வானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.
ஞாயிறு, 9 செப்டம்பர், 2012
ரெ.கார்த்திகேசுவின் 'விமர்சனமுகம் 2' நூல் – ஓர் அலசல்
நாள் : 7.9.2012
நேரம் : மாலை 5.30 - 8.00 வரை
இடம் : லுனாஸ் தியான ஆசிரமம்
இலக்கிய நெஞ்சங்களே,
வணக்கம். ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரோசாவா, “ஒருவரின் படைப்பைக் காட்டிலும் அவனை அதிகமாகச் சொல்லக்கூடியது எதுவுமில்லை” சொன்ன வரிகளிலிருந்து இந்த விமர்சனமுகம் 2 நூலையும் படைப்பாளரின் ஆளுமையையும் காண்போம்.
எந்தவொரு உன்னத படைப்பாயினும் அடன் வாயில்களினூடே அதைப் படைத்தவரின் மனலயத்தோடு இயைந்து பயணிக்க வேண்டுமெனில் வெறும் வார்த்தை தொடர்புகளோ, இலக்கணப் புலமையோ மட்டும் போதாது. படைப்பாளரின் அத்தனை உணர்வனுபவங்களையும் எட்டும் முயற்சியை இந்த அலசலில் தொட்டிருக்கின்றேன்.
இலக்கியங்கள் நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய உதவுகிறது. தூய இலக்கியவாதிகள் ஒரு பொழுதும் உன்னதத்தை அடைந்துவிட்டதாக நினைக்கமாட்டார்கள். மேலும் பலவாறு மேண்மையை மேம்படுத்த போராடுகிறார்கள். வாசகர்களான நமக்கு இஃது ஒரு பெருங்கொடை. வாசகர்களின் தீவிர வாசிப்பே படைப்பாளர்களின் படைப்பூக்கத்தின் புதிய கதவுகளைத் திறக்கிறது; புதிய எல்லைகளை கண்டடையச் செய்கிறது. இனிமேலாவது வாசிப்பை வாழ்வில் ஒரு முக்கியப் பகுதியாக சமுதாயமே வளர்த்தெடுக்க முனைய வேண்டும்.
இலக்கியவாதியின் வாழ்வும் ஒரு விதையின் வாழ்வும் ஒன்றுதான். பூமிக்குள் விதைக்கப்பட்ட விதையானது இரு வெவ்வேறு திசைகளில் தன் வாழ்க்கை பயணத்தைத் துவங்குகிறது. கீழ் திசை பயணமானது தன்னை நிலை நாட்டிக்கொள்ள, இருண்ட சூழலில் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்து அசையாத ஆணிவேராய் தன் இருத்தலை ஊன்ற வேண்டியுள்ளது. மேல் திசை பயணமானது வெளிச்சமும் மகிழ்ச்சியும் தந்து தன்னை பிறருக்காக அர்ப்பணிக்குமிடம். உயிர்குலம் முழுவதற்கும் காயாக கனியாக நிழலாக ஏன் அழிந்தப்பின் காகிதமாக கதவாக இன்னும் பலவாறாக பயன்தருகிறது. ஓர் இலக்கியவாதியும் அவ்வாறே தம்மை இந்த வாழ்விலே கரைக்கின்றார்.
பேராசியர் ரெ.கார்த்திகேசுவின் விமர்சனம் 2 நூலிலுள்ள கட்டுரைகள், விமர்சனங்ள், முன்னுரைகள், மனிதர்கள், கடிதங்கள், நேர்காணல், கேள்வி பதில் அனைத்தும் வறட்டு தத்துவங்களாலும் புள்ளிவிவரங்களாலும் நிறைந்தவை அல்ல. அவை புதிய பார்வையும் கூர்மையாய் உணர்த்தும் நேர்த்தியும் வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக பகிரும் தோழமையும் அழகிய கதைபோல் வாசகரிடம் பேசும் இயல்பும் கொண்டவை.
மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும் என்ற கட்டுரையில் பல்லினம் சார்ந்த வாழ்வியல் பகிர்தல்களை மிக சுவைப்படக் காட்டுகிறார். இந்த நாட்டிலே முற்றிலும் தமிழர்களாலேயே வழி நடத்தப்படும் சிங்க நடனக் குழு, தமிழர் கலையான பரதத்தைப் பயின்று அடையார் இலட்சுமணனிடம் பயின்று இன்று உலகளாவிய நிலையில் பரத குருவாக விளங்கும் ரம்லி இப்ராஹிம், சந்திரபானு ஆகியோர் பிறப்பால் மலாய்க்காரர்களே எனும் சுவைத் தகவல்கள் நிறைய உள்ளன.
உழைப்பை மூலதனமாக்கி இந்த நாட்டை உயர்த்திய சீனர்கள் பற்றி அருமையான பார்வையை மலேசியாவில் சீனர்கள் குடியேறிச் சமுதாயமா? என்று அம்னோ உறுப்பினரின் சீண்டலுக்கு தக்க பதிலுரைக்கிறார். தொடர்ந்து கால இட வழுப்போல பினாங்கில் இந்தியர்களின் வாழ்விடமாக அமைந்த ‘ஜாதிக்காய்’ கிராமத்தின் பல தகவல்களை முன்வைக்கிறார். ‘டேவிட் பிரவ்ன்’ என்ற தமிழர்க்கு ஈந்த கொடையை ஒரு ஜனநாயக அரசால் நீதிமன்றங்களில் துணையுடன் ராட்சத இயந்திரங்களின் கீழ் நசுக்கப்பட்டதை உணர்த்துகிறார்.
‘பழங்கலத்தில் பழங்கள்’ என்ற பத்து கட்டுரைகளில் பினாங்கு தீவின் வளர்ச்சிக்கு தமிழர் ஆற்றிய அளப்பரிய பங்கினை தெள்ளிதின் காட்டுகிறது. மதுரை சின்ன மருதுத்தேவரின் மகன் துரைசாமித் தேவரின் மகன் 130 குற்றவாளிகளோடு இந்த நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது; அச்சுத்தொழிலை வி.நடேசம்பிள்ளை போன்றோர் வளர்த்தது; தாயம்மாள் அம்மாளின் செல்வச் சிறப்பும் ‘டோபி’ ராணியின் புகழும் காணப்படுகிறது. தொடர்ந்து ‘நாற்காலிக்காரர் கம்பம்’ வீரையன் தோட்டம், கருப்பன் தோட்டம், என காலம் மென்றுவிட்ட பற்பல தோட்டங்களை இன்றைய இளையோருக்கு அடையாளம் காட்டுகிறார்.
பினாங்கு தைப்பூசத்தைப் பற்றி 1871 இல் முன்ஷி அப்துல்லாவின் குறிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. ‘ஏலமுச்சந்தி’ பற்றியும் பினாங்கு சாலையில் 138 ஆம் எண் கடையிலிருந்து தொடங்கப்படும் தைப்பூச மரபும் வியப்பூட்டுகிறது. தொடர்ந்து தென்காசித் தமிழ் முஸ்லிம்களால் தொடங்கப்பட்ட அஞ்சுமான் தமிழ்ப்பள்ளி(1932), ஐக்கிய முஸ்லிம் தமிழ்ப்பள்ளி(1934), தென்காசி முஸ்லிம் தமிழ்ப்பள்ளி (1950) போன்ற குறிப்புகள் இழப்பை உணர்த்துகின்றன. கோ.சாவுக்கு முன்னோடியாக பல்கலையில் தேர்ச்சிப் பெற்ற சுவாமி இராமதாசரின் வழிகாட்டலும் சேவையும் மனதை வருடுகிறது. சமூக சீர்திருத்தத்தோடு ஆன்மிக வழியும் காட்டி ‘செந்தமிழ்க் கலாநிலையம்’ வழி தமிழ்ப் பயிர் செழிக்கச் செய்த அவரை இன்றைய தலைமுறை மறந்திருப்பது பெருங்குற்றமாகப் படுகிறது.
தொடர்ந்து விமர்சனம் எனும் தலைப்பின் கீழ் இரா.முருகனின் ‘’மூன்று விரல்”, சை.பீர்முகமதுவின் ‘திசைகள் நோக்கிய பயணங்கள்”, கழனியூரனின் ‘நாட்டார் கதைகளும்”, அ.ரெங்கசாமியின் “லாங்காட் நதிக்கரை”, சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்”, இளங்செல்வனின் நாவல்களும் என்று இன்னும் பிறவற்றை ஆய்ந்து தமது இலக்கியப் பகிர்வை திறம்பட நயம்பட சாதுர்யமாக விமர்சிக்கிறார். இலக்கியம் தொடர்பான அறிவுச் செறிவும் தகவல் அடர்த்தியும் கொண்டு முதிர்ச்சியோடு ஆய்ந்த அளித்திருப்பது வாசிப்பவரை நிச்சயம் இலக்கியம்பால் ஈர்க்கும்.
ரெ.கார்த்திகேசு சுவாமியின் ‘வாழ்வே தவம்’, ஜெயந்தி சங்கரின் ‘நாலே கால் டாலர்’, சாரதா கண்ணனின் கதைகள், சங்கர நாராயணனின் ’நீர்வலை’, தேவராஜுலுவின் ‘நீரூற்றைத் தேடி’ என்ற நூல்களுக்கும் பெ.ராஜேந்திரனின்’ கரையை நோக்கி அலைகள்’ எனும் பயணக் கட்டுரை தொடர்பாக தாம் வழங்கிய முன்னுரைகளில் மிக நுணுக்கமாகவும் உண்மையாகவும் தமது பார்வையை வெளிப்படுத்துவது பகிர்தலாகவும் புதியவர்களுக்கு தூண்டுதலாகவும் விளங்கும் என்பது வெள்ளிடைமலை.
மனிதர்கள் என்ற தலைப்பில் தம் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பாலா எனும் பேராளுமையின் அன்பு வலையில் தாமும் இந்தச் சமுதாயமும் பின்னிப் பிணைந்திருப்பதை நன்றியோடு சொல்வது மனத்தை நெருடுகிறது. ‘அவரது திருமேனி தகனத்துக்கு இயந்திரத்தில் உட்சென்ற வேளையில் என் வாழ்வில் ஒரு பகுதி எரிந்துபோனாதாய் உணர்ந்தேன்’ என ரெ.கார்த்திகேசு குறிப்பிடும் உணர்வானது நம்முள்ளும் பற்றிப் பரவுகிறது. தொடர்ந்து துன்.வீ.தி.சம்பந்தனாரால் திட்டப்பட்டதும் பின்னர் தமது திருமணத்திற்கு அவர் துணைவியரோடு வந்து வாழ்த்தப்பெற்றதையும் நினைவுகூர்கிறார். நமது நாட்டின் சிறுகதை வளர்ச்சிக்கு இறக்கும்வரை அரும்பணியாற்றிய சி.வேலுசாமி பற்றி சொல்லும் அனுபவ பகிர்வு தித்திப்பானது.
கடிதம் எனும் தலைப்பில் தமிழ் நாளிதழ்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகளுக்கு ஏற்புடைய முறையில் ஒத்திசைவும், அரவணைப்பும், உணர்த்தலும், தெளிவுறுத்தலும் அநீதியானது என்றபோதில் போர்வாளும் தூக்கும் சான்றாண்மை புலப்படுகிறது. ஒட்டுமொத்த மலேசிய எழுத்தாளர்களின் குரலாக இவர் குரலொலிக்கிறது. ‘தமிழ் சாகும்’ என்ற அடிப்படையில்லாத வதந்தி செய்திகள், இணையம் வழி எழுத்தாளர்கள் தமது படைப்புகளை வெளியிட வேண்டுமெனும் உந்துதல், புத்திலக்கிய பரிசோதனை முயற்சிகளை ஊக்குதல் என மலர்ந்து மலேசிய மண்ணின் மணம் வீசும் படைப்புகள் வரை விரிந்து செல்கிறது.
‘தமிழ் எழுத்தாளர்களா? அப்படியென்றால் என்ன?’ எனும் ஆங்கில நாளிதழில் வெளியான உதய சங்கரின் பார்வைக்கு இவர் காட்டும் சான்றுகள் மிக துல்லியமானது. மேலும், ‘தமிழில் வெளிவரும் கதைகள் பெரும்பாலும் காதல் கதைகளாகவும் தற்கொலையில் முடிவதாகவும் படைப்பாளர்கள்புதிய உத்திகளோடும் திடுக்கிடும் முடிவுகளோடும் முடிவைத் தர தெரியவில்லை’ என்று கருத்துரைத்த டாக்டர் கிருஷ்ணன் மணியம் அவர்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ் வாசகர் அனைவருக்கும் தெளிவான முறையில் சான்று காட்டியிருப்பது சிறப்பு.
இந்நூலின் இறுதியில் நேர்காணல் எனும் தலைப்பில் மின்மடலாடக் குழு, நாவல் வெளியீடு, கலைமகள் இதழ் ஆகியவற்றில் வாசகரின் கேள்விகளுக்கு தமது பார்வையில் பதிலுரைத்திருப்பது சிறப்பாக அமைந்துள்லது. பொதுவாக இலக்கிய நெஞ்சங்களுக்கு விமர்சனம் 2 எனும் இந்த நூல் நுனியிலிருந்து அடியை நோக்கி உண்ணப்படும் கரும்பாய் இனிக்கும் என்பது உறுதி. இந்நூல் இலக்கிய இனிமை மட்டுமல்ல தகவல்களும் கருத்துகளும் செறிந்த முத்தாரம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)