எது உண்மையான கல்வி? யார் நல்லாசிரியர்? ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஆசிரியரின்
பங்கு என்ன?. ஆசிரியம் என்பது தொழிலா?
தொண்டா? இறைவழிபாடா?. இந்தக் கேள்விகளும்
கூடவே இதுவரை தொடர்ந்த பயணத்தில் நல்லாசிரியர் நிலைக்கு என்னை உண்மையில் உயர்த்தி
உள்ளேனா என்ற அகத்தாய்வும் ஆசிரியர் நாளைக் கொண்டாடும் ஒவ்வொரு முறையும் என் இதயக்
கதவை ஓங்கி தட்டிச் செல்லும். எனக்கும் ஆசிரியத்துக்குமான இடைவெளி மெல்ல மெல்ல
உடைந்து தூரம் மிகமிகக் குறைந்து அதுவாகக் கலந்து வாழ்கிறேனா என்ற அத்வைத கேள்வி
என் வாழ்வின் வழிநெடுக வழிந்தோடும். ‘சராசரி மக்களை அன்றாட
வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க
வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத
கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி என்றுமே
கல்வியாகிவிடாது. ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலேயே நிற்க உறுதுணைப் புரிவதே
உண்மையான கல்வி’ என்ற வீரதுறவி விவேகானந்தரின் மொழிந்ததை
ஆழமாகச் சிந்திக்கின்றேன். கல்வி என்பதே ஒவ்வொருவரும் தன்னை உணரவும், தான் யார் என்பதை அறியவும் வழி செய்வதற்குத்தானே. நாம் யார் என்பதை
அறிந்து, உள்ளிருந்து எழும் அகக்குரலைக் கேட்டு அதற்கு இணக்கமாக
வாழ்வைச் செலுத்துவதுதான் கல்வி கற்பதன் குறிக்கோள். ஆசிரியம் வெறும் தொழில்
என்றால் அதற்கும் ஆன்ம மலர்ச்சிக்கும் உள்ள தொடர்புதான் என்ன? ஆசிரியம் தொண்டு என்றால் அதற்கான பலனாக சம்பளம் என்று வாங்கிவிட்டால்
எப்படி அது தொண்டாகும்?. நமது முன்னோர்கள் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று ஆசிரியரை
இறைநிலையோடு வைத்துப் போற்றியக் காரணமென்ன? அந்த இறைவனே
கல்வி கற்பிக்கும் கூடங்களிலெல்லாம் ஆசிரியர்களாகத் தோன்றி,
அவர்கள் மூலமாகக் கற்பித்து, சிறந்த மனிதர்களை
உருவாக்குகிறார் என்ற நம்பிக்கையின் சாரம்தானே அது. ஆக, ஆசிரியம்
என்பதே இறைவழிபாடுதானே. ‘ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக
மாற்றிக்கொள்ள முடியுமோ, அவர்தாம் உண்மையான ஆசிரியர். யாரால்
மாணவனின் நிலைக்கு உடனே இறங்கி வர முடியுமோ, தன் மனதை மாணவன்
மனதிற்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால்
பார்க்கவும் காதுகளால் கேட்கவும் அவனது மனத்தின் மூலம் புரிந்து கொள்ளவும்
முடியுமோ அவரே உண்மையான ஆசிரியர்’ மீண்டும் விவேகானந்தரே
என்னுள் முழங்குகின்றார். பள்ளியில் ஒரு குழந்தை தன்னைத்தானே உணர்ந்து, தனது திறமையை முழுமையாக அறிந்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் திட்டமிட்டு
செல்வதற்கு வழித்துணையாக ஒளிர்பவர்தானே ஆசிரியர். வாழ்க்கையின் இந்த உண்மை
அறைகூவலைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கான வழியைக் கண்டுபிடிக்க
உதவுபவரே ஆசிரியர். தம்மிடம் கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தையும் தன்னுள்
மறைந்திருக்கும் அனைத்துத் திறன்களையும் உள்ளூர உணர்ந்து இந்த வாழ்வைத் தெளிவாகப் புரிந்து
பயணிக்கும்போதுதான் கற்பித்த ஆசிரியரிடம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்தச் சொல்லால்
வடித்திட முடியாத உளநிறைவை மெய்யாக அனுபவித்த நாட்கள்தாம் நான் ஆசிரியராய் வாழ்ந்த
தருணங்கள். யார் என்ன சொன்னாலும் எத்தனை இடர்பாடுகள் எதிர்ப்பட்டாலும் எத்தனை எத்தனை சவால்கள் குறுக்கிட்டாலும் இந்த
நிமிடம் வரை ஆசிரியம் எனக்கு என்றென்றும் இனிக்கும் இறைவழிபாடுதான். இந்த இனிய
நன்னாளில் என்னை ஆளாக்கிய ஆசியர்களை அன்பான வாழ்த்துகளால் வணங்கிவிட்டேன். புழுதி
படிந்திருக்கும் அறிவை தூசுதட்டி மனத்தில் சூழ்ந்திருக்கும் மாசுகளை நீக்கி மாணவன்
ஆன்ம ஒளியை ஏற்றும் ஒவ்வொரு நல்லாசிரியரும் வாழ்த்துதலுக்கும் போற்றுதலுக்கும்
உரியவர். இருள் விலகட்டும் விலாகாமல் போகட்டும் நல்லாசிரியர்களின் விரல்கள் தம்மிடம்
பயிலும் மாணவனின் ஆன்ம விளக்கேற்றுவதை என்றுமே விட்டுவிடக்கூடாது? இவ்வளவு உயரம் நாம் தொடுவதற்கு கைவிரல் பிடித்து உதவிய ஆசிரியர்கள்
அனைவருக்கும் என்னினிய ஆசிரியர் தின வாழ்த்துகளை நன்றி மலர்களாய்ச் சொரிகின்றேன். ஆசிரியர்கள்
என்றென்றும் வணக்கத்துக்குரியவர்கள் என்றாலும் என்றும் என்னுள் வணங்கத்தக்கவர்கள்
ஒருசிலரே?.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக