திங்கள், 15 ஜூலை, 2019

அறிவின் வழிபாடு


வாழ்க்கை என்பது சிலருக்கு வெறும் வயிற்றுப் பாட்டிலேதான் அடங்கிக் கிடக்கிறது; சிலருக்கு அறிவின் செயல்பாட்டிலேதான் முடங்கிக் கிடக்கிறது; ஏதோ இடைப்பட்ட சிலருக்கு மட்டும்தான் இதயத்துக்காக இந்த வயிறும் மூளையும் இயங்குகிறது என்ற தெளிவு இருக்கின்றது. நேற்று உலகப் புத்தக நாள் என்ற நினைவூட்டல்போல சில புலனச் செய்திகள் கைப்பேசியில் வந்து விழுந்தன. ஏதோ இந்த நாளில் பத்து நிமிடம் படித்துவிட்டால் உலகப் புத்தக நாளைக் கொண்டாடிவிட்டதாக அலப்பறைகள் முகநூலில் வேறு அங்குமிங்கும் வழிந்திருந்தன. “புத்தக நாளின் தோற்றுவாய் என்ன?” என்னைக் காண வந்து நொடிக்கொருதரம் கைப்பேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்த பழக்கமான அந்த இளைஞனைக் கேட்டேன். “கூகுள் கடவுளிடம் கேட்டால் தெரிஞ்சிடும் சார்...ஒரு நிமிசம்...ம்ம்ம்” சில நிமிடங்களில் “மிகுள் டே சர்வீன்ஸ் மறைந்த ஏப்ரல் 23 நாளை நினைவுப்படுத்தும் விதத்தில் ஸ்பெயினிலிருக்கும் காடலோனியா புத்தக வியாபாரிகள் புத்தக நாளை 1923 முதலில் கொண்டாடினார்கள்” எனப் பதில் சொன்ன மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. “சரி நாம் எதற்கு புத்தக நாளைக் கொண்டாட வேண்டும்?. இதற்கு கூகுள் கடவுள் வேண்டாம். உன் அறிவிலிருந்து சொன்னால் போதும்” என்றதும் கெக்கபிக்கவென தலையாட்டியபடியே சிரித்தான். “உண்மையைச் சொல் நீ புத்தகம் தொட்டு எத்தனை வருடங்களாச்சு?” உரிமையோடு அவன் தோள் தட்டிக் கேட்டேன். “அதான் எல்லாம் இதுலே இருக்குதே பின்ன புத்தகம் எதற்கு?” கைப்பேசியை தூக்கிக்காட்டியவாறே சொன்னான். நாம் வாழ்க்கைச் சாலையில் சந்திக்கும் பெரும்பாலான இளைஞர்களின் நிகராளியாகவே எனக்கு அவன் தோன்றினான். அவர் வாய்ச்சொல்லில் நேர்மை இருந்தது என்றாலும் அது உண்மையானது அல்ல. அறிவுலகப் பயணத்தில் நம் இளைஞர்களுக்கு வேகம் இருக்கிற அளவுக்கு இன்னும் விவேகம் இருக்கவில்லை என்பது என் கருத்து. “உண்மையிலேயே திருக்குறள் மிக உயர்ந்த நூலா?” வழக்கம்போல என்னை மடக்குவதற்கு சற்றே தயங்கிக் கேட்டாலும் அவனின் திடீர் கேள்வியிந் உளோட்டம் எனக்குப் புரிந்தது. “என்னைப் பொறுத்தவரை திருக்குறளின் அருமை அறியாதோர் வாழ்வை வறிதே கழிக்கும் உயிர்ப்பிணமாகவே வாழ்பவராவார். சமயச் சாத்திரங்கள் மனிதனை சமயச்சிமிழுக்குள் அடைத்து அறிவை தளைப்படுத்திவிடுகின்றன. ஆனால் திருக்குறள் மனிதனுக்கு விரிந்து பரந்த சிந்தனை வழங்கி அறிவுத்தேட்டமும் ஆற்றலும் பெற்றிலங்கச் செய்கிறது. பல மில்லியன் டாலர் செலவில் ஆய்ந்து சொல்லும் இந்த விசயங்களில் பலவற்றை நமது நீதிநூல்கள் நிறையவே  சொல்லிவிட்டன. என்ன ஒரு சிறு வேறுபாடென்றால் சதாசர்வ காலமும் கைப்பேசியிலே உறைந்திருக்கும் உன்னைப் போன்ற இளைஞர்களை சம்மணமிட்டு உட்காரவைத்து உரிமையோடு நறுக்கென தலையில் குட்டி சொல்லித்தர தமிழ் ஆசிரியர், தமிழ்ப் பெற்றோர், தமிழ்க் கோபம், தமிழ் அறம் ஆகியோரைத்தான் இன்று சுற்றும் முற்றும் தேட வேண்டியுள்ளது?” என்றதும் கொல்லெனச் சிரித்துவிட்டான். திருக்குறள் எனும் பேரறிவுக்கருவூலம் வாழ்வியற் பல்கலைக் களஞ்சியமாகவும் மனித நேயத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காவும் மனித அறிவைத் துலங்கச் செய்யும் அறிவு வளர்ச்சிக் கருவியாகவும் போரும் பிணக்கும் பூசலுமற்ற உலக அமைதிக்கு வழிகாட்டும் உலகப்பொது மறையாகவும் விளங்குகிறது. பட்டறிவு, ஏட்டறிவு, நுண்ணறிவு, மெய்யறிவு என்று பலவாறு அறிவைப் பற்றி வாழ்க்கையில் பட்டும் கேட்டும் புரிந்திருப்போம். வால் அறிவு (குறள் 2) கார் அறிவு(குறள் 287), பேரறிவு (குறள் 215), புல்லறிவு (குறள் 331 அதிகாரம் 85: 881 முதல் 890வரை) அறிவின் ஆழத்தை அறிந்த தெய்வப் புலவர் அறிவை ஆய்ந்து வகைமைகளாக வகுத்துரைக்கும் திறத்தைக் கண்டு வியப்பு மேலிடுகிறது. அறிவின் பல்திறப்பாங்கையும் திருவள்ளுவர் ஆழச் சிந்தித்து பல்வேறு கோணத்தில் எடுத்தியம்புகிறார். இதையெல்லாம் சீண்டி பார்க்காமல் இன்றைய இளைஞர்கள் கைப்பேசியிலே எல்லாவற்றையும் அறிந்துகொண்டு உலகம் முழுக்க ஏதேதோ செயலிகளின்  துணையால் எளிதில் தம்பட்டம் செய்ய முடிவதால் பெரும் அறிவாளியாகிவிட முடியும் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். தாங்கள் அறியும் ஒவ்வொன்றிலும் அறியாமை சூழ்ந்துள்ளதை முதலில் உணர வேண்டும். முதலில் நம்மிடமுள்ள அறியாமையைக் களையெடுக்க  வேண்டும். பாரதி சொல்லும் ‘அறிவின் வழிபாடு’ நமக்குள் தொடங்காதவரை ஒவ்வொரு ஆண்டு வரும் புத்தக நாளும் மற்றொரு நினைவுநாள் போன்றதுதானே?

கருத்துகள் இல்லை: