சனி, 17 ஏப்ரல், 2010

என் காதல் என்றும் தமிழோடுதான்

நினைத்தாலே நெஞ்சக் கருவறையும் தித்திக்கும்; சொன்னாலே உதடுகளெல்லாம் தேனமுதாய் இனிக்கும் தமிழ்மொழியாம் நம் தாய்மொழியை நேசிப்பது இயல்பானது மிக இயற்கையானது. தமிழ்மொழியும் அதனூடே பின்னிப்பிணைந்த மரபும் காலங்காலமாக முன்னோர் மிக விழிப்புடன் பேணிப் பாதுகாத்து நமக்களித்துள்ளதே நாம் பெற்ற பெரும்பேறு.

தாயை நேசிப்பது எவ்வளவு இயல்பானதோ அது போன்றே தமிழை நேசிக்க வேண்டும். பள்ளிக் காலத்தில் என்னைப் பார்த்து ஒரு சில மூடர் தமிழ் படித்தால் முன்னேற முடியாது என்று வழித் தடத்தை மாற்ற முற்பட்டார்கள். தமிழ் சோறு போடுமா? என்பது இன்றுவரை தமிழர்களிடையே பேசப்படுவதைக் கண்டு என்னுள்ளே நீருபூத்த நெருப்பாய் அறச்சீற்றம் எழும்.

சோறு மட்டும்தான் வாழ்க்கை என்றால் உயிருக்குச் சுதந்திரம் எதற்கு?. அடிமை வாழ்க்கையில் வேளாவேளைக்குச் சோறு கிடைக்குமே! ஒரு தொழிலுக்காகத் தாய்மொழியைக் கற்க நினைப்பதவிட மூட நினைப்பு வேறில்லை. இன்றுங்கூட சோற்றுக்கு வழி தேடுவதில் என் மலேசியத் தமிழினம் சுயநலமாகச் சுருங்கிவிட்டது. அதனால்தான் தமிழ் படிப்பது தமிழருக்கே வேம்பாய் கசக்கிறது.

இந்தப் பேதை மனிதருக்கு மொழி என்பது வெறும் வயிற்றுப்பாட்டுக்கு வழி தேடித் தரும் அட்சயபாத்திரம். தாய்மொழி என்பது ஊனோடும் உயிரோடும் இணைந்த தொப்புள் கொடி உறவு என்பது இந்த மூடர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை?. தமிழில் பேசுவது பாவமானது; தமிழ் நூலைக் கையில் வைத்திருப்பது கேவலமானது; தமிழனாகப் பிறந்ததையே பாவமாகக் கருதுகிறானே இவனைவிட ஈனப் பிறவி வேறுண்டோ?.

உலகத்தில் ஒருவனுக்கு அடையாளத்தைத் தேடித் தருவது அவன் பிறந்த இனமும் அந்த இனம் பேசும் மொழியும்தான். மொழியைச் சார்ந்துதான் இனம் நிற்கிறது; இனத்தின் துணையுடன்தான் மொழி நடக்கிறது. என் இனத்தையும் மொழியையும் நான் மறந்தால், என் முகத்தையும் முகவரியையும் இழந்துவிடுவேன் என்ற அடிப்படை அறிவுகூட தமிழர் பலருக்கு ஏன் இன்னும் விளங்கவில்லை?.

தமிழனிடம் ஆழமான அறிவும் ஆற்றலும் இருக்கிறது ஆனால் தேவையான மொழிப்பற்றில்லை என்பதால்தான் பிற இனங்களைக் காட்டிலும் இன்னும் தலைகுனிந்தே இருக்கிறான். உலகில் பல இனத்தாருக்கு மொழி என்பது வெறும் தொடர்புக்கருவி மட்டுமே. தமிழர்க்குத் தமிழ் என்பது உணர்வு கலந்த ஆன்மிகம். தமிழர்களில் பலருக்கு தமிழ் தாய்மொழியாக அமைந்தது தற்செயலானது என்ற கருத்துண்டு ஆனால் அது எனக்கு நெடுங்காலம் நான் செய்த தவப்பயன் என்றே மிக ஆழமாக நம்புகிறேன்.

தமிழ் என் பயணத்தில் வழித்துணையாய் மட்டுமல்ல வாழ்க்கைத் துணையாகவும் நின்றுதவுகிறது. தலைமுறை தலைமுறையாக முன்னோரிடமிருந்து தோள்மாற்றிக் கொடுக்கப்பட்டத் தமிழை என் தந்தை என்மீது இறக்கிவைத்தபோது அதை சுமையாக அல்ல சுகமாக ஏற்றுக் கொண்டேன். அந்த மொழி வழிப்பட்ட பண்பாட்டை உள்வாங்கிக் கொண்டு அடுத்த தலைமுறையின் தோள்களிலே நான் சரியாக இறக்கிவைக்காமல் போனால் நான் வாழ்ந்ததே பொருளற்றதாகப் போகும்.

தமிழ் இலக்கியம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை நெறிமுறைகளை மறந்ததால்தான் இன்று தமிழனின் வாழ்க்கையே திசைமாறிப்போனது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மனித குலத்திற்கே தோழமைப் பண்பையும் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ நடைமுறை பேருண்மையையும் உலகத்துக்கே ஓங்கி உரைத்தது தாய்மொழி தமிழல்லவா?.மொழிக்கும் வாழ்வுக்கும் ஒரு சேர வழிகாட்டும் தொல்காப்பியமும் வாழ்வியல் மனப்பிணி நீக்கும் அருமருந்தாம் திருக்குறளும் தமிழர் மேன்மையுற கிடைக்கப்பெற்ற அருஞ்செல்வங்கலல்லவா?.

தமிழோடு இசைப்பாடல் மறந்தறியாத திருநாவுக்கரசரும், சீலமாய் செந்தமிழை செழுந்தமிழாக்கிய திருஞானசம்பந்தரும், சுந்தரத் தமிழில் திருப்பாட்டிசைத்த சுந்தரரும், திருவாசகமாய் உள்ளொளி உருக்கிய மாணிக்கவாசகரும் மேலும் ஆழ்வார் பாசுரங்களும் நீதி இலக்கியம் முதல் இன்றைய நவின இலக்கியம் வரை வாழ்வை மேம்படுத்த எத்தனை இன்பப் புதையல் தமிழன்னைக் காலடியில் பந்தி வைக்கப்பட்டுள்ளன.

பிற மொழியிலெல்லாம் அகர எழுத்தை அடையாளம் காட்டும்போது (a for apple –english / a untuk ayam –malay) கனியோடும் பிராணியோடும் வெறும் உணவுகளோடு அடையாளங் காட்டுகையில் தமிழ் மட்டும் ‘அறஞ்செய விரும்பு’ என உணர்வோடு அறத்தை சார்ந்தது நம் வாழ்வு என்று ஒளவை சுட்டிக் காட்டுவதை உணரமுடியவில்லையா?

இன்று பெரும்பாலான மலேசியத் தமிழ் இல்லங்களில் பொய்மைக் கலந்த இனிய மயக்கமுண்டு. வீட்டில் அறைகுறை தமிழும் வெளியில் பகட்டுக்காக ஆங்கில மோகமும் வாழும் வகைக்கு மலாயும் கைகொடுக்குமென்ற போலித்தனம் பரவலாக உலவுகிறது. மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஒவ்வொரு தமிழரும் குடும்பத்திலும் சமூக உறவுகளில் தமிழ் பேசுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

இன்றைய சூழலில் தமிழர் வாழ்வதற்கு எந்த மொழியை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளட்டும் ஆனால் தாய்மொழியாம் தமிழை கற்றுக்கொள்ளத் தவறக்கூடாது; கூடுமானவரைத் தமிழில் பேசுவதற்கு வெட்கப்படாமல் மாறாக பெருமைக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறரையும் தமிழ் பேச ஊக்கப்படுத்துவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பெருந்தொண்டாகும்.

இதயத் தூய்மையுடன் தமிழை நேசிக்கும் தலைமை இல்லாததால்தான் தமிழன் இன்று தமிழனாக இல்லை. அதற்காக நான் என் மொழிப்பற்றை எதன் பொருட்டும் எவருக்காகவும் விட்டுத் தர முடியாது என்பதில் மிக உறுதியாக உள்ளேன்.


கருத்துகள் இல்லை: