பாவேந்தர் பாரதிதாசன்
கவிதைகளில் வெளிப்படும் அங்கதம்
தமிழ்மாறன் பலராம்
ஆசிரியர்
கல்விக் கழகம்,
சுல்தான்
அப்துல் அலிம்
வளாகம்,
08000 சுங்கை
பட்டாணி, கடாரம்
1. முன்னுரை
இருபதாம்
நூற்றாண்டின் மறுமலர்ச்சிக்கால தமிழிலக்கிய வரலாற்றில் விடிவெள்ளியாய் என்றும் சுடர்விடுபவர்
பாவேந்தர் பாரதிதாசன். வேலாயுதத்தாலும் சூலாயுதத்தாலும் சாதிக்க முடியாத சாதனைகளைத்
தம் கவிதைகளாலும் ஏற்றமிகு பேச்சுகளாலும் சாதித்தவர் பாவேந்தர். அவருடைய ஆழ்ந்த சிந்தனையில்
தமிழ் உணர்வும் தமிழ் இன மீட்சியும் தமிழ்நாடு உயர்ச்சியுமே நீக்கமற நிறைந்திருந்தது.
பாவேந்தரின்
கவிதையாற்றலும், கற்பனை ஊற்றும், கருத்துக் குவியலும், கற்கண்டுச் சொல்வளமும் பரவலாகக்
கவிதைகளில் வெளிப்படுவதை அறிந்திருந்தாலும் மிகநுட்பமாக துள்ளுநடையில் அங்கத உத்தியால்
அவர் உணர்த்துவது எளிதில் நம் நெஞ்சையள்ளும். கவிதைகள் சுவையாக அமையக் கவிஞர்கள் உவமை,
உருவகம், முரண், குறியீடு, படிமம், அங்கதம் எனப் பல உத்திகளைக் கையாளுவார்கள். எல்லா
உத்திகளையும் சிறப்புடன் ஆளும் பாவேந்தர் கேலி, கிண்டல், குத்தல், எள்ளல் என்னும் அங்கதச்
சுவையோடு எழுதிய கவிதைகளை இவ்வாய்வில் காணாலாம்.
பாவேந்தர்
கவிதைகளின் பாடுபொருள் பெரிதல்ல; எழுதிய கவிதைகள்தான் பெரிது. எடுத்துக் கொண்ட பொருள்
பெரிதல்ல; எழுதிய முறைதான் பெரிது. எதைப் பற்றி எழுதினார் என்பதைவிட எப்படி எழுதினார்
என்பதையே இவ்வாய்வு குவியமாக கொள்கிறது. அங்கதச் சுவைபட சமுதாயக் குறைபாடுகளை, மனித
இயல்புகளைப் பாடுவது பாவேந்தருக்கு கைவந்த கலையாக இருப்பதை அறிய முடிகிறது. இயல்பாக
பாவேந்தர் அங்கததில் சிறந்திருப்பது அவருடைய சொல்லாற்றலால் விஞ்சி நிற்கிறது.
2.
அங்கதம் – விளக்கம்
அங்கதம்
இரு வகைப்படும் என்பதை தமிழின் மூத்த நூலான தொல்காப்பியம் கூறுகிறது. அங்கதமானது ‘வெளிப்படையாகக்
கூறுதல்’, ‘கரந்த மொழியில் கூறுதல்’ என்பதை தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது.
“அங்கதம்தானே
அரில்தபத் தெரியின்
செம்பொருள்,
கரந்தது எனைரு வகைத்தே”
ஒரு
சமூகத்தில் காணப்படும் குறைபாடுகளை நேரிடையாக நெஞ்சில் உறுத்தும் நோக்கில் வெளிப்படையாகவும்
குறிப்பாகவும் கூறுதலே அங்கதமாகும். இச்சாரத்தின் அடிப்படையில் ‘நகைச்சுவை தோன்றக்
கூறுதல் இன்புறத் தக்கதாகும்’ என்று பண்டிதமணி மு.கதிரேசனார் அங்கதத்திற்கு தரும் விளக்கமும்
கவனிக்கத்தக்கது. “அங்கதம் என்பது கத்தியைப்போல வெட்டு ஒன்று துண்டு இரண்டு என இருக்க
வேண்டுமேயன்றி மாறாக ரம்பத்தைப்போல இழுத்துக்கொண்டு இருக்கக்கூடாது” என்று ஆங்கில அகராதி
குறிக்கிறது.
பாவேந்தர்,
சமுதாய வீதிகளில் மலிந்து கிடக்கும் குறைபாடுகளைச் செப்பனிடுவதற்கு அங்கதத்தை நல்லதொரு
கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார். சத்தான மொழியில் உணர்ச்சித் துடிப்போடு அறிவார்ந்த
மெல்லிய நகைச்சுவை உணர்வுத் தெறிக்கும் வகையில் பாவேந்தர் அங்கதக் கவிதைகளைப் படைத்துள்ளார்.
தம் கருத்துக்கு வலிவூட்ட தெளிவாக, எளிமையாக, இனிமையாக விளங்கும் என்பதாலேயே அங்கதத்தைப்
போர்வாளாகக் கையாண்டார் பாவேந்தர்.
3. தமிழ்ச் சமுதாயத்தில் அங்கதம்
பொதுவாக
சமுதாயத்திற்குத் தேவையான சமுதாயத்தை வளர வைக்கக்கூடிய, விழிப்புணர்ச்சி ஏற்படுத்தக்கூடிய
கொள்கையையே மூச்சாகக் கொண்டு பாவேந்தர் கவிதைகள் இயற்றியுள்ளார். தமிழ்ச் சமுதாயம்
முன்னேறவும், சமதர்மம் தழைக்கவும், சாதி மதங்கள் அழியவும் தீவிரமாகக் கவிதைகளால் கனல்
மூட்டியவர் என்பது அனைவருக்கும் வெள்ளிடைமலை. பாவேந்தர் அங்கதமாக சுட்டியவற்றைக் கூர்ந்து
நோக்குவோம்.
3.1 கடவுள்
கொள்கையில் அங்கதம்
பாவேந்தர்
இறை மறுப்புக் கொள்கையை தம் இறுதி நாள்வரை உறுதியாகக் கடைப்பிடித்து வந்தார் என்பதை
அறியலாம். தமது குருவான பாரதியாரே
“ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று
தேடி
அலையும்
அறிவிலிகாள் பல்
லாயிரம்
வேதம் அறிவொன்றே தெய்வமுன்
டாமெனல்
கேளீரோ”
என்று
அங்கதச் சுவையோடு பாடியிருப்பதை வழிகாட்டியாய்க் கொண்டு இலக்கிய நயன் கருதியும் சமுதாயப்
பயன் கருதியும் நுட்பமாகக் கையாண்டார். ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் நடக்கும்
வாதத்தில் என்றும் நடுநின்ற நாயகமாக விளங்கும் கடவுளை ‘கடவுள் மறைந்தார்’ எனும் தலைப்பில்
அங்கத உத்தியால் படம் பிடித்துக் காட்டுகிறார்.
“இல்லை என்பார்கள் சிலர் உண்டென்று
சிலர் சொல்வார்
எனக்கில்லை கடவுள் கவலை…..
கனமான கடவுளே உனைச்செய்த சிற்பி
எவன்?
காட்டுவீர் என்றவுடனே கடவுளைக்
காண்கிலேன்”
மேற்கண்ட
கவிதையில் பாவேந்தர் அங்கத உணர்ச்சியோடு தமது இறைமறுப்புக் கொள்கையை சொல்வது நங்கூரச்
சான்றாகும். மேலும் அவர் ‘கடவுளுக்கு வால் உண்டு’ என்னும் கவிதையில்
“மாநிலம் பொசுங்குமுன் கடவுளுக்குத்
தொங்கும்
வாலையடி யோட அறுத்தல்”
எண்ணெயில்
இடப்பட்ட கடுகுபோல வெடித்தாலும் அங்கத உத்தியில் பலரும் நம்பும் கடவுளால்தான் நாடு
மோசமானது என்று கிண்டலடிப்பது புலனாகிறது.
3.2 உழைப்பாளர் வர்க்கம் - அங்கதம்
பாவேந்தர்
வாழ்ந்த காலத்தில் சமுதாய அவலங்களை அங்கதச் சுவையோடு சித்தரிப்பதில் அவருக்குத் தனி
ஈடுபாடு இருந்தது. பாவேந்தர், உழைக்கும் தொழிலாளி வர்க்கம் உயர வேண்டுமென்பதில் தீரா
ஆர்வம் கொண்டிருந்தார்.
“காண்பதெலாம்
தொழிலாளி செய்தான் அவன்
காணத்
தகுந்தது வறுமையாம் – அவன்
பூணத்
தகுந்தது பொறுமையாம்”
ஏழ்மையை
ஒழித்து சமத்துவ சமுதாயம் மலர புரட்சிக் குரல் கொடுத்தார். தொழிலாளிகளின் உழைப்பை அட்டைபோல்
உறிஞ்சும் ஆதிக்க மனப்பான்மைக் கொண்ட முதலாளி வர்க்கத்தினருக்கு பாவேந்தர் கவிதைகளையே
சாட்டையடிகளாக விளாசுகிறார்.
ஒடுக்கப்பட்ட
ஒதுக்கப்பட்ட அடிமைப்பட்டு அல்லலுற்ற உலக உழைப்பாளிகளின் உற்றத் தோழனாக உருமாறி தம்
பாட்டுப் பனுவல்களால் நடை ஓவியங்களாய்த் தீட்டியுள்ளார்.
“வலியோர்சிலர்
எளியோர்தமை வதையே புரிகுவதா
மகராசர்கள்
உலகாளுதல் நிலையாமெனும் நினைவா?”
என்று
அங்கதத்தோடு கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடாமல் உழைப்பவர் துணிவோடு எதிர்க்க போர்வாளையும்
தருகிறார்.
“சிற்சிலர்
வாழ்ந்திட பற்பலர் உழைத்துத்
தீர்க
எனும் லோகமே – அது
அற்றொழிந்தாலும்
நன்றாகுமே”
எனக்
கொந்தளிக்கிறார். ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற
அவரின் குருநாதர் பாரதியின் அதே குருதி கொப்பளிக்கும் அறச் சீற்றம் பாவேந்தருக்குள்ளும்
கனன்றது தெரிகிறது.
“மாடாய் உழைப்பார்க்கு வீடில்லை
சோறில்லை
நாடோறும்
அங்கம் வளையம் - ஆண்டை
மனைவிபோட
மட்டும் தங்க வளையல்”
வெயில்,
மழை, புயல், பனி என எக்காலத்தும் உழைப்பையே உரமாக தந்து உடலாலும் உயிராலும் தேய்ந்தழியும்
உழைப்பாளிகளின் உடல் கேள்விக்குறியாய் வளைந்துவிட்டது. ஊசி குத்த நிலமுமின்றி கொத்தடிமைபட்ட
உழைப்பாளிகளின் வியர்வைத் துளிகளை நாளும் திருடி பொன்னால் வளையல் போட்டு மினுக்கும்
முதலாளிமார்களின் மனைவிகளையும் எள்ளி நகையாடுகிறார்.
3.3 முதலாளித்துவம்
- அங்கதம்
உழைப்பாளியின்
சுகபோக வாழ்வை உண்டு கொழுத்து வாழும் இந்த உழைப்புத் திருட்டுக் கும்பலை நோக்கி,
“உங்களின் சொத்தை ஒப்படைப்பீரே – எங்கள்
உடலின் இரத்தம் கொதிப்பேறு முன்பே”
என்று
புலிப்பாய்ச்சலால் கவிதைக் குரலால் ஓங்கி உலகமறிய ஒலிக்கிறார். முதலாளித்துவம் இந்த
எச்சரிக்கையைப் புறக்கணித்தால்
“ஓடப்பரா யிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ’
என
அநீதிக்கு எதிராக உலகப்பனுக்கு மட்டுமல்ல உலக உழைப்பாளிகள் அனைவருக்கும் அங்கதத்தோடு
போர்வாள் சுழற்றவும் கற்றுத் தருகிறார். உடலுழைப்பில்லாத செல்வர் உலகை ஆண்டுலாவலும்
உழைக்கும் வர்க்கம் என்றென்றும் இருளிலே அமிழ்ந்து அறியாமையிலும் அடிமைத்தனத்திலும்
அடக்கி வைப்பது மானுடத்திற்கு எதிரான பெரும் சூழ்ச்சிதான் என்று கனல் தெரிக்க குமுறுகிறார்.
3.4 சாதியம்
- அங்கதம்
சாதி
என்னும் நோய் அன்று முதல் இன்றுவரை மக்களை அலைக்கழித்து வருகிறது. தமிழ்ச் சமுதாயத்தின்
மீது அக்கறை கொண்ட பாவேந்தர் தம் வாழ்நாள் முழுதும் தமது கவிதைகளால் சாதிக் கொடுமையை
எதிர்த்துக் கவிதைகளால் குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார். தமது நகைச்சுவை ததும்பும்
அங்கதக் கவிதைகளால், இன்றைய அழுகி வரும் சமுதாயத்தின் புற்றுநோயான சாதியத்தை அங்கதத்தால்
குத்திக் கிழிக்கிறார்.
“இருட்டறையில் உள்ளதடா உலகம்;
சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”
சாதிகள்
மனிதன் அடிமைப்படுத்த தமக்குத்தானே கற்பித்துக் கொண்டவை. சாதியை வெறுத்து பலர் இதுகாறும்
பாடினாலும் அதன் கொடுமை இன்றுவரை சமுதாயத்தில் அடங்கியபாடில்லை. சாதி என்ற சொல்லே தமிழ்ச்
சொல்லன்று என்பது பாரதிதாசன் கருத்து.
“சாதிமதம் தமிழ் இல்லை – அந்தச்
சாதி மதத்தைத் தமிழ் கொள்வதில்லை”
என்று
வருண பேதத்தை ஏற்படுத்தும் சாதியை வாழ்நாள் முழுதும் எதிர்த்தார். தமிழர்கள் அறிவுபூர்வமாக
சிந்திக்கத் தவறியதால்தான் இந்த ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன என்பதை மனம் மிக நொந்து
சொல்கிறார் பாவேந்தர்.
3.5 பெண் –
அங்கதம்
காலங்காலமாகப்
பெண் பலவீனமானவள் என்று ஆண்களால் அடக்கி வைக்கப்பட்டிருப்பதை தகர்க்க முயன்றவர் பாவேந்தர்.
‘துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்து தொண்டு செய்வாய்’ என்று பெண்ணுலகைத் தூண்டினார்.
அக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் பெண் கல்வியின் இன்றியமையாமையைக் ‘கல்வி இல்லாத பெண்கள்
களர்நிலம்; அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை! கல்வியை
உடைய பெண்கள் திருந்திய கழனி; அங்கே நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்?’ என்று
முழங்குகிறார். பெண்கல்வியின் அவசியத்தை அங்கதமாகக் கூறுகிறார்.
“கற்பது பெண்களுக்கு ஆபரணம்
– கெம்புக்
கல்வைத்த நகை தீராத ரணம்”
நகைமீது
பெண்கள் பற்றுக் கொள்வதைவிட அறிவைத் தெளிவாக்கும் கல்வியைப் பெண்கள் பற்றத் தூண்டுகிறார்.
தொடர்ந்து
பாவேந்தர் குழந்தை மணம், பொருந்தா மணம், கைம்மைக் கொடுமைகள் என்று பெண்ணுக்கு நேர்ந்த
அத்துணை இன்னல்களையும் அங்கதத்தோடு கவிதைகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.
“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே
– இங்கு
வேரிற் பழுத்த பலா”
கணவன்
இறந்தபின் கைம்மை என்னும் பெயரில் பெண்ணின் தலையில் ஒரு துன்பச் சுமையை ஏற்றி வைக்கும்
சமூகத்தின் கொடுமை மாறவேண்டும் என்று விழைகின்றார்.
- முடிவுரை
அழுத்தமும்
ஆழமும் வாய்ந்த கருத்துப் புலப்பாட்டிற்காக பாவேந்தர் கையாண்ட அங்கத உத்தி செப்பமாக
விளங்குகிறது. தமிழ்ச் சமுதாயம் எப்படி இருக்கிறது, அது எப்படி இருக்க வேண்டும் என்ற
இரண்டிற்குமிடையே உள்ள இடைவெளியைக் குறித்துச் சிந்திக்கும் வகையில் பாரதிசானின் கவிதைகளில்
அங்கதச் சுவை கூர்மையாகவும் கேலியாகவும் எள்ளலாகவும் மேன்மையாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும்
அங்கத உத்தியைக் கையாண்டுள்ளதைப் பரவலாகக் காண முடிகிறது.
மேற்கோள் துணைநூல்கள்
நச்சினார்க்கினியன்,
(1998). பாரதிதாசன் ஒரு திறனாய்வு, சென்னை:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
வேலுசாமி,
(2004). பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு.
சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்
அமுதவல்லி,
(2002). பாவேந்தர் பாநலம், சென்னை: பூங்கொடி
பதிப்பகம்
நிர்மலா
மோகன், (2013). ஆய்வுக் களஞ்சியம் – III, சென்னை : வானதி பதிப்பகம்
முரசு
நெடுமாறன்,
முனைவர். (2008). பாரதிதாசன் கண்ட தமிழ்,
கோலாலம்பூர்: தமிழர் திருநாள் 2008 ; விழா மலர்