செவ்வாய், 16 ஜூலை, 2019

அன்பெனும் தெய்வம்


சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் நான்கைந்து நாட்களாகவே வழியத் தொடங்கிவிட்டனஅன்னையர் நாள் கொண்டாட்டம். அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே என்று ஜேசுதாஸ் ஒருபுறம் உயிருருக, நானாக நானில்லை தாயே, நல்வாழ்வு தந்தாயே நீயே என்று எஸ்.பி.பாலா மறுபுறம் கனிந்திட, எதிர்புறம் ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா?’ ஹரிஹரன் குதூகலிக்க, உயிரும் நீயே, உணர்வும் நீயே, உறவும் நீயே, தாயே உன்னிக்கிருஷ்ணன்்  ஊனுருக, எல்லோருக்குமாகச் சேர்த்து மொத்தத்ததில் ‘அம்மான்னா சும்மா இல்லடா..., அவ இல்லேன்னா யாரும் இல்லடா..’ இளையராஜா உணர்வோடு உள்லமெல்லாம் கரைய நாடெங்கும் இதைக் கேட்டவர் நெஞ்சமெல்லாம் தம் அம்மாக்களின் மீது கொண்ட அன்புச் சுடராகி விடிந்தது அன்னையார் நாள். இரண்டு தமிழ் வானொலி  ஒலிப்பரப்பிலும் மாறிமாறி  தாயை மிக உயரே தூக்கி வைத்து உச்சிமோந்து மறுநாளே சுவடில்லாமல் மறந்துவிட்டு அவரவரவர் வேலையைப் பார்க்கச் சென்றிடும்  வகையறா மனிதர்தாமே நாம். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ ‘சொர்க்கம் தாயின்  காலடிக்கும் கீழே’ என்ற நல்லுபதேசங்களும் அம்மாவைக் கட்டியணைத்து முத்தமிட்டு அணிச்சல் ஊட்டும் ஒளிப்படங்களும் முகநூல், புலனம் போன்றவற்றில் தலைகாட்டி அம்மாவின் மீதுள்ள அன்பை ஒரேநாளில் கடுமழை வெள்ளமென கொட்டித் தீர்த்துச் செல்லும். இது மேற்கத்திய முறைமை என்றாலும் இன்றைய  பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தாயை மறக்காமல் இருக்க ஏதோ இதையாவது செய்கிறார்களே என்ற ஆறுதல் தவிர வேறொன்றும் பெரிதாகச் சொல்லத் தோன்றவில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிமயமும் தாயை மறவாமல் இதயக் கோயிலில் வைத்து வணங்கிப் போற்றும் மரபுதான் நம்முடையது. உண்மையில் தாய் என்பவள் யார்?. பத்து திங்கள் நம்மை சுமந்து தன்னுயிர் ஈந்து பெற்றவள் என்ற பெருமை மட்டுமா அவளுடையது. முற்றும் துறந்த துறவிகளும் துறக்க முடியாத உறவு தாயல்லவா?. ‘முந்தி தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்து’ கொல்லியிடும்போதும் மனம் வெதும்பிய பட்டினத்தார் தாயைத் துறக்க முடியாத துறவிதானே. உறவுகளில் ஒப்பற்ற இமயம் தாய்தான். நாம் இந்த உலகைக் காண வழியமைத்துத் தந்தவள் தாய்தானே. நமக்கு உடல் கொடுத்து பிற உறவையும் கொடுத்து உணர்வையும் ஊட்டியவள் தாய்தானே. தம் உதிரத்தைப் பாலாக்கி நம்மைச் சீராட்டி ஆளாக்கியவள் மட்டுமல்ல நாம் உறவாட தாய்மொழியும் தந்தவளாயிற்றே. தனது துன்பம் பொறுத்து கண்ணை இமை காப்பதுபோல நம் நலம் ஒன்றையே அல்லும் பகலும் சிந்தித்தவளாள் தாய் மட்டும்தானே. தான் அடையாத அத்தனை உயரங்களையும் தாம் தவமிருந்து பெற்ற பிள்ளை அடைய வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் தியானிக்கும் தெய்வம்தானே தாய். எத்தனையோ வேதனையையும் சோதனையையும் தனதாக்கிக் கொண்டு நமக்காக சந்தனமாய்த் தேய்ந்து என்றும் மணந்து கொண்டிருப்பது தாயாக மட்டும்தான் இருக்க முடியும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாய்தான் பிள்ளைக்காக வழிநெடுக கல்லிலும் முள்ளிலும் நடந்து தம் பிள்ளை பூப்பாதையில் நடந்து செல்வதற்கு காரணமாகிறாள். எந்த உயிரும் தவிர்க்க முடியாத புனித உறவு தாய். தாயை மதித்து அவள் சொல் தட்டாமல் வாழத்தான் தமிழில் அகரத்தை அறிமுகப்படுத்தும்போது ‘அம்மா’ என்ற சொல்லைக் கொண்டே தொடங்குகின்றோம். அம்மாவில் தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் தலையெழுத்து நல்லதாகவே இருக்கும் நம்பிக்கையில்தானோ?.அந்தப் புனித உறவையும் மறந்து போகும் பிள்ளைகளை என்னவென்று சொல்வது? எதிரும் புதிருமான இருவகைத் தாய்களைச் நான் சந்தித்திருக்கின்றேன். ஒரு தாய்  பதினெட்டாண்டுகளுக்கு மேலாக எனக்கு நன்கு பழக்கமானவர். கோயில் நிகழ்ச்சிகளில் சிறுசிறு உதவிகள் செய்யும் அந்த அம்மாவைச் சந்திக்கும்போதெல்லாம் தாம் பெற்றெடுத்த மூன்று ஆண்பிள்ளைகளும் அவரை தனியே விட்டுச் சென்று இதுவரை திரும்பி வந்து பார்க்காத துயரம் அவர் முகத்தில் பளிச்சென்று தெரியும். மற்றொரு தாய் தாம் பெற்றெடுத்தப் பிள்ளை ஊனமுற்றது என உணர்ந்தும் கருணையில்லாமல் ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் வேறொரு புதிய ஆணோடு உடன்போக்கு சென்றவர். அந்தத் தாயை அலைந்து தேடி “பிள்ளை வேண்டுமா? அல்லது  புதிய அவர் வேண்டுமா?” என்று காப்பகம் நடத்தும் மருத்துவ நண்பரும் நானும் கேட்டபோது சட்டென்று புதிய அவர்தான் வேண்டுமென கொஞ்சமும் தாய்க்குரிய கருணையில்லாமல் அவர் சொன்ன வார்த்தை கேட்டு அதிர்ந்தோம். இரண்டு நிலையிலும் இதயம் கனக்கிறது. தாய் வாழ்த்துக்குரியவர் மட்டுமல்ல என்றும் நம் வணக்கத்துக்குரியவர். தாய்மையுள்ளம் கொண்ட பெண்கள் அனைவர்க்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள். அன்பெனும் தெய்வம்தானோ உயிர்பெற்று  நம்முன் அன்னையாக நிற்கிறது

?

திங்கள், 15 ஜூலை, 2019

இ..ளை..ய..ரா..ஜா.. எனும் இசையருவி


ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே தான் மலர்வதை உணரச் செய்யும் மாமருந்து இலக்கியமும் இசையும்தான். தன்னுள்ளே தன்னைக் கரைந்திடச் செய்யும் இசைவாணர்கள் என்றும் என் வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். நாற்பதாண்டுகளுக்கு மேலாக காலை கண்விழிப்பு முதல் இரவு கண்மூடி துயில்வது வரை உலகத் தமிழர் நெஞ்சங்களை காற்றில் கரைந்துருகும் இசையால் தினம் வருடும் பெயர்  இளையராஜா மட்டும்தான். இந்தப் பண்ணைபுரத்து கிராமத்து மண்ணில் தோன்றிய ராசைய்யாவின் இசையின் மகுடியில்தான் ஒட்டுமொத்த தமிழ்கூறு நல்லுகமும் நாளும் நகர்கிறது. இந்தக் காற்று மண்டலமெங்கும் இளையராஜாவின் இசைத் தீண்டலால் தேனாய் ஒலிக்கிறது. இசையின் இலக்கணத்திற்கு வேண்டுமானால் ஏழு ஸ்வரங்கள் இருக்கலாம் அவரைக் கொண்டாடும் உள்ளங்களுக்கு இ..ளை..ய..ரா..ஜா.. எனும் வெறும் ஐந்து ஸ்வரங்கள் மட்டும்தான். இன்பமோ துன்பமோ, காதலோ கவிதையோ, துள்ளலோ துவலலோ, துடிப்போ தகிப்போ, புன்னகையோ கண்ணீரோ இந்த வாழ்வில் வழிந்தோடும் இன்னும் என்னென்ன சொல்லொண்ணா மனித உணர்ச்சிகளோ அதையெல்லாம் இந்த இராகதேவன் இசையில் கரைத்து கரையேறும் பலரை நான் இந்த வாழ்க்கை வழியெங்கும் நிறையவே கண்டு வருகின்றேன். இளையராஜாவின் எண்ணற்ற இசை பேரின்பத்தில் இதயம் கரைந்து போவது மட்டுமல்ல மொழியால் உருக்கொள்ளவே முடியாத பற்பல காட்சிகள் பரந்து விரிந்து காற்றிலேறி முடிவின்றி மேற்சென்று முடிவற்ற எல்லை நோக்கி போய்க்கொண்டேயிருக்கும். என் வாழ்க்கையில் இளமை அரும்பும் பருவமான அந்த எழுபதுகளின் இடையில் இளையராஜாவின் வருகை புதியதொரு வசந்தத்தைக் கிளர்ந்தெழச் செய்தது. என் பக்கத்து வீட்டுப் பெட்டி போன்ற பெரிய வடிவிலான வானொலியிலிருந்து வழிகிறது அன்னக்கிளி படப்பாடல். அப்போது எனக்கு மீசை சிறிய கரிகோடாய் அரும்பத் தொடங்கிய பதினைந்து வயது. என் காதுகளில் அன்னக்கிளி உன்னைத் தேடுதே.. இனிய தாலாட்டாய் வந்து விழுகிறது. பின்னர் வந்த பதினாறு வயதினிலே செந்தூரப்பூவே , கவிக்குயில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் மனத்தில் பச்சைக் குத்திச் சென்றன. தொடர்ந்து வெளிவந்த உதிரிப் பூக்கள்’, முள்ளும் மலரும் போன்ற பலநூறு படப் பாடல்களும் இந்த இசை ராஜாதி ராஜனை ரசிக்கும் மனோபாவத்திலிருந்து மனத்தில் வைத்துக் கொண்டாடும் நிலைக்குத் தானகாவே உயர்த்திச் சென்றன.  இளையராஜா இசையை இரவெல்லாம் இதயம் முழுக்க சுவாசித்து சுவாசித்து நீடித்த இனிய பொழுதுகள் பல. இசையால் மணக்கும் இந்த மனிதனை மிக அதிசயமாகவே பார்க்கத் தொடங்கிய பருவம் அது. இன்று இளையராஜாமீது சிற்சில விமர்சனங்கள் வந்தாலும் அவரின் இசையால் கொண்ட அந்த வியப்பும் மலைப்பும் இன்னும் என்னுள் கிஞ்சிற்றும் குறைந்தபாடில்லை. ஏகலைவனைப் போலவே நானும் இந்த இராகதேவனுக்குத் தெரியாமலே ஒரு ரசிகனாக, காதலனாக, மாணவனாக, நண்பனாக நாற்பதாண்டுகளுக்கு மேலாக அவரின் இசையை நெஞ்சில் பிடித்துக்கொண்டே பயணித்திருக்கின்றேன். அவரின் இசையில் இதயம் தோய்ந்த பல்லாயிரம் ரசிகர்கள் பலரும் தங்கள் ஒவ்வொரு பருவத்தையும் என்னைப் போலவே கடந்து வந்திருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். எந்தவொரு சூழலிலும் அன்று முதல் இன்றுவரை இளையராஜாவின் இசைதான் என் பின்னணியில் அரூபமாக நின்று ஒலிக்கும். இப்போது எழுபத்தைந்தைத் தொட்டிருக்கும் நமது இளையராஜா நூற்றாண்டையும் தாண்டி இசையால் என்றென்றும் இந்த உலகை ஆலாபனை செய்ய நெஞ்சார வாழ்த்துவோம். இறைவனைப் போலவே மிக உயர்ந்த உன்னத கலைஞர்களும் சொற்களுக்குள் சிறைவைக்க முடியாதவர்கள். அதுபோல எந்த உன்னதச் சொற்களையும் உயர்ந்த எதுவோடும் குழைத்துச் சொல்லி நம் இசை ராஜாங்கத்தின் இசைஞானியைத் தொட்டுவிட முடியாது. அவரின் இசையெனும் அமுதத்தேன் பருகியதில் ஏற்பட்ட கிறக்கத்தில் என் சிற்றறிவுக்கு எட்டிய ஆனந்தத்தில் கொஞ்சம் எட்ட முயன்று தோற்றுப் போகின்றேன். எத்தனையோ இரவுகள் என் மூத்த மகளை தோளில் சாய்த்துக்கொண்டு கண்ணே! நவமணியே! உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ?’ இளையராஜாவோடு ஓராயிரமுறைக்கு மேல் ஊனுயிருருகியிருப்பேன். அந்த இறைவனைப்போல அனைத்தும் கடந்து நிற்பதுதானே இசை?

காலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்?


நேற்று முகநூலில் கவிதையைப் பற்றி அழகாகச் சிலாகித்திருந்தீர்கள் ஆனால் அதற்குக் காரணமான கவிஞனைப் பற்றி கண்டுகொள்ளவில்லையே. இது நியாயமா?” இலக்கிய ஈடுபாடுடைய அந்த இளைஞன் எதேச்சையான சந்திப்பில் சட்டென்று கேட்டுவிட்டான். “உலகம் மிகவும் அழகாக இருக்கிறது என்றால் அது உருவான மூலத்தையும் சேர்த்துதானே நாம் பொருள் கொள்ள வேண்டும். கவிதையைக் காதலிக்கின்றேன் என்றால் கவிஞனிலும் கரைகின்றேன் என்றல்லவா அர்த்தம்?. எந்த ஒரு மொழியிலும் இலக்கணத்தை முற்றிலும் அறிந்திருந்தாலும் அல்லது அம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் தெரிந்திருந்தாலும் எந்த ஒரு அறிஞனாலும் புலவனாலும் கவிஞன் ஆகவே முடியாது. சொற்களை அடுக்கியதும் கவிதை உருவாகிவிடாது. கம்பனோ காளிதாசனோ ஷெல்லியோ கீட்ஸோ கவிஞனுக்கு முதலில் வருவது கவிதைதான் பின்புதான் சொற்கள் வருகின்றன.” என்று சுருக்கமாகச் சொல்லி விடைபெற்றேன். வீட்டுக்கு வரும் வழியில் கவிஞனைப் பற்றிய நீண்டதொரு சிந்தனை நினைவில் தொடர்ந்து பற்றிக் கொண்டே பின் வந்தது. கவிஞன் இந்த உலகை மொழிவழியாகவே பார்த்து அறிகிறான்; உணர்ந்து புரிந்து கொள்கிறான். இந்த வாழ்வை கவிதைகளின் வழியாகவே திறந்து சுவைக்கின்றான்; உய்த்துணர்ந்ததை உணர்வாக மொழிகின்றான். கவிஞன்தான் அன்பையும் அழகையும் மனித குலத்திற்கு ஆராதிக்கக் கற்றுத் தருகின்றான்; போராடவும் போரிடவும் நம்மை உந்தியும் தள்ளுகின்றான். நம் புலனை இறுக மூடியிருக்கும் அறியாமையின் திரைச்சீலையைத் திறக்கவும் செய்கின்றான்; அறிவில் தீக்குச்சி கிழித்து போட்டு நம்மைக் கொந்தளிக்கவும் செய்கின்றான். எனக்கு என்றுமே ஆதர்ச குரு பாரதிதான். அவன் எழுத்தே எனக்கு வேதம். அவன் வார்த்தை எனக்கு வானவில். அவன் கவிதை எனக்கு வாக்கு. எனக்குள் என்றுமே அவன்தான் யாதுமாகி நிற்பவன். இதுவரை என் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும் பாரதி வெளிச்சத்தில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். பாரதிதான் என் உச்சம் என்றாலும் பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, வாலி, மேத்தா, விக்ரமாதித்தன், தேவதேவன், தேவதச்சன், வைரமுத்து, அறிவுமதி வரை என எல்லாக் கவிஞர்களின் கவிதைகள் மீதும் எனக்குக் காதலுண்டு. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் இடைவெளியில்லாமல் வாழ்ந்த பாரதிபோல எல்லாக் கவிஞர்களையும் அப்பழுக்கற்ற வெள்ளை மனிதர்களாக இருக்க வேண்டுமென்ற என் எதிர்ப்பார்ப்பைதான் தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் மனத்தூய்மை மிக்க நம் நாட்டுக் கவிஞரான சீனி நைனாவின் பழக்கம் எனக்கு மனநிறைவு தந்தது. பாரதிக்கு அடுத்து கவிக்கோ அப்துல் ரகுமானில் நிறைய கரைந்திருக்கின்றேன். அவரின் கவிதை நூல்கள் ஒன்றுவிடாமல் பலமுறை நீந்தித் திளைத்திருக்கின்றேன். இன்றுவரை முடிந்தளவு நான் தேர்ந்தெடுத்த எல்லாக் கவிஞர்களின் கவிதைகளையும் தொடர்ந்து விடாமல் வாசித்துக் கொண்டுதானிருக்கின்றேன். ஒரு சுவைஞனாகக் கவிதை படிப்பதும் பகிர்வதும்தான் என்னால் தொடர்ந்து செய்யமுடிகிறது. இது நிரந்தரமற்ற வாழ்க்கை என்பது தெரிந்தும் அசாத்தியமான கனவுகளுடன் வாழ்வதுதானே மனித வாழ்க்கை.? அந்தக் கமனியக் கனவுகள் காண்பதற்கு நமக்குள் நம்பிக்கை விளக்கேற்ற காலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்?



கவிதைக் காதல்


ஒரு ரோஜா மலரின் அழகு அதன் பாகங்களின் மொத்தக் கூட்டல் மட்டும்தானா?. மண், நீர், காற்று, சூரிய வெளிச்சம் ஆகியவற்றின் இரசாயனக் கலவையால் ரோஜா மலர் செடியில் உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் அழகு என்பது அந்தக் கலவையிலா உள்ளது? எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தாலும் ரோஜாவின் அழகை உண்டாக்க முடியாதே. அதுபோலத்தான் இதயத்தில் நிலைபெற்ற கவிதைகளும் என்றும் வாடாத ரோஜா மலரைப் போன்றதுதான். உயிருள்ள கவிதை என்பது வெறும் சொற்களால் தொடுக்கப்பட்டதல்ல அதற்கும் மேலான மெய்ப்பொருள் நிறைந்தது. நெடுநாள் திறக்கப்படாத என் பழைய புத்தகக் கட்டுகளைப் பிரித்துப் பார்த்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். பழுப்பேறிய அந்தப் பழைய புத்தகத்தில் நான் என்றோ சின்னக் கையெழுத்தில் எழுதிய வைத்திருந்த கல்யாண்ஜியின் அலைச்சல் கவிதை வரிகள் கண்ணில் மின்னியது. இக்கரைக்கும் அக்கரைக்கும் பரிசல் ஓட்டிப் பரிசல் ஓட்டி எக்கரை என் கரை என்று மறக்கும் இடையோடும் நதிமெல்லச் சிரிக்கும் மீண்டும் மீண்டும் இந்த வரிகளைப் பலமுறை சிலாகித்து வாசித்ததில் அப்படியொரு சொல்லொணா சுகம் மனதுக்குள் ஊற்றெடுத்தது. மனவெளியெங்கும் பூமழை பொழிவதுபோல ஒரு சின்னக் குழந்தையின் குதூகலத்தில் மனம் துள்ளிக் குதித்தது. இப்போது ஒரு தரிசனத்தால் ஈர்க்கப்பட்டதுபோல இந்தக் கவிதையால் முழுதும் வசீகரிக்கப்பட்டேன். அன்றைய புரிதலில் வேறாகத் தெரிந்த கவிதை இன்றைய வாழ்வனுபவத்துக்கு முற்றிலும் நெருக்கமாகி வேறொரு பொருள் உரைத்தது. இந்தக் கவிதையை ஆராதிக்கும் தருணத்தில் எக்கரை என் கரை என்ற இரண்டு சொற்களுக்களுக்கான இடைவெளியில் நின்ற மெளனத்தில் கரைந்தும் என்னை மறந்தும் போனேன். அந்த இரு சொற்களுக்கிடையேயுள்ள மெளனம் எவ்வளவு ஆழமானது அழகானது. இடையில் நதிமெல்லச் சிரித்தது வாழ்வின் மாறுபட்ட பிணைப்பை ஆழத்தை அடையாளங்காட்டிச் சென்றது. நீர்க்குமிழியொன்று காற்றில் கொஞ்ச நேரம் பறந்தலைந்து திரிந்து உடைவதுபோல நிலையில்லாமை அந்த வரி உணர்த்துவதாகவே ஒரு பிம்பம் என்னுள்ளே தோன்றி மறைந்தது. மனம் சொற்களைக் கடந்து எதனெதனோடோ தொடர்புப்படுத்தி நீண்ட அகத்தாய்வும் செய்யத் தொடங்கிவிட்டிருந்தது. அதிலிருந்து விடுபட்டு திரும்புவதற்கே எனக்கு நெடுநேரமாகிவிட்டது. ஒரு சொல்லுக்குள் பயணம் செய்வதை கவிதை எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கிறது. கவிதையின்  தனிச்சிறப்பே அதை வாஞ்சையோடு தொடுபவரின் இதயத்தில் சிம்மாசனம் போட்டமர்ந்து மானசீகமாக உரையாடுவதுதான். சில சமயம் கவிதையின் ஒருசில சொற்கள் மனதோடு உரையாட தொடங்கிவிடும். சில கவிதைகள் வாசித்து முடித்துவிட்டப் பிறகு என்றோ ஒரு தருணத்தில் சட்டென்று உயிர்தெழுந்ததுபோல நம்மோடு உரையாடத் தொடங்கிவிடும். சில கவிதைகள் ஊதுவத்தியின் மணம் அறைமுழுதும் நிரம்பி இருப்பதுபோல என்றும் மனம் முழுவதும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஊதுவத்தி எரிந்து அடங்கினாலும் அதன் வாசனை அடங்காததுபோல படித்த அந்தக் கவிதையின் வாசனை பலகாலம் சென்ற பின்னும் மனத்தை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். எனக்குக் கவிதையைக் கொண்டாடுவதே உணர்வுமிக்க ஆன்மிக அனுபவம்தான். தமிழ் கவிதையெனும் பூக்காட்டில் அடர்ந்து செழித்திருக்கிறது. கவிதையைக் காதலிப்பதும் நந்தவனத்தில் தினம் தும்பியாய் மலர்களோடு பேசுவதும் ஒன்றுதானே?

அறிவின் வழிபாடு


வாழ்க்கை என்பது சிலருக்கு வெறும் வயிற்றுப் பாட்டிலேதான் அடங்கிக் கிடக்கிறது; சிலருக்கு அறிவின் செயல்பாட்டிலேதான் முடங்கிக் கிடக்கிறது; ஏதோ இடைப்பட்ட சிலருக்கு மட்டும்தான் இதயத்துக்காக இந்த வயிறும் மூளையும் இயங்குகிறது என்ற தெளிவு இருக்கின்றது. நேற்று உலகப் புத்தக நாள் என்ற நினைவூட்டல்போல சில புலனச் செய்திகள் கைப்பேசியில் வந்து விழுந்தன. ஏதோ இந்த நாளில் பத்து நிமிடம் படித்துவிட்டால் உலகப் புத்தக நாளைக் கொண்டாடிவிட்டதாக அலப்பறைகள் முகநூலில் வேறு அங்குமிங்கும் வழிந்திருந்தன. “புத்தக நாளின் தோற்றுவாய் என்ன?” என்னைக் காண வந்து நொடிக்கொருதரம் கைப்பேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்த பழக்கமான அந்த இளைஞனைக் கேட்டேன். “கூகுள் கடவுளிடம் கேட்டால் தெரிஞ்சிடும் சார்...ஒரு நிமிசம்...ம்ம்ம்” சில நிமிடங்களில் “மிகுள் டே சர்வீன்ஸ் மறைந்த ஏப்ரல் 23 நாளை நினைவுப்படுத்தும் விதத்தில் ஸ்பெயினிலிருக்கும் காடலோனியா புத்தக வியாபாரிகள் புத்தக நாளை 1923 முதலில் கொண்டாடினார்கள்” எனப் பதில் சொன்ன மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. “சரி நாம் எதற்கு புத்தக நாளைக் கொண்டாட வேண்டும்?. இதற்கு கூகுள் கடவுள் வேண்டாம். உன் அறிவிலிருந்து சொன்னால் போதும்” என்றதும் கெக்கபிக்கவென தலையாட்டியபடியே சிரித்தான். “உண்மையைச் சொல் நீ புத்தகம் தொட்டு எத்தனை வருடங்களாச்சு?” உரிமையோடு அவன் தோள் தட்டிக் கேட்டேன். “அதான் எல்லாம் இதுலே இருக்குதே பின்ன புத்தகம் எதற்கு?” கைப்பேசியை தூக்கிக்காட்டியவாறே சொன்னான். நாம் வாழ்க்கைச் சாலையில் சந்திக்கும் பெரும்பாலான இளைஞர்களின் நிகராளியாகவே எனக்கு அவன் தோன்றினான். அவர் வாய்ச்சொல்லில் நேர்மை இருந்தது என்றாலும் அது உண்மையானது அல்ல. அறிவுலகப் பயணத்தில் நம் இளைஞர்களுக்கு வேகம் இருக்கிற அளவுக்கு இன்னும் விவேகம் இருக்கவில்லை என்பது என் கருத்து. “உண்மையிலேயே திருக்குறள் மிக உயர்ந்த நூலா?” வழக்கம்போல என்னை மடக்குவதற்கு சற்றே தயங்கிக் கேட்டாலும் அவனின் திடீர் கேள்வியிந் உளோட்டம் எனக்குப் புரிந்தது. “என்னைப் பொறுத்தவரை திருக்குறளின் அருமை அறியாதோர் வாழ்வை வறிதே கழிக்கும் உயிர்ப்பிணமாகவே வாழ்பவராவார். சமயச் சாத்திரங்கள் மனிதனை சமயச்சிமிழுக்குள் அடைத்து அறிவை தளைப்படுத்திவிடுகின்றன. ஆனால் திருக்குறள் மனிதனுக்கு விரிந்து பரந்த சிந்தனை வழங்கி அறிவுத்தேட்டமும் ஆற்றலும் பெற்றிலங்கச் செய்கிறது. பல மில்லியன் டாலர் செலவில் ஆய்ந்து சொல்லும் இந்த விசயங்களில் பலவற்றை நமது நீதிநூல்கள் நிறையவே  சொல்லிவிட்டன. என்ன ஒரு சிறு வேறுபாடென்றால் சதாசர்வ காலமும் கைப்பேசியிலே உறைந்திருக்கும் உன்னைப் போன்ற இளைஞர்களை சம்மணமிட்டு உட்காரவைத்து உரிமையோடு நறுக்கென தலையில் குட்டி சொல்லித்தர தமிழ் ஆசிரியர், தமிழ்ப் பெற்றோர், தமிழ்க் கோபம், தமிழ் அறம் ஆகியோரைத்தான் இன்று சுற்றும் முற்றும் தேட வேண்டியுள்ளது?” என்றதும் கொல்லெனச் சிரித்துவிட்டான். திருக்குறள் எனும் பேரறிவுக்கருவூலம் வாழ்வியற் பல்கலைக் களஞ்சியமாகவும் மனித நேயத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காவும் மனித அறிவைத் துலங்கச் செய்யும் அறிவு வளர்ச்சிக் கருவியாகவும் போரும் பிணக்கும் பூசலுமற்ற உலக அமைதிக்கு வழிகாட்டும் உலகப்பொது மறையாகவும் விளங்குகிறது. பட்டறிவு, ஏட்டறிவு, நுண்ணறிவு, மெய்யறிவு என்று பலவாறு அறிவைப் பற்றி வாழ்க்கையில் பட்டும் கேட்டும் புரிந்திருப்போம். வால் அறிவு (குறள் 2) கார் அறிவு(குறள் 287), பேரறிவு (குறள் 215), புல்லறிவு (குறள் 331 அதிகாரம் 85: 881 முதல் 890வரை) அறிவின் ஆழத்தை அறிந்த தெய்வப் புலவர் அறிவை ஆய்ந்து வகைமைகளாக வகுத்துரைக்கும் திறத்தைக் கண்டு வியப்பு மேலிடுகிறது. அறிவின் பல்திறப்பாங்கையும் திருவள்ளுவர் ஆழச் சிந்தித்து பல்வேறு கோணத்தில் எடுத்தியம்புகிறார். இதையெல்லாம் சீண்டி பார்க்காமல் இன்றைய இளைஞர்கள் கைப்பேசியிலே எல்லாவற்றையும் அறிந்துகொண்டு உலகம் முழுக்க ஏதேதோ செயலிகளின்  துணையால் எளிதில் தம்பட்டம் செய்ய முடிவதால் பெரும் அறிவாளியாகிவிட முடியும் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். தாங்கள் அறியும் ஒவ்வொன்றிலும் அறியாமை சூழ்ந்துள்ளதை முதலில் உணர வேண்டும். முதலில் நம்மிடமுள்ள அறியாமையைக் களையெடுக்க  வேண்டும். பாரதி சொல்லும் ‘அறிவின் வழிபாடு’ நமக்குள் தொடங்காதவரை ஒவ்வொரு ஆண்டு வரும் புத்தக நாளும் மற்றொரு நினைவுநாள் போன்றதுதானே?

கற்றதன்வழி நிற்க


இரண்டு நாட்களுக்கு முன் சமூகவலைதளத்தில் வெளியான யாப் ஊ லிங் என்ற ஆசிரியரின் இறப்புச் செய்தி அதைத்தான் எனக்கு உணர்த்தியது. விடுமுறைநாள் என்றாலும்  சிபுவிலுள்ள இடைநிலைப்பள்ளியொன்றில் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பு போதித்துக்கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலே இறந்த அவரின் மறைவு வேதனையளிக்கிறது.  தமது ஆயுளின் இறுதிவரை அர்ப்பணிப்போடு பணிசெய்த இதுபோன்ற ஆசிரியர்களின் தியாகம் என்றென்றும் மறக்கலாகாது. தம்மிடம் பயிலும் மாணவர்களை உயர்த்த வேண்டும் என்ற உயர்வெண்ணம்  உண்மையான ஆசிரியர்களின் ரத்த நாளங்களில் என்றும் ஊறிக்கிடக்கும் என்பதற்கு அந்தச் சம்பவம் சாட்சியாக அமைந்தது. மாணவர் உலகத்தோடு பழகும்போதுதான் நம்மால் அவர்களின் எண்ண அலைகளை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மாணவன் என்ன நினைக்கின்றான் அந்த மாணவி என்ன சொல்ல வருகிறாள் என்ற மனக்குரல்களை ஓர் அனுபவமிக்க ஆசிரியரால் எளிதில் அறிந்துகொள்ள முடியும். மாணவர்கள் மனத்திற்குள் அதிகம் நிறைந்தும் மறைந்திருக்கின்ற எண்ணங்கள்தாம் அவர்களைப் பின்னாளில்  உயரச் செய்கின்றன. இந்தச் சூட்டுமத்தை ஆசிரியரானவர் நுணுகி ஆராய்ந்து  அறிந்துகொண்டால் சரியான இலக்கை நோக்கிக் கற்றல் கற்பித்தலை நடத்தலாம். அறிவியல் ஆசிரியர் ஒருவர் தம் வகுப்பில் கம்பளிப் புழுவானது வண்ணத்துப் பூச்சியாக மாறும் காட்சியைப் பாடமாக நடத்தினார். அதற்காக அவர் கூட்டுப்புழுவாக இருந்த  எருக்கஞ் செடியை வகுப்புக்கு கொணர்ந்து அது புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சியாக உருவெடுக்கும்வரை கூர்ந்து கண்காணிக்கச் சொன்னார். பல மாணவர்களின் கூட்டுப்புழுவானது வண்ணத்துப்பூச்சியாக மாறி பறக்கையில் ஒருவனுடையது மட்டும் புழுவாகவே இறந்து கிடந்தது. மறுநாள் இதைப் பார்த்த ஆசிரியர் மாணவனிடம் காரணம் கேட்க, “இந்தப் புழு கூட்டைவிட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டது. அதற்கு உதவி செய்யலாம்னு வெளியே எடுத்து விட்டேன்.” அமைதியாகச் சொன்னான். “நீ அதற்கு உதவி செய்யவதாக நினைத்து அதைக் கொன்றுவிட்டாய். புழுவானது தானே கூட்டை உடைச்சிக்கிட்டு வெளியே வரணும். அப்படி வந்ததாதான் அதற்கு வலிமையான கால்களும் உறுதியான சிறகுகளும் கிடைக்கும். அவ்வாறு வந்தால்தான் இயற்கைச் சூழலில் தன்னை தகவமைத்துக் கொள்ள முடியும்.  இதுதான் வாழ்க்கை. துண்பங்களைத் தடைகளை துயரங்களை எதிர்கொள்கிறவர்கள்தாம் வாழ்க்கையில் வலிமையாக வாழ்கிறார்கள்.  இருந்த எதிர்மறையாக  ஒருவர் தாம் படித்து அறிந்தற்கும் வாழ்க்கையில் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். திருவள்ளுவர் சொல்லும் கற்க மட்டுமல்ல கற்றதன்வழி நிற்க சற்று கடினம்தான் என்றாலும் முயற்சியோடு கற்றதை வாழ்வில் ஒழுகுவதுதானே மாந்தர்க்கு அழகு? மாணவர்களை விழிப்புறச் செய்ய எந்தச் சூழலிலும் விழித்துக் கொண்டேயிருப்பதுதானே ஆசிரியம்? 

அறிவை வென்றுவா


 சென்றுவா மகனே சென்றுவா, அறிவை வென்றுவா மகனே வென்றுவா,..அறிவுலகம் உன்னை அழைக்கின்றது இந்த மகாகவி காளிதாஸ் படப்பாடல்தான் இதயத்தில் ஒலிக்குந்தோறும் என் மனத்திரையில் தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் நிழலுருவே சித்திரமாகத் தோன்றி மறையும். இன்று மின்வெளியில் பலவாறாகத் தம் சுயத்தையும் படோடபத்தையும் பிதற்றித் திரியும் இளையர்களுக்கு மத்தியில் கடந்த தலைமுறை எப்படியெல்லாம் அறிவைத் தேடியிருக்கிறது என்பதற்கு தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் வாழ்வும் அவரின் குருவான தமிழ்க் கொண்டல் மகாவித்வான் தெ.பொ.மீனாட்சிசுந்தரத்தின் வாழ்வும் சிறந்ததொரு எடுத்துக்காட்டு. சீண்டுவாரற்று பரண்களிலும் கோயில்களிலும் கரையான்களுக்கு இரையாகிக்கொண்டிருந்த  இலக்கியச் சுவடிகளையெல்லாம் ஊரூராகக் கால் கடுக்க நடந்து அலைந்து தேடித் தேடி உடல் களைத்தாலும் கிஞ்சிற்றும் மனம் சோராமல் தம்வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணி செய்தவரை நாம் மறப்பது அறம்தானா?. ஓலைச்சுவடியில் சிதிலமடைந்திருந்த படைப்புகளையெல்லாம் பொன்னாகப் பொறுக்கி எடுத்து தம் சொத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டு அச்சுக்கூடத்தில் உயிர்பித்தவரை நாம் மறந்துவிட்டால் நம்மைவிட நன்றிகெட்டவர் யாருளர்?. தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் எனது சரித்திரம் ஒவ்வொரு தமிழரும் படித்து பின்பற்ர வேண்டிய காவியம் என்பேன். கண்கள் பழுதுபட்டபோதும் குவியாடியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு எழுத்தாகப் படித்துப் படித்து ஆயுள் அழித்த அந்தத் தியாகத்திற்கு ஈடாக வேறில்லை .அது ஒரு புறமிருக்க தமிழ்த்தாத்தாவின் குருவான தமிழ்க் கொண்டல் மகாவித்வான் தெ.பொ.மீயின் தமிழ்ப்பணி நெஞ்சை உருக்குகிறது. இளமையில் வறுமை வாட்டியெடுத்தாலும் தமிழ் கற்கும் வாட்டம் சிறிதும் அவரிடமில்லை. தாம் கற்க வேண்டிய இலக்கணச் சுவடியொன்று ஒரு பரதேசியிடம் இருப்பதை அறிந்து அவரிடம் பலமுறை கெஞ்சி கேட்டும் கிடைக்காமல் தவிக்கிறார். பணம் இருந்தால் மட்டுமே அந்தச் சுவடியைத் தருவதாக தீர்க்கமாகக் கூறும் அந்தப் பரதேசியிடம் நாளும் மன்றாடி கல்லும் கனிந்துருகும்படி  கெஞ்சக் கெஞ்ச பரதேசியின் மனம் இரங்குகிறது. “சரி, பணம் இல்லையென்றால் பரவாயில்லை; நான் சொல்கின்ற வேலை செய்ய முடியுமா?” என்று அதிகாரத் தொனியோடு பரதேசியின் குரல் ஒலிக்கிறது. “தங்கள் உத்தரவு” என்று நெடுநாள் சுவடியைக் காணும் ஆவலுடன் காத்திருந்த தமிழ்க் கொண்டல் சொல்ல “நாளையிலிருந்து எனக்குப் பதிலாக இந்தப் பிச்சைப் பாத்திரத்தை வீடு வீடாக தூக்கி வர வேண்டும். அன்னக்காவடி பாத்திரத்தில் பிச்சையெடுத்து வந்து கொடுத்தால்தான் இந்தச் சுவடியைத் தருவேன்” என்று பரதேசி எதிரொலிக்க “அப்படியே ஆகட்டும்” என்று பிச்சையெடுத்து அந்தச் சுவடியை மீட்டார் தமிழ்க் கொண்டல் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கே நன்று என்ற நறுந்தொகையின் பாடலுக்கு உண்மையாகப் பொருள்படும்படி வாழ்ந்தவர் தெ.பொ.மீ. நெஞ்சை சிறு வயதிலிருந்தே நூல்கள்தான் அறிவை வழங்கும் தோழன்; ஆசான்; வழிகாட்டி என்றெல்லாம் ஆசிரியர்கள் பெரியவர்கள் சொல்கேட்டு வளர்ந்த தலைமுறை நாங்கள். தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக நம் முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைத்தாலே நெஞ்சம் உருகும். அவர்கள் பெருமுயற்சியோடு திரட்டித் தந்த பனுவல்களை இன்றைய தலைமுறை படித்து சமூகத்துக்கு அதன் கருத்துகளைப் பரப்ப வேண்டும். எவ்வளவுதான் இணையவெளியில் படித்துப் படித்து மகிழ்ந்தாலும் நூல்களை கையில் குழந்தைபோல் எந்தி சுமந்து நெஞ்சில் அணைத்தவாறு பூரிப்பதிலுள்ள சுகானுபவம் சொல்லுக்குள் சிக்காது. இன்றைய தாய்மொழி நாளிலாவது தமிழர்களான நாம் நல்ல தமிழ் நூல்களைத் தேடிப் பிடித்து படிக்கும் பழக்கத்தை வேள்வியாகக் கொள்வோமா?

கற்றல் சுகமா? சுமையா?.


ஒவ்வொரு நாளும் நமக்கு உள்ளும் புறமும் நிகழும் கற்றலில்தான் இந்த வாழ்க்கை தொடங்குகிறது. மனிதம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேம்பட்டுச் சிறப்பதும் கற்றலினால்தான். கற்றல் என்பது என்ன? சுருங்கச் சொல்லின் தன்னை உணர்தல். கற்றுக் கொள்வதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?. நான் கற்றுக்கொண்டேன் என்பதைவிட என்னைச் சுற்றி இன்னும் கற்கவேண்டியவை நிறைய உள்ளன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இரத்தினச் சுருக்கமாகச் சொன்னால் கற்றது கை மண்ணளவு கல்லாதது உளகளவு என்பதுதான். அந்தச் சிறுவனை அவனது தந்தை குருகுலத்தில் கல்விக் கற்க  அனுப்பினார். காலம் உருண்டோடியது. “எல்லாம் கற்றுத் தெளிந்துவிட்டாய், சென்று வா” குருகுலத்தில் கல்வி முடித்த அவனை குரு வாழ்த்தி அனுப்பினார். தாம் எல்லாம் கற்றுக் கொண்டேன் கர்வத்தோடு இல்லம் திரும்பியவனை தந்தை கண்டு கொண்டார். “ எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாயா?” தந்தையின் கேள்விக்கு “குருவிடம் அனைத்தையும் கற்றேன்” என்ற மகனை நோக்கி “ எதைக் கற்றுக்கொடுக்க முடியாதோ?, எதைக் கற்றுக் கொண்டால் இந்த உலகத்தின் துன்பம் நீங்குமோ அதைக் கற்றுக்கொண்டு வா” என்று கட்டளையிட்டார் தந்தை. தந்தையின் குரலில் வெளிப்பட்ட உண்மையைப் புரிந்து கொண்டு மீண்டு குருவிடம் திரும்பி போனான். அவனைப் புரிந்து கொண்ட நானூறு மாடுகளைத் தந்து, “இவற்றை காட்டுக்கு ஓட்டிச்செல். இந்த நானூறும் ஆயிரம் ஆகியப்பின் திரும்பி வா” என்று கட்டளையிட்டார். நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி ஆண்டுகளும் ஆயின. தனிமை முதலில் சலித்தாலும் அதுவே வாழ்க்கையாகிப் போனது. தனிமை, இனிமையான மெளனமாகி தவமாகி விலங்குகளின் விலங்குகளின் மொழியும் மாடுகளின் பேச்சும் இயற்கையின் ஒவ்வோர் அசைவும் உணர்வும் புரியத் தொடங்கியது. ஒருநாள் “நாங்கள் ஆயிரமாகிவிட்டோம்” மாடொன்றின் பேச்சு குருவை நினைவுப்படுத்தியது. தூரத்தில் அவன் வருவதைக் கண்ட குரு அவன் கண்களில் பொழியும் கருணையை உணர்ந்துகொண்டு அருகில் வந்ததும் அன்போடு “இதோ ஆயிரத்து ஒன்றாவது விலங்கும் வந்துவிட்டது. இப்போது எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்துவிட்டாய்”  அவனை அணைத்தபடியே கூறினார். அந்தச் சிறுவன்தான் சுவேதகேது என்று உபநிசிதம் பகர்கின்றது. இதில் கற்றலின் ஆழ்நிலை உணர்த்துதல் மிக முக்கியம். தாயின் கருவறையில் குடியிருந்தபோதே ஒரு குழந்தையின் கற்றல் தொடங்கிவிடுவதாக அன்றைய இதிகாசமும் இன்றைய அறிவியலும் ஒருசேர சொல்கிறது. ஒவ்வொரு கட்டத்தில் கற்றல்தான் மனதுக்குள் மறைந்திருக்கின்ற எண்ணங்களைச் செயல் வடிவம் கொடுக்கின்றது. காலங்காலமாக அடிமைத்தனத்தில் ஊறி வளர்ந்த கறுப்பினக் குழந்தையொன்று தமது வீட்டுக்கு அருகேயுள்ள தெருவோரத்தில் பலூன் வியாபாரியைப் பார்க்கிறது. அவன் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் எனப்  பல வண்ணங்களில் பலூன்களைக்  கயிற்றில் பிணைத்தபடியே குழந்தைகளை நோக்கி ஆரவாரத்தோடு கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தது அந்த பிஞ்சு நெஞ்சில் மகிழ்ச்சியை விளைவித்தது. அந்தக் காட்சியைக் குதூகலமாகக் கண்டு ரசித்த குழந்தை நம்பிக்கையோடு பலூன் வியாபாரியிடம் தன்னை மறந்து நகர்ந்து சென்றது. “பலூன் வேண்டுமா பாப்பா?. என்ன நிற பலூன் வேண்டும்?” வாஞ்சையோடு கேட்ட பலூன் வியாபாரியைப் புன்னகையோடு சற்று நேரம் உற்றுப்பார்த்து “உங்க கையிலே இருக்கும் கறுப்பு பலூன் மற்ற நிற பலூனைப்போல வானத்தில் பறக்க முடியுமா?” புரியாமல் கேட்டது. “பலூன் வானத்தில் பறப்பதற்கு அதோட நிறம் காரணம் இல்லம்மா கண்ணு. அதுக்குள்ள இருக்கும் காற்றுதான் அதைப் பறக்க வைக்குது” என்று செல்லமாக குழந்தையின் கன்னம் கிள்ளி கேட்ட கறுப்பு பலூனைத் தந்தார். குழந்தை மகிழ்ச்சியோடு அதை வாங்கித் தமது தலைக்கு மேலே பறக்கின்ற கறுப்பு பலூன் பறக்கின்ற காட்சியில் இலயித்தது. கற்றல் சுகமா? சுமையா?.



நூல்கள்தானே நம்மை உயர்த்தும் ஏணி


எங்கோ எப்போதோ படித்ததாக நினைவு. அது உண்மையா மிகை புனைவா என்றெல்லாம் தெரியாது ஆனாலும் எனக்குள் அதன் சாரம் இன்னும் ஈரம் குறையாமல் இருக்கிறது. ஞானத்தைக் கற்க வேண்டி காடு, மேடு, மழை, வெயில், குளிர், கடல் எல்லாம் கடந்து சீன தேசத்து துறவி ஒருவர் இந்தியாவிற்கு வந்தாராம். பலநாள் தேடலுக்குப்பின் அவருக்கு இங்கே அள்ள அள்ளக் குறையாத ஞானக் கருவூலங்களான ஓலைச் சுவடிகள் கிடைத்தனவாம். அவற்றையெல்லாம் குழந்தைகள்போல் அள்ளியெடுத்து கங்கை நதியைக் கடப்பதற்குத் துறவி படகில் கிளம்பினாராம். நிறைந்த ஓலைச்சுவடிகளின் பாரத்தால் அந்தப் படகு பயணம் தடைப்படும் என்பதை உணர்ந்த படகோட்டி அதில் சிலவற்றை ஆற்றில் வீசும்படி துறவியிடம் கூறினான். மறுப்பேதும் பேசாத துறவி முதலைகள் வாழ்கின்ற ஆற்றில் மறுகணமே விருட்டென பாய்ந்து, இந்தச் செல்வங்களை அக்கரையிலுள்ள மடத்தில் சேர்த்துவிடும்படியும் வாய்ப்பிருந்தால் தான் அங்கு வந்து சேர்கிறேன் என்று கூறினாராம். நூல்கள் போற்றுதற்குரியவை மட்டுமல்ல வணங்குதற்குரியவை என்பதற்கு இதுவே சான்று. பிறருக்கு எப்படியோ தெரியாது எனக்கு நூல் எனப்படுவது உடலும் உணர்வும் அறிவும் தோழமையும் மிக்க ஆத்மார்த்த நண்பனாகவே தோன்றுகிறது. ஒரு சில வேளைகளில் நட்பெனும் எல்லையைத் தாண்டி ஆசானாக நின்று நெறிப்படுத்தி  நல்வழிகாட்டுகிறது. நான் புரட்டிய நூல்களைவிட என்னை புரட்டிய நூல்கள் அதிகம். அவற்றின் ஒவ்வொரு சொல்லும் என் இதய அறைக்குள் கூடுகட்டி வாழ்கிறது. உலகத்தைப் புரட்டிப் போட்டதில் மகத்தான நூல்களின் பங்கு அதிகம். வாள் உனையைவிட பேனா முனைக்கு வலிவு அதிகம் என்பதை தொன்று தொட்டு உலக வரலாறு பலமுறை உறுதிபடுத்தியிருக்கிறது. மூலதனம் நூல் மூலம் பொதுவுடைமை சிந்தாந்தத்தை உலகம் முழுதும் பரவச் செய்த காரல் மார்க்ஸ் மீது எனக்குத் தனிக் காதலுண்டு. மூன்று பாகங்களாக வெளிவந்து உலகை குலுக்கிய அந்நூலை எப்படியாவது தேடிப்பிடித்துப் படிக்க வேண்டும் என்ற என் நெடுநாளைய ஆவல் ஒரு இந்தியப் பயணத்தின்போது நண்பர் மூலம் கிடைத்தது. இன்றுவரை மூலதனத்தின் மூன்று பாகங்களையும் முழுமையாகப் பார்த்ததில்லை. பொதுவுடைமை சிந்தனைக்கு எதிரானது என்பதால் அந்நூல் நம் நாட்டில் தடை செய்யப்பட்டதால் அதை வைத்திருக்கவும் மீள்வாசிப்பு செய்யவும் வழியில்லாமல் போய்விட்டது. அதனால் அதன் சுவையை முழுமையாக உணரும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. காரல் மார்க்ஸ் 15 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷ் அருட்காட்சியகத்தின் நூலகத்திலேயே அடைந்து கிடந்து தவமாக இந்நூலை ஆக்கினார் என்பதே தனித்தச் செய்தி. இதுபோல எத்தனையோ நூல்கள் மனிதனைச் செதுக்கி உலகத்தை வாழ்வித்துக்கொண்டுதான் இருக்கின்றன.  வரலாற்று ரீதியாக எத்தனையோ நூல்கள் உலகைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. “எனக்குள் ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்தியது டால்ஸ்டாயின் இறைவனின் அரசாங்கம் உனக்குள் இருக்கிறது என்ற நூல்” என்று  மகாத்மா காந்தியின் வாக்கு மூலத்தைப் படித்ததும் அதை அப்போதே தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் வேர்விட்டது. வெறும் 47 பக்கங்கள் கொண்ட பகுத்தறிவு அமெரிக்கர்களிடம் எழுப்பிய மறுமலர்ச்சி சிந்தனையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. “நாம் எவ்வளவு பெரிய கண்டத்துக்குச் சொந்தக்காரர்கள், சிறிய குட்டி தீவுக்கு அடிமையாகக் கிடக்கிறோமே” என்ற மனவெழுச்சியை அமெரிக்கர்களிடம் ஏற்படுத்தி புரட்சி பிகடனத்துக்கு வித்திட்டது. “கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து யார் மீட்கப் போகிறார்கள்?” என்று காலம் காத்திருந்தபோது டாம் மாமாவின் குடில் என்ற நூல் ஆப்ரகாம் லிங்கன் மனச் சாளரங்களைச் சட்டென்று திறந்துவிட்டது வரலாற்று உண்மை. பின்னாளில் வெளிவந்த பிரபலமான வேர்கள் நாவல் படித்தவர்கள் அமெரிக்க கறுப்பினத்தின் வலிகளை நன்கு உணர முடியும். நாம் பயின்று இன்புறத்தானே சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான பல்லாயிரம் நூல்கள் தமிழிலே கொட்டிக் கிடக்கின்றன. தொல்காப்பியச் சுவையும் ஐம்பெருங் காப்பியச் சிறப்பும் தெய்வீகம் கமழும் தீந்தமிழ்ப்பாக்களும் இதிகாச இனிமையும் சித்தர் களஞ்சியமும் என்றும் படிக்கப் படிக்க சிந்தை இனிக்கும். தற்கால கவிதையும் சிறுகதை நாவல் புனைவுகளும் தனித்ததோர் பூக்காடு. உலகத்தின் எல்லா ஐயங்களுக்கும் தீர்க்கத்தரிசனமாகத் திகழும் திருக்குறள் ஒன்றுபோதுமே நம்மை வானளவு விரியச் செய்வதற்கு?

நீள்கிற கேள்விகளோடு?????


குழந்தைகள் மலர்கள், அவர்களைக் கசக்கிவிடாதீர்கள். குழந்தைகள் ஓவியங்கள், அவர்களைக் கலைத்து விடாதீர்கள். குழந்தைகள் கவிதைகள், அவர்களை வாசிக்கப் பழகிக்கொள்ளுங்கள். குழந்தைகள் கண்ணாடிகள், அவர்களை உடைத்துவிடாதீர்கள். குழந்தைகள் கற்க வேண்டிய புத்தகங்கள், அவர்களைக் கிழித்துவிடாதீர்கள் எங்கோ படித்த வரிகள் ஆசிரியர் கொண்டாட்ட மகிழ்ச்சியில் என்னுள் மீண்டும் உயிர்த்தெழுந்தது. கற்றலும் கற்பித்தலும் அன்பு சார்ந்தது என ஆழமாக நம்புபவன் நான். ஒவ்வொரு மாணாக்கன் மனதுக்குள்ளேயும் பயணம் செய்து அவனவன் தெய்வ குணத்தை அவனவனே கண்டறியச் செய்யும் மாபெரும் வித்தையைக் கற்றுக் கொடுப்பவர்தான் ஆசிரியர். முன்பெல்லாம் ஒருநாள் மாணாக்கர் பள்ளிக்கு வரவில்லையென்றாலே வீட்டுக்குத் தேடிச் சென்று காரணத்தைக் கண்டறிந்து வரும் ஆசிரியர்கள் அதிகம் இருந்தனர். இன்று அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கற்றல் கற்பித்தல் நடந்தால் சரி என்று இயந்திரகதியாக அரங்கேறுகிறது. மாணவர் ஆசிரியர்க்கான உறவில் இடைவெளி அதிகரிப்பது கற்றலுக்குப் பெருந்தடை. தாயின் அரவணைப்பைப் பிரிந்து பள்ளிக்குப் போகிற புதிதில் குழந்தைகள் கதறிக் கதறி அழுவதைப் பார்த்திருப்போம். பின்னர் பள்ளிக்கூடச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிப்போய் ஆசிரியரோடு இணைந்துவிடுகிறது. தம் தாயிடம் பேசுவதைப்போல நம்பிக்கையோடு ஆசிரியரிடமும் பழகுகிறது. இப்போது அந்தக் குழந்தைக்கு இரு தாய்மார்கள் கிடைத்திருக்கிறார்கள். மெய்யாக இன்றைய பள்ளிக்கூடங்கள் இப்படி இயங்குகின்றனவா?   இதுவரை பள்ளிக்கூடத்தையும் ஆசிரியர்களையும் புனித பிம்பம் தந்து பொது புத்தியில் பார்த்த நமக்கு சில கயவர்களை காண்பது மனதுக்குச் சங்கடமாகத்தான் இருக்கும். இன்றைய இயந்திரத்தனமான கல்வி முறையில் மனமிழந்த ஆசிரிய எந்திரங்கள் கட்டவிழ்க்கும் வன்முறைகள் மறைப்பதற்கில்லை. அப்பழுக்கில்லாத மாணாக்கரிடம் கேட்டால் முதலில் தங்கள் தேவையெல்லாம் வன்முறைகள் இல்லாத பள்ளிக்கூடங்களும் வெஞ்சினம் இல்லாத ஆசிரியர்களும்தான் என்பர். சுடர்விட்டு எரிய வேண்டிய மாணாக்கர் அறிவு ஒளியை பிரம்புகளால் அணைத்துவிடும் ஆசிரியர்களை மெல்ல இந்தக் கல்வி முறையிலிருந்து களையெடுப்போம். தொடக்கப்பள்ளிகளிலோ இடைநிலைப்பளிகளிலோ ஏன் உயர் கல்விக் கூடங்களிலோ ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட அவமானப்படுத்தப்பட்ட கேலி செய்யப்பட்ட மாணவர்களிடம் மனம்விட்டு நீங்கள் பேசியதுண்டா?. அவர்கள் ஆசிரியர் மீது கட்டவிழ்க்கும் குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் மனத்தை உலுக்கிப் போட்டுவிடும். படிப்பிலும் தோல்வியுற்றவர்களாகி பிரச்சனைக்குரிய மாணவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டு, நண்பர்களாலும் கேலி செய்யப்பட்டு, பள்ளிச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அவர்களை ஒரு நாளாவது அழைத்து அன்புடன் பேசியதுண்டா?. தவற்றை அன்புடன் உணர்த்தாமல் தண்டிக்க மட்டுமே தெரிந்த ஆசிரியர்களின்மீது கொண்ட வெஞ்சினத்தால் கழிப்பறைகளில் தாறுமாறாகக் கிறுக்கல்கள் செய்யும் மாணவர்களின் மனநிலையை அறிந்ததுண்டா? தீர விசாரிக்காமல் சட்டென்று மனம் நாணும்படி கடிச்சொற்களால் அர்ச்சிக்கும் ஆசிரியர்களைப் பற்றிய அவர்களின் எண்ணத்தை கேட்டறிந்ததுண்டா? இன்னும் இன்னும் நீள்கிற கேள்விகளோடு நிற்கிற அவர்களுக்கு நிறைவளிக்கும்  வகையில் சொல்ல பதில்கள் என்னிடமில்லை?

தன்னை உணரச் செய்யத்தானே கல்வி?


“உண்மையிலேயே கல்வி என்றால் என்ன? அது எப்படிப்பட்டதாக இருந்தால் நல்லது?” என்னை அன்னொருநாள் மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வந்த அந்த இளம் ஆசிரியர்களிடம் வினவினேன். “மீண்டும் கேள்வியா?” என இருவரும் ஒருவரையொருவர் புன்னகைத்தபடி பார்த்தனர். நான் தீர்க்கமாகப் பதில் எதிர்பார்ப்பதை உணர்ந்து ஒருவர் “கல்வி அறிவை வளர்க்க வேண்டும். அது மகிழ்ச்சியைத் தரவேண்டும்” பதைபதைப்பாகக் கூறினார். “சந்தேகமாகக் கூறினாலும் உங்கள் பதில் சரிதான்” என்றதும் தமது கட்டை பெருவிரலை உயர்த்தி நண்பரிடம் காட்டிச் சிரித்தார் சொன்னவர். சில வினாடிகளுக்குப் பிறகு “சரிதான் ஆனால் மிகச் சரியானதைச் சிந்திப்போமா?” என்றதும் கவனமாகக் கேட்டனர். “சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்று வீரம் துணிவைக் கொடுக்காத கல்வியை உண்மையான கல்வி என்று சொல்ல முடியுமா? ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலே நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி” என் மேசையின் இழுவறையில் வைத்திருந்த விவேகானந்தரின் வாசகம் ஒன்றை அவர்களிடம் காட்டியபடி அமைதியாக வாசித்துக் காட்டினேன். “நம் வகுப்பில் இருக்கும் பலதரப்பட்ட மாணவர் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். கல்வியானது அம்மாணவனின் தனித்துவத்தையும் அடையாளம் காட்டுவதாக அமைய வேண்டும். இதற்கு பொருத்தமாகக் கற்பனைக் கதை ஒன்று சொல்லட்டுமா?” நான் சொல்வதை தலையாட்டி ஆமோதித்தனர். “ஒரு காட்டில் ஒன்றாக சேர்ந்து வாழும்  நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன என அனைத்து விலங்குகள் பரந்துபட்ட கல்வித் திட்டம் கொண்ட பள்ளிக்கூடம் ஒன்றை நடத்த விரும்பின. அதனால் அந்தப் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் பறத்தல், மரமேறுதல், நீந்துதல், தோண்டுதல் என அனைத்தையும் சேர்ப்பதென முடிவெடுக்கப்பட்டது. பறவைகள் சிறப்பாகப் பறந்தன ஆனால் ஓடுவதில் தோற்றுப் போயின. ஓடுவதில் வேகமான மான்கள் பறக்க முயன்று கீழே விழுந்து காலொடித்துக் கொண்டன. மரத்தில் விறுவிறுவென ஏறத் தெரிந்த அணில்கள் நீந்தத் தெரியாமல் தவித்தன. நீந்தத் தெரிந்த மீன்களோ வேறெந்த பயிற்சியிலும் கலந்து கொள்ள முடியாமல் கலங்கின. காட்டு நரிகளோ, “ஊளையிடும் போட்டி பாடத்திட்டத்தில்  சேர்க்காததால் பள்ளியிலிருந்து வெளியேறுவதாக வம்படித்தன.  ஏதோ கொஞ்சம் அரைகுறையாகாக் கற்றுத் தேர்ந்த ஓணான் மட்டும் எல்லாப் பாடங்களிலும் சராசரி மதிப்பெண் பெற்றது.” இப்படி நான் சொல்லி முடித்ததைக் கேட்டு சிரித்த ஆசிரியர்கள் என் கதையின் சாரத்தைப் புரிந்து கொண்டனர்.   பின்பு எங்கள் உரையாடல் சிறிதுநேரம்  அதையொட்டி வளர்ந்தது. “அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு மாணவனுக்குள்ளே என்னனென்ன திறமை மறைந்திருக்குன்னு பளிச்சின்னு தெரியும். அதுக்கு ஏற்ப அவரவர் திறமைகளை முடுக்கி விடுவாங்க.” தம் அனுபவத்தை ஒருவர்  பகிர மற்றவரோ அன்று ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். ஒருநாள் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் அடுத்த நாளே ஆசிரியர் வீட்டுக்குத் தேடி வந்துவிடுவார்; அக்கறையோடு நலம் விசாரிப்பார்” என ஆமோதித்தார். “ம்ம்ம்.. அப்படிப்பட்ட உணர்வும் உறவும் இன்று ஆசிரியர்களிடம் ஏன் தொலைந்து போனது?” கேள்வியை அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் புறப்படுமுன் நான் மீண்டும் தொடக்கத்தில் கேட்ட கேள்வியை முன் வைத்தபோது “மாணவன் தம் சுயத்தை தாமே அறியச் செய்து மலர வைப்பதே உண்மையான கல்வி” என்று அவர்கள் புரிந்து சொன்னது என்னுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை உணரச்  செய்யத்தானே கல்வி?

நெடுங்காவியம்தானே ஆசிரியர்?


என்னைப் பொறுத்தவரைக்கும் வாசிக்கக் கற்றுத் தரும் ஆசிரியர்களைவிட வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள உதவும் ஆசிரியர்களேதான் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கின்றது?. நாங்கள் மாணாக்கராய் இருந்த காலத்தில் எந்த வசதியும் இல்லாத எங்கள் ஆசிரியர்கள் பாடவேளையினூடே நாட்டிலும் வெளியிலும் நடக்கும் நிறைய விசயங்களைச் சுட்டிக்காட்டி சிந்தனையில் தெளிவு ஏற்படுத்துவார்கள். எழுத்தும் ஒலியும் மனத்தில் ஆழப் பதியும் வகையில் பன்முறை ஒலிக்கச் செய்து எங்கள் இதய நாற்றங்காலில் தமிழ் எழுத்துக்களை நட்டு வைத்த ஆசிரியர் திரு.சின்னையா அவர்களையும் திரு.சின்னக்கண்ணு அவர்களையும் நன்றியோடு கைகூப்புகின்றோம். தமிழ் எழுத்துகளை வடிவத்தோடும் கலை உணர்வோடும் எழுத வேண்டுமென்பதற்காக மெனக்கெடும் ஆசிரியர் திரு.கதிரவனின் கண்டிப்பும் கோபமும் இப்போது புரிகிறது. தொலைக்காட்சியோ வானொலியோ தோட்ட மக்களிடம் இல்லாத அந்த அறுபதுகளின் இறுதியில் ஆசிரியர்கள்தான் உலக நடப்புகளை எங்களுக்குப் பந்தி வைப்பார்கள்.  பாட நூலைத் தவிர வெறெதுவும் வாசிக்காத எங்களுக்குப் பொது அறிவை வளர்ப்பதற்காக ஆசிரியர் திரு.கிருஷ்ணன் அவர்கள் தாம் பழைய  நாளிதழ்கள் திரட்டிக் கொண்டு வந்து வாசிக்க ஊக்குவிப்பார்கள். ஆப்ரகாம் லிங்கன் என்ற சப்பாத்து தைக்கும் ஏழையின் மகன் எப்படி நெடுந்தூரம் நடந்து சென்று ஒரு பண்ணையில் வேலை செய்து அதற்குக் கூலியாக நூல் இரவல் பெற்று தெருவிளக்கின் ஒளியில் படித்து அறிவை வளர்த்துக்கொண்டு பின்பு உயர்ந்து அமெரிக்காவின் பதினாறவது அதிபரானர் என்ற கதையை ஆசிரியர் திரு. மு. இராஜகோபால் அவர்கள் வேப்பமர நிழலில் வாசிப்பு வகுப்பை நடத்தும்போது சொன்னது இன்னும் என்னுள்ளே சுருதி மாறாமல் ஒலிக்கின்றது. காற்பந்து, பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில்  எங்களைக் கலந்துகொள்ள செய்வதற்காகத் தம் சொந்த பணத்தில் வண்டி பிடித்து அழைத்துச் செல்லும் ஆசிரியர் திரு.சின்னப்பன் அவர்களின் ஊக்கம் மறக்கவியலாது.  மனிதன் சந்திர மண்டலத்துக்குச் சென்ற சம்பவத்தை தந்த வாரம் காலை சபையின்போது ஆசிரியர் திரு.மணியம் சிலாகித்து கூறியது இன்றும் நினைவில் இனிக்கிறது ஒவ்வொரு வகுப்பிலும் வாசிப்பு மூலைகளை உருவாக்கி அப்போதைய அம்புலிமாமா, திருமகள், போன்ற இதழ்களை வைத்து வாசிக்கச் செய்த ஆசிரியர் திரு. க.இராஜகோபால் அவர்களை மறக்கத்தான் முடியுமா?. மாலையில் குழு நடவடிக்கையையும் நிறைய அறிவுப் புதிர் போட்டிகளையும் நடத்தும் ஆசிரியர் திரு.பரசுராமன் அவர்கள் தனித்தொரு அடையாளம். ஆங்கில மொழிப் போட்டிகளையும் வாசிப்பு நடவடிக்கைகளையும் இவர்களோடு இணைந்து செயற்படுத்தும் ஆசிரியர் திரு.சின் அவர்களும் இன்றுவரை நினைவில் நிற்கிறார்கள். தமிழ்ப்பள்ளியில் இவர்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும்தான் எங்கள் வாழ்க்கை வழிநெடுகிலும் துணை வந்திருப்பதை நன்றியோடு சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கின்றோம். இத்தனைக்கும் அவர்களில் ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்து பலகாலம் காத்துக் கிடந்தவர்களே. பின்னாளில் நான் ஆசிரியராகப் பணியாற்றியபோது அவர்களின் சம்பளம் வெறும் தொண்ணூற்று ஆறு வெள்ளி என்பதை அறிந்து அதிர்ந்தேன். அந்தச் சொற்ப பணத்திலும் தேவைப்படும் மாணவர்களுக்கு புத்தகம், பென்சில், உணவு என்று கொடுக்கும் அவர்களின் தியாக மனம் போற்றுதற்குரியது. இடைநிலைப்பள்ளியிலும் மனத்தை மலரச் செய்த மக்கத்தான ஆசிரியர்கள் அமைந்தது மற்றொரு கதை. இடைநிலைப் பள்ளிக்குச் சென்ற பின்னரும் தோட்டத்துப் பின்னணியில் வசிக்கும் சூழல் சரியாக இல்லாததை உணர்ந்த ஆசிரியர் திரு.மணியம் அவர்கள் தாம் புதிதாக கட்டிய வீட்டுக்குக் குடிபுகாமல் எங்களுக்கு இலவயமாக அங்கு மூன்றாண்டுகள் தங்கிப் படிக்க நம்பிக்கையோடு அனுமதியும் முழுச் சுதந்திரம் கொடுத்தது எவ்வளவுப் பெரிய தியாகம்?.  நான்  எடுத்துக்காட்டிய இவை வரலாற்றுச் சான்றுகள் மட்டுமல்ல ஆசிரியர்கள் ஏற்றிவைத்த ஏணிப்படிகள். என்றுமே நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் அடக்க முடியாத நெடுங்காவியம்தானே ஆசிரியர்?

கல்லைச் சிற்பமாக்கும் உளிகள்தானே ஆசிரியர்கள்!!!


எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதைப்போல என் எல்லாப் பெருமைகளும் என் ஆசிரியருக்கே என்று டாக்டர் அப்துல் கலாம் அன்று சொன்னது ஒவ்வொரு ஆசிரியர் தினத்திலும் என் நினைவில் வந்து போகிறது.குடியரசுத் தலைவர் பணிக்காலம் முடிந்ததும் ஆசிரியர் பணியைத் தேடிப் போனது மட்டுமல்ல ஒரு மதிப்புமிகு ஆசிரியராகவே இறுதி மூச்சையும் விட்ட பேராசிரியர் டாக்டர் அப்துல் கலாம். நல்ல குழந்தைகளை உருவாக்குகிற பொறுப்பு ஒருதலையாக பெற்றோரை சார்ந்தது மட்டுமல்ல இந்த ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உண்டு என்று ஆழமாக நம்புபவன் நான். அதிலும் நல்ல குடிமகனை உருவாக்கும் மாபெரும் பொறுப்பில் இந்தக் கல்விக்கூடங்களுக்கும் அதில் பாரதி வார்த்தையில் சொன்னால் விழியெதிர்படும் தெய்வங்களாக கருதப்படும் ஆசிரியப் பெருமக்களுக்கு அளப்பரிய பங்குண்டு. அன்பு தொடுதலால் அறிவு விளக்கால் வழிகாட்டிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஆசிரியப் பெருமக்களுக்கு என் ஆசிரியர் நாள் வாழ்த்துகள். ஆசிரியரின் அன்பான பார்வையும் தொடுதலும் மாணவரின் எத்தனையோ மறைந்த பக்கங்களைத் திறக்கும். ஆசிரியரின் அறிவு முதலில் அன்பின் பாதையைத் திறக்க வேண்டும். அன்பும் அறிவும் இணையும்போதுதான் உலகம் அருள்மயமாகும். அன்பும் அறிவும் பிரிந்தால் உலகம் இருள்மயமாகிவிடும். என்றென்றும் உலகம் அருள்மயமாக அன்பின் பாதையில் அறிவின் தடத்தில் பயணம் செய்ய வேண்டும். இதற்கு அமெரிக்காவின் பதினாறாம் குடியரசுத் தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் தம் மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்தான் நல்லதொரு எடுத்துக்காட்டு. “என் மகனுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுங்கள். வெற்றி தோல்விகளை அவன் புரிந்து ஒள்ள வேண்டும். தேர்வில் தவறான முறையில் தேர்ச்சியடைவதைவிட தோல்வி அடைவது மேலானது என்பதை அவனுக்குக் கற்று கொடுங்கள். சாலையில் சாதரணமாகக் கைக்கிற நூறு டாலரைவிட, உழைத்துப் பெறுகிற ஒரு டாலர் மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். எல்லாவற்றையும்விட, நேர்மைதான் புனிதமானது என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும்” இப்படி முடிகிறது அவரின் கடிதம். குடியரசுத் தலைவர் என்ற அதிகாரத் தோரணையில்லாமல் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி காத்திருக்கும் சராசரி தந்தையின் எதிர்ப்பார்ப்புதான் இன்றும் பலருக்கு.  எனக்குத் தெரிந்த நல்லாசிரியர் பலர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு, தம்தம் கல்விப் பணியை முடித்தவர்களில்லை. பல மாணவர்களின் வாழ்க்கைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு, பலரின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியவர்கள். வறுமையும் ஏழ்மையும் வாழ்க்கை உயர்வுக்குத் தடையல்ல. கருத்தூன்றி கல்வி கற்றால் நீயும் சிகரம் தொடலாம் என்று மாணவர்களின் ஆழ்மனத்தில் அழுத்தமாகப் பதித்த எத்தனையோ ஆசிரியப் பெருமக்கள் இருந்திருக்கிறார்கள்; இன்னும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் பணி ஓய்வுப்பெற்று இன்று ஊரும் உலகும் அறியா வண்ணம் இலைமறைகாயாக அமைதியாக வாழ்ந்துகொண்டிருப்பதை நான் கண்டுவருகின்றேன். இன்னும் நமக்கு மத்தியிலும் இதுபோன்ற தன்னலமற்ற நல்லாசிரியர்கள் துடிப்போடு பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறை அவர்களைத் தேடிப்பிடித்து நன்றியை நினைவுகூரத்தான் வேண்டும். தம்மிடம் பயிலும் எல்லா மாணாக்கரையும் பேதமின்றி சொந்த பிள்ளைகளாக எண்ணி உரிமையோடு குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டி கண்டித்து நல்வழிப்படுத்தி கல்வியிலும் பண்பிலும் உயர்த்தும் நல்லாசிரியர்களை நாடும் சமூகமும் என்றுமே மதிக்கிறது. ஆசிரியப் பணியை ஆத்மார்த்தமாக மதிக்கும் ஆசிரியர் என்றுமே மாணாக்கர் மனங்களில் கூடுகட்டிக்கொண்டுதானே வாழ்கிறார்?. வாழ்க்கைக்கு ஒளிகூட்டும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறை வாழ்த்துகள். ஆசிரியர்களே! உங்கள் முன்னே மாணவர்கள் கற்பாறைகளாக இறுகிக்கிடக்கிறார்கள். அவர்கள் உடைந்து விடாதபடி அழகாக உங்கள் அறிவெனும் உளியால் மெல்ல செதுக்குங்கள். காலத்தால் உங்கள் முன்னே உலகம் வியக்கும் அழகிய மாணவச் சிற்பங்கள் உருவாகட்டும். எந்தக் கல்லாக இருந்தாலும் உளிகள் மட்டும் சரியாகச் செயல்பட்டால் எதையும் சிற்பமாக்கிவிட முடியும்தானே?

திங்கள், 23 ஜூலை, 2018

வாழ்க்கையே விளையாட்டுதானே....


ஒவ்வொரு நாளும் என் குடும்பத்தில் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் குதூகலம் கூடி வருகிறது என்று சொல்லலாம். என் இரு மகள்களும் மனைவியும் ஒவ்வொரு நாளும் பொழுதும் விளையாடிய அணிகளை விமர்சனம் செய்யும்போது கண்டு வியக்கின்றேன். என் சின்ன மகள் ஒவ்வொரு காற்பந்து அணியைப் பற்றிய தகவல்களையும் நட்சத்திர காற்பந்து வீரர்களின் வரலாற்றையும் துல்லியமாக எப்படி தெரிந்து வைத்திருக்கிறாள் என்றெண்ணும்போது மலைப்புதான் ஏற்பட்டது. கூகள் அண்ணாவின் உதவியுடன் ஒவ்வொரு விளையாட்டரின் கோல் போட்ட வரலாறு சொன்னபோது அந்த வயதில் எனக்குக்கூட இந்தளவுக்கு ஆர்வம் இருந்ததில்லை. கடந்த 2014 உலகக் கோப்பையின்போது ஒன்றிரண்டு ஆட்டம் பார்த்துவிட்டு தூங்கியவள் இந்த விடுமுறையில் விடிய விடிய காற்பந்து ஆட்டத்தை ரசிக்கும் தீவிர ரசிகையாகிவிட்டாள். நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டினோ ரொனால்டோ, நெய்மார், சாலாக்,.. என யார்யாரோ வந்தாலும் அவளின் விருப்ப நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸிதான். மெஸ்ஸி ஆடிய ஆட்டங்களில் கோல்களைத் தவறவிட்டதும் குரோஸியாவுக்கான ஆட்டத்தில் 0-3 இல் படுதோல்வி அடைந்ததும் மிகவும் கவலைப்பட்டாள். நல்ல வேளையாக அன்று சினேகலுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா மெஸ்ஸியின் வழி ஒரு கோல் போட்டதும் துள்ளிக் குதித்து கவலையைத் தீர்த்துக் கொண்டாள். அவள் மெஸ்ஸிக்காகவே ஆர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரிதும் தெரிகிறது. பெரியவள் சின்னவள் அளவுக்குத் தீவிரம் இல்லாவிடினும் அவளுக்குப் போட்டியாக விளங்கும் அணிக்கே என்றும் ஆதரவு தெரிவிப்பாள். இருவருக்குமே என்றும் ஏட்டிக்குப்போட்டிதான். அதனால் அவர்கள் இருவருக்குமான மோதலில் நாநும் மனைவியும் தலையிடுவதில்லை. ஒருவழியாக அவர்களே சமாதானமாகி ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அதேவேளையில் இந்த முறை என் மனைவியும் இந்தப் பிள்ளைகளால் காற்பந்து ஆட்டத்தின் மீதுள்ள ஆர்வமும் தூண்டுதலும் அதிகரித்திருப்பதை மெய்யாக உணர்கின்றேன். ஒவ்வொரு நாளும் விடியற் காலையில்  நடைபெற்ற ஆட்ட முடிவுகளை எங்களுக்கு எழுந்ததும் சொல்வது மனைவிதான். அவளும் பிள்ளைகளோடு சேர்ந்து காற்பந்தாட்டத்தைப் பற்றி நுணுக்கமாக அலசலும் கணிப்புகளும் செய்வார்கள். காற்பந்து அணியின் ஆட்டத் திறத்தையும் போக்கையும் ஆராய்ந்து பெரும்பாலும் என் மனைவி செய்யும் கணிப்புகள் சரியாகவே நடப்பதை அறிந்து கொஞ்சம் மலைப்பாகவே அவளைப் பார்க்கின்றேன். நேற்றைய ஜெர்மனுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடத்தில் ஜெர்மன் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை வெற்றி தென்கொரியாவுக்குத்தான் என்றபோது ஜெர்மன் அணியின் விசிறியான என் பெரியமகள் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள். இப்படியே ஒவ்வொரு நாளும் காற்பந்து விழாவில் ஆழ்ந்து தோய்ந்துபோய் என் குடும்பம் செல்கிறது. எனக்கும் சிலசமயம் அவர்களுக்கு ஈடு சொல்லும் அளவுக்கு காற்பந்தாட்டத்தை நோக்கத் தெரியவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம் தொடங்கிய முதல் ஏதோ புதிதான ஒரு சூழலும் இதமும் எங்கள் குடும்பத்தில் ஊடுருவி இருப்பதை மெய்யாக உணர முடிகின்றது. அலகிலா விளையாட்டுடையான் என்று கம்பர் இறைவனைச் சொல்லும்போது சுற்றிச் சுழலும் இந்தக் கோள்கள் யாவும் இறைவன் உதைத்து விளையாடும் காற்பந்தாகவே என் கற்பனைக்குத் தெரிகிறது. ஆனால் என்ன இங்கு ஒரு பந்தை இருபத்துரெண்டு பேர் ஓடியாடி உதைக்கின்றனர். அங்கு அவர் ஒருவரே எண்ணிலடங்கா பந்தை உதைத்துத் தள்ளுகின்றார். விளையாட்டிற்கு மனித மனங்களை மட்டுமல்ல உலக நாடுகளையே ஒன்றிணைக்கும் பேராற்றல் உள்ளதுதானே?

தமிழமுதச் சுவை....


அமுதான தமிழே நீ வாழி! என் ஆவியிலே கலந்து நாவினிலே தவழும் என்று காலந்தோறும் தமிழை வாழ்த்தியும் வாழ்வாங்கு வாழ்ந்தவரான ஐயா சீனியாரின் வழிகாட்டலால் கொஞ்சம் தமிழ்ப்பால் உண்டவன் என்பதால் அதன் தித்திப்பை உயிரில் உணர்கின்றேன். அண்மையில் மறைந்த ஐயா குழ.செயசீலனாரின் நட்புறவால் தமிழின் அடர்த்தியையும் செறிவையும் உணர்ந்து விழிப்புற்றேன். இதுவரை வாழ்ந்த அனுபவத்தின் சாரத்தை மொழியின் மேல் நிதம் ஏற்றி ஏற்றி ஊனுருக உயிருருக ஊற்றி ஊற்றி இந்த வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் மதுவுண்ட வண்டாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றேன். கடந்த சனிக்கிழமை சுங்கைகோப்பு பிரம்மவியாரண்யத்தில் மலைச்சாரலை நோக்கி பாரதி பயணம் எனும் தாப்பா மாவட்ட தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்ணாக திருவாட்டி இராமேசஸ்வரின் தலைமையின்கீழ் நாற்பது இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். மாலையில் சுவாமி பிரம்மானந்தாவும் நாடறிந்த எழுத்தாளர் கோ.புண்ணியவானும் இலக்கிய வாசிப்பும் படைப்பும் பற்றி அருமையாதொரு கலந்துரையாடலை  வழிநடத்தினர். இலக்கிய வாசிப்பும் படைப்பும் மனிதனை எப்படி உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்று சிறுகதைகள் கவிதைகள் வழி சான்று காட்டினர். இரவில் கலைநிகழ்ச்சிக்கு முன்பாக பாரதியும் அமுதத் தமிழும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். காலந்தோறும் தமிழின்பத்தில் தோய்ந்த அறிஞர்களிலிருந்து பாரதி எந்தளவுக்கு வேறுபடுகின்றார் என்பதை தெள்ளுற்ற தமிழின் சுவை கண்டார்- இங்கு அமரர் நிலை கண்டார் எனும் அவனின் ஒற்றை வரி போதும் தமிழை எந்தளவுக்கு மாந்தி உண்டு வாழ்ந்திருக்கின்றான் என்பது புரிய வரும். உரைநிகழ்த்தி இரவில் வீடு திரும்புகையில் தமிழ்மொழியின் வடிவச் செயல்பாடு குறித்து கேள்விகள் தொடர்ந்து உள்ளிருந்து கேட்டன. முன்னோர் உயிரெழுத்து’, மெய்யெழுத்து’, உயிர்மெய் எனப் பெயரிடக் காரணமென்ன?. மெய் என்றால் உடல் என்றும் உண்மை என்றும் பொருளாகின்றது. மொழியின் பின்னுள்ள மெய்யியல் எது? தமிழொலிகளைக் கூர்ந்தாய்ந்து  ஒன்றை உயிரென்றும் மற்றொன்றை மெய்யென்றும் பாகுப்படுத்திய அறிவாளி யார்?. இன்று எவ்வளவோ தொழிற்நுட்பமெல்லாம் பயன்படுத்தி சோம்ஸ்கி போன்ற பலநூறு மாபெரும் மொழி அறிஞர்கள் மொழி என்பதை வெறும் தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகம் (language - communication tools) என்று வரையறுக்கும்போது  அதை பல்லாயிரம் காலந்தொட்டே நம் பாட்டன் முப்பாட்டனால் உயிராகவும் மெய்யாகவும் எப்படி பார்க்க முடிந்தது என்பது எனக்கு வியப்பாகவே உள்ளது?. மொழியை ஊடகம் என்ற சடப்பொருளிலிருந்து விலக்கி உடல் தாங்கி வந்த உயிராகக் காணுதல் என்பதே மிகப்பெரும் தத்துவமாகவும் அறிவாகவும் எனக்குத் தோன்றுகிறது. அகமும் புறமும் இருபக்கங்களாய் இணைந்த இந்த வாழ்வையே அக இலக்கியங்களும் புற இலக்கியங்களும் பகுத்துக் கூறும்போது தமிழரின் தெளிந்த சிந்தனை எண்ணியெண்ணி வியக்கத் தொன்றுகிறது. வாழ்வைக் கொண்டாடும் மெய்யியலைத் தமிழ் இயல்பாக தன்னகத்தே கொண்டுள்ளதைத் தமிழர் பெரும் முயற்சி கொண்டு ஆழ்ந்து அறியாதவரை தமிழமுதச் சுவையைச் சொல்லால் சொல்ல முடியுமேயன்றி உயிரால்  உணரவே முடியாது?

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி....


உணர்ச்சிவசப்படும்போது மனிதன் விலங்காகிறான்; உணர்ச்சியை நிர்வகிக்கும் திறன் பெறும்போது மனிதனாகின்றான்; உணர்ச்சியிலிருந்து தன்னை வெல்லும்போது மட்டும்தான் தெய்வமாகின்றான் என்று எப்போதோ படித்த வாசகம் அவரைக் காணுந்தோறும் என்னுள்ளே எழும். இயல்பாகவே பேசும் தோரணையும் சில சமயம் பயன்படுத்தும் வார்த்தைகளும் தடித்திருப்பது போல இருந்தாலும் அவர் கொண்ட நேசமும் உணர்ச்சியும் உண்மை நிறைந்தவை. பிறர் மெச்ச வேண்டுமென்பதற்காக போலித்தனமான பாசமும் பொய்யான கோபமும் அவரிடம் இதுநாள் வரை நான் கண்டதேயில்லை. சிலவேளை அவரின் கோபம் உக்கிரமாக இருந்தாலும் சற்று நேரத்திற்கெல்லாம் தடம் மறைந்து போய்விடுமளவு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறர்க்கு எப்படியோ என்மீது நல்ல அன்பும் மதிப்பும் கொண்டிருந்ததை பலமுறை உணர்ந்திருக்கின்றேன். வேலையிடத்தில் மயங்கி விழுந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு அவரின் இல்லம் சென்றேன். என்னைப் பார்த்ததும் மெத்திருக்கையிலிருந்து எழுந்து வந்தவரிடம்  நலம் விசாரிக்க “ஒண்ணுமில்லய்யா... கொஞ்சம் இரத்த அழுத்தம்ன்னு சொன்னாங்க,” அமைதியாகச் சொன்னார். எதிரிலிருந்த நாற்காலியில் என்னை அமரச் சொல்லி சைகை காட்டியபடியே கோப்பையிலுள்ள நீரை எடுத்து சில மிடற்று குடித்தார்.   “எனக்கு யார் மேலேயும் வருத்தமில்லை ஆனால் என்னை யாரும் புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க. என்னால் யாரையும் எதிரியாக நினைக்கவும் முடியலை. நான் மற்றவங்க செய்யறது தவறுன்னு தெரிஞ்சா உடனே திருத்த நினைப்பேன். சொல்லியும் கேட்கலன்னா சட்டுன்னு கோபம் வந்துடுது. அதைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை.” அவர் உணர்ந்து சொல்வதை பொறுமையோடு கேட்டுக் கொண்டருந்தேன். இரண்டு நாட்களுக்குமுன் தனியார் கல்லூரியில் படிக்கும் தன் மகனோடு கொண்ட கோபத்தால் தாம் கண்டிப்புடன் பேசிய வார்த்தையை எண்ணி மனம் நொந்துபோய் பேசினார். “நான்தான் பிள்ளைங்கள புரிஞ்சிக்க மாட்டறேனா இல்ல பிள்ளைங்கத்தான் என்னைப் புரிஞ்சிக்க மாட்டறாங்களான்னு தெரியலைய்யா. எனக்கு வயசுதான் ஏறுதே தவிர எனக்குள் கோபம் குறைந்த மாதிரி தெரியல. எப்பவுமே கோபம்தான் எரிமலையாய் நிறைஞ்சி இருக்குதய்யா..” சிறு புலம்பலும் பேச்சில் தெறித்தது. சில மனிதர்கள் உணர்ச்சிகளைக் கெட்டிப்படுத்திக் கொள்வார்கள் பலர் கொட்டித் தீர்த்து விடுவார்கள். இவர் கொட்டித் தீர்க்கும் ரகம். நானறிந்தவரை அவரின் கடந்த கால வாழ்வனுபவம் கசப்பும் துவர்ப்பும் நிறைந்தவை. எப்போதாவது அரிதாக கொஞ்சம் இனிமை கலந்திருக்கும் பக்கங்களையும் பட்டும்படாமல் பகிர்ந்துள்ளார். வாழ்வின் அனைத்துத் துயரங்களையும் அனுபவித்துவிட்டு மெல்ல அதிலிருந்து வெளிப்பட்டு சொந்தமாகவே கடும் உழைப்பால் காலூன்றி எழுந்தவர் என்பதால் பிறர் துச்சமாகக் கருதும் எளிய செயலையும் அவரால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபம் முந்தி தள்ளும். ஒருமுறை அவரின் மனைவி இவரின் விருப்பத்திற்கேற்ப மரவள்ளிக்கிழங்கு அவித்து மசித்து தேங்காய்ப்பூவும் சீனியும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்தார். அதை அவரின் குழந்தைகள் அறவே சீண்டாததால் நம்மள மாதிரி கஷ்டப்பட்டு வந்திருந்தாதான்ன இதன் அருமை தெரியும். சொகுசா வளர்ந்ததால் இதையெல்லாம் சாப்பிடாம திமிரா நடந்துகிதுங்க பிள்ளைகள்மீது கடுங்கோபம் வந்ததாம். பிள்ளைகளிடம் கோபத்தால் வீம்பாக இரண்டு மூன்று நாட்கள் பேசாமல்கூட இருந்தாராம். அவரின் மனைவிதான் ஒருவழியாக அவரின் கோபத்தை அறிந்து சமாதானப்படுத்தினாங்க என்று என்னிடம் சிலமுறை அவரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். “நல்லவேளை.. யாரும் புரிஞ்சிக்கில்லனாலும் என் மனைவி புரிஞ்சிகிறதே ஆறுதலாய் இருக்குய்யா” தன்னையறியாமல் அவர் புலப்பியது என் காதிலும் விழுந்தது. தமது இளமைக்காலம் அதிக மனக் கொந்தளிப்புகளுக்கும் அலைகழிப்புகளுக்கும் ஆட்பட்டதால் அன்று ஏற்பட்ட காயத்தால்தான் இப்படியெல்லாம் கோபப்படுறிறேனோ என்று அவர் ஆதங்கப்படும்போது பரிதாபமாக இருக்கும். சிறுவயதில் தமக்கு ஏற்பட்ட வலிகளும் புறக்கணிப்பும் ஆற்றாமைகளும் குடும்பத்தின்மீது கோபமாக ஏற்றி வைப்பது முறையற்றதுதானே?.  மனித வாழ்க்கையில் இவையெல்லாம் போகிற போக்கில் நிகழும் சம்பவங்களே. சினம் இறக்கக் கற்பதற்கு நிறைய பக்குவமும் பொறுமையும் வேண்டும். எல்லாவற்றையும் அதனதன் போக்கில் இயங்குவதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளாதவரை கோபம் நம்மிலிருந்து நீங்காதுதானே?. கோபம்கூட ஒருவகை பற்றின் காரணமாகத்தானே ஏற்படுகிறது?

புதன், 4 ஜூலை, 2018

வாழ்வின் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்?


ஐயா குழ.செயசீலனார் இறப்பின் இறுதி ஊர்வலத்தில் இருந்தபோது எண்பதுகளின் இடைக்காலத்தில்  ஐயாவிடமும் என்னிடமும் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிலர் அவரின் பிரிவுச் செய்தியைக் கேள்விப்பட்டு இறுதி மரியாதை செலுத்த ஓடோடி வந்திருந்தனர். அவர்களில் பலரை நான் பார்த்து முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஐயாவின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய கண்களோடு என்னிடம் தங்களது ஆழ்ந்த துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஐயாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சூழலில் சில மாணவர்கள் மிகுந்த மரியாதை காரணமாக வணக்கம் கூறி காலை தொட்டு வணங்க முற்படுவதை அறிந்து தவிர்க்க முயன்றேன். சில மாணவர்கள் உருவத்தால் நிரம்ப மாறியிருந்தாலும் அன்றிருந்த அன்பு கிஞ்சிற்றும் மாறாமல் நடந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. “ஐயா, நீங்களும் ஐயாவும் எங்களுக்கு சொன்னது எல்லாம் என்றுமே நினைவில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அதைதான் எங்கள் பிள்ளைகளுக்கு இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்” கண்ணீர் மல்க இன்று நான்கு பிள்ளைகளுக்குத் தாயான அந்த மாணவி என் இரு கைகளையும் பிணைத்தபடியே சொன்னார். “நம்ம ஐயா நேர்த்தியாகவும் எடுப்பாகவும் உடை உடுத்தி தோன்றும் அழகு கண்ணில் தெரிகிறது. ஐயா, அவ்வளவு திருத்தமாக அழகாகப் பேசிய தமிழ் இன்னும் நெஞ்சில் இனிக்கிறது. அவரை இடையில் வந்து கண்டு பேசலாம் என்று காலத்தைத் தள்ளிப்போட்டு இந்தச் சூழலில் காண்பதுதான் மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது” மற்றொரு மாணவர் என் உள்ளங்கையை இறுகப்பிடித்தபடியே உருகினார். “எப்போதும் காலத்தை நாம் தள்ளிப்போடவே கூடாது. எப்போது நேரம் வாய்க்குமோ நமது அன்புக்குரியவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்பதை நானும் சில இழப்புகளுக்குப் பிறகு உணர்ந்திருக்கின்றேன். அதனால்தான் நான் இப்போதெல்லாம் யாரை சந்திக்க வேண்டுமென நினைக்கின்றேனோ அவரைக் காலத்தை தள்ளிப் போடாமல் சென்று கண்டு வருவதைக் கடமையாகக் கொண்டிருக்கின்றேன். ஐயாவை இருவாரங்களுக்கு முன் சந்தித்து நெடுநேரம் உரையாடியது கொஞ்சம் ஆறுதல் தருகின்றது” அந்த மாணவர்களை சிறிது ஆற்றுப்படுத்தினேன். “ஐயா, நீங்கள் எங்களை பள்ளி பக்கத்தில் இருக்கும் ஆற்றங்கரைக்கும் காடுகளுக்கும் மெதுவோட்டம் செல்வதற்காக அழைத்துச் செல்வீர்களே அந்த இன்பத்தை ஆயுளுக்கும் மறக்க முடியாது” பிரிவின் துயரை மாற்றும் நோக்கில் அந்த நிகழ்ச்சியை இன்னொரு மாணவர் உணர்ச்சியோடு பகிர்ந்தார். அவர்கள் என் பழைய நினைவுகள் எல்லாம் தூசு தட்டியது மீண்டும் என்னைப் புதுப்பித்தது.  நான் ஏட்டில் உள்ள அறிவைவிட அனுபவங்களின் வழி கண்டடைந்ததைதான் அன்று முதல் இன்றுவரை வகுப்பில் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய கணினி வளர்ச்சி பயன்பாடு பற்றி எல்லாம் கற்றல் கற்பித்தல் தேவைக்கும் பயன்படுத்துவேனேயன்றி வேறெதுவும் பெரிதாகத் தெரியாது. தொழிற்நுட்பம் கோட்பாடு என எல்லாக் குழப்பங்களையும் துறந்து என்னுள்ளே முகிழ்க்கும் உள்ளுணர்வின் வழியில் வெளிப்படுபவனவற்றையே மூலதனமாக உள்ளன்போடு இன்று கல்லூரி நிலையிலும் மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளவே விரும்புகின்றேன். என்னுள்ளேயிருந்து பீறிட்டுக் கிளம்பும் உணர்வு கலந்த சொற்கள் இன்னும் வாழ்வின் வெளியில் பதிவு செய்யப்படாத எத்தனையோ கொண்டாட்டங்களையும் அழகியலையும் துயரங்களையும் பகிரவே விரும்புகின்றது. இன்னும் இன்னும் கற்க வேண்டிய விசயங்களும் தொடர்ந்து ஓட வேண்டிய தூரங்களும் நீண்டுகொண்டே செல்வதை உள்ளூர உணர்கின்றேன். இந்த வாழ்வின் தேடலில் உடன்பாடும் முரண்பாடும் மோதிக்கொண்டாலும் நான் ஓடுவதை நிறுத்திக் கொண்டதே இல்லை. இன்று ஏழாம் அறிவு வெளியிலிருந்து கொட்டுவதையும் கையேந்தி மாணவனாக கற்று வருகின்றேன். உலகியலில் என்றும்  மாணவனாக  என்னை உருமாற்றிக் கொண்டபின் கற்கும் ஆர்வம் ஆழ்கிணற்று ஊற்றைப்போல் ஊறுகிறதேயன்றி சலிப்புத் தட்டியதே இல்லை. மறைந்த ஐயா குழ.செயசீலனாரும் ஆசிரியனானவர் தேடலை வாழ்வின் இறுதிவரை தொடர்பவராக இருக்க வேண்டும் என்றே வலியுறுத்துவார். அசுர தேடல் உள்ளவன் நிச்சயம்  தேடியதைக் கண்டைவான் என்று எனக்கு முன்னே சொன்னதைதான் நான் என் மாணவர்களுக்குச் சொல்கின்றேன். மனித வாழ்வின் முடிவற்ற தேடலில் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்?

இறப்பும் மெய்யே...


பிறப்பு எப்படி மெய்யோ அதுபோலவே அதற்கு எதிரான இறப்பும் மெய்யே. இந்த அழியாத மெய்களுக்கிடையிலான வாழ்வில் உண்மைதான் அடைய முடியாத செல்வமாக இருக்கிறது. உண்மைதான் நமது அகத்தையும் புறத்தையும் விமர்சித்து செல்கிறது. ஒவ்வொரு இழப்பின் துயரைக் கடக்கும்போதும் முடிந்தவரை இனி அரிதாரம் பூசாத ஒப்பனை இல்லாத வாழ்க்கையை இன்னும் இன்னும் வைராக்கியத்தோடு வாழ்ந்து செல்ல வேண்டுமென எனக்குள் வலிமை கூடுகிறது. என் நேசத்திற்குரிய மனிதர்கள் ஒவ்வொருவராக இந்த வாழ்வு வெளியிலிருந்து விடைபெற்று செல்லும்போது இறப்பின் வலிமையும் உறுதியும் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் என்னிடம் எஞ்சி இருக்கும் காலத்தை முழுமையாக மிகத் துல்லியமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற தீவிரம் கூடி நிற்கிறது. எதிரே தென்படும் ஒவ்வொரு மனிதரையும் சந்திக்கும்போதும் வாழ்வின் இறுதிநாளில் நிமிடத்தில் நின்று அவருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு என்னுள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். முடிந்தவரை எதிர்படும் அன்பருடன் உண்மையாகப் பேசிப் பழகி விடைபெறுவோம். மீண்டும் அந்த அன்பரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் இயற்கைக்கு இரு கரம் கூப்பி நன்றி சொல்வோம். காலத்தையும் இறப்பையும் ஒன்றாக்கி தத்துவம் செய்தவர்கள் நம் முன்னோர்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் மனிதரும் காலமும் ஒன்றுதானே.அதனால்தான் ஒருவர் இறந்துவிட்டால் இயற்கைக்கே திரும்பிவிட்டார் என்பதை இயற்கை எய்தினார் என்றும் காலத்தோடு கலந்து கரைந்து போனதை காலமாகிவிட்டார் என்றும் மறைந்து போனதை மறைந்துவிட்டார் என்றும் இன்னும் சமய நோக்கில் சிவனிடமிருந்து வந்தவர் சிவனடிக்கே சென்று சேர்ந்திட்டார் என்றும் பலவாறு இறப்பைக் குறிக்கிறோம். உடலில் முன்னம் தங்கி இருந்த சத்து நிறைந்த உறுபொருள் நீங்கிப் போனதை செத்து விட்டார் என்று திரித்தும் மூச்சை விட்டுட்டார்’, கட்டையைப் போட்டுட்டார்’. உயிரை நீர்த்தார் என்றும் பலவாறு இறப்பைப் பலவகைச் சொலவடைகளால் சிலாகித்து மகிழ்ந்தார் முன்னோர்கள். அன்று தோட்டப்புறங்களில்கூட ஒவ்வொரு இறப்பிலும் துக்கத்தின் அடர்த்தியும் பிரிந்தவர்க்காக செய்யும் பிரார்த்தனைச் சடங்குகளும் நீளமாக இருக்கும். இன்று அவையெல்லாம் சுருங்கி முடிந்தவரை உற்றார் உறவினர் நண்பர் எல்லாம் ஒருநாளில் கூடி பிரியும் நாளாக இறப்பு மாறிவிட்டது. இன்று இறப்பையும் இறுதி ஊர்வலத்தையும் மெய்நிகர் தடயமாக பதிவு செய்து முகநூலில் பதிவிடும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம்?. இதுகூட ஒரு புது வகை மனித நேயமோ? மனிதரின் நெஞ்சக்கூடு முழுவதும் சிந்தனைகளாலும் அதில் ஊறிய நினைவுகளாலும் காலம்தானே நீக்கமற நிறைந்து வழிகிறது. இந்த நினைவுகளைக் கைமாற்றிவிடுவதன் மூலம்தான் ஒருவர் வாழ்ந்ததற்கான எழுச்சியும் வீழ்ச்சியும் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து நிற்கும் நினைவுகளை ஏதாவது ஒருவகையில் கைமாற்றுவது என்பது காலத்தைக் கைமாற்றுவது என்றுதானே பொருள்படும்.? யாருக்கு இந்த வாழ்வில் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது வாழும் இந்த நிமிடம்வரை தேவரகசியம்தானே?. எப்போது எந்த நிமிடம் யாருக்கு இறப்போலை வருமென்று யார்தான் அறிவாரோ?. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சுதானே?

புதன், 27 ஜூன், 2018

இங்கு அமரர் சிறப்புக் கண்டார்






உலகில் பிறக்கும் எல்லார்க்கும் வாழ்க்கையுண்டு; ஆனால் எல்லார்க்கும் வரலாறு இருப்பதில்லை. வரலாற்றுப் பேரேட்டில் தம் பெயரை பொறித்துக் கொள்ளுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களை காலம் மறந்ததில்லை. நினைவுகள் இனிமை நிறைந்த பூஞ்சோலையாய் சில நேரம் துன்பம் மிகுந்த நெருஞ்சி முட்களாய் சிலபோது மனிதனைப் பிணித்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு நினைவுகளோடுதான் சுமந்தலைகிறான். இந்த மண்ணில் அலைந்து திரியும் ஒவ்வொரு மனிதனினும் மூளைக்குள்ளும் நினைவுகள் என்றும் தீர்வதேயில்லை. காலமும் நொடிக்கு நொடி மரித்துவிட்டாலும்கூட நினைவுகள் அதை வெவ்வேறு வகையில் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் நெஞ்சக்கூட்டுக்குள்ளும் நினைவுகள் புகுந்து தனக்கான காலத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. சிலசமயம் மறதி என்ற பேரில் சற்று ஓய்வும் விபத்து என்ற நிலையில் சற்று விடுபடுதலும் மரணம் என்ற பெயரில் நிரந்தரமாகவும் நினைவுகள் மனிதருக்கு இல்லாமல் போகலாம். ஆனால் என் வாழ்வின் இறுதி நொடிவரை ஐயாவின் நினைவிருக்கும் என்பது மட்டும் உறுதி.  ஐயா குழ. செயசீலனாரைச் சந்தித்த நாள்தொட்டு எழும் நினைவுகள் ஒவ்வொன்றும் காணொலிக் காட்சிபோல் நினைவில் நிழலாடி உதிர்ந்து கொண்டே இருந்தன. தமிழ் வாழப் பணியாற்று தமிழல்லவோ நம் உயிர்க்காற்று என்ற கொள்கை நெறியோடு தம் ஊனையும் உயிரையும் தமிழ்ப்பணியில் கரைத்தவர் ஐயா. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களே ஐயா குழ.செயசீலனார் தமிழ்ப்பால் கொண்ட காதலைக் கண்டு வியந்து அவரின் பெயரைத் தனித்தமிழில் வெற்றிநெறியன் என அழைத்ததாக அன்புப்பொங்க குறிப்பிட்டது இப்போது என் காதோரம் ஒலிக்கிறது. ஐயா குழ.செயசீலனார் அவர்கள் தமது தனிவாழ்விலும் சமூக வாழ்விலும் தமிழையே உயிர் மூச்சாக்கி தளராத கொள்கைப் பிடிப்போடு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும் இடைவிடாமல் குறுக்கிட்ட போதும் கிஞ்சிற்றும் மனம் தளராமல்  தமிழைத் தன்னுள்ளும் புறமும் தவமாக்கி தழைக்கப் பாடுபட்டுவந்த பெருந்தகையாளர். தமது ஒவ்வொரு செயலிலும் யார் கைவிட்டாலும் என் தாய்தமிழச்சிஒருபோதும் கைவிடமாட்டாள் என்று தமிழ்மொழியின்பால் கொண்ட நிகரற்ற அன்பையும் நம்பிக்கையியும் எப்போதும் உறுதியோடு அவர் கூறும்போது கேட்கும் நமக்கே மெய்சிலிர்த்துவிடும். உலகத்தைப் பற்றிய உயரிய பரந்துபட்ட பார்வையையும் வானளாவிய விழுமியச் சிந்தனைகளையும் என்னில் கருக்கொள்ள முழுமுதற் காரணமாக விளங்குபவர் இவரே. என்னைப் போன்ற பலரின் அறிவின்மீது படிந்திருக்கும் புழுதியை அன்போடு தூசுதட்டி சாணை தீட்டிய பெருமைக்குரியவர். பலரின் இதயங்களில் வெளிச்சத்தைப் பூசி இருளைத் துரத்தியவர். இந்த நெடிய வாழ்வுப் பாதையில்  நீர்ச்சுனைகள்போல பலரும் இளைப்பாறும் ஆலமரமாய் விளங்கியவர். கைத்தேர்ந்த ஆசிரியராக திறந்த உற்சாகமான உள்ளன்போடு மாணவர்களுக்கு கட்டற்ற  முழுநம்பிக்கையுடன் இந்த உலகை அணுக்கமாகக் காட்டியவர். இவ்வுலகின் மகிழ்ச்சி, துள்ளல், துடிப்பு போன்ற ஒளியையும் துன்பம், வன்மம், தோல்வி போன்ற இருண்ட பகுதிகளையும் பக்குவமாய் காட்டியவர். உழைப்பைக் கொடுப்பதில் எவ்வகையிலும் கணக்கு வைக்காத உத்தமர். அவர் கருணையோடு சொல்லித்தந்த பாடத்தைத்தான் மூலதனமாகக் கொண்டு இதுவரை பலர் ஆசிரியராக வாழ்கின்றனர்.  அறியாமை இருட்டில் இருப்பவர்க்கு அறிவுச் சுடரை ஏற்றி வைப்பதில் இவர்க்கு நிகர் வேறு எவரையும் நான் இதுவரை கண்டதில்லை. அவரின் பேச்சிலும் எழுத்திலும் புதிது புதிதான சொல் நேர்த்தி, கற்பனைகள் உருண்டோடும், அடுக்கடுக்காக அழகழகாகப் பூக்கும் சொற்களாக அவர் திருவாய் மலரும் வார்த்தைகள் கேட்போரை தமிழ்ப்பால் பிணைக்கும், சிலபோது பொங்குக் கடலாகப் புறப்படும் சொற்கள் செந்தமிழின் செழுமையைப் பறைச்சாற்றும். நாம் தமிழர், அதிலும் ஆசிரியர், நாம் திருத்தமாகவும் அழகாகவும் இனிமையுடன் முன்மாதிரியாகவும் பேசாவிடில் வேறு யார்தான் பேசுவது?’ என்று சொல்வதோடு நின்றிடாமல் பணியிடத்திலும் நட்பு வட்டாரத்திலும் எங்கும் கூடுமானவரை செந்தமிழையே பயன்படுத்துவார். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குமுன் அவரோடு பணி செய்த காலம் தொடங்கி ஐயாவின் எத்தனையோ தனித்தச் சிறப்புகளை உள்வாங்கி என் வாழ்விலும் கடைப்பிடித்து ஏற்றம் கண்டிருக்கின்றேன். எந்தச் சூழலிலும் பேச்சிலும் எழுத்திலும் தமிழின் தூய்மையை நாம் பேண வேண்டும் என்பதில் ஐயாவின் உறுதிபாட்டை இயன்றளவு கற்றல் கற்பித்தலுக்கு வெளியேயும் வாழ்வியல் அறமாகப் பின்பற்றி வருகின்றேன். பணிக்காலத்தில் எப்போதும் வெளிர்நிறத்தில் அவர் மேற்சட்டையும் கறுப்பு நிற காற்சட்டையும் நேர்த்தியாக அணிவதை முன்மாதிரியாகப் பின்பற்றி இதுவரை நானும் ஆசிரியர் தொழிலுக்கேற்ற வண்ணமாக உடை அணிந்து வந்திருக்கின்றேன். அவரையே வழித்தடமாகக் கொண்டு இன்றுவரை இயன்றவரை இந்த ஆசிரியமெனும் இறைவழிபாட்டில் பயணித்து வருகின்றேன். தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் - இங்கு அமரர் சிறப்புக் கண்டார்எனும் பாரதியின் திருவாக்கை வாழ்வியல் இலக்கணமாகக் கொண்டு இதுவரை வாழ்ந்து காட்டிய பெருந்தகையை இழந்தது தமிழுலகுக்கு மட்டுமல்ல ஆசிரியர் உலகுக்கும் பேரிழப்புதானே?

என்றும் அணையாத தமிழ்த் தீபம்








நேற்று இரவு பதினொரு சரியாக பத்து ஐம்பது மணியளவில் இடியைப் போன்ற அந்த இறப்புச் செய்தி என் இதயத்தைப் பிளந்தது. என் வாழ்வுக்கு மிக நெருக்கமான மாமனிதர் ஐயா குழ.செயசீலனாரின் காலத்தோடு கலந்திட்டார் என்ற  பிரிவுச் செய்தி என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ், உயிர்ப்பது தமிழ், கொண்டது தமிழ், கொடுப்பது தமிழ், விண்டது தமிழ், விளங்குவது தமிழ் என்று தமிழே என்பாகவும் தசையாகவும் உலவிய ஐயா குழ.செயசீலனார் மறைந்த செய்தியை மனது ஏற்க மறுத்தது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் செயலற்று அவரின் நினைவுகளில் அமிழ்ந்து போனேன். இதுவரை அவரோடு வாழ்ந்த காலத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து நெஞ்சில் உதறும்போது சிதறும் நினைவுகள் கண்களைக் குளமாக்கின. ஒவ்வொருமுறை சந்திப்பின்போதும் தந்தையும் களிகூர ஆரத்தழுவிக்கொள்ளும்போது அவரிடத்தில் தாயின் அன்பையும் அறவுரைகளைச் சொல்லும்போது உடன் பிறந்த சகோதரராய் பாசத்தையும் மெய்யாக உணர்ந்துள்ளேன். நினைந்து நினைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அவரோடு பழகிய காலங்கள் எல்லாம் என் முன்னே நிழலாடின. தொலைவில் காணும் போதே ஒரு புன்னகை பூத்த முகம். நெடிய உருவம்; நாவலர் நடை அருகில் கண்டால் கலகலவெனக் குழந்தைச் சிரிப்பு. தகதகவென ஒளி உமிழும் பாரதியின் பார்வை. தமிழ்த் தென்றலை நினைவுகூரும் மொழி. பாவாணரின் தனித்தமிழ்; அண்ணாவின் ஆற்றொழுக்கான நடை; கலைஞரின் ஊற்றுப் பெருக்கெடுக்கும் சொல்வளம்; செந்தமிழ்ச் செல்வரின் சந்தத் தமிழ் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த இன்பத் தமிழாக என்றென்றும் விளங்கியவர் ஐயா குழ.செயசீலனார். இனிமை தவழ் தமிழுணர்வால் இயங்கிவரும் தூயர்; ஈதலரம் புரப்பதிலே எழில்சொரியும் அன்பர்; கனிமைமிகும் உள்ளமதால் இனிமை தரும் நல்லர்; கற்றோரைப் பேணுவதில், கவின்மையுறும் நெஞ்சர்; சீலம் நிறைந்த செம்மல்; செயல் திறனில் வல்லவர்; பொறுப்பை உணர்ந்தவர்; நம்பிக்கைக்கு உரியவர்; செயற்கரிய செயலையும், வியத்தகு முறையில் நிறைவுறச் செய்து இசை பெற வாழ்ந்த பெருந்தகை. தமிழ் மொழியின்பால் தணியாத காதல் கொண்டவர். இயல்பாகவே ஒருவர் தாய்மொழி மீதும், சொந்தப் பண்பாட்டின் மீதும் இருக்கக்கூடிய பற்றையும் பாசத்தையும்விட இவரிடம் கூடுதலாகவே நான் கண்டதுண்டு. தம் மூச்சுப் பேச்சு உணர்வெல்லாம் தமிழாகவே சிந்தித்தவர். தமிழுக்கு எங்கெல்லாம் ஏற்றம் செய்யுமோ அதையெல்லாம் ஒரு கடுகளவும் விடாமல் செய்தவர். தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். தமிழன் மட்டும் தன்னை உணர்ந்துவிட்டால் தம் மொழியின் தொன்மையை அறிந்துவிட்டால் அவன் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற உயர்வெண்ணம் கொண்டவர். தமிழன் மட்டும் தம் வரலாற்றையும் இலக்கியப் பெருமையையும் இலக்கணச் சிறப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் புரிந்துகொண்டால் அவனை வெல்வதற்கு உலகில் வேறு யாராலும் முடியாது என்று நம்பிக்கை ஊட்டுவார். உலகத்துக்கே மொழியாலும் நாகரிகத்தாலும் பண்பாட்டுச் செழுமையாலும் வளம் சேர்த்த தமிழினம் இன்று இப்படி நலிவுற்றுக் கிடக்கிறதே என்று கவலை கொள்வார். மிகப் பெரிய நாகரிகமும் சிந்தனையும் கொண்ட தமிழினம் அறியாமையால் இப்படி சுருண்டு கிடக்கிறதே என்று சிலவேளைகளில் என்னிடம் உள்ளூர வருத்தம் கொள்வார். எது எப்படியாயினும் தமிழால் முடியும் என்ற நம்பிக்கையை அவர் என்றும் கைவிட்டதே இல்லை. தமது எல்லாச் செயல்களிலும் தமிழையே தம் உற்றத் துணையாக அழைத்துக் கொள்வார். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்களவு தமிழை எல்லாத் தளங்களிலும் உயிர்ப்புடன் ஒளிர்வதை உறுதி செய்து கொள்வார். தமிழ் எல்லா இடங்களிலும் நீக்கமற வாழ்வதற்கு தம்மால் இயன்ற அனைத்து பணிகளையும் காலமும் பயனும் கருதாது செய்வதில் வல்லவர். பாரதியையும் தேவநேயப் பாவாணரையும் உளமார நேசித்து அவர்களைப் போல ஆக்கப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரோடு பணிபுரிந்த பலரைப்போல நானும் அவரின் தமிழுணர்வையும் சிந்தனையையும் கண்டு மெய்சிலிர்த்துள்ளேன். தனித்தமிழை நாளும் உச்சரிப்பதிலும் பிறருக்குப் பரவலாக்கம் செய்வதிலும் நிகரில்லா அவரின் முனைப்பும் உழைப்பும் ஈடிணையற்றது. பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய அருந்தமிழ்ப் புலவர்’, ஆசிரிய மணி’, தனித்தமிழ் மழவர் தமிழ்த்திரு குழ.செயசீலனார் மலேசியக் கல்வி உலகில் மிகவும் பண்டட்ட நல்லாசிரியராக ஒளிவீசித் திகழ்ந்தவர். அன்னார் கருணையில் ஊறிய இதயமும், அறிவில் வானச் செறிவும், அன்பில் மழையின் பயனும், அணைப்பில் தாயின் இனிமையும், நெறியில் தந்தையின் உறுதியும், என்றும் இனிய மொழியும், இதம் தரு செயலும், கனிவு நிறை நெஞ்சமும், கவினுறு தோற்றப் பொலிவும் கொண்டு வைரம்போல் ஒளி வீசித் திகழ்ந்தவர். நூலறிவும் நுண்ணறிவும் நிரம்ப பெற்ற இவர் அருந்தமிழிலும் ஆங்கிலத்திலும் கடல்மடை திறந்தாற் போன்ற பேச்சாலும் எழுத்தாலும் வல்லவர்; தமிழ்த் தொண்டில் தன்னிகர் அற்றவர். ஆசிரியம் என்பது தொழிலன்று, அஃது ஓர் இறைவழிபாடு என்று நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய அருங்குண ஆசிரியர்; தனித்தமிழ் வாணர். வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும் இறப்பு என்கிற தவிர்க்க முடியாத ஒன்றிற்குச் சமாதானம் சொல்லத் தெரியாமல் தவிக்கின்றான். ஆனாலும் உயிரின் இயல்பறிந்து காலம் அவனை மெல்ல ஆற்றுப்படுத்தும் மருந்து தந்து ஊக்கப்படுத்தி அடுத்த நகர்வுக்குத் தயார்ப்படுத்திவிடுகிறது. ஐயாவின் பிரிவால் துயருறும் எங்களை ஆற்றுப்படுத்துவதற்கு காலத்திடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. குழ.செயசீலனார் என்கிற தமிழ்த் தீபம் அணையவில்லை மரணத்தால் அணைக்கவும் இயலாது. தமிழை நேசிக்கும் நெஞ்சங்களில் அன்னார் ஏற்றி வைத்த ஒளிவிளக்கு தித்திக்கும் இலக்கணமாக இலக்கியமாக தனித்தமிழாக என்றும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கும். காலமே உன் நெஞ்சில் கருணையே இல்லையா?