சனி, 17 ஏப்ரல், 2010

சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன்

இரண்டாயிரதொன்றாம் ஆண்டிறுதியில் ஆறு நண்பர்களுடன் மூன்றாம் முறையாகத் தமிழகப் பயண சென்றிருந்தேன். எங்கள் பயணம் வழக்கமான திருத்தலச் சுற்றுலாவாக மட்டும் அமையாமல் வாழ்வின் எல்லா நிலை மனிதர்களையும் சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமைந்தது.

உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தேங்காய் மட்டையில் கயிறு திரிக்கும் குடியானவர்கள், பட்டைத் தறியில் நெய்யும் நெசவாளர்கள், கட்டுமரத்திலேறி கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள், கள் இறக்கும் மரமேறிகள், குயவர்கள், உழவர்கள், என விளிம்புநிலை மனிதர்வரை ஒரு தேடலைத் தொடர்ந்தோம்.

இந்தத் தேடலினூடே எங்கள் பயணம் தொடர்ந்துக் கொண்டிருந்த வேளை நாகர்கோயில் ஊருக்கருகே சென்றதும் என் நண்பர் மணிமாறன் சுந்தர ராமசாமியைச் சந்திக்கலாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். நண்பர் மணிமாறனைத் தவிர்த்து என்னோடு வந்த மற்றவர்களுக்கு இலக்கிய நுகர்வு மிகக் குறைவு. அவர் அளவுக்கு எனக்கு அப்போது சுந்தர ராமசாமியை ஆழமாகப் புரிந்து கொள்ளவிடினும் ஏதோ பெயரளவில் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,’ஜே.ஜே குறிப்புகள்’ கொஞ்சம் படித்து வைத்திருந்தேன் என்பதைவிட குழம்பியிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். நண்பர் மணிமாறன் காலச்சுவடு தொடர்ந்து படிப்பதால் ஓரளவிற்கு அவரைக் காணும் வேட்கையில் தீவிரமாக இருந்தார்.

நான் படித்தறிந்தவரை சுந்தர ராமசாமியின் ஆளுமை என்பது நெருங்குவதற்குக் கடுமையானவர் கோபக்காரர் என்றெல்லாம் ஒரு அடையாளம் இருப்பதை அறிவேன். ஆனாலும் பல இலக்கியவாதிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகும் பிடிப்புள்ள எழுத்தாளரான அவரைச் சந்திப்பதில் எனக்கும் உள்ளூர ஆர்வம் எழுந்தது.

அந்த டிசம்பர் மாதப் புலர்காலைப் பொழுதொன்றில் அவரின் இல்லத்தைத் தேடிச் சென்றோம். நாகர்கோயில் சாலையோரத்திலே அவரின் வீட்டை அடையாளங் கண்டுகொண்டோம். கிராமியச் சூழலை உணர்த்தும் மதில் சுவரோடு ஏழெட்டுத் தென்னைமரங்கள் பின்னணியில் ஓங்கி நிற்க எளிமையும் பழமையும் காட்டும் அந்த வீட்டின் முன்புறம் பவளமல்லி செடியிலிருந்த உதிர்ந்த மலர்கள்வரை இலக்கிய வாசத்தை என்னுள் விதைத்தது.

வாயில் இருப்புக் கதவை மெல்ல விலக்கி உள்ளே நுழைந்தோம் அவரை சந்திக்கும் ஆவலோடு. எங்களின் குரல் கேட்டு நீல டீ சட்டையும் வேட்டியுடம் அணிந்த உயர்ந்த உருவத்தோடு எங்கள் முன்னே அவர் வந்தது என் நினைவுகளில் இன்றும் கல்வெட்டுகளாய் பதிந்துள்ளது. எங்களைப் பற்றி அன்பொழுக விசாரித்துவிட்டு உள்ளே அழைத்துப் போனார். வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த அவரின் மகளிடம் எங்களை அறிமுகம் செய்தார். பிறகு மெல்ல அவரின் கதைப் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது

எங்களோடு அவரின் இல்லத்திற்கு வந்த நண்பர்கள் என்னையும் மணிமாறனையும் விட்டுவிட்டு வெளியே உலவ சென்றுவிட்டனர். அவரின் சில கேள்விகள் எங்களின் வாசிப்பு ஆழத்தை உழுவதாகவே எனக்குப் பட்டது. ஏதோ ஒன்றிரண்டு பொருத்தமாக நான் சொல்ல நண்பர் மணிமாறன் அவரின் கதைப்போக்கையும் ஆளுமையையும் சிலாகித்துப் பேசினார். பொறுமையோடு ஆழ்ந்து கேட்கும் அவரின் தன்மையும் மென்மைப் பேச்சும் என்னுள் அவரின் மீதுள்ள மதிப்பை உயர்த்தின.

அவர் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்கும் நண்பருக்கும் பரிசளித்ததும் எங்களோடு சேர்ந்து நிழற்படமெடுத்ததும் மறக்கமுடியாது. ஒரு இலக்கிய விமர்சனத்தால் மேலும் ஒளிரும் நட்சத்திர எழுத்தாளரைச் சந்தித்தத் திருப்தியோடு விடைபெற்றோம். அவர் பரிசளித்த அந்த ஒரு புளிய மரத்தின் கதையை அண்மையில் மீண்டுமொருமுறை வாசித்தேன். அக்கதையின் சாரத்தை பருகுங்கள்.

பெரிய குளத்தின் நடுவில் நிற்கிறது புளியமரம். ஊருக்கு வெளியில் இருக்கும் அவ்விடம், காலச் சுழற்சியால் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என்பது கதை. இதுவரை நாம் படித்த நாவல்களில் மனிதர்களோ மிருகங்களோ கதை நாயகர்களாக இருப்பார்கள் என்பதனால் ஒரு புளியமரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல் மிகவும் வித்தியாசப் படுகின்றது.

புளிய மரத்தைச் சுற்றி நடந்த பல்வேறு சம்பவங்களை, ஆசிரியர் தொகுத்து ஒரு நாவலாக எழுதியதால் பல சிறுகதைகளைச் சேர்த்துப் படித்த எண்ணம் தோன்றுகிறது. ஆயினும் ஒவ்வொரு சம்பவமும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருப்பதால் ஆவலுடன் படிக்க முடிகிறது. நாவல் முழுவதும் வரும் நாகர்கோயில் வட்டார மொழி பலம் மற்றும் பலவீனம் இரண்டுமாக அமைந்துள்ளது.

புளியமரத்தை வெட்டும் முயற்சியிலிருந்து தடுக்க அதைக் கடவுளாக மாற்றுவது நல்ல திருப்பம். அதேபோல் மரம் தற்போது இல்லை என்பதனையும் தொடக்கத்திலேயே கூறி அந்த முடிவை நோக்கி நாவலை நகர்த்தியிருப்பது புதுமை. புளியமரத்தை வெட்டும் பொழுது அங்குள்ள மக்கள் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்களோ அதே வேதனையை படிப்பவர்கள் மனதிலும் படியவைத்திருப்பது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி.

(இரு வாரங்களுக்கு முன் பிரபல எழுத்தாளரான சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதையை மறுவாசிப்பு செய்தேன். அந்தக் கதைப் புத்தகத்தைத் தொட்டதும் அவரைச் சந்தித்த நினைவுகள் என்னுள்ளே மலரத்தொடங்கின. அதை ஒரு இனியச் சந்திப்பாக இந்த வலைப்பூவில் பதிவு செய்கிறேன். அவரோடு இணந்து நிழற்படம் எடுத்துக்கொண்டாலும் அந்தப்படம் என் நண்பர் மணிமாறனிடம் மட்டுமே உள்ளதால் இதில் இணைக்கவில்லை)

கருத்துகள் இல்லை: