“உங்களுக்குப் புத்தரை ரொம்ப
பிடிக்கும் என்று தெரியும். வகுப்பில் பாடங்களினூடே நிறைய புத்தர் தத்துவங்களை பூடகமாகச்
சொல்லியிருக்கீங்க. அதனால் எனக்கும் புத்தர்மீது ஒருவித அன்பு உண்டானது.
உங்களுக்கு எதனால அவரைப் பிடிக்குமென தெரிஞ்க்கிலாமா?” புலனத்தில் புத்தர் படத்தோடு பொன்மொழியும் குறிப்பிட்டு அந்த முன்னாள்
ஆசிரியர் கேட்டும் நான் பதிலெதுவும் அளிக்கவில்லை. இரவில் ஈப்போவிலிருந்து நான் புறப்பட்டு
வரும்வேளை அந்த மாணவர் கைப்பேசியில் அழைத்து விளக்கம் கேட்டார். “சிலவற்றுக்கு
காரணம் இருக்கும் இன்னும் சிவற்றுக்கு இருக்காது. மனிதன் எப்படி தோன்றினான்னு
சொல்ல முடியும் ஏன் தோன்றினான்னு சொல்ல முடியுமா? அதுபோலத்தான்
இதுவும்” நடிகர் சிவகார்த்திகேயன் பாணியில் கேள்வியைத் திருப்பிப்போட்டதும் அவர்
மறுமுனையில் புன்சிரிப்பொலியோடு மெளனமாகிவிட்டார். “புத்தரின் இந்த மெளனப்
புன்னகைதான் ஒருவேளை என்னைக் கவர்ந்திருக்குமோ?” கிண்டலாய்
சொல்லி உரையாடலைச் சுருக்கமாக முடித்தேன். தொல்காப்பியன், திருவள்ளுவன், தாயுமானவர், வள்ளலார், பாரதி
மீது ஏற்பட்ட தணியாத பாசமும் நேசமும் தமிழால் அறிவால் உணர்வால் வந்தது. சிறுவயது
முதல் என் இளநெஞ்சில் புத்தன்மீது பூத்த காதலுக்கு என்னிடம் தனிக்காரணமும் தெரியவில்லை
ஏனென்றும் புரியவைல்லை. அந்த உந்துதலில்தான் புத்தன் பிறந்த ‘லும்பினி’, ஞானம் பெற்ற ‘போகையா’, ஞானத்தைச் சீடர்களுக்குப் பகிர்ந்த ‘சரணாத்’, அவர் காலடிப்பட்ட குளித்த ‘நர்மதா’ நதி என்று எல்லாம் ஒரு மதமற்ற யாத்திரீகனாய் எதுவும் சாராத மானுட சகபயணியாய்
பெருந்தேடல் மனோபாவத்தோடு ஒரு காலத்தில் அலைந்து திரிந்திருக்கின்றேன். நம்நாடு
உட்பட தாய்லாந்து, மியன்மார்,
கம்பூச்சியா, இந்தோனேசியா, நேபாளம், வட இந்தியா என புத்தனைக் கொண்டாடும் எல்லா பெளத்த மடாலயங்களுக்கும்
கோயில்களுக்கும் சென்று புத்தனைக் காணாமல் திரும்பியிருக்கிறேன். செந்நிறம் அணிந்த
சில புத்த சன்யாசிகளிடம் புத்தனின் சிந்தனைக் குறித்துப் பேசி அவர்களின்
சடங்குப்பூர்வமான புரிதலால் மனம் மிகத் துவண்டிருக்கின்றேன். பெளத்தத்தைப்
பின்பற்றும் நாடுகள் அன்புக்கெதிராக வன்மத்தையும் உயிர்க் கொலைகளையும்
கிஞ்சிற்றும் கருணையின்றி செய்தபோதே புத்தனை நினைத்து இதயத்தில் இரத்தம் உறைந்து
போனேன். அன்பும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதற்கு வித்திட்ட புத்தனின்
சிந்தனையைச் சீழ்வடியச் செய்திருக்கும் புத்தப் பிக்குகளின் போக்கினைப் புறந்தள்ள
தொடங்கினேன். உண்மையைக் கண்டடைய சொன்ன புத்தனுக்குப் பல்லாயிர உருவங்களை
பொன்னாலும் பளிங்காலும் சமைத்திட்ட மதவாதிகளிடமிருந்து மிகத் தூரம் செல்லத்
தொடங்கினேன். ‘தேடொணா தேவனைத் தேடி என்னுள்ளே கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்’ என்று திருநாவுக்காரசர் கொண்டாடியதைப்போல பல்லாண்டுகள்
வெளியில் எல்லாம் புத்தனைத் தேடித்தேடி இறுதியில் புத்தியில் உறைகின்ற புத்தனைப்
புரிந்து கொண்டேன். அன்று தொடங்கி உள்ளம் வெள்ளைத் தாமரையாய் விரிய விரிய சொற்கள் இதழ்களாய்
மெல்ல மெல்ல உதிர்ந்து வருகின்றன. முன்பு எந்த வினைக்கும் எதிர்வினையாற்றும் வேகம்
மெல்ல மெல்ல குறைந்து வடிந்து வருவது தெரிகின்றது. எதுவும் நம்மால் விளையக்
கூடியதே என்ற இறுமாப்பு எல்லாம் அதன்படி சரியாகத்தான் நடக்கிறதே என நம்பத் தொடங்குகிறது.
தேடலில் இருந்த ஓட்டமும் ஆர்ப்பரிப்பும் ‘சும்மாயிரு
தேடுவதும் அடைவதும் எல்லாம் சுமையேயென’ போதுமென்று அடங்கி
அமைதியாகி தலை வணங்குகிறது. இந்த எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் நானும் நான்
காண்கின்ற அனைத்தும் சுவடில்லாமல் மறையப் போகிறது. நாளும் ஓடியாடி சேர்த்த கல்வி, உறவு, பொருள், புகழ் என
எல்லாமே கையிலிருந்து மட்டுமல்ல நினைவிலிருந்தும் முற்றாக அழியப் போகிறது. நேற்று
விசாக தினத்தில் புலனத்தில் வந்து விழுந்த பலநூறு புத்தரின் வாசகங்களில் என்றுமே
என் கையில் எஞ்சியிருப்பதும் நான் மெய்யாக நம்புவதும் ‘இந்தக்
கணத்தில் வாழ்’ எனும் நிகழ்காலத் துளி மட்டும்தான். இங்கு
நாம் எப்போதும் வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருப்பதில் காலம் கழிக்கிறோமேயொழிய வாழ்வதில்லை
என்பது புத்தன் சொல்லும் சுடும் மெய்தானே?
வானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.
புதன், 30 மே, 2018
ஞாயிறு, 27 மே, 2018
நன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்?
ஒவ்வொரு முறையும் பயிற்சி ஆசிரியர்கள்
கல்லூரியெனும் ‘வேடந்தாங்கலை’ விட்டுச்
செல்லும் போதெல்லாம் ஏதேதோ ஆழமாக மனமுவந்து சொல்லத் தோன்றும் ஆனாலும் அவர்களின்
முகங்களைக் கண்டதும் வார்த்தைகள் வற்றிப்போகும். சிலர் பிரியும் முன்பு சொல்லிச்
செல்வர்; சிலர் மென்சோகத்தால் சொல்ல வார்த்தையின்றி பிரிந்து செல்வர்; இன்னுஞ் சிலர் சத்தமில்லாமல்
சொல்லாமலே பிரிந்து செல்வர். விடைபெறும் ‘காவியச்
சிற்பங்கள்’ எனும் இந்த வகுப்பில் பலதரப்பட்ட சிறப்பியல்புகளும்
திறமைகளும் அடங்கிய பயிற்சி ஆசிரியர்கள் நிறைந்திருப்பதை ஆரம்ப நாள் முதலே
உணர்ந்துள்ளேன். பாடத்தைத் தாண்டி நாடகம், கவிதை, சிறுகதை, பேச்சுப் போட்டி,
நடனம், குறும்படம், பயிலரங்கம், புத்தாக்கம், போன்றவற்றில் துடிப்பாகவும்
புதுமையாகவும் ஒன்றிணைந்து செய்யும் வல்லமை கொண்ட பல்திறலாற்றல் மிக்க வகுப்பு
இது. இந்தக் ‘காவியச் சிற்பங்கள்’ கல்விக்
கழக அனைத்து நடவடிக்கைகளிலும் மட்டுமன்றி தேசிய நிலையிலும் மிளிர்ந்த மிகச் செயல்திறமும்
அறிவாற்றலும் படைப்பாற்றலும் மொழியாற்றலும் கொண்டது என்பதை இங்கு பயின்ற காலத்தில்
பல போட்டிகளில் கலந்து நிருபித்துள்ளனர். மனத்தால் மலர்ந்திருக்கும் ‘காவியச் சிற்பங்களின்’ அறிவாற்றலை இன்னும்
பல்லாயிரம் முறை சாணை தீட்டியிருந்தால் இன்னும் இடைவிடாமல் உள்ளுணர்வை தொட்டிருந்தால்
வானம் தொடும் தூரத்திற்கும் அவர்களால் சிறகு விரிக்க முடியும் என்பது என்
நம்பிக்கை ஆனாலும் அதற்கான வாய்ப்பும் காலமும் எனக்கு போதிய அளவு வாய்க்கவில்லை
என்பதைத் தவிர வேறெந்த குறையுமில்லை. தங்கத்தை உருக்கி எடுத்து அடித்து இழைத்து
நகை செய்ய பொற்கொல்லன் தயாராக இருந்தாலும் தங்கமும் புடம் போடுவதற்கும் உருமாற்றிக்
கொள்வதற்கும் ஒத்துழைப்பது அவசியமல்லவா?. கடந்த வாரம்
நால்வர் நினைவுப் பரிசு தந்து சென்றனர். நேற்றும் விடைபெறும் நோக்கில் அறுவர்
வந்து விரிவுரைஞர்களைக் கண்டு சென்றனர். என்னை நோக்கி வந்த அவர்களுக்கு ‘வாழ்க’ என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர வேறொன்றும் கொடுப்பதற்கு
என்னிடம் பெரிதாக எதுவும் இல்லை. நான் கற்றல் கற்பித்தலினூடே வகுப்பில் சொன்னதும்
முகநூல் வழியாக எழுத்தில் சொன்னதும் போதுமெனவும் அதுவே நிறைவாகவும் நிறையவும்
உள்ளதாய் நினைக்கின்றேன். நாளுக்கு நாள் பேசுவதற்குரிய சொற்கள் என்னிடம் குறைந்து
வருவதாகே இப்போதெல்லாம் உணர்கின்றேன். ஆனாலும் கல்லூரியின் இறுதி நாளில்
பிரியவிருக்கும் அவர்களிடம் ஒருசில வார்த்தைகள் உளமார பரிமாறினேன். “வாழ்க்கை
மிகமிக அழகானது மட்டுமல்ல கொண்டாடக்கூடியது. நம் எதிர்பார்ப்புக்கு முரணாக சிலவேளை
அமைந்தாலும் அது பொருள் நிறைந்தது. வெறும் மனத்தால் வாழ்ந்து தீர்த்து
முடிப்பதற்கு மட்டுமல்ல இளமை. அறிவைக் கூர்மைப்பட அழகுற செய்து வாழ்வில் எதிர்கொள்ளவிருக்கும்
சிக்கல்களை வேரறுத்து வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய அவசியமும் இளமைக்கு தேவையாகிறது.
அதற்கும் மேலாக உள்ளுணர்வை உணர்ந்து இந்தப் பிரபஞ்ச வெளியோடு ஒன்றிணைந்து வாழும்
பேரின்ப வாழ்வை இப்போதே சிந்திக்க வேண்டுவதும் அவசியமாகிறது. இந்த அற்புதமான
ஆசிரியப் பணியில் ஒவ்வொரு மாணவனிடத்தும் மேற்சொன்ன மூன்றையும் விதைக்கப்போகும்
உங்களை வாழ்த்துகிறேன்” என்று இரத்தினச் சுருக்கமாக விடை கொடுத்து அனுப்பினேன். ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ பாரதி சொல்வதுபோல
ஒவ்வொரு நாளும் விடியலும் இருளும் புதிதே. ஒவ்வொரு நாளும் மலர்கள் மலர்வதும்
உதிர்வதும் புதிதே. ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் கூடுவதும் குறைவதும் புதிதே. அதேபோன்று
இந்த வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் சந்திப்பும் பிரிவும் புதிதே. இந்த
இணைப்புகளுக்குள் நிகழும் உணர்வுப் பீறிடல்களும் வழிந்தொழுகும் உணர்ச்சி வடிகால்களும்
என்றும் புதிதே. அந்தப் புதிதில் பெறுவதில் மகிழ்ச்சியையும் இழப்பதில்
துன்பத்தையும் பெரும்பாலும் சராசரி மனிதனால் சமனாகப் பார்க்கவோ உணரவோ இயலாது.
இன்பத்தில் சிலிர்த்துப் போகிற மனம் சோகத்தின் கனம் தாளமுடியாமல் கண்ணீரில்
கரைந்துவிடுகிறது. இனி இவர்கள் காலடி எடுத்து வைக்கவிருக்கும் இந்த ஆசிரியமெனும் வாழ்க்கைப்
பயணத்தில் எழுதப்போகும் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதும் மனநிலையை
வளர்த்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ கழிவுகளை
யார் வந்து கொட்டினாலும் அதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு மழைத்தூறலில்
மணக்கும் தாய்மண்ணைப் போன்று எதையும் புறக்கணிக்காமல் நான் பணிசெய்து
கொண்டுதானிருக்கிறேன். எத்தனையோ எண்ண விதைகளை இந்த ஆசிரியக் காட்டில் நான் தொலைத்தப்
பின்னும் இன்னுமின்னும் பூக்கத்தான் செய்கிறேன். ஆசிரியத்தோடு ஒன்றித்து வாழும்
உந்துதல் உள்ளவரை யாரும் எதையும் இழப்பதில்லை. இந்த சூட்சுமத்தை உள்ளுணர்வில்
பதித்துக் கொண்டால் ஆசிரியம் என்றுமே
வளர்முகம்தான். இதுவரை கற்ற கல்விக்கும் நாளை வாழப்போகும் வாழ்க்கைக்கும் என்றென்றும்
நன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்?
புதன், 23 மே, 2018
ஆன்மிகவிழிப்புதானே மெய்யான சிவராத்திரி?
நாம் எதற்காகப் பிறந்தோம்? நம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? என்ற கேள்விகள் அகத்தாய்வுச்
செய்யும் மனிதனை வழிநெடுக குடைந்துகொண்டிருக்கும். கடவுளை அடைவது அல்லது
சொர்க்கத்துக்குப் போவது என்ற பலதரப்பட்ட பதில்கள் மதவாதிகளிடம் மண்டிக்கிடக்கும்.
பிறந்துவிட்டால் ஒருநாள் இறப்பது உறுதிதானே என்று பிதற்றும் பதில்களும் உண்டு.
பிறந்துவிட்டதுனாலே இந்த வாழ்க்கையில் இறப்பது குறிக்கோளாக இருக்க முடியாது.
அதுதான் குறிக்கோள் என்றால் நாம் எதற்கு பிறக்க வேண்டும்?.
இந்த மெய்க்குள் மறைந்திருக்கும் மெய்யான ஒன்றை உணர விழிப்புணர்வு கொள்வதுதானே
மனித உயிர் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க முடியும். நம்முள் ஒளிந்திருக்கிற கடவுளைத்
தேடி எங்கும் கடவுளாக நீக்கமற நிறைந்திருக்கிற நிலைக்கு நாம் உயரவேண்டும்
என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் மகாசிவராத்திரி போன்ற திருநாட்களை ஏற்பாடு செய்து வைத்தார்கள்.
வாழ்நாளில் பெரும்பாலும் இரைதேடலுக்கே செலவிட்டு வீணே கழிந்து தன்னையறியாமல் ஒரு
மனிதன் இந்தப் பிறவியை முடித்துவிடக்கூடாது என்பதற்கான கருணையாகத்தான் இந்த
நாட்களை நான் சிந்தித்துப் பார்க்கின்றேன். இறைதேடலோ, இறைதாகமோ, இறைப்பசியோ எதுவாகவோ இருக்கட்டும் இந்தப் பிரபஞ்சத்தோடு ‘நான் வேறு நீ வேறு எனாதிருந்து’ ஒன்றிகலக்க இது
போன்ற தவமுயற்சியும் பயிற்சியும் உள்முகமாகப் புதுவெளிச்சம் பாய்ச்சும். விடிய விடிய
விழித்திருக்கும் பழக்கம் எனக்கு இல்லையென்றாலும் வழக்கம்போலவே வீட்டிலேயே மனைவியும்
பிள்ளைகளும் பொழுது விடியும்வரை குதூகலத்தோடு மகாசிவராத்திரியைக் கொண்டாட
முற்பட்டனர். பெரும்பாலும் நானும் பிள்ளைகளும் நள்ளிரவுக்குப்பின் தூங்கிப்போய்விடுவோம்.
மனைவி மட்டுமே விழித்திருந்து மகாசிவராத்திரியை வைராக்கியத்தோடு நிறைவேற்றுவாள்.
இம்முறை இரவு ஒருமணிவரை அவர்களோடு இணைந்துகொண்டேன். சிவபுராணம் தொடங்கி சில
தேவாரத் திருவாசகப் பாடல்கள் பாடினோம். வள்ளலாரின் திருவருட்பாவிலிருந்து தேடி
எடுத்த சில பாடல்களைப் பாடி அதைப் பற்றி கலந்து உரையாடினோம். ‘நினைத்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே-
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து’ ஒவ்வொரு வரியையும் பாடப்பாட ஊனும் உயிரும் இனித்தது. ‘கண்டதெல்லாம் அநித்தியமே, கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே, நீர் களித்ததெல்லாம் வீணே, உண்டதெல்லாம் மலமே, உட்கொண்டதெல்லாம் குறையே, உலகியலீர் இதுவரை உண்மை அறிந்திலரே’ அந்தப் பாடலில்
தொடர்ந்த இந்த வரிகள் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப்
பற்றி பல கேள்விகளும் தொடர்ந்த சிந்தனைகளும் மின்னி மின்னி மறைந்தன. கற்றதெல்லாம்
பொய் என்ற தொடர் என்னுள் குடைந்து கொண்டிருந்தது. மற்றொரு பாடலில் ‘குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக்கிக் கொள்ளல் உனக்கியல்பே’ என்று வள்ளலாரே கையேந்தி அந்தப் பேரறிவை இறைஞ்சும்போது நெஞ்சம்
நெகிழ்ந்து போகிறது. ‘என்னால் ஆவதொன்றும் உனக்கில்லையெனினும்
எந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்தருளே’
எப்படி இவ்வாறெல்லாம் அவரால் பரம்பொருளோடு பேசமுடிந்திருக்கிறது என்பதை எண்ணி
வியந்தேன். ஒவ்வொரு பாடலில் தேன்சிந்தும் தமிழ்ச்சுவை,
ஊனுயிர் உருக்கும் ஆன்மிக திருச்சுவை. சிவராத்திரியில் மட்டுமல்ல இனிமேல்
முடிந்தால் வாரம் ஒரு முறையாவது வள்ளலார், தாயுமானவர், சிவவாக்கியர் யாத்த தெய்வீகப் பாடல்களைக் குடும்பத்தோடு கலந்து
பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வெறுமனே புறக்கண்களால் விழித்திருப்பதா
மகாசிவராத்திரி ? ஆன்மிகவிழிப்புதானே மெய்யான சிவராத்திரி?
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா.....
‘மனமே முருகனின் மயில் வாகனம் –
என் மாந்தளிர் மேனியே அவன் ஆலயம்’ மனத்தில் இந்தப்
பாடிக்கொண்டிருக்க நேற்று இரவு என் குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில்
பினாங்கு தைப்பூசப் பெருவிழாவிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். இரக்கம்
கொள்ளும்போது மனம் பாகாக உருகிக் கரைந்துவிட்டது என்கிறோம். நிலைக் கொள்ளாமல் மனம் ஒரு குரங்காகத்
தாவுகிறது என்கிறோம். மகிழ்ச்சியால் மனம் ஒரு கன்றுக்குட்டியென துள்ளுகிறது என்றும் சொல்கிறோம். கோபம் வரும்போது மனம் நெருப்பாக எரிகிறது
என்றும் குறிப்பிடுகின்றோம். எல்லாம் கைவிட்டுப்போன நிலையில் மனம் பாலைவனமாக
வறண்டுபோய்விட்டதாக அரற்றுகின்றோம். எல்லாவற்றையும் கடந்த பின் மனம் பாறையென இறுகி உறைந்துவிட்டது என்றும்
சொல்கிறோம். நம்பிக்கைகள்
சிதறுண்டு போனபோது மனம் எரிமலையாக வெடித்துவிட்டது என்றுகூட துடிக்கிறோம். மனித மனத்தின் இயக்கத்தைப் பற்றி இப்படி
ஏராளமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அறிவியலால் நிறுவப்பட முடியாத இந்த நிலையற்ற மனத்தை அதன் இயக்கத்தைக்
குறிப்பிட இத்தனை சொற்களும் செயல்பாடுகளும் உருவாகியிருக்கலாம் என்று தோன்றினாலும்
தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு அழகிய கோலத்தை செல்லும் வழியெங்கும் ஒளிரும்
தண்ணீர் பந்தல்களில் சிலாகித்துப் பார்த்தேன். மனத்தின் கற்பனைக்குள் அடங்காத
முருகக் கடவுளை எத்தனை எத்தனை விதமாக அழகுப்படுத்தி வழியெங்கும் கண்ணுக்கினிய
காட்சியாக விருந்து வைத்திருந்தார்கள். அப்போது பெரும்பாலும் தைப்பூசம் செல்லும்
வழியெங்கும் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ கே.பி.சுந்தரம்பாள், ‘குன்றத்திலே
குமரனுக்குக் கொண்டாட்டம்’ ரமணியம்மாள், ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ பி.சுசிலா, ‘அழகென்று
சொல்லுக்கு முருகா’ டி.எம்.எஸ், ‘அறுபடைவீடு கொண்ட திருமுருகா’ சீர்காழி, ‘மருதமலை மாமணியே முருகையா’
திருச்சி லோகநாதன் ஆகியோரின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் முருக பக்திப் பாடல்களில்
மனம் கட்டுண்டு போகும். காலப்போக்கில் அது போன்ற பாடல்கள் குறைந்து போய்விட்டதை
என்னால் உணர முடிகிறது. ஆனால் இளைஞர்கள் ஒவ்வொரு தண்ணீர்ப்பந்தல் காவடி முன்பும்
குழுமி உறுமி, பறை முழங்கியவாறு தன்னை மறந்து மகிழ்ச்சியோடு
ஆடுவது அன்றுபோலவே குறைந்தபாடில்லை. கடல்போல்
திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தி தண்ணீர்மலை கோயில் அடிவாசல்வரை செல்வதற்குள்
பெரும்பாடாகிவிட்டது. உயர்ந்த இடத்தில் நின்றபடியே பல்வேறு வேண்டுதல்களோடு
காவடிகளையும் பால்குடங்களையும் ஏந்தி வரும் பக்தர்களைக் கூர்ந்து வேடிக்கைப் பார்த்தேன்.
சாதாரண அறிவால் புரிந்துகொள்ள முடியாத இந்தப் படைப்பின்மீது மனிதன் கொண்ட ஆழமான
நம்பிக்கைதானே சமயமும் கடவுளும். இவ்வளவு
மக்களையும் ஒரே புள்ளியில் ஒன்றிணைக்கிற மாபெரும் சக்தி கொண்டிலங்குகின்ற முருக
வழிபாட்டை எண்ணி வியாப்பாக இருக்கிறது. முருகனுக்காக பெருந்திரளாக கூடிய மக்கள் என்றாவது
ஒரு நாள் தமிழுக்காக இப்படி கடல்போல கூட மாட்டார்களா என்ற ஏக்கம் என்னுள்
எழுந்தது. தமிழ்க் கடவுளாக வீற்றிருக்கும் முருகனுக்காக இப்படி பெரும் உழைப்போடும்
பொருட்செலவோடு ஒன்றிணையத் தெரிந்த நமக்கு அந்த முருகனே தமிழாக வீற்றிருக்கும் மொழிக்காக
மட்டும் ஏன் நம்மால் ஒற்றுமையாகத் திரள முடியவில்லை?
ஆசிரியம் என்பது தொழிலல்ல அஃதோர் இறைவழிபாடு
எது உண்மையான கல்வி? யார் நல்லாசிரியர்? ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஆசிரியரின்
பங்கு என்ன?. ஆசிரியம் என்பது தொழிலா?
தொண்டா? இறைவழிபாடா?. இந்தக் கேள்விகளும்
கூடவே இதுவரை தொடர்ந்த பயணத்தில் நல்லாசிரியர் நிலைக்கு என்னை உண்மையில் உயர்த்தி
உள்ளேனா என்ற அகத்தாய்வும் ஆசிரியர் நாளைக் கொண்டாடும் ஒவ்வொரு முறையும் என் இதயக்
கதவை ஓங்கி தட்டிச் செல்லும். எனக்கும் ஆசிரியத்துக்குமான இடைவெளி மெல்ல மெல்ல
உடைந்து தூரம் மிகமிகக் குறைந்து அதுவாகக் கலந்து வாழ்கிறேனா என்ற அத்வைத கேள்வி
என் வாழ்வின் வழிநெடுக வழிந்தோடும். ‘சராசரி மக்களை அன்றாட
வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க
வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத
கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி என்றுமே
கல்வியாகிவிடாது. ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலேயே நிற்க உறுதுணைப் புரிவதே
உண்மையான கல்வி’ என்ற வீரதுறவி விவேகானந்தரின் மொழிந்ததை
ஆழமாகச் சிந்திக்கின்றேன். கல்வி என்பதே ஒவ்வொருவரும் தன்னை உணரவும், தான் யார் என்பதை அறியவும் வழி செய்வதற்குத்தானே. நாம் யார் என்பதை
அறிந்து, உள்ளிருந்து எழும் அகக்குரலைக் கேட்டு அதற்கு இணக்கமாக
வாழ்வைச் செலுத்துவதுதான் கல்வி கற்பதன் குறிக்கோள். ஆசிரியம் வெறும் தொழில்
என்றால் அதற்கும் ஆன்ம மலர்ச்சிக்கும் உள்ள தொடர்புதான் என்ன? ஆசிரியம் தொண்டு என்றால் அதற்கான பலனாக சம்பளம் என்று வாங்கிவிட்டால்
எப்படி அது தொண்டாகும்?. நமது முன்னோர்கள் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று ஆசிரியரை
இறைநிலையோடு வைத்துப் போற்றியக் காரணமென்ன? அந்த இறைவனே
கல்வி கற்பிக்கும் கூடங்களிலெல்லாம் ஆசிரியர்களாகத் தோன்றி,
அவர்கள் மூலமாகக் கற்பித்து, சிறந்த மனிதர்களை
உருவாக்குகிறார் என்ற நம்பிக்கையின் சாரம்தானே அது. ஆக, ஆசிரியம்
என்பதே இறைவழிபாடுதானே. ‘ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக
மாற்றிக்கொள்ள முடியுமோ, அவர்தாம் உண்மையான ஆசிரியர். யாரால்
மாணவனின் நிலைக்கு உடனே இறங்கி வர முடியுமோ, தன் மனதை மாணவன்
மனதிற்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால்
பார்க்கவும் காதுகளால் கேட்கவும் அவனது மனத்தின் மூலம் புரிந்து கொள்ளவும்
முடியுமோ அவரே உண்மையான ஆசிரியர்’ மீண்டும் விவேகானந்தரே
என்னுள் முழங்குகின்றார். பள்ளியில் ஒரு குழந்தை தன்னைத்தானே உணர்ந்து, தனது திறமையை முழுமையாக அறிந்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் திட்டமிட்டு
செல்வதற்கு வழித்துணையாக ஒளிர்பவர்தானே ஆசிரியர். வாழ்க்கையின் இந்த உண்மை
அறைகூவலைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கான வழியைக் கண்டுபிடிக்க
உதவுபவரே ஆசிரியர். தம்மிடம் கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தையும் தன்னுள்
மறைந்திருக்கும் அனைத்துத் திறன்களையும் உள்ளூர உணர்ந்து இந்த வாழ்வைத் தெளிவாகப் புரிந்து
பயணிக்கும்போதுதான் கற்பித்த ஆசிரியரிடம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்தச் சொல்லால்
வடித்திட முடியாத உளநிறைவை மெய்யாக அனுபவித்த நாட்கள்தாம் நான் ஆசிரியராய் வாழ்ந்த
தருணங்கள். யார் என்ன சொன்னாலும் எத்தனை இடர்பாடுகள் எதிர்ப்பட்டாலும் எத்தனை எத்தனை சவால்கள் குறுக்கிட்டாலும் இந்த
நிமிடம் வரை ஆசிரியம் எனக்கு என்றென்றும் இனிக்கும் இறைவழிபாடுதான். இந்த இனிய
நன்னாளில் என்னை ஆளாக்கிய ஆசியர்களை அன்பான வாழ்த்துகளால் வணங்கிவிட்டேன். புழுதி
படிந்திருக்கும் அறிவை தூசுதட்டி மனத்தில் சூழ்ந்திருக்கும் மாசுகளை நீக்கி மாணவன்
ஆன்ம ஒளியை ஏற்றும் ஒவ்வொரு நல்லாசிரியரும் வாழ்த்துதலுக்கும் போற்றுதலுக்கும்
உரியவர். இருள் விலகட்டும் விலாகாமல் போகட்டும் நல்லாசிரியர்களின் விரல்கள் தம்மிடம்
பயிலும் மாணவனின் ஆன்ம விளக்கேற்றுவதை என்றுமே விட்டுவிடக்கூடாது? இவ்வளவு உயரம் நாம் தொடுவதற்கு கைவிரல் பிடித்து உதவிய ஆசிரியர்கள்
அனைவருக்கும் என்னினிய ஆசிரியர் தின வாழ்த்துகளை நன்றி மலர்களாய்ச் சொரிகின்றேன். ஆசிரியர்கள்
என்றென்றும் வணக்கத்துக்குரியவர்கள் என்றாலும் என்றும் என்னுள் வணங்கத்தக்கவர்கள்
ஒருசிலரே?.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)