிலமுறை அவரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். “நல்லவேளை.. யாரும் புரிஞ்சிக்கில்லனாலும் என் மனைவி புரிஞ்சிகிறதே ஆறுதலாய் இருக்குய்யா” தன்னையறியாமல் அவர் புலப்பியது என் காதிலும் விழுந்தது. தமது இளமைக்காலம் அதிக மனக் கொந்தளிப்புகளுக்கும் அலைகழிப்புகளுக்கும் ஆட்பட்டதால் அன்று ஏற்பட்ட காயத்தால்தான் இப்படியெல்லாம் கோபப்படுறிறேனோ என்று அவர் ஆதங்கப்படும்போது பரிதாபமாக இருக்கும். சிறுவயதில் தமக்கு ஏற்பட்ட வலிகளும் புறக்கணிப்பும் ஆற்றாமைகளும் குடும்பத்தின்மீது கோபமாக ஏற்றி வைப்பது முறையற்றதுதானே?.  மனித வாழ்க்கையில் இவையெல்லாம் போகிற போக்கில் நிகழும் சம்பவங்களே. சினம் இறக்கக் கற்பதற்கு நிறைய பக்குவமும் பொறுமையும் வேண்டும். எல்லாவற்றையும் அதனதன் போக்கில் இயங்குவதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளாதவரை கோபம் நம்மிலிருந்து நீங்காதுதானே?. கோபம்கூட ஒருவகை பற்றின் காரணமாகத்தானே ஏற்படுகிறது?

புதன், 4 ஜூலை, 2018

வாழ்வின் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்?


ஐயா குழ.செயசீலனார் இறப்பின் இறுதி ஊர்வலத்தில் இருந்தபோது எண்பதுகளின் இடைக்காலத்தில்  ஐயாவிடமும் என்னிடமும் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிலர் அவரின் பிரிவுச் செய்தியைக் கேள்விப்பட்டு இறுதி மரியாதை செலுத்த ஓடோடி வந்திருந்தனர். அவர்களில் பலரை நான் பார்த்து முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஐயாவின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய கண்களோடு என்னிடம் தங்களது ஆழ்ந்த துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஐயாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சூழலில் சில மாணவர்கள் மிகுந்த மரியாதை காரணமாக வணக்கம் கூறி காலை தொட்டு வணங்க முற்படுவதை அறிந்து தவிர்க்க முயன்றேன். சில மாணவர்கள் உருவத்தால் நிரம்ப மாறியிருந்தாலும் அன்றிருந்த அன்பு கிஞ்சிற்றும் மாறாமல் நடந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. “ஐயா, நீங்களும் ஐயாவும் எங்களுக்கு சொன்னது எல்லாம் என்றுமே நினைவில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அதைதான் எங்கள் பிள்ளைகளுக்கு இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்” கண்ணீர் மல்க இன்று நான்கு பிள்ளைகளுக்குத் தாயான அந்த மாணவி என் இரு கைகளையும் பிணைத்தபடியே சொன்னார். “நம்ம ஐயா நேர்த்தியாகவும் எடுப்பாகவும் உடை உடுத்தி தோன்றும் அழகு கண்ணில் தெரிகிறது. ஐயா, அவ்வளவு திருத்தமாக அழகாகப் பேசிய தமிழ் இன்னும் நெஞ்சில் இனிக்கிறது. அவரை இடையில் வந்து கண்டு பேசலாம் என்று காலத்தைத் தள்ளிப்போட்டு இந்தச் சூழலில் காண்பதுதான் மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது” மற்றொரு மாணவர் என் உள்ளங்கையை இறுகப்பிடித்தபடியே உருகினார். “எப்போதும் காலத்தை நாம் தள்ளிப்போடவே கூடாது. எப்போது நேரம் வாய்க்குமோ நமது அன்புக்குரியவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்பதை நானும் சில இழப்புகளுக்குப் பிறகு உணர்ந்திருக்கின்றேன். அதனால்தான் நான் இப்போதெல்லாம் யாரை சந்திக்க வேண்டுமென நினைக்கின்றேனோ அவரைக் காலத்தை தள்ளிப் போடாமல் சென்று கண்டு வருவதைக் கடமையாகக் கொண்டிருக்கின்றேன். ஐயாவை இருவாரங்களுக்கு முன் சந்தித்து நெடுநேரம் உரையாடியது கொஞ்சம் ஆறுதல் தருகின்றது” அந்த மாணவர்களை சிறிது ஆற்றுப்படுத்தினேன். “ஐயா, நீங்கள் எங்களை பள்ளி பக்கத்தில் இருக்கும் ஆற்றங்கரைக்கும் காடுகளுக்கும் மெதுவோட்டம் செல்வதற்காக அழைத்துச் செல்வீர்களே அந்த இன்பத்தை ஆயுளுக்கும் மறக்க முடியாது” பிரிவின் துயரை மாற்றும் நோக்கில் அந்த நிகழ்ச்சியை இன்னொரு மாணவர் உணர்ச்சியோடு பகிர்ந்தார். அவர்கள் என் பழைய நினைவுகள் எல்லாம் தூசு தட்டியது மீண்டும் என்னைப் புதுப்பித்தது.  நான் ஏட்டில் உள்ள அறிவைவிட அனுபவங்களின் வழி கண்டடைந்ததைதான் அன்று முதல் இன்றுவரை வகுப்பில் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய கணினி வளர்ச்சி பயன்பாடு பற்றி எல்லாம் கற்றல் கற்பித்தல் தேவைக்கும் பயன்படுத்துவேனேயன்றி வேறெதுவும் பெரிதாகத் தெரியாது. தொழிற்நுட்பம் கோட்பாடு என எல்லாக் குழப்பங்களையும் துறந்து என்னுள்ளே முகிழ்க்கும் உள்ளுணர்வின் வழியில் வெளிப்படுபவனவற்றையே மூலதனமாக உள்ளன்போடு இன்று கல்லூரி நிலையிலும் மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளவே விரும்புகின்றேன். என்னுள்ளேயிருந்து பீறிட்டுக் கிளம்பும் உணர்வு கலந்த சொற்கள் இன்னும் வாழ்வின் வெளியில் பதிவு செய்யப்படாத எத்தனையோ கொண்டாட்டங்களையும் அழகியலையும் துயரங்களையும் பகிரவே விரும்புகின்றது. இன்னும் இன்னும் கற்க வேண்டிய விசயங்களும் தொடர்ந்து ஓட வேண்டிய தூரங்களும் நீண்டுகொண்டே செல்வதை உள்ளூர உணர்கின்றேன். இந்த வாழ்வின் தேடலில் உடன்பாடும் முரண்பாடும் மோதிக்கொண்டாலும் நான் ஓடுவதை நிறுத்திக் கொண்டதே இல்லை. இன்று ஏழாம் அறிவு வெளியிலிருந்து கொட்டுவதையும் கையேந்தி மாணவனாக கற்று வருகின்றேன். உலகியலில் என்றும்  மாணவனாக  என்னை உருமாற்றிக் கொண்டபின் கற்கும் ஆர்வம் ஆழ்கிணற்று ஊற்றைப்போல் ஊறுகிறதேயன்றி சலிப்புத் தட்டியதே இல்லை. மறைந்த ஐயா குழ.செயசீலனாரும் ஆசிரியனானவர் தேடலை வாழ்வின் இறுதிவரை தொடர்பவராக இருக்க வேண்டும் என்றே வலியுறுத்துவார். அசுர தேடல் உள்ளவன் நிச்சயம்  தேடியதைக் கண்டைவான் என்று எனக்கு முன்னே சொன்னதைதான் நான் என் மாணவர்களுக்குச் சொல்கின்றேன். மனித வாழ்வின் முடிவற்ற தேடலில் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்?

இறப்பும் மெய்யே...


பிறப்பு எப்படி மெய்யோ அதுபோலவே அதற்கு எதிரான இறப்பும் மெய்யே. இந்த அழியாத மெய்களுக்கிடையிலான வாழ்வில் உண்மைதான் அடைய முடியாத செல்வமாக இருக்கிறது. உண்மைதான் நமது அகத்தையும் புறத்தையும் விமர்சித்து செல்கிறது. ஒவ்வொரு இழப்பின் துயரைக் கடக்கும்போதும் முடிந்தவரை இனி அரிதாரம் பூசாத ஒப்பனை இல்லாத வாழ்க்கையை இன்னும் இன்னும் வைராக்கியத்தோடு வாழ்ந்து செல்ல வேண்டுமென எனக்குள் வலிமை கூடுகிறது. என் நேசத்திற்குரிய மனிதர்கள் ஒவ்வொருவராக இந்த வாழ்வு வெளியிலிருந்து விடைபெற்று செல்லும்போது இறப்பின் வலிமையும் உறுதியும் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் என்னிடம் எஞ்சி இருக்கும் காலத்தை முழுமையாக மிகத் துல்லியமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற தீவிரம் கூடி நிற்கிறது. எதிரே தென்படும் ஒவ்வொரு மனிதரையும் சந்திக்கும்போதும் வாழ்வின் இறுதிநாளில் நிமிடத்தில் நின்று அவருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு என்னுள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். முடிந்தவரை எதிர்படும் அன்பருடன் உண்மையாகப் பேசிப் பழகி விடைபெறுவோம். மீண்டும் அந்த அன்பரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் இயற்கைக்கு இரு கரம் கூப்பி நன்றி சொல்வோம். காலத்தையும் இறப்பையும் ஒன்றாக்கி தத்துவம் செய்தவர்கள் நம் முன்னோர்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் மனிதரும் காலமும் ஒன்றுதானே.அதனால்தான் ஒருவர் இறந்துவிட்டால் இயற்கைக்கே திரும்பிவிட்டார் என்பதை இயற்கை எய்தினார் என்றும் காலத்தோடு கலந்து கரைந்து போனதை காலமாகிவிட்டார் என்றும் மறைந்து போனதை மறைந்துவிட்டார் என்றும் இன்னும் சமய நோக்கில் சிவனிடமிருந்து வந்தவர் சிவனடிக்கே சென்று சேர்ந்திட்டார் என்றும் பலவாறு இறப்பைக் குறிக்கிறோம். உடலில் முன்னம் தங்கி இருந்த சத்து நிறைந்த உறுபொருள் நீங்கிப் போனதை செத்து விட்டார் என்று திரித்தும் மூச்சை விட்டுட்டார்’, கட்டையைப் போட்டுட்டார்’. உயிரை நீர்த்தார் என்றும் பலவாறு இறப்பைப் பலவகைச் சொலவடைகளால் சிலாகித்து மகிழ்ந்தார் முன்னோர்கள். அன்று தோட்டப்புறங்களில்கூட ஒவ்வொரு இறப்பிலும் துக்கத்தின் அடர்த்தியும் பிரிந்தவர்க்காக செய்யும் பிரார்த்தனைச் சடங்குகளும் நீளமாக இருக்கும். இன்று அவையெல்லாம் சுருங்கி முடிந்தவரை உற்றார் உறவினர் நண்பர் எல்லாம் ஒருநாளில் கூடி பிரியும் நாளாக இறப்பு மாறிவிட்டது. இன்று இறப்பையும் இறுதி ஊர்வலத்தையும் மெய்நிகர் தடயமாக பதிவு செய்து முகநூலில் பதிவிடும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம்?. இதுகூட ஒரு புது வகை மனித நேயமோ? மனிதரின் நெஞ்சக்கூடு முழுவதும் சிந்தனைகளாலும் அதில் ஊறிய நினைவுகளாலும் காலம்தானே நீக்கமற நிறைந்து வழிகிறது. இந்த நினைவுகளைக் கைமாற்றிவிடுவதன் மூலம்தான் ஒருவர் வாழ்ந்ததற்கான எழுச்சியும் வீழ்ச்சியும் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து நிற்கும் நினைவுகளை ஏதாவது ஒருவகையில் கைமாற்றுவது என்பது காலத்தைக் கைமாற்றுவது என்றுதானே பொருள்படும்.? யாருக்கு இந்த வாழ்வில் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது வாழும் இந்த நிமிடம்வரை தேவரகசியம்தானே?. எப்போது எந்த நிமிடம் யாருக்கு இறப்போலை வருமென்று யார்தான் அறிவாரோ?. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சுதானே?