மரணமே! உன்னை நான் நேசிக்கின்றேன்
ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கம்
மலரின் முடிவில் காயின் பிறப்பு
காயின் இறப்பில் கனியின் சிரிப்பு
ஒன்று உரமாகி இன்னொன்று உருவாகும்
சருகுகள் உதிராவிட்டால் புதிய தளிர்களுக்குப் பிறப்பேது?
கரையே இல்லாத கடல் எங்கேயாவது நீங்கள் கண்டதுண்டா?
முடிவே இல்லாத நதி பூமியில் நடை பயின்றதுண்டா?
ஒவ்வொரு மூலத்திற்கும் ஒரு முடிவு தவிர்க்க முடியாதது
ஆதலால் மரணமே உன்னை நேசிக்கின்றேன்
மரணம் என் நேசத்திற்குரிய நெருங்கிய நண்பன்
அதன் வலிமை என்றும் என் ஆராதனைக்குரியது
ஞானம் போதிப்பதில் எந்த ஆசானும் மரணத்திற்கு ஈடில்லை
பலர் ‘மனிதர்களாக’ வாழ்வதே மரண தரிசனத்தில்தான்
மரணம் இன மத நிற வேற்றுமையின்றி நம்மை அரவணைக்கும் தலைவன்
‘காலா என் காலருகே வாடா, உனை சிறு புல்லென மதிக்கின்றேன்
உனை என் காலாலே மிதிக்கின்றேன்’ என்று பாரதிபோல் சவால்விடவும் தெரியாது
‘சாவே உனக்கொரு நாள் சாவுவந்து சேராதோ -
தீயே உனக்கொரு நாள் தீமூட்டிப் பாரோமோ’
என்று கவியரசு கண்ணதாசன்போல் புலம்பவும் தெரியாது
மரணம் எனைத் தேடிவரும்போது
அதை ஒரு தேவதையைப் போல் வாழ்த்தி வரவேற்பேன்
தெய்விக அமைதியுடன் அதன் தாய்மடியில் கண் துயில்வேன்
ஏனென்றால் மரணமே வாழ்வைப்போல் உன்னை நேசிக்கின்றேன்
2 கருத்துகள்:
நல்ல சிந்தனை... ஆனால் இந்த வயதில் வந்ததுதான் ஏனோ?
எஞ்சிய வாழ்க்கையை மேலும் பொருள் பொதிந்ததாக்கும் வகையில் மற்றுமோர் சிந்தனைப் பதிவை எங்களுக்கு படைக்கலாமே!!!
வணக்கம். தங்கள் கருத்துக்கு நன்றி. மரணம் என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, இரசனைக்குரியது அன்பரே. வாழ்வை இரசிப்பவரே இறப்பையும் இரசிக்க முடியும் என்பது என் தாழ்மையான உறுதியான கருத்து.
கருத்துரையிடுக