தேன்தமிழ்
தூவி வாழ்த்துகிறேன்….
முத்தமிழ்
வணக்கம். கல்வி உலகில் கோலோச்சிய அன்பு நண்பர் ஐயா உயர்திரு பன்னீர் செல்வம் அந்தோணி
அவர்களைப் பற்றி சில நினைவுகளை இப்பிரியாவிடை மலரில் பகிர்ந்து கொள்வதில் பேருவகை
கொள்கிறேன். அவரோடு சேர்ந்து விரிவுரைஞராகப் பணியாற்றிய பதினைந்து ஆண்டுகள் என்
வாழ்க்கையில் மிகுந்த பொருள் பொதிந்தவை என்பதையும் பணிவுடன் பதிவு செய்கிறேன்.
நான்
பணிபுரிந்த தமிழ்த்துறைக்குத் தலைவராகவும் பின்பு நிபுணத்துவத் தலைவராகவும்
பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தியத்தோடு தாம் பெற்ற அனுபவத்தையும் சிந்தனையையும்
சிதறாமல் பகிர்ந்து கொண்டது எங்களின்
வாழ்க்கைக்கு மிகுந்த பயனை அளித்தது. ‘குலனருள் தெய்வம் கொள்கை’ எனத்
தொடங்கும் நன்னூல் பவணந்தி முனிவர் குறிப்பிடும் நல்லாசிரியர் இலக்கண கட்டுக்குள்
அடங்கும் நான் கண்ட ஆசிரியர்கள் வெகுசிலரே. அந்தக் நல்லாசிரியர் இலக்கணக்
கட்டுக்குள் ஒளிர்பவர்களுள் தனியொருவர்தாம் மதிப்புமிகு ஐயா பன்னீர் செல்வம்
அவர்கள்.
ஆசிரியப்
பெருந்தகைக்கேயுரிய மலர்ச்சியான தோற்றப் பொலிவு, அன்பான புன்னகை, கனிவான பேச்சு, தெளிந்த
சிந்தனை, முன்மாதிரி வழிகாட்டல், உறுதியான நிலைப்பாடு என அனைத்தும் ஒருங்கே கொண்டிலங்கும்
இனிய மனிதர். அவரைச் சந்திக்கிறவர்கள் யாரும் அவரது தோற்றத்திற்கும் வயதுக்கும்
கிஞ்சிற்றும் தொடர்புப்படுத்த முடியாது. அவரின் வயது நாற்பத்தைந்தை
தாண்டியிருக்காது என்றும் சொல்லும் பலருக்கு உண்மை வயதை அறிந்ததும் “அதற்குள்ளாகவா
அகவை அறுபதாகப் போகிறது?” என்று மலைப்பாகத் திரும்பக் கேட்பார்கள்.
உரிய
வயதுக்குள் அடங்காமல் என்றும் இளமைத் தோற்றத்தோடு காட்சியளிக்கும் அந்த மகத்தான
மனிதர் எதிர்வரும் மார்ச்சு மாதம் 30ம் தேதியோடு கட்டாயப் பணி ஓய்வு பெற்றாலும்
என்றும் எல்லோர் மனங்களிலும் நல்லாசிரியராய் வீற்றிருப்பார். கல்லூரி மாணவர்களால்
‘இலக்கணத் தந்தை’ என்று செல்லமாக போற்றப்படும் அந்த உருவத்தாலும் உள்ளத்தாலும்
உயர்ந்த மனிதர் இந்நாட்டு கல்வியாளர்கள் மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான பள்ளி,
கல்லூரி மாணவர்கள் மனத்திலும் தமது தமிழ் இலக்கண அறிவாலும் கற்றல் கற்பித்தல் அனுபவத்தாலும் ஆல விழுதாக வேரூன்றியுள்ளார்.
சலிப்பு
என்பதே இல்லாமல் புன்னகைத் ததும்பும் முகத்தோடும் என்றும் குன்றா இளமைத்
துடிப்போடும் மிகுந்த கருணையோடும் பொறுமையோடும் இலகுவாக இலக்கணத்தை சொல்லிக்
கொடுக்கும் அவரின் கற்பிக்கும் பாங்கு இலக்கணம் வேம்பென இதுவரை கருதியோரையும்
இன்பமாக இலக்கணம் கற்கத் தூண்டிவிடும். ஆசிரியராக தொடக்கப் பள்ளிகளிலும்
இடைநிலைப்பள்ளியிலும் அவர் பெற்ற பயிற்றியல் அறிவும் அனுபவமும் இன்றுவரை கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள்
நல்லாசிரியராய் மிளிர பெருந்துணையாய் அமைந்து வருவது கண்கூடு.
பதினைந்து
ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் கால் வைத்த நாள்முதல் அவரோடு பழகி வருகின்றேன்.
சிறந்ததொரு தலைவராக, பொறுப்புமிக்க வழிகாட்டியாக, பாசமிக்க அண்ணனாக, நேயமிக்க
நண்பனாக, நல்லதொரு மனிதராக என்றுமே ஆசிரியர் பணிக்கு வாழும் இலக்கணமாக அவர்
திகழ்கிறார். பயிற்சி ஆசிரியர்களின் மனத்தையும் தேவையையும் குறிப்பால் அறிந்து
உடனுக்குடன் செயல்படும் அவரின் சாதூரியமும் உத்வேகமும் கண்டு வியந்திருக்கின்றேன்.
கல்லூரியில்
எல்லாத் தரப்பினரிடமும் அவரவர் இயல்புக்கேற்ப நட்புறவுடனும் அன்புடனும்
மரியாதையுடனும் இனிமையாகப் பழகுவதால் என்றும் ‘பன்னீராய்’ அனைவரின் உள்ளங்களிலும்
மணக்கிறார். கல்வி உலகில் எதிர்பட்ட எத்தனையோ சிக்கல்களை அனுபத்தால் எளிமையாக
களைந்த விதமும் தெளிவான கருத்தை நிலை நிறுத்துவதில் கொண்ட உறுதியும் தவறுகளை
நாசுக்காகச் சுட்டிக்காட்டி இதமாக திருத்தும் பண்பும் தாமே தவறு செய்தால்
மன்னிப்புக் கேட்கும் உயர் குணமும் நேரக் காலம் பாராமல் இந்தத் தொழிலை நேசத்தோடு
தவமாகச் செய்வதைக் கண்டு பலமுறை வியந்திருக்கின்றேன்.
தமிழ் கல்வி
உலகுக்குத் தொண்டு செய்த ஐயா பன்னீர் செல்வத்தை வெறும் நன்றி என்ற ஒற்றை
வார்த்தையால் வாழ்த்திப் பாராட்டிவிட முடியாது?. அவர் என்றென்றும் பரம்பொருள்
கருணையினால் நல்ல உடல் உள நலத்தோடும் வளத்தோடும் அருளோடும் வாழ வேண்டுமென
இறைஞ்சுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?.மதிப்புமிகு ஐயா பன்னீர் செல்வத்தை
மலர்தூவி வாழ்த்தினால் வாடிவிடுமென்று என்றும் வாடாத தேன்தமிழ் தூவி
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு
என்றென்றும்
அன்புடன்
தமிழ்மாறன்
பலராம்