நாம் எதற்காகப் பிறந்தோம்? நம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? என்ற கேள்விகள் அகத்தாய்வுச்
செய்யும் மனிதனை வழிநெடுக குடைந்துகொண்டிருக்கும். கடவுளை அடைவது அல்லது
சொர்க்கத்துக்குப் போவது என்ற பலதரப்பட்ட பதில்கள் மதவாதிகளிடம் மண்டிக்கிடக்கும்.
பிறந்துவிட்டால் ஒருநாள் இறப்பது உறுதிதானே என்று பிதற்றும் பதில்களும் உண்டு.
பிறந்துவிட்டதுனாலே இந்த வாழ்க்கையில் இறப்பது குறிக்கோளாக இருக்க முடியாது.
அதுதான் குறிக்கோள் என்றால் நாம் எதற்கு பிறக்க வேண்டும்?.
இந்த மெய்க்குள் மறைந்திருக்கும் மெய்யான ஒன்றை உணர விழிப்புணர்வு கொள்வதுதானே
மனித உயிர் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க முடியும். நம்முள் ஒளிந்திருக்கிற கடவுளைத்
தேடி எங்கும் கடவுளாக நீக்கமற நிறைந்திருக்கிற நிலைக்கு நாம் உயரவேண்டும்
என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் மகாசிவராத்திரி போன்ற திருநாட்களை ஏற்பாடு செய்து வைத்தார்கள்.
வாழ்நாளில் பெரும்பாலும் இரைதேடலுக்கே செலவிட்டு வீணே கழிந்து தன்னையறியாமல் ஒரு
மனிதன் இந்தப் பிறவியை முடித்துவிடக்கூடாது என்பதற்கான கருணையாகத்தான் இந்த
நாட்களை நான் சிந்தித்துப் பார்க்கின்றேன். இறைதேடலோ, இறைதாகமோ, இறைப்பசியோ எதுவாகவோ இருக்கட்டும் இந்தப் பிரபஞ்சத்தோடு ‘நான் வேறு நீ வேறு எனாதிருந்து’ ஒன்றிகலக்க இது
போன்ற தவமுயற்சியும் பயிற்சியும் உள்முகமாகப் புதுவெளிச்சம் பாய்ச்சும். விடிய விடிய
விழித்திருக்கும் பழக்கம் எனக்கு இல்லையென்றாலும் வழக்கம்போலவே வீட்டிலேயே மனைவியும்
பிள்ளைகளும் பொழுது விடியும்வரை குதூகலத்தோடு மகாசிவராத்திரியைக் கொண்டாட
முற்பட்டனர். பெரும்பாலும் நானும் பிள்ளைகளும் நள்ளிரவுக்குப்பின் தூங்கிப்போய்விடுவோம்.
மனைவி மட்டுமே விழித்திருந்து மகாசிவராத்திரியை வைராக்கியத்தோடு நிறைவேற்றுவாள்.
இம்முறை இரவு ஒருமணிவரை அவர்களோடு இணைந்துகொண்டேன். சிவபுராணம் தொடங்கி சில
தேவாரத் திருவாசகப் பாடல்கள் பாடினோம். வள்ளலாரின் திருவருட்பாவிலிருந்து தேடி
எடுத்த சில பாடல்களைப் பாடி அதைப் பற்றி கலந்து உரையாடினோம். ‘நினைத்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே-
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து’ ஒவ்வொரு வரியையும் பாடப்பாட ஊனும் உயிரும் இனித்தது. ‘கண்டதெல்லாம் அநித்தியமே, கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே, நீர் களித்ததெல்லாம் வீணே, உண்டதெல்லாம் மலமே, உட்கொண்டதெல்லாம் குறையே, உலகியலீர் இதுவரை உண்மை அறிந்திலரே’ அந்தப் பாடலில்
தொடர்ந்த இந்த வரிகள் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப்
பற்றி பல கேள்விகளும் தொடர்ந்த சிந்தனைகளும் மின்னி மின்னி மறைந்தன. கற்றதெல்லாம்
பொய் என்ற தொடர் என்னுள் குடைந்து கொண்டிருந்தது. மற்றொரு பாடலில் ‘குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக்கிக் கொள்ளல் உனக்கியல்பே’ என்று வள்ளலாரே கையேந்தி அந்தப் பேரறிவை இறைஞ்சும்போது நெஞ்சம்
நெகிழ்ந்து போகிறது. ‘என்னால் ஆவதொன்றும் உனக்கில்லையெனினும்
எந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்தருளே’
எப்படி இவ்வாறெல்லாம் அவரால் பரம்பொருளோடு பேசமுடிந்திருக்கிறது என்பதை எண்ணி
வியந்தேன். ஒவ்வொரு பாடலில் தேன்சிந்தும் தமிழ்ச்சுவை,
ஊனுயிர் உருக்கும் ஆன்மிக திருச்சுவை. சிவராத்திரியில் மட்டுமல்ல இனிமேல்
முடிந்தால் வாரம் ஒரு முறையாவது வள்ளலார், தாயுமானவர், சிவவாக்கியர் யாத்த தெய்வீகப் பாடல்களைக் குடும்பத்தோடு கலந்து
பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வெறுமனே புறக்கண்களால் விழித்திருப்பதா
மகாசிவராத்திரி ? ஆன்மிகவிழிப்புதானே மெய்யான சிவராத்திரி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக