திங்கள், 15 பிப்ரவரி, 2016

ரெ.கா.வின் படைப்புகளில் சில வெளிச்சங்கள்
 எனது பார்வையில் இலக்கியமானது மொழியின் வழியாக முடிவில்லாத இந்த வாழ்க்கையின் அடியாழத்தில் புதைந்திருக்கும் அடர்த்தியான, நுட்பமான, தத்துவமான, வசீகரமான, ஒன்றை படம் பிடிப்பதோடல்லாமல் உருவாக்கிக் காட்டுவதுமாகும்.

மொழியின் ஊடாக இத்தகையப் புனைவுலகை உருவாக்கும் படைப்பாளிகள்தாம்  ஒரு சமூகத்தின் கனவுகளை வாழ்க்கைச் சங்கிலியிலிருந்து விடுபடாமல் நெய்கிறார்கள். அந்த வரிசையில் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றை  நெய்தவர்களில் முன்னோடியாகத் திகழ்பவர் முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை

மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமானால் முனைவர் ரெ.கார்த்திகேசுவை தவிர்த்துவிட்டு எழுதவே முடியாது. சிறுகதை, நாவல், கட்டுரையாளார், இலக்கிய விமர்சகர் எனும் பன்முக படைப்பாளியாக மிளிரும் அவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட எத்தனையோ வாசகர்களைப்போல நானும் அவரது வாசகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

எழுபதுகளின் இறுதியில்தான் ரெ.கா.வின் பெயர் எனக்கு அறிமுகமானது. வானொலியில் இலக்கியப் பேச்சுகளில் அவர் பெயர் ஒலிக்கப்பட்டபோது அவரைக் காண வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் எழுந்ததுண்டு. சில வேளைகளில் அவரின் குரலை வானொலியில் செவிமடுக்கும்போது அவரின் திருத்தமான தெளிவான செறிவான உள்ளீடு கொண்ட பேச்சு என்னையும் அறியாமல் ஒருவித இலக்கிய ஆதர்சனத்தை அவரின்பால் ஏற்படுத்தியது.

அந்த ஈர்ப்பால் அவரின் ‘வானத்து வேலிகள்’ எனும் முதல் நாவலை கல்லூரி நூலகத்தில் தேடிப் படித்து நண்பர்களோடு பகிர்ந்திருக்கிறேன். ரெ.காவை, நான் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கியம் கருத்தரங்கம் ஒன்றில்தான் முதலில் சந்தித்தேன். அவர் அப்போது தமிழ் நாவல்களைப் பற்றி தமது பார்வையை அவையில் பகிர்ந்து கொண்டார்.

தாம் நாவலில் வடித்தக் கதாபாத்திரங்களையும் இணைத்து வாசகனுடன் நேரிடையாக பேசும் பாணியில் அவர் அன்று உரையாடியது இன்னும் என் நினைவுத் திரையில் நிழலாடுகிறது. அதன் பிறகுதான் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவரின் ‘காதலினால் அல்ல’, ‘தேடியிருக்கும் தருணங்கள்’,’அந்திம காலம்’ போன்ற நாவல்களைத் தீவிரமாக தேடிப் படித்தேன்.

‘காதலினால் அல்ல’ நாவல் வெளிவந்த காலகட்டத்தில் நானே அவரைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இருபது நாவல்களை அவரிடமிருந்து பெற்று விற்றுத்தருவதாகச் சொன்னதும் ரெ.கா. நெகிழ்ச்சியால் என் தோள்தட்டியது இன்றும் எனக்குள் ஆனந்த சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. இயற்கையாகவே அவர் இலக்கியம் பேசும் நேசிக்கும் இளைஞர்களை மிகவும் வாஞ்சையோடு வரவேற்று உபசரிப்பார்.

அவரின் கனிவான போக்கையும் ஆழ்ந்தகன்ற இலக்கிய வாசிப்பையும் பயன்படுத்தும் நோக்கில் நான் கல்விக் கழகத்தில் விரிவுரைஞராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது பயன்படுத்திக் கொண்டேன். எங்கள் கல்விக் கழகத்தில்  நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் சிறுகதை, நாவல், இலக்கியத் திறனாய்வுப் பற்றி உரையாற்றவும் படைப்பாளரின் அனுபங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஐந்து முறை சிறப்பு வருகை தந்துள்ளார். எங்கள் அன்பழைப்புக்கேற்ப அவர் தவறாது பங்கேற்றது புதிய தலைமுறைக்கு  இலக்கியத்தை இதயத்திற்கு அருகில் கொண்டு செல்லும் அவரின் முயற்சியைத் தெள்ளிதின் பறைசாற்றியது.

அதேவேளை என்னையும் ஒரு பொருட்டாக மதித்து வடக்கில் நடைபெற்ற அவரின் வெளியீடுகளான ‘இன்னொரு தடவை’, ‘நீர்மேல் எழுத்து’, ‘விமர்சன முகம்’ ஆகிய நூல்களை  திறனாய்வுச் செய்ய வாய்ப்பு தந்ததையும் பெரும் பேறாகவே கருதுகிறேன். கல்விக் கழக இளங்கலை பாடத்திட்ட வடிவமைப்பின்போது விரிவுரைஞர் குழாம் அவரின் ஆலோசனையைப் பெற்று மலேசிய தமிழ் இலக்கியப் படைப்புகளையும் உட்சேர்த்ததை எண்ணி பெருமிதம் கொள்கின்றோம்.

பெரும்பாலும் ரெ.கா தாம் சந்தித்த மனிதர்களும் இடமும் அனுபவமுமே மையச்சரடாகப் பின்னி கதைகளினூடே பயணிக்கவிடுவதை என்னால் ஒரு வாசகனாக எளிதில் கண்டு கொள்ள முடிந்தது. அதிலும் பினாங்கும் தாம் பணிபுரிந்த மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமும் அதற்கப்பால் அவரின் சிறுவயது தோட்டத்து வாழ்க்கையும் மனிதர்களும் அவர் படைப்புகளில் முகங்காட்டத் தவறுவதேயில்லை.

ரெ.கா. தமது இயல்பான எளிமையான ஆனால் அடர்த்தியான கூறுமொழியாலும் மெளனமிக்க வெளிப்பாடுகளாலும் சட்டென்று வாசகன் கண்களுக்குப் புலனாகாத மனித உணர்ச்சிக் குமைச்சலை தமக்கே உரித்தான தொனியில் படைப்புகளில் காட்டுவதில் வல்லவர். அவரின் ‘வானத்து வேலிகள்’ தொடங்கி ‘சூதாட்டம் ஆடும் காலம்’ வரை அனைத்து நாவல்களையும் நான் படித்திருந்தாலும் எனக்கு என்னவோ அவரின் சிறுகதைகள் நிறைய வெளிச்சத்தைத் தந்திருக்கின்றன. 

ரெ.கா. புறத்தில் தெரியும் வாழ்க்கையைவிட அகத்தில் அமிழ்ந்து கிடக்கும் உக்கிரமான கனவுகளை மிக இலாவகமாகப் படம் பிடிப்பதில் வல்லவர். வாழ்வில் தன்னைச் சுற்றி நாளும் நடப்பவனற்றையும் ஏன் தனக்கே நேர்ந்தவற்றையும்கூட ஒரு பார்வையாளனாகக் கவனித்து அதை பொறுப்பான படைப்பாளாராக முன்வைத்திருப்பதை சிறுகதைகளில் நிறைய தரிசிக்கலாம்.

வாழ்வின் உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் ரெ.கா வடித்திருப்பதை அவரின் ‘இன்னொரு தடவை’, ‘ஊசி இலை மரங்கள்’, ‘நீர்மேல் எழுத்து’ ஆகிய சிறுகதைகளில் ஒரு வாசகன் பரவலாகக் காணலாம். வாழ்வில் வழிநெடுக தன்னைப் பாதித்த ஏதோ ஒரு சம்பவம், அது துயரமாகவோ, மகிழ்ச்சியாகவோ, கோபமாகவோ எள்ளலாகவோ இப்படி ஏதோ மனதுக்குள் அழுந்திய ஒன்றை அவர் தன் படைப்பின் வழியே நம் பார்வைக்குக் கொண்டு வருகிறார்.
அவரின் ‘மகேஸ்வரியின் குழந்தை’ எனும் சிறுகதை என் மனதுக்கு மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தியது. அதேபோல் ‘சூரியனைக் கொன்றுவிட்டார்கள்’ அறிவியல் புனைவின் மிகச் சிறந்த கதையாக அவர் படைத்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ரெ.கா. போன்ற அன்பும் கனிவும் நிறைந்த படைப்பாளரால் மட்டுமே இந்த உயிர்த்துடிப்பை கதைகளில் கொணர முடியும்.
அவரவர் வாழ்வுசார் நுண்ணிய அவதானிப்புகளுக்கு ஏற்ப புரிந்து கொள்வதையே இலக்கிய விமர்சனமாக நான் முன்மொழிந்தாலும் எவ்வித முன்னனுமானமும் மனச் சாய்வும் இல்லாமல் தன்னுள் பதிந்ததை முன் வைக்கும் திறமும் தீரமும் ரெ.காவிடம் இருப்பதை நான் பலவேளைகளில் உணர்ந்திருக்கின்றேன். ரெ.காவின் படைப்பாக்க பன்முகங்களில் நான் பெரிதும் மலைப்பது அவரின் ‘விமர்சன முகமே’. நிலையான தீர்மானங்கள், அபிப்ராயங்கள் போன்ற தன்னிலை என்ற ஒன்றையும் தாண்டி இலக்கியப் படைப்புகளைப் பலகோணங்களில் அலசிப்பார்த்துப் பந்தி வைக்கும்போதுதான்  இன்னொரு புரிதல் நமக்குள் தோன்றும்.
ரெ.கா. எதையும் எதிர்பார்க்காமால் எதன் மீதும் மறைந்தோ சாய்ந்தோ ஒளிந்தோ கொள்ளாமல் நேரிடையாக தெளிந்த நடையில் தளுக்கின்றி இலக்கிய விமர்சனத்தை உரத்துப் பேசுவது அவர் படைப்புகளின் வழியே இன்னமும் கேட்கிறது. இலக்கியப் படைப்புகளின்பால் சமூகம் கொண்டுள்ள போலியான மதிப்பீடுகள், கற்பிதங்கள், வரம்புகளைத் தாண்டி உரிமையோடு உண்மையை எழுப்ப விரும்பும் அவரின் குரலின் தடங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன்.
இலக்கிய விமர்சனம் என்ற போர்வையில் சார்பு நோக்குடன் நடக்கும் போலித்தனங்களை மறைக்காமல் ஒளிக்காமல் தம் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பாலும் அனுபவத்தாலும் விமர்சனப் பார்வையால் நம் முன் சொற்களால் லாவகமாகக் கடத்துகிறார். ஆதார இருப்பிடத்திலிருந்தும் வீசிக் கலங்கடிக்கிற காற்றுக்கும் மத்தியில்தான் ஒரு படைப்பாளன் இன்றைய சூழலில் தம் படைப்பின் சுடரை அணையாமல் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ரெ.கா எனும் மலையகத்தின் இலக்கியச் சுடரை காக்க வேண்டியக் கடப்பாடு ஒவ்வொரு மலேசியத் தமிழ் இலக்கிய வாசகனுக்கும் உண்டு. ரெ.கா. தந்த இலக்கிய வெளிச்சம்தான் என்னைப் போன்ற ஒருவனையும் ஏனைய பலரையும் இலக்கியம் பேசவும் பகிரவும் ஏதோ கொஞ்சம் கருணையோடு கைப்பிடித்து உயர்த்தி இருக்கிறது என்பதை என்னால் உரத்து சொல்ல முடிகிறது. அந்த வகையில் ரெ.கா.வுக்காக பெருவிழாவை முன்னெடுக்கும்  மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் முயற்சியையும் எண்ணத்தையும் நெஞ்சம் நிறைய வாழ்த்தி விடைபெறுகிறேன்.
நன்றி