‘மனமே முருகனின் மயில் வாகனம் –
என் மாந்தளிர் மேனியே அவன் ஆலயம்’ மனத்தில் இந்தப்
பாடிக்கொண்டிருக்க நேற்று இரவு என் குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில்
பினாங்கு தைப்பூசப் பெருவிழாவிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். இரக்கம்
கொள்ளும்போது மனம் பாகாக உருகிக் கரைந்துவிட்டது என்கிறோம். நிலைக் கொள்ளாமல் மனம் ஒரு குரங்காகத்
தாவுகிறது என்கிறோம். மகிழ்ச்சியால் மனம் ஒரு கன்றுக்குட்டியென துள்ளுகிறது என்றும் சொல்கிறோம். கோபம் வரும்போது மனம் நெருப்பாக எரிகிறது
என்றும் குறிப்பிடுகின்றோம். எல்லாம் கைவிட்டுப்போன நிலையில் மனம் பாலைவனமாக
வறண்டுபோய்விட்டதாக அரற்றுகின்றோம். எல்லாவற்றையும் கடந்த பின் மனம் பாறையென இறுகி உறைந்துவிட்டது என்றும்
சொல்கிறோம். நம்பிக்கைகள்
சிதறுண்டு போனபோது மனம் எரிமலையாக வெடித்துவிட்டது என்றுகூட துடிக்கிறோம். மனித மனத்தின் இயக்கத்தைப் பற்றி இப்படி
ஏராளமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அறிவியலால் நிறுவப்பட முடியாத இந்த நிலையற்ற மனத்தை அதன் இயக்கத்தைக்
குறிப்பிட இத்தனை சொற்களும் செயல்பாடுகளும் உருவாகியிருக்கலாம் என்று தோன்றினாலும்
தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு அழகிய கோலத்தை செல்லும் வழியெங்கும் ஒளிரும்
தண்ணீர் பந்தல்களில் சிலாகித்துப் பார்த்தேன். மனத்தின் கற்பனைக்குள் அடங்காத
முருகக் கடவுளை எத்தனை எத்தனை விதமாக அழகுப்படுத்தி வழியெங்கும் கண்ணுக்கினிய
காட்சியாக விருந்து வைத்திருந்தார்கள். அப்போது பெரும்பாலும் தைப்பூசம் செல்லும்
வழியெங்கும் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ கே.பி.சுந்தரம்பாள், ‘குன்றத்திலே
குமரனுக்குக் கொண்டாட்டம்’ ரமணியம்மாள், ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ பி.சுசிலா, ‘அழகென்று
சொல்லுக்கு முருகா’ டி.எம்.எஸ், ‘அறுபடைவீடு கொண்ட திருமுருகா’ சீர்காழி, ‘மருதமலை மாமணியே முருகையா’
திருச்சி லோகநாதன் ஆகியோரின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் முருக பக்திப் பாடல்களில்
மனம் கட்டுண்டு போகும். காலப்போக்கில் அது போன்ற பாடல்கள் குறைந்து போய்விட்டதை
என்னால் உணர முடிகிறது. ஆனால் இளைஞர்கள் ஒவ்வொரு தண்ணீர்ப்பந்தல் காவடி முன்பும்
குழுமி உறுமி, பறை முழங்கியவாறு தன்னை மறந்து மகிழ்ச்சியோடு
ஆடுவது அன்றுபோலவே குறைந்தபாடில்லை. கடல்போல்
திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தி தண்ணீர்மலை கோயில் அடிவாசல்வரை செல்வதற்குள்
பெரும்பாடாகிவிட்டது. உயர்ந்த இடத்தில் நின்றபடியே பல்வேறு வேண்டுதல்களோடு
காவடிகளையும் பால்குடங்களையும் ஏந்தி வரும் பக்தர்களைக் கூர்ந்து வேடிக்கைப் பார்த்தேன்.
சாதாரண அறிவால் புரிந்துகொள்ள முடியாத இந்தப் படைப்பின்மீது மனிதன் கொண்ட ஆழமான
நம்பிக்கைதானே சமயமும் கடவுளும். இவ்வளவு
மக்களையும் ஒரே புள்ளியில் ஒன்றிணைக்கிற மாபெரும் சக்தி கொண்டிலங்குகின்ற முருக
வழிபாட்டை எண்ணி வியாப்பாக இருக்கிறது. முருகனுக்காக பெருந்திரளாக கூடிய மக்கள் என்றாவது
ஒரு நாள் தமிழுக்காக இப்படி கடல்போல கூட மாட்டார்களா என்ற ஏக்கம் என்னுள்
எழுந்தது. தமிழ்க் கடவுளாக வீற்றிருக்கும் முருகனுக்காக இப்படி பெரும் உழைப்போடும்
பொருட்செலவோடு ஒன்றிணையத் தெரிந்த நமக்கு அந்த முருகனே தமிழாக வீற்றிருக்கும் மொழிக்காக
மட்டும் ஏன் நம்மால் ஒற்றுமையாகத் திரள முடியவில்லை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக